த கிங்’ஸ் ஸ்பீச் [The King's Speech][2011][இங்கிலாந்து]


கிங்ஸ் ஸ்பீச் படம் ஜாக்கி அண்ணன் பதிவு பார்த்து ஆவல் ஏற மீண்டும் மீள் பார்வை பார்த்தேன், படம் ஒருவர் மிகப் பொறுமையாக ஆழ ஊன்றி டிக்‌ஷனரியுடன் பார்க்க வேண்டும், பல வழக்கொழிந்து போன ஆங்கில வார்த்தைகளைக் கொண்ட படம், ஜெஃப்ரி ரஷ் என்னும் மகா நடிகர், கொலின் ஃபர்த் என்னும் திறம் மிக்க நடிகரின் அதிரடிக் கூட்டணி, ஜெஃப்ரி ரஷ் க்வில்ஸ் படத்தில் மார்கஸ் டி சாட் என்னும் மறக்க முடியாத தோற்றத்தில் தோன்றியவர்,கொலின் ஃபர்த் சிங்கிள் மேன் என்னும் படத்தில் தன் ஓரினச்சேர்க்கையாள- வாழ்க்கைத் துணையை இழந்து தானும் உயிரை மாய்த்துக்கொள்ளப் போராடும் பாத்திரத்தில் தோன்றியவர். இந்தப் படம் பார்ப்பவர்கள் அதையும் அவசியம் பாருங்கள்.

இப்படம் 1925ஆம் ஆண்டு துவங்கி 1944 ஆம் வருட காலகட்டம் வரை சுழலும் இங்கிலாந்து அரச வம்சத்தைப் பற்றிய கதை, நம்மூரில் இதுபோல எல்லாம் படம் எடுப்பதென்பது கனவிலும் நடக்காது.புனிதப்பசுவான நேரு குடும்பத்தை பற்றி ஒரு படம் எடுக்க முடியுமா?எடுத்துவிட்டாலும்,பிள்ளையார் எறும்பு ஊறுவது போல ,வருடிக்கொடுத்து எடுப்பார்கள்.மிட்நைட்ஸ் சில்ட்ரென் படத்தில் சரிதா சவுத்ரி இந்திராகாந்தியாக வந்தாரே அது போல போல்டாக எடுக்க முடியுமா?

 இங்கிலாந்து மன்னர் ஆறாம் ஜார்ஜ்[Colin Firth] [இப்போது இங்கிலாந்தை  ஆளும் ராணி Elizabeth II உடைய தந்தை,ப்ரிட்டிஷ் இந்தியாவின் கடைசி மன்னருமாவார்  ]இவருக்கு  பால்யத்தில் இருந்தே திக்குவாய் தான் தலையாய பிரச்சனை,தன் தந்தையிடம்,அண்ணனிடம், தம்பியிடம், புதியவரிடத்தில், மக்கள் சபையில் தொடர்ச்சியாக பேசவோ, ஏன்? எழுதியதைப் பார்த்துக் கூட பார்த்துப் படிக்கவோ முடியாது, நம்ப முடிகிறதா? அவ்வளவு ஏன்? தன் இரண்டு மகள்களைக் கொஞ்சும் போது கூட திக்கி திணறியே பேசுவார்,கதை சொல்வார்,

ஒரு கிருஸ்துமஸ் உரையின் போது மக்கள் முன்னிலையில் ரேடியோவில் உரையாற்றப் போய்விட்டு வார்த்தைகள் நாவிலிருந்து புறப்பட மறுக்க, திரும்பிப்பார்க்காமல் வெளியேறுகிறார்.இவரது வயதான அப்பாவே பின்னொரு சமயம் கிருஸ்துமஸ் உரையை மக்களுக்கு வழங்குகிறார். இதனால் எத்தனையோ முறை பெருத்த அவமானங்களையும் சந்திக்கிறார். இவர் பார்க்காத வைத்தியமே கிடையாது, இவர் மனைவி மற்றும் ஆர்ச் பிஷப் பரிந்துரப்படி எல்லா பரிசோதனைகளைச் செய்தும் தோற்கிறார்,

இப்போது தன் மனைவி  Elizabeth ,இதுவே கடைசி முயற்சி என கட்டாயப்படுத்த,அப்போது  ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு புலம் பெயர்ந்து வாழும், பேச்சு குறைபாடுகளை களையும் ஸ்பெஷலிஸ்டான லியோனல் லோக்[Geoffrey Rush ] என்பவரை சந்திக்கிறார்,இவர் ஒரு மருத்துவர் எல்லாம் கிடையாது, இவருக்கென்று உதவியாளர் கூட இல்லை,மிகவும் கண்டிப்பான ஒரு ப்ரொஃபெஷனல் இவர்,முன்னனுமதி இன்றி யாரையுமே பார்க்க மாட்டார், அவர் முதலாம் உலகப்போரில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய படை வீரர்களுக்கு வெடிகுண்டு,கன்னிவெடி,பீரங்கி குண்டு தந்த சத்தம் தந்த அதிர்ச்சியினால் பேச்சுத்திறன பாதிக்கப்பட்டிருக்க,இவர் அவர்களுக்கு அளித்த புதுமையான  சோதனை முயற்சிகள் வெற்றியடைந்து அவர்கள் குணம் கண்டிருக்கிறது,அது தந்த நம்பிக்கையால் ஆறாம் ஜார்ஜின் மனைவி அவரை இங்கே கூட்டி வருகிறார். ஆனால் ஆறாம் ஜார்ஜுக்கு பொறுமை இல்லை, மன்னர் என்னும் திமிரும்,தன் குடும்ப விஷயம் வெளியே கசியக்கூடாதே என்னும் அவரின் பயமும் ஒருங்கே கிளம்ப அவரது சிகிச்சையில் நம்பிக்கை அற்றுப்போய் கிளம்பி விடுகிறார்,

அவர் இவருக்கு பேச்சு பரிசோதனை செய்தபின்னர் அதை பதிவேற்றி இலவசமாக ஒரு எல்பி ரெகார்டை கொடுக்கிறார்,அதை வாங்கிவந்தவர் அதை சில வருடங்கள் பொருட்படுத்தவேயில்லை, தான் எப்போதும் மக்கள் முன்னால் பேசவே முடியாது என்னும் நிலைப்பாடைக் கொண்டிருக்கிறார்.  ஆனால் இவரின் சகோதரர்களை ஒப்பிடுகையில் இவரின் அப்பாவுக்கு இவர் மீதே நம்பிக்கை அதிகம் உள்ளது.

இன்னிலையில் அப்பா மரணிக்கிறார்.அன்றைய தினம் குடும்பத்தாரும் ஆர்ச் பிஷப்பும் ஒன்று கூடி அடுத்த மன்னர் யார் என்று முடிவெடுக்கின்றனர். இவரை யாருமே ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.மிகவும் மனமுடைந்த அவர் அன்று எதேச்சையாக அந்த எல்பி ரெகார்டுகளை கேட்க,அவரின் சோதனையில் இவர் சரளமாக பேசியிருப்பதை அறிகிறார்,அன்றைய தினம் இவர் சத்தமான இசையுடன் ஹெட்போன் அணிந்து ஒரு மைக்கின் முன் நின்று கடினமான புத்தகத்தை படிக்க,அதை அவர் பதிவு செய்திருக்கிறார்,

இப்போது மீண்டும் லியோனல் லோக்கை சென்று தம்பதியாக சந்திக்கின்றனர்.லியோனல் மீண்டும் தன் சோதனைகளை துவக்குகிறார்,இவரின் சொந்த வாழ்க்கை பற்றியோ,இவரின் தாழ்வு மனப்பான்மை பற்றியோ,இவரது பால்யம் பற்றியோ கேள்வி கேட்டால் பதில் சொல்லுவது இல்லை,இவரை லியோனல் தொடக்கூடாது,மரியாதையாக ஸர் என விளிக்கும் படி பலமுறை கேட்டும் லியோனல் அவரை பெர்ட்டீ என்றே அழைக்கிறார்,ஒரு நட்பான சூழல் இருவருக்குள் அமைவதை ஆறாம் ஜார்ஜ் விரும்புவதே இல்லை,

இந்த சூழலிலும் லியோனல் இவரின் பேச்சுத்திறன் குறைபாட்டிற்கான முக்கிய காரணிகள் சிலவற்றை கண்டறிகிறார்.ஆறாம் ஜார்ஜின் அப்பா மிகவும் கோபம் நிறைந்தவர்,இவர் சிறுவனாயிருந்த பொழுது இவரின் பொழுது போக்கான மாடல்கள் செய்வதை அவர் விரும்பவில்லை,அவர் உலக நாடுகளின் அஞ்சல் தலைகளை சேமித்தமையால் குழந்தைகளும் அஞ்சல்தலைகளை சேமிக்க வற்புறுத்தியிருக்கிறார்,பாலகனாயிருந்த ஆறாம் ஜார்ஜுக்கு இடது கைப்பழக்கம் இருக்க,அவரை அப்பாவும் தாதிகளும் திட்டி திட்டி வல்து கைப்பழக்கத்துக்கு மாற்றியிருக்கின்றனர்,சிறுவயதில் இவரை வளர்த்த தாதி மிகவும் கொடியவள்,

அவளுக்கு அரண்மனையில் நிரந்தர வேலை வேன்டும் என்று இவரை அவர்கள் அப்பாவோ அம்மாவோ கொஞ்ச கேட்கும் போது குழந்தையை வெளியே தெரியாமல் கிள்ளிவிட்டு அவர்களிடம் கொடுக்க,அவர்கள் குழந்தை வீரிட்டு அழுவதை கண்டவுடன்,மன்னர் மன்னா குழந்தை என்னை ஒரு நிமிடம் கூட பிரிவதை விரும்பவில்லை பாருங்கள் என்று பசப்பும் நயவஞ்சகியாக இருக்கிறாள்,இவர் மீறி அவர்களிடம் அழாமல் போய்விட்டால் அன்று முழுக்க இவருக்கு உணவளிப்பதில்லை,அவளைப் புரிந்து கொள்வதிலேயே இவருக்கு பால்யத்தின் பெரும்பகுதி கரைந்துள்ளது,அதுவும் இவரின் திக்குவாய்க்கு முக்கிய காரணம் என லியோனல் கண்டறிகிறார்,
 
இருந்தும் அவருக்கு லியோனல் தன்னம்பிக்கை ஊட்டுவதையோ,அவர் அண்ணன் பற்றி பேசுவதையோ,ஆலோசனை சொல்வதொயோ ஆறாம் ஜார்ஜ் விரும்பவேயில்லை,அதை ராஜ துரோகம் என்கிறார்,ஒரு முறை அப்படி இவர் ஆலோசனை சொல்லப்போக அதை வெறுத்தவர்,இவரை எச்சரித்து, இவர் தன்னுள் ஆலோசனை என்னும் பெயரில் விஷவிதையை தூவுகிறார்,என குற்றம் சாட்டி இத்துடன் உன் சிகிச்சைகள் போதும் என பிரிகிறார். லியோனலுக்கு கையறு நிலை,எத்தனையோ முறை மன்னிப்பு கேட்பதற்காக அரண்மனைக்கு நடக்கிறார்,இருந்தும் பயனில்லை. சிப்பந்திகள் கூட மதிப்பதில்லை.

அப்பாவுக்கு பின்னர் குடும்பம் குழந்தைகள் என்று முழுத்தகுதியுடன் இருக்கும் இவர் ஆட்சி பீடத்தில் அமராமல்,திருமணம் ஆகாத தன் அண்ணன்  Edward VIII அமர ஆறாம் ஜார்ஜ் முழுமனதுடன் வழிகோலுகிறார், மன்னராக ஆட்சிப் பொறுபேற்ற அண்ணன் எட்வர்ட் இவரை கிள்ளுக்கிரையாகக் கூட மதிப்பதில்லை, இவரின் பேச்சுக் குறைபாட்டையும் அடிக்கடி எள்ளி நகையாடும் ஒரு இழிபிறவி அவர்.  மேலும் அவர்  2 முறை விவாகரத்தான Wallis Simpson என்னும் அரைகிழடான பெண்மணியை 3ஆவதாக மணக்க மிகவும் விரும்புகிறார்,அப்படி விவாகரத்தான பெண்மணியை மன்னர்  மணக்க முடியாத படிக்கு இங்கிலாந்தின் சட்டம் வலுவானதாயிருக்க காதலுக்காகத் தன் அரியணையை  ஒரே வருட ஆட்சிக்கு பின்னர் 1936 ஆம் ஆண்டு துறக்கிறார்,[ இது இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் சாபம் போலும், இதேபோல சார்லஸும் டயானா மறைவுக்குப் பின்னர்  கமீலா என்னும் விவாகரத்தான அரைக்கிழவியை திருமணம் செய்ததை  அறிவோம், அதற்காக அவர் எக்காலத்திலும் மன்னராக முடியாதபடிக்கு நிலை உள்ளதையும் உணர்ந்து அரியணை துறக்க தலைப்பட்டதையும் அறிவோம் ]

ஆறாம் ஜார்ஜ் இருக்கும் நிலையில் அரியணை ஒரு வலியைத்தரும் முட்கிரீடம்,வேறு வழியில்லாமல் அது எவ்வளவு தடுத்தும் இவருக்கே வர,இவரால் ஒழுங்காக மக்கள் முன்பாக எத்தனை மிடுக்காக ராஜ உடை அணிந்தாலும் வாள் ஏந்திக்கொண்டாலும்,சரளமானப் பேச்சு மட்டும் வரவில்லை,மக்கள் இவர் மீது மிகவும் அனுதாபப்படுகின்றனர். நாடு உக்கிரமான போரை எதிர்கொள்ளப்போகும் நிலையில் பேசவே முடியாத ஒரு அரசனா?கடவுளே மன்னரைக் காப்பாற்று என்ற வாசகங்களுடன் வீதிகளில் சுவரொட்டி ஒட்டுகின்றனர்,இப்போது அடிமேல் அடியாக பிரதம மந்திரி Clement Attlee இங்கிலாந்து போரில் ஈடுபடுவதை விரும்பாமல் ராஜினாமா செய்கிறார்.பின்னர் Winston Churchill பதவியேற்கிறார்.இதுபோல காலகட்டங்களில் வாயில் இருந்து வார்த்தை வராமல் சபையோர் மற்றும் மக்கள் முன்னர் மிகவும் அவமானத்தை சந்திக்கிறார்.மன்னர் குடும்பத்துக்கே தன்னால் நிரந்தர அவமானம் என்று மருகுகிறார்.

அப்படிப்பட்டவர் எப்படி தன் பேச்சுத்திறன் குறைபாட்டிலிருந்து  மீண்டார்?, வாழ்க்கை என்ன விக்ரமன் படமா? அதில் வருவது போல ஒரே பாட்டில் சமூகத்தில்  புகழும் செல்வமும் அடைவதற்கு?!!!தான் முன்னமே சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த லயனல் லோக்கை  மீண்டும் தன் ஜம்பம் விடுத்துப் போய் சந்திக்கிறார், மன்னிப்பும் கேட்கிறார்.பின்னர் தன் சொற்பொழிவுக்கு அவருடன்  இணைந்து பலகட்ட சோதனைகளை செய்கிறார்.இவரின் புதிய பேச்சுத்திறன் பயிற்சியாளரை ஆர்ச் பிஷப்பிற்கும் மன்னர் குடும்பத்துக்குமேஎ பிடிப்பதில்லை,அதிலும் பல குறுக்கீடுகள்,நான் வேறொரு மருத்துவரை சிபாரிசு செய்கிறேன் என ஆளாளுக்கு கிளம்புகின்றனர். 

அதையெல்லாம் தாண்டி முதலில் ரேடியோவில் பின்னர் மக்கள் சபையில் எப்படி ஆறாம் ஜார்ஜ் படிப்படியாகத் தன் உளவியல் ரீதியான தடைகளை மீறி உரையாற்றினார், என்று மிக அற்புதமாக படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் Tom Hooper, வாழ்வில் தன்னம்பிக்கை குறைபாடுள்ளவர்கள், தாழ்வு மனப்பான்மையால் வாடுவோர், திக்குவாய் என்னும் பேச்சுக்குறைபாட்டால் வாடுவோர் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.அடுத்து என்ன செய்யலாம் என்னும் ஒரு தெளிவைக் கொடுக்கும் படம்.

கடைசியாக மிகுந்த சாகசத்துடன் வானொலி உரையை முடித்த ஆறாம்ஜார்ஜிடம் லயோனல் லோக் எல்லாம் அற்புதமாக பேசினீர்கள்,இன்னும் உங்களுக்கு அந்த  W என்னும் எழுத்தை உச்சரிப்பதில் கஷ்டம் இருக்கிறது போல,என்று கருத்து சொல்ல,அதை மக்கள் பேசுவது நான் தான் என்று நம்ப வேண்டுமே என வேண்டுமென்றே செய்தேன் என நகைச்சுவையாக சொல்வார்,மிக அற்புதமான காட்சி அது,படம் அவசியம் பாருங்கள்.இது போல பல சுவாரஸ்யங்களை அனுபவியுங்கள்.யாருமே தவறவிடக்கூடாத படம்.
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-