Heroico 2022 மெக்ஸிகோ

சென்னை 21 ஆம் சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்த Heroico திரைப்படம் முக்கியமானது , மெக்ஸிகோ நாட்டின் ராணுவப் பயிற்சி முகாமின் 
கோரமுகத்தையும்,மெக்ஸிகோவின் வறுமையையும் , 
கட்டாயக் கல்வி இல்லாமையையும்  ஒருங்கே பட்டவர்த்தனமாகப் பேசுகிறது இப்படைப்பு, படத்தின் போஸ்டரே இங்கே கண்ணால் எதையும்  பார்க்காதே ,வாயால் எதுவும் பேசாதே ,கீழ்படி என கண்ணையும் வாயையும் சீருடை அணிந்த கைகள் பொத்துவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது, 
 இயக்கம் David Zonana, ஒளிப்பதிவு Carolina Costa.

ராணுவப் பயிற்சி முகாம் கொடுமைகள் என்றால் நம் அனைவரின் நினைவுக்கும் உடனே வருவது இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக்கின் ஃபுல் மெட்டல் ஜாக்கெட் திரைப்படம், அதையும் தாண்டி யோசித்து ஒரு உலக சினிமா செய்வது மிகக் கடினம் அதை சாத்தியமாக்கியுள்ளனர் படக்குழுவினர்,

மெக்ஸிக்கோவின் மிக முக்கியமான கட்டிடக்கலை சுற்றுலாத்தலமான Centro Ceremonial Otomí (1980 | architect Iker Larrauri)மையத்தில் ராணுவப் பயிற்சி அகாடமியாக கதைக்களம் அமைத்து மிரட்டி உள்ளனர், இத்த  random rubble masonry  கருங்கல் கட்டிடம் பார்வையாளருக்கு அத்தனை இருண்ட மனநிலையைத் தந்து கதையின் தீவிரத்தை உணர்த்தி திரைக்குள் ஆழ்த்தி விடுகிறது.

மெக்ஸிக வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், நல்வாழ்வுக்கு வேண்டி வளர்ந்த நாட்டுக்கு உயிரைப் பணயம் வைத்து குடிபெயர்தல் இவை வரலாற்றுப் பிரசித்தி பெற்றவை, அக்கூட்டத்தில் தந்தையால் கைவிடப்பட்ட குடும்பத்தில் இருந்து 18 வயதான லூயிஸ் வறுமையில் பிடியிலிருந்து மீள ராணுவப் பயிற்சி முகாம் என்ற இந்த நெருப்பாற்றில் குதிக்கிறான்.  

அவன் தாய்க்கு  நீரழிவு முற்றியிருக்கிறது, வாரத்துக்கு மூன்று முறை டயாலிஸிஸ் செய்வதற்கு 6000 பீஸோஸ் தேவைப்படுகிறது,ராணுவத்தில் சேர்ந்தால் குடும்பத்தாருக்கு மருத்துவக் காப்பீடு கிடைக்கும் என்று தியாகி போல சேர்ந்துள்ளான் லூயிஸ்,

ராணுவப் பயிற்சி முகாமில் மாணவர்கள் அனைவரையும் கோல்ட்ஸ் என்கின்றனர்,அதாவது பிறந்த குதிரைக்கன்று, வீறு நடை போட முடியாமல் நான்கு கால்களில் தடுமாறி நடக்கும் குதிரைக்கன்று போன்ற  இம்மாணவர்களை குதிரையாக பீடுநடை போட்டு ஓடும் வரை அடித்தும், துன்புருத்தியும், மூச்சடக்கி நீரில் மூழ்கடித்தும் , மரத்தை கட்டிப்பிடித்து பனிப்பொழிவில் அம்மணமாக நிற்கவைத்தும், குடும்பத்தாரை ஏசி உணர்வுகளை சீண்டியும், இன்ன பல வலிகள் தந்தும் அசகாய பயிற்சி தருகின்றனர், 

இத்தனை கடுமையான பயிற்சிக்குப் பின்னர் அவர்களை போதை மருந்து கார்டல் மாஃபியாவை அழிக்கும் மத்திய ராணுவப்படைப் பணியில் ஈடுபடுத்துகின்றனர்,  

குடும்பத்தை கைவிட்டுச் சென்ற தந்தை சிறு வயதில் காட்டில் வேட்டையாடுவதற்கு பயிற்சியளித்தது லூயிஸுக்கு  ராணுவப் பயிற்சி முகாமில் நல்ல பெயரெடுத்துத் தருகிறது, அவனால் சாதாரணமாக புல்ஸ் ஐ இலக்கைச் குறிபார்த்து சுடமுடிகிறது, 

ராணுவ பயிற்சி முகாமின் ஜெனரல் ஃபர்ணான்டோவுக்கு லூயிஸை மிகவும் பிடிக்கிறது,இதனால் கடும் ராணுவப் பயிற்சியில் இருந்து லூயிஸுக்கு மட்டும் சலுகைகள் கிடைக்கின்றன, வார இறுதியில் லூயிஸை அவன் அழகிய காதலி வந்து பார்க்கிறாள், ஜெனரல் ஃபெர்ணன்டோ லூயிஸை தனிமையில் அழைத்து இனிமையாக பேசுகிறான்,தன்னைப் போல ஒருவனை லூயீஸிடம் கண்டேன் என்கிறான், தான் சொல்வதைக் கேட்டால் அவன் இந்த ராணுவ முகாமில் தன்னைப் போல உயரிய பதவிக்கு வரலாம் என்கிறான், உன் காதலியை மூர்ச்சையாகும் வரை உறவு கொள்,வாய்ப்புணர்ச்சியும் கொடுக்கத் தவறாதே என புத்தி சொல்கிறான், வெறியேற்றுகிறான் , தன் சகாக்கள் பார்க்கும் கொடூரமான ஃபார்வர்ட் காணொளிகளை லூயீஸுக்கு வாங்கிக் காட்டுகிறான்.ஆனால் லூயீஸ் ஃபெர்ணான்டோவின் கண்களைக் கூட ஏறிட்டுப் பார்ப்பதில்லை.

விரைவில் ஒரு கட்டைப் பஞ்சாயத்து ஒன்றிற்கு லூயீஸுக்கு துப்பாக்கி வழங்கி அழைத்துப் போகிறான், லூயிஸ் இம்முறை கார் மட்டும் ஓட்டுகிறான், காரில் இவர்களுக்கு விழிப்புடன் காத்திருக்கிறான், கட்டைப் பஞ்சாயத்து முடிந்து அவர்கள் சுட்டுவிட்டு தப்பி வருகையில் இவன் காரை அதி வேகமாக செலுத்துகிறான்,நால்வரும் பப் சென்று மது அருந்துகின்றனர்,இவன் உடன் ஒட்டி ஒட்டாமல் தலை கவிழ்ந்து இருக்கிறான், ஜெனரல் ஃபெர்ணன்டோ அங்கே மது அருந்திய நிலையில் ஒருவனை தலையில் அடித்து தரையில் வீழ்த்துகிறான், அல்லக்கை சகாக்கள் அவனை பாராட்டி உசுப்பேத்துகின்றனர் .

லூயீஸுக்கு அவ்வார இறுதியில் விரைவில் ஊருக்குப் போக விடுமுறைக்கு அனுமதி கிடைக்கிறது, தாய் இவனின் அல்லல் மனத்துயரைப் புரிந்து கொள்வதில்லை, ராணுவப் பயிற்சியில் இருந்து விலகக்கூடாது என புலம்புகிறாள்.

லூயிஸின் சக பயிற்சி மாணவர்கள் கடும் அல்லலும் துயரமும் அடைகின்றனர், ஜெனரலை எதிர்த்துப் பேசியவர்களை  ராணுவ முகாமில் ஜெனரல் ஃபெர்ணான்டோ மற்றும் அவரது சக அதிகாரிகள், இரவு டார்மிடரியில் உறங்குகையில் கழிப்பறைக்கு குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று அடித்து உதைத்து வெளியேறும் விண்ணப்பத்தில் கையோப்பம் வாங்கி காணாப்பிணமாக்கி விடும் அவலம் சாதாரணமாக நடக்கிறது.

லூயிஸுக்கு சக பயிற்சி மாணவர்கள் மீது பரிவும்,தனக்கு கிடைக்கும் சலுகைகளால் மிகுந்த குற்ற போதமும் உண்டாகிறது, காணாப்பிணமான நண்பனுக்காக ராணுவ முகாமின் இயக்குனர் வரையில் சென்று தைரியமாக புகார் அளிக்கிறான் லூயீஸ், ஆனால் அவன் நண்பன் கையொப்பமிட்ட வெளியேறும் விண்ணப்பத்தை காட்டி வாயடைக்கிறார் முகாம் இயக்குனர், 

முகாமுக்கு மகனைத் தேடி வந்த நண்பனின் தாயாரின் நிர்கதி, கூக்குரல் லூயிஸுக்கு மனச்சிதைவு தருகிறது, அவனுக்கு அமானுஷ்ய உருவங்கள் கெட்ட கனவுகளில்  வருகின்றன.

 லூயிஸிற்கு கிடைக்கும் சிறப்பு சலுகைக்கு என்று விலை உள்ளது,அதை அவன் விரும்பவுமில்லை,ஜெனரலிடம் காணாபிணமான நண்பனுக்கு நியாயம் வேண்டி  தற்காப்புக்கு வாங்கிய ராணுவக்கத்தி கொண்டு ஜெனரல் முன்பு ஓங்குகிறான் லூயீஸ், அதை லாவகமாக தட்டி விட்டு அம்மாவின் மருத்துவ நிலையை நைச்சியமாக நினைவூட்டி சமாதானப்படுத்துகிறான்.

லூயீஸின் நன்றியுணர்வை சோதிப்பதற்கு வேண்டி அவனை தர தரவென காட்டாற்றங்கரைக்கு இழுத்துப் போகின்றனர் ஜெனரல் ஃபெர்ணான்டோ மற்றும் சகாக்கள், அங்கே லூயீஸுக்கு நட்பான ஒரு Mestizo வகை நாயை அந்த ராணுவக் கத்தியைக் வைத்துக் கொன்று நிரூபி என தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்துகிறான்,15 வரை எண்ணுகிறான், லூயீஸ் அப்போது குழப்பமடைந்த நிலையில் அந்த நாயை பல முறை குத்தி சாகடிக்கிறான்.

இம்முறையும்  வார இறுதியில் ஜெனரல் ஃபெர்ணான்டோ மற்றும் சகாக்கள் நால்வர் கட்டைப் பஞ்ஜாயத்துக்கு செல்கின்றனர், லூயீஸை இம்முறை துப்பாக்கி வழங்கி அந்த பணக்கார வீட்டின்  உள்ளே அழைத்துப் போகின்றனர்,

இவனை துப்பாக்கி முனையில் அந்த உயிருக்கு அஞ்சி கதறும் தம்பதிகளை காவல் காக்க ஆணையிட்ட ஃபெர்ணான்டோ அறையில்  இருந்த இளைஞனை பெற்றோர் கண் முன்னரே இழுத்துப் போய் அவனை கதறவிட்டு வல்லுறவு கொள்கிறான், மற்ற சகாக்கள் மூவரும் அறைகளில் சென்று பணத்தை, ஆவணத்தை கொள்ளை அடிக்கின்றனர், பெற்றோரின் கதறல் லூயீஸை சாய்த்து விடுகிறது, தன்னிலை மறக்கிறான், சுயநலம் மறக்கிறான், கதறல் வரும் அறைக்குள் சென்று ஃபெர்ணான்டோவை நெற்றியில் சுடுகிறான், மற்ற சகாக்கள் மூவரையும் அதே போல நெற்றியில் சுட்டு சாகடித்து நிஜ ஹீரோவாக ஆகிறான் லூயீஸ், அத்துடன் படம் நிறைகிறது.

படத்தில் மெக்ஸிக்க நாட்டின் இறையான்மையை படக்குழு விமர்சித்து முகத்திரையை கிழித்தது துணிச்சல்கரமானது, நம் நாட்டில் இது போல ராணுவ பயிற்சி முகாம் பற்றிய படம் எடுப்பதற்கு,படைப்பு சுதந்திரத்தை நிரூபிப்பதற்கு எல்லாம் வாய்ப்பேயில்லை.

ஹீரோயிக் 21 ஜனவரி 2023 அன்று 2023 சன்டான்ஸ் திரைப்பட விழாவில் அதன் சர்வதேச திரையிடல் கண்டது .பிப்ரவரி 2023 இல் 73 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவிலும் ஹீரோயிக் திரையிடப்பட்டு ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றது,படம் அவசியம் தேடிப் பாருங்கள் .