கேன் வாட்டர் என்னும் லாபகரமான குடிசைத்தொழில்!!!

ருமை நண்பர்களே!!!
மிழ்நாட்டில் இன்றைய தேதியில் வாட்டர் கேன் வாங்காத நடுத்தர குடும்பங்களே கிடையாது, கோடை காலம் துவங்கியதை அடுத்து, இதைப்பற்றி நீண்டநாட்களாகவே ஒரு விழிப்புணர்வு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்தும் முடியாமலே போனது.  இன்றைய தமிழகத்தின் மூலை முடுக்கெங்கிலும், அசுர லாபநோக்கம் ஒன்றையே கண்ணாகக்கொண்டு தனியார் மினரல் வாட்டர் சப்ளை நிறுவனத்தினர் தரமற்ற குடிநீரை தமிழகமெங்கிலும் விற்பனை செய்வது நாமறிந்த ஒன்று .  தமிழ் நாட்டின் எல்லா நடுத்தரக் குடும்ப வீடுகளிலும் நாம் நுழைந்தவுடன் பார்ப்பது வெள்ளை நிற வாட்டர்கேனை தான், அந்த அளவுக்கு வாட்டர் கேன் நீர் உபயோகம் மக்களுடன் இரண்டரக் கலந்துவிட்டது. 


வேவ், யோகா, ஸ்பைஸ் அக்வா, சியெலெரி, பாலார், ஹைடெக், மேஜிக், ப்ரின்ஸ்,சூரியா, ஷ்ரீ பாலாஜி, கூல் ப்ரீஸ், ரிப்புள்,ட்ரஸ்ட் அக்வா, டால்பின், வி ஜி ஆர், ப்ரைம் லைஃப், ஐஸ் டச், லிங்கம், ஈகிள், அர்ஜுன், அக்வா சிட்டிடெய்லி, ஈகிள், மானட்ஸா, அக்வா , ஃபாஸ்ட், ட்ரினிட்டி, சிட்டிசன், அப்பொல்லோ, க்ளாஸ், அக்னி, ப்ரைம் லைஃப், சரவணா ஸ்டோர்ஸ், வி எக்ஸ் எல் அக்வா, அபூர்வா, கபில், அல்பா, என்று புற்றீசல் போல பெருகிவிட்ட இந்த வாட்டர்  கேன் மற்றும் வாட்டர் பாக்கெட் கம்பெனிகள் சென்னை மாநகராட்சியால் தடைசெய்யப்பட்டவை என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?!!!  , இன்னும் பல கேள்விப் படாத பெயர்கள் பட்டியலில் உண்டு, பலவற்றுக்கு ஐ எஸ் ஐ முத்திரை வேறு  எப்படியோ வாங்கி விடுகின்றனர். இதை முறைப்படுத்த் வேண்டிய சுகாதாரத்துறையினரோ கையூட்டு வாங்கிக்கொண்டு வாட்டர் கேன்களைப் பற்றி தனக்கெதுவும் தெரியாது, என்று மிகுந்த அலட்சியம் காட்டுவதால், நகருக்குள் பல்வேறு நோய்கள் பரவி வருகிறது.எங்கேயும் சென்று  ஒருவர் இந்த வாட்டர் கேனில் வரும் குடிநீரை நம்பி குடிக்க முடியாது, தொண்டை கட்டிக்கொள்ளும்,காய்ச்சல் பின்னாலேயே தொடரும்.தொடர்ந்து ஒருவாரத்துக்கு மருத்துவசெலவும்,பணிக்கு மருத்துவ விடுப்பும் இதன் பின் விளைவுகள் ஆகும்.

மிழகத்தின் பல்வேறு நகரங்களில் நீர் ஆதாரங்கள் கேள்விக்குறியானதால் சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பொது மக்கள் அவற்றை வீட்டு தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர்.அது கூட வாரம் ஒரு முறை தான் வருகிறது,லாரிகளில் வரும் அசுத்தமான குடிநீரைப்பற்றி கேட்கவே வேண்டாம்,நகர தெருக்களில் நிறுவப்பட்டிருக்கும் சிண்டெக்ஸ் குடிநீர் தொட்டிகளை கழுவவோ பராமரிப்பதோ அறவே கிடையாது, 

தனால் மிகவும் நொந்துபோன மக்கள் அநேகம் பேர் குடிப்பதற்கு தனியார் வட்டார் சப்ளை நிறுவனத்தினரிடம் இருந்து 20 லிட்டர் கொள்ளவு கொண்ட கேன் தண்ணீரை வாங்கி பயன்படுத்துகின்றனர்.  குறிப்பாக நகராட்சிக்குட்பட்ட டவுன் பகுதியில் நடுத்தர மற்றும் உயர்தர மக்கள் குடிநீருக்கு தனியார் வாட்டர் சப்ளை நிறுவனத்தையே நம்பியுள்ளனர்.வாட்டர் கேன்களில் தான் எத்தனை எத்தனை ப்ராண்டுகள்,அநேகம் போலியான நிறுவனங்கள் தான்.மாசுபட்ட ஏரிகளில் இருந்து நீர் இறைத்து அதை கொண்டு போய் மிகவும் அற்பத்தனமாக ரிவர்ஸ் ஆஸ்மோஸிஸ் செய்து,அந்த சுகாதாரமற்ற நீரே கழுவாத,கிருமிநாசம் செய்யப்படாத வாட்டர் கேன்களில் நிரப்பப்படுகிறது.

டந்த ஒரு ஆண்டுக்கு முன் வெறும் 15 ரூபாய் இருந்த 20 லிட்டர் வாட்டர் கேன், தற்போது "கிடுகிடு'வென உயர்ந்து 25 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தமிழகமெங்கிலும் கடந்த காலத்தில் அங்கீகாரம் பெற்ற தனியார் குடிநீர் தயாரிப்பு கம்பெனிகள் மூலம் மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, இந்த குடிநீர் விற்பனை தொழிலில் நல்ல வருமானம் கிடைப்பதால் ஏராளமான போலி வாட்டர் சப்ளை நிறுவனத்தினர் அரசு அங்கீகாரம் பெறாமல் தரமற்ற குடிநீரை விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். இவற்றை வாங்கி குடிக்கும் பொதுமக்கள், பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக பேக்கரி கடைகள், பெட்டிக்கடைகள், பஸ் ஸ்டாண்ட் கடைகளில் சிறு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தண்ணீர் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் தண்ணீர் தாகத்திற்காக அவசர கோலத்தில் இவற்றை வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி போலி வாட்டர் சப்ளை நிறுவனத்தினர், சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் லாபநோக்கில் தரமற்ற குடிநீரை தயாரித்து விற்பனை செய்கின்றனர். கடைக்காரர்களும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் அவற்றை வாங்கி விற்பனை செய்கின்றனர்.

வீடுகளில் வினியோகிக்கப்படும் தரமற்ற வாட்டர் கேன், கடைகளில் விற்பனை செய்யப்படும் தரமற்ற குடிநீரை வாங்கி குடிக்கும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது அடிக்கடி காலரா, டெங்கு மற்றும் வாந்தி, பேதி நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாக தனியார் வாட்டர் சப்ளை கம்பெனிகள் சுகாதார விதிமுறைப்படி நிலத்தடியில் போர்வெல் போட்டு, அவற்றில் கிடைக்கும் தண்ணீரை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத்துறை அறிவுரைப்படி சுத்திகரித்து ஆய்வுக்குட்படுத்தி விற்பனை செய்ய வேண்டும். 

னால், தமிழகமெங்கிலும் தனியார் வாட்டர் சப்ளை நிறுவனத்தினர் சுகாதாரத்துறை அதிகாரிகளை,கவுன்சிலரை,போலீசாரை, லஞ்சத்தால்   குளிப்பாட்டி விட்டு புறநகர் கிராமங்களில் உள்ள மாசுபட்ட ஏரி, குளம், அணை மற்றும் குட்டைகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, அவற்றை அனுமதிக்கப்பட்ட விதிமுறைகள் படி சுத்திகரிக்காமல் சுவை தரும் வேதியியல் பொருட்களை கலந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருவது கண்கூடு.

சுகாதாரத்துறை அதிகாரிகள் எப்போதாவது விழிக்கும் அரசு உத்தரவிடும் போது மட்டுமே பெயரளவுக்கு சோதனை செய்து, தரமற்ற வாட்டர் கேன், பாக்கெட்டுகளை பறிமுதல் செய்கின்றனர். பத்திரிக்கைக்கு செய்தி தருகின்றனர். மற்ற நேரத்தில் இவர்கள் தனியார் வாட்டர் சப்ளை நிறுவனத்தினருடன் மறைமுக ஒப்பந்தம் செய்து கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதால், பொதுமக்கள் நலன் கேள்விக் குறியாகியுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகளின் இந்த கேடுகெட்டத்தனம் மிகவும் கண்டிக்கத்தக்கது, மக்களின் உடல் ஆரோக்கியத்துடன் விளையாடும் இந்த கயவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும், இது போனற தருதலைகளுக்கு தற்காலிக பணிநீக்கம் எல்லாம் ஒன்றுமே கிடையாது, வேலையை நிரந்தரமாக பறிக்கப்படவேண்டும். நீரினால் வரும் கொடிய வியாதிகள் இந்த கொடியவர்களை ஒன்றும் செய்யமாட்டேன் என்கிறது என்பதே பெரிய முரண்.

சரி குடிநீருக்கு எங்கள் வீட்டில் என்ன செய்கிறோம் என்று சொல்கிறேன்:-

ன்வீட்டில் கடந்த ஐந்து வருடத்தும் மேலாக அக்வாகார்டின் ரிவைவா என்னும் ரிவர்ஸ் ஆஸ்மோஸிஸ் சாதனம் பொருத்தி அது தரும் குடிநீரைத்தான் பயன்படுத்தி வருகிறோம். [இது இந்தியாவின் மிகத் தரமான பொருளுக்கான வாய்வழி விளம்பரம் என்று எடுத்துக் கொள்ளுங்கள்]. இந்த ப்ராண்டிற்கு நிகரே கிடையாது, இப்போது புதிதாக ஸீரோ-பி நிறுவனமும் ஆர் ஓ சாதனங்களை தயாரித்து சந்தையில் விற்றுவந்தாலும் அதன் விலை அக்வாகார்டை விட அதிகம் என்பேன், தண்ணீரின் கொள்ளளவும் ஏனைய பிற சிறப்பம்சங்களும் இது போல கிடையாது, இது நீரில் இருக்கும் தீங்குவிளைவிக்கும் கந்தகத்தை நீக்குகிறது, நீரால் வரக்கூடிய தொற்று வியாதி பாக்டீரியாக்கள், வைரஸ்கள், ப்ரொடோசோக்கள், அமிலங்கள், தேவைக்கதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகளையும் அறவே வடிகட்டிவிடும்,இதற்கு  நீர் சுத்திகரிக்கும் போது மட்டுமே இயங்கும் குறைந்த 25 வாட்ஸ் மின்சாரம் மட்டும் தேவை.

தை நிலத்தடிநீரில் கலந்துள்ள உப்பு மற்றும் கனிமங்கள் அளவு 500mg/ltr(min)-2000 mg/ltr (max)-RO , 100 mg/ltr(min)-500 mg/ltr (max)-NF வரை உள்ள எந்த ஒரு பகுதியிலும் நிறுவலாம், நீங்கள் இதை வாங்க முடிவெடுத்து அக்வாகார்ட் குழுவை அழைக்கும் போதே அவர்கள் வீட்டுக்கு வந்து இலவச டெமோ செய்து காட்டுவர்,நீரையும் சோதிப்பர், அப்போது உங்கள் வீட்டு நிலத்தடி நீரின் உப்பு/கடினத்தன்மை குறைவாக இருப்பின், அதற்கேற்றாற்போல குறைந்த ஸ்டேஜ் கொண்ட சாதனத்தை பரிந்துரைப்பர், அதன் மூலம் ஒருவரின்  உடல் ஆரோக்கியத்துக்கு இயற்கையாகவே தேவைப்படும் பொட்டாசியம்,கால்சியம் போன்ற பொருட்கள் குறைவின்றி கிடைக்கும். 8 லிட்டர் நீரை இதில் தேக்கி வைக்கலாம், மணிக்கு 8லிட்டர் நீரை சுத்தீகரித்தும் தரும். இது தரும் தண்ணீரை குடிக்கப் பழகி விட்டால் , வேறெங்குமே நீரருந்த மாட்டீர்கள்.மினரல் வாட்டர் கூட ருசிக்காது.

தையும் ஹிந்துஸ்தான் லீவர் 1400ரூபாய்க்கு கூவிக்கூவி விற்கும் வாட்டர் ப்யூரிஃபையரையும் ஒன்று படுத்தி பலர் குழப்பிக் கொள்கின்றனர், அது வெறும் கிருமி நீக்கி மட்டுமே, இது கிருமி நீக்கி + நீரின் கடினத்தன்மையை நீக்கி சுவை மிகுந்த குடிநீராக்கித் தருகிறது. பிஸ்லெரி,கின்லே நிறுவன மினரல் வாட்டரை விட இந்த குடிநீர் மிகவும் சுவையானது,ஒரு முறை நிறுவ சுமார் 11,000 ரூபாய் [விலை குறைந்துவிட்டது] தேவைப்படும். இப்போது சுற்றுவட்டாரத்தில் 6000 ரூபாய்க்கு லோக்கலில் கிடைக்கும் கண்ட  தரம் குறைந்த சீனத்தயாரிப்பு ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் சாதனங்கள் வாங்கி காசை கரியாக்காதீர்கள்,அவை வெறும் இரண்டே மாதத்தில் பல் இளித்து விடும்,நேராக இதையே தேர்வு செய்யுங்கள்.அதன் பின்னர்  உங்கள் இல்லத்தின் நீர் உபயோகத்துக்கு ஏற்ப குறைந்தது ஒருவருடம் மெம்பரேனின் ஆயுட்காலம் இருக்கும்,

மூன்று பேர் உள்ள குடும்பத்துக்கு சுமார் 2வருடங்கள் இந்த மெம்பரென் நீடிக்கும், அதன் பின்னர் நீரின் சுவை மாற ஆரம்பிக்கும், அப்போது நீங்கள் மெம்பரேனை மாற்றிக் கொள்ளலாம்,அதன் விலை சுமார் 3500 ரூபாய். தயவு செய்து உடல் ஆரோக்கியத்தில் விளையாடாதீர்கள் நண்பர்களே. உங்கள் வீட்டில் பிறந்த குழந்தை இருக்கலாம், வயதான அம்மா ,அப்பா, தாத்தா பாட்டி இருக்கலாம், நம் அன்றாட குடிநீர் உபயோகத்துக்கு பாதுகாப்பான தேர்வையே நாடுங்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, சுமார் ஆறு வருடம் முன்பு  அக்வாகார்ட் ஆர் ஓ வாங்க ரூபாய் 14000 ஆனது, அவ்வளவு பணம் புரட்ட முடியாத நிலையில் க்ரெடிட் கார்டிலேயே வாங்க முடிவு செய்து அவர்களிடம் கேட்டேன், அவர்கள் வீட்டுக்கே வந்து க்ரெடிட் கார்டை ஒரு கார்பன் பேப்பரில் வைத்து ஸ்வைப் செய்து கொண்டு போனதும், பின்னர் அதை நான் 12 மாத தவணையில் மாற்றி  கட்டியதும் இன்னும் நினைவிருக்கிறது .நான் வாழ்வில் முதலில் வாங்கிய உருப்படியான,விலைஉயர்ந்த பொருள் என்றால் இது தான்.

ன்றும் என் சென்னை வீட்டில் பாலாறு நீர் இணைப்பு கிடையாது,போர்வெல் நீர்தான். ஒரு நாளைக்கு பாலில் கலந்து பயன்படுத்த, உணவு சமைக்க, ஃப்ரிட்ஜில் வைக்க, குளிர் பானம் கலக்க என சுமார் 20 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. 365x20 =7300லிட்டர் ஆண்டுக்கு செலவாகிறது . மெம்பரேனின் செலவு ஒரு ஆண்டுக்கு 1750 ரூபாய் போல வருகிறது. கேன் வாட்டரை விலைகொடுத்து வாங்கி,வைத்தியத்துக்கு அழுவதற்கு  பதிலாக உங்கள் குடுமபத்தாரின் ஆரோக்கியத்தை கருத்தில்  கொண்டால் இந்த தொகை பெரிதாகத் தெரியாது. நண்பர்கள் வேறு ஏதேனும் நல்ல ஆலோசனைகள் இருந்தாலும் இங்கே பகிருங்கள். தண்ணீர் கொள்ளையர்களை கூட்டு முயற்சியால் ஒழிப்போம்!!!.