எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த வீட்டைத் தேடி

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சிலை திருப்பதி நுழைவு வாயிலில்

மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா அவர்களுக்கு திருப்பதியின் நுழைவாயிலில் தத்ரூபமான சிலை உண்டு. எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா குரலை இந்துக்கள் வீடுகளில் , நாளின் ஏதாவது தருணத்திலாவது கேட்காமல் இருக்க முடியாது,இவர் 1930களில் பாடிய விஷ்ணு சஹஸ்ரநாமம் அத்தனை சக்தி வாய்ந்தது,அதை ரத்தக் கொதிப்பு இருப்பவர்கள் கேட்டு வர ரத்தக்கொதிப்பு கட்டுக்குள் வரும் என்பது கண்கூடு.

காலஞ்சென்றும் எத்தகைய புகழ்?எல்லாம் இறையருள். இன்று இந்து தினசரியில் வெளிவந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த வீட்டைத் தேடிய வங்காள கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி என்னும் பதிவைப் படித்தேன், அந்தவீடு மதுரை சென்ட்ரல் சினிமாவை ஒட்டிய சந்தான மேல அனுமந்தராயன் கோவில் தெருவில்,தெரு முக்கிலிருந்து 4ஆம் வீடு,வீட்டின் வெளியே வீணை பொம்மை பதித்திருக்கும்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பிறந்த வீட்டின் வெளித்தோற்றம்

நான் அந்த வீட்டின் மாடியில் இருக்கும் காஜா மெஷின் சென்டருக்கு,சிறு பிராயத்தில் அடிக்கடி காஜா அடிப்பதற்கும் பட்டன் அடிப்பதற்கும்,எம்ப்ராய்டரி அடிக்கவும் என்மாமா கடையில் இருந்து உருப்படிகளைக் கொண்டு செல்வேன். அங்கே மாட்டப்பட்டிருக்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா மற்றும் அவர் குடும்பத்தார் புகைப்படங்கள்,மற்றும் மு.கருணாநிதி,மற்றும் அவர் குடும்பத்தார் புகைப்படங்கள் எனக்கு மிகுந்த ஆச்சர்யமூட்டும்.

இசைவேளாளர் குலத்தைச் சேர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவும், மு.கருணாநிதியும் ஒருவகையில் தூரத்து உறவினர் என்று அப்போதே அந்த புகைப்படங்கள் மூலம் தெரியும்.

இன்னொரு செய்தி:- எம்.எல்.வசந்தகுமாரி[ஸ்ரீவித்யா தாயார்] சென்னைக்கு நிரந்தரமாக குடிபெயர்வதற்கு முன்னர் கீழ அனுமந்தராயன் தெருவில்,தான் எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்தார் என்று என் பாட்டி சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.அந்த வீடு இப்போது இடிக்கப்பட்டு கடைகளாக மாறிவிட்டது,அதற்கு நேரெதிரே கோமதி விலாஸ் என்னும் பிராமனாள் காபி டிஃபன் ஓட்டல் இயங்கியது,ம்ம்..மாற்றம் ஒன்று தானே உலகில் மாறாதது?

மேலும் இதே மேல அனுமந்தராயன் தெருவில் சென்ட்ரல் சினிமாவின் பின்னே தான் விஜயகாந்தின் வீடும் இருந்தது.கீழ அனுமந்தராயன் தெருவினை அடுத்த கழுதை அக்ரஹாரத்தில் தான் எழுத்தாளர் ஜி.நாகராஜன் வாழ்ந்தார்.கீழ அனுமந்தராயன் கோயில் தெருவின் அருகே உள்ள நேதாஜி ரோடு என்னும் திண்டுக்கல் ரோட்டில் இருக்கும் ஒய் எம் சி ஏ வில் தான் எழுத்தாளர் ப.சிங்காரம் வாழ்ந்தார். அடேங்கப்பா மதுரை டவுனுக்கு எத்தனை பெருமை?!!