ஸூடோப்பியா Zootopia 2016

Zootopia  ஸூட்டோபியா  திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தை பைரன் ஹோவர்ட் மற்றும் ரிச் மூர் இணைந்து இயக்கியுள்ளனர்.

இது அனிமேஷன் பாணியிலான காவல்துறை விசாரணை மற்றும் நகைச்சுவை கலந்த அதிரடித் திரைப்படமாகும். 

மனிதர்களைப் போல வாழும் விலங்குகளின் உலகத்தைக் பின்னணியாகக் கொண்டு இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

 கிராமப்புறத்தில் இருந்து வந்து அந்த நகரத்தின் முதல் முயல் காவல் அதிகாரியாகப் பொறுப்பேற்கும் ஜூடி ஹாப்ஸ் மற்றும் அவளுக்கு அறிமுகமாகும் நரி ஏமாற்றுக்காரன் நிக் வைல்ட் ஆகிய இருவரும் இணைந்து, அங்குள்ள வேட்டை விலங்குகள் திடீரென மர்மமான முறையில் காணாமல் போகும் பின்னணியில் இருக்கும் ஒரு பெரிய சதியைக் கண்டுபிடிப்பதே இத்திரைப்படத்தின் மையக்கதை .

இத்திரைப்படத்தின்  அடிநாதம் , மனித சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் தப்பெண்ணங்கள், ஒரே மாதிரியான பொதுப்படை எண்ணங்கள் மற்றும் பாகுபாடுகளைக் கலைவதாகும்.

 வேட்டை விலங்குகள், சாதுவான விலங்குகள் என இரு வேறு துருவங்களாக இருக்கும் விலங்குகள் ஒரு நவீன நகரத்தில் ஒன்றாக வாழும்போது, அவர்களுக்குள் இருக்கும் அச்சமும் நம்பிக்கையின்மையும் எவ்வாறு ஒரு சதியாக மாறுகிறது என்பதை இப்படம் மிக நுணுக்கமாகப் பேசுகிறது.

 தோற்றத்தை வைத்தோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தின் கடந்த கால வரலாற்றை வைத்தோ ஒருவரைத் தவறானவராகவோ அல்லது திறமையற்றவராகவோ எடைபோடக் கூடாது என்பதை இக்கதை மிக அழகாக உணர்த்துகிறது.

முயல் என்பதால் ஒருவரால் காவல் துறை அதிகாரியாக சாதிக்க முடியாது என்ற பொதுப்படை எண்ணத்தை உடைக்கப் போராடும் நாயகியும், நரி என்பதால் எப்போதும் தந்திரக்காரனாகவே பார்க்கப்பட்டு சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட நாயகனும் தங்களின் சுய அடையாளத்தைக் கண்டறிவதே கதையின் முக்கிய நகர்வாக உள்ளது. 

அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களின் சுயநலத்திற்காகச் சமுதாயத்தில் உள்ள சிறுபான்மையினர் அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது எவ்வாறு பயத்தையும் வெறுப்பையும் விதைக்கிறார்கள் என்பதை அனிமேஷன் வடிவில் பெரியவர்களுக்கான அரசியல் மற்றும் சமூகப் பார்வைகளோடு இப்படம் வெளிப்படுத்துகிறது.

 பன்முகத்தன்மை கொண்ட ஒரு சமுதாயத்தில் ஒற்றுமையும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மையும், சகிப்புத்தன்மையுமே அமைதியான வாழ்விற்கு வழிவகுக்கும் என்பதே இத்திரைப்படத்தின் ஆழமான செய்தி.

இத்திரைப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களான ஜூடி ஹாப்ஸ் மற்றும் நிக் வைல்ட் ஆகியோருக்கு முறையே ஜின்னிபர் குட்வின் மற்றும் ஜேசன் பேட்மேன் ஆகியோர் குரல் கொடுத்து நடித்துள்ளனர். இவர்களுடன் இட்ரிஸ் எல்பா, ஜென்னி ஸ்லேட், ஜே கே சிம்மன்ஸ், அக்டேவியா ஸ்பென்சர் மற்றும் பிரபல பாடகி ஷகீரா உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் பிற முக்கிய விலங்கு கதாபாத்திரங்களுக்குத் தங்களின் குரல் மூலம் உயிர் கொடுத்துள்ளனர்.

இயக்குநர்கள் பைரன் ஹோவர்ட் மற்றும் ரிச் மூர் விலங்குகளின் இயல்புகளை ஆழமாக ஆராய்ந்து, அவை நவீன தொழில்நுட்ப உலகிற்குள் எவ்வாறு பொருந்தும் என்பதை மிக நுணுக்கமாகக் கையாண்டுள்ளனர். 

வெவ்வேறு அளவுகளைக் கொண்ட விலங்குகள் ஒரே நகரத்தில் வாழும் சூழலை மிக சுவாரசியமாக இயக்கியுள்ளனர்.

ஒளிப்பதிவை நாதன் வார்னர் அமைப்பைக் கவனிக்க, பிரையன் லீச் ஒளியமைப்பைக் கையாண்டுள்ளார்.

 விலங்குகளின் மென்மையான உரோமங்கள் மற்றும் அவற்றின் அசைவுகளைப் பல்வேறு வெளிச்சக் கோணங்களில் தத்ரூபமாகக் காட்டுவதில் இவர்களின் ஒளிப்பதிவுத் தொழில்நுட்பம் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.

இத்திரைப்படத்திற்கு மைக்கேல் ஜியாசினோ இசையமைத்துள்ளார். காட்சிகளின் வேகத்திற்கும் உணர்ச்சிக்கும் ஏற்ப இவரது பின்னணி இசை படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது. 

 ஷகீரா பாடிய ட்ரை எவ்ரிதிங் என்ற பாடல் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இத்திரைப்படம் அதன் சிறந்த திரைக்கதை மற்றும் அனிமேஷன் உருவாக்கத்திற்காகப் பல சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்றது. 

89ஆவது அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கர் விருதளிப்பு விழாவில் இத்திரைப்படம் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்றது. 

இது தவிர கோல்டன் குளோப் விருது, அன்னி விருது மற்றும் கிரிடிக்ஸ் சாய்ஸ் திரைப்பட விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகளையும் இத்திரைப்படம் வென்று சாதனை படைத்தது.

 தொடக்கத்தில் இந்தத் திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட ஒரு ஸ்பை த்ரில்லர் பாணியில் 1960களின் பின்னணியில் உருவாக்கத் திட்டமிடப்பட்டது.
 அதில் ஜாக் சாவேஜ் என்ற முயல் ரகசிய ஏஜென்ட் கதாபாத்திரமே முதன்மையாக இருந்தது. 

ஆனால் பின்னர் கதை விவாதங்களுக்குப் பிறகு, இது நவீன காலத்து நகரத்துப் பின்னணிக்கு மாற்றப்பட்டு நரி கதாபாத்திரமான நிக் வைல்டை மையமாகக் கொண்டு திரைக்கதை எழுதப்பட்டது. 

படம் வெளியாவதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான், நரியை விட முயல் கதாபாத்திரமான ஜூடி ஹாப்ஸின் பார்வையில் கதையைக் கூறினால் அது இன்னும் சுவாரசியமாகவும் எமோஷனலாகவும் இருக்கும் என்று இயக்குநர்கள் உணர்ந்து, கதையின் நாயகனை அப்படியே தலைகீழாக மாற்றியமைத்தனர்.

தொழில்நுட்ப ரீதியாக இந்தத் திரைப்படத்தில் விலங்குகளின் உரோமங்களை மிகத் தத்ரூபமாகக் காட்டுவதற்காக ஐக்ரூம் என்ற புதிய மென்பொருளை டிஸ்னி நிறுவனத்தின் பொறியாளர்கள் உருவாக்கினர். 

இதன் மூலம் உரோமங்களின் வடிவம், அடர்த்தி மற்றும் அவற்றின் அசைவுகளை மிக நுணுக்கமாகக் கட்டுப்படுத்த முடிந்தது. படத்தில் வரும் முதன்மைக் கதாபாத்திரங்களான ஜூடி மற்றும் நிக் ஆகிய இருவருக்கும் தலா இருபத்தைந்து லட்சம் உரோம இழைகள் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டன. 

மேலும் ஒரு ஒட்டகச்சிவிங்கிக்கு தொண்ணூறு லட்சம் உரோம இழைகளும், ஒரு சிறிய எலிக்கு டிஸ்னியின் புகழ்பெற்ற பிரோசன் திரைப்படத்தில் வரும் எல்சா கதாபாத்திரத்தின் தலையில் இருந்த கூந்தலை விட அதிகமான உரோம இழைகளும் கணினியில் வடிவமைக்கப்பட்டு அனிமேஷன் உலகில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தினர்.

இப்படத்தின் இயக்குநர்கள் மற்றும் அனிமேஷன் கலைஞர்கள் விலங்குகளின் அசைவுகளையும் அவற்றின் உரோமங்களின் தன்மையையும் நேரில் கண்டு ஆராய ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா நாட்டின் காடுகள், சான் டியாகோ விலங்கியல் பூங்கா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ஆகியவற்றிற்குச் சென்று கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டனர். 

அங்கு அவர்கள் விலங்குகளின் உரோமங்களை நுண்ணோக்கி மூலம் பார்த்து, வெவ்வேறு ஒளியமைப்புகளில் அவை எவ்வாறு காட்சியளிக்கின்றன என்பதைக் கண்டறிந்து அதற்கேற்பப் படத்தில் பயன்படுத்தினர். 

 இரண்டு அங்குல அளவுள்ள சிறிய எலி முதல் இருபத்தேழு அடி உயரமுள்ள பெரிய விலங்கு வரை அனைத்தும் ஒரே நகரத்தில் வாழும் போது அவற்றின் தேவைகள் மற்றும் ஏசி அமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள கட்டடக் கலை நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தினர்.

 இத்திரைப்படத்தில் செய்தி வாசிப்பாளராக வரும் கதாபாத்திரம், படம் வெளியாகும் நாடுகளுக்கு ஏற்ப அந்தந்த நாட்டின் புகழ்பெற்ற விலங்குகளைக் கொண்டு மாற்றியமைக்கப்பட்டது.

 அமெரிக்கா மற்றும் கனடாவில் காட்டு எருமை கதாபாத்திரமும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் கோலா கரடி கதாபாத்திரமும், பிரேசிலில் சிறுத்தை கதாபாத்திரமும், சீனாவில் பெரும் பாண்டா கரடியும், ஜப்பானில் தனுகி எனப்படும் ஒருவகை நரி கதாபாத்திரமும் செய்தி வாசிப்பாளர்களாக வடிவமைக்கப்பட்டு உலகெங்கும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்தன.

கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்த கலைஞர்களின் தேர்விலும் பல சுவாரஸ்யங்கள் இருந்தன. நிக் வைல்ட் கதாபாத்திரத்திற்கு ஜேசன் பேட்மேன் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, இயக்குநர்கள் அவரிடம் அவரது இயல்பான குரலிலேயே பேசுமாறு கேட்டுக்கொண்டனர்.

 நரியின் தந்திரமான  நகைச்சுவையான குணத்திற்கு அவரது வழக்கமான குரலே மிகச் சரியாகப் பொருந்தியது. அதேபோல ஸ்லோத் எனப்படும் மிக மெதுவாக நகரும் கரடி கதாபாத்திரமான ஃப்ளாஷிற்குப் பின்னால் வேலை செய்யும் மற்றொரு பெண் கரடி கதாபாத்திரத்திற்குப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை கிறிஸ்டன் பெல் குரல் கொடுத்தார்.

 நிஜ வாழ்க்கையில் அவருக்கு இந்த விலங்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த வாய்ப்பை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
திரைப்படத்தின் பின்னணி இசையிலும் பாடல்களிலும் பல புதுமைகள் புகுத்தப்பட்டன.

 பிரபல பாப் பாடகி ஷகீரா இதில் கசெல் என்ற மான் கதாபாத்திரத்திற்குப் பாப் நட்சத்திரமாகவே குரல் கொடுத்ததுடன், படத்தின் மையக் கருத்தைச் சொல்லும் பாடலையும் பாடினார்.

 அனிமேஷன் கலைஞர்கள் அவரது நடன அசைவுகளை உன்னிப்பாகக் கவனித்து, அதற்கேற்பப் படத்தில் வரும் மான் கதாபாத்திரத்தின் நடன அசைவுகளை வடிவமைத்தனர். 

 படத்தின் பல முக்கியக் காட்சிகள் முந்தைய புகழ்பெற்ற திரைப்படங்களுக்குக் கௌரவம் சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டன. குறிப்பாக எலி உலகத்தின் மாஃபியா தலைவரான மிஸ்டர் பிக் கதாபாத்திரம், தி காட்ஃபாதர் திரைப்படத்தின் மார்லன் பிராண்டோ கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையிலும், ரயிலில் மருந்து தயாரிக்கும் ஆடுகளின் காட்சிகள் பிரேக்கிங் பேட் என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரின் கதாபாத்திரங்களின் பெயர்களைக் கொண்டும் நகைச்சுவையாக உருவாக்கப்பட்டன.

 இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாவதற்கு முன்பாக சில குறிப்பிட்ட பிராந்தியங்களில் அதன் தலைப்பு சட்ட சிக்கல்கள் காரணமாக மாற்றப்பட்டது.

 இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஜூட்டோபியா என்ற பெயரைப் பயன்படுத்துவதில் பதிப்புரிமை சிக்கல் இருந்ததால், அங்கு இத்திரைப்படம் ஜூட்டோபோலிஸ் என்ற பெயரில் வெளியானது.

 அதேபோல் ஜெர்மனியில் ஏற்கனவே இதே போன்ற பெயரில் ஒரு குழந்தைகள் புத்தகம் இருந்ததால், அங்கு இத்திரைப்படம் ஜூமேனியா என்ற புதிய பெயரில் ரசிகர்களைச் சென்றடைந்தது.

படம் வெளியாகி உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பின்னர், டோட்டல் ரீகால் திரைப்படத்தின் இணை திரைக்கதை எழுத்தாளரான கேரி எல் கோல்ட்மேன் டிஸ்னி நிறுவனத்தின் மீது ஒரு அதிரடி வழக்கைத் தொடர்ந்தார். 

தான் ஏற்கனவே லூனி என்ற பெயரில் டிஸ்னி நிறுவனத்திடம் ஒரு கதையைக் கூறியதாகவும், அதிலிருந்த நிக் வைல்ட் மற்றும் ஜூடி ஹாப்ஸ் போன்ற கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் கருப்பொருள்களைத் திருடித்தான் ஜூட்டோபியா படம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

 ஆனால் பல மாதங்கள் நீடித்த இந்த சட்டப் போராட்டத்தின் முடிவில் அமெரிக்க நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இரண்டு கதைகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் பொதுவானவை என்றும், பதிப்புரிமை சட்டத்தின் கீழ் இதைக் குற்றம் சொல்ல முடியாது என்றும் கூறி டிஸ்னி நிறுவனத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்தத் திரைப்படத்தின் அனிமேஷன் தயாரிப்புப் பணிகள் நடந்த விதம் மற்றொரு சுவாரசியமான பின்னணியைக் கொண்டது. கலிபோர்னியாவில் உள்ள டிஸ்னி நிறுவனத்தின் முதன்மைத் தலைமையகம் அப்போது புதுப்பிக்கப்பட்டு வந்ததால், இத்திரைப்படத்தின் முழு உருவாக்கமும், மொவானா திரைப்படக் குழுவினரோடு இணைந்து வடக்கு ஹாலிவுட்டில் உள்ள ஒரு மிகப்பெரிய தற்காலிகக் கிடங்கில் வைத்துதான் அனிமேஷன் கலைஞர்களால் செய்து முடிக்கப்பட்டது. 

 மார்க்கெட்டிங் துறையினர் இத்திரைப்படத்தை விலங்கு வேடமிட்டு மகிழும் ஃபர்ரி ஃபேன்டம் என்ற குறிப்பிட்ட சமூகக் குழுவினரிடமும் கொண்டு சேர்த்து ஒரு புதுமையான விளம்பர உத்தியைக் கையாண்டனர்.

 இந்தத் தீவிர உழைப்பின் பயனாக, திரைப்படம் வெளியான பின்னர் சர்வதேச அளவில் பாக்ஸ் ஆபீஸில் பத்து லட்சம் கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது மட்டுமின்றி, ஷாங்காய் டிஸ்னிலாந்திலும் மற்றும் வால்ட் டிஸ்னி வேர்ல்டிலும் இந்தத் திரைப்படத்தின் பின்னணியைக் கொண்டு பிரத்யேகமான பொழுதுபோக்கு இடங்கள் உருவாக்கப்படும் அளவிற்கு இது உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

==============================
படத்தின் கதை:-

விலங்குகள் மட்டுமே வாழும் ஒரு நவீன உலகத்தில், முயல்கள் வாழும் கிராமப்புறமான பனிபரவிலிருந்து ஜூடி ஹாப்ஸ் (ஜின்னிபர் குட்வின்) என்ற இளம் முயல் தன் சிறுவயது கனவான காவல் துறை அதிகாரி ஆக வேண்டும் என்ற லட்சியத்தை அடைகிறாள்.

 ஜூட்டோபியா நகரத்தின் முதல் முயல் காவல் அதிகாரியாகப் பொறுப்பேற்கும் அவளை, அங்குள்ள ஜூட்டோபியா காவல் துறையின் தலைமை அதிகாரியான சீஃப் போகோ (இட்ரிஸ் எல்பா) என்ற ஆப்பிரிக்க எருமை அவளது தோற்றத்தைக் குறைத்து மதிப்பிட்டு வாகனங்களுக்குப் பார்க்கிங் டோக்கன் வழங்கும் சாதாரண பணியில் அமர்த்துகிறார். 

தனது முதல் நாள் பணியின் போது, ஜூடி தந்திரக்கார நரியான நிக் வைல்ட் (ஜேசன் பேட்மேன்) என்ற ஏமாற்றுக்காரனைச் சந்திக்கிறாள். 

அவன் ஜூடியிடம் அவளால் ஒருபோதும் உண்மையான காவல் அதிகாரியாக முடியாது என்று கூறி அவளது நம்பிக்கையைக் குலைக்கிறான்.

மறுநாளில், ஜூடி தனது பார்க்கிங் பணியை விடுத்து, ஒரு பூக்கடையில் திருடிவிட்டு ஓடிய டியூக் வீசல்டன் (ஆலன் துடிக்) என்ற சிறிய திருடனைத் துரத்திப் பிடிக்கிறாள். 

இதனால் கோபமடையும் சீஃப் போகோ, அவளைப் பணியை மீறியதற்காக எச்சரிக்கிறார். அந்த நேரத்தில் திருமதி ஆட்டர்ஹான் (அக்டேவியா ஸ்பென்சர்) என்ற நீர்நாய், காணாமல் போன தனது கணவர் எமிட்டைத் தேடித் தருமாறு காவல் நிலையத்திற்கு வந்து கதறுகிறார். 

சீஃப் போகோ இதனை நிராகரிக்க முயலும் போது, அங்கு வரும் துணை மேயரான டான் பெல்வெதர் (ஜென்னி ஸ்லேட்) என்ற சிறிய ஆடு, ஜூடிக்கு ஆதரவாகப் பேசுகிறாள். 

வேறு வழியின்றி சீஃப் போகோ, நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள் இந்த வழக்கைத் தீர்க்க வேண்டும் என்றும், தவறினால் ஜூடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறார்.

காணாமல் போன நீர்நாய் எமிட்டை கடைசியாகப் பார்த்த சாட்சி நிக் வைல்ட் தான் என்பதை ஜூடி தனது புத்திசாலித்தனத்தால் கண்டறிந்து, அவனைத் தந்திரமாக பிளாக்மெயில் செய்து தன் விசாரணைக்கு உதவி செய்ய வைக்கிறாள்.

 இருவரும் இணைந்து பல இடங்களுக்குச் சென்று தடயங்களைத் தேடுகின்றனர். முதலில் யாக் (டாமி சாங்) நடத்தும் இயற்கை ஆர்வலர்கள் கிளப்பிற்கும், பின்னர் ஃபிளாஷ் (ரேமண்ட் எஸ் பெர்சி) என்ற மிக மெதுவாக வேலை செய்யும் கரடி இருக்கும் போக்குவரத்துத் துறை அலுவலகத்திற்கும் செல்கின்றனர். 

அங்கு கிடைத்த கார் நம்பரை வைத்து அவர்கள் டண்டிராடவுன் பகுதியில் உள்ள மிஸ்டர் பிக் (மோரிஸ் லாமார்ச்) என்ற மிரட்டலான எலி மாஃபியா தலைவனின் காரைக் கண்டுபிடிக்கின்றனர். 

பழைய பகையால் நிக்கையும் ஜூடியையும் மிஸ்டர் பிக் பனிக்கட்டி நீரில் மூழ்கடிக்க உத்தரவிடும் போது, அவரது மகள் ஃப்ரூ ஃப்ரூ (லியா லாதம்) அங்கு வருகிறாள். 

ஜூடி முன்னதாகப் பூக்கடைத் திருடனைப் பிடிக்கும் போது தன் உயிரைக் காப்பாற்றியதை அவள் கூற, மிஸ்டர் பிக் மனம்மாறி அவர்களுக்கு உதவுகிறார். 

எமிட் திடீரென காட்டுமிராண்டித்தனமாக மாறி, தனது கார் ஓட்டுநரான மஞ்சாஸ் (ஜெஸ்ஸி கார்டி) என்ற கருஞ்சிறுத்தையைத் தாக்கியதாக அவர் கூறுகிறார்.

ஜூடியும் நிக்கும் மஞ்சாஸைச் சந்தித்து விசாரிக்கின்றனர். அவர் எமிட் காட்டுமிராண்டியாக மாறும் முன்பு 'நைட் ஹவ்லர்ஸ்' என்று கத்தியதாகக் கூறுகிறார். ஆனால் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மஞ்சாஸும் திடீரென காட்டுமிராண்டியாக மாறி அவர்களைக் கொல்லத் துரத்துகிறான்.

 ஜூடி சாமர்த்தியமாக அவனைக் கட்டிப்போட்டுவிட்டு காவல் துறைக்குத் தகவல் தருகிறாள். ஆனால் சீஃப் போகோ அங்கு வந்து பார்க்கும் போது மஞ்சாஸ் அங்கிருந்து மர்மமான முறையில் காணாமல் போயிருக்கிறான். 

ஜூடியை ராஜினாமா செய்யச் சொல்லி போகோ வற்புறுத்தும் போது, நிக் அவளுக்கு ஆதரவாகப் பேசி இன்னும் கால அவகாசம் இருப்பதை நினைவூட்டுகிறான். 

பின்னர் நிக், சிறுவயதில் தான் நரி என்ற காரணத்தால் மற்ற விலங்குகளால் அவமதிக்கப்பட்டதையும், அதனால் தான் ஏமாற்றுக்காரனாக மாறிய சோகத்தையும் ஜூடியிடம் பகிர்ந்து கொள்கிறான்.

பின்னர் அவர்கள் சிட்டி ஹாலுக்குச் சென்று துணை மேயர் பெல்வெதரின் உதவியோடு நகரின் போக்குவரத்து கேமராக்களை ஆய்வு செய்கின்றனர். 

அதில் மஞ்சாஸை சில ஓநாய்கள் கடத்திச் சென்றது தெரியவருகிறது. அந்த ஓநாய்கள்தான் 'நைட் ஹவ்லர்ஸ்' என்று ஜூடி தவறாகக் கணிக்கிறாள். 

அந்த ஓநாய்களைப் பின்தொடர்ந்து ஒரு ரகசிய மருத்துவமனைக்குச் செல்லும் அவர்கள், அங்கு காணாமல் போன அனைத்து வேட்டை விலங்குகளும் காட்டுமிராண்டித்தனமாக அடைத்து வைக்கப்பட்டு இருப்பதைக் காண்கின்றனர்.

 நகரத்தில் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், தன் பதவியைக் காப்பாற்றவும் மேயர் லியோடோர் லயன்ஹார்ட் (ஜே கே சிம்மன்ஸ்) என்ற சிங்கம் இதை மறைத்து வைத்திருப்பதைக் கண்டுபிடித்து, காவல் துறைக்குத் தகவல் கொடுத்து மேயரைக் கைது செய்கின்றனர்.

இதன் மூலம் பெல்வெதர் புதிய மேயர் ஆகிறாள். வழக்கை முடித்த ஜூடிக்கு பாராட்டு விழா நடக்கிறது. அப்போது நிக்கை தன் பார்ட்னராக காவல் துறையில் சேருமாறு ஜூடி அழைக்கிறாள். 

ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜூடி அறியாமையால், வேட்டை விலங்குகளின் மரபணு ரீதியான இயல்புதான் அவை காட்டுமிராண்டியாக மாறுவதற்குக் காரணம் என்று கூறிவிடுகிறாள். 

இதனால் மனமுடையும் நிக், அவளை விட்டுப் பிரிகிறான். ஜூடியின் பேச்சால் நகரத்தில் உள்ள சாதுவான விலங்குகளுக்கு வேட்டை விலங்குகள் மீது பயமும் வெறுப்பும் உண்டாகி, ஜூட்டோபியா நகரம் கலவர பூமியாக மாறுகிறது. 

தன் தவறால் நகரம் சீரழிந்ததை எண்ணி வருந்தும் ஜூடி, தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தன் கிராமத்திற்குச் செல்கிறாள்.
கிராமத்தில் தன் பெற்றோரான போனி ஹாப்ஸ் (போனி ஹண்ட்) மற்றும் ஸ்டு ஹாப்ஸ் (டான் லேக்) ஆகியோருடன் விவசாயம் செய்யும் போது, அங்குள்ள ஒரு குறிப்பிட்ட நீல நிறப் பூக்களுக்குத்தான் 'நைட் ஹவ்லர்ஸ்' என்று பெயர் என்றும், அதை விலங்குகள் உட்கொண்டால் அவை தங்களின் புத்தியை இழந்து மிகக் கொடூரமான காட்டுமிராண்டிகளாக மாறும் என்ற உண்மையையும் ஜூடி தற்செயலாகத் தெரிந்து கொள்கிறாள். 

யாரோ திட்டமிட்டு வேட்டை விலங்குகளைக் காட்டுமிராண்டிகளாக மாற்றுகிறார்கள் என்பதை உணர்ந்து அவள் உடனடியாக ஜூட்டோபியா திரும்புகிறாள்.

 நிக்கைச் சந்தித்து அழுது மன்னிப்புக் கேட்டு அவனுடன் மீண்டும் இணைகிறாள்.
இருவரும் இணைந்து பழைய திருடன் வீசல்டனை மிரட்டி விசாரிக்கும் போது, அவன் டக் (ரிச் மூர்) என்ற ஆட்டிடம் அந்தப் பூக்களைக் கொடுத்ததாக ஒப்புக்கொள்கிறான். 

ஒரு கைவிடப்பட்ட ரயில் பெட்டியில் டக் ரகசியமாக அந்தப் பூக்களிலிருந்து ஒரு நீல நிற விஷ திரவத்தைத் தயாரித்து, அதை ஒரு துப்பாக்கி மூலம் வேட்டை விலங்குகள் மீது செலுத்தி வருவதை அவர்கள் நேரில் காண்கின்றனர். 

அந்த விஷ திரவத்தை ஆதாரமாக எடுத்துக்கொண்டு அவர்கள் காவல் துறைக்கு ஓடும் வழியில், இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைத்து புதிய மேயரான பெல்வெதர் அவர்களை வழிமறிக்கிறாள்.

முன்னாள் மேயர் சிங்கம் தன்னை அடிமை போல நடத்தியதால், சாதுவான விலங்குகளை ஒன்றிணைத்து வேட்டை விலங்குகளை நகரத்தை விட்டே விரட்டி, தான் அதிகாரத்தைக் கைப்பற்றவே இந்தச் சதியைச் செய்ததாகப் பெல்வெதர் கர்வம் கொள்கிறாள். 

ஜூடியைக் காயப்படுத்தி, நிக் மீது அந்த விஷத்தைச் செலுத்தி அவனைக் கொண்டே ஜூடியைக் கொல்ல முயல்கிறாள். ஆனால் ஜூடியும் நிக்கும் ஏற்கனவே திட்டமிட்டு அந்த விஷத் துப்பாக்கியில் இருந்த மருந்தை மாற்றிவிட்டு, அதற்குப் பதிலாக ப்ளூபெர்ரி பழங்களை நிரப்பியிருந்தனர்.

 மேலும் பெல்வெதர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அனைத்து பேச்சுகளையும் ஜூடி தன் கேரட் வடிவ ரெக்கார்டரில் ரகசியமாகப் பதிவு செய்துகொள்கிறாள்.

உண்மை வெளிச்சத்திற்கு வர, பெல்வெதரும் அவளது கூட்டாளிகளும் காவல் துறையால் கைது செய்யப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு உரிய மருந்து கொடுக்கப்பட்டு அவை குணமடைகின்றன. ஜூடி மீண்டும் காவல் துறையில் சேர்க்கப்படுகிறாள். 

நிக் வைல்ட் தனது தவற்றைத் திருத்திக்கொண்டு, ஜூட்டோபியா நகரத்தின் வரலாற்றிலேயே முதல் நரி காவல் அதிகாரியாகப் பயிற்சி முடித்துத் தேர்வாகிறான். இறுதியில் ஜூடியும் நிக்கும் பார்ட்னர்களாக இணைந்து புதிய வழக்குகளை நோக்கித் தங்களின் பயணத்தைத் தொடர்வதுடன், பாப் ஸ்டார் கசெல் (ஷகீரா) நடத்தும் பிரம்மாண்ட இசை கச்சேரியில் அனைத்து விலங்குகளும் ஒற்றுமையாகக் கொண்டாடுவதோடு இக்கதை நிறைவடைகிறது.

இக்கதையின் மூலமாக மனித சமுதாயத்திற்கு மிக முக்கியமான பல வாழ்வியல் மற்றும் சமூகச் செய்திகளை ஆழமாக உணர்த்துகிறது இப்படைப்பு.

முதலாவதாக, இத்திரைப்படம் சுயநம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் முக்கியத்துவத்தைப் பேசுகிறது. சுற்றியிருப்பவர்கள் நமது தோற்றத்தையோ அல்லது பின்னணியையோ பார்த்து "உன்னால் முடியாது" என்று குறைத்து மதிப்பிடும்போது, அதைப்பற்றிக் கவலைப்படாமல் நமது லட்சியத்தை நோக்கித் தொடர்ந்து ஓட வேண்டும் என்பதை ஜூடி ஹாப்ஸ் கதாபாத்திரம் காட்டுகிறது. 

ஒரு சிறிய முயலால் காவல் துறையில் சாதிக்க முடியும் என்ற அவளது பிடிவாதம், தடைகளைத் தகர்க்கும் துணிச்சலை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
இரண்டாவதாக, சமுதாயத்தின் பார்வைகளால் நமது தனித்தன்மையை இழந்துவிடக் கூடாது என்ற செய்தியை நிக் வைல்ட் கதாபாத்திரம் மூலம் உணர்த்துகிறது. 

உலகம் நம்மை ஒரு குறிப்பிட்ட சட்டகத்திற்குள் அடைத்து (நரி என்றால் ஏமாற்றுக்காரன் என்பது போல) பார்க்கும் போது, நாமும் அப்படியே மாறிவிடக் கூடாது; நமக்கான நற்பண்புகளோடு வாழ பழக வேண்டும் என்பதை நிக்கின் மாற்றம் உணர்த்துகிறது.
மூன்றாவதாக, அதிகார வர்க்கத்தின் சுயநல அரசியலைப் புரிந்து கொள்ளுதல் ஆகும். சமுதாயத்தில் அமைதியாக வாழும் மக்களிடையே, தங்களின் சுய லாபத்திற்காகவும் பதவியைக் கைப்பற்றவும் ஆட்சியாளர்கள் எவ்வாறு பயத்தையும், பிரிவினையையும், வெறுப்பையும் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் படம் மிகத் தெளிவாகத் தோலுரித்துக் காட்டுகிறது. 

ஒரு சமூகமாக நாம் இத்தகைய சதி வலைகளில் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை இது எச்சரிக்கிறது.

நான்காவதான செய்தி, வார்த்தைகளின் வலிமையும் பொறுப்புணர்வுமாகும். நாம் பேசும் ஒரு சிறிய தவறான வார்த்தை அல்லது பொதுப்படையான கருத்து, ஒட்டுமொத்த சமுதாயத்தில் எவ்வளவு பெரிய பிளவையும் கலவரத்தையும் ஏற்படுத்தும் என்பதை ஜூடி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் காட்சி விளக்குகிறது. 

எனவே, பொதுவெளியில் பேசும்போது மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற செய்தியை கூறுகிறது.

மாற்றங்கள் ஒரே நாளில் நிகழ்ந்துவிடாது என்ற யதார்த்தத்தை இப்படம் அழகாகப் பதிவு செய்கிறது. உலகம் என்பது குறைகளற்ற ஒரு உட்டோபியா (முழுமையான நன்னெறி உலகம்) அல்ல, இதில் பல சவால்களும் மனிதப் பலவீனங்களும் இருக்கவே செய்யும். 

எனினும், நம்மிடம் இருக்கும் குறைகளை நாமே கண்டறிந்து, நம்மை நாமே சுயபரிசோதனை செய்து திருத்திக் கொள்ளும்போதுதான் இந்த உலகம் வாழத் தகுந்த இடமாக மாறும் என்பதே இத்திரைப்படம் நமக்கு வழங்கும் ஆணித்தரமான செய்தியாகும்.

#கீதப்ப்ரியன்ஆஸ்கர்