பொன்முடி[Ponmudi ][1950][தமிழ்] எல்லீஸ்R.டங்கன்

முத்துக்களை கோர்த்தது போல படத்தின் பெயர்,மற்றும் கதாபாத்திரங்களின் பெயர்கள்
அமெரிக்க இயக்குனர் எல்லீஸ்R.டங்கன் ஏ. என். மருதாசலம் செட்டியார் தயாரித்து  1936ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார், தமிழ்திரைப்பட ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றவர் சுமார் 15 வருட காலம் இந்தியாவிலேயே தங்கியிருந்து சீமந்தினி (1936),இரு சகோதரர்கள் (1936),அம்பிகாபதி (1937),சூர்யபுத்ரி (1940),சகுந்தலா (1940), காளமேகம் (1940),தாசிப் பெண் (1943),வால்மீகி (1945),ரிடர்னிங் சோல்ஜர் (1945),மீரா (1945),பொன்முடி (1950),மந்திரி குமாரி (1950) போன்ற படங்களை இயக்கினார்.இது தவிர ஏனைய ஆவணப்படங்களையும் இயக்கினார்,காந்தி இறந்த பொழுது அவரின் சவஊர்வலத்தையும் வரலாற்றுக்காக பதிவு செய்தார்.

1950 ஆம் ஆண்டு வெளியான பொன்முடி படத்தில் இயக்குனர்  டங்கன் தன்னால் ஆன எல்லா பரீட்சார்த்தமான முயற்சிகளையும் செய்து பார்த்திருக்கிறார், படத்தின் நாயகன் பொன்முடி முத்து கொள்முதல் செய்து வணிகம் செய்யும் செட்டியார் குடும்பத்தைச் சேர்ந்தவனாதனால் முத்துக்களை மண்ணில் புதைத்து எழுத்துக்களாக உருவாக்கி  படத்தின் பெயர், கதாபாத்திரங்களாக நடித்த நடிகர்களுடைய பெயர்கள் போடப்படுகிறது, பெயர் போட்டு முடிந்த உடனேயே, டங்கனின் கேமரா கடலுக்குள் பயணிக்கிறது, பாய்மரப் படகில் சென்று முத்துக் குளிப்பதையும் டீடெய்ல்டாக காட்டுகிறார் ,  கூடுமான வரை வெளிப்புறத்தில் வைத்தே பொன்முடியின்  படப்பிடிப்பை  நடத்தியிருக்கிறார் டங்கன், அப்போதே ஒரு சில காட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட எக்ஸ்ட்ரா நடிகர்களையும் தோன்ற வைத்துள்ளார்,அக்காட்சிகளில் யாரும் அங்கே பொம்மை போல வந்து போகவில்லை, எல்லோருக்குமே ஏதாவது பாவனைகள், வசனங்கள் தரப்பட்டுள்ளன , அதனூடேயான காமெடி பார்டும் உண்டு.

இரு நெருங்கிய சொந்தங்களுக்கும் இடையே நிகழும் முறைபையன், முறைப்பெண் இவர்களுக்குள் சிறுவயதிலேயே அரும்பும் காதல், அது வாலிபப் பருவத்திலும் இனிக்க இனிக்க தொடர்கிறது,ஆனால் இரு வீட்டார் குடும்பங்களுக்கும்  தீராப்பகை மூண்டிருக்கிறது,அதனால் இரு காதல் ஜோடிகள் பிரிவதும்,பல சுவையான திருப்பங்களுடன் சேர்வதும் தான் கதை.
பாரதி தாசனின் எதிர்பாராத முத்தம் என்னும் த்ராபையான ஒரு க்ளிஷே பிடித்த கதையை இயக்குனர் அதன் மையத் திரியை மட்டும் எடுத்துக் கொண்டு ரோமியோ ஜூலியெட்டின் பேட்டனிலேயே முழுபடத்தையும் எடுத்திருக்கிறார், ஆனால் அமெரிக்கரான  டங்கன் அதில் அற்பணிப்புடன் கையாண்டிருந்த பல டீடெய்ல்களால் தன் காலத்தை[63 வருடங்கள்] தாண்டி நிற்கும் ஒரு  படைப்பு என்றால் மிகையாகாது.

நாயகன் நரசிம்ம பாரதி , நாயகி மாதுரி தேவி இடையே நடக்கும் சரசங்கள், பரிமாறப்படும் காதல் ரசம் சொட்டும் வசனங்கள்,  1950 களின் சினிமாவுக்கு மிகவும் அதிகம், டங்கன் லிப் லாக் தான் வைக்க வில்லை, அதைத் தவிர ஸ்மூச்சிங், கேரஸ்ஸிங் என அத்தனையையும் புகுத்திவிட்டார். இதற்கு நாயகியின் ரெஸ்பான்ஸிவான கெமிஸ்ட்ரியுடன் கூடிய கம்பெனி கனகச்சிதம்,விட்டால் ப்ரி மேரிடல் செக்ஸ் தவறில்லை என்னும் படியான பிரச்சாரத்தையும் கூட செய்திருப்பார் என்று எண்ண வைக்கிறது, லிப் லாக்கும்,மேக்கிங் அவுட் காட்சியும்  அவர் வைத்திருந்தாரே என்றால் கலாச்சாரக் காவலர்கள் டங்கனை தீவைத்து கொளுத்தியிருப்பார்கள் போலும்,
நாயகன் நரசிம்ம பாரதி , நாயகி மாதுரி தேவி

படத்தின் உள்புற காட்சிகள் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டிருக்கின்றன,ஏற்காடு மலையில் அப்போது   தார் சாலை அமைக்கவில்லையா எனத் தெரியவில்லை, அந்த குண்டும் குழியுமான மண்  சாலையில் மிக அழகாக வட தேசம் போகும் ஒரு பெரிய குழுவை   அற்புதமாக படம் பிடித்திருந்தார் டங்கன், மாட்டு வண்டிகள் செல்ல,குதிரைகளில் ஆட்கள் முன்னும் பின்னும் செல்ல,நடைபயணமாய் செல்லும் வணிகர்கள், உதவியாளர்கள், என்று சுமார் 100க்கும் மேற்பட்டோரை டங்கன் எக்ஸ்ட்ராவாக உபயோகித்திருந்தார்,

அதில் அவர்களை வழி மறிக்கும் காட்டுவாசி நரபலி கும்பலையும், அதன் தலைவனாக எம்.ஜி.சக்ரபாணியையும் தோன்றவைத்திருந்தார், அங்கே வணிகர் குலத்தவருக்கும், காட்டுவாசிகளுக்கும் வாக்குவாதம்,கைகலப்பு முற்றி மூளுகின்ற  பெரிய சண்டை சுமார் 10 நிமிடம் வரை நீளுகிறது, தத்ரூபமான சண்டை அது , கழியால் மண்டையை உடைப்பது, உடம்பில் மானாவாரியாக தாக்குவது போன்றவை நிஜ வன்முறையோடு காட்டியுள்ளார் டங்கன்.

கடைசியில் நாயகன் நரசிம்மபாரதி, எம்.ஜி .சக்ரபாணியை தன் முகத்தில் ரத்தம் தெரிக்க, கட்டாறியால் குத்தி சாகடிக்கிறார். நாயகியும் அவருக்கு அந்த மாபெரும் சண்டையில் உதவுகிறார், படத்தின் இரு காமெடியன்களும் கூட எதிரிகளிடம் கடுமையாக சண்டை போடுகின்றனர்.நரசிம்மபாரதிக்கு ஹீரோயிசம் என்பது கொஞ்சமும் தரப்படவில்லை , யதார்த்தமே ஒவ்வொரு ஃப்ரேமிலும் நிரம்பி வழிகிறது, அப்போதே இப்படம் கொண்டிருக்கும் வன்முறை அழகியல் அதிசயிக்க வைக்கிறது.

அப்போதைய வழமையான படங்களைப் போலவே அமைக்கப்பட்ட நகைச்சுவை காட்சிகள், தெருக்கூத்தில் வந்து மதுரை வீரன் பொம்மி யாக கூத்து கட்டும் ராகினி,பத்மினி சகோதரிகள், கதையின் போக்கினூடே அவ்வூருக்கு வருகை தரும் ஆன்மீக குரு குமரகுருபரரின் கதாபாத்திரம், அவரது தமிழ் ,தமிழர் மீதான அழகிய உரை ஆகியவை புதுமையானவை,

1950 ஜனவரி 14ஆம் தேதி பொங்கலுக்கு வெளியான இப்படம், தொலைநோக்கான எத்தனையோ சிறப்பம்சங்கள் இருந்தும் பாக்ஸ் ஆஃபீஸ் ஃபெயிலியராம், உண்மையாகவே வியக்க வைக்கும் படம், இசை ஜி.ராமநாதன், பாடல்கள் கா.மு.ஷெரிப்,மற்றும் மருதகாசி, படத்தின் ஒளிப்பதிவு ஜி.ஜே.விஜயம்.

படம் குறித்து ராண்டார் கை[ RANDOR GUY ] ஆங்கில ஹிந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதன் சுட்டி  http://www.hindu.com/cp/2008/10/03/stories/2008100350341600.htm

அதில் இந்த முரணான கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ,படம் பார்த்தவர்களுக்கு நான் சொல்ல வருவது நிச்சயம் புரியும்.

//For a lovemaking sequence on the beach, he arranged for the sand from the Adyar beach to be brought to the studio in Salem and shot the sequence, , mixing it with long shots of the Elliot’s Beach.// 

அந்த  ”நீலவானும் நிலவும் போல்” என்ற  நாயகன் நாயகி சரசமாடிப் பாடும் சர்ச்சைக்குரிய பாடலை, மாடர்ன் தியேட்டரிஸ் ஸ்டுடியோவினுள்ளே உள்ளே,  எலியட்ஸ்  பீச்சின்   Karl Schmidt Memorial  நினைவுச்சின்னம் தொலைவில் தெரிவது போல் மேட்ச் செய்தும், அடையாரில் இருந்து மணல் கொண்டு போய் நிரப்பி
செட் போட்டும்  எடுக்கபடவேயில்லை.

நம் மாமல்லபுரம் கடற்கரை குடைவுக் கோவிலின் வெளியே தான் அப் பாடலை படமாக்கியிருந்தார் டங்கன் ,அதில் இன்றும் நாம் காணும்  கடலரிப்பை தடுப்பதற்காக போடப்பட்ட கருங்கல் பாறைகளையும், அங்கே இன்றும் இருக்கும் ராட்சத பாறையையும் ஒருவர் இப்படத்தில் பார்த்து கிரகிக்க முடியும்.தவிர இது மன்னர் காலத்து கதைக்களம்,அந்த நினைவுச் சின்னம் 1930களில் தான் கட்டப்பட்டது, போகிற போக்கில் யாராவது ஏதாவது சொன்னால், அதையும் சரி பார்க்காமல் தமிழ் ஆங்கில ஹிந்து பேப்பரில்  அப்படியே பிரசுரிக்கின்றனர் என்பது வேதனையான விஷயம்.ஒரு படமோ வரலாறோ சரியாக ஆவணப்படுத்தப்படவேண்டும் என்பதே என் நோக்கம்.

படம் யூட்யூபில் நல்ல ப்ரிண்ட்டாக கிடைக்கிறது, மன மகிழ்ச்சியுடன் பாருங்கள்.