ஸக்ம் [Zakhm][ज़ख़्म] [ஹிந்தி][1998][இந்தியா]


மஹேஷ் பட் இயக்கிய Zakhm |ஸக்ம் [காயம்] ஹிந்திப்படம் 1998 ஆம் ஆண்டு வெளியானது, இது அவரின் சொந்த  வாழ்க்கையை தழுவி புனையப்பட்ட கதையும் கூட, படம்  மஹேஷ் பட்டின் சிக்கல் மிகுந்த பால்ய பருவத்தை நமக்கு அறிமுகம் செய்கிறது, 

பாலிவுட்டில் புகழின் உச்சியில் இருக்கும் இசையமைப்பாளர் அஜய் [அஜய் தேவ்கன்]யின் கண்ணோட்டத்தில் கதை சொல்லபடுகிறது,1992 ஆம் ஆண்டு பம்பாயில் இந்து முஸ்லிம் வன்முறை வெடித்து ,ஊரடங்கு உத்தரவு 23 மணி நேரம் அமலில் இருக்கிறது,எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு கண்,ரத்தத்துக்கு ரத்தம் என்று சுயநலம் கொண்ட அரசியல் வாதிகள் தூண்டிவிட்டு படுகொலைகள் அரங்கேறுகின்றன.அரசு மௌனசாட்சியாக வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. இவரின் மனைவி  கருத்தரித்திருக்கிறார்,இந்த மதக்கலவர சூழலில் இங்கே இந்தியாவில் குழந்தை பெற்றுக்கொள்வதை வெறுக்கிறார்,

தன் தாய் வீடான லண்டனுக்கு போக ஆயத்தமாகிறார்.அஜயையும் தன்னுடன் அழைக்கிறார்,ஆனால் அஜய்க்கு தன் அம்மா மீதும்,பிறந்த ஊரின் மீதும் அப்படி ஒரு வினோதமான பக்தி உள்ளது.அஜய்க்கு ஆனந்த் என்னும் தம்பி இருக்கிறான்,அவன் எந்நேரமும் சிவசேனா போன்ற ஒரு மதவெறிக்கட்சியில் கட்ட பஞ்சாயத்து செய்வதையே பெருமையாக நினைக்கிறான்,அங்கே அவனது தலைவனாக ராஜ்தாக்கரே போன்றே தோற்றம் கொண்ட சுபாத்தை நாம் பார்க்கிறோம்,இவன் பேசும் போது,ஏன் மூச்சு விட்டாலே விஷவிதைகளாக முஸ்லீம் துவேஷம் வந்து விழுகிறது,அவனது மகுடிக்கு தம்பி ஆனந்த் நடனமாடுகிறான்.அஜய் எத்தனை திட்டினாலும் கேட்பதில்லை.

படத்தில் இவரின் அம்மா ஒரு முஸ்லிம்,ராமன் என்னும் ஆச்சாரமான இந்து குடும்பத்தைச் சேர்ந்த  படஇயக்குனரோடு இல்லற பந்தம் கொண்டிருக்கிறார், ராமனின் அம்மா ஒரு சாதி மதத்தை போற்றிப் பாதுகாக்கும் பேய்,இவரின் அம்மா நான் இறந்த பிறகு நீ உன் விருப்பம் போல் அந்த முஸ்லிம் பெண்ணை மனைவியாக்கி இந்த வீட்டுக்குள் கூட்டிவா என வரட்டுப் பிடிவாதமாயிருக்க, ராமன் மற்றும் பூஜாபட் தம்பதிகள் ஊரரியாமல் சேர்ந்து வாழ்கின்றனர், அஜய் என்னும் 10 வயது மகனும் உண்டு,அஜயின் அப்பா எப்போது நம்மை அவர் வீட்டுக்கு கூட்டிப்போவார் எனும் ரீதியான  கேள்விகளுக்கு அவனின் அம்மாவால் விடை சொல்லமுடியவில்லை,அதே நேரம் இவர்களது காதல் மிக உயர்வானது என நம்புகிறார்,

ராமனை எப்போதுமே நிர்பந்திப்பதில்லை, இந்நிலையில் ராமன் தன் தாயின் தற்கொலை மிரட்டலில் பெயரில் ஒரு ஆச்சாரமான இந்துப் பெண்ணை மணக்கிறார்,குற்ற உணர்வுடன் அஜயின் அம்மாவிடம் மண்டியிட்டு நான் தோற்றுவிட்டேன்,என குமுறுகிறார்,அவள் இப்போதும் எந்த கோபமும் சாபமும் இன்றி அவரை ஏற்று அணைக்கிறாள், இப்போது ராமனின் இன்னொரு வாரிசும் இவரது வயிற்றில் வளர்கிறது,அதை இவள் ஒன்றுமே செய்வதில்லை, ராமனின் மேல் அவள் உயிரையே வைத்திருக்கிறாள். ராமன் தன் அம்மாவின் கட்டாயத்துக்கிணங்க வேறொரு பெண்ணை மணந்தாலும், அவரின் எண்ணங்கள் எல்லாம் இவர்களைப்பற்றியே இருக்கிறது, 

அஜயின் அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவர் இப்போது இங்கே வருவதில்லை,அதே சமயம் வேறொரு பெண்ணிடமும் அவருக்கு உடலால் தொடர்பில்லை என்பதை அறிகிறோம்,அவளிடம் முதல் முஸ்லிம் மனைவியைப் பற்றியும், மகன் அஜயைப் பற்றியும் முழுதும் சொல்லிவிடுகிறார்,இந்நிலையில் அஜயின் அம்மாவிற்கு பிரசவ வலி வர,அவர் இப்போது ஒரு ஆண் மகவை பெற்றெடுக்கிறார்,இந்த செய்தியை அஜய் ராமன் வீட்டிற்கு தொலை பேசி வழியே சொல்ல,அவர் மனைவி அதை நெக்குருக கேட்கிறார், அவரும் தன் கணவரை மிக நன்றாக புரிந்து வைத்திருப்பதை நாம் அறிகிறோம்,இப்போதும் அவரது சாதி மதப்பேயான தாய குதிக்கிறாள்,அக்குழந்தைகளும்,அவளும் புழு பூத்து சாவார்கள்,என்று சபிக்கிறாள்,இவர் கோபத்திலும் விரக்தியிலும் காரை இயக்கி ஆஸ்பத்திரிக்கு விரைகையிலேயே லாரி மோதி கார் விபத்துக்குள்ளாகி இறக்கிறார்,

ராமனது இரண்டாம் மகவு வந்த அன்றே அவர் மரணமடைந்தது ராமனின் அம்மாவை கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்ல, ராமனின் ஈமைச்சடங்கின் போது அங்கே பச்சைக்குழந்தையை தூக்கிக்கொண்டு அஜயின் துணையுடன் ராமனின் ஈமைச்சடங்கில் குழந்தையை காட்டி ஆசி பெற கனத்த இதயத்துடன் வருகிறார்.அங்கே ராமனின் அம்மா ,அவரை மிக இழிவாக பேசுகிறார், ஒரு முஸ்லிம் காலடி என் மகனின் ஈமைச்சடங்கின் போது பட்டு,தீட்டானதே,இனி அவன் எப்படி மோட்சத்துக்கு போவான் என ஏசுகிறாள்,

அஜய் தடுக்க அவனை அறைகிறாள்,ஆனால் ராமனின் இளைய மனைவி அம்மாவிடமிருந்து குழந்தையை வாங்கியவள் அணைத்து ஆதூரமாக ஆசியளித்து அனுப்புகிறாள், வாசலிலேயே அமர்ந்த அம்மா அவரது ஆத்மா சொர்க்கத்துக்கு போக வேண்டி அல்லாவிடம் இறைஞ்சி தொழுகிறாள். சிறுவன் அஜய்க்கு அன்று தான் தன் அம்மா ஒரு முஸ்லிம் என்பதே தெரியும், இத்தனை நாள் அவரை இந்து என்றே நினைத்திருக்கிறான்,அம்மாவை நெற்றி நிறைய பொட்டோடும்,தலை நிறைய பூவோடுமே பார்த்திருக்கிறான் அஜய்,அம்மா இப்போது மிகவும் தைரியம் கொள்கிறாள்,சிறுவன் அஜயிடம் தான் இறக்கும் வரை அம்மா ஒரு முஸ்லிம் என்பதை தம்பியிடமோ,யாரிடமோ சொல்லக்கூடாது,தான் இறந்த பின்னர் இவரை  முஸ்லிம் முறைப்படி அடக்கம் செய்யவேண்டும்,அப்போது தான் இவர் ராமனுடன் சொர்க்கத்தில் இணைய முடியும் என வேண்டி சத்தியம் பெறுகிறார். இனி இந்த இந்து முஸ்லிம் மத துவேஷம் புரையோடிப்போன சமூகத்தில் குழந்தைகளை சிக்கலின்றி வளர்க்க வேண்டி தன்னை கிருஸ்துவர் என்றும் சொல்லிக்கொள்கிறார். ராமனின் நினைவாகவே மீத வாழ்நாளைக் கழிக்கிறார்,இப்போது வருடங்கள் ஓட,பிள்ளைகள் வளர்ந்து மிக நல்ல நிலைக்கு வந்து,அஜய்க்கு திருமணமும் ஆகிவிட்ட நிலை.அஜய் இப்போதும் தாயை மனைவியையும் விட மேலாக  நேசிக்கிறார்.மனைவியும் அதை நன்கு புரிந்து கொண்டு நடக்கிறாள்.

இப்போது பம்பாய் கலவரபூமியாயிருக்கிறது. அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்று பாபர் மசூதி இடிப்பையும்,அதைத் தொடர்ந்து கலவரம் வெடித்ததையும்,இந்து முஸ்லிம் இரு தரப்பிலும் மக்கள் பலியானதையும்  திரும்பத் திரும்ப ஒளிபரப்ப  ,அங்கே உணர்ச்சி வெடிக்கிறது, ராமனின் அம்மா சர்ச் சென்று திரும்புகையில்  மதவெறியர்கள் சிலரால் இந்துப்பெண் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தப்படுகிறார் [இது மட்டும் சினிமாவிற்கு செய்த புனைவு] ,சிகிச்சை பலனளிக்காமல் 80 சதவித தீக்காயங்களுடன் இரு தினங்களில் இறந்தும் போகிறார். இப்போது ராஜ்தாக்கரே போன்ற தோற்றம் கொண்ட மதவெறி அரசியல் வாதி,இந்த சூழ்நிலையில் இவர் அம்மாவின் பிணத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறான்,போலீசாரும் அவனுக்கு உடந்தையாக இருக்கின்றனர்,சரத் பவாரின் மாநில அரசு,பொம்மை போல வேடிக்கை மட்டும் பார்க்கிறது.ஊரெங்கும் கலவரம்,தம்பியிடம் அஜய்,அம்மாவை முஸ்லீமாக அடக்கம் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்க,அவன் கேட்பதாயில்லை,இந்நிலையில் இவர் அம்மாவை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற முஸ்லிம் இளைஞனை இந்து மதவெறி ஆட்கள் அடித்து மண்டையை உடைக்க,அவனும் ஆஸ்பத்திரியிலேயே கட்டிலுடன் விலங்கிடப்பட்டு சேர்க்கப்படுகிறான்,தான் கொன்றது ஒரு முஸ்லிம் பெண்மணியை என அறிந்ததும்,ஐயோ பாவம் செய்துவிட்டேனே,என் மதத்தை காப்பாற்ற என் அம்மாவையே கொன்று விட்டேனே ,என்னை மன்னித்துவிடுங்கள்,என கதறும் இடம்,மிகவும் உணர்ச்சிகரமானது,

மத வெறி தலைவிரித்தாடும் காலம்,உதவி செய்வதாகக் கூறிக்கொண்டு பிணத்தின் மீது அரசியல் செய்யும் அரசியல் பன்றிகள்.அந்த காட்சியமைப்பை எந்த ஒரு சாதி மத கொலைகளுடனும் ஒருவர் பொருத்திப்பார்க்கலாம்,தனி நபர் சுக துக்கங்களில் அரசியல்வாதிகளின் அருவருப்பான தலையீடு எத்தனை ஆபத்தானது என நம் நெஞ்சம் பதறும் காட்சியது. 

அஜயின் அம்மாவின் சவ அடக்கத்தை  மகன்களும் மருமகளும் எப்படி சாத்தியமாக்கினர்? என்பதை படத்தில் பாருங்கள், எத்தனை சிக்கலான உறவுப் பின்னல்களின் கோர்வை என வியக்கிறேன் . தன் அம்மாவின் பாத்திரத்தில் தன் மகள் பூஜா பட்டையே நடிக்க வைத்துள்ளார் மஹேஷ் பட். இப்படத்தில் இவரது பாத்திரத்தில் நடித்த அஜய் தேவ்கனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது, படம் 1992 இந்து முஸ்லிம் மதக்கலவரம் நடந்த 6 வருடம் கழித்து வெளியானது, மிகத் துணிச்சலான படம், படைப்பாளி எப்படி இருந்தால் என்ன? அவனின் படைப்பு தானே முக்கியம்?!!! படத்தில் இவர் முஸ்லிம் அம்மாவின் இந்துக்கணவனாக நாகார்ஜுனா மிக அருமையான நடிகர்,மிகப்பாந்தமாக ராமன் என்னும் பாத்திரத்தில் பொருந்தியிருந்தார், அஜயின் மனைவியாக சோனாலி பிந்த்ரே, இவரின் தம்பியாக அக்‌ஷய் ஆனந்த் என்று மிகச் சிறப்பான காஸ்டிங்கை தன்னுள் கொண்ட படம்.

நடிகர் அஜய் தேவ்கன் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்,அவர் ஒருபுறம் சிங்கம்,ஹிம்மத்வாலா போன்ற வணிக ரீதியான படங்களில் நடித்தாலும் இன்னொரு பக்கம் ரெய்ன்கோட், ஓம்காரா, ஹல்லாபோல், ஆக்ரோஷ், கங்காஜல், கம்பெனி என பரீட்சார்த்தம் கலந்த சினிமாக்களிலும் தன்னை முன்னிறுத்துபவர், அப்படிப்பட்ட முயற்சிகளில் ஒன்று தான் இப்படம், இதில் இசையமைப்பாளர் அஜயாக மிக அற்புதமாக பங்களித்துள்ளார்.

பாலிவுட் இயக்குனர் மஹேஷ் பட்டின் மிகவும் வெளிப்படையான பேட்டிக்கான சுட்டி இது ,அடுத்தவர்களின் அந்தரங்கம் தான் எத்தனை சுவாரசியமானது?!!! இவரது  மகள் பூஜாபட் மீது இவர் இன்செஸ்ட் உறவு வைத்துள்ளாரா?!!! என்னும் இந்த விவகாரமான போட்டோவால் எழுந்த கேள்விக்கு இவர் சொன்ன பதில் படியுங்கள் , ஹாலிவுட்டில் இருந்து இவர் திருடியதை எல்லாம் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளுதல் , தன் வாழ்வில் சந்தித்த அடுக்கடுக்கான காதல் மற்றும் இல்லறத் தோல்விகள்,தன் நான்கு படங்கள் அடுத்தடுத்து தோற்றது,தன் வழிகாட்டியான U.G. கிருஷ்ணமூர்த்தி [ஜிட்டு அல்ல] தன் கடைசி நாட்களில் மருத்துவம் எடுத்துக்கொள்ளாமல் பிடிவாதமாக மடிய இவரால் ஒன்றுமே செய்யமுடியாமல் இவர் சிதை மூட்டியது, என ஒளிவு மறைவில்லா பேட்டி இது. வழ வழா கொழ கொழா என பிரபலங்களிடம் கேள்வி கேட்கும் நிருபர்கள் அவசியம் படித்து தம்மை திருத்திக்கொள்ளவும்  உதவும்.

படத்தில் வரும் கலி மே ஆஜ் சாந்த் நிக்லா என்னும் மரகதமணி இசையமைத்த பாடலின் காணொளியை அவசியம் பாருங்கள்,எளிமையான இனிய பாடல்,அதே போல எளிமையான அழகிய காட்சியாக்கம், அனைவருக்கும் பிடிக்கும்.