கபாலி

எங்கள் மூன்று பேருக்காக கபாலி ,மகிழ்வதா? வேதனைப்படுவதா? ,நான் hand rest ஐ தூக்கிவிட்டு படுத்துக் கொண்டு பார்த்தேன்.பக்கத்து திரையிலும் கபாலி தான் அது அதிகாலை 1.30 மணிக்கு ஆரம்பித்தது , ஆனால் அக்காட்சிக்கு அரங்கு நிறைந்ததா தெரியவில்லை,இன்று  பகல்காட்சிக்கு சீட் ஹவுஸ் ஃபுல் அதற்கு டிக்கட் கிடைக்கவில்லை.

காலை 5 மணிக்கு படம் முடிந்தது, இது அதிகாலை 2-00 மணிக்கு துவங்கியக் காட்சி, ஆன்லைனில் புக் செய்கையில் இந்த இரண்டும் கெட்டான் காட்சிக்கு 400 சீட்களில் 100 ஆவது புக் ஆகியிருந்த்து,

ஆனால் ஏன் புக் செய்தவர்கள் வரவில்லை எனத் தெரியவில்லை ?, இணைய விமர்சனங்களால் நொந்து போய் ஏன் ரெண்டும் கெட்டான் காட்சிக்கு போக வேண்டும் என நினைத்தனரா? தெரியவில்லை.

இது போல அரங்கு நிறையாத காட்சிகள் மிகவும் ஆபத்தானவை, முழுப்படத்தையும் ஒரு விஷமி தன்  மொபைல் போனில் பதிவு செய்து இணையத்தில் ஏற்றி விட வழி வகுப்பவை, இனிவரும் நாட்களில் இதற்கு ஏதேனும் செய்ய வேண்டும் திரையுலகம்.
=====

கபாலி நல்ல படம், இந்த பில்லா1 , 2 ,மங்காத்தா போன்ற படங்களையே ஹைப் ஏற்றி விட்டு வேடிக்கைப் பார்ப்பவர்கள் இந்த நல்ல படத்தை முதல்நாளே கழுத்தைத் திருகிக் கொல்லத் துடிப்பது ஏன் ? எனத் தெரியவில்லை,

படத்தை வாய்ப்பு கிடைத்தவர்கள் தியேட்டரில் மட்டும் பாருங்கள், அது தான் இந்த கம்ப்ளீட் ஆக்‌ஷன் த்ரில்லரை  முழுதாய் ரசிக்கும் வழி, படம் முழுக்க ரஜினி,படம் முழுக்க ஸ்டைல், படம் முழுக்க ஆக்‌ஷன், படம் முழுக்க டீடெய்ல் என கபாலிக்குழுவே நன்கு உழைத்துள்ளது, அதை மதித்தால் தான் தமிழ் சினிமாவின் தரம் உயரும், இனி ரஜினி படம் என்றால் தளபதி அல்ல, கபாலி தான் பெஞ்ச் மார்க்.

தவிர இது வேற்று நாடான மலேசியாவில் தமிழர் இரண்டாம், மூன்றாம் குடிமக்களாக நடத்தப்படுவதை, அதற்கான துணிச்சலான எதிர்ப்பை திறம்பட இப்படி ஒரு முழுமையான தமிழ் சினிமாவில் பதிவு செய்துள்ளது,ரஜினி போன்ற ஒரு நடிகர் தமிழர் பிரச்சனையைப் பேசுவது, இப்பிரச்சனை என்ன? என்று தெரியாதவர்களுக்கும் இதைக் கொண்டு சேர்த்துள்ளது.

நம் தமிழ் நாட்டுக்கு டாஸ்மாக் போல மலேசியாவில் போதை மாத்திரை, பவுடர் ஆகியவை பொது மக்களுக்கு கடும் அச்சுருத்தல் என்பதை புரிந்து படம் பாருங்கள், அதன் காரணமாக அங்கே பல நூறு மறுவாழ்வு மையங்கள் உண்டு, பல்லாயிரம் சோகக் கதைகள் உண்டு, அங்கே உள்ள கேங்ஸ்டர்கள் எண்களால் தான் அழைக்கப் படுகின்றனர் என்பதையும் அறிக,இதில் வரும் 43 கேங் என்பதும் அப்படி ஒன்று தான்.

கூடவே திருமணத்துக்கு முந்தைய பாலுறவு,டீன் ஏஜ் குழந்தைப்பேறு, பெண் கேங்க்ஸ்டர்கள், எட்டாக்கனி உயர் கல்வி,தமிழருக்கு மறுக்கப்படும் வேலைவாய்ப்பு,  சமத்துவமற்ற வாழ்க்கை முறை, போன்ற தலையாய அச்சுருத்தல்கள்.

அவற்றை ஆனவரை ஒரே திரைப்படத்தில் நம்பகத் தன்மையுடன்  கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர்  ரஞ்சித்.கூடவே மிதமான தலித்தியமும் உண்டு.ரஜினியின் உயிர் நண்பர் அமீர் (ஜான் விஜய்) கதாபாத்திரத்தின் நடை உடை பாவனை அனைத்தும் திருமாவளவன் பாதிப்பிலேயே உருவாகியுள்ளது.

மலேயத் தமிழர் கலாச்சாரம் நம் நாட்டைப் போன்றதே, கடல் கடந்தும் அந்த விளக்கு அணைந்து விடாமல் நூற்றாண்டுகளாக காத்து வருகின்றனர்,அங்கும் மாரியம்மன் கோவில்கள், தீமிதி, கிடாவெட்டு, படையல், குறி சொல்லுதல்,முதல் மரியாதை, மசானக் கொள்ளை, ஜோதிடம்,  சூனியம் வைத்தல் ,தீட்டுக் கழித்தல் என எல்லாம் உண்டு. அதைக் கூட சிறப்பாக அந்தந்த இடங்களில் காட்சிப் படுத்தியுள்ளார் ரஞ்சித்.

இதெல்லாம் ரஜினியின் படங்களில் முன்பு அவர் செய்யாதது, அவரை வைத்து படம் இயக்கிய எந்த மூத்த இயக்குனருமே இதன் முன் யோசிக்காதது,

மிகுந்த துணிச்சலான,  மலேய ,சீன பிரதிநிதிகளை எதிர்க்கும்  வசனங்கள் , காட்சிகள்,அதில்  சற்றும் சமரசம் கிடையாது, படம் பிடிக்க உதவினார்களே என்று அவர்களுக்கு முதுகு சொறியவில்லை, மிகுந்த ப்ரொஃபஷனலிஸம் ததும்பும் காட்சிகள், செய்நேர்த்தி,

கோட்டூர்புரம் அடையார் ஹவுஸின் உள்ளே முதன் முறையாக ஒரு காட்சி படமாக்கியுள்ளனர், பாண்டிச்சேரி ஆலோவில்லின் மண் சாலையில் முதல் முறையாக படமாக்கியிருக்கின்றனர், இது போல நிறைய தீஸிஸ் உண்டு, சிறு குறைகள் இருந்தாலும் வெளியே தெரிவதில்லை.

இதையே மெதுவான படம் என்பவர்கள் ரீனோ சீசன் படத்தின் ஆமை வேகத்தில் படம் எடுத்திருந்தால்   என்ன சொல்லுவார்கள்?

நாம் அந்நிய உலகப் படங்களான 22 புல்லட்ஸ், ரீனோ ஸீஸன்,ட்ஜாங்கோ அன்செயின்ட், கில்பில்,  ப்யூட்டிஃபுல் , 21 க்ராம்ஸ் ,அமோர்ரஸ் பெர்ரோஸ், , Rosario Tijeras  போன்றவற்றைத் திரும்பத் திரும்பப் பார்த்து வியப்போம், ஆனால் நம் தமிழில் அதே தரத்தில் ஒரு நல்ல படம் வந்தால் அதைக் கொண்டாடாமல் சேறு வாரிப் பூசுவோம்.என்ன மாதிரி நண்டுகள் நாம்?!!!