தில்லி பிரகதி மைதானில் இடிக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் பெருமைமிகு மூன்று கட்டிடங்கள் பற்றி அறிவோம்

2023 மே மாதம் பிறந்தால் இந்தியாவின் பெருமை மிகுந்த நவீன கட்டிடக்கலையின் அம்சமான மூன்று 
கட்டிடங்கள் அதன் அருமை தெரியாமல் இடிக்கப்பட்ட நிகழ்வு நடந்து ஐந்து வருடங்களாகிறது,

புகழும் மக்கள் செல்வாக்கும் மிகுந்த  நல்ல குடிமகனை ஊரறிய தூக்கில் ஏற்றிக் கொன்றதற்கு ஒப்பான அவலத்தை இங்கு எழுகிறேன், இது செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு தருவது போன்றதே,ஆனாலும் இதை யாரேனும் அறியாதவர் அறியட்டும் என எழுதுகிறேன் .

பாரீஸுக்கு ஐஃபிள் டவர் எத்தனை பெருமையோ தில்லிக்கு இந்த பிரகதி மைதானின் இந்த மூன்று  பரீட்சார்த்த கட்டிடங்கள் அத்தனை முக்கியம், உலகின் மிகப் பெரிய brutalism பாணி காங்க்ரீட் முக்கோணச் சட்டக இழுவிசை உத்திரங்களைக் (space frame tensile structures ) கொண்ட கட்டிடங்கள் இவை.

1.Hall of Nations (சர்வதேச கண்காட்சி அரங்கு)

2.Nehru Pavilion (நேரு கண்காட்சியம் அரங்கு )

3.Hall of Industry (தொழில்துறை கண்காட்சி அரங்கு )

சுதந்திர இந்தியாவின் கால் நூற்றாண்டு பயணத்தை அகில உலகிற்கும்  அறிவிக்கும் வண்ணம் இந்த கட்டிட வளாகம் 3 நவம்பர் 1972 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது, இந்தியாவின் முக்கியமான கட்டிடக்கலைஞர் ராஜ் ரிவால் (raj rewal) அவர்கள் மற்றும் இந்தியாவின் முக்கியமான கட்டிட பொறியாளரான மகேந்திர ராஜ் ஆகிய இருவரின் நொலைநோக்கு பார்வையில் உருவான பிரம்மாண்டமான பரீட்சார்த்த முயற்சி இது, 

பெரிய கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் எந்த நவீன உபகரணங்கள் இல்லாமல் கிடைத்தவற்றைக் கொண்டு இத்தனை பிரம்மாண்டம் வரவழைத்துக் கட்டப்பட்டது.

இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப இந்த பெருமைமிகு கட்டிட வளாகத்தை கட்டிடக்கலைஞர் ராஜ் ரிவால் அவர்கள் வடிவமைப்பு போட்டியில் வென்று வடிவமைத்து கட்டுமானம் செய்கையில் அவரின் வயது 36,செயற்கரிய சாதனையை செய்திருந்தார் அவர்.

தில்லியின் ஹூமாயூன் சதுக்கத்தில் இருந்து உந்துதல் பெற்று இந்த வடிவமைப்பு நிகழ்ந்தது, சமமற்ற ஆனால் சமச்சீரான எண்கோணத்தின் உச்சியில் அமைக்கப்பட்ட 3.4மீ விட்டம் கொண்ட நெடுவரிசைகள் போன்ற எண்கோண வெற்று வட்ட வடிவ தண்டின் மீது 22மீ உயரமும், தெளிவான இடைவெளியும் 44மீ. கொண்ட ஒரு மைய மண்டபமாக இது அமைந்திருந்தது.
இந்த அமைப்பு Cast-in-situ RCC ஸ்லாப் மற்றும் 50 செமீ விட்டம் கொண்ட 408 எண்ணிக்கையிலான  Cast-in-situ கான்கிரீட்  இழுவிசை கிராதிகள்மீது நிறுவப்பட்டது.

இக்கட்டுமானத்தில் ஏறத்தாழ 4,380 கன சதுர மீட்டர் காங்க்ரீட் பயன்படுத்தப்பட்டது, 750 மெட்ரிக் டன் வலுவூட்டப்பட்ட எஃகு கம்பிகள் பயன்படுத்தப்பட்டது, இன்று இது போல பரீட்சார்த்த கட்டிட வளாகம் கட்ட வேண்டும் என்றால் 3000 கோடி இந்திய  ரூபாய் திட்ட மதிப்பு வரும்.

உதாரணத்துக்கு சொன்னால் எளிமையின் அழகியல் பிரம்மாண்டத்தை பறைசாற்றிய கட்டிட வளாகம், பூச்சு வேலை அற்ற இழுவிசை கிராதிகள் ,ஆனால் 45° பாகைக்கு shuttering செய்ததில் அத்தனை துல்லியம், precast என்ற ready made தொழிற்நுட்பம் இன்றி கைகளால் கலவை கலந்து , பாகை திருத்தி கொரடு கொண்டு வரைபடங்களுக்கேற்ப  கம்பி வளைத்து சாரம் மரப்பலகங்கள் அடித்து வார்த்து காங்க்ரீட் கலந்து நிரவி 18 மாதங்களில் கட்டப்பட்டது, எப்படி எகிப்து  பிரமிடின் துல்லியம் தொலைவில் போகப்போக தெரியுமோ? அப்படி இந்த கைத்தறி பாணி பிரம்மாண்ட கட்டிடத்தின் நேர்கோடுகளை 0°, 45° துல்லியத்தை நேர்த்தியை, தொலைவில் போகப்போக ஒருவர் உணரலாம், அருகில் நெருங்கிப் பார்க்க சொரசொரவென காதி உடையில் தறிப்பிசிறுகள் போல மரப்பலகம் அடித்து வார்த்த தோற்றநயத்தை (texture) காணலாம்,

உள்ளது உள்ளபடி அழகு என்ற உயரிய ரசனை கோட்பாடின் படி உருவான ஒப்பற்ற கட்டிட வளாகம், அதன் மேன்மை, ரசனையை அறியாதவர்களால் குற்றம் சாட்டப்பட்டு தரைமட்டமானது துயர வரலாறு.

நேருவின் அருங்காட்சியம் ஒரு மக்கள் தலைவரின் அருங்காட்சியம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கிணங்க வடிவமைப்பட்டது, 

ஆட்சி மாறுகையில் காட்சி மாறும் என்பதற்கிணங்க மே 2014 மத்தியில் ஆட்சி மாறியதும்  நெடுநாள் நிலுவையில் இருந்த  நீதிமன்ற தீர்ப்பு கட்டிடக்கலை ஆர்வலர்களுக்கு  எதிராக பேரிடியாக வந்தது, மேல் முறையீட்டுக்கு இடமின்றி ஒரு வார காலத்தில் இடித்து அழிக்கப்பட்டது.

சண்டிகருக்கு அடுத்து காங்க்ரீட்டில் பிரம்மாண்டமான பரீட்சார்த்தங்கள் செய்து புணைந்த முயற்சி, இந்த பிரம்மாண்டத்தை உணர இந்த கண்காட்சி வளாகத்தின் நிலத்தின் பரப்பளவை ஒருவர் அறிந்தால் போதும் ,150 ஏக்கர் (~ 625,000 சதுர மீட்டர்) காங்க்ரீட் கூரை போர்த்திய பரப்பளவு 9500 சதுர மீட்டர்(102200 சதுர அடி).

சமகால கட்டிடக்கலையின் அதிசயம் கட்டிடக்கலை படிக்கும் மாணவர்கள் தவறாமல் தங்கள் ஐந்து வருட கல்விக்காலத்தில்  அகில இந்திய சுற்றுலாவின் போது சென்று வந்த முக்கியமான கட்டிடம்,கட்டிடக்கலை பயிலும் கடைசி   ஐந்து வருட மாணவர்கள் மட்டும் தடவிப்பார்த்து கண்டுகளிக்காமல் போன சமகால நவீன கட்டிடக்கலையின் அதிசயம்.

இணைப்பில் படங்கள் ஒவ்வொன்றாக பார்த்து இந்த அருமை புரிந்து கொள்ளாமல் இடிக்கப்பட்ட பெருமைமிகு கட்டிட வளாகத்துக்கு அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகிறேன்.