உல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் படத்தின் அட்டகாசமான காட்சி !!!



 உல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் படத்தின்  அட்டகாசமான காட்சிகள் வசனங்கள் என்று குறைந்தது 100ஐச் சொல்லலாம்.அதில் மிகவும் பிடித்தமான ஒன்றைப் பகிர்கிறேன்.படம் பற்றி 5 பதிவுகள் எழுதினால் தான் சரிவரும்.

ஜோர்டியும் நண்பன் டோன்னியும்,எதிர்வரப்போகும் ஸ்டாக் எக்ஸ்சேங்ஞ்ச் கன்ரோலின் விசாரணையையும் எஃப்பிஐயின் கடுமையான கண்காணிப்பையும்,சோதனையையும்  எதிர்கொள்ளும் விதமாக அந்த வார இறுதிக்கு 15 வருடங்களுக்கு முன்னர் எக்ஸ்பைரி ஆன லெம்மன் க்வாலூட்ஸ் என்னும் தூக்க மாத்திரைகளை தருவித்து விழுங்குகின்றனர்.

முழுமையான மரண போதையை உணர வேண்டி,மாத்திரை விழுங்கும் அன்று விடியலிலேயே ஜோர்டி வாயில் விரலை விட்டு வாந்தியெடுத்தும், இனிமா எடுத்தும் தன் சிறு, பெருங்குடலை சுத்தம் செய்கிறார்,அன்று குதூகலத்துடன் மாத்திரையை ஆவலுடன் விழுங்கியவர்கள், எப்போதும் விழுங்கும் டோஸுக்கு போதை தலைக்கு ஏறாமல் போகவே என்ன கருமம் இது? என்று ஏகத்துக்கும் அந்த தூக்க மாத்திரைகளை விழுங்கி விட்டு,ஜிம்மில் சென்று ,அது கைகூட ஒர்க் அவுட்டும் செய்கின்றனர்.

எப்போதுமே 15 நிமிடத்தில் போதை ஏற்றும் தூக்க மாத்திரைகள் 15 வருடங்களில் அதன் வீர்யத்தை மிகவும் இழந்திருக்கிறது,ஆகவே போதை எறும்பு கடித்தார் போல் கூட இல்லை, ஏறக்குறைய மெல்ல கொல்லும் விஷம் போல ஆகிவிட்டிருக்கிறது அம்மாத்திரைகள்,

ஜோர்டிக்கு அப்போது பேஜரில் சட்ட ஆலோசகர் செய்தி தருகிறார்,உன் வீட்டு போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது,வெளியே வந்து பொது தொலைபேசியில் இருந்து என்னை அழை, அவசரம் என்கிறார், அங்கே கண்ட்ரி க்ளப் சென்று அவரை பொது தொலைபேசியில் அழைக்கும் ஜோர்டி பேச ஆரம்பித்த சில நொடிகளிலேயே வாய் குழற ஆரம்பிக்க,தூக்க மாத்திரை அதன் வேலையைக் காட்டுகிறது,சரியாக போதை தலைக்கேற 90 நிமிடம் பிடிக்கிறது என்பதை ஜோர்டி உணர்கையில் மிகவும் தாமதமாயிருக்கும்.சவம் போல ஜோர்டியை தரையில் கிடத்துகிறது அந்த மாத்திரைகள், அதை ஜோர்டி இப்படி விவரிப்பார்.

அப்போது ஜோர்டியின் வாய்ஸ் ஓவரில் வரும் இந்த வசனத்தைக் கேளுங்கள்.

 //"It took 90 minutes for these little fuckers to kick in, but once they did… POW. I mean I had skipped the tingle phase[மகோன்னத நிலை] and went straight to the drool phase[வாயில் நுரை தள்ளும் நிலை]. These little bastards were so strong I had discovered a whole new phase… the cerebral palsy phase"[பெருமூளை வாத நிலை]//

இந்தக் காட்சியை அவசியம் பாருங்கள் நண்பர்களே,
படிகளில் உருண்டு தன் லாம்போர்கினியில் [Lamborghini Countach]ஏற எத்தனிப்பதையும்,அங்கு காரில் ஒலிக்கும் செல்போனை பகீரதப் பிரயத்தனப்பட்டு எடுத்து  வாய் குழறி தன் மனைவியிடம் பேசும் அந்தக்காட்சியையும்,காரை இயக்கி 10 கிமீக்கும் குறைவான வேகத்தில் ஓட்டிக்கொண்டு வீடு செல்லும் காட்சியையும் பாருங்கள்,அந்தக்காட்சிக்காக ஒரு அசல் காரை நாஸ்தி செய்தனர். அதன் விலை 3லட்சம் அமெரிக்க டாலர்களாம், http://www.hagerty.com/articles-videos/Articles/2014/02/14/Wolf-of-Wall-Street


அக்காட்சியின் முடிவில் இன்னொரு அதகளம் துவங்கும்,அதாவது ஸ்விஸ் பேங்க் ஏஜெண்டிடம் ஜோர்டியின் வீட்டு போனில் இருந்து பேசும் டோன்னிக்கும் போதை உச்சத்தில் இருக்கும்,வாய் குழற அவர்களுக்குள்  நடக்கும் விவாதம் மிக அருமையானது, டோன்னியிடமிருந்து அந்த ரிசீவரை மிகவும் பாடுபட்டு பிடுங்குவார் ஜோர்டி. இந்தப் படம் பற்றி எழுத வேண்டும் என்றால் நிறுத்த முடியாது,அப்படி ஒரு படம். வாய்ஸ் ஓவரில் காருக்கும் எனக்கும் எந்தக் கீறலும் இன்றி வீடு வந்தேன் என்பார் ஜோர்டி,ஆனால் மறுநாள் பார்க்கையில் தான் ஜோர்டி விளைவித்த விபரீதம் நமக்குத் தெரியவரும்,மார்டின் ஸ்கார்ஸேஸியும்,லியார்னடோ டிகாப்ரியோவும் தங்கள் மேதமையின் உச்சத்தில் நின்ற  தருணம் அது.

அந்த அட்டகாசமான வீடியோவை இங்கே பாருங்கள்