தமிழின் மகத்தான எழுத்தாளர் ஜெயகாந்தன் ஐயா அவர்களுக்கு அஞ்சலி


”எனக்கு நானே கடவுள்
எனக்கு நானே பக்தன்
என் வாழ்நாள் எல்லாம் திருநாள்
மரணம் எனக்கு கரிநாள் ”

தமிழின் மகத்தான எழுத்தாளர் ஜெயகாந்தன் ஐயா மறைந்துவிட்டார், எத்தனை கொண்டாட்டமான மனிதர்,எத்தனை மகத்தான படைப்பாளி, தன் பலம் பலவீனங்களை எக்காலத்திலும் மறைக்காத ஒரு அபூர்வமான மனிதர், மாறும் காலத்துக்கேற்ப தான் தன் கொள்கைகளில் மாற்றம் கொண்டதைக் கூட தயக்கமின்றி ஒப்புக்கொண்ட முன்னுதாரண மனிதர்.

மானுடத்தையும்,பெண்ணியத்தையும், தன் படைப்பிலும் வாழ்விலும் போற்றிப் பேணிய கலைஞன், வையத் தலைமை கொள் வட்டாரத் தலைமையுடன் நின்று விடாதே!!! என்று அறிவுறை சொன்னவர். எளியாரின் தாழ்வு மனப்பான்மையை அறவே விரட்டிய நிபுணர்.பூர்ஷுவாக்களின் மேட்டிமைத் திமிரைக் கூட அவர் நாணச்செய்து கரைத்து திருத்தலாம் என்று தன் படைப்பில் உரைத்தவர்,உணர்த்தியவர்.

ஒவ்வொரு கனமும் வாழ்வை ரசித்து வாழ்ந்தவர்,வாழ்வை ரசித்து வாழ முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். அவரின் மறைவு மிகவும் பெரிய இழப்பு, அவர் தம் தனித்துவம் நிறைந்த படைப்புகளில் என்றும் வாழ்வார்.அவர் படைப்புகளுக்கு என்றும் அழிவே கிடையாது.அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்தனைகள்.

அவரின் படைப்புகளை நினைவு கூருகையில் அதிகம் பேர் பாராமல் போன ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்னும் திரைப்படம் பற்றிய என் பழைய பதிவை இங்கே பகிர்கிறேன்.
http://geethappriyan.blogspot.ae/2014/12/1978.html

எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுத்துலகப் படைப்புகளை நம் வீட்டில் தாத்தா,பாட்டி,அம்மா,அப்பா,என பேதமின்றி வாசித்திருப்போம், அவரின் திரைப்படைப்புகளும் அவரின் இலக்கியம் போன்றே மிகவும் தரமானவை, ஒரு நூலை எப்படி படமாக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணங்கள் அவை, ஜெயகாந்தனின் உன்னதமான திரைப்படைப்புகள் இங்கே,

1 உன்னைப்போல் ஒருவன், 1965 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் டிவிடி பிரதி எங்குமே கிடைப்பதில்லை.

2 யாருக்காக அழுதான் திரைப்படத்தின் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.

3 சில நேரங்களில் சில மனிதர்கள் யூட்யூபில் பார்க்கக் கிடைக்கின்றது டிவிடி பிரதியும் கிடைக்கின்றது

4 எத்தனை கோணம் எத்தனை பார்வை திரைப்படத்தின் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.

5 புதுசெருப்பு கடிக்கும் திரைப்படத்தின் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.

6 ஊருக்கு நூறு பேர் கதையைஇயக்குனர் லெனின் படமாக்கி அது தேசிய திரைப்படவிழாவில் கலந்து கொண்டது அதன் டிவிடி பிரதி எங்குமே கிடைப்பதில்லை.

7சினிமாவுக்கு போன சித்தாளு கௌதமன் இயக்கத்தில் வெளியானது,அதன் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.

8 ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் யூட்யூபில் பார்கக் கிடைக்கிறது
ஜெயகாந்தன் ஞானபீடம் பரிசு பெற்ற நாம் வாழும் காலத்தின் மாபெரும் படைப்பாளி. பொதுவுடமை புரட்சி சிந்தனையாளர். இலக்கியம் மற்றும் சினிமாவில் தன் முத்திரையைப் பதித்தவர். இப்படி பலச் சிறப்புகள் இருந்தும் அவர் இயக்கிய திரைப்படங்களை நாம் தேடிப்பார்க்க வழியின்றி இருப்பது எத்தனை அவமானம் பாருங்கள்.இனியேனும் அவரது திரைப்படைப்புகளை ஆவணப்படுத்தி ரசிகர்கள் காண வழி செய்ய வேண்டும்.