மரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]


பாலச்சந்தரின் மரோ சரித்ரா படம்  1978ஆம் ஆண்டு வெளியானது,கமல்ஹாசனை ஆந்திராவில் வணிகரீதியாக பெரிய நாயகனாக உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டே இப்படத்தை தெலுங்கில் எடுத்தார் பாலச்சந்தர்,இப்படம் இரு வெவ்வேறு கலாச்சாரங்கள் கொண்ட குடும்பங்களில் நிகழும் உணர்ச்சிபூர்வமான காதல் கதை,இவ்வகைக் காதலுக்கு இதுவே ட்ரெண்ட் செட்டர் திரைப்படமாகவும் அமைந்து விட்டது. இதே மரோ சரித்ரா என்ற பெயரில் 2010ஆம் ஆண்டு மிகவும் திராபையாக வரிக்கு வரி,காட்சிக்கு காட்சி,ஃப்ரேம் பை ஃப்ரேம்  ரீமேக் செய்து கொத்துக்கறி போட்டிருந்தார் ஒளிப்பதிவாளர் ரவியாதவ். கூகுளில் பழைய மரோசரித்ராவைத் தேடினால் அந்தக் கழிசடையும் கூடவே வரும்.இதனால் தான் கல்ட் ,க்ளாஸிக்குகளின் பெயர்களை மறு உபயோகம் செய்யக்கூடாது என்று சொல்லி வருகிறேன்.

மரோசரித்ராவில் கமல்ஹாசன் தன் குரலிலேயே தெலுங்கு பேசியிருப்பார்.அபிலாஷா என்னும் சரிதா தன் பதின்ம வயதினிலேயே கடப்பா வெங்கடசுப்பையா என்பவருடன் திருமணமாகி மணமுறிவு ஏற்பட்ட பின்னர் பாலச்சந்தரின் ஆடிஷனில் தேர்வாகி நடித்த படம் இது,கருமையான, பூசலான, பெரிய கண்கள் கொண்ட சரிதாவை தெலுங்கு பேசும் இளம் பெண்ணின் பாத்திரத்துக்கு மிகப் பொருத்தமானவராக இருப்பார் என்று   துணிந்தே தேர்வு செய்தாராம் பாலச்சந்தர், மேலும் இப்படம் ஒரு காதல் காவியம் போல என்றைக்கும் பேசப்படவேண்டும் என்றே  துணிந்து கருப்பு வெள்ளையிலும் உருவாக்கினாராம்,படத்தின் ஒளிப்பதிவு பி.எஸ்.லோகநாத்,  இவர் தான் ஏக் துஜே கேலியேவுக்கும் ஒளிப்பதிவு,சரிதா பாலச்சந்தரின் இயக்கத்தில் இதுவரை 22 திரைப்படங்களில் நடித்துள்ளாராம்.

மரோசரித்ராவில் கமல்ஹாசனும் சரிதாவும் சந்தித்துக்கொள்ளும் காட்சி கவிதையான ஒன்று,கமல் சரிதாவிடம் தான் ஊமையல்ல, அரவாடு என்பார்,அரவாடு என்பது மனவாடுகள் தமிழர்களுக்கு வைத்த பெயர்,அதாவது அரக்கர்கள் என்று அர்த்தம் தொனிக்கும் ஒரு இனவெறிச் சொல்.சரிதா இந்த அப்பாவி இளைஞன் தன்னையே அரவாடு என்று அழைத்துக்கொள்வதை பொருக்காதவர் நீங்கள் அரவாடு அல்ல தேவுடு [கடவுள்] என்பார்.

மரோசரித்ரா  விசாகப்பட்டினத்தில் படமாக்கப்பட்டது, விசாகப்பட்டினம் பாலச்சந்தரின் மனம் கவர்ந்த கடற்கரையாகும்,அவரின் சிந்து பைரவி,டூயட்  உள்ளிட்ட நிறைய படங்கள் இங்கே படமாக்கப்பட்டிருக்கும்.

மரோசரித்ராவில் தான் செய்த தவறுகளைத் திருத்தி அதன்  செப்பனிட்ட வடிவமாக ஏக் துஜே கேலியே என்று 1981 ஆம் ஆண்டு இந்தியில் ரீமேக் செய்தார்.இதன் தயாரிப்பாளர் எல்.வி.பிரசாத் தெலுங்கில் மிகப்பெரிய இயக்குனர்/தயாரிப்பாளர் என்றாலும், படத்தின் வடிவத்தை தான் சிதைக்க விரும்பாமல் பாலச்சந்தரையே இயக்கித் தரும்படி கேட்டார்,

படம் வண்ணத்தில் தயாரானது,படம் பெரும்பாலும் கோவாவிலும்,ஹைதராபாதிலும் படமாக்கப்பட்டன, மரோசரித்ராவில் கமல்ஹாசனின் அப்பாவாக வந்த J. V. ரமணமூர்த்தி [சோமையாஜுலுவின் தம்பி] ,தமிழ் வசனங்களை மென்று துப்பியிருப்பார், இவர் மனைவி ஜெய விஜயாவும் தன் பங்குக்கு தமிழைக் கொலை செய்திருப்பார். .அந்த தவற்றை ஏக் துஜே கேலியேவில் பூர்ணம் விஸ்வநாதன் மூலம் நிவர்த்தி செய்திருப்பார் பாலச்சந்தர்,இவர் மனைவியாக ஆதிலட்சுமி என்னும் பழைய தமிழ் நடிகை நடித்திருப்பார். பூர்ணம் விஸ்வநாதன் பலகாலம் டெல்லியில் இருந்தவர் என்பதால் இந்தி வசனங்களையும் அருமையாக பேசியிருப்பார், ஆச்சாரமான பிராமண குடும்பத்தின் தமிழையும் நன்கு பேசி நடித்திருப்பார்.
படத்தின் எல்பி ரெகார்ட் கவர்

இதன் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோக்நாத்தை பாலச்சந்தர் இப்படத்திலும் மிக அருமையாக பயன்படுத்தியிருப்பார், தொழில்நுட்பங்கள் மிகவும் வளர்ந்து கோலோச்சும் இன்றைய காலகட்டத்தில் கூட அத்தனை நேர்த்தியான கலையம்சத்துடன் கூடிய ஒளிப்பதிவு கிடைக்குமா ? என்பது ஐயம் தான். ஒவ்வொரு ஃப்ரேமையுமே பார்த்துப் பார்த்து செதுக்கியிருப்பார்கள் படக்குழுவினர், இப்படத்தில் கமலின் நடிப்பில் நல்ல மாற்றத்தை ஒருவர் கண்கூடாக உணரமுடியும்.கமல் வாசு என்னும் மதராஸி லவ்வர் பாயாகவே மாறிய படம்,பைக்கில் கோவா கடற்கரையில் அப்படி சாகசங்கள் புரிவார்,ஒவ்வொரு ஃப்ரேமிலும்  ஆக்டிவான ஹீரோவாக இருப்பார். படத்தின் எல்லா ஃப்ரேம்களிலும் கமலும் ரத்தியும் நிறைந்திருந்து வாழ்வார்கள். எத்தனை வருடங்கள் ஆனாலும் , இப்படம் மரிக்கவே மரிக்காது.படத்தின் பாடல்களை இங்கே இந்த ஜூக் பாக்ஸில் சென்று பாருங்கள்.1980களுக்குப் டை ம் மெஷினில் நிச்சயம் போய் வருவீர்கள்.
http://www.youtube.com/watch?v=moVxfltTU_E
http://www.youtube.com/watch?v=moVxfltTU_E


மரோசரித்ரா போன்றே ஏக் துஜே கேலியே படத்தின் பாடல்களையும் கமல்ஹாசனுக்கு எஸ்பிபியே பாடினார், இப்படத்தின் மூலம் அவர் அகில இந்தியப் புகழும் பெற்றார், அவருடன் லதா மங்கேஷ்கர் இணைந்து எல்லா பாடல்களையும் உயிரோட்டத்துடன் பாடியிருப்பார். இந்தப் படத்தில் சிறப்பாகப் பாடியதற்காக ஜனாதிபதியின் தேசிய விருது பெற்றார் எஸ்பிபி, இது அவருக்கு சங்கராபரணத்துக்குப் பின் இரண்டாவது தேசிய விருதாக அமைந்தது. அத்தனை அருமையாக லஷ்மிகாந்த் பியாரிலால் இதற்கு இசையமைத்திருந்தார்.ஆனந்த் பக்‌ஷி பாடல்களை எழுதியிருந்தார். இந்தமுறை இந்தி சினிமாவுக்கு பொருத்தமாக இருக்கவேண்டும் என்று பாரதிராஜாவின் புதியவார்ப்புகளில் நடித்த ரத்தி அக்னிஹோத்ரியை இப்படத்தில் நடிக்க வைத்திருந்தார். இப்படத்தின் மரோசரித்ராவில் கமலுக்கு தெலுங்கு கற்றுத்தந்த மாதவி இப்படத்தில் இந்தி கற்றுத் தரும் இளம் விதவை  கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

மரோசரித்ரா படம் வெளியான முதல் வாரம் திரையரங்குகளில் கூட்டமில்லை,இது தோல்விப் படம் என்று படக்குழுவினர் கருதிய நிலையில், திடிரென படத்துக்கு கிடைத்தது மகத்தான வரவேற்பு, பாலச்சந்தரின் திரையுலக வாழ்வில்,இப்படம் தான் நீண்ட நாட்கள் ஓடி வசூல் சாதனை செய்த படம் என்றால் மிகையில்லை, இப்படத்தை தமிழில் டப்பிங் செய்யாமலே மவுண்ட் ரோட் சஃபையர் தியேட்டரில் வெளியிட்டனர், அப்படம் பகல்காட்சிகள் 600 நாட்கள் ஓடியதாம், கோவை ராயலில் 450 நாட்கள், பெங்களூர் கல்பனாவில் 693 நாட்கள் என ஓடி நீண்ட வரலாற்று சாதனையை செய்த படம் இது.ஒரு பேட்டியில் பாலச்சந்தர் இப்படத்தை மீண்டும் தன்னால் எடுக்கமுடியுமா?என்பது சந்தேகம் தான் என்றார்,உண்மை தான் அற்புதங்கள் எப்போவாவது தானே நிகழும்.ஆதாரம்:-