அவள் அப்படித்தான் [Aval Appadithan][1978][தமிழ்] மீள் பதிவு


படத்தில் எல்பி ரெகார்ட் முன் அட்டைப்படம்[நன்றிilayaraja.forumms.net]

இயக்குனர் ருத்ரைய்யாவின் அவள் அப்படித்தான் படம் வெளியாகி 35 வருடம் ஆகிறது , இன்று பார்க்கையிலும் அப்படி ஒரு புதுமையான படைப்பாக மிளிர்கிறது இதன் கதை,திரைக்கதை வசனத்தை புதுமையாக  வண்ண நிலவன், சோமசுந்தரேஸ்வரர், ருத்ரய்யா. ஆகிய மூவர் எழுத இயக்கம், தயாரிப்பு ருத்ரய்யா செய்திருந்தார். ஒளிப்பதிவு திரைப்படக்  கல்லூரியில் ஒளிப்பதிவு  முடித்து வெளிவந்த நல்லுசாமி மற்றும் ஞானராஜசேகரன். இவர்கள் யாரிடமும் பணி புரியாமல்,நேரடியாக களமிறங்கிய படைப்பு என்பது கூடுதல் சிறப்பு. கருப்பு வெள்ளையில் ஒரு ப்ரில்லியண்டான ஆக்கம் இது,கூடுமான வரை நிழல்களின் அழகை,இயற்கை ஒளி அமைப்பை, நிறைய ஜம்ப் கட்களை ,க்ளோஸ் அப் ஷாட்களை உபயோகித்து எடுக்கப்பட்ட தமிழின்  முதல் படம்,இந்த யுத்திகள் சத்யஜித் ரேவினால் 1970களிலேயே சீமாபத்தா என்னும் படத்தில் கையாளப்பட்டிருந்தாலும்,தமிழில் இதை பரிட்சிக்க யாரும் துணியாத சூழல் நிலவியது,அதை தகர்த்தவர் ஆறுமுகம் என்கிற ருத்ரையா,இவர் 1980ஆம் ஆண்டு கிராமத்து அத்தியாயம் என்னும் படமும் இயக்கியுள்ளார்.

கண்ட கருமத்தையும் ரீமேக் செய்கிறார்கள் , இந்தப் படத்தை மூல ஆக்கம் சிதையாமல் ரீமேக் செய்யலாம், அது கதையே இல்லாமல் படம் எடுக்கும் இன்றைய சூழலுக்கு நல்ல மாற்றாக அமையும் , அல்லது இதை  ரீ மாஸ்டர் செய்து செப்பனிட்டு வெள்ளித்திரையில் வெளியிடலாம் , மிக அற்புதமான படம் ,இதன் அருமையை உலக சினிமா ரசிகர்கள் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்,சில படங்களை அனுபவிக்க வேண்டும்,ஆராய்ந்து கொண்டிருக்கக் கூடாது,இது அது போன்ற ஒரு படம்.படம் கொண்டிருக்கும் நறுக்கு தெரித்தாற்போன்ற வசனங்கள்,அதில் சரி பாதி நுனிநாக்கு ஆங்கில அதுவும் பச்சையான வசனங்கள்,கொஞ்சமும் பாக்ஸ் ஆஃபீஸ் சமரசங்கள் இல்லாத தமிழின் முதல் சர்ரியாலிஸ்டிக் படம்.

ஆனால் ரீமேக் என்று வருகையில் ஒரு ஆபத்து உண்டு,தில்லு முல்லுவை கொத்து போட்டது போல அசிங்கம் செய்து விடுவார்கள்,இயக்குனர் ருத்ரையாவைப் போல இங்கே கொம்பன் யாருமில்லை, ரீமேக் செய்தால் ஒரிஜினாலிட்டி போய் பல் இளித்துவிடும்,க்ரைடீரியான் நிறுவனத்தார் போல யாராவது இதை ரீமாஸ்டர் செய்து மறுவெளியீடும் செய்ய வேண்டும்.அதுவே நல்ல கைங்கர்யம் ஆகும்.  இதில் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு படம் பற்றி நன்கு தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லவும்,

பெண்களின் சுதந்திரம் என்று இயக்குனர் அருண் [கமல்] ஆவணப்படம் எடுக்க, பாடகி எஸ்.ஜானகியை சந்திக்க போவதாக சொல்லிவிட்டு, நடிகை குட்டி பத்மினியை போய் மஞ்சுவுடன் சந்திக்கின்றனர், அது என்ன முரணான காட்சி? காட்சியை கட் செய்து விட்டார்களா?!!! படத்தில் கடைசி வரை ஜானகியின் பேட்டி வரவேயில்லை, ஆனால் அந்த காரில் பேட்டி எடுக்க பயணிக்கையில் ,ஜானகியம்மா பாடும் “வாழ்க்கை ஓடம் செல்ல” என்னும் அருமையான பாடல் பேக்ட்ராப்பில் ஒலிக்கிறது,பாடல் முடிகையில் கமலும் மஞ்சுவும் உடையும் மாற்றியிருப்பார்கள், இதைப் பற்றி எதாவது மேல் விபரம் தெரியுமா?!!! மஞ்சுவாக ஸ்ரீப்ரியா தோன்றி அந்த கதாபாத்திரத்துக்கே நீதி செய்திருந்தார் என்றால் மிகையில்லை, அத்தனை தினவு,அத்தனை திமிர்,யாரிடமும் இயக்குனர் வாங்கியிருக்க முடியாது, இளம் வயது மஞ்சுவாக தோன்றியது நல்லெண்ணெய் சித்ரா. என்னால் முதலில் கிரகிக்க முடியவில்லை. யூட்யூபில் முழுப்படமும் கிடைக்கிறது,இது பத்தோடு பதினொன்று வகைப் படம் அல்ல,ஆகவே படத்தை அவசியம் நேரம் ஒதுக்கி அனுபவித்துப்  பாருங்கள்,  

இதில் ரஜினி ஆர்ட் டைரக்டர், நெற்றி நிறைய வீபுதியும்,கழுத்தில் ருத்திராட்சமும், கண்களில் காமாந்தக வக்கிரப் பார்வையுமான கதாபாத்திரம். ஸ்ரீப்ரியா அவர் விளம்பர நிறுவனத்தின் டிசைனர், படத்தில் ஒரிஜினாலிட்டி அப்படி காப்பாற்றப்பட்டுள்ளது, அதில் சம்பிரதாயமாக தொழில் முறை சார்ந்த காட்சிகளை படம் பிடிக்காமல் சத்யஜித் ரேவைப் போன்றே துறை சார்ந்த தீஸிஸ் செய்து ஸ்ரீப்ரியா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன என்பேன்,அத்தனை நேர்த்தி, அதில் ஆபீஸ் அசிஸ்டண்ட் ஒருவன் ஸ்ரீப்ரியாவிடம் உங்கள் டிசைனுக்கான ஐடியாக்கள் எங்கே கிடைக்கின்றன?!!! என வியந்து கேட்க,இரண்டு ஃபாரின் டிசைன் மேகசினை புரட்டினால் ஐடியாக்கள் கிடைக்கிறது இது என்ன பிரமாதம்? என டிசைனிங் செய்து கொண்டே சொல்வார் ,அது எத்தகைய யதார்த்தமான ஒன்று என பார்வையாளருக்கு புரியும், சர்காசிசம் ததும்பும் இயல்பான காட்சியது.

படத்தில் எல்பி ரெகார்ட் பின் அட்டைப்படம்[நன்றிilayaraja.forumms.net]
அபலை இல்லம் நடத்திவரும்  பரோபகாரிப் பெண்மணியை கமலும் ஸ்ரீப்ரியாவும் பேட்டி காணச் செல்லும் இடம் எல்லாம் அத்தனை அற்புதமானவை, ஆண்களால் வஞ்சிக்கபட்டு உங்கள் உங்கள் இல்லத்தில் தங்கி இருக்கும் இளம் பெண் ஒருத்திக்கு உங்கள் மகனைத்திருமணம் செய்து வைப்பீர்களா?!!! என்று ஆவணப் பட இயக்குனர் கமல் இயல்பாகக் கேட்டதால் அதிர்ச்சியடைந்த பரோபகாரி சமூக சேவகி  மிகவும் எரிச்சலடைந்து விருவிருவென பேட்டி முடியும் முன்பே வெளியேறுவார். அந்த இடத்தில் இருந்து மஞ்சு ஆண்களையே மதிக்காதவர், கமலை மதிக்கத் துவங்குவார்.

படத்தில் என்னைக் கவந்த பாடல் இது,அதன் சூழலை இங்கே தந்துள்ளேன்.
என்ன அருமையான பாடல் ?!!!என்ன அருமையான இசை? அவன் ஒரு கபட வேடதாரி, ஏற்கனவே வாழ்விலும் தோற்று, காதலிலும் தோற்றவளை வசீகரித்து அடைய தன் இசையால் மயக்கி அவளின் மனக்காயத்துக்கு மருந்து போடும் வரிகளை அவன் தேனாக குழைத்து பாடுகிறான்,அவள் மயங்கி தன்னிலை மறந்து,மீண்டும் ஏமாற எத்தனிக்கிறாள். 

உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை…
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே…

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்… வெறும்பனி விலகலாம்

வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை…

ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே…

வாழ்வென்பதோ கீதம்..
வளர்;கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்

நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை…
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..
இனியெல்லாம் சுகமே..

படத்தின் இன்னொரு முக்கியமான காட்சி எனக்கு மிகவும் பிடித்தமானது, ஆவணப்பட இயக்குனர் கமலின் உண்மையான அன்பை காலதாமதமாகவே உணர்கிறார் ஸ்ரீப்ரியா.வேளை கிடைக்கும் போதெல்லாம் தன் காதல் தோல்விகளை,தன்னை தண்டித்தவர்களுக்கு தரும் தண்டனையை கடும் வார்த்தைகளால் தேளின் கொடுக்கு போல கொட்டி கமலை காயப்படுத்தியே வந்திருக்கிறார் மஞ்சு,அதையும் மீறி கமல் ஒரு பொது உடைமைவாதி , பெண்ணடிமைத் தளையை வெறுப்பவர் போன்ற சிறப்புகள் அவரின் பால் மையல் கொள்ள வைக்கிறது, ஆனால் எல்லாமே ஒருநாள் கைமீறிப் போய்விடுகிறது,

மஞ்சுவை புரிந்து கொள்ள முயன்று தோற்றதால்,தன் தந்தை இவரிடம் கேட்ட முதலும் கடைசியுமான விருப்பத்தை நிறைவேற்ற தந்தை பார்த்த அடக்கம் ஒடுக்கமான பெண்ணையே திருமணம் முடித்து கூட்டி வருகிறார். [நடிகை சரிதா கௌரவ தோற்றத்தில் கமலுக்கு மனைவியாக வருகிறார்].அன்று கமலை நான் பார்த்தே ஆக வேண்டும் என ரஜினியிடம் அலௌவலகத்தில் சென்று கேட்கும் ஸ்ரீ ப்ரியாவை, குசும்பாக, இதோ கூட்டிப் போகிறேன் என எழும்பூர் ரயிலடிக்கு அழைத்துப் போகிறார் ரஜினி,

அங்கே போர்டிக்கோவில் கமல்   மனைவியின் கையைப் பற்றிய படி வெளியே வருகிறார்.படத்தில் அவர் காம்ரேட் ஆனதால் எளிமையாக லுங்கியையே அணிந்து வருகிறார், ஆனால் மனைவி பூவும் ஜார்ஜெட் புடவையும், கழுத்து நிறைய நகைகளுமாக காட்சியளிப்பார்.

 மஞ்சு கமலிடம் அடைந்த ஏமாற்றத்தை வெளிக் காட்டிக்கொள்ளவில்லை, அருணும் மஞ்சு பக்கம் தலையை திருப்பவேயில்லை, மனதுள் போராட்டம்.காருக்குள் அமைதி குடிகொண்டிருக்க,எந்த வித உணர்ச்சியுமின்றி ஒரு ட்ரைவர் காரை ஓட்டி வருவார்,ட்ரைவரின் அருகே அமர்ந்திருக்கும் ரஜினி கார் ஓடுகையிலேயே கதவை திறந்து வெற்றிலைச் சாரை துப்பி மூடுவார்.[பழமையும் புதுமையுமாய் என்ன ஒரு மேனரிசம்?]

அமைதியை கலைக்கும் விதமாய் மஞ்சு அருணை நோக்கி பெண்களிடம் நீங்கள் கேட்கும் வழக்கமான கேள்வியை உங்கள் மனைவியிடம் கேட்ட்டாயிற்றா? என்றவர், பதிலுக்கு காத்திராமல், நானே கேட்கிறேன்,What do you think about Women's Liberation?!!!சரிதா விழிக்க   பெண்கள் சுதந்திரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? என தமிழில் கேட்க, அவர் விழிக்க, கமல் விளக்க,அவர் எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாதே,என்கிறார்,மஞ்சு ரொம்ப சேஃப் ஆன்ஸர் என்று நிறுத்துவார்.   எத்தனை அற்புதமான இடம் அது ,அந்த காட்சியை இங்கே பாருங்கள்.
What do you think about Women's Liberation?!!! முக்கியமான காட்சி


படத்தின்  டைட்டில் துவங்கி முடிவு வரை புதுமை தான் , டைட்டில் கமலின் குரலில் கதை விவாதத்தின் வாயஸ் ஓவர் பின்னணியில் துவங்குகிறது , படத்தின் முடிவும்  மெரினாவில் ஐஸ் ஹவுஸின் எதிரே காரை நிறுத்தி மஞ்சு இறங்கிக் கொண்டதும், கார் வேகமெடுக்க, மஞ்சு புள்ளியாய் தேய, கமலின் வாய்ஸ் ஓவரில் மஞ்சுவைப் பற்றிய அழகிய ஹைக்கூ கவிதையுடன் முடிகிறது,அந்த கவிதையை நான் இங்கே தருகிறேன்.

எரிந்து போன வீடு,
முறிந்து போன உறவுகள்,
கலைந்து போன கனவுகள்,
சுமக்க முடியாத சோகங்கள்,
மீண்டும் ஒரு முறை மஞ்சு இறந்து போனாள்,
இந்தச்சாவை சகித்துக்கொள்ள மஞ்சுவால் தான் முடியவில்லை,
ஹ்ம்,,,
அவள் பிறப்பாள்,
இறப்பாள்,
இறப்பாள்,
பிறப்பாள்,!!!

” அவள் அப்படித்தான்”

படம் பற்றி எழுத்தாளர் வண்ணநிலவன் சொல்வதை படியுங்கள்.
கமலும், ரஜினியும் அந்தச் சமயத்தில் பல படங்களில் நடித்து வந்தார்கள். ஸ்ரீப்ரியாவும் அன்றைய நம்பர் ஒன் ஹீரோயின். மூவருமே பிஸியான ஆர்ட்டிஸ்ட்கள். இருந்தும் ‘அவள் அப்படித்தான்’ படத்துக்கு அவர்கள் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது.

தலைசிறந்த உலகத் திரைப்படங்களை
ப் பற்றிய ருத்ரய்யாவின் அறிவு அபாரமானது. உலகப்பட இயக்குநர்களைப் பற்றியும், அவர்களது படங்களைப் பற்றியும் அவருக்குச் சொந்தமான அபிப்பிராயங்கள் உண்டு. கமலுடனும் அனந்து சாருடனும் அவர் பல திரைப் படங்களைப் பற்றி விவாதிப்பார். சிற்பம் செதுக்குவது போல் ருத்ரய்யா படத்தைச் செதுக்கினார்.

இளையராஜாவும் கங்கை அமரனும் குமார் ஆர்ட்ஸ் அலுவலகத்துக்கு வந்துவிடுவார்கள். அடுக்கடுக்காக மெட்டுகளை அந்தக் காலத்திலேயே இளையராஜா ஆர்மோனியத்தில் வாசித்துக் காட்டுவார். தீபாவளியன்று படம் திரையிடப்பட்டது. சென்னையில் காமதேனுவிலும் சபையர் வளாகத்தில் அமைந்துள்ள எமரால்டிலோ ப்ளூடைமண்டிலோ ஓடியது. காமதேனுவைவிட சபையர் வளாகத் தியேட்டரில் சற்றுக் கூடுதல் நாட்கள் ஓடியதாக ஞாபகம். பெரும்பாலும் பத்திரிகைகளில் பாராட்டியே விமர்சனங்கள் வெளிவந்தன. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுவிட்டது.
====0000====

 தமிழ் சினிமா அடித்தளத்தை உலுக்கியவர் ருத்ரய்யா: கமல்ஹாசனின் நினைவுப் பகிர்வுகள் ருத்ரையா பற்றி கமல்ஹாசனின் தி இந்து கட்டுரை
இயக்குநர் ருத்ரய்யாவுடன் நடிகர் கமல்ஹாசன் | கோப்புப் படம்
இயக்குநர் ருத்ரய்யாவுடன் நடிகர் கமல்ஹாசன் | கோப்புப் படம்
இயக்குநர் ருத்ரய்யாவின் முதல் படத்தில் நடித்ததோடு, அப்படம் உருவாக உறுதுணையாக இருந்த நடிகர் கமல்ஹாசன், 'அவள் அப்படித்தான்' குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார். 

"சினிமாவில் எனது வழிகாட்டிகளில் ஒருவரான அனந்து தான் முதன்முதலில் ருத்ரய்யா குறித்து என்னிடம் பேசியது. 'திரைப்படக் கல்லூரியிலிருந்து புத்திசாலி மாணவர்' என குறிப்பிட்டார். ருத்ரய்யாவின் இயற்பெயர் ஆறுமுகம். அவரை அப்படித்தான் நாங்கள் முதலில் அறிந்திருந்தோம். 

சென்னை திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற துடிப்புள்ள இளைஞர். அங்கு மாணவர்கள் யூனியனுக்குத் தலைவராக இருந்து தீவிரமாக செயல்படும் போராளியாகவே பெயர் பெற்றிருந்தார். தமிழ் சினிமாவை உருமாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நான், ஆர்.சி. சக்தி, அனந்து ஆகியோர் அடங்கிய எங்கள் குழுவிற்கு சீக்கிரத்திலேயே நெருக்கமானார்.
நாங்கள் சந்தித்தால் மணிக்கணக்கில் எங்கள் பேச்சு நீளும் என்பதால் எங்களது சந்திப்பு குறித்து அச்சப்பட்டவர்களும் இருந்தனர். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் பிரசன்னா என்ற பாத்திரத்தில் ஒன்றி நடிப்பதற்கு ருத்ரய்யா எனக்கு உதவினார். அந்தப் பாத்திரத்தைப் போலவே ருத்ரய்யாவும் இடதுசாரி கொள்கை உடையவர் என்பதால், அவரால் எனக்கு சிறப்பாக வழிகாட்ட முடிந்தது. முதன்முதலில் ஆறுமுகத்துடன் எனது நினைவுகள் இதுவே. 

எங்களது உரையாடல்கள் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. கோடார்ட், போலன்ஸ்கி, ரோஸெலினி, பிரெஸ்ஸான் ஆகிய இயக்குநர்களது படங்கள் எங்கள் பேச்சில் அடிக்கடி வந்து போகும். சென்னை திரைப்படக் கல்லூரியில் அவருக்கு இருந்த செல்வாக்கை வைத்து, வெளிநாட்டுத் திரைப்படங்களை வரவழைத்து, பார்த்து, அதை ஒரு நாள் தாமதமாக பூனே திரைப்படக் கல்லூரிக்கு அனுப்புவோம். எல்டாம்ஸ் சாலையில் ஒரு சிறிய திரைப்பட விழாவைப் போலவே இருக்கும். 

நாங்கள் பெருமைபட்டுக் கொள்ளுமாறு, தமிழ் சினிமாவை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்லுமாறு ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்தோம். அதன் விளைவே 'அவள் அப்படித்தான்'. 

கோபத்தால் உந்தப்பட்ட ஆளாக ஆறுமுகம் எனக்குத் தோன்றினார். ஒருவேளை அதனால்தான் தன் பெயரை ருத்ரய்யா என்று மாற்றிக் கொண்டார் என நினைக்கிறேன். அவரது முதல் படம் எங்கள் குழுவின் செல்லப் படமாக இருந்தது. அதனால் வெறும் பேச்சு மட்டுமல்ல, செய்தும் காட்டுவோம் என மற்றவர்களிடமிருந்து நாங்கள் வித்தியாசப்பட்டு நின்றோம். ஒரு வருடத்திற்கு 20 படங்கள் வரை நான் நடித்த காலகட்டம் அது. எனவே, என் ஓய்வு நேரத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. அப்படி இருந்தும் படத்திற்கு எங்களால் சிறப்பான வடிவத்தைத் தர முடிந்தது. 

அவள் அப்படித்தான் படத்தின் முதல் காட்சியில், நான் கேமராவைப் பார்த்து "கொஞ்சம் லெஃப்ட்ல உட்காருங்க" என்று கூறுவது, இடதுசாரி சிந்தனையை ரசிகர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என ஊக்குவிக்கும் குறியீடுதான். அப்போதைய தமிழ் சினிமாவின் மீது இருந்த கோபத்தின் விளைவாகவே அவள் அப்படித்தான் துவங்கப்பட்டது. சலிப்பை ஏற்படுத்தும் படமாக அது மாற வாய்ப்பிருந்தது ஆனால் அப்படி ஆகவில்லை. 

பணத் தட்டுப்பாடு இருந்ததால் தொழில்நுட்ப ரீதியில் படத்துக்கு சிறப்பு சேர்க்க முடியாமல் போனது. அப்போது, இளையராஜா பிஸியாக இருந்தார். ஆனாலும் எங்களுக்காக அவரை வலுக்கட்டயமாக இசையமைக்க வைக்க முடிந்தது. 

கையில் கிடைத்த கேமராவைக் கொண்டு, எங்களை வைத்து ருத்ரய்யா நடத்திய படப்பிடிப்பு ஆச்சரியமானதாக இருந்தது. எங்கள் நோக்கம் ஒழுங்காக இருந்ததால், சிறிய பட்ஜெட்டாக இருந்தாலும் அனந்து, ரஜினி, ஸ்ரீப்ரியா போன்றோர் படத்தில் இணைய ஒப்புக் கொண்டனர். பெண் விடுதலையைப் பற்றி அனந்து அப்போதே எழுதினார். 

படப்பிடிப்பு சமயத்திலும் நாங்கள் வெளிநாட்டுத் திரைப்படங்கள் குறித்து நிறையப் பேசுவோம். ஒவ்வொரு காட்சிக்கு முன்பும், இதை கோடார்ட் எடுத்தால் எப்படி எடுப்பார், கேமராவின் கோணம் எப்படி இருக்கும் என பேசிக் கொண்டிருப்போம். ஐந்து மாதங்கள், இரண்டு இரண்டு மணி நேரங்களாக எங்கள் படப்பிடிப்பு நடந்தது. படத்தைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. 

'ராஜா என்னை மன்னித்துவிடு' என்ற ருத்ரய்யாவின் இரண்டாவது படத்திலும் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தப் படத்தை எங்களால் தொடங்க முடியவில்லை. அந்தப் படத்தின் கதை சிறப்பாக இருந்தது. ஆனால் 'சகலகலா வல்லவன்' போன்ற படங்களின் வெற்றி, எங்கள் கூட்டணியை தடுத்தது. தமிழ் சினிமாவில் ராஜபார்வைக்குப் பிறகு என் மீதான நம்பிக்கை மிகுந்தது. அதே வேளையில், 'சகலகலா வல்லவன்' திரைப்படத்தில் நான் நடித்தது ருத்ரய்யாவுக்கு பிடிக்கவில்லை. 

வணிகரீதியிலான படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் நாம் நினைக்கும் சிறந்த படங்களை எடுக்க முடியும் என்று அவரை சமாதனப்படுத்தியது என் நினைவில் உள்ளது. அப்போது அவர் 'கிராமத்து அத்தியாயம்' திரைப்படம் எடுத்தார். அதில் எங்களுக்குள் சில கருத்து வேறுபாடு நிலவியது. அந்தக் கரு எனக்குப் பிடித்திந்ருதாலும், அவள் அப்படித்தானில் இருந்த அடர்த்தி அதில் இல்லை. 

ருத்ரய்யா வித்தியாசமான மனிதர். சிறந்த விமர்சனங்களைவிட, வணிகரீதியிலான வெற்றியையே நாம் நினைவில் வைத்துக் கொண்டாடுவது பரிதாபகரமானது. ருத்ரய்யாவிடம் பல படங்களுக்கான கதைகள் இருந்தன. ஆனால், அவரால் இரண்டு படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இப்படிப்பட்ட கலைஞர்கள் விரக்தியடைக் கூடாது என்றுதான் மேற்கத்திய நாடுகளில் 'சன்டான்ஸ்' போன்ற திரைப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. அவள் அப்படித்தான் படத்தை நினைவுகூர்வதன் மூலம் மாற்று சினிமாவுக்கான தளத்தை அமைக்க சிலர் முயற்சிக்கலாம். 

தனது படைப்பின் மீது அதீதமான பெருமை கொண்டவராக ருத்ரய்யா இருந்தார். வேறு யாரிடமும் பணியாற்ற அவர் விரும்பவில்லை. சினிமாவைப் பற்றி நிறைய தெரிந்துவைத்திருந்ததால், தன்னை யாரும் கட்டுப்படுத்துவதை அவர் விரும்பவில்லை. தான் கட்டுப்படுத்துவதையே அவர் விரும்பினார். அவள் அப்படித்தான் திரைப்பட தயாரிப்பில் இருந்த தோழமை, மற்ற படங்களிலும் இருக்கும் என்று அவர் நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை. 

ஒரு வருடத்திற்கு முன்னால் அவரை சந்தித்தேன். அப்போதும்கூட, அடுத்த படம் எடுப்பதற்கான நம்பிக்கையை அவர் விட்டுவிடவில்லை. உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். படம் எடுப்பது போதையைப் போல. சிலர் விலகினாலும், சிலர் தொடர்ந்து முயற்ச்சித்திக் கொண்டே இருப்பார்கள். ருத்ரய்யா இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். அதற்காக அவரை நான் மதிக்கிறேன். துறையிலிருந்து அவருக்கும் இன்னும் உதவிகள் செய்யப்பட்டிருக்கலாம். பாரதியின் கவிதைகளுக்காக அவரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது போல, ருத்ரய்யாவும் அவர் எடுத்த ஆகச் சிறந்த படத்திற்காக நினைவில் நிற்பார். 

தமிழ் சினிமாவின் அடித்தளத்தையே உலுக்கிய 'அவள் அப்படித்தான்' எடுத்ததற்காக இந்த உலகம் அவரை என்றும் நினைவுகூரும். இன்றும் கல்லூரி மாணவர்கள் பலர், படத்தைப் பார்த்து, இது எப்படி இவர்களால் சாத்தியமானது என்று யோசிக்கின்றனர். சினிமாவின் மீது காதல் கொண்ட ஒருவராக ருத்ரய்யா என் நினைவில் நிற்கிறார். ஒரு காட்சி சிறப்பாக வரவேண்டும் என்றால், தெர்மகோலை தூக்கிப் பிடிக்கும் வேலை செய்யவும் தயங்கமாட்டார் ருத்ரய்யா.
தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா





சென்னை தரமணி திரைப்படக் கல்லூரி யில் எனக்கு சீனியராக இருந்தவர் ருத்ரய்யா. 1974-75-ல் அவரை நான் சந்தித்தேன். இடதுசாரி சிந்தனைகளும், சர்வதேச சினிமாக்கள் மீதான பிரியமும் எங்களை இணைத்தன. அந்தக் காலகட்டத்து சினிமா மாணவர்கள் எல்லோரையும் பிரெஞ்சு புதிய அலை சினிமா ஈர்த்திருந்தது. திரைப்படக் கல்லூரி என்பது வெறுமனே வணிகப் படங்களை உருவாக்குபவர்களுக்கான இடம் அல்ல. அது மாற்று சினிமாவுக்கான உத்வேகத்தைக் கொடுக்கும் தளம் என்ற அபிப்ராயம் எங்கள் இரண்டு பேருக்கும் இருந்தது.
ருத்ரய்யாவுக்கு அதற்கான வாய்ப்புகளும் அமைந்தன. இயக்குநர் அனந்து அவருக்குப் பக்கபலமாக இருந்தார். வணிக சினிமாவில் பணியாற்றினாலும், அனந்து சினிமா களஞ்சியமாக இருந்தார். திரைப்பட விழாக்களுக்குச் சென்று ஆர்வத்தோடு படங்களைப் பார்த்துவந்தவர் அவர். வெறுமனே ஒரு திரைக்கதையை விவாதிப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கும் மேலான நிறைய உதவிகளைச் செய்பவராக இருந்தார். அதனால்தான், ‘அவள் அப்படித்தான்’ படத்தையே ருத்ரய்யா அனந்துவுக்குச் சமர்ப்பணம் செய்தார்.
ருத்ரய்யாவுக்கு முதலில் கதைகள் அமையவில்லை. நான் ஆவணப்பட, விளம்பரப்பட உலகில் இருந்தேன். அதன் பின்னணியிலிருந்து ‘அவள் அப்படித்தான்’கதைச் சுருக்கத்தை இரண்டு பக்கத்தில் எழுதிக்கொடுத்தேன். அனந்துவுக்கு எனது கதைச்சுருக்கம் பிடித்திருந்தது. ரஜினி என்ற நட்சத்திர பலத்துக்காகச் சில மாற்றங்களைச் செய்தார் அனந்து. கதாநாயகியின் ஃப்ளாஷ்பேக்கை வண்ணநிலவன் எழுதினார். ‘அவள் அப்படித்தான்’ டைட்டிலையும் அனந்துதான் வைத்தார்.
தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலைத் தான் ருத்ரய்யா முதலில் படமாக எடுக்கத் தீர்மானித்திருந்தார். கமல்ஹாசனும் அந்தக் கதையில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். முதலில் ஒரு கமர்ஷியல் படத்தை எடுத்துவிட்டு, இரண்டாவதாக ‘அம்மா வந்தாள்’ படம் என்று முடிவுசெய்தோம். ‘அவள் அப்படித்தான்’அறிவிப்புடன் சேர்ந்தே ‘அம்மா வந்தாள்’ படத்துக்கும் அறிவிப்பு கொடுத்தோம்.
ருத்ரய்யா - கோப்புப் படம்: அருண் மோ
கலைஞர்களின் ஒத்துழைப்பு
‘அவள் அப்படித்தான்’ படத்தில் நடிகராக மட்டும் அல்ல, தொழில்நுட்பக் கலைஞராகவும் கமல் எல்லாவிதமாகவும் ஒத்துழைப்பு கொடுத்தார். காஸ்டியூம் வரை கவனித்துக்கொண்டார். ரஜினியும் மிகவும் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு நடித் தார். வித்தியாசமான ஒரு அணி படம் எடுப்பதற்காக வந்திருக்கிறார்கள்; அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எல்லோரும் ஒத்துழைத்தார்கள். நல்லுசாமி-ஞானசேகரன் ஒளிப்பதிவும் மிகவும் துணிச்சலானது. நிழலுருவக் காட்சிகளை (சில்ஹவுட்) குறைவான வெளிச்சத்தில் நிறையப் பரிட்சார்த்தம் செய்து எடுத்திருப்பார்கள். அந்த வருடத்தில் வெளியான படங்களில் பெரும்பாலானவை வண்ணப் படங்களே. பொருளாதாரச் சிக்கனத்துக்காகவே கருப்பு-வெள்ளையில் படம்பிடித்தோம். ஆனால், அதுவே அப்படத்தின் சிறப்பம்சமாக இப்போது உணரப்படுகிறது.
படத்தின் வசனங்களையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். யதார்த்தத்துக்கும் நாடகத் தன்மைக்கும் இடையில் தர்க்கவாதம்போல வசனங்கள் கூர்மையாக இருக்கும். அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பட வெளியீட்டின்போது மிகப் பெரிய சோதனையை ‘அவள் அப்படித்தான்’ சந்தித்தது. வெளியான ஒரு வாரத்தில் அனைத்துத் திரையரங்குகளிலிருந்தும் படப் பிரதி திரும்பி வந்துவிட்டது. ஆறு மாதம் கழித்து அந்தப் படத்தை சென்னை சஃபையரில் காலைக் காட்சியாக மட்டும் நான் வெளியிட்டேன். மிருணாள் சென் அந்தப் படத்தைப் பாராட்டியிருந்தார். தமிழில் இப்படியான படம் வந்தது ஆச்சரியம் என்று சொல்லியிருந்தார். பாரதிராஜாவும் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். “எந்த மாதிரியான வேட்கைகளுடன் தேடலுடன் நான் சினிமாவுக்கு வந்தேனோ அதைத் திரும்பிப் பார்க்க வைத்தது ‘அவள் அப்படித்தான்’ ” என்றார் அவர். பாரதிராஜா, மிருணாள் சென் இருவரது பேச்சையும் விளம்பரப்படுத்திப் படத்தை வெளியிட்டோம். நிறையப் பேர் வரத் தொடங்கினார்கள்.
உடலைச் சுட்ட படைப்பு
இந்தப் படத்தை எடுத்ததில் ருத்ரய்யா பொருளாதார விஷயத்தில் நிறையப் பாதிக்கப்பட்டார். ஒரு பத்திரிகை நேர்காணலில் அவரிடம் ‘‘ ‘அவள் அப்படித்தான்’ படத்தின் மூலம் கையைச் சுட்டுக் கொண்டீர்களா?” என்ற கேள்விக்கு, “உடலையே சுட்டுக்கொண்டேன்” என்று பதில் சொல்லியிருப்பார். ஆனாலும், ‘அவள் அப்படித்தான்’ படம் மூலம் அவருக்குத் திரையுலகில் ஆதரவுகளும் குவிந்தன. ஒரு படைப்பு உடனடியாக மக்களைக் கவரா விட்டாலும், பொருளாதாரரீதியாகப் படைப்பாளிக்கு லாபத்தைத் தராவிட்டாலும், அது நல்ல படைப்பாக இருந்தால், காலம் கடந்து ஏற்றுக்கொள்ளப்படும் என்பதற்கு உதாரணம் ‘அவள் அப்படித்தான்’.
சுஜாதாவின் ‘24 ரூபாய் தீவு’ கதையில் நடிக்க கமல்ஹாசன் உடனடியாக கால்ஷீட் கொடுத்தார். ஒரு பாட்டுடன் நின்றுபோனது. அடுத்து ‘ராஜா என்னை மன்னித்துவிடு’. அதற்கும் நாயகன் கமல்ஹாசன்தான். அறிவிப்போடு நின்றுவிட்டது. அதற்குப் பிறகுதான் ‘கிராமத்து அத்தியாயம்’. இளையராஜா, பஞ்சு அருணாச்சலம் போன்றோரின் முழு ஒத்துழைப்பு இருந்தாலும், ருத்ரய்யாவிடம் எதிர்பார்க்கப்பட்ட தரத்தில் அந்தப் படம் வரவில்லை.
அதற்குப் பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து 1983-84-ல் திரும்பவும் படம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு, ரஜினியைக் கதாநாயகனாக மனதில் கொண்டு, கடலோரக் கிராமத்தை மையமாக வைத்து ஒரு கதையை எழுதினேன். ருத்ரய்யா நினைத்ததுபோல நட்சத்திரங்கள் கிடைக்கவில்லை. அந்தக் கதைதான் பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் ‘கடலோரக் கவிதைகள்’ படமாக வந்தது.
சிவாஜி கணேசனை பீஷ்மர் கதாபாத்திரமாக்கி 3-டி தொழில்நுட்பத்தில் மகாபாரதக் கதையை எடுக்க விரும்பினார். அதுவும் சாத்தியமாகவில்லை. ரகுவரனை வைத்து ‘டிஎஸ்பி 7’, சுஜாதா கதை - திரைக்கதை. அதுவும் பூஜையோடு நின்றுவிட்டது.
தோல்வி அடைந்த முயற்சிகள்
நீண்ட இடைவெளிக்குப்பின், ஷேக்ஸ்பியரின் ரோமியோ-ஜூலியட் கதையைத் தற்காலச் சூழலில் மியூஸிக்கலான ஒரு திரைப்படமாக எடுக்கலாம் என்று முடிவுசெய்தோம். ஏ.ஆர். ரஹ்மான்தான் இசை என்று முடிவுசெய்தோம். வைரமுத்துவிடமும் பேசினோம். ஒளிப்பதிவாளராக பி.சி. ஸ்ரீராமை முடிவுசெய்து, அவரைத் தொடர்புகொண்டோம். அவர் 6 மாதம் கழித்துச் செய்யலாம் என்றார். நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால், வணிகரீதியில் சிலரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அதை ருத்ரய்யா விரும்பவில்லை. அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. சினிமாவின் வணிகரீதியான நடைமுறைகளில் அவர் தொடர்ந்து முரண்பாடுடையவராக இருந்தார். அதனாலேயே நிறைய வாய்ப்புகளைத் தவறவிட்டார். ஒரு இடதுசாரி சினிமாக்காரராக சினிமாவை ஆயுதம் என்று நம்பியவர் அவர். அபூர்வமான மனிதர். தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டிய, நிறைய நல்ல படைப்புகளைத் தந்திருக்க வேண்டிய இயக்குநர் ருத்ரய்யா. அந்த வாய்ப்பைத் தமிழ் சினிமாவும் இழந்துவிட்டது; அவரும் இழந்துவிட்டார்.
- கே. ராஜேஸ்வர், ‘அவள் அப்படித்தான்’, ‘பன்னீர்புஷ்பங்கள்’, ‘கடலோரக் கவிதைகள்’ போன்ற படங்களின் கதாசிரியர்; ‘அமரன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’உள்ளிட்ட படங்களின் இயக்குநர்.
தொகுப்பு: ஷங்கர் | படம் உதவி: ஞானம் | ஓவியம்: சீனிவாசன் நடராஜன் 

தி இந்து தினசரி மறைந்த இயக்குனர் ருத்ரையாவுக்கு தக்க மரியாதையும் அஞ்சலியும் செய்து தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் சிறப்புக் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறது, அவற்றின் தமிழ் கட்டுரைகளை இந்த சுட்டிகளில் சென்று படிக்கலாம்.

தமிழ் சினிமா அடித்தளத்தை உலுக்கியவர் ருத்ரய்யா: கமல்ஹாசனின் நினைவுப் பகிர்வுகள்
http://tamil.thehindu.com/…/%E0%AE%A4%E0…/article6617950.ece
ருத்ரய்யா: என்றுமே அவர் அப்படித்தான்! இயக்குனர் ராஜேஸ்வர் கட்டுரை
http://tamil.thehindu.com/…/%E0%AE%B0%E0…/article6615697.ece
கடலில் கலந்த புதுப்புனல் எழுத்தாளர் வண்ண நிலவன் கட்டுரை
http://tamil.thehindu.com/…/%E0%AE%95%E0…/article6617314.ece
காதுள்ளவர்கள் கேட்பார்களாக... இயக்குனர் ருட்ரையா எழுதிய பழைய கட்டுரை http://tamil.thehindu.com/…/%E0%AE%95%E0…/article6617388.ece
வலைவாசம்: செய்திகளாகிவிட்ட அதிர்ச்சிகள் வா. மணிகண்டன் கட்டுரை
http://tamil.thehindu.com/…/%E0%AE%B5%E0…/article6418556.ece
கொங்கு மண்டலம்: தமிழ்த்திரையின் தாய்வீடு அ. தமிழன்பன் கட்டுரை
http://tamil.thehindu.com/…/%E0%AE%95%E0…/article5247130.ece
அவள் அப்படித்தான்' இயக்குநர் ருத்ரையா காலமானார்
http://tamil.thehindu.com/…/%E0%AE%85%E0…/article6614016.ece
ருத்ரய்யா தனித்துவமான சினிமா படைப்பாளி: நடிகை ஸ்ரீப்ரியா புகழஞ்சலி
http://tamil.thehindu.com/…/%E0%AE%B0%E0…/article6617690.ece