Black Panther Wakanda Forever பிளாக் பான்தர் வாண்டா ஃபாரெவர் 2023


"பிளாக் பான்தர் வாண்டா ஃபாரெவர்" திரைப்படம் வெகுஜன உலக சினிமாவில் ஒரு முக்கியமான படைப்பாகவும் மார்வெல் சினிமா யுனிவர்ஸ் வெளியீடுகளில்   உணர்ச்சிகரமான மைல்கல்லாகவும் திகழ்கிறது. 

2022 ஆம் ஆண்டு வெளியான இப்படம் 2018 இல் வெளிவந்த பிளாக் பான்தர் படத்தின் தொடர்ச்சியாகும். நடிகர் சாட்விக் போஸ்மேன் மறைவுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இப்படைப்பு அவரது கதாபாத்திரமான டி சல்லாவின் இறப்பை கதையின் மையக்கருவாகக் கொண்டு  உன்னதமான அஞ்சலியாக உருவானது.

ரியான் கூக்லர் இப்படத்தை இயக்கியுள்ளார். அவர் ஜோ ராபர்ட் கோல் என்பவருடன் இணைந்து திரைக்கதையை எழுதியுள்ளார். மிக நேர்த்தியான உலகத் தரத்திலான தொழில்நுட்பங்களுடன் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

 ஆட்டம் டூரால்ட் அர்காபா ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். குறிப்பாக தண்ணீருக்கு அடியில் நடக்கும் காட்சிகள் மற்றும் வகாண்டா நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை மிக நுட்பமாகத் திரையில் கொண்டு வந்துள்ளனர்.

 அட்லாண்டா மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ போன்ற இடங்களில் இதன் படப்பிடிப்பு மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விமர்சன ரீதியாக இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒரு சூப்பர் ஹீரோ கதையை வெறும் சண்டைக்காட்சிகளாக மட்டும் பார்க்காமல் இழப்பு மற்றும் அதன் பின்னான துயரத்தை ஒரு காவியமாக இப்படம் கையாண்டது. 

 வகாண்டா மற்றும் தாலோகன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் அதிகாரத்திற்காக இல்லாமல் தற்காப்பிற்காக அமைந்தது திரைக்கதையின் பலம். 

மேதமை பொருந்திய திரைக்கதை அமைப்பால் இது மார்வெல் வரிசையில் ஒரு முதிர்ச்சியான படைப்பாக விமர்சகர்களால் போற்றப்பட்டது.

லெட்டிடியா ரைட் சூரி கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். சகோதரனின் இழப்பால் துடிக்கும் ஒரு இளவரசியாகவும் பிறகு பொறுப்புள்ள வீரராகவும் அவர் காட்டிய பரிணாமம் அபாரமானது. 

இவருடன் இணைந்து லூபிடா நியாங்கோ மற்றும் டானாய் குரிரா ஆகியோர் தங்களின் முந்தைய கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்தனர். 

ராணி ராமோண்டாவாக நடித்த ஏஞ்சலா பாசெட் வெளிப்படுத்திய ஆளுமை மற்றும் உணர்ச்சிகரமான நடிப்பு உலகத்தரம் வாய்ந்தது.

 வில்லன் கதாபாத்திரமான நமோராக நடித்த டெனோக் ஹுர்டா மேஜியா தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.

லுட்விக் கோரன்சன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆப்பிரிக்க இசையையும் மாயன் பண்பாட்டு இசையையும் கலந்து அவர் உருவாக்கிய பின்னணி இசை படத்திற்கு ஒரு தனித்துவமான ஆன்மாவை வழங்கியது. 

ரிஹானா பாடிய லிப்ட் மீ அப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் ஐந்து ஆஸ்கார் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. 
இதில் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான ஆஸ்கார் விருதை வென்றது. 

ஏஞ்சலா பாசெட் தனது சிறந்த நடிப்பிற்காக கோல்டன் குளோப் விருதை வென்று மார்வெல் படங்களுக்கான புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.

இப்படம் அக்டோபர் 2022 இல் ஹாலிவுட்டில் திரையிடப்பட்டு நவம்பர் 11 அன்று உலகம் முழுவதும் வெளியானது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம் 859 மில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூலித்து அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. 

வகாண்டா என்ற கற்பனை தேசத்தின் பெருமையை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை நிலைநாட்டியது. இதன் அடுத்த பாகம் 2028 ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிளாக் பான்தர் வாண்டா ஃபாரெவர் திரைப்படத்தின் அடிநாதம்  இழப்பைக் கையாளுதல் மற்றும் அந்தத் துயரத்திலிருந்து மீண்டெழுந்து புதிய அடையாளத்தைப் பெறுவதாகும். 

நடிகர் சாட்விக் போஸ்மேனின் மறைவு நிஜ வாழ்விலும் திரைக்கதையுள்ளும் ஏற்படுத்திய வெற்றிடத்தை இப்படம் மிகவும் கண்ணியமான முறையில் கையாண்டது. 

ஒரு தேசத்தின் பாதுகாவலனாக இருந்த அரசனை இழந்த பிறகு அந்தத் தேசமும் அவனது குடும்பமும் எதிர்கொள்ளும் மனப்போராட்டங்களே கதையின் உயிரோட்டமாகத் திகழ்கின்றன.

பழிவாங்கும் உணர்ச்சிக்கும் நீதியை நிலைநாட்டும் பொறுப்புக்கும் இடையிலான மெல்லிய கோட்டை இப்படம் ஆராய்கிறது. 

சூரி கதாபாத்திரம் தனது சகோதரனின் இழப்பால் அடையும் ஆத்திரம் இறுதியில் முதிர்ச்சியான தலைமைத்துவமாக மாறுவது இப்படத்தின் மிக முக்கியமான வளர்ச்சி நிலையைச் சுட்டிக்காட்டுகிறது.

 வகாண்டா மற்றும் தாலோகன் ஆகிய இரு முன்னேறிய நாகரிகங்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வதன் மூலம் உலக அரசியலில் மறைந்திருக்கும் காலனியாதிக்க அச்சுறுத்தல்களைத் திரைக்கதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

தாய்மை மற்றும் தியாகத்தின் வலிமையை ராணி ராமோண்டா கதாபாத்திரம் வழி இப்படம் பதிவு செய்தது. ஒருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சி மறுபுறம் தொன்மையான கலாச்சாரம் என இரண்டிற்கும் இடையிலான சமநிலையை இப்படம் அதன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது. 

இறுதியில் வகாண்டா ஃபாரெவர் என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல அது ஒரு பண்பாட்டின் தொடர்ச்சி மற்றும் காலத்தால் அழியாத நினைவுகளின் அடையாளம் என்பதை இப்படம் ஆழமாக உணர்த்தியது. 

அதன் மூலம் இது சாதாரணமான ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படமாக எஞ்சாமல் மனித உணர்வுகளின் காவியமாக மாறியது.

இப்படத்தின் ஆரம்பக்கட்ட திரைக்கதை டி சல்லா மற்றும் அவரது மகன் டூசான் ஆகியோருக்கு இடையிலான உறவை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.

 சாட்விக் போஸ்மேன் மறைவுக்குப் பின் கதை முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது. முதலில் சூரி மற்றும் டி சல்லா இருவரும் இணைந்து பிளாக் பான்தராகச் செயல்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

தாலோகன் ராஜ்ஜியத்தின் அரசன் நமோர் கதாபாத்திரத்திற்காக நடிகர் டெனோக் ஹுர்டா மேஜியா மாயன் மொழியைக் கற்றுக்கொண்டார். 

அதுவரை அவருக்கு நீச்சல் தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 நமோரின் ஆடை வடிவமைப்பு 1973 ஆம் ஆண்டு வெளியான காமிக்ஸ் சித்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
வகாண்டா மற்றும் தாலோகன் மக்களுக்கிடையிலான கலாச்சார ஒற்றுமைகளை விளக்க மார்வெல் ஸ்டுடியோஸ் இருநூறு பக்கங்கள் கொண்ட ஒரு தனித்துவமான கையேட்டை உருவாக்கியது. 

இதில் அவர்களின் வரலாறு போர்க்கலை மற்றும் கட்டடக்கலை குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றிருந்தன. 

படத்தின் இறுதியில் வரும் ஆடை எரியும் காட்சி எந்தவித கணினி தொழில்நுட்பமும் இன்றி தத்ரூபமாகப் படம்பிடிக்கப்பட்டது.

இப்படத்தில் நடித்த நடிகை டோரதி ஸ்டீல் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே காலமானார். இது அவர் நடித்த கடைசித் திரைப்படமாகும். 

இப்படத்தின் நீளம் முதலில் நான்கு மணி நேரமாக இருந்தது. வகாண்டா மற்றும் தாலோகன் நாகரிகங்களுக்கு இடையிலான பகையை மையப்படுத்த இப்படத்திற்கு கிங்டம் ஆஃப் தி டீப் என்ற தலைப்பு முதலில் பரிசீலிக்கப்பட்டது. 

அயர்ன் ஹார்ட் கதாபாத்திரம் இப்படத்தின் வழியாகவே மார்வெல் திரையுலகிற்கு அறிமுகமானது.

ஒளிப்பதிவாளர் ஆட்டம் டூரால்ட் அர்காபா இப்படத்திற்காக அனமார்பிக் லென்ஸ்களைப் பயன்படுத்தினார். இழப்பின் துயரால் உலகம் மங்கலாகத் தெரிவதைக் காட்சிப்படுத்த இம்முறை கையாளப்பட்டது.

 மார்வெல் படங்களில் வழக்கமாக இடம்பெறும் போஸ்ட் கிரெடிட் காட்சி இப்படத்தில் தவிர்க்கப்பட்டது. படத்தின் உணர்ச்சிகரமான இறுதிக்காட்சிக்குப் பின் வரும் கூடுதல் காட்சிகள் அதன் ஆன்மாவைச் சிதைத்துவிடும் என்பதால் இ முடிவு எடுக்கப்பட்டது.

நமோரின் தாலோகன் நாகரிகம் அட்லாண்டிஸ் என்று அழைக்கப்படுவதைத் தவிர்க்கவே இப்புதிய பெயர் சூட்டப்பட்டது. 

இது மெசோஅமெரிக்க பண்பாட்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. இப்படத்தின் இசையமைப்பாளர் லுட்விக் கோரன்சன் லாகோஸ் மற்றும் மெக்சிகோ நகரங்களுக்கு நேரில் சென்று அங்கிருந்த பாரம்பரிய இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடல்களை உருவாக்கினார்.

 பாபா மால் மற்றும் ரியானா ஆகியோரின் குரல்கள் இப்படத்தின் பின்னணிக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தன.

படப்பிடிப்பின் போது லெட்டிடியா ரைட் காயமடைந்ததால் சில காலம் வேலைகள் நிறுத்தப்பட்டன. அவர் குணமடைந்து திரும்பும் வரை மற்ற நடிகர்களைக் கொண்டு காட்சிகள் படமாக்கப்பட்டன.

 இப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் ரூத் இ கார்ட்டர் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உடைகளை உருவாக்கினார். 

இதில் ராணி ராமோண்டாவின் கிரீடம் முப்பரிமாண அச்சு தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்டது. வகாண்டா மற்றும் தாலோகன் வீரர்கள் பயன்படுத்தும் சைகைகள் பண்டைய ஆஸ்டெக் மற்றும் மாயன் வரலாற்று ஆவணங்களிலிருந்து பெறப்பட்டவை.

வில்லன் கதாபாத்திரமான நமோர் என்பதற்கு ஸ்பானிஷ் மொழியில் அன்பில்லாத சிறுவன் என்ற புதிய விளக்கம் இப்படத்தில் சேர்க்கப்பட்டது. 

பிளாக் பான்தர் கவச உடைக்குள்ளே சூரியின் இறுதிச் சடங்கு உடைகள் எரியும் காட்சி நிஜமான நெருப்பைக் கொண்டு மிக நுட்பமாகப் படம்பிடிக்கப்பட்டது.

 இப்படத்தில் வரும் சிஐஏ இயக்குநர் கதாபாத்திரம் எவரெட் ராஸின் முன்னாள் மனைவி என்பது கதையில் ஒரு புதிய திருப்பமாக அமைந்தது.

இப்படத்தின் திரைக்கதை மொத்தம் ஐந்து முறை மாற்றி எழுதப்பட்டது. நடிகர் டேனியல் கலுயா தனது முந்தைய டபிள்யூ காபி கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கவிருந்தார். 

எனினும் நோப் திரைப்படத்தின் படப்பிடிப்பு தேதிகளுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் அவர் இதில் பங்கேற்கவில்லை.
 அவருக்குப் பதிலாக அவரது கதாபாத்திரம் வகாண்டாவிலிருந்து நாடு கடத்தப்பட்டதாகக் கதையில் மாற்றப்பட்டது.

தாலோகன் வீரர்களுக்கான ஆடை வடிவமைப்பில் கடல்வாழ் உயிரினங்களின் தாக்கம் அதிகம் இருந்தது. நமோராவின் தலைக்கவசம் லயன் பிஷ் எனப்படும் சிங்க மீனின் துடுப்புகளைப் போன்றும் அட்டுமாவின் தலைக்கவசம் சுத்தியல் தலைச் சுறாவின் மண்டை ஓட்டைப் போன்றும் உருவாக்கப்பட்டன.

 தண்ணீருக்கு அடியில் எட்டு மணி நேரம் வரை பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த உடைகள் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டன. 

சிஎன்என் செய்தி வாசிப்பாளர் ஆண்டர்சன் கூப்பர் இப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தின் நீளத்தைக் குறைக்க தாலோகன் நாகரிகம் தொடர்பான பல காட்சிகள் மற்றும் சூரி-அயர்ன் ஹார்ட் இடையிலான நட்பு சார்ந்த காட்சிகள் நீக்கப்பட்டன. 

நமோரின் கணுக்கால் சிறகுகளின் அசைவிற்காக ராட்டில் ஸ்நேக் எனப்படும் சிலுசிலுப்பை பாம்புகளின் சத்தம் பயன்படுத்தப்பட்டது.

 இப்படம் நைஜீரியாவின் லாகோஸ் நகரிலும் திரையிடப்பட்டது. இது ஒரு மார்வெல் திரைப்படம் ஆப்பிரிக்காவில் பெற்ற முதல் உள்ளூர் பிரீமியர் காட்சியாகும்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான எம்ஐடி வளாகத்தில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

 நமோர் மற்றும் சூரிக்கு இடையே காதல் மலர்வது போன்ற உரையாடல்கள் முதலில் திட்டமிடப்பட்டு பின்னர் கைவிடப்பட்டன.

 இப்படத்தில் வரும் பிரெஞ்சு ராணுவ வீரர்கள் குறித்த சித்தரிப்பு பிரான்ஸ் நாட்டு அமைச்சகத்தின் கண்டனத்திற்கு உள்ளானது.

 வகாண்டா இளவரசர் டூசான் கதாபாத்திரத்திற்காக மூன்று குழந்தைகள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வகாண்டாவின் எல்லைப் பழங்குடி மூத்தவராகத் தோன்றிய டேனி சபானி மற்றும் சுரங்கப் பழங்குடி மூத்தவராகத் தோன்றிய கோனி சியம் ஆகியோர் முந்தைய பாகத்திலிருந்து தங்கள் பாத்திரங்களைத் தொடர்ந்தனர். 

இப்படத்தின் இசையமைப்பை விளக்கும் வகையில் வாய்ஸஸ் ரைசிங்: தி மியூசிக் ஆஃப் வகாண்டா ஃபாரெவர் என்ற ஆவணத் தொடர் டிஸ்னி பிளஸ் தளத்தில் வெளியானது. 

இதில் லண்டனின் புகழ்பெற்ற அபே ரோட் ஸ்டுடியோவில் இசைக்கோர்ப்பு நடைபெற்ற காட்சிகள் இடம்பெற்றன.
தாலோகன் மக்களின் வாழ்த்து சைகை கோடெக்ஸ் ஜூச்-நட்டால் எனும் வரலாற்று ஆவணத்தில் உள்ள சித்திரங்களின் தூண்டுதலால் உருவானது.

 இதனை நடிகர் டெனோக் ஹுர்டா மேஜியாவே பரிந்துரைத்தார். இப்படத்தின் முன்னோட்டக் காட்சியில் பாப் மார்லியின் நோ வுமன் நோ க்ரை பாடல் பயன்படுத்தப்பட்டது.

 இப்பாடல் கென்ட்ரிக் லாமரின் ஆல்ரைட் பாடலுடன் இணைக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.
மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை ஒட்டி பத்து வகையான பொம்மைகளுடன் கூடிய ஹேப்பி மீல் உணவுகளை விற்பனை செய்தது. 

கிராஃப்ட் ஃபுட்ஸ் நிறுவனம் வகாண்டா வடிவங்களைக் கொண்ட மேக் அண்ட் சீஸ் உணவை அறிமுகப்படுத்தியது.

 லெக்ஸஸ் நிறுவனம் தனது ஆர்இசட் 450இ காரை விளம்பரப்படுத்த ஓகோயே கதாபாத்திரத்தைப் பயன்படுத்தியது. 

 அடிடாஸ் நிறுவனம் வகாண்டா கலெக்ஷன் என்ற பெயரில் பிரத்யேக உடைகளை வெளியிட்டது.

வகாண்டா ஃபாரெவர்: தி அபிஷியல் பிளாக் பான்தர் பாட்காஸ்ட் என்ற பெயரில் தா-நெஹிசி கோட்ஸ் ஒரு ஒலிபரப்புத் தொடரை நடத்தினார். 

இப்படத்தின் டிஜிட்டல் வெளியீட்டில் நீக்கப்பட்ட காட்சிகள் மற்றும் படப்பிடிப்புத் தளத்தின் நகைச்சுவைத் துணுக்குகள் இணைக்கப்பட்டிருந்தன. 

இது டிஸ்னி பிளஸ் தளத்தில் வெளியான முதல் ஐந்து நாட்களில் அதிக நேரம் பார்க்கப்பட்ட மார்வெல் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.

 இப்படத்தின் ஸ்பின்-ஆஃப் தொடராக அயர்ன் ஹார்ட் 2025 இல் வெளியானது.

இப்படத்தின் படப்பிடிப்பு சம்மர் பிரேக் என்ற ரகசியப் பெயரில் நடைபெற்றது. முந்தைய பாகத்தில் ஒளிப்பதிவு செய்த ரேச்சல் மோரிசன் கோவிட் சூழலால் ஏற்பட்ட தேதிகள் குளறுபடி காரணமாக இப்படத்தில் பணியாற்ற முடியாமல் போனது. 

அவருக்கு மாற்றாகவே லோகி தொடரின் ஒளிப்பதிவாளர் இப்பணியை ஏற்றார். இப்படத்தில் டி சல்லாவின் இறுதி ஊர்வலக் காட்சியில் அவரது உடலைச் சுமந்து செல்லும் போது பயன்படுத்தப்பட்ட இசை நைஜீரியாவின் பாரம்பரிய இசை முறைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

வகாண்டாவின் நதிப் பழங்குடி மற்றும் வணிகப் பழங்குடி மூத்தவர்கள் கதாபாத்திரங்கள் முதல் பாகத்திலிருந்து அப்படியே தொடரப்பட்டன. 

இப்படத்தின் ஒலி வடிவமைப்பாளர்கள் நமோரின் சிறகுகள் அசைவதற்கும் அவர் தண்ணீருக்குள் வேகமாகச் செல்வதற்கும் பிரத்யேகமான இயற்கை ஒலிகளைப் பயன்படுத்தினர். 

வகாண்டா மக்கள் பயன்படுத்தும் கிரிட் எனும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு பிரபல நகைச்சுவை நடிகர் ட்ரெவர் நோவா குரல் கொடுத்தார்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் புதிய தேர்தல் சட்டங்கள் இயற்றப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்கு இப்படத்தின் படப்பிடிப்பை நடத்துவதா வேண்டாமா என்ற விவாதம் எழுந்தது. 

இருப்பினும் உள்ளூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அங்கேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

 இப்படத்திற்காக ஜேட் எனப்படும் பச்சை நிற கற்களைப் பயன்படுத்தி தாலோகன் நகரின் ஆபரணங்கள் வடிவமைக்கப்பட்டன.

டபுள்யூ டபுள்யூ ஈ மல்யுத்த வீரர் டேமியன் பிரீஸ்ட் இப்படத்தில் நமோர் அல்லது அட்டுமா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அழைக்கப்பட்டார். 

வகாண்டா மக்களின் தொழில்நுட்பக் கருவிகளான கிமோயோ மணிகள் இப்படத்தில் மேலும் மேம்படுத்தப்பட்ட வடிவில் காட்டப்பட்டன. இப்படத்தின் விளம்பரத்திற்காக டார்கெட்  நிறுவனம் ஒரு நிமிடம் ஓடக்கூடிய ஒரு குறுகிய விளம்பரப் படத்தை வெளியிட்டது. 

அதில் ரீரி வில்லியம்ஸ் தனது அயர்ன் ஹார்ட் கவசத்தை உருவாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றன.

படத்தின் கதை:-

வகாண்டா நாட்டின் அரசன் டி சல்லா ஒரு தீராத நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார். அவரது தங்கை சூரி (லெட்டிடியா ரைட்) எரிக் கில்மோங்கரால் (மைக்கேல் பி ஜோர்டான்) முன்பு எரிக்கப்பட்ட இதய வடிவ மூலிகையைச் செயற்கையாக மீண்டும் உருவாக்க முயற்சித்தும், அண்ணன் இறப்பதற்குள் அண்ணனின் நோய்க்கு மருந்து தயாரிப்பதில் வெற்றி பெற முடியாமல் போகிறார். 

டி சல்லாவின் மரணத்திற்குப் பிறகு ஒரு வருடம் கழித்து வகாண்டா நாடு தனது வைப்ரேனியம் உலோகத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிற நாடுகளின் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகிறது.

 வைப்ரேனியத்தைத் திருட முயலும் வெளிநாடுகளின் சூழ்ச்சிகளை அரசி ராமோண்டா (ஆஞ்சலா பாசெட்) முறியடிக்கிறார்.

 இதற்கிடையில் அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்க ஆய்வுக் குழு ஒன்று வைப்ரேனியம் கண்டறியும் கருவியைப் பயன்படுத்தி கடலுக்கடியில் ஒரு வைப்ரேனியம் படிமத்தைக் கண்டறிகிறது. 

ஆனால் நீல நிறத் தோலும் தண்ணீருக்கு அடியில் சுவாசிக்கும் திறனும் கொண்ட தலோக்கன் மக்கள் அவர்களைத் தாக்கி அழிக்கின்றனர்.

தலோக்கன் மக்களின் தலைவனான நமோர் (டெனோச் ஹுயர்டா மெஜியா) வகாண்டாவின் பாதுகாப்பை மீறி ராமோண்டா மற்றும் சூரிக்கு முன்னால் தோன்றுகிறார். 

வகாண்டா நாடு உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதால்தான் வைப்ரேனியத்திற்கான வேட்டை தொடங்கியதாக நமோர் குற்றம் சாட்டுகிறார்.

 வைப்ரேனியம் கண்டறியும் கருவியை உருவாக்கிய விஞ்ஞானியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லையெனில் வகாண்டா மீது போர் தொடுக்கப்படும் என்றும் நமோர் எச்சரிக்கிறார். 

சிஐஏ முகவர் எவரெட் கே ரோஸ் (மார்ட்டின் ஃப்ரீமேன்) உதவியுடன் சூரி மற்றும் ஒகோயே (டானாய் குரிரா) அந்த விஞ்ஞானி ரிதி வில்லியம்ஸ் (டொமினிக் தோர்ன்) என்ற எம்ஐடி மாணவி என்பதைத் தெரிந்து கொள்கின்றனர். 

அவர்கள் ரிதியை மீட்க முயலும்போது எஃப்பிஐ மற்றும் தலோக்கன் வீரர்களால் துரத்தப்படுகின்றனர். 

போரில் ஒகோயே தோல்வியடைய சூரி மற்றும் ரிதி ஆகியோரை நமோர் கடத்திச் செல்கிறார்.

தனது மகளைப் பாதுகாக்கத் தவறியதால் ஒகோயேயின் தளபதி பதவியை ராமோண்டா பறிக்கிறார்.

 சூரியைத் தேட ஹைட்டியில் வசிக்கும் நக்கியாவின் (லுபிடா நியாங்கோ) உதவியை அவர் நாடுகிறார்.

 கடலுக்கடியில் உள்ள தலோக்கன் பேரரசைச் சூரிக்குச் சுற்றிக் காட்டும் நமோர் தனது மக்களின் வரலாற்றையும் அவர்கள் ஏன் உலக நாடுகளை வெறுக்கிறார்கள் என்பதையும் விளக்குகிறார்.

 நக்கியா சூரியையும் ரிதியையும் மீட்கும் முயற்சியில் தலோக்கன் வீரர்கள் இருவர் கொல்லப்படுகின்றனர்.

 இதனால் ஆத்திரமடைந்த நமோர் வகாண்டா மீது தாக்குதல் நடத்துகிறார். இந்தத் தாக்குதலில் ரிதியைக் காப்பாற்ற முயன்று ராமோண்டா நீரில் மூழ்கி இறக்கிறார். 

வகாண்டா மக்கள் பாதுகாப்பிற்காக ஜபாரி மலைகளுக்கு இடம்பெயர்கின்றனர்.

 இதற்கிடையில் வகாண்டாவிற்குத் தகவல்களைப் பகிர்ந்ததற்காக சிஐஏ இயக்குனர் வாலண்டினா அலெக்ரா டி ஃபோன்டைன் (ஜூலியா லூயிஸ்-டிரேஃபஸ்) ரோஸைக் கைது செய்கிறார்.

தாயின் மரணத்திற்குப் பிறகு சூரி நமோரின் மக்களுக்குச் சூப்பர் மேன் சக்தியைத் தந்த மூலிகையின் எச்சத்தைக் கொண்டு இதய வடிவ மூலிகையை மீண்டும் உருவாக்குகிறார். 

அதை உட்கொண்ட பிறகு சூரிக்கு அதீத ஆற்றல் கிடைக்கிறது. மூதாதையர் உலகில் அவர் கில்மோங்கரைச் சந்திக்கிறார். 

கில்மோங்கர் அவரைப் பழிவாங்கத் தூண்டுகிறார். சூரி புதிய பிளாக் பாந்தர் உடையில் தோன்றி வகாண்டாவின் பிற பழங்குடியினரால் பிளாக் பாந்தராக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்.

 எம்பாகு (வின்ஸ்டன் டியூக்) அமைதியை வலியுறுத்தினாலும் சூரி நமோரைப் பழிவாங்க முடிவு செய்கிறார். 

வகாண்டா படைகள் நமோரை எதிர்கொள்ளக் கடலுக்குச் செல்கின்றன. அங்கே அயோ (புளோரன்ஸ் கசும்பா) மற்றும் அனேகா (மிக்கேலா கோயல்) ஆகியோர் மிட்நைட் ஏஞ்சல் கவசங்களை அணிந்து போரிடுகின்றனர். 

ரிதி வில்லியம்ஸ் தனது நவீன கவச உடையில் உதவி செய்கிறார்.

சூரி நமோரை ஒரு பாலைவன கடற்கரைக்கு இழுத்துச் சென்று அவரது சக்தியைக் குறைத்துத் தோற்கடிக்கிறார்.

 ஆனால் தனது தாயின் நினைவால் நமோரைக் கொல்லாமல் அவரைச் சரணடையச் செய்கிறார்.

 நமோர் தன் மக்களின் பாதுகாப்பிற்காக வகாண்டாவுடன் அமைதி உடன்படிக்கை செய்து கொள்கிறார். 

தலோக்கன் வீரர்களான நமோரா (மாபெல் காடெனா) மற்றும் அட்டுமா (அலெக்ஸ் லிவினாலி) போன்றோரின் சூழலில் நமோர் இந்த முடிவை எடுக்கிறார். 

இறுதியில் ரிதி தனது ஊருக்குத் திரும்புகிறார். சூரி பிளாக் பாந்தர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டு மீண்டும் வகாண்டாவில் மூலிகைகளைப் பயிரிடுகிறார். 

ஹைட்டியில் நக்கியாவைச் சந்திக்கும் சூரி தனது அண்ணனுக்காகத் துக்கம் அனுசரிக்கிறார். 

அங்கே டி சல்லா மற்றும் நக்கியாவிற்குப் பிறந்த மகன் டூசான்ட் இருப்பதையும் அவனது வகாண்டா பெயர் டி சல்லா என்பதையும் சூரி அறிகிறார். 

இதன் மூலம் வகாண்டாவின் வம்சம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதை உறுதி செய்கையில் கதை நிறைவடைகிறது.

இந்தப் படம் சொல்லும் செய்தி மிகவும் ஆழமானது. இது வெறும் சூப்பர் ஹீரோ அதிரடித் திரைப்படம் மட்டுமல்ல, ஒரு தனிமனிதனும் ஒரு நாடும் பெரும் இழப்பிலிருந்து எப்படி மீண்டு எழுகிறார்கள் என்பதைப் பேசுகிறது.

துக்கம் என்பது ஒரு பலவீனம் அல்ல, அது மனித இயல்பு என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது. 

டி சல்லாவின் மரணத்திற்குப் பிறகு சூரி மற்றும் ராமோண்டா இருவரும் வெவ்வேறு வழிகளில் துக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். சூரி தனது தொழில்நுட்பத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு அழ மறுக்கிறார். 

ஆனால் துக்கத்தை முழுமையாக எதிர்கொண்டு அதை அங்கீகரிக்கும் போதுதான் ஒருவரால் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் என்பதை இறுதிச் சடங்குகள் மற்றும் சூரியின் கண்ணீர் மூலம் படம் காட்டுகிறது.

பழிவாங்குதல் என்பது ஒரு சுழற்சி போன்றது. நமோர்  மற்றும் சூரி  இருவருமே தங்கள் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிக்காகப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். 

ஆனால் பழிவாங்குதல் அழிவையே தரும், அது காயங்களை ஆற்றாது என்பதைச் சூரி உணர்கிறார்.

 தனது தாயைக் கொன்ற நமோரைக் கொல்ல வாய்ப்பு கிடைத்தும், தனது வம்சத்தின் பெருந்தன்மையைக் காட்டி அவரை மன்னிப்பதன் மூலம் சூரி ஒரு உண்மையான தலைவராக மாறுகிறார்.

டி சல்லா ஒரு சிறந்த அரசனாக இருந்தார், ஆனால் அவரது மறைவுக்குப் பின் வகாண்டா என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. 

ஒரு தலைவன் மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற கொள்கைகளும், அவர் விதைத்த நம்பிக்கையும் அழிவதில்லை என்பதைப் புதிய பிளாக் பாந்தரின் எழுச்சி காட்டுகிறது. 

இறுதிக் காட்சியில் அறிமுகமாகும் டி சல்லாவின் மகன், வாழ்க்கை ஒரு வட்டத்தில் சுழல்கிறது என்பதையும், நம்பிக்கை என்றும் முடிவடையாது என்பதையும் பறைசாற்றுகிறது.

வகாண்டா மற்றும் தலோக்கன் ஆகிய இரண்டு நாடுகளுமே அந்நிய நாடுகளின் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டவை. 

தற்காப்பு என்ற பெயரில் நமோர் உலகையே அழிக்கத் துணிகிறார். ஆனால் வகாண்டா அமைதி மற்றும் தூதரக வழியைத் தேர்ந்தெடுக்கிறது. 

அதிகாரம் என்பது மற்றவர்களை அடக்கி ஆள்வதில் இல்லை, மற்றவர்களுடன் இணைந்து வாழ்வதில்தான் இருக்கிறது எனும் உலகளாவிய அரசியல் நீதியையும் இந்தப் படம் முன்வைக்கிறது.