இரண்டு வயது கொண்டாடிய சண்டாள ரிசெஷன்!!!

சென்ற இருவாரங்களாக,ஏன்?இப்போதும் கூட முழுக்க மிகுந்த பணிச்சுமை, இரவு வீடு திரும்பவே நடுநிசி 2-00 ஆகிறது,மறுநாள் 9-00 மணிக்கு மீண்டும் வேலை ஆரம்பிக்கும். இப்போதும் அப்படியே, ஒரு குழுவாக இப்படி இயங்குவதால் அயற்சிக்கே இடமில்லை.நான் மட்டும் இப்படி உழைக்கிறேனே என்ற பேச்சுக்கே இடமில்லை, முதலாளி கூட அருகே ஒரு கணிணியில் வேலைசெய்து கொண்டிருப்பார். தனக்கு காஃபி ஃபிக்ஸ் செய்யும் போது நமக்கும் காபி போட்டுக் கொண்டு வந்து கொடுக்கும் அற்புதங்கள்,இங்கே அமீரகத்தில் நிகழ்கின்றன.

து போல எல்லாம் உழைத்து பல வருடங்கள் ஆகின்றன,சென்னையில் தான் இப்படி அதிகம் 24மணிநேரம் தொடர்ந்து  வேலை செய்தது,சுமார் 6 வருடங்கள் முன்பு சென்னை ஓஎம்ஆர்-ஐடி காரிடாரில் ஐடி பார்க்குகள் அதிகம் வரத்துவங்கியபோது, எங்கள் ஆர்கிடெக்ட் அலுவலகத்தில் சுமார் 20 ஐடி பார்க்குகள்,கால் செண்டர்கள் டிசைன் செய்து கொண்டிருந்தோம், அதில் சான்சா,[xanza] சத்யம், டிசிஎஸ்,சதர்லேண்ட் என அடக்கம். , எங்களுடையது பேஸ்மெண்ட் ஆஃபீஸ் ஆகையால் வெளியே கலவரமே நடந்தாலும் தெரியாது, மரம் செடி,கொடியே இருக்காது. சதா ஏசியில் இருந்து உடம்பே உஷ்ணமாயிருக்கும், நேரத்துக்கு சாப்பிட முடியாததால், பசியெடுக்காது, பசித்தபோது சாப்பிடமுடியாதபடி பணிச்சுமை அழுத்தும்.

ண்கள் செவசெவ என எரிந்தபடி இருக்கும். விட்டில் மதியம் சென்று தூங்கும் போது யாராவது ஊட்டி விட்டால் மட்டுமே சாப்பிட முடியும். குழந்தையை கொஞ்சக்கூட நேரமிருக்காது.விடிகாலையில் அலுவலகத்தில் வீடு திரும்ப வண்டியை எடுக்கும் போது தான், முந்தைய நாள் அடித்த வெயிலுக்கு டயரே பஞ்சர் ஆயிருப்பது தெரியும். இதையெல்லாம் நிறைய அனுபவித்திருக்கிறேன். குறையே சொன்னதில்லை.

2006 டிசம்பரில் இங்கே ஒரு துடிப்பில்,கட்டாயத்தில் அமீரகம் வந்தவுடன், மனம் கிடந்து துள்ளியது, வேலை பிடித்திருந்தது, ஆனால் 10 பேர் செய்யும் வேலையை 100 பேர் செய்தனர். செம சிரிப்பாய் இருந்தது.என்ன தான் உலகின் உயரமான கட்டிடத்தில் வேலை என்றாலும் சம்பளம் குறைவாதலால், மனம் லயிக்கவில்லை,நல்ல பெயர் எடுத்தும்,வெறும் ஒரு வருடத்தில் ,மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து, வேலை மாறிவிட்டேன்.

னால் அந்த செப்டம்பர் 15, 2008 இப்படி வாழ்க்கையை புரட்டி போடும் என்று நினைக்கவே இல்லை. வீடு வாங்கினேன். மறுமாதமே வேலை போனது, மறுவாரமே இறைவன் சித்தத்தில் வேறு வேலை கிடைத்தது. இதோ இப்போது உள்ள ஆஃபீஸிலும் 80சதம் ஆட்குறைப்பு நடந்தேறிவிட்டது. ப்ராஜக்டுகளே சுத்தமாக இல்லை. மனம் சென்னையில் செய்தது போன்ற அயராத உழைப்பை  எப்பொதும் நிகழ்த்த துடிக்கிறது.  ஆகவே சலிக்காது காம்பெடிஷன் ப்ராஜக்டுகள் எடுத்து செய்கிறோம்,வென்றால் வேலை உண்டு, இல்லையேல் இல்லை. தொடர்ந்து வேலை இருக்குமா?பார்ப்போம்.

மீரகத்தில், செலவு செய்யும் ஒவ்வொரு திர்காமுமே தகும். சில ஆஃபீஸ்களில் வெள்ளி,சனி இரு வாரநாட்கள் விடுமுறை. வாரத்துக்கு 45 மணி நேரம் மட்டுமே வேலை. குடும்பத்துடன் நிம்மதியாக இருக்க முடியும்,தரமான சுற்றுப்புறம், தரமான கல்வி, தரமான வாழ்க்கைத்தரம் எல்லோருக்கும் நிச்சயம்.ஆனால் கடந்த இரு வருடங்களாக வேலை நிரந்தரமின்மை என்னும் அச்சுறுத்தல் மனதுக்குள் புகுந்து கொண்டு மணிஅடிக்கிறது. ஆனால் இதுவும் கடந்து போகும். இதை இன்னும் இரு வருடம் கழித்து நினைத்துப்பார்க்கையில் சிரிக்கவும் நேரிடலாம்.அல்லது நினைவுக்கே வராமலும் போகலாம்.

ன் கண் முன்னாலேயே என் பல நண்பர்கள் வேலை இழந்து தாயகம் சென்றனர். அதில் வடலூரான் கலையரனும் அடக்கம்.  எனக்கு கையறு நிலை. யாருக்கும் உதவக்கூட முடியவில்லை.ஊரில் உள்ள நண்பர்களுக்கும் சிவி மூவ் செய்து உதவமுடியாத நிலை. எங்காவது வேலைக்கு ஆள் உள்ளே எடுத்தால் தானே?

ப்போது உள்ள நிலையில் பெரும்பானோர் சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொள், ஆனால் வேலையை விட்டு அனுப்பாதே,என்னால்  இந்த சூழலில் வேலைதேடி அலைய முடியாது என்கின்றனர். என்னுடன் வெறும் பாஸ்போர்ட் காப்பி கொடுத்து 250,000 திர்காம்  வரை [ரூ31லட்சம்] வங்கிக்கடன் வாங்கிய ஏனைய பேர் இன்னும், ஒரு தவணை கூட கட்டாமல் மிகுந்த மனோ தைரியத்துடன் இருக்கின்றனர். வங்கிகள் போன்செய்து கேட்டால் ஜென்டில் மேன் ஸ்டைலில் பணம் செல்வாயிடுச்சு , வேலை கிடைத்தால் கொடுக்கிறேன்!!! என்கின்றனர். எப்பா என்னா தைரியம்? என்றே நினைக்க தோன்றுகிறது.ஏகம் பேர் 2 வருடம் முன்பே அப்ஸ்காண்ட் ஆகிவிட்டனர்.

ன் போன்ற எப்படியாவது தவணையை  ஒழுங்காகக்கட்டும் ஆட்களுக்கு வங்கிகள் மேலும் அபராதமும், வட்டிக்கு, வட்டியும். போட்டுவருகின்றன, தவணை தொகையை குறைக்கமுடியாது, தவணைகாலத்தை நீட்டிக்கமுடியாது,நோ லோன் ரீஸ்ட்ரக்சர் ஃபார் யுவர் கைண்ட் ஆஃப்  ஸ்கீம் என்னும் தேய்ந்து போன பதிலையும் திரும்ப திரும்ப சொல்லிவருகின்றனர். ஐயா வங்கிகளே!!! உங்களை வட்டியை குறைக்க சொல்லி பிச்சை கேட்கவில்லை, உங்கள் தேய்ந்துபோன தட்டையான வங்கி விதிகளை மாற்றுங்கள். அப்போது தான் சில விடாக்கண்டர்களிடம் எதாவதாவது பெயரும். ஹி ஹி சின்ன குமுறல். சொந்தக்கதை யூ சீ.இன்னும் 12 மாதம் தவணை பாக்கி உள்ளது.அது தான் கீழே கவுண்ட்ட் டவுன் விட்ஜெட் எல்லாம்  வைத்து ஓயாமல் தேய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

சென்னை கார்பொரேஷன் தண்ணீர் குழாய் போல 2மாதத்துக்கு ஒரு முறை சம்பளம் வருகிறது, அதுவும் போன மாதத்தின் போன மாத பாக்கி. எப்படியோ இழுத்து பிடித்து ஓட்டும் எனக்கு, ஊருக்கு போக வேண்டும் என்றாலே பதட்டம் தொற்றிக்கொள்கிறது, சில நண்பர்கள் என் நிலைமை புரியாமல், சோனி நோட்புக். சாம்சங் ஆண்ட்ராய்ட் செல்போன், ஹார்ட்டிஸ்க், ஐபாட், ஏன்? ஐபோன்.கூல்வாட்டர் பாடிஸ்பெரே,14 மெகா பிக்ஸல் டிஜிட்டல்  கேமரா, எல் சிடி டிவி என பெரிய லிஸ்டையே  மெயில் அனுப்பி வாங்கி வரச்சொல்லுவதால் [பணம் அங்கே வந்ததும் தருவார்களாம்] என் பயணத்தை அடுத்த வருடம் மே மாதத்துக்கு ஒத்தி வைத்து விட்டேன்.

தனாலேயே என் மகளுக்கோ மனைவிக்கோ கூட எதுவுமே வாங்கி செல்வதில்லை. அங்கேயே எல்லாம் கிடைப்பதால் கூட்டிப்போய் வாங்கி கொடுத்து விடுகிறேன். சில சென்னை நண்பர்கள், ரிசெஷனா? அப்படின்னா? ஈரோடு பக்கமோ?தூத்துக்குடி பக்கமோ என்று எகத்தாளம் செய்கின்றனர்.

ல்லாவற்றுக்கும் மேலாக, எனக்கு  வலிய வந்து கடன் கொடுக்க தேடிவந்து கேன்வாஸ் செய்த பேங்க் சேட்டனை வெறியோடு தேடினேன்.அவருக்கும் வேலை போய்விட்டதாம். அவர் இப்போது இன்சூரன்ஸ் ஏஜெண்டாம். இன்சுயூரென்ஸ் எடுங்கள், உங்க வீட்டுக்கு நல்லது என்றார். நான் உங்களுக்கு இன்சூரன்ஸ் இருக்கா? அதுவும் உங்கள் வீட்டுக்கு நல்லது தான், என பல்லை கடித்தேன். வெறியோடு போன் செய்தால் இன்சூரன்ஸா போடச் சொல்ற? இருடி மகனே என்று நினைத்துக்கொண்டேன். அவர், பேடிக்கண்டா,பேங்க் ஒண்ணும் ஆக்‌ஷன் எடுக்கப்பற்றாது என்றார். அடங்கொய்யால, நேர்மையா  கட்றவனையும் கெடுக்க நீ ஒருத்தன் போதும்!!!!  என்று போனை கட்செய்தேன்.

வார இறுதிநாட்களில் எங்காவது மாலுக்கு விண்டோ ஷாப்பிங் செய்யலாம் என்று பார்த்தால் கண்ணில்படுவதெல்லாம்,இரண்டாம், மூன்றாம் தரமான சீன கம்பெனிகளின் எலக்ட்ரானிக் பொருட்கள். பிரபல பிராண்டுகளின் புதிய வரவுகளை ஷோகேஸில் அடுக்கி வைக்க கடைக்காரர்களிடமே காசு இல்லை போலும் , எல்லா இடங்களிலும் ஷாப் க்ளோசிங் சேல் என்று போட்டு காலிபண்ற விலைக்கு ஷர்டு முதல் அந்துருண்டை வரை விற்கின்றனர் . ஏனைய பேர் வேடிக்கை மட்டும் பார்க்கின்றோம். நிறைய மால்கள் சென்ற வருடம் இந்தியர்களை நீக்கிவிட்டு சம்பளம் குறைவென்று பிலிப்பினோக்களை பணிக்கு அமர்த்தியது, இப்போது அதுவும் போய், நேபாளிகளை கவுண்டர் சேல்சுக்கு அமர்த்தியுள்ளது.

தே கதைதான் ஹாஸ்பிடல்களிலும், பள்ளிகளிலும், ரிசெஷனால் பாதிக்கப்படாத துறையினரே இல்லை எனலாம். அத்தை எப்போ செத்துப்போவா? திண்னை எப்போடா காலியாகும்னு சொல்வதுபோல எப்போடா லோனை முடிப்போம் என்றிருக்கு, இதே போல யாராவது லோன் வாங்கி தவணை கட்டிக்கொண்டிருந்தால், அதுவும் அமீரகத்தில் இருந்தால்,தொடர்பு கொள்ளவும், சேர்ந்து கும்மிஅடிக்கலாம்.

வாருங்கள் எல்லோரும் சேர்ந்து ரிசெஷன் ஒழிய  இறைவனை வேண்டிக்கொள்வோம், இனி வரும் காலத்தில் ஒருவனுக்கு எகனாமிக் பூமும் வேண்டாம், ரிசெஷனும் வேணாம்டா சாமி. யாரேனும் இப்போது கடன் வாங்குவதாக இருந்தால் நூறு முறை யோசித்து வாங்குங்கள். கடன் இருந்தால் கண்ணுக்கு தெரியாத பேய் உங்கள் தோள் மேல் உட்கார்ந்து தொல்லை கொடுப்பதை போன்றது.அனுபவஸ்தன் சொல்கிறேன்.

இனி யாராவது மாமனார், மச்சினர். பெரியப்பா, சித்தப்பா, என்னைப்பார்த்து காசை வேஸ்ட் பண்ணாதப்பா, நிலம் வாங்கு, நீச்சு வாங்குன்னு சொன்னா,கவுண்டமணி ஸ்டைலில் எவனாருந்தாலும் வெட்டுவேன்.எவனாருந்தாலும் வெட்டுவேன்.என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

====0000====