சுஜாதாவின் சிறுகதைகள் மற்றும் என்றாவது ஒரு நாள்


அமரர் சுஜாதாவின் சிறுகதைகளைப் பற்றி பேச வேண்டும் என்றால் மணிக்கணக்கில் பேச முடியும், எக்காலத்துக்கும் பொருந்தும் ப்ரில்லியன்ஸியும் ஃப்ரெஷ்னெஸ்ஸும் அவரின் எல்லாக் கதைகளிலுமே நிரம்பி வழியும்,ஒரு கதை படித்து முடித்தது அதை மனம் அசை போட வைக்கும்.   என்ன கதைகள் அவை?!!! 

எனக்கு அவரின் ரெண்டனா,வாஷிங் மெஷின்,அரிசி [யாராவது ஆம்புலன்சை கூப்பிடுங்களேன்,யாராவது சோடா வாங்கிட்டு வாங்களேன் என்னும் அந்நியன் சீன் இக்கதையிலிருந்து தான் பிறந்தது],

ஸய்ன்ஸ் ஃபிக்‌ஷனான திமலா[திருமலா], வாசகர் கடிதம் பாணியில் கணவன் மனைவி இருவருமே இவருக்கு எழுதும் ஒரு கதை, பெங்களூரில் வந்த இடத்தில் உறவினர் வீட்டில் மனைவியை இழந்தவன் வீடு வீடாகப் போய் சவ அடக்கத்துக்கு வசூல் செய்யச் செல்லும் ஒரு கதை,

ஜஸ்வந்த் என்னும் ஓவியர் வரைந்த ஒரு க்ரைம் ஸ்பாட் ஓவியத்தை வைத்து புனையப்பட்ட ஒரு கதை [அவரின் முதல் சிறுகதை] என எல்லாமே பிடித்தமானவை.சிறுகதைக்கு சுஜாதா போல மரியாதை செய்தவர் யாரும் இலர்,

வாத்தியாரின் தீர்க்கதரிசனங்கள் ஒவ்வொன்றாக பலித்துக்கொண்டே வருகையில்,அவரின் ஜில்லு கதை மட்டும் நம் வாழ்நாளில் பலிக்கவேகூடாது என வேண்டிக்கொள்ள வைக்கும் ஒரு அற்புதமான ஸய்ன்ஸ் ஃபிக்‌ஷன்.

அவரின் யாகம் என்னும் கதை அமெரிக்க வேத விற்பன்னர்கள் கோஷ்டியின் யாகத்தில் நரபலிக்கு மாட்டிய சாஃப்ட்வேர் பிராமனனின் கற்பனைக் கதை,அதை லாஸ் ஏஞ்ஜெல்ஸ் ராம் நாடகமாகப் போட்டிருக்கிறார் என்று வாத்தியாரே பின்னுரை எழுதியிருக்கிறார்.

இவரின் குதிரைக் கடி வாங்கியவனின் கதையை பல் தெரிய சிரிக்காமல் ஒருவராலுமே படிக்க முடியாது,அதை பின்னாளில் கமல் தன் மும்பை எக்ஸ்ப்ரெஸ் படத்தில் ட்ரிப்யூட் செய்திருப்பார். மஹானுபாவர் சொர்க்கத்தில் கூட எழுதிக்கொண்டுதான் இருப்பார் போலும்.

 சமீபத்தில் அவரது என்றாவது ஒரு நாள்  நாவலை மீள்வாசிப்பு செய்தேன்,அதைப் படித்து சுமார் 10 வருடங்கள் இருக்கும்.அதை அவர் எழுதி சுமார் 30 வருடங்களேனும் இருக்கும், 2015ல் மீண்டும் படிக்கையிலும் படபடப்பு கூட்டும் சுவாரஸ்யமான எழுத்து நடை.

என்றாவது ஒருநாள் நாவலை மத்திய 80களில் எழுதியிருப்பார் சுஜாதா .இன்ஸ்பெக்டர் தர்மலிங்கத்தின் குணாதிசயமான போலீஸ் ஸ்டேஷனில் செடி வளர்த்து நீர் பாய்ச்சுதல், கோப்புகளை மிக அழகாக அடுக்கி தூசுதட்டி பராமரித்தல் என நிறைய டீட்டெயிலிங் இருக்கும்.  அவர் மாறிவரும் காலத்துக்கேற்ப தன்னை அப்டேட் செய்வதையும்  அழகாக விளக்கியிருப்பார்.அதே போலவே சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாகவே கத்தியை உபயோகிக்காத நாராயணன் திலகத்தைக் காப்பாற்ற அங்கே தென்பட்ட காய்கறி நறுக்கும் கத்தியை அரைவிநாடிக்குள் கைப்பற்றி அந்த குடிகாரனின் தோளில் அழுந்த அறுப்பு போடும் அழகை வாத்தியார் விவரிக்கும் இடம் இருக்கிறதே அடடா!!!

அதே போன்றே அந்த ஒற்றை அறுப்பின் செயின் ரியாக்ஷன் நாராயணன் என்னும் கேடி தலைமறைவாக இருப்பது  சென்னை தான் என்று தர்மலிங்கத்தின் சந்தேகத்தை தீர்த்து வைக்கும் இடங்கள் எல்லாம்,நம் இருதயம் அடித்துக்கொள்ளும்.

போலீஸ் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்நாவல். சுஜாதா இதில் சென்னை மாநகரின் வளர்ந்து வரும் இடங்கள் என்று திலகத்தின் குடிசை இருக்கும் அரும்பாக்கத்தை சொல்லியிருப்பார்,கட்டிடவேலையில் போலீஸாரால் மோப்பம் பிடிக்கப்பட்ட நாராயணன் ராயப்பேட்டை ஃபர்னீச்சர் கடை ஒன்றில் தச்சுவேலைக்கு சேர்ந்து விடுவான் ,திலகம் உடன் இருந்து அவனின் கூலியை ஏற்றிக் கேட்டு வேலைக்கு சேர்த்து விடும் இடம் எல்லாம் அருமையாக இருக்கும். அருண்ஹோட்டல்,கூவம் பாலம், மைலாப்பூர் கச்சேரி ரோடு.என்று நிஜ இடங்களின் பெயரை உபயோகித்து நாவலுக்கு உயிரோட்டம் கொடுத்திருப்பார்.

சுஜாதாவின் அனிதா இளம் மனைவியிலும் இதே போல 1970களின் டில்லி,கூர்காவூன்,முனிர்கா,மயூர் விஹார் பகுதிகளை நாவலில் சமபவ இடங்களாக உபயோகித்திருப்பார்.இந்நாவல் சுஜாதாவின் முக்கியமான படைப்பு.
கதைக்குள் கதை வைத்தாற் போல திலகத்துக்கு ஒரு கிளைக்கதை ஃப்ளாஷ்பேக் வைத்து,கடைசி பக்கத்தில் அவள் கதைக்கு ஒரு மீள்துவக்கத்தை வைத்திருப்பார்.

கைத்திறன் உள்ளவனுக்கு எங்கே சென்றாலும் வேலை கிடைப்பதை நாம் பார்ப்போம்,நாராயணன் என்னும் புண்ணியகோடி சிறையில் கற்ற தச்சு வேலையும்,பிளம்பிங் வேலையும் அவன் எளிதாக வேலையை விட்டு வேறு வேலை மாறுகையில் உதவினாலும்,அதுவே அவனை போலீஸிடம் சிக்கவும் வைக்கிறது.
வாத்தியார் பற்றி எத்தனை பேசினாலும் தகும்,எனவே தொடரும்

காயத்ரி நாவல் [1976] மற்றும் சினிமா [1977]