பெரும்தச்சன்[പെരുന്തച്ചന്‍][Perumthachan][1991][மலையாளம்]


பெரும்தச்சனாக திலகன்
ன்று மீண்டும் பெரும்தச்சன் மலையாளப் படம் பார்த்தேன், ஏற்கனவே ஆடுகளம் வெளியான போது, அதன் திரைக்கதை மற்றும் பாத்திரப்படைப்பின் செய்நேர்த்தியை வியந்து அதே போன்றே குருவின் சிஷ்யன் மீதான பொறாமை என்னும் மையப்புள்ளியில் இயங்கும் இப்படத்தை மீள்பார்வை பார்த்தேன். 90களில் வெளியான மலையாள பரீட்சார்த்த சினிமாக்களில் மிக அருமையான படம் இது , பல சிறப்பம்சங்களை தன்னுள் கொண்டது, கேரளத்தின் நாட்டார் கதைகளில் மிகவும் புகழ்பெற்றது ராமன் பெரும்தச்சன் பாத்திரம், அதைத்தழுவி M.T.வாசுதேவன் நாயர்   திரைக்கதை எழுதி அஜயன் இயக்கத்தில்,மகா நடிகர் திலகன் ராமன் பெரும்தச்சனாக தோன்றி நடிப்பில் பல உயரங்களை தொட்ட படம் இது, 

டிகர் பிரஷாந்த்திற்கு மலையாளத்தில் முதல் படம்,நெடுமுடி வேணு என்னும் அற்புத நடிகர் தம்புரானாக நடித்த படம், விபத்தில் அகால மரணமடைந்த மோனிஷாவை நாம் மறக்கமுடியாது [ என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி] அவர் இளைய தம்புராட்டியாக அற்புதமாக பங்களித்த படம்,சந்தோஷ் சிவனின் மிக அற்புதமான ஒளிப்பதிவில் வெளியான படம், மனோஜ் கே ஜெயனுக்கு ஆரம்ப கால படம்.அழகிய பார்கவி தம்புராட்டியாக வினயா பிரசாத் நடித்த படம். 1700களின் கேரள மன்னராட்சியில் மருமக்கதாயம் தரவாடு பிண்ணணியில் உருவான படைப்பு, மலையாள  சினிமாவில் கதை திரைக்கதை, செய்நேர்த்திக்கு இன்றும் உதாரணம் காட்டப்படும் க்ளாசிக் இது.

டத்தின் கதை:-
குன்னனூர் என்னும் கிராமத்தில், ஒரு தரவாடு வீட்டாரின் குழந்தைப்பேரின்மை தோஷம் போக்க நம்பூதிரிகள் ஆரூடம் சொல்கின்றனர், அதில் அந்த தரவாடு வீட்டில் சுயம்வர துர்க்கைக்கு தனி  சன்னதி அமைத்து வழிபடச் சொல்கின்றனர், அவ்வேலைகளை முன்னின்று நடத்த ராமன் பெரும்தச்சன் என்னும் கட்டிடக்கலை நிபுனர் அவ்வூருக்கு கால்நடையாக வருகிறார். இவர் தந்தை ஒரு பிராமணர் என்னும் வதந்தி இவருடனே உலவுகிறது, அதை இவரும் மறுப்பதில்லை, இவர் சமஸ்கிருதமும், வேத உபநிஷத்துக்களும், கற்றிருக்கிறார், ஆனால் இவர் வளர்பால் ஆச்சாரி-விஸ்வகர்மர் சமூகத்தை சேர்ந்தவர். இவர் மிகவும் கொள்கைப்பிடிப்பும், தொழில் பக்தியும் கொண்டவர். எத்தனையோ கோவில்களையும், அரண்மனையை ஒத்த வீடுகளையும் கட்டியிருந்தாலும் தனக்கென வீடு கட்டிக்கொள்ளவில்லை,பேராசை அறவே அற்றவர்,புகழ்ச்சியை அதீதமாக விரும்புபவர்.அதற்கான தகுதியை கொண்டிருப்பவர்,இவருக்கு சுயமரியாதையே முக்கியம்,சுயமரியாதைக்கு பங்கம் வரும்படியான வேலைகளில் இருந்து இவர் கோபம் கொண்டு விலகி,பாதியிலேயே வெளியேறிய கதைகளும் நிரம்ப உண்டு.

ட்சனையாக கொடுப்பதை பெரிய மனதுடன் வாங்கிக் கொள்கிறார்,என்ன தான் பெரிய கோவில்களும் அரண்மனைகளும் வடிவமைத்தாலும் இவரின் தட்சனை கோடி வேட்டித் துண்டும்,அதிக பட்சம் ஒரு பொற்காசுவாகத்தான் இருக்கிறது. தன் தொழிலில் அபார கர்வமும்,காதலும் கொண்டிருக்கிறார், அதனாலேயே மத்திம வயது வரை திருமணமும் செய்து கொள்ளவில்லை,பின்னர் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப்பெண்ணை தேடி மணந்து கொள்கிறார்,அப்பெண் ஒரு மகனை பிரசவித்து விட்டு  இறந்தும் போகிறார். மகனை இவரது ஊரைச் சேர்ந்த நெசவாளிகள்  வளர்த்து வருகின்றனர், இவருக்கு தன் 2 வயது மகனைப் போய் பார்க்க கூட நேரம் கிடைக்காத படிக்கு நிர்மாணப் பணிகள் ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றன.இப்போது தொழில் நிமித்த அழைப்பின் பேரில் இந்த குன்னனூருக்கு வருகிறார், அங்கே முதல் காட்சியிலேயே இவரைப்பற்றிய பிம்பத்தை நம்முள் நன்கு நிறுவி விடுகிறார் இயக்குனர் ,ஒரு கோவிலின் விளக்குத் தூணில் நம்பூதிரியால் ஏற்றப்பட்ட விளக்குகள் ஆடிக்காற்றில் எரியாமல் தொடர்ந்து அணைய,அங்கே மண்டபத்தில் தூங்க எத்தனிக்கும் பெரும் தச்சன்,ஒரு கற்பலகையை காற்றின் திசையை ஆராய்ந்து மண்ணில் ஊன்றுகிறார்,

ப்போது காற்று தடுக்கப்பட்டு விளக்கு சுடர்விட்டு எரிகிறது,கோவில்  நம்பூதிரியிடம் கற்பலகை வைத்த இடத்தில் ஒரு ஸ்திரமான கல்லை நிரந்தரமாக ஊன்றச் சொல்கிறார், நம்பூதிரி இவரை திருமேனி பிராமணர்  என்று அர்த்தம் கொள்ள, இவர் தன் பூனூலை கழற்றுகிறார், இது ஒரு ஆலய நிர்மாணத்துக்காக தரித்தது, வேலை முடிந்துவிட்டது,இதோ கழற்றிவிட்டேன் என்கிறார். நம்பூதிரி வழியாக பெரும்தச்சன் ஊருக்குள் வந்த செய்தி உன்னி தம்புரானுக்கு எட்டுகிறது. மறுநாள் இவர் 28  வருடங்களுக்கு முன்னர் வடிவமைத்த கோவிலகம் என்னும் தரவாடு வீட்டிற்கு செல்கிறார், அங்கே இவரின் பால்ய நண்பர் உன்னித் தம்புரானை பார்க்கிறார், இருவரும் உன்னியின் தந்தையிடம் சமஸ்கிருதம் ஒன்றாகப் படித்தவர்கள். மருமக்கள்தாயம் வழியில் அந்த வீட்டின் வாரிசு பார்கவி தம்புராட்டி, இவர் பால்ய நண்பர் உன்னியை மணவாளனாக வரிந்துகொண்டதை இவர் அறிகிறார்.


பார்கவியும் உன்னியும்
வர்களுக்கு மணமாகி 16 வருடமாகியும் பிள்ளைப்பேறின்மையை அறிகிறார், பெரும் தச்சன் சுயம்வர துர்கை சிலை செய்து, அதை அவர்கள் பூஜித்தால் குழந்தை பாக்கியம் உண்டு என பிரசன்னம் ஆனதையும் அறிகிறார். இவர் 28 வருடம் முன்னர் தன் ஆசானுடன் வந்து வேலை செய்து உருவாக்கிய உத்திரங்களை, தூண்களை, மர உப்பரிகைகள்,பலகணிகளை ஆதூரத்துடன் தடவிப் பார்க்கிறார், அங்கே ஒரு ஊஞ்சலும் உண்டே என இவரின் நினைவுக்கு வர அதையும் பார்க்கிறார், அப்போது வட்ட முகமும் சிறிய நாசியும் கொண்ட சிறுமியையும் நினைவு கூர்கிறார், அவர் தான் பார்கவி தம்புராட்டி, உன்னியின் மனைவி என அறிகிறார்,இவருக்குள் அந்த கோவில் சிலை போன்ற லட்சணங்கள் பொருந்திய தம்புராட்டி மீது காதலும் பக்தியும்  உண்டு, இவர் எங்கே துர்கை சிலை வடித்தாலுமே பார்கவி தம்புராட்டி முகத்தையே  சிலையாக வடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.அதையும் ஒளிவு மறைவின்றி சொல்கிறார்,பார்கவி தம்புராட்டிக்கு கணவன் தவிர தன் அழகை யார் புகழ்ந்தாலுமே ரசிப்பதில்லை,ஆனால் கணவன் தன் அழகை ஆராதிக்கவில்லையே என ஏக்கமும் கோபமும் கொண்டுள்ளார்.

ங்கேயும் சுயம்வர துர்க்கை சிலை வடிக்கையில் பார்கவி தம்புராட்டியின் முகமே பெரும்தச்சனுக்கு நினைவுக்கு வந்து போகிறது, பார்கவி தம்புராட்டி மீது உன்னி தம்புரானுக்கு ஏற்கனவே பயம் உண்டு, மருமக்கதாயம் வழி வந்த பெண்ணாதலால் குழந்தை இல்லா குறைக்கு தன்னை காரணம் காட்டி எந்நேரமும் தம்மை மணவிலக்கு செய்து விட முடியும் என எண்ணி அஞ்சுகிறார்,ஆனால் தம்புராட்டிக்கு தனக்கு மகவு இல்லையே என்னும் குறையைத் தவிர வேறு குறையில்லை,அந்தக் குறையை எண்ணி உன்னியை நேரம் கிடைக்கையில் சாடுகிறார், தம்புராட்டி சாதியத்தில் மிகவும் ஊறியவர், என்ன தான் குழந்தைப்பேறு பரிகாரங்கள் ஒருபக்கம் நடந்தாலும், தன் கணவனை கண்ணசைவிலேயே ஆட்டுவிக்கிறார்,சரியான நேரத்தில் படுக்கைக்கு அழைத்து கூடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

பெரும்தச்சனும் உன்னியும்
பார்கவி தமுராட்டி வேலைக்காரர்களை அடி மட்டத்திலேயே வைத்திருப்பவர்,பெரும்தச்சனின் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணுடனான விவாகமும் அதன் மூலம் பிறந்த மகவையும் பற்றியும் கூட தெரிந்து வைத்திருக்கிறார்.அதனால் அவரிடம் தொழில் நிமித்தமாக மட்டும் பேசுகிறார். இன்னும் 14 தினங்களில் நவமி திதியின் போது சிலை நிர்மால்ய பூஜை செய்ய வேண்டும் என்னும் நிலையில்,ஊன் உறக்கமின்றி துர்கை சிலையை இரவு பகலாக வடிவமைக்கிறார் பெரும்தச்சன், அதிலும் முகத்துக்கு பார்கவியையே வடிக்கிறார். அடிக்கடி தேவிமகாத்மியம் சொல்லும் பார்கவி தம்புராட்டியை வீட்டுக்குள் நுழைந்து பரவசத்துடன் தரிசிக்கிறார், அவள் வீணை மீட்டுகையில் இவர் உளியால் தாளத்துக்கு ஏற்றவாறு கல்லைத் தட்டுகிறார். இதை தம்புராட்டி ரசிப்பதில்லை. பார்கவியின் இசை மீதான ஈடுபாட்டுக்கு சிறப்பு செய்ய ஒரு சரஸ்வதி மண்டபம் கட்டவேண்டும், அதை தானே முன்னின்று வடிவமைப்பதாக வேண்டுகிறார் பெரும்தச்சன்,அதை நேரம் வாய்க்கையில் பார்க்கலாம் என உன்னியும் பார்கவியும் ஆமோதிக்கின்றனர்.

ன்று சிலை நிர்மாணத்துக்கு மேல்சாந்தியை அழைக்க செய்தி சொல்லவேண்டி உன்னி காலடி என்னும் ஊருக்கு கால்நடையாகவே தன் பரிவாரங்களுடன்  செல்கிறார். இவரின் பிள்ளையில்லாத குற்ற உணர்வால் அதிக செலவும் பெருமையும் தனக்கு எதற்கு? என,அவர் பல்லாக்கை உபயோகிப்பதில்லை, பார்கவி தம்புராட்டி சுயம்வர துர்க்கை சிலையை அதிகாலையில் குடிலுக்குள் வந்து பார்வையிடுகிறார். சிலையின் உடற்பகுதி முழுதும் முடிந்திருக்க, முகம் மற்றும் தலை அலங்காரம் இன்னும்  சிறிது வடிவமைக்க வேண்டியிருக்கிறதைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார், அங்கே உறக்கத்தில் இருந்து எழுந்த  பெரும்தச்சன் தீப்பந்த வெளிச்சத்தில் பார்கவியைப் அருகே பார்த்தவர் ,உணர்ச்சி மிகுதியில் சிலையின் கன்னத்தை சிற்பி உளியால் செதுக்க வருடுவது போல பார்கவியின் கன்னத்தை தொட , பார்கவி  விலகிச் சீறுகிறார், இதுபோன்ற எண்ணத்துடன் தம்புராட்டியான என்னிடம் நெருங்காதே, சிலை வேலை முடிந்தவுடன் நீ வீட்டுக்குள் வராதே, வேலைக்காரியிடம் செய்தி சொல்லி விட்டால் நானே  இங்கே வந்து பார்க்கிறேன், என்கிறார்.

ன்றே நடுநிசியில் சிலையின் முகம் பூர்த்தியாகி மகுடம் மட்டுமே மிச்சம் இருக்கும் நிலையில் இவரே நிலைகொள்ளாமல் தம்புராட்டியை அழைக்க அவளின் படுக்கை அறை இருக்கும் மாடிப்படிகள் ஏறுகிறார்.அந்நேரம் தம்புராட்டி கணவன் உன்னி இன்னும் வரவில்லையே என்று பலகணியில் வழிமேல் விழி வைத்து காத்திருக்க,பெரும்தச்சன் படுக்கை அறைக்கதவை தட்ட கையெடுத்தவர், இவர் காலங்காலமாக சேர்த்து வைத்த நல்லபேரை சபலப்பேய் தின்ன விடுவேனா?!!! என உள்ளுணர்வும் எச்சரிக்க அதிகம் வியர்த்தவர் வேகமாக வந்த வழியே படி இறங்குகிறார்.அதே சமயம் உன்னியும் தன் பரிவாரங்களுடன் வீட்டின் முன்வாசல் வழியே நுழைகிறார். இப்போது பெரும்தச்சனின் சபலப்பேய் வாசல்வழி வெளியேற , உன்னி தம்புரானின் வழியே  சந்தேகப்பேய் அதே வாசல் வழியே உள்நுழைகிறது,உன்னியிடம் தம்புராட்டிதான் எத்தனை நேரமானாலும் சிலை முடிந்த பின் அழைக்க சொன்னார் என பிதற்றுகிறார்.தம்புரானும் அவரின் பரிவாரங்களும் அதை நம்பவில்லை.  மறுநாள் இவரைக் கேட்காமலேயே துர்க்கை சிலைக்கு நீராட்டி, உருவேற்றி நிர்மால்ய பூஜைகள் துவங்க, இன்னும் மகுடத்தில் ஒரு வரி மட்டும் மிச்சம்,என்று பெரும்தச்சன் சிலைக்கு அருகே உளியுடன் ஓடி வர ,ஆச்சாரியின் வேலை முடிந்தாகிவிட்டது, திருமேனிகள் வசம் சிலை சென்றபின்  அதைத் தொடாதே, தீட்டுப்பட்டுவிடும் என்று எரிந்து விழுகிறார் உன்னி,பெரும்தச்சன் கோபத்துடனும் ஆற்றாமையுடனும் தட்சனை கூட பெறாமலே அவ்வூரை விட்டு வெளியேறுகிறார்.

ன் மகனுக்கு இன்னும் பெயர் வைக்காமலும் அன்னப்பிரஸ்னம் செய்யாமலும் இருப்பது நினைவுக்கு வர  தன் ஊரான திரிதலாவுக்கு நடக்கிறார்,அவரை போகும் வழியிலேயே ஒரு ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி சிதிலமடைந்த கோவில் கூரையையும்,புதிதாக கருடனும்,கொடிமரமும்  செய்ய வேலை கொடுக்க,இவர் ஊருக்கு போய்விட்டு வருகிறேன் என்று சொல்லியும் கேட்காமல் உச்சி மோர்ந்து  கையோடு கூட்டிக்கொண்டு போகின்றனர்,அங்கே வழிபட வரும் பார்கவி தம்புராட்டி பெரும்தச்சனை சந்திக்கிறார்,தட்சனை வாங்காமல் இவர் கோபித்துக்கொண்டு வந்ததில் தனக்கு வருத்தம் என்கிறார், ஐயோ அதெல்லாமில்லை நான் துர்க்கையை வழிபட விரைவில் நிச்சயம் அங்கே வருவேன் என்கிறார்,அவர் உடனே மறுத்து 7மாதம் கழிந்தபின் வந்தால் போதும்,அப்போது தான் தொட்டில் செய்யவும் தோதாக இருக்கும் என்று தான் கருத்தரித்திருப்பதை பூடகமாக சொல்கிறார்.இவர் மனமகிழ்கிறார்.இவரின் சிலையின் மகிமைதான் தனக்கு மகவு தகைந்துள்ளது என்கிறார்,ஆனால் அதெற்கென்று நன்றியெல்லாம் முகத்தின் நேரே தெரிவிக்கவில்லை,கண்டிப்பாகவே இருக்கிறார்.

ப்போதும் பெரும் தச்சனுக்கு தன் ஊருக்கே போகமுடியாதபடிக்கு பெரும்பணிகள், அதிலும் ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்த விதமாக உன்னி,பார்கவி தம்பதிகளுக்கு பெண் மகவு பிறந்ததைக்கேட்டு அது விளையாட 3 மரப்பாச்சி பொம்மைகளை செதுக்குகிறார்.பனங்கற்கண்டும் வாங்கிக்கொண்டு மீண்டும் அவ்வீட்டுக்குள் நுழைகிறார்,இவரின் வருகையை உன்னி ரசிக்கவில்லை, முகம் கொடுத்தும் பேசாமல் வெளியே போகச் செல்கிறார்.இவர்களைப் பற்றிய வதந்தி வேலைக்காரகளின் வழியே நன்றாக பரவியதை பெரும்தச்சன் அறிகிறார்.கையறுநிலையுடன் வெளியேறுகிறார். பார்கவி இவரின் வருகையை அறிந்தவர் உன்னியிடம் உதவி செய்தவனின் சாபத்தையும் வாங்கிக்கொண்டால் தான் இனிக்குமா?நான் வழி தவறிப்போய்  சூல் கொள்ள வேண்டியிருந்தால் 16 வருடங்கள் காத்திருப்பேனா?என்று சாட்டையடியாக கேள்விகள் கேட்க, உன்னி தெளிவடைகிறார். பெரும்தச்சனிடம் பின்னால் ஓடி மன்னிக்க வேண்டுகிறார்,பெரும்தச்சன் இவர்களுக்குள் எந்த தகாத உறவு இல்லை என விளக்கின் சுடரில் கைவைத்து சத்தியம் செய்துவிட்டு இவரது ஊருக்கு வருகிறார்.

 தன் மகனை வளர்த்த நெசவாளர் குடும்பத்தார்,அவனை கண்ணன் என அழைப்பதை அறிந்து பெயரை மாற்றாமல் விடுகிறார்,அவனை தன்னுடனே  வேலைக்கு அழைத்துச் செல்கிறார்.இப்போது உன்னி தம்புரான் இவர்கள் இருவரையும் வந்து சந்தித்து வேலைக்கான தட்சனையை தருகிறார், கண்ணனுக்கு சமஸ்கிருதம் பயிலும் சந்தர்ப்பம் வருகையில் தானே கற்றுத்தருகிறேன் என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார்.அவனுக்கு பெரும்தச்சனே குருவாய் நின்று சாஸ்திரங்கள், மற்றும் சிற்பக்கலைப் பாடங்களை பயிற்று வைக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதற்கேற்ப அவன் சாஸ்திரம்,மற்றும் சிற்பக்கலையில் உச்சம் காட்டுகிறான், 

ருடங்கள் ஓட, பார்கவி தம்புராட்டி நோய்வாய்ப்பட்டு இறந்தும் விடுகிறார். இப்போது அவரின் மகள் குன்ஹிக்காவு தம்புராட்டி[மோனிஷா] பதின்ம வயது பேரழகியாக மிளிர்கிராள்.கண்ணனையும் நன்கு வளர்ந்த இருபது வயது இளைஞனாக நாம் கண்ணுறுகிறோம்.எப்போதுமே பூணூலை அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான்.முகப்பொலிவை வைத்து புதிதாக பார்க்கும் யாருமே அவனை பிராமணன் என்றே கருதுகின்றனர். தன் அப்பா பயிற்றுவித்த சிற்பக்கலையில் இவன் புதுமைகளை புகுத்துகிறான்,இதனால் பெயரும் புகழும் அடைகிறான்,ஒருசமயம் அப்பா மனையடி சாஸ்திரம் பார்த்த ஒரு நிலத்தில் பூமி பூஜை நடக்க,அங்கே வந்த கண்ணன் விஸ்வகர்மன் மனையின் அகழ்ந்த மண்ணை வாயில் போட்ட பின்னர் அது யுத்த பூமி,வீடுகட்டி வாழ உகந்ததல்ல என சொல்கிறான்,அங்கே பூஜை போட வந்த நீலகண்டன் திருமேனி என்னும் பிராமணர் [மனோஜ்.கே.ஜெயன்] அப்பாவையே மகன் மிஞ்சுவதை கண்ணுறுகிறார்.ஊரின் பழம் பெரியவர்களிடம் இந்த மனையைப் பற்றி விசாரிக்க சொல்ல அது போர் நடந்த பூமிதான் என்பது ஊர்ஜிதமாகிறது,இதை மகிழ்ச்சியுடன் தன் தந்தையிடம் பகிர்ந்து கொண்ட கண்ணனிடம் இனி மனயடி சாஸ்திரம் கேட்டு யாரேனும் வந்தால் நீயே பார் என்று தன் வருத்தம் அவனுக்கு தெரியாமல் சொல்கிறார்.

ப்போது பெரும்தச்சனும் கண்ணனும்  ஒரு வழிநடையாக போகையில் ஒரு ஊர்பெரியவர்கள் எதிர்ப்பட்டு அவ்வூரின் ஆற்றின் குறுக்கே ஒரு மரப்பாலம் விரைவில் அமைத்துத்தருமாறு கேட்கின்றனர்,கண்ணன் குறுக்கிட்டு, விரைவில் வேலை முடிக்க கூலியும் அதிகம் தரவேண்டியிருக்கும்,என்று கண்டிப்பான தொனியில் சொல்கிறான்,ஊரார் திகைக்கின்றனர்,மரமே தானமாகத் தான் வருகிறது,கூலியும் அதிகம் தரமுடியாது என தயங்க, பெரும்தச்சனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை, வேலை ஒத்துக்கொண்டு பாலமும் முடிவடைகிறது, பெரும்தச்சன் அந்த பால அமைப்பு வேலையை தான் ஒருவரே முன்னின்று செய்கிறார்,

கனை வேறு பணம் நிறைய வரும் வேலைக்கு அனுப்புகிறார்.பாலம் நன்றாக வந்துள்ளது,அதில் ஒரு சிறப்பம்சமாக பாலத்தில் ஒருவர் ஏறிவரும் போதே,தண்ணீருக்குள் இருந்து ஒரு வீரன் பொம்மை ஒன்று வந்து ஏறி வருபவரை திடீரென தோன்றி பயமுறுத்துவது போல ஒரு அமைப்பையும் உண்டாக்குகிறார்,வெளியூரில் வேலை முடித்து வந்த கண்ணன்,இந்த அமைப்பை பார்க்கிறான்,இதென்ன பிரமாதம் என்று இரவோடு இரவாக இன்னொரு வீரன் பொம்மையை தயாரித்து அதையும் அங்கே நிறுவுகிறான்,இப்போது பெரும்தச்சன் பாலத்தின் மீது ஏறி நடக்க அவரின் வீரன் பொம்மையை,கண்ணன் செய்த வீரன் பொம்மை கன்னத்தில் அறைகிறது,ஊராரே சிரிக்கின்றனர்,இது தந்தை மகனிடம் பாடம் படிக்க வேண்டிய நேரம் என்கின்றனர்.இவர் அவமானத்தால் சிவக்கிறார்.கண்ணன் இன்னும் மமதை கொள்கிறான்.

ப்போது உன்னி தம்புரான் தன் உதவியாளர் மூலம் பெரும்தச்சனுக்கு தன்னைக் காணவரும் படி செய்தி சொல்லி விடுகிறார்,சரஸ்வதி மண்டபம் விரைவில் கட்டி முடித்து தன் மகளின் நடன அரங்கேற்றத்தை அதில் நிகழ்த்தவும் எண்ணுகிறார்,பெரும்தச்சனும் கண்ணனும் அங்கே சென்று அவரை சந்திக்கின்றனர், சரஸ்வதி மண்டபத்துக்கான வேலைகளை குன்ஹிக்காவு தம்புராட்டியே முன்னின்று கவனிக்கிறாள்,மண்டபப் பணிகளை மேற்பார்வையிட கட்டிட சாஸ்திரம் பார்க்கவும் நீலகண்டன் திருமேனி நியமிக்கப்படுகிறார்,

வருக்கு பெரும் தச்சன் மேல் அவநம்பிக்கை விழுந்துவிட்டிருக்க,அவர் கண்ணனை வைத்து சரஸ்வதி மண்டபத்தை முடிப்போம் என ஆலோசனை சொல்ல,உன்னி தம்புரானால் அதை தட்டமுடியவில்லை,கண்ணன் மண்டபத்தை வடிவமைக்கட்டும், பெரும்தச்சன் அதற்கு உதவியாக இருக்கட்டும் என முடிவாகிறது, இதைக்கேட்ட பெரும்தச்சனுக்கு கோபம் வருகிறது, ஒரு பிறவிக்கலைஞனை மதிக்கத்தெரியாத சமூகத்தில் இருக்கக்கூடாது என்று கிளம்பி விடுகிறார். அவர் போனது கண்ணனுக்கு வசதியாகிவிடுகிறது, குன்ஹிக்காவு தம்புராட்டி மீது காதலில் விழுகிறான் ,தம்புராட்டிக்கும் கண்ணனின் தொழில் நேர்த்தியும் ஆண்மையும் அவனிடம் காதலில் விழச்செய்கிறது,உன்னி தம்புரானுக்கோ குன்ஹிக்காவு தம்புராட்டியை நீலகண்டன் திருமேனிக்கு மணமுடிக்க ஆசைப்படுகிறார், சுற்றுவட்டாரத்திலேயே பணத்திலும்,பண்டிதத்திலும் சிறந்த குடும்பம் என்று முடிவெடுக்கிறார்,இப்போது கண்ணன் மேற்பார்வையில் மண்டபத்துக்கு அஸ்திவாரம் போடப்படுகிறது, இப்போது நீலகண்டன் மண்டப வேலைகளில் கண்ணனிடம் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்கிறார்.அடுத்த கட்டமாக  மண்டபத்தை தாங்கிப்பிடிக்க 8 மரத்தூண்களில் அஷ்டலட்சுமிகளையும் செதுக்க முடிவு செய்கிறான் கண்ணன்,அதற்கு மாதிரியாக நிற்க சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய குன்ஹிக்காவு தம்புராட்டியையே கேட்கிறான்,அவளும் சம்மதிக்கிறாள்.

த்தூண்களை வடிப்பதற்கு  நல்ல உறுதியான மரங்கள் தேவைப்படுகிறது, இப்போது கண்ணன் நீலகண்டன் திருமேனி தலைமையில்  மண்டபம் கட்ட மரங்கள் காட்டில் இருந்து வெட்டப்படுகின்றன,அங்கே திடீரெனத் தோன்றிய பெரும் தச்சன்,வேலையை உடனே நிறுத்தச் சொல்கிறார்,மரத்தை வெட்டும் முன்னர் மரத்திடம் அனுமதி வாங்கினாயா?!!! என  கண்ணனையும் ,நீலகண்டன் திருமேனியையும் கேள்வி கேட்டு திக்குமுக்காடச் செய்கிறார், அவர்கள் இல்லை என்று சொல்ல ,ஒரு சிற்பமோ,தூணோ,உத்திரமோ பன்னெடுங்காலம் நிலையாக நீடித்து நிற்க வேண்டும் என்றால் அது முறையாக தோஷநிவர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டிய அவசியத்தை சொல்கிறார். அதற்கான சமஸ்கிருத ஸ்லோகத்தையும் சொல்லி நீலகண்டன் திருமேனியை ஊரார் முன் மூக்கறுக்கிறார், கண்ணன் முகத்திலும் கரியைப் பூசுகிறார், இப்போது ஊராரே பெரும்தச்சனை கொண்டாடி,அவரை மண்டபம் நிர்மானிப்பில் முன்னின்று ஆலோசனை தந்து உதவும் படி பணிக்க ,தான் வெளியூரில் முடிப்பதாக ஒத்துக்கொண்ட சில வேலைகளை முடித்த பின்னர் வருவதாகச் சொல்கிறார் பெரும்தச்சன்.

ண்னனுக்கும் குன்ஹிக்காவுக்கும் இடையில் காதல் முற்றியிருக்கிறது, சிலை செய்யும் குடிலில் தனிமையில் சந்தித்து அடிக்கடி பேசுகின்றனர், கண்னன் தன்னிலை மறக்கிறான்,நீலகண்டன் திருமேனி மிகவும் எரிச்சலடைகிறார்,உன்னியிடம் இந்த விஷயத்தையும் பற்ற வைக்கிறார், அப்போதும் கண்ணன் திருந்தாமல் தம்புராட்டியை குடிலுக்குள் அழைத்து சிலை வடிக்க மாதிரியாக நிறுத்தித் தொட முயல்,எதிர்ப்பட்ட நீலகண்டன் திருமேனி,கண்ணனை உடனே வேலையை விட்டு வெளியே போகச் சொல்கிறார்,

குன்ஹிக்காவு தம்புராட்டி
மீதமுள்ள வேலைக்கு வேறு சிற்பியை நியமிக்கிறேன் என்கிறார், ஆனால் கண்ணன் தம்புராட்டி தான் இதற்கு முழுபொறுப்பானவர், அவர் சொல்லட்டும் நான் போகிறேன், என்கிறான்,குன்ஹிக்காவு நீலகண்டனை தர்க்கம் செய்து மடக்குகிறார்,நான் நினைத்தால் சாஸ்திரம் பார்க்கும் உம்மையே மாற்றிவிடுவேன் என்கிறார். நீலகண்டன் அவமானத்தில் கருவுகிறார். பின்னர் நீலகண்டன் இதை உன்னியிடமும் சொல்ல, உன்னி, இந்த மண்டப வேலை முடியட்டும், அதுவரை பொறுமையாக இருப்போம் , அப்புறம் ஊரார் ஏதாவது பேசுவர் , என அஞ்சுகிறார்., இப்போது பெரும் தச்சனுக்கு அவசர அழைப்பு செய்தி சென்று சேர வேகமாக அங்கே வருகிறார் . பெரும்தச்சன். மண்டப வேலை கண்ணனின் காதலால் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாமல் இருப்பதைக் காண்கிறார். இப்போது மண்டப வேலைகளில் இவர் தலையீடு செய்கிறார்.

 அவர் அங்கே வைத்தது தான் சட்டமாக இருக்கிறது, மகனுக்கு தொழில் பக்தியைப் பற்றிப் பாடம் எடுக்கிறார்,இவரின் அறிவுறைகள் கண்ணனின் காதுகளில் ஏறுவதாயில்லை. நீலகண்டன் உன்னி தம்புரானை மிரட்டி உடனே குன்ஹிக்காவுக்கு தனக்கும் திருமணம் நிச்சயிக்க சொல்கிறான், குன்ஹிக்காவுவோ இப்போது திருமணம் வேண்டாம், தான் மண்டபம் முடிந்து ,அரங்கேற்றம் செய்த பின்னர் ,சில காலம் தூரதேசங்களுக்கு சென்று ஷேத்ராடனம் செய்து, அதன் பின்னர் திரும்பிய பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன் எனச் சொல்கிறாள்,தன் அம்மாவும் அவ்வாறே தூர தேசம் போனதை சுட்டிக்காட்டுகிறாள்.

வரால் மகளின் பேச்சை மறுக்க முடியவில்லை,ஆனால் ஒரு தச்சனுக்கு தன் பெண்ணை தரவும் அவர் விரும்பவில்லை,ஊராருக்கு விஷயம் தெரிந்து  திருவாங்கூர் மகாராஜாவுக்கு இச்செய்தி எட்டினால் தன் குறுநில ராஜ்ஜியம் பறிபோய்விடும்,தான் ஒரே நாளில் தெருவுக்கு வந்துவிடுவோம், குல மானமும் கப்பலேறும் என அஞ்சுகிறார், நீலகண்டனின் மிரட்டலையும் சகித்துக்கொள்ள முடியாமல் அவனை மண்டபத்துக்கு மேற்பார்வை பாத்தது போதும், விடை பெற்றுக்கொள் என்கிறார். நீலகண்டன் திருமேனியோ மகாராஜாவுக்கு 4 வரி ஓலை எழுதிப்போட்டால் உங்கள் நிலை என்ன ஆகும் தெரியுமா? என மிரட்டி அங்கேயே தங்கிவிடுகிறார், குன்ஹிக்காவுவின் அழகில் இருந்து நீலகண்டன் திருமேனியாலும் மீளமுடியவில்லை.

ன்றிரவும் கண்ணின் குடிலில் கண்ணன் சிலையை வடிக்க, தம்புராட்டி அபிநயிக்க உணர்ச்சி வேகத்தில் கண்ணன் தம்புராட்டியை ஆரத் தழுவுகிறான், அதை பெரும்தச்சன் பார்த்துவிடுகிறார், தம்புராட்டியை வீட்டுக்கு போக பணித்தவர், அவர் போனதும் கண்ணனை முதல் முறையாக ஓங்கி அறைகிறார்,எட்டி எட்டி உதைக்கிறார்,இனி ஒரு முறை இப்படி முறைதவறிய காதல் கொண்டால் கொன்று விடுவேன் என மிரட்டுகிறார். அன்றிரவு கண்ணனும் தூங்கவில்லை,பெரும்தச்சனும் தூங்கவில்லை, கண்ணனுக்கு தந்தையிடம் அடிவாங்கியதை விட தன் விரகதாபம் தீராததே பெரும் கவலையாக உள்ளது, மறுநாள் பெரும் கவலையில் ஆழ்ந்திருந்த உன்னி தம்புரானை  பெரும் தச்சன் சந்திக்கிறார், அவரின் குல கௌரவத்துக்கு இவராலும் தன் மகனாலும் எந்த பங்கமும் வராது என சத்தியம் செய்கிறார்.

ப்போது மண்டபத் தூண்களில்  சிலை வடிக்கும் வேலையை பெரும் தச்சனே ஏற்று வடிக்கிறார், கண்ணன் மண்டபத்தின் பிரமிடு வடிவக் கூரையை முன்னின்று வடிவமைக்கிறான், உடன் நீலகண்டன் திருமேனியும் கண்கொத்திப்பாம்பாக அங்கே அவனை நோட்டமிடுகிறான். ஆனால் கூரையின் மகுடத்தில் [crown]கிராதிகள் [rafters] சரிவர போய் சொருகி அமரமுடியாத படி ஆகிறது, அங்கே ஒரு சேர மண்டப கிராதிகளை 16 பேர் தாங்கி்ப்பிடித்து மேலே ஏற்ற, மகுடம் அதை சரியாக உள்வாங்கவில்லை.கூரை வேய முஹூர்த்த  நேரமும் முடிவடையபோகும் நிலை, பெரும் தச்சனுக்கு அவசர செய்தி வர, உடனே சாரத்தில் விறுவிறுவென ஏறி மகுடத்தின் கூழே அமர்கிறார்,மகுடத்தில் கிராதி அமரும் துளைகளை செதுக்கி சீர் படுத்துகிறார்,இப்போது அந்த 16 பேரை அவர் இயக்கி சரியாக முஹூர்த்த நேரத்துக்கு முன்பாக கிராதிகளை மகுடத்தில் பொருத்தி பூட்டுகிறார்,கீழே சாரத்தில் அமர்ந்திருக்கும் கண்ணனிடம் தெரியாததை பார்த்துப்படி என அதட்டிக்கொண்டே இருக்கிறார்,எங்கே அவன் கேட்டால் தானே?பசலை படர்ந்தவன் போல ஆகிவிடிருக்கிறான் கண்ணன்.

இனி ஸ்பாய்லர்:-
கன் கண்ணன் இதை கவனிக்காமல் அங்கே சுயம்வர துர்க்கையை தொழுது விட்டு கூரை நிர்மாணத்தை பார்க்க வந்த குன்ஹிக்காவுவை வைத்த கண் வாங்காமல் பார்க்க ,பெரும்தச்சன் அவனைப் பார்த்து அதட்டுகிறார்.,அவளும் இவனையே வெறித்து நோக்க,இவருக்கு பற்றிக்கொண்டு வருகிறது,கீழே உன்னி இதைக் கண்டு மிகவும் வருந்துகிறார், நீலகண்டன் திருமேனியோ கருவுகிறான், பெரும்தச்சனுக்கு அவமானம் பிடுங்கித் தின்கிறது, தானும் சபலப்பட்டோம்,அது அவமானமாக முற்றும் முன்னரே விழித்து விட்டோம் ஆனால் மகன் இப்படி தன்னிடம் அடி வாங்கியும் திருந்தவில்லையே, உன்னிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் போய்விடுமோ?!!! தன் இத்தனைக்கால கலைப்பணிக்கு பங்கம் வந்து விடுமோ  என வேதனையுடன் பெரிய பட்டை உளியை மகுடத்தின் கீழே இருந்த படி தன் மகனின் கழுத்து நரம்பைப் பார்த்து தவற விடுகிறார், மகன் கண்ணன் கழுத்து துண்டுபட்டு மேலே சாரத்தில் இருந்து விழுந்து பலியாகிறான், குன்ஹிக்காவு வீறிடுகிறாள், இவர் சாரத்தில் இருந்து இறங்கி மகனில் உடலைப் பார்த்து கேவுகிறார், அங்கே குன்ஹிக்காவுவே கடும்கோபம் கொண்ட ருத்ரகாளியாக அவதாரம் எடுத்து சூலத்துடன் இவரை துரத்துவது போல உணர்ந்தவர், அங்கேயிருந்து தலை தெரிக்க ஓடுகிறார்,ஊரார் பின் தொடர்ந்து தன்னை மகன் மேல் கொண்ட பொறாமையால் மகனையே கொன்றவன் என தூற்றுவதாக பிரமை கொள்கிறார். தன் ஊருக்குள்,வீட்டுக்குள் சென்று தாழிட்டவர் ,தான் இதுவரை சேமித்த ,எழுதிவைத்த ஓலைகளை எல்லாம் விளக்கில் தீக்கிரையாக்கிவிட்டு,தானும் தீக்குளித்து மடிகிறார் பெரும்தச்சன்.

ன்ன ஒரு படம்?!!!என்ன ஒரு திரைக்கதை?!!!அடுத்து என்ன நடக்கும் என்றே அனுமானிக்க முடியாத ஒரு திரைக்கதை இது ,படத்தில் பாடல்களே கிடையாது, தேவைப்படும் இடங்களில் சிறப்பாக சேர்க்கப்பட்ட ஜான்சனின் பிண்ணணி இசை மட்டுமே உண்டு. படத்தில் கதாபாத்திரங்கள் சங்ககால மலையாளம் பேசுவதாலும்,படத்துக்கு சப்டைட்டில் இல்லாததாலும், முழுக்கதையையும் இங்கே குறிப்பிட வேண்டியதாகிவிட்டது,இது எத்தனை முறை பார்த்தாலும் ஒருவருக்கு அலுக்காத படைப்பு என்றால் மிகையில்லை,வாய்ப்பு கிடைக்கும் போது டிவிடியிலோ,தொலைக்காட்சியில் ஒளிபரப்புகையிலோ அவசியம் பார்த்துவிடுங்கள் நண்பர்களே!!!நெகடிவ் பிலிம் சுருளை நன்றாக பராமரிக்காமல் விடுவதால் எப்பேற்பட்ட நல்ல படைப்புகளும் காலத்தின் கோலத்தால் மிகவும் சிதிலமடைந்து,நாம் படம் பார்க்கையில் மழைக்கோடுகள் போல விழுகின்றன,இதைத் தவிர்க்க சத்யஜித் ரேயின் படங்களை க்ரைடெரியான் நிறுவனத்தினர் ஆயுளுக்கும் பராமரித்து வருவது போல இது போலான  க்ளாசிக்குகளையும் பராமரிக்கவேண்டும் என்பதே என் அவா, நடக்குமா பார்ப்போம்.

படத்தின் காணொளி யூட்யூபிலிருந்து:-