ஆமென்[Amen][மலையாளம்][2013]

மென் மலையாளப் படம் மூன்றாம் முறையாக இன்று பார்த்தேன்,இன்னும் பார்ப்பேன்,சமீபத்தில் பார்த்த ஃபீல்குட் படங்களில் மிகவும் வசீகரித்த படம்,நண்பர் உலக சினிமா ரசிகன் என்னை ஆமென் என்னும் போப்பின் மௌனத்தைப் பற்றிய படம் பார்க்க சொன்னார்,நான் இந்த ஆமென் நினைவாகவே இருந்து விட்டேன்.

எந்த படத்தைப் போலவும் இல்லாத முற்றிலும் மாறுபட்ட காட்சியமைப்பும்,டைட் க்ளோஸ் அப் ஷாட்டுகளும்,கேமரா மேனுக்கு பறக்கத் தெரியுமோ என எண்ணும் படியுமான டாப் வியூ ஷாட்டுகளுமாக  கண்களுக்கு விருந்து படத்துள்ளார் இயக்குனர்.படத்தின் டைட்டில் பாடலான ஆத்மாவின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது,
இப்படத்துக்கு அபிநந்தனின் ஒளிப்பதிவும் பிரசாந்த் பிள்ளையின் இசையமைப்பும் இருகண்கள்,படத்தின் கதாபாத்திரங்கள் அப்படி ஒரு பங்களிப்பை ஈந்துள்ளனர், ஃபஹாத் ஃபாஸிலின் மணி மகுடத்தில் இப்படம் மேலும் ஒரு வைரம்,அண்டர்ப்ளேயில் ஃபஹாத் போல இனி ஒரு நடிகன் இல்லை என்னும் ட்ரெண்டை உருவாக்கிவிட்டார், மனிதர் முற்றிலும் புதியதான தோற்றத்துடனும் உடல்மொழி,பாவனையுடன் வருகிறார், 

படத்தின் முற்பாதி முழுக்க தோற்றுக்கொண்டே இருக்கிறார்,பைட்டொ யாரிடமாவது முறைத்துக்கொள்ளும் சவடால் காட்சியோ எதுவுமே கிடையாது, காதலியின் அண்ணனிடம்,பேண்ட் மாஸ்டர் கலாபவன் மணியிடம், காதலி சுவாதியிடம் சரமாரியாக அடியும் அறையும் வாங்கி நடித்துள்ளார், ஒரு நடிகன் எந்த ஒரு ஸ்க்ரிப்டிலும் நடிக்க முன்வரவேண்டும்,நடிப்பில் கௌரவம் பார்க்கவே கூடாது என்னும் ட்ரெண்டை உருவாக்கிய ட்ரெண்ட் செட்டர் என்றே சொல்லுவேன்,இவரின் தன்னடக்கம் இவரை எங்கோ உயரத்துக்கு கொண்டு செல்லும் என்பது உறுதி.

ஜிகினா தாளில் மலம் மடிக்கப்பட்ட பொட்டலம் சசி கலிங்காவின் வீட்டுக்கு வெளியே தோன்றும் அந்த முதல் காட்சியிலேயே நமக்கு அப்படி ஒரு சிரிப்பும் உற்சாகமும் தொற்றிக்கொள்கிறது ,அதிலேயே  அந்த காயலுடன் கூடிய கிருஸ்துவ கிராமம் குமரன்கிரியும்,அதன் மக்களும்,அவர்களின் ஏட்டிக்கு போட்டி கௌரவமும் காட்டப்படுகிறது,

ஏற்கனவே குட்டி ஸ்ராங்க்,படத்தில் இத்தனை எழிலான காயலும் பல நூற்றாண்டு தொன்மை வாய்ந்த சர்சும்,அதன் திருவிழா ஏற்பாடுகளும்,அதில் தொன்று தொட்டு போடப்பட்டு வரும் நாடகமும் நாம் கண்டிருந்தாலும் ஆமெனின் முற்றிலும் புதிய ஒளிப்பதிவு தொழில்நுட்பமும் நேர்த்தியும் கிறங்கடிக்கிறது, இது வரை மலையாளக்கரையின் காயலின் பிண்ணணியில் வெளியான எந்த ஒரு படத்தையும் விஞ்சி நிற்கிறது படம்,அப்படி எல்லாம் கூடிவந்த ஒரு படம்.

குமரன்கிரி என்னும் அவ்வூரின் புகழ்பெற்ற காலம்சென்ற  ஏழை கிளாரினெட் கலைஞனின் மகனான சாலமனாக ஃபஹாத் ஃபாஸில், அவனை பள்ளியில் படிக்கும் காலம் தொட்டே தீவிரமாக காதலித்து வரும் அவ்வூரின் செல்வந்தர் மகளான சூசன்னாவாக சுப்ரமண்யபுரம் சுவாதி,சாலமனின் தந்தையின் நண்பர் இன்றைய பேண்ட் மாஸ்டராக கலாபவன் மணி,நீண்ட நாட்களுக்கு பின்னர் கலாபவன் மணியின் நடிப்புக்கு தீனி போட்ட படம் இது,

தந்தையின் அகால மரணத்தாலும் தன் ஏழ்மையாலும் மிகவும் தன்னம்பிக்கை குறைவால் உழலும் சாலமன் கிளாரினெட்டை தன் காதலி சூசன்னா முன்னர் நன்றாக வாசிக்க தெரிந்தும் தான் சார்ந்து இருக்கும் டி.வர்கீஸ் பேண்ட் சங்கம் முன்பும்,திருச்சபையினர் முன்பும் வாசிக்க முடியாமல் திணறுகிறார். அவ்வப்பொழுது இவரின் காலம் சென்ற தந்தை களாரினெட் கலைஞன் எஸ்தப்பன் இவரின் கனவில் இரு சிறு தேவதைப் பெண்களுடன் வந்து இவருக்கு தைரியமூட்டிச் செல்கிறார்.அருமையான மேஜிக்கல் ரியாலிச வேலை அது, அந்த 400 வருட தொன்மையான சர்ச்சின் இப்போதைய அருட் தந்தை ஆப்ரஹாம்[ஜாய் மேத்யூ] இவரின் வாசிப்பு திறமையை நம்ப மறுக்கிறார்,

இவருக்கு வாய்ப்பு கொடுக்காமலே மட்டம் தட்டுகிறார்.இவர் கோவில் மணி அடிக்க கூட லாயக்கு அற்றவர் ,இருந்தும் அவரின் ஏழ்மைக்கு இறங்கி அந்த வேலையை தருகிறேன் என்று எள்ளல் செய்கிறார்.தன் தந்தையின் ஒரே சொத்தான ஓட்டு வீட்டையும் சொந்தம் கொண்டாட முடியாத படிக்கு அந்த ஊர் சர்ச்சின் கப்பியார் அந்த வீட்டு பத்திரத்தை இவர்கள் குடும்பம் வாங்கிய சொற்ப கடனுக்காக கைப்பற்றி வைத்திருக்கிறார்,அதை கேட்கும் துணிவும் சாலமனுக்கு இல்லை.

இந்நிலையில் இந்த சர்ச்சுக்கு புதிய சிறிய தந்தையாக வந்து சேர்கிறார் வின்செண்ட் வட்டோளி [இந்திரஜித் சுகுமாரன்]. அவரின் சகோதரியும், மைத்துனரும்  அடுத்த ஊர் காயல் கரையைச் சேர்ந்த போட்டி பேண்ட் மாஸ்டர்கள், அவர் மைத்துனர் டி.வர்கீஸ் பேண்ட்டில் இருந்து பிரிந்து போனவர்,அப்படி  இருந்தும் இவரின் பால்ய நாட்களில் இவர் மனம் லயித்த இந்த டி.வர்கீஸ் பேண்ட் சங்கத்தையே  இவர் பெரிதும் விரும்புகிறார்,அதை மீண்டும் உயிர்ப்பித்து வரும் திருவிழாவில் ஜெயிக்க வைக்க  இவரால் ஆன எல்லா உதவிகளையும் முன்னின்று நடத்துகிறார். சிறிதும் தலைக்கனம் இல்லாத ஒரு நல்ல ஆத்மா இந்த சிறிய தந்தை நடை உடை பாவனையில் மிகவும் மாடர்னாக இருக்கும் இவரை பழைய பெரிய தந்தைக்கு பிடிக்காமல் போகிறது,

பழைய தந்தை ஆப்ரகம் செய்யும் சில திரமறைவு வேலைகளுக்கு சிறிய தந்தை வின்செண்ட் முட்டுக்கட்டை போடுவது மேலும் எரிச்சலூட்டுகிறது, இப்போது சாலமனின் காதலி சூசன்னாவை சர்ச்சை புதுப்பிக்கப்போகும் வேலையை செய்யப்போகும் காண்ட்ராக்டரின் அமெரிக்கா ரிட்டன் மகனுக்கு முன்னின்று நிச்சயம் செய்கிறார் பெரிய தந்தை ஆப்ரஹம்,கையாலாகாத சாலமன் என்ன செய்து எல்லா பிரச்சனையையும் முறியடித்தார்,என்பதை அத்தனை சுவையாக சிரிப்பும் களிப்பும் கும்மாளத்துடன் சொல்லியுள்ளார் இயக்குனர் லிஜோ ஜோஸ்.அந்த பேண்ட் வாத்தியக்குழுவில் சாலமனுக்கு பக்கபலமாயிருக்கும் அத்தனை கதாபாத்திரங்களுமே அருமை.

அந்த வருட புத்தாண்டின் பேண்ட் வாத்திய கச்சேரிக்கு ஊரே தயாராகும் காட்சிகள் கொண்டாட்டமான மனநிலையை தரும்,படத்தில் வரும் அந்த குசும்பு பிடித்த சிண்டு முடியும் பால் காரன் கம் பேண்ட் வாசிப்பவன் பாத்திரம் அருமை,தென்னை மரத்திலேயே இருந்தபடிக்கு நியாயம் உதிர்க்கும் பாத்திரம், தன் வீட்டு வாசலில் மலப்பொட்டலம் வைத்தவனை பழிவாங்க அதை தேக்கு இலையில் பார்சலாக்கி தானே அதை எடுத்துச்சென்று அயிரை மீன் என்று சொல்லி சாச்சப்பன் [சசிகலிங்கா] பரிசாக தரும் இடம்,அது திரும்ப அவர் வீட்டு டைனிங் டேபிளுக்கே வரும் இடம் எல்லாமே அருமை.

மிகவும் பிடித்த காட்சியாக அந்த வாய்க்காலுக்கு மேலே 2 அடி அகல மரப்பாலம்,அதில் பாதிரியார் படிப்பிற்காக கப்பியாருடன் பெட்டியுடன் கிளம்பிப்போகும் சாலமனை வழி மறித்து அவன் பள்ளியில் இவளிடம் செய்த சில்மிஷங்கள்,இவள் அவனுக்கு கொடுத்த முத்தங்கள்,என்று நினைவூட்டி அவனை மிரட்டி தன் வழிக்கு கொண்டு வரும் சூசன்னா நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார்,அத்தனை குறும்புத்தனம் மிளிரும் காட்சி அது.கப்பியாரை தண்ணீரிலும் தள்ளிவிட்டு விடுவார்.ஃபாதர் வின்செண்டும் அவரின் கொள்கைகளும் மிக அருமை,அவரின் ஃப்ரென்சுக்கார பெண் மிச்சேலுடனான அந்த நட்பு மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது.

இதில் பாப்பச்சனாக வரும் சசி கலிங்கா மலையாள சினிமாவின்
நடிகர் சசி கலிங்கா
அண்டர்ரேட்டட் நடிகர், ஃப்ரைடேன்னு ஒரு மலையாள படம் அதில் போட் ரிப்பேர் செய்யும் பப்பன்,அந்த பப்பன் அப்படி ஒரு அலும்பன்,யாரும் அவரிடம் ஒரு வேலை வாங்கிட முடியாது,வெறும் தகரம் கொண்டு படகிலே விழுந்த பெரிய ஓட்டையை அடைப்பார்,கதாமாவில் இன்னும் கலக்கலாக செய்திருப்பார்,அதில் சீனிவாசன் வீட்டில் அழையா விருந்தாளியாக டேரா போட்டு பெரும் இம்சையை கூட்டுவார் சசி கலிங்கா,பாலேரிமாணிக்கத்தில் உயர்சாதி போலீஸ் இன்ஸ்பெக்டர்,பணம் வாங்கிக்கொண்டு ஹாஜியாருக்கு சாதகமாக கேஸை மூடிவிடுவார்,கேரளா கஃபேவில் ரேவதி எடுத்த எபிசோடில் ஒரு பெண் தரகன் ,நம்மை கணப்பொழுதில் உறைய வைத்து விடுவார்,ஒரு நடிகன் என்றால் இப்படித்தான் மல்டி டைமென்ஷனிங்காக இயங்க வேண்டும்,ப்ராஞ்சியேட்டனில் இங்க இன்று நீ சாப்பிடுவியா?,நான் பொங்கப்போறேன்,இங்க இன்று நீ சாப்பிடுவியா?,நான் பொங்கப்போறேன்,என்று படம் முழுக்க எதிர்படுவோரை கேட்டுக்கொண்டே இருக்கும் ஒரு உஸ்தாத் வேடம் சசி கலிங்காவுக்கு,இவரை யாரவது இயக்குனர் கோலிவுட்டுக்கு அழைத்து வரும் வேலையை செவ்வனே செய்தால் புண்ணியமாகப் போகும்.
                                         
கள்ளுக்கடை முதலாளியாக  குலப்புள்ளி லீலா மற்றும் அவரின் மகன் தோன்றும் காட்சிகள் அருமை,ஒரு காட்சியில் எதிரி பேண்ட் ஆட்கள் விட்டெறியும் காலி பாட்டில் எங்கே தன் மேல் படாமல் போய்விடுமோ என்று தானே குதித்து எழும்பி பாட்டிலுக்கு தலையை கொடுக்கும் காட்சி எனக்கு மிகவும் பிடித்தது , போட்டி பேன்ட் க்ரூப்பில் புதிதாக களமிறக்கப்படும்  கண்ணாடி சில்லை தின்னும் வாத்திய கலைஞர், அந்த ஃப்ரெஞ்சுப் பெண்மணி மிச்சேல் ,சாலமனின் அழகிய தங்கையான க்ளாரடா[ரச்சனா] கதா பாத்திரம்,அவளின் காதலன் பாத்திரம் என ஒவ்வொன்றும் நேர்த்தியான படைப்புகள். குடும்பத்தோடு பார்க்கவேண்டிய மலையாள திரைப்படங்களில் ஆமெனுக்கே முதலிடம், இதே போன்ற சர்ச், சிற்றூர் மக்கள் சார்ந்த கதையமைப்பில் நல்ல வெடிசிரிப்புடன் வெளியாகி சக்கை போடு போட்ட படம் ரோமன்ஸ்,அதையும் நேரம் கிடைத்தால் பாருங்கள் நண்பர்களே!!!.

இப்போது திருஷ்டி போல சிலபடங்கள் மலையாளத்தில் புதுமையான சினிமா என்ற போலி வேஷத்துடன் வெளியாகி மண்ணை கவ்வியது, ரேடியோ,தல்சமயம் ஒரு பெண்குட்டி, ப்ரேக்கிங் நியூஸ் லைவ், க்ளைமேக்ஸ் போன்ற படங்கள் தான் அவை, மலையாளப் படங்கள் விரும்பி பார்க்கும் நண்பர்கள் அவற்றில் இருந்து பத்தடி தள்ளியே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபில் இருந்து:-