பம்மல் - திருத்தணி பைக் பயணம்

திருத்தணி சென்று 10 வருடங்களிருக்கும், வருடா வருடம் குலதெய்வம் சோளிங்கர் செல்கையில் திருத்தணி செல்ல வேண்டும் என நினைத்தும் முடியாமல் இருந்தது, இன்று காலை 6-30 மணிக்கு வீட்டை விட்டு தனியாக கிளம்பி விட்டேன், ஜூபிடரில் 250₹ க்கு பெட்ரோல் நிரப்பினேன்,பம்மல் முதல்  குன்றத்தூர் வழியே  Outer ring road பிடித்து , பூந்தமல்லி detour இறங்கி திருமழிசை ஊத்துக்காடு சாலை, திருவள்ளூர் திருத்தணி சாலையில் பயணித்து சரியாக 2-15 மணி நேரத்தில் 8-45 க்கு திருத்தணி மலைக்கோயிலுக்கு சென்று விட்டேன், திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாட்டிற்கு வருவாய் அளிப்பதில் முதல் இடத்தில் உள்ளது, எனவே இதன் மாநில நெடுஞ்சாலைகள் அத்தனையும்  குண்டு குழியின்றி , நிறைய வேகத்தடையின்றி நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது.  உள்வழி சாலைகள் அத்தனை அருமையாக உள்ளன, காரில் செல்பவர்களுக்கு ஒரே ஒரு சுங்க சாவடி தான் குறுக்கிடுகிறது,ஆனால் திருச்சி மார்க்கத்தில் பத்து கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி இருக்கும்.

ஜூபிடர் நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 50 -55 கிமீ சாதாரணமாகத் தரும், நான் சமீபத்தில் அதன் clutch belt ஐ பம்மல் கோத்தாரி TVS ல் விட்டு மாற்றியிருந்தேன், அதனால் pickup , mileage எல்லாம் அற்புதமாக இருந்தது, ஒரு ஆள் போனதால் மிகவும் focussed ஆக point to point பயணம் தான் , வண்டியை மலையில் பார்க்கிங்கில் சென்று தான் நிறுத்தினேன், ஜூபிடரின்  suspension இத்தனை வருடங்களாகியும் கூட நன்றாக இருக்கிறது, activa வில் suspension ,braking எல்லாம் இத்தனை நன்றாக இருக்காது .

கோயிலில் எல்லாமே நியாயமான விலை தான், முருகனுக்கு சம்பங்கி ரோஜா மாலை வாங்கிக் கொண்டேன் 100₹, தர்ம தரிசனத்தில் சென்றால் தான் முருகனை பாட முடியும் , கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் இரண்டையும் படித்தபடியே நெடும் வரிசையில் நகர்கிறேன், அடுத்து நின்றவர் முகம் கூட பார்க்கவில்லை, மூலஸ்தானத்தில் வள்ளி , முருகன், தெய்வானை, தனி சந்நிதிகளில், படிகள் இறங்க உற்சவர்கள் மூன்று பேர் தரிசனம் செய்து, பிரகாரத்தில் மூலவர்களை தரிசனம் செய்து வெளியே இறங்கினால் பிரசாத கடை, 10₹ இட்டால் மஞ்சள் பை தருகிறது நவீன எந்திரம்,

பிரசாத கடையில்  6 வகை பிரசாதங்கள் கிடைக்கின்றன ஒவ்வொன்றும் 15₹ , கோயிலில்  எதுவும் அதிக விலை கிடையாது, இருசக்கர வாகன பார்க்கிங் 10₹, கார் என்றால் 50₹, திருத்தணி நகரின் உள்ளே மட்டுமே வாகன நெரிசல் இருந்தது, இன்று சனிக்கிழமை உடன் கோடை விடுமுறையும் ஆதலால் அத்தனை பெற்றோரும் குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர், 

10-00 மணிக்கு திருத்தணியில் இருந்து நல்ல இருமுறை தரிசனம் கண்டு முடித்து திருப்தியாக மலை இறங்கி விட்டேன், போகும் போதே ஊதுபத்தியும் சாம்பராணியும் வைத்ய வீரராகவசுவாமிக்கும் என எடுத்து boot ல் வைத்ததால் 12-30 க்கு சந்நிதி மூடுவதற்குள் போய் விட வேண்டும் என்று வழியில் எங்கும் நிற்கவில்லை,

வைத்ய வீர ராகவர் கருணைக்கடல்,  எப்போது கடும் வெயிலில் சேவிக்கப்  போனாலும் மேகம் அனுப்பி போர்த்தி மூடுவார், கடும் மழையில் போனால் கடும் மழையை நிறுத்தி வெறும் சாரலாக ஆக்கித் தருவார், இன்று 40° மேல் தான் வெயில் இருக்கும் ஆனால் கருமேகம் குறுக்கிட்டு வெப்பம் உணரவேயில்லை,திருப்பாச்சூர் சிவன் கோயில் எல்லாம் சாலை மேல் இருந்தபடியே ஆத்ம தரிசனம் மட்டும் செய்து பயணித்தேன்.
இடையில் சாரல் வேறு , சரியாக 11-45க்கு திருவள்ளுர் வைத்ய வீரராகவ சுவாமி கோயில் அடைந்தேன், முக்கால் மணிநேரம் காத்திருப்பு, மூன்று முறை திருப்பாவை சொல்லி சுவாமி தரிசனம் செய்து வெளியே வந்தேன், வேகாத வெயிலில் வீட்டுக்குப் போக வேண்டுமே என்ற கடுப்பு இருந்தது, மழை பெய்வது போல வானம் இருண்டது, போன், வாட்ச் ,பர்ஸ் எல்லாம் சீட் அடியில் வைத்து மூடி பயணித்தேன், மழையே இல்லை, மப்பும் மந்தாரமும் மட்டுமே. பூந்தமல்லியில் கவனமாக ORR வலது புறம் திரும்பி கலந்து குன்றத்தூர் இறங்கி அனகாபுத்தூர் வழியே பம்மல் அடைகையில் மணி 2-00.

160 கிமீ சென்று வந்த களைப்பே இன்றி மாலை தி.நகர் காய்கறி மார்க்கெட் சென்று காய்கறிகள் வாங்கி வந்தோம்.

GST சாலையில் வாகன நெரிசல் எப்போதும் சகிக்க முடியாதபடி உள்ளது, 3 லேன்களிலும் இடைவெளியின்றி வாகனங்கள், வெப்பநிலையுடன் தகிக்கும் வாகன சூடும் சேருகையில் தான் கோடை வெயிலின் நிஜமான தாக்கம் என்றால் என்ன என்று உணர முடிகிறது.