கோடா CODA 2021

"கோடா CODA " திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியான மிகச்சிறந்த உணர்ச்சிமிகு படைப்பு. 

இது 2014 ஆம் ஆண்டில் வெளியான லா பேமிலி பெலியர் என்ற பிரெஞ்சுத் திரைப்படத்தின் ஆங்கில மறுஆக்கம். 

சியான் ஹெடர் எழுதி இயக்கிய இத்திரைப்படம்  செவிப்புலன் மாற்று திறனாளி குடும்பத்தில் கேட்கும் திறன் கொண்ட ஒரே ஒரு பெண்ணான ரூபி ரோஸியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. 

கோடா (CODA) என்பது ஆங்கிலத்தில் Child of Deaf Adults என்பதன் சுருக்கம்.  அதாவது செவிப்புலன் மாற்றுத்திறனாளி பெற்றோரின் குழந்தை .

பொதுவாக ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவருமே செவிப்புலன் மாற்றுத்திறனாளிகளாக இருந்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை கேட்கும் திறன் கொண்டதாக இருந்தால் அக்குழந்தையைச் வளர்ந்த சமூகத்தில்  கோடா என்று அழைக்கிறார்கள்.

 இத்திரைப்படத்தின் நாயகி ரூபி ரோஸி அத்தகைய ஒரு சூழலில் வளர்ந்தவர் என்பதால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இப்பயன்பாடு வெறும் ஒரு அடையாளச்சொல் மட்டுமல்ல இது ஒரு தனித்துவமான கலாச்சாரப் பின்னணியைக் குறிக்கிறது. இக்குழந்தைகள் பிறந்தது முதல் சைகை மொழி மற்றும் பேசும் மொழி ஆகிய இரண்டு வெவ்வேறு உலகங்களுக்கு இடையே ஒரு பாலமாகச் செயல்படுகிறார்கள்.

 சிறுவயதிலேயே தனது பெற்றோருக்காகவும் குடும்பத்திற்காகவும் வெளியுலகில் மொழிபெயர்ப்பாளராக மாற வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு ஏற்படுகிறது.

 இதனால் இவர்கள் மற்ற குழந்தைகளை விட விரைவாக முதிர்ச்சியடைவதையும் குடும்பப் பொறுப்புகளை ஏற்பதையும் இப்படம் யதார்த்தமாகப் படம்பிடித்துள்ளது.

இசைத் துறையிலும் கோடா (Coda) என்ற சொல்லிற்கு ஒரு முக்கியப் பொருள் உண்டு. ஒரு இசைப் படைப்பின் இறுதியாக அமையும் நிறைவுப் பகுதியை இசைக்கலைஞர்கள் கோடா என்று அழைப்பார்கள். இத்திரைப்படத்தில் நாயகி ரூபி ஒரு பாடகியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்க விரும்புவதால் இத்தலைப்பு அவரது இசைப் பயணத்தோடும் ஒரு அழகான தொடர்பைக் கொண்டுள்ளது.

கோடா ரூபி தனது குடும்பத்தின் மீன்பிடித் தொழிலுக்கு உதவியாக இருப்பதற்கும் தனது பாடகி கனவைத் தொடர்வதற்கும் இடையே நடக்கும் போராட்டங்களை இப்படம் மிக அழகாக விவரிக்கிறது.

உலக சினிமா அரங்கில் இப்படைப்பு  முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மிகவும் எதார்த்தமாகவும் அவர்களின் தனித்துவமான சவால்களுடனும் அணுகிய விதம் உலக அளவில் பாராட்டுகளைப் பெற்றது.

 சர்வதேசத் திரைப்பட விழாக்களில் இப்படம் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. 
இது உலகளாவிய மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு கலைப்படைப்பாக உயர்ந்தது.

விமர்சன ரீதியாக இத்திரைப்படம் ஒரு மேதமையுடனான படைப்பாக மிளிர்கிறது. வழக்கமான ஒரு டீன் ஏஜ் கதையாகத் தொடங்கினாலும் இதில் உள்ள ஆழமான உணர்ச்சிகள் மற்றும் குடும்ப உறவுகளின் பிணைப்பு இப்படத்தை ஒரு உன்னதமான நிலைக்குக் கொண்டு செல்கிறது.

 திரைக்கதை மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டு பார்வையாளர்களின் இதயத்தைத் தொடும் வகையில் இழைக்கப்பட்டுள்ளது.

 குறிப்பாகக் காது கேளாத கதாபாத்திரங்களை வெறும் பரிதாபத்திற்குரியவர்களாகக் காட்டாமல் அவர்களைச் சுயசார்பு கொண்டவர்களாகச் சித்தரித்த விதம் விமர்சகர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்டது.

இயக்குநர் சியான் ஹெடர் இப்படத்தில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 
அவர் மாசசூசெட்ஸ் பகுதியின் மீன்பிடித் தொழில் பின்னணியை மிகவும் நம்பகத்தன்மையுடன் படமாக்கியுள்ளார்.

பால்யூடா விட்ரோவின் ஒளிப்பதிவு கடற்கரை நகரின் அழகையும் கடலில் இருக்கும் சவால்களையும் கண்முன்னே நிறுத்துகிறது. 

ஜெராட் பிரிஸனின் எடிட்டிங் படத்தின் ஓட்டத்தைச் சற்றும் தொய்வில்லாமல் நகர்த்திச் சென்றது.

இப்படம் 2021 ஆம் ஆண்டு சன்டான்ஸ் திரைப்பட விழாவில் முதன்முதலில் திரையிடப்பட்டது. 
அங்கு ஆப்பிள் நிறுவனம் இப்படத்தின் விநியோக உரிமையை உச்ச சாதனை அளவான 25 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.

 பின்னர் ஆகஸ்ட் 2021 இல் ஆப்பிள் டிவி பிளஸ் வழியாக உலகம் முழுவதும் வெளியானது.

 திரையரங்குகளில் மட்டுமின்றி ஓடிடி தளத்திலும் இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

நடிகர்களின் பங்களிப்பு இப்படத்தின் மிகப்பெரிய பலமாகும். எமிலியா ஜோன்ஸ் ரூபி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். 
இதற்காக அவர் ஒன்பது மாதங்கள் சைகை மொழியையும் இசைப் பயிற்சியையும் மேற்கொண்டார். 

டிராய் கோட்சர் ரூபியின் தந்தையாக நடித்த விதம் உலகத்தையே உலுக்கியது எனலாம். மார்லீ மேட்லின் மற்றும் டேனியல் டுரண்ட் ஆகியோரும் தங்களின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்கள். 

காது கேளாத கதாபாத்திரங்களுக்குக் காது கேளாத நடிகர்களையே நடிக்க வைத்தது இப்படத்திற்கு ஒரு கூடுதல் நம்பகத்தன்மையை வழங்கியது.

இசை இப்படத்தின் ஆன்மாவாகவே திகழ்கிறது. மாரியஸ் டி விரீஸ் இசையமைத்த பாடல்கள் உணர்ச்சிகளின் உச்சத்தைத் தொட்டன. 

குறிப்பாக ஜோனி மிட்செலின் போத் சைட்ஸ் நவ் என்ற பாடலை ரூபி சைகை மொழியுடன் பாடும் காட்சி இப்படத்தின் மிக முக்கியமான தருணமாகும்.

 இசையைக் கேட்க முடியாத ஒரு குடும்பத்தில் இசை என்பது எப்படி ஒரு பிணைப்பை உருவாக்குகிறது என்பதை இசை ஆசிரியர் கதாபாத்திரத்தின் மூலம் இயக்குநர் சிறப்பாகக் காட்டியுள்ளார்.

விருதுகளில் கோடா திரைப்படம் ஒரு வரலாற்றுச் சாதனையையே படைத்தது. 
94 வது அகாடமி விருதுகளில் சிறந்த திரைப்படம் சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த தழுவல் திரைக்கதை ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டியிட்டு மூன்றையுமே வென்றது. 

டிராய் கோட்சர் ஆஸ்கார் விருது வென்ற முதல் செவிப்புலன் மாற்றுத் திறனாளி ஆண் நடிகர் என்ற பெருமையைப் பெற்றார்.

 ஓடிடி தளத்தில் வெளியான ஒரு படம் ஆஸ்கார் சிறந்த திரைப்பட விருதை வென்றது இதுவே முதல் முறையுமாகும்.

கோடா திரைப்படத்தின் அடிநாதமாக விளங்குவது ஒரு தனிமனிதனின் கனவுக்கும் அவனது குடும்பத்தின் மீதான கடமைக்கும் இடையே நிலவும் மெல்லிய போராட்டமே ஆகும்.

 இப்படம் சொல்லும் மிக முக்கியமான செய்தி  மாற்றுத்திறனாளிகளின் உலகத்தை அவர்கள் சார்ந்துள்ளவர்களின் வழியாகப் பார்க்காமல் அவர்களின் சொந்தக் கண்களின் வழியே உலகிற்கு உணர்த்தியதுதான்.

அன்பு என்பது ஒருவரை நமக்காகப் பிடித்து வைத்துக் கொள்வது அல்ல மாறாக அவர்களை அவர்களின் விருப்பப்படி பறக்க விடுவதே என்பதை ரூபியின் குடும்பத்தினர் உணரும் தருணம் இப்படத்தின் ஆன்மாவாகத் திகழ்கிறது.

 ரூபி தன் குடும்பத்திற்காகத் தனது திறமையைத் தியாகம் செய்ய முன்வரும்போது அவளது அண்ணன் லியோ அதைத் தடுப்பது ஒரு உன்னதமான பிணைப்பைக் காட்டுகிறது.

 ஒருவருக்கொருவர் துணையாக இருப்பது என்பது அவர்களின் வளர்ச்சியைத் தடுப்பதாக மாறிவிடக்கூடாது என்பதை இப்படம் ஆழமாகப் பதிவு செய்கிறது.

தொடர்பு அல்லது தகவல் பரிமாற்றம் என்பது வெறும் சத்தங்களால் ஆனது மட்டுமல்ல என்பதை இப்படம் நிரூபிக்கிறது. 

ரூபியின் தந்தை அவளது குரல் நாண்களின் அதிர்வுகளைத் தொட்டுணர்ந்து அந்த இசையின் உணர்வைப் புரிந்து கொள்ளும் காட்சி மொழிகளைக் கடந்த ஒரு பேரன்பின் வெளிப்பாடாகும்.

 சைகை மொழி என்பது வெறும் கைகளின் அசைவு மட்டுமல்ல அது ஒரு பண்பாடு மற்றும் அடையாளம் என்பதை இப்படம் உரக்கச் சொல்கிறது.

 ஒரு குடும்பமாகத் தங்களுக்குள் இருக்கும் குறைகளைத் தாண்டி வெளியுலகின் சவால்களை எப்படிச் சந்திப்பது என்பதையும் சுயசார்பு அடைவதே ஒரு மனிதனின் உண்மையான வெற்றி என்பதையும் இப்படம் போதிக்கிறது. 

ரூபி தன் குடும்பத்தைப் பிரிந்து கல்லூரிக்குச் செல்லும்போது அவள் அடையும் சுதந்திரம் அவளது குடும்பத்தினர் ரூபி இல்லாமல் வாழப் பழகிக் கொள்ளும் அந்தப் புதிய தொடக்கம் ஆகியவையே இப்படத்தின் மையக்கருத்தாக அமைகின்றன.

கோடா திரைப்படம் ஆஸ்கார் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான சாதனையை நிகழ்த்தியது. சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்ற மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பரிந்துரைகளைக் கொண்ட படங்களில் இதுவும் ஒன்று. பொதுவாகப் பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட பிரிவுகளில் பரிந்துரைக்கப்படும் படங்களே இவ்விருதை வெல்லும் நிலையில் இப்படம் தான் பரிந்துரைக்கப்பட்ட மூன்று பிரிவுகளிலுமே வெற்றி பெற்று நூறு சதவீத சாதனை படைத்தது. 

1932 ஆம் ஆண்டு வெளியான கிராண்ட் ஹோட்டல் என்ற படத்திற்குப் பிறகு மிகக் குறைந்த பரிந்துரைகளுடன் ஆஸ்கார் வென்ற படம் இதுவே ஆகும்.

இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த விதம் மிகவும் தனித்துவமானது. மாசசூசெட்ஸ் மாநிலத்தின் குளோசெஸ்டர் பகுதியில் ஒரு உண்மையான மீனவரின் படகையே படப்பிடிப்புத் தளமாகப் பயன்படுத்தினார்கள்.

 இதற்காக இயக்குநர் சியான் ஹெடர் அந்தப் பகுதி மீனவப் பெண்களின் சங்கத்திடம் ஆலோசனைகளைப் பெற்று மீன்பிடித் தொழிலின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். 

படத்தில் காட்டப்படும் அந்தப் பழமையான வீடு மற்றும் இசை ஆசிரியரின் இல்லம் ஆகியவை கூட அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் நிஜமான வீடுகளாகும்.

நடிகர்களின் தேர்வில் ஒரு பெரிய போராட்டமே நடந்தது. முதலில் இப்படத்தைத் தயாரிக்க முன்வந்த நிறுவனங்கள் காது கேளாத கதாபாத்திரங்களுக்குப் பிரபலமான கேட்கும் திறன் கொண்ட நடிகர்களையே நடிக்க வைக்க விரும்பின.

 ஆனால் இப்படத்தில் நடித்த மார்லீ மேட்லின் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மாற்றுத்திறனாளி நடிகர்களையே அந்தப் பாத்திரங்களுக்குத் தேர்வு செய்ய வேண்டும் இல்லையெனில் தான் படத்திலிருந்து விலகிவிடுவேன் என்று அவர் உறுதியாகக் கூறினார்.

 அவரது விடாமுயற்சியாலேயே டிராய் கோட்சர் மற்றும் டேனியல் டுரண்ட் போன்ற திறமையான மாற்றுத்திறனாளி நடிகர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

இப்படத்தின் ஒலியமைப்பு  ஒரு மேதமையுடனான முயற்சியாகும். ஒரு காட்சியில் ரூபி பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென ஒலிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு அமைதி நிலவும். மாற்றுத்திறனாளி பெற்றோரின் பார்வையில் அந்த இசை நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்துவதற்காக இந்த உத்தி கையாளப்பட்டது. 

இது பார்வையாளர்களை உணர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.
ஒரு இசைப் படைப்பின் இறுதிப் பகுதியை  குறிக்கும் படதலைப்பு. படத்தில் ரூபி தனது குடும்பத்தின் ஒரு அங்கமாக இருந்து விலகித் தனது புதிய பயணத்தைத் தொடங்குவதையும் குறிக்கும் விதமாக இது ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு இதைப் மேடை நாடகமாகவும்  மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் கதை:-

மாசசூசெட்ஸ் மாநிலத்தின் குளோசெஸ்டர் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி ரூபி ரோஸி தன் குடும்பத்தில் கேட்கும் திறன் கொண்ட ஒரே நபர் . அவரது தந்தை பிராங்க் தாய் ஜாக்கி மற்றும் மூத்த சகோதரர் லியோ ஆகிய மூவருமே செவிப்புலன் மாற்றுத் திறனாளிகள் என்பதால் ரூபி அவர்களுக்கு வெளியுலகத் தொடர்பாளராகவும் மீன்பிடித் தொழிலில் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்குகிறார். 

ஒருநாள் பள்ளியில் தான் விரும்பும் மைல்ஸ் என்ற மாணவன் இசைக்குழுவில் சேருவதைக் கண்டு ரூபியும் அதில் இணைகிறார். 

அவரது இசை ஆசிரியர் பெர்னார்டோ வில்லாலோபோஸ் ரூபியின் திறமையைக் கண்டறிந்து அவருக்குப் பயிற்சி அளிப்பதோடு மைல்ஸுடன் இணைந்து ஒரு பாடலைப் பாடவும் பணிக்கிறார்.

இதே நேரத்தில் உள்ளூர் மீன்பிடி வாரியத்தின் புதிய கட்டுப்பாடுகளால் ரூபியின் குடும்பம் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கிறது.

 இதனால் ஆத்திரமடைந்த பிராங்க் மற்ற மீனவர்களையும் இணைத்துக்கொண்டு சொந்தமாக ஒரு மீன்பிடி நிறுவனத்தைத் தொடங்கி லாபத்தைப் பகிர்ந்து கொள்ளத் தீர்மானிக்கிறார்.

 இந்தத் தொழிலை விரிவுபடுத்தவும் பிறரிடம் பேசவும் அவர்கள் முழுமையாக ரூபியையே சார்ந்திருக்கிறார்கள்.

 மறுபுறம் ரூபியின் குரல் வளத்தால் கவரப்பட்ட இசை ஆசிரியர் அவரைப் புகழ்பெற்ற பெர்க்லி இசைக் கல்லூரியில் சேர ஊக்குவித்துத் தனியாகப் பயிற்சி அளிக்கிறார். 

ஆனால் குடும்பத் தொழிலுக்கு உதவ வேண்டிய கட்டாயத்தால் ரூபியால் இசைப் பயிற்சியில் சரியாகக் கவனம் செலுத்த முடிவதில்லை.

ரூபி ஒருமுறை மைல்ஸுடன் வெளியில் சென்றிருந்தபோது ஒரு பாதுகாப்பு அதிகாரி படகில் இருக்கும் நிலையில் பிராங்க் மற்றும் லியோ மட்டும் கடலுக்குச் செல்கிறார்கள். 

அப்போது கடலோரக் காவல் படையின் எச்சரிக்கைகளையும் ஒலிகளையும் அவர்களால் கேட்க முடியாததால் அவர்களது மீன்பிடி உரிமம் ரத்து செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

 எப்போதும் ஒரு கேட்கும் திறன் கொண்ட நபர் படகில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் உரிமம் திரும்பக் கிடைக்கிறது.

 இதனால் தனது கனவுகளைத் தியாகம் செய்துவிட்டுத் தொழிலில் ஈடுபட ரூபி முடிவெடுக்கிறார். 

ஆனால் அவரது அண்ணன் லியோ ரூபியின் திறமையை முடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து அவருடன் வாதிடுகிறார்.

இறுதியில் ரூபியின் இசை நிகழ்ச்சியைக் காணச் செல்லும் குடும்பத்தினர் அங்கிருக்கும் மக்களின் உற்சாகத்தைக் கண்டு ரூபியின் திறமையைப் புரிந்து கொள்கிறார்கள். 

அன்று இரவு பிராங்க் தனது மகளைப் பாடச் சொல்லி அவளது குரல் அதிர்வுகளைத் தொட்டுணர்ந்து நெகிழ்ச்சியடைகிறார்.

 பின்னர் ஒட்டுமொத்தக் குடும்பமும் ரூபியை பெர்க்லி கல்லூரி நேர்முகத் தேர்வுக்கு அழைத்துச் செல்கிறது. 

அங்கு பயத்துடன் பாடித் தொடங்கும் ரூபி பால்கனியில் இருக்கும் தனது குடும்பத்தைக் கண்டதும் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் சைகை மொழியிலேயே பாடலைப் பாடி அனைவரையும் கவர்கிறார்.

ரூபிக்குக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது. அதே சமயம் அவரது குடும்பத் தொழிலில் இருக்கும் மற்ற தொழிலாளர்களும் சைகை மொழியைக் கற்றுக்கொண்டதால் ரூபியின் உதவி இல்லாமல் குடும்பத்தினர் சமாளிக்கப் பழகுகிறார்கள். 

தனது தோழி கெர்ட்டியுடன் கல்லூரிக்குக் கிளம்பும் ரூபியை அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் வழியனுப்புகிறார்கள். 

தனது மகள் உயரங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையில் தந்தை பிராங்க் அவளைப் போகச் சொல்ல ரூபி சைகை மொழியில் தனது அன்பை வெளிப்படுத்திவிட்டுப் புதிய வாழ்க்கையை நோக்கிப் பயணிக்கையில் படம் நிறைகிறது.

கோடா திரைப்படம் மிக ஆழமான  நெகிழ்ச்சியான சில வாழ்வியல் செய்திகளை நமக்கு உணர்த்துகிறது. 
ஒரு குடும்பத்தில் உள்ள மற்றவர்களிடமிருந்து நாம் மாறுபட்டு இருக்கும்போது, நமக்கெனத் தனிப்பட்ட கனவுகள் இருப்பது இயல்பு. ரூபி தன் குடும்பத்திற்காகத் தனது இசை ஆர்வத்தைத் தியாகம் செய்யத் துணிகிறார். ஆனால், ஒரு கட்டத்தில் குடும்பத்தின் தேவைகளுக்காகத் தன் சுய அடையாளத்தையும் திறமையையும் அழித்துக் கொள்ளக் கூடாது என்பதை இப்படம் காட்டுகிறது. 

அன்பு என்பது ஒருவரைப் பிடித்து வைப்பதில் இல்லை, அவர்களை அவர்கள் விரும்பும் பாதையில் பறக்க விடுவதில்தான் உள்ளது என்பதை இது உணர்த்துகிறது.

பேசும் மொழி மட்டுமே ஒருவரை மற்றவருடன் இணைப்பதில்லை என்பதை இப்படம் அழகாகச் சொல்கிறது. ரூபியின் தந்தை அவர் பாடுவதைக் கேட்க முடியாவிட்டாலும், ரூபியின் தொண்டையில் ஏற்படும் அதிர்வுகளின் மூலம் அந்த இசையின் உணர்வை உணர்கிறார். 

மொழி என்பது வெறும் சொற்கள் அல்ல, அது இதயங்களுக்கு இடையிலான புரிதல் என்பதை இது காட்டுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் தனித்து இயங்க, சமூகம் அவர்களைப் புரிந்து கொள்ள முன்வர வேண்டும் என்ற கருத்தையும் இது முன்வைக்கிறது.

ரூபி இல்லாதபோது தங்களால் எதையும் செய்ய முடியாது என்று முதலில் நினைத்த குடும்பம், இறுதியில் சைகை மொழியை மற்றவர்களுக்குக் கற்பிப்பதன் மூலம் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளப் பழகுகிறார்கள். 

ஒருவரைச் சார்ந்து இருப்பது அன்பின் வெளிப்பாடாகத் தோன்றினாலும், ஒவ்வொருவரும் தங்களுக்குரிய பலத்தைக் கண்டறிந்து சுயமாக இயங்குவதே உண்மையான வளர்ச்சி என்பதை இப்படம் வலியுறுத்துகிறது.

செவிப்புலன் மாற்றுத்திறனாளிகளின் உலகம் அமைதியானது மட்டுமல்ல, அதுவும் உணர்ச்சிகளால் நிறைந்தது என்பதைப் பொதுமக்களுக்கு இப்படம் புரியவைத்தது. அவர்கள் சந்திக்கும் அன்றாடச் சவால்கள், கேலிகள் மற்றும் தடைகளைத் தாண்டி அவர்களாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இது விதைக்கிறது.