பிஃபோர் த ரெயின்ஸ் [Before the Rains][2007][இந்தியா]


ந்தோஷ்சிவன் இயக்கிய பிஃபோர் த ரெயின்ஸ் என்னும் படம் மீண்டும் பார்த்தேன்,சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளியான படங்களில் மகர மஞ்சு, உருமி என ஏகம் குப்பைகள், இது மற்றும் டஹான் மட்டுமே தப்பிப்பிழைத்த படங்கள் என்பேன், 2001 ஆம் ஆண்டு வெளியான  யெல்லோ ஆஸ்பால்ட் என்னும் இஸ்ரேலிய நாட்டுப் படத்தை திரைவிழாக்களில் கண்டு மிகவும் சிலாகித்த சந்தோஷ் சிவன் அதற்கு ட்ரிப்யூட் செய்யும் விதமாக அப்படத்தைத் தழுவி தயாரித்து இயக்கிய படம் பிஃபோர் த ரெய்ன்ஸ்.படத்தின் சிறப்பே அதன் கதை,லொக்கேஷன் மற்றும் காஸ்டிங் என்பேன்.

யெல்லோ ஆஸ்பால்ட்-மூலப் படத்தின் போஸ்டர்
யெல்லோ ஆஸ்பால்ட் என்னும் இஸ்ரேலியப் படமும் நான் பார்த்திருக்கிறேன், அது நிகழ்காலத்தில் நடக்கும் கதை, அரேபியப் பாலைவனத்தின் சூழலில் நடக்கும் நெறியில்லா காதலையும் காமத்தையும் பறைசாற்றும் படம், இப்படம் ப்ரிட்டிஷ் இந்தியாவின் மெட்ராஸ் ப்ரெசிடென்சியில் மலபாரில் நடக்கும் கதை, ஆனால் அதே நெறியில்லா காதலும் காமமும் மட்டும் உண்டு. இதுவரை நான் கண்ட ரீமேக் படங்களில் மூலத்தை விட மிக அற்புதமாக வந்த தழுவல் இது தான் என்பேன். இப்படத்தை பாலா பார்த்திருந்தால் பரதேசி படத்தினை இன்னும் நன்றாக கொண்டு வந்திருக்க முடியும், உள்ளூரில் எடுக்கப்பட்ட உலகசினிமாவின் தரத்துக்காக சொன்னேன். பரதேசியில் செழியனின் ஒளிப்பதிவு மிக அருமையாக இருந்தும் பொருந்தாத காஸ்டிங், செட், கதை, திரைக்கதையினால் விழலுக்கு இறைத்த நீரானது எல்லோருக்கும் தெரிந்ததே.

1937 ஆம் ஆண்டு, மலபார் பிரதேசம், மேற்குத் தொடர்ச்சி மலைகளினூடே பழங்குடிகள் வசிக்கும் ஓர் அழகிய மலைக்கிராமம், ஊரினூடே ஆறும், அருவியும் கொண்ட எழில் பரப்பும் உண்டு, சுதந்திரப் போராட்டம் சூடு பிடித்திருக்கும் காலகட்டம், ஏற்கனவே அடர்ந்த காடுகளை அழித்து ஆங்கிலேய அதிகாரிகளின் டீ எஸ்டேட்டுகளும் ,அவற்றுக்கான சாலைகளும் நிறுவப்பட்டிருக்கின்றன,

இப்போது குறுமிளகு,ஏலக்காய்,லவங்கம்,பட்டை போன்றவற்றை பயிரிடத் தோதான நிலப்பரப்பை தேர்ந்தெடுத்து அதற்கு தனியார் மலைச்சாலை உருவாக்கி, அவற்றை ஆங்கிலேயெ கனவான்களுக்கு தனித்தனி எஸ்டேட்டுகளாக பிரித்து விற்க, ஹென்ரி மூர் [Linus Roache ]என்னும் ஆங்கிலேய டவுன்ப்ளானிங் இஞ்சினியர் அவ்வூருக்கு வருகிறார்,இவருக்கு என்று எழில் கொஞ்சும் ஒரு ஆங்கிலேயெ கிராமப்புர வீடு போல அமைத்துக் கொள்கிறார், அழகிய மனசாட்சிக்கு பயந்த மனைவி லாரா [Jennifer Ehle], புத்திசாலியான மகன் பீட்டர் என்று அழகிய குடும்பம்,

சஜ்ஜனி,லாரா,பீட்டர்
நம்பிக்கையான உதவியாளன் டீ.கே,நீலன் [ராகுல் போஸ்] அழகிய வேலைக்காரி சஜ்ஜனி [நந்திதா தாஸ்] என வாழ்க்கை சாஹேப்புக்கு மிக ரம்மியமாகப் போகிறது, இவரின் நம்பிக்கையான உதவியாளன் நீலனின் உழைப்பை கண்டு மெச்சிய மூர் சாஹேப் அவனுக்கு தன்னுடைய ப்ரிடீஷ் பிஸ்டலை பரிசளிக்கிறார்.அவனுடைய உதவியின்றி சாலை திட்டமிடுதல் பணி நடந்தேறியிருக்காது என்று புகழ்கிறார், வரும் மழைக்காலத்துக்கு முன்பாக திட்டமிட்டபடி சாலையை அமைக்க இவனையே பெரிதும் நம்பியிருப்பதாகச் சொல்கிறார், அமைக்கவிருக்கும் சாலைக்கு அவனுடைய பெயரை வைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என அதீதமாகப் புகழ்கிறார்.

நீலன் நேர்மையும் நல்ல உழைப்பும் கொண்டவன்,ஆங்கிலம் நன்றாக பேச ஆரம்பித்திருக்கிறான், இப்போது நல்ல வேலையும், அதற்கேற்ற சம்பளமும், மூர் சாஹேப்பின் வீட்டின் அவுட் ஹவுஸிலேயே இவனுக்கு தங்கும் இடமும் கிடைக்க மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறான், தன் வயதான அப்பா, அம்மாவை அடிக்கடி தன் கிராமத்திலும் சென்று பார்த்து வருகிறான், இவனுக்கு உறவிலேயே பெண் நிச்சயிக்கப்பட்டிருக்க,அவன் திருமணத்தில் பிடிப்பின்றி இருக்கிறான். இவன் அப்பா [திலகன்] தான் அவ்வூரின் தலைவர், அவருக்கு மகன் ப்ரிட்டிஷாருக்கு பணியாளாக இருப்பது பிடிப்பதில்லை, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதையே விரும்புகிறார்.

மூர் சாஹேப்பின் மனைவியும் ,மகனும் ஒரு மாதம் கோடை விடுமுறையை கழிக்க லண்டன் செல்கின்றனர், ஒரு பழமொழி சொல்லுவர். கிளி போல பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல வைப்பாட்டி தேடும் ஆணின் நெஞ்சம் என்று, இவர் முரணாக தன் பேரழகு வேலைக்காரி சஜ்ஜனிக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுத்து, அவளின் கணவன் அவளுக்கு காட்டாத அன்பை திகட்ட திகட்ட பொழிந்து, அவளை மடித்து வழிக்கு கொண்டு வந்து விடுகிறார், வீட்டுக்குள் புணர்ந்து திகட்டிய பின்னர் இயற்கை சூழலிலும் புணர எண்ணியவர்கள், மலைத்தேன் எடுக்க ஒருவரும் அறியா வண்ணம் ஜீப்பில் சென்று  அருவி திட்டுக்கு மேலே ரசித்துப் புணர்கின்றனர். அதை இரு சிறுவர்கள் மாங்காய் பறிக்க வந்துவிட்டு பார்த்தும் விடுகின்றனர்.

அன்றைய தினம் வீடு திரும்பி மற்ற காரியம் முடிக்க மிகவும் தாமதாமாகி விட்டபடியால், மூர் சாஹேப் நீலனை அழைத்து, சஜ்ஜனியை அவளின் கிராமத்தில் விட்டு வரச் சொல்கிறார், சஜ்ஜனி மீது நீலனுக்கு பள்ளிப் பிராயத்திலிருந்தே ஒரு ஈர்ப்பு இருக்கிறது, ஒன்றாக விளையாடி வளர்ந்தவர்கள். சஜ்ஜனி பெற்றோர் இல்லாதவள், ஒரே தம்பி மனஸ் [இந்த்ரஜித் சுகுமாரன்] மட்டும் தான், ஊரின் பெரியவர்கள் சஜ்ஜனிக்கு பொருத்தமான துணையாக சற்றே வயது முதிர்ந்த, எழுதப் படிக்காத ரஜத் [லால்] ஐ திருமணம் செய்து வைத்தும் விடுகின்றனர்.

இருவருக்கும் ஏழாம் பொருத்தம், அழகிலோ, அறிவிலோ, ரசனையிலோ ஒத்துப்போவதில்லை, தவிர ரஜத் வெகு முரடன் வேறு, அடிப்பவன், பெண்ணடிமையை விரும்புபவன், இவற்றிற்கெல்லாம் எதிர் மறையாக அதீத அழகுணர்ச்சிக்கு ரசனையுடன் அன்பை பொழியும் மூர் சாஹேப்பிடம் சஜ்ஜனி விழுந்து விடுகிறாள், பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று தெரிந்தாலும் அவள் அதற்கெல்லாம் பயப்படவில்லை, சாஹேப் தன்னுடன் ஓடி வந்து கூட வாழ்வான் என்று நம்பியிருக்கிறாள்.

அன்று நீலன் சஜ்ஜனியை வீட்டில் விட்டு வர, ரஜத் இவனை வெறுப்பாக பார்த்தவன், சஜ்ஜனியிடம் ஏன் தாமதம் ? எங்கே போய் சுற்றிவிட்டு வருகிறாய்? என்று கதவடைத்துவிட்டு அடித்து துன்புறுத்தி விசாரிக்கிறான், அவன் பிடியில் இருந்து விலகி துரிதமாக இரவுக்கு சமைத்தும் விடுகிறாள், அங்கே சஜ்ஜனியின் தம்பி மனஸ், நீலனைப் பார்த்தவன் இரவு கட்டாயமாக அங்கே சாப்பிட்டுப்போகச் செல்கிறான்,இருவரும் பால்ய சிநேகிதர்கள், அங்கே நீலன் சாஹேப் தனக்கு பரிசளித்த ப்ரிடிஷ் பிஸ்டலை நண்பனுக்கு பெருமையுடன் காட்டுகிறான், அவன் அதை வியப்பு மேலிட தடவிப் பார்க்கிறான்.

இப்போது கோடை விடுமுறை முடிந்து மூர் சாஹேப்பின் மனைவியும், மகனும் வந்துவிடுகின்றனர்,அவளுக்கு மூர் சாஹேப் இருக்கும் இடமே சொர்க்கமாகப் படுகிறது, தான் உல்லாசமாக குளிப்பதற்கு ஒரு பீங்கான் குளியல் தொட்டியையும் லண்டனிலிருந்து இறக்குமதி செய்து இவர்களின் குளியலறையில் நிறுவுகிறாள். நீலன் நிறைய படிப்பதை அறிந்து அவனுக்கு பெட்டி நிறைய புத்தகங்களையும் லண்டனிலிருந்து கொணர்ந்து பரிசளிக்கிறாள், இப்படி அங்கே அனைவருக்கும் மிக அன்பான எஜமானியாக நடந்து கொள்கிறாள். சாஹேப்பின் மனைவி எத்தனை நல்லவள் என்றாலும் வேலைக்காரி சஜ்ஜனிக்கு அவள் சக்களத்தியாகவே படுகிறாள். இப்போது மூர் சாஹேப்பிடம் மிகவும் அன்பையும் கோபத்தையும் ஒருங்கே  பொழிய ஆரம்பித்து விடுகிறாள் சஜ்ஜனி, சாஹேப்பும் அதை தடுக்கவில்லை,யுத்த களத்திலும் இரட்டை சந்தோஷம் காண்கிறார் சாஹேப்.

இப்போது வழக்கம் போல தாமதமாக வீட்டுக்கு போகும் சஜ்ஜனி,பூனை போல சமையல் செய்கிறாள், வெந்நீர் விளாவி,கணவன் ரஜத்தின் களைத்த கால்களுக்கு ஒத்தடமும் கொடுக்க விழைகையில், அந்த மூர்க்கன், இவளை நீ தேன்காட்டுக்குள் போனாயா?!! கண்ட சாட்சியுண்டு,மறைக்காதே!!! என்று கேள்விகளால் துளைத்து அடித்து துவைக்கிறான்,அவள் மௌனம் சாதித்தவள் சாஹேப்பின் பெயரை காட்டிக்கொடுக்கவேயில்லை, இனி அடி பொறுக்க முடியாது என்னும் நிலையில் தப்பி ஓடுகிறாள்.

இப்போது,சாஹேப் தன் வீட்டில் வைத்து தனக்கு சாலைப் பணிக்கு வங்கிக்கடன் வாங்கித்தரும் குடும்ப நண்பர் சார்லஸுக்கு இரவு விருந்து அளிக்கிறார். அப்போது இவரின் நாய் மிகவும் குலைக்க,இவர் திருடன் நுழைந்திருக்கக்கூடும் என்று தன் ரைஃபிளுடன் சென்று பார்க்க,அங்கே பலத்த ரத்த காயங்களுடன், சஜ்ஜனி இருட்டில் புதர் அருகே படுத்திருக்கிறாள், சாஹேப்பிடம் இனி தன்னால் பொறுக்க முடியாது, கணவனும் ஊராரும் சேர்ந்து தன்னை தூக்கில் ஏற்றி கொன்றுவிடுவர், தன்னுடன் ஓடி வந்து எங்கேயாவது கண்காணாத இடம் போய் வாழ வருமாறு அழைக்கிறாள், இவரை மிகவும் விரும்புவதாயும், இவரின் அன்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றும் சொல்கிறாள்,சஜ்ஜனி.சாஹேப் அதை ரசிக்கவில்லை.

இப்போது துப்பாக்கியுடன் போன மூர் சாஹேப்பை காணவில்லை என்று லாரா ,சார்லசைப் போய் பார்க்க அனுப்ப, அவர் அந்த பண்ணையை சுற்றித்தேடுகிறார், சஜ்ஜனியை அப்படியே தூக்கி வந்த மூர் சாஹேப் நீலனின் அவுட் ஹவுசுக்குள் நுழைகிறார், எப்படியாவது இவருக்கு உதவ நீலனை வேண்டுகிறார். தனியே அழைத்து பணம் தந்து அவளை கண்காணாத இடத்துக்கு கொண்டு போய் விடச் சொல்லுகிறார், நீலன் அவளை ஜீப்பில் அழைத்துப்போய் ஆற்றில் ஒரு படகுக்காரனிடம் பேசி அவளை வடக்கே ஏதாவது தொலைவான ஊரில் கொண்டு போய் விடுமாறு சொல்கிறான்,

படத்தில் வரும் மலைச்சாலை உருவாக்க காட்சி
இவள் சாஹேப்புடன் தன்னுடன் படகில் இணைந்து கொள்வார் என நினைக்க, நீலன் அவர் வரமாட்டார்,அவருக்கு சாலை,அதனால் கிடைக்கும் பணம்,அவர் மனைவி,அவர் மகன் தான் முக்கியம்,நீ அவரை மறப்பது தான் நல்லது என்று, பணத்தை அவளிடம் திணித்து கண்காணாத இடம் போகச் சொல்கிறான், ஏற்கனவே உன்னை ஊரும் உறவும் ஒதுக்கியது போலத்தான், எஞ்சியிருப்போரையாவது நிம்மதியுடன் வாழவிடு என கெஞ்சுகிறான் நீலன். அவள் கடைசி வரை நம்பவேயில்லை,சாஹேப்பின் அன்பை இவள் பெற்றதை பொறுக்காத நீலன் தான் இவர்களை பிரிக்கிறான் எனக் கொதிக்கிறாள்,அப்படியென்றால் ஊருக்குள் வா என்று நீலன் இழுக்க வேறு வழியில்லாமல் படகில் ஏறி பயணிக்கிறாள்.

இப்போது சஜ்ஜனியைக் காணவில்லை என்று அவளின் தம்பி மனஸ் மூர் சாஹேப்பின் வீட்டிற்கே தேடி வருகிறான், நீலனிடம் ஏதாவது தெரியுமா? எனக்கேட்கிறான்.இவர்கள் நேற்றே அவள் கிராமத்துக்கு திரும்பி விட்டாளே, என பதிலுரைக்கின்றனர்,

அன்று இரவு அதே போல நாய் குலைக்க,குதிரையும் ஓலமிட சாஹேப்பைத் தேடி யட்சினி போல சஜ்ஜனி நீலனின் அவுட் ஹவுசுக்குள்ளே வந்து குத்துக்கல் போல அமர்ந்து கொள்கிறாள், நீலன் என்னடா ஒண்ட வந்த பிடாரியாக திரும்பி விட்டாளே!!! என பயந்து போகிறான், சத்தம் கேட்டு சாஹேப்பும் அங்கே வர, சஜ்ஜனி ஓடிப்போய் அணைத்துக்கொள்கிறாள், நீலனைப் பற்றி புகார் செய்கிறாள்,சாஹேப் அவளை விலகியவர்,நீலனிடம் சொல்லி நான் தான் உன்னை வெளியூருக்கு அனுப்பச்சொன்னேன், நீ இங்கே இருந்தால் ஊரார் இங்கே வந்து உன்னை, நீலனை, என்னை என் குடும்பத்தையே அழிப்பார்கள், விலகிவிடு என்கிறார், அவரால் அவள் கண்ணை பார்த்து பேசமுடியவில்லை, அதை சாக்காய் வைத்து,என்னை விரும்பவில்லை என்று கண்ணைப்பார்த்து சொல்லுங்கள் என்கிறார்,சாஹேப் நான் உன்னை விரும்பவில்லை என்று சொல்ல,அங்கே நீலனின் ப்ரிட்டீஷ் பிஸ்டால் வெளியே இருக்க ,அதை சட்டேன்று எடுத்து தன் நெஞ்சில் பதித்து சுட்டுக்கொண்டு சரிகிறாள் சஜ்ஜனி.எல்லாம் முடிந்து விடுகிறது,சஜ்ஜனியை தோளில் அணைத்து கேவுகிறார் சாஹேப்.பின் தலை தெரிக்க வீட்டுக்குள் போனவர்.

அங்கே,மூரின் மனைவி கிராமபோனின் பலத்த சத்த இசையுடன் குளியல் தொட்டி நீரில் உல்லாசமாய் குளித்துக்கொண்டிருப்பதால் அவளுக்கு துப்பாக்கி சத்தம் கேட்கவில்லை என அறிகிறார்,இவர் அவளிடம் குதிரை லாயத்தின் தாழ்ப்பாள் பெயர்ந்து விட்டபடியால நானும் நீலனும் அதை இரவே சரி செய்யப்போகிறோம், நீ பூட்டிக்கொண்டு தூங்கு என்று சட்டையை மாட்டிக்கொண்டு வருகிறார்,

இப்போது நீலனுக்கும் சாஹேப்புக்கும் பிணத்தை மறைப்பதைத் தவிர வேறு வழியில்லை,சாஹேப்பின் நெறி தவறிய உறவு சஜ்ஜனியின் தற்கொலையில் முடிந்து, ஊராரின் கொலைவெறியை தூண்டி விட்டால் என்ன ஆகும் என அஞ்சுகிறான், சாஹேப் கல்லை கட்டி ஆற்றில் விட்டு விடுவோம் என்று சொல்ல, நீலனுக்கு ஜலசமாதி செய்வது பிடிக்கவில்லை, தற்கொலை செய்துகொண்ட அவளின் ஆன்மா அலையாமல் இருக்க அதை எரியூட்டுவதே சிறந்தது என்கிறான். ஆனால் சாஹேப் அந்த சிதையின் புகை நம்மை காட்டிக்கொடுத்துவிடும், என மறுத்து போர்வையில் சஜ்ஜனியை சுற்றி நிறைய கற்களை அதனுடன் அடுக்கி, அதை ஆற்றில் மூழ்கடிக்கின்றார்

இனி என்ன ஆகும்?
சஜ்ஜனியை தேடும் அவளின் சகோதரனுக்கு சஜ்ஜனியின் சவம் கிடைத்ததா?
சஜ்ஜனி சுட்டுக்கொண்ட நீலனின் துப்பாக்கியை அவர்கள் என்ன செய்தனர்?
தன் விருப்பத்திற்குரிய வேலைக்காரி சஜ்ஜனி காணாமல் போனதை அறிந்த சாஹேப் மனைவி லாரா என்ன செய்தார்?
தன்னிடம் அடிவாங்கி ஓடிப்போன மனைவி சஜ்ஜனியை ரஜத் தேடினானா?
மிகவும் கட்டுப்பெட்டியான அந்த கிராம மக்கள் ஓடிப்போன சஜ்ஜனியைப் பற்றி என்ன நினைத்தனர்?
சாஹேப்பின் ஒரே கனவான அந்த மலைச்சாலைப் பணிகள் நிறைவேறியதா? போன்றவற்றை படத்தில் பாருங்கள்.

படத்தின் ஒளிப்பதிவும் இசையும் இரு கண்கள் , பார்வையாளர் நெஞ்சை விட்டு அத்தனை எளிதில் அகலாத படம், படத்தில்  Mark Kilian இசையும் காட்சியும் ஒன்றுடன் ஒன்று ஒட்டி உறவாடும் மாயாஜாலத்தைப் பாருங்கள். படத்தில் ராஜா ரவிவர்மா தன் தைல ஓவியங்களில் உபயோகப்படுத்திய எஃபெக்டுகளும், டோன்களும் நந்திதாதாஸின் தோன்றும் ஃப்ரேம்களில் பின்பற்றப்பட்டு,அதை உபயோகப்படுத்தி, அவரை எத்தனை அழகாக காட்ட முடியுமோ அத்தனை அழகாக ஒரு சகுந்தலை ஓவியம் போல காட்டியுள்ளார் சந்தோஷ் சிவன்.

படத்தின் ஒளிப்பதிவுக்கு இன்ஸ்பிரேஷனாக பதேர் பாஞ்சாலிக்கு ஒளிப்பதிவு செய்த Subrata Mitra.வின் புகழ்பெற்ற ஆக்கங்களை கிரகித்து உள்வாங்கி காட்சியமைத்திருப்பதும், அது தந்த அற்புதமான ரிசல்டுமே இதன் கூடுதல் சிறப்பு, ராகுல் போஸ் நடிப்பைப் பற்றி ஒருவர் சிலாகிக்காமல் இருக்க முடியாது,பேரலல் சினிமாவின் நம்பிக்கை ஒளி,இவரின் ஜாப்னிஸ் வைஃப், மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர் வரிசையில் இதுவும் இவரின் நடிப்புக்கு சிறந்த போர்ட்ஃபோலியோ, இவரின் அப்பாவாக திலகன், நண்பனாக ஸ்ரீஜித் சுகுமாரன்,வேலைக்காரி சஜ்ஜனியாக நந்திதா தாஸ் அழகிய வேலைக்காரி வேடத்துக்கென்றே பிறந்தவர் போல,தொடர்ந்து அழகி,1947 எர்த்,பின்னர் இந்தப்படத்திலும் அழகிய வேலைக்காரி வேடம் இவருக்கு, சஜ்ஜனியின் கோபக்கார கணவனாக லால்,மூர் சாஹேப்பின் நல்ல மனைவி லாராவாக Jennifer Ehle என்று மிக அற்புதமான காஸ்டிங், ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் என்று மிக அற்புதமான உருவாக்கப்பட்ட படம்.உலக சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத படைப்பு.


படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-