புவர் திங்ஸ் 2023 POOR THINGS

"புவர் திங்ஸ்" 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்,  " தி லோப்ஸ்டர் " திரைப்படம் தந்த இயக்குனர் யோர்கோஸ் லாந்திமோஸின் அறிவியல் அவல நகைச்சுவை புனைவுக்கதை இது, உலக சினிமா விமர்சகர்கள் பலரும்  வகையை மீறும் படைப்பு.வரம்பு மீறிய பிரதி, பாலியல் காமெடி, கோதிக் காமெடி, பிளாக் காமெடி மற்றும் அபத்தமான நகைச்சுவை என இப்படைப்பை வரையறுத்துள்ளனர். 

டாக்டர் காட்வின் பேக்ஸ்டர் என்ற மருத்துவ விஞ்ஞானி பெல்லா பேக்ஸ்டர் என்ற  வினோதமான  பெண்ணின் அற்புத உலகத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் கதை இது, 
இத்திரைப்படம் 1992 ஆம் ஆண்டு அலாஸ்டெய்ர் கிரே எழுதி வெளியான புவர் திங்ஸ்  நாவலை அடிப்படையாகக் கொண்டது.
புவர் திங்ஸ் என்ற திரைப்படத்தின் தலைப்பை  சோதனைச் சாலை எலிகள் அல்லது விளிம்பு நிலை மனிதர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

1880 களில் விக்டோரிய லண்டன் நகரில், மருத்துவ மாணவர் மேக்ஸ் மெக்கான்டில்ஸ் விசித்திரமான அறுவை சிகிச்சை நிபுணரான காட்வின் பேக்ஸ்டரின் உதவியாளராக சேருவதில் இருந்து இக்கதை துவங்குகிறது.  

மருத்துவ மாணவர் மேக்ஸ்,  பேக்ஸ்டரின் ஆராய்ச்சி கூடத்தில் உருவான மகள் பெல்லாவை, நாள் முழுக்க உடனிருந்து  கூர்ந்து கவனித்து மருத்துவக் குறிப்புகள் எடுத்து ஆவணப்படுத்தும் வேலையில் பணியமர்த்தப்படுகிறார்,
பெல்லாவுக்கு  முப்பது வயது பெண்ணின்  உடலும் , ஒரு வயது குழந்தையின் மனநிலையும் உள்ளது, நாளடைவில் மேக்ஸ் பேராசிரியர் காட்வின்  பேக்ஸ்டரிடம் நல்ல நம்பிக்கை பெறுகிறார், பேக்ஸ்டரின் மகள் விசித்திரப் பெண்ணான பெல்லாவை மேக்ஸ் காதலிக்கிறார். 
பெல்லாவின் உடல் கர்ப்பமாக இருந்த ஒரு பெண்ணின் உடல் என்று மேக்ஸிடம் உண்மையைப் பகிர்கிறார் பேக்ஸ்டர்.

பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணியின் உடல் ஒன்று பேக்ஸ்டருக்கு கிடைக்க.   அந்தப் பெண்ணின் மூளையை அகற்றிவிட்டு அவளது கருவில் இருந்த நிறைமாத சிசுவின் மூளையை எடுத்து அவளின் தலைக்கு மாற்றி அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் பேக்ஸ்டர், 

இறந்து போன அந்த தாய்க்கு  ஒரு குழந்தையின் மனதைக் கொடுத்து, அவளுக்கு பெல்லா பாக்ஸ்டர் என்று பெயரிட்டு வளர்க்கிறார்,
தன் மகளாகவே சுவீகரித்துக் கொள்கிறார் பேக்‌ஸ்டர்,

அவளை வெளியுலகம் காண விடுவதில்லை அவர், சிறைப்பறவையாக பூட்டி வைக்கிறார், பெல்லா எத்தனை விலை உயர்ந்த பொருட்களை உடைத்தாலும் பேக்ஸ்டர் கோபம் கொள்வதில்லை, பிணவறை உடற்கூராய்வு மேடையில் பேக்ஸ்டர் பிரேதப் பரிசோதனை செய்கையில் ‌பெல்லாவும் இறந்த உடல்களை கத்தியால் குத்திக் கிழிக்கிறாள்,கண்களை நோண்டி நையப் புடைக்கிறாள், ஆண் சவத்தின் பிறப்புறுப்பை சேதம் செய்கிறாள், குழந்தை எப்படி தத்தித் தத்தி நடக்குமோ அப்படி நடக்கிறாள் பெல்லா, குழந்தை துப்புவது போல, பொது வெளியில் சிறுநீர் கழிப்பது போல அனைத்தும் செய்கிறார் பெல்லா .

காட்வினின் அனுமதியுடன் , பெல்லாவை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மேக்ஸ் கேட்கிறார், பெல்லாவும் அதை ஏற்றுக்கொள்கிறாள், 

நாளுக்கு நாள்  பெல்லாவுடைய மூளை , புத்திசாலித்தனம் வேகமாக வளர்கிறது, அவள் மேக்ஸிடம் தன்னை வெளியே அழைத்துப் போகக் கேட்கிறாள், ​​அவள் வெளி உலகத்தைப் பற்றியும் தன்னைப் பற்றியும் தன் உடம்பில் உள்ள காயங்கள் எப்படி உண்டாயின என்றும் அறிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டுகிறாள்.  

பெல்லா சுயஇன்பம் , பாலியல் இன்பத்தை விரைந்து கண்டறிகிறாள்,
அதை பொதுவெளியிலேயே பழகுகிறாள்,லஜ்ஜையின்றி உணவு மேஜையில் அதை பகிர்ந்து அனைவரையும் அருவருத்து நெளியச் செய்கிறாள் . 

மேக்ஸுக்கும் பெல்லாவுக்கும் திருமண ஒப்பந்தம் தயாரிக்க 
வேண்டி டங்கன் வெடர்பர்ன் என்ற வழக்கறிஞரை பணியமர்த்துகிறார் பேக்ஸ்டர்.
அவனோ  ஒரு மோசமான வழக்கறிஞர், பெல்லாவை நிரந்தரமாக திருமண பந்தம் என்ற கூண்டில் அடைக்க  பேக்ஸ்டர் முயலுகிறார் என பெல்லாவை அவன் வலிய சந்தித்து மூளைச்சலவை செய்கிறான், பெல்லா அவனுடன் ஊரை விட்டு ஓடுகிறாள்.  

இப்போது ஆராய்ச்சிக் கூடத்தில் பெல்லாவை விட மெதுவாக முதிர்ச்சியடையும் ஒரு இளம் பெண்ணான ஃபெலிசிட்டி என்ற பெண்ணுடன் பேக்ஸ்டர் ஒரு புதிய பரிசோதனையைத் துவங்குகிறார், 

பெல்லா போல செல்லம் தராமல் இவளை அடித்தும் வளர்க்கிறார் பேக்ஸ்டர், இவளின் மருத்துவக் குறிப்புகளையும் மேக்ஸ் கவனித்துக் கொள்கிறான்.

வீட்டை விட்டு வெளியேறிய பெல்லாவும் டங்கனும் போர்சுகல்  லிஸ்பனிற்கு ஒரு பெரிய சொகுசு கப்பலில் பயணத்தைத் தொடங்குகிறார்கள், 
கப்பலில்  இவர்கள் அடிக்கடி விதவிதமாக உடலுறவு கொள்கின்றனர். பெல்லா சொகுசுக் கப்பலில் சுகித்திருக்கும் நேரம் போக தனது மனதை தத்துவ விசாரணைக்கும் செலவிடுகிறாள்,
தத்துவம் பேசும் இரண்டு  பயணிகளுடன் பெல்லா நட்பு கொள்கிறாள்,அதில் ஒருத்தி வெள்ளையின கிழவி சக்கர நாற்காலியில் வலம் வருபவள், ஒருவன் அழகிய கருப்பின இளைஞன்,பெல்லா மனம் ஏழைகளுக்கு கனியும் வண்ணம் பல ஆத்ம விசாரணை புத்தகங்களாக தந்து படிக்க வைத்து இவர்கள் பண்படுத்துகின்றனர், இது அவளை சுரண்டிப் பிழைக்கும் வழக்கறிஞன் டங்கனுக்கு அறவே பிடிப்பதில்லை, தத்துவ புத்தகங்களை பிடுங்கி கடலில் எறிகிறான், அந்த கிழவியை சக்கர நாற்காலியுடன் கடலில் தள்ளவும் விழைகிறான் டங்கன்.  

டங்கன் பெல்லாவின் மன  வளர்ச்சியைத் தடுக்க முயற்சிக்கிறான்.  பெல்லா மிகுந்த கோபமடைந்து குடிப்பழக்கத்தில் ஆழ்ந்து விடுகிறாள்,  மனம் போன போக்கில் கேஸினோவில் சூதாட்டத்திலும் ஈடுபடுகிறாள். 

எகிப்தில் அலெக்ஸாண்ட்ரியா நகரில் கடற்கரையில் சொகுசுக் கப்பல்  நங்கூரமிட்டு நிற்கையில் , பெல்லா தன் வசிப்பிடத்தின் பால்கனி வழியே கீழே பார்க்க பசித்த மானிடத்தை காண்கிறாள், எங்கும் பட்டினிச் சாவுகள், மக்கள் அடக்கம் கூட செய்ய வழியின்றி விரக்தியில் தலை கவிழ்ந்து உழல்வதைப் பார்க்கிறாள்,  ஏழைகளின் துன்பங்களைக் கண்டு மிகவும் கலங்குகிறாள் பெல்லா.  

அவர்களுக்கு மனதார உதவ விரும்பியவள் மிச்சம் மீதி எதுவுமின்றி , டங்கன் காசினோவில் சூதாடி குவித்த பணம் அடங்கிய பெரிய பெட்டியை கொண்டு போய், சொகுசுக் கப்பலின்  நேர்மையற்ற துணை கேப்டன்கள் இருவரிடம் கொண்டு தருகிறாள், இதை அப்படியே அந்த ஏழைகளுக்கு வழங்கிவிடுங்கள் எனப் பணித்து ஆசுவாசம் கொள்கிறாள்.  
அவர்கள் அதைத் தருவதாக பொய்யாக வாக்குறுதி அளிக்கின்றனர்,ஆனால் கபளீகரம் செய்கின்றனர்.  

கையிருப்பு முழுதும் தீர்ந்து போனதால் மீதமுள்ள நெடும் கடற்பயணத்தை தொடர முடியாமல், பெல்லாவும் டங்கனும் ஃப்ரான்ஸ் நாட்டின் மார்சேயில் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டவர்கள், பாரிஸுக்குள் பல இடர்பாடுகளுக்குப் பின் செல்கிறார்கள்.  

தங்கும் செலவுக்குப் பணம் , குளிரில் தாக்குப் பிடிக்க தங்குமிடம் தேடிய பெல்லா ஒரு விபச்சார விடுதியில் விலைமங்கையாக வேலை செய்யத் துவங்குகிறாள்.

தன் வாடிக்கையாளரை தானே தேர்வு செய்து சுகிக்கிறாள் பெல்லா, அந்த பணத்தில் டங்கனுக்கு உணவும் வாங்கித் தருகிறாள் பெல்லா,  இதனால் கடும் கோபமடைந்த டங்கன் அருவருப்பால் உடைந்தும் போகிறான், 

பெல்லா கோபம் கொண்டு தன்னை திட்டி அடிக்கும் டங்கனை  பாரீஸில் அந்த நொடியில் வைத்து கைவிடுகிறாள், 

தன் தந்தை பேக்ஸ்டர்,இவள் வீட்டை விட்டு வெளியேறுகையில் கத்தை கத்தையாக பவுண்டுகளை சுருட்டி பெல்லாவின் கவுனில் ஒரு ரகசிய அறையில் வைத்து தைத்திருக்க, அந்த கத்தைப் பணத்தை துளி கூட  மிச்சமின்றி டங்கனிடம் தந்து வழியனுப்புகிறாள் பெல்லா.

பாரீஸின் விபச்சார விடுதியில்,பெல்லா தேர்ந்த விலைமங்கையாகிறாள், விபசாரத் தலைவி  மேடம் ஸ்வினியின் வழிகாட்டுதலின் கீழ் டோய்னெட் என்ற விலைமங்கையுடன் இணைந்து தொழிலை தேர்ந்து நடத்தத் துவங்குகிறாள்,

அவளை ஓரினச் சேர்க்கை இணையாகவே வரித்து வாழ்கிறாள், கருப்பின பெண்ணான டோய்னெட் பெல்லாவிற்கு சோஸியலிஸ சித்தாந்தத்தை அறிமுகப்படுத்துகிறாள்.

இப்போது லண்டனில் தீவிர நோய்வாய்ப்பட்டிருக்கிறார் பேக்ஸ்டர், பெல்லாவை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து தன்னிடம் கொண்டு வரும்படி  மேக்ஸிடம் வேண்டிக் கேட்கிறார். 

டங்கனை முதலில் தேடிக் கண்டுபிடித்த  மேக்ஸ் பெல்லாவையும் விபசார விடுதியில் சென்று கண்டுபிடித்து விடுகிறார். 
மீண்டும் லண்டனிற்கு பெல்லாவை அழைத்து வந்து ,  பேக்ஸ்டருடன் சமரசம் செய்து சேர்த்து வைக்கிறார், 

மேக்ஸ் பெல்லாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி மீண்டும் கேட்கிறார், பேக்ஸ்டர் மரணத் தருவாயில் இருந்தாலும் கூட இந்த திருமணத்தை நடத்தித் தருவதற்கு சர்ச்சிற்கு நேரில் வருகிறார். 

அங்கே குயுக்தி மிகுந்த டங்கன் ஆக்ரோஷமாக வருகிறான், உடன் ராணுவ  ஜெனரல் ஆல்ஃபி பிளெஸ்சிங்டன் என்பவனையும் அழைத்து வருகிறான், இவர்களால் இம்முறையும் திருமணம் நின்று போகிறது. 

ஆல்ஃபி பிளெஸ்சிங்டன், பெல்லாவை தன் மனைவி விக்டோரியா என்கிறான்,  அவளை தன்னுடன் வருமாறு அழைக்கிறான், விக்டோரியா   காணாமல் போவதற்கு முன்பு அவர்கள் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாகவும், அவர் அவளை மீட்டுப் போய் இல்லற வாழ்வை தொடர இங்கு வந்ததாகவும்  மிரட்டல் தொனியில் அழைக்கிறான், 

தன்னுடன் பெல்லாவை அனுப்பாவிட்டால் நடப்பது வேறு என துப்பாக்கியால் அனைவரையும் குறி வைக்கிறான்.பெல்லா தனது கடந்தகால வாழ்க்கையைப் பற்றி அறிய வேண்டி மணக்க இருந்த மேக்ஸை இரண்டாம் முறையாக  இங்கே கைவிடுகிறாள்,

அரண்மனை போன்ற பல அடுக்கு பாதுகாப்பு கொண்ட  வீட்டிற்குச் செல்கிறாள், அங்கே ஆல்ஃபியின் இல்லற வன்முறை மற்றும் கொடூரமான மன இயல்பைக் கண்டறிகிறாள் பெல்லா,

ஆல்ஃபி குழந்தை பெற்று வளர்ப்பது சுமை என்று கருதியவன், கருவுற்றிருந்த விக்டோரியாவின் கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை செய்து அகற்ற விழைகையில் விக்டோரியா அவனிடமிருந்து தப்பிக்கவே  பாலத்தில் இருந்து நீரில் குதித்ததாக அறிகிறாள் பெல்லா.

ஆல்ஃபி , தப்பிக்க முயலும் பெல்லாவை  அரண்மனையில் கடும் காவலில் அடைத்து வைக்கிறான்.  
மிகுந்த காம வேட்கை மிகுந்தவள் விக்டோரியா என்கிறான், அவளது கன்னிச்சவ்வை  FGM - Female genital mutilation வகை அறுவை சிகிச்சை செய்து அகற்றி, அவளை கருவுறச் செய்யத் திட்டமிட்டிருப்பதை உளவறிகிறாள் பெல்லா, 

 அவளுக்கு மார்டினி ஜின் மதுவில் க்ளோரோஃபார்ம் கலந்து தருகிறான் ஆல்ஃபி, குடிக்காவிட்டால் தலை சிதறிவிடும் என துப்பாக்கியால் மிரட்டுகிறான்,  பெல்லா நொடிப்பொழுதில் கணவனது முகத்தில் அந்த மார்ட்டினி ஜின் திரவத்தை வீசுகிறாள், ஆல்ஃபி பதட்டத்தில் செய்வதறியாது  காலில் தன்னைத்தானே சுட்டுக் கொள்கிறான்.  

பெல்லா தன் தந்தை பேக்ஸ்டரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அங்கு ஒரு அறுவை சிகிச்சை நிபுணராகிவிடுகிறாள், கொடுங்கோலக் கணவன் ஆல்ஃபியின் கபாலத்தை திறந்து , கணவன் மேக்ஸின் உதவியுடன் செம்மறி ஆட்டின் மூளையை வைத்து அறுவை சிகிச்சை செய்து வெற்றியும் பெறுகிறாள் பெல்லா. 

தன்னைப்போன்ற ஆராய்ச்சி எலியான ஃபெலிசிட்டியை கூண்டிலிருந்து விடுதலை செய்கிறாள் பெல்லா.
காட்வின் பேக்ஸ்டர் மரணப்படுக்கையில்  தன் பக்கத்தில் பெல்லா மற்றும் மேக்ஸ் கணவன் மனைவியாக அமர்ந்திருக்க அமைதியாக மரணிக்கிறார்,

பெல்லா, மேக்ஸ் மற்றும் பாரீஸின் சோஸியலிச சார்புடைய விலைமங்கை டோய்னெட் ஆகியோர் காட்வின் வீட்டில் ஒரு புதிய விதமான வாழ்க்கையை வாழத் துவங்குகின்றனர், பெல்லாவின் முன்னாள் கணவன் ஆல்ஃபி அங்கே தோட்டத்தில் இலை தழையைத் தின்று கொண்டு மேஏஏஏ என்று ஆடு போல கனைப்பதுடன் படம் நிறைகிறது.

இப்படம் அனைவருக்குமானதல்ல,
கட்டற்ற பாலியல் சித்தரிப்புகள், வசை மொழிகள் உள்ள படைப்பு இது,  அவல நகைச்சுவை, திருகல் நகைச்சுவை விரும்பிகள் அவசியம் பாருங்கள், முக்கியமாக இயக்குனர் யோர்கோஸ் லாந்திமோஸின் ரசிகர்கள் அவசியம் இப்படைப்பை பாருங்கள், ஃபேவரிட் திரைப்படம் போலவே பல நுட்பமான சித்தரிப்புகள் உள்ள படம், ஃபேவரிட் திரைப்படம் போலவே இப்படத்தின் ஒளிப்பதிவிலும் fish eye லென்ஸ் கேமரா கொண்டு பல காட்சிகளை சுவாரஸ்யமாக படமாக்கியுள்ளார், ஒளிப்பதிவு  ராப்பி ரயான்.

பெல்லா பாக்ஸ்டராக எம்மா ஸ்டோன், டங்கன் வெடர்பர்னாக மார்க் ருஃபாலோ,டாக்டர் காட்வின் பேக்ஸ்டராக வில்லெம் டாஃபோ,மேக்ஸ் மெக்கான்டில்ஸாக ரமி யூசப்,
 ஆல்ஃபி பிளெஸ்ஸிங்டனாக கிறிஸ்டோபர் அபோட் என அற்புதமான நடிகர்களைக் கொண்ட படைப்பு புவர் திங்ஸ்.

2024 ஆம் ஆண்டின் முன்னணி கதாபாத்திரத்திற்கான சிறந்த நடிகைக்கான அகாடமி விருதை
நடிகை எம்மா ஸ்டோன் வென்றார்.

2024 ஆம் ஆண்டின் சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான அகாடமி விருதை 
மார்க் கூலியர், ஜோஷ் வெஸ்டன், நதியா ஸ்டேசி வென்றனர்.

2024 ஆம் ஆண்டின் சிறந்த தயாரிப்பு மற்றும் வடிவமைப்பிற்கான அகாடமி விருதை 
Zsuzsa Mihalek, ஷோனா ஹீத், ஜேம்ஸ் ப்ரைஸ் வென்றனர்.

2023 ஆம் ஆண்டின் கோல்டன் லயன் விருதை 
இயக்குனர் யோர்கோஸ் லாந்திமோஸ் வென்றார்

2024 ஆம் ஆண்டின் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான அகாடமி விருதை
ஹோலி வாடிங்டன் வென்றார்.