இன்சைட் லூவின் டேவிஸ் [Inside Llewyn Davis] [2013] [அமெரிக்கா]



கோயன் சகோதரர்களால் மட்டுமே சில படங்களை சிறப்புறச் செய்ய முடியும்,அது போன்ற ஒரு படம், இன்சைட் லூவின் டேவிஸ்,வாழ்வை எந்த குறிக்கோள்கள் ஏதுமின்றி அதன் போக்கிலேயே வாழும் ஒரு இசைப்பாடகனின் கதை,1960 களின் நியூயார்கின் பிண்ணனியில் சுழலும் கதைக்களம். லூவின் நம்மை ஒருங்கே சிரிக்க,அழ, ரசிக்க, இரக்கப்பட வைக்கிறான். கோயன் சகோதர்கள் அவர்களின் ரசிகர்களை என்றுமே ஏமாற்ற மாட்டார்கள். EXPERIENCE THE UNEXPERIENCED என்னும் பதத்துக்கு ஏற்ற படம் .

கோயன் சகோதரர்கள் க்ளிஷேவிலேயே ஊறியவர்கள்,திளைப்பவர்கள், ஆனால் அவர்களுடைய கிளிஷேக்கள் ரசிக மனம் கவர்பவை,இதில் லூவின் [Llewelyn ]என்னும் பெயரே நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென் படத்தில் ஜோஷ் ப்ரோலின் செய்த லூவின் மாஸ் [Llewelyn Moss] என்னும் பெயரிலிருந்து பிறந்தது தான்.

படத்தில் லூவீனின் கையில் இருக்கும் ஜிஞ்சர் வகைப் பூனையின் பெயர் Ulysses, இது ஒரு ஆண் பூனை, நம் நாயகன் லூவின் எந்த இலக்குமில்லா இசைப் பாடகன்,வாழாமலே கெட்டவன் என்னும் பதம் சரியாக இருக்கும், காற்றைக் குடித்து, எதிர்ப்படுவோரிடம் சிகரட் கடன் வாங்கி குடித்து, வருமானத்துக்காக காஸ்லைட் என்னும் பப்பில் எப்போதாவது கிடைக்கும் சோலோ பெர்ஃபார்மர் வாய்ப்பில் கிடார் இசைத்து நாட்டார் பாடல்கள் பாடி,கிடைக்கும் சொற்ப காசில் வயிற்றைக் கழுவி,வாங்கிய கடன்களை அடைக்கிறான்.இது தான் லூவினின் பயோடேட்டா.

இவன் சந்திக்கும் நபர் ஆணோ பெண்ணோ,கேட்கும் முதல் கேள்வியே?உன் வீடு எங்கே?வீட்டில் கவுச் [சோஃபா] [couch] உள்ளதா? அன்று இரவு அங்கே தான் தூங்குவான்,கவுச்சில் யாரேனும் வழக்கமாகத் தூங்குவதாக இருந்தாலும் கவலையில்லை, இவனுக்குத் தூங்க தரை போதும், வாழ்வில் திருப்புமுனையே இன்றி தத்தளிக்கிறான்,

தன் நண்பனும் இசையில் பார்ட்னருமான மைக் இவனைப் போன்றே அதிர்ஷ்டமின்மையாலும் வாழ்வின் விரக்தியினாலும்,அடுத்தடுத்த தோல்விகளாலும் உழன்றவன் ப்ரூக்ளின் ப்ரிட்ஜிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறான், இவனின் சென்ற வருடம் வெளியான ஆல்பமான Inside Llewyn Davis எல்பி இசைத்தட்டுகள் கூட சரியாக விற்கவில்லை,

அதை வெளியிட்ட ரெகார்டிங் கம்பெனி கிழவர் தன் நஷ்டத்திலும் கூட இவன் செலவுக்கு சொற்ப பணம் தந்து உதவி வருகிறார்.ஒரு கட்டத்தில் வாழ இடமில்லாதவனுக்கு ஒரு பெட்டி நிறைய இவனுடைய எல்பி ரெகார்டு ஆல்பங்கள் இவனிடமே திரும்பத் தரப்படுகின்றன,வைக்க இடமின்றி ஒண்ட இடம் கொடுத்த நண்பனின் வீட்டில் கிடைத்த இடத்தில் அவற்றை கொண்டு அடைக்கும் படியான வறுமை.ஆனால் அவை எல்லாமே டார்க்ஹ்யூமர் நகைச்சுவை தொனிக்க சொல்லப்பட்டிருக்கிறது, சாதாரண வெகுஜன சினிமாவில் காணமுடியாத டார்க்ஹ்யூமர்கள் அவை.

மொத்தத்தில் லூவின் டேவீஸ் உப்பு விற்கப் போனால் மழை பெய்து,மாவு விற்கப்போனால் காற்றடித்தும் தொலைகிறது,அத்தனை தரித்திரம். படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே நாம் லூவின் டேவீஸின் ஃபோக் பாடலான Hang Me, Oh Hang Me என்னும் மனமயக்கும் நம்பருடன் துவங்குகிறது, அடுத்த காட்சியிலேயே லூவின் நேற்று அதே பப்பில் வம்பு செய்த பெண்மணியின் கிழட்டுக்கணவனால் மூர்க்கமாகத் தாக்கப்படுகிறான்,இவனால் எதிர்தாக்குதல் செய்யவோ தன்னிலை விளக்கம் அளிக்கவோ கூட தெம்பில்லை,

இதன் மூலம் ஏனென்று கேட்க நாதியற்ற அவன் நிலையை ,ஒரே காட்சியினூடாக நாம் விளங்கிக்கொள்கிறோம், இப்போது காலையில் அவன் ப்ரொஃபசர் வீட்டில் கண்விழிக்கிறான், விடியலிலேயே வேலைக்குச் சென்றுவிட்ட அவருக்கு ஒரு நன்றிக்குறிப்பு எழுதிவைத்து அகல்கையில் அவரின் வளர்ப்புப் பூனை இவனுடனே கதவிடுக்கில் வெளியேறுகிறது,அதை தாவிப் பிடித்து விட்டாலும் திரும்ப உள்ளே அனுப்பமுடியாதபடிக்கு கதவு அடைத்துக்கொள்கிறது,

வேறு வழியின்றி தன்னுடனே அப்பூனையை அழைத்துச் செல்லும் லூவினின் பின்னால் நாமும் அலைகிறோம், அவனின் ஒருவார காலத்தை நாமும் உடனிருந்து வாழுகிறோம். ஒரு படம் என்பது அது கொண்டிருக்கும் காட்சிகளால் ஒரு பார்வையாளனை எப்படி வசீகரித்து கட்டிப்போடவேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு .

கோயன் சகோதரர்கள் படத்தில் படுக்கையறைக்காட்சிகள் பெரும்பாலும் இராது, இருந்தாலுமே அது கதையின் போக்கினூடே வந்து செல்லும், எந்த இடைச்சொருகலோ ஆபாசமோ இன்றியிருக்கும்,ஆனால் அக்காட்சிகளில் டார்க்ஹ்யூமர் தலைவிரித்தாடும்,அதற்கு குறைவே இருக்காது, இதற்கு உதாரணமாக ஃபார்கோ படத்தில் வரும் இரட்டைக் கொலைகாரர்கள் ஒரு மோட்டலின் ஒரே அறையில் வைத்து இரு விலைமாதருடன் உடலுறவு கொள்ளும் காட்சியையும், பர்ன் அஃப்டர் ரீடிங் படத்தில் கார்க் க்ளூனி தன்னுடைய பேஸ்மென்ட் லேத் பட்டறையில் வைத்து உருவாக்கும் டில்டோ ராக்கிங் நாற்காலியும் ஒரு உதாரணம்,

இன்டாலரபிள் க்ரூயல்டி படத்தில் வரும் கள்ளக்காதலும்,த மேன் ஹூ வாஸ் நாட் தேர் படத்தில் வரும் வயது முதிர்ந்தவன் மற்றும் சிறுபெண் இடையே ஆன உறவையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்லலாம்,இப்படத்தில் படுக்கையறைக் காட்சிகள் எதுவுமே காட்சிகளாக வராமல் வார்த்தைகளாக வருகின்றன, நம் நாயகன் லூவின் கிடைக்கும் இடத்தில் தூங்கி,கிடைக்கும் மங்கையரைப் புணர்பவன், அது அவனுடன் பப்பில் உடன் கிடார் வாசிக்கும் அல்லது பார்வையாளராய் இருந்து இசை கேட்கும் யாராயினும் இருக்கலாம்,

லூவினின் முன்னாள் காதலியும்,இன்னாள் நண்பனின் மனைவியுமான ஜீன் கருத்தரித்திருக்கிறாள். அந்தக் கருவுக்கு காரணம் தன் கணவன் ஜிம்மா அல்லது ,சென்ற மாதத்தில் இவளது வீட்டில் அடைக்கலம் கேட்டுத் தங்கிய லூவனா?எனக் குழம்புகிறாள்,

அது,லூவினுடையதாக இருக்கும் பட்சத்தில் அதைக்கலைக்க எண்ணுகிறாள்,ஜிம்முடையது என்னும் பட்சத்தில் அதை பெற்றெடுக்க எண்ணுகிறாள், ஆனால் அவளால் ஒரு முடிவுக்கு வரமுடியாததால் அதை கலைக்க எண்ணுகிறாள், தன் இழிநிலையால் லூவினை கண்டபடிக்கு ஏசியவள்,கருவைக் கலைக்க அவனிடமே பணம் கேட்கிறாள்,

இனி யாரை நீ புணர்ந்தாலும் இரட்டை ஆணுறை போட்டு புணரவும் என அறிவுறை சொல்லிச் சொல்லி வெறுப்பேற்றுகிறாள்,லூவினால் ஒன்றும் பேச முடிவதில்லை, வாழ்வில் தொட்ட எதுவுமே துலங்காத தனக்கு காதலும் ,குடும்பமும் ஒரு கேடா ? என்று ஜீனை ,தன் நண்பன் ஜிம்மிற்கு [ஜஸ்டின் டிம்பர்லேக்] விட்டுக் கொடுத்தும் விட்டான், அவ்வப்பொழுது இவனது அன்பை ஜீனின் மீது பொழிந்தாலும்,அவள் இவனை கண்டமேனிக்கு ஏசுகிறாள், அவனை லூசர் என்கிறாள். அருவருக்கிறாள், இருந்தும் இவளது வீட்டில் தான் லூவின் அடிக்கடி சென்று அடைக்கலம் கேடுத் தங்குகிறான்,அவளது வீட்டில் தான் இவனது கிடாரும்,இன்னபிற வஸ்துக்களையும் வைத்திருக்கிறான்.

அன்று அப்படித்தான் தான் முந்தையநாள் சென்று தங்கிய ப்ரொஃபஸர் வீட்டுப் பூனையை தன்னுடனே கொண்டு வந்தவன் அதை யார் பராமரிப்பில் எங்கே விடுவது எனத் தெரியாமல் இங்கே கூட்டி வந்து விடுகிறான், இவன் தங்குவதற்கே சலித்துக்கொள்ளும் ஜீன், இவன் கொண்டுவந்த பூனையை சேர்ப்பதாயில்லை,

அந்த வீட்டின் சூழல் அந்த ஜிஞ்சர் ரக பூனையான Ulysses ற்கு பிடிப்பதில்லை,அங்கே லூவின் ஜன்னல் கதவைத் திறந்தது தான் தாமதம் ,வெளியே குதித்து ஓடிவிடுகிறது பூனை.அது அடங்க மறுக்கும் ஒரு பூனையாகும்,லூவின் ப்ரொஃபசர் வீட்டுக்குள் இருந்து வெளியேறியவன் அந்தப் பூனையுடன் பத்திரமாக நடைபோட்டு மெட்ரோ ரயிலில் ஏறி ஜீனின் வீடு வருவதற்குள் பாடாய்படுத்திவிட்டது,

இப்போது எங்கோ ஓடி ஒளிந்தும் விட்டது,தெருவில் சென்று தேடுகிறான் லூவின் , பூனை அகப்படவில்லை, ப்ரொஃபசரின் கல்லூரிக்கு போன் செய்தவன் அவர் அங்கே பாடம் எடுத்துக்கொண்டிருக்க அங்கே ரிசப்ஷனில் நான் லூவின் ப்ரொஃபஸரின் பூனையை வைத்திருக்கிறேன், பூனையைத் தேடவேண்டாம் என அவரிடம் சொல்லுமாறு கேட்கிறான்,எப்படியும் பூனையை தேடிக் கண்டு விடுவோம் என நம்பி பொய் உரைக்கிறான்.

ஆனால் பூனை கிடைக்கவில்லை,மீண்டும் ப்ரொஃபஸருக்கு போன் செய்து பொய் உரைக்கிறான்,இப்போது ஜீனின் கணவன் ஜிம் எழுதி இசையமைத்த ஒரு பாடலை கொலம்பியா தியேட்டரில் சென்று கிடார் இசைத்துப் பாடி,ரெகார்ட் செய்கிறான் லூவின்,இப்படி அடிக்கடி தனக்கு வாய்ப்பு பிடித்துத் தரும் ஜிம்முக்கு துரோகம் செய்கிறோம் என்ற எண்ணம் வந்து போனாலும்,யதார்த்த நிலை நினைவுக்கு வர அதைப் புறந்தள்ளுகிறான், அந்தப் பாடல் பதிவின் முடிவில் கிடைத்த 200 டாலர் பணத்தைக் கொண்டு வந்து ஜீனை ஒரு காஃபிஷாப்பில் வைத்து ரகசியமாக சந்திக்கிறான்.

அவள் விட்டகுறை தொட்டகுறையாக மீண்டும் லூவினை ஏசத் துவங்குகிறாள், பல பெண்களை புணர்ந்து கர்ப்பமாக்கிய பாவத்துக்கு நல்ல கதிக்கே போகமாட்டாய் என மண்ணைவாரித் தான் அவள் தூற்றவில்லை, அவனை அடித்தால் கூட அப்படி காயப்பட்டிருக்கமாட்டான் லூவின்.அப்போது காஃபிஷாப்பின் வெளியே வைத்து அந்தப் பூனை ஓடுவதைப் பார்த்து பகீரதப்பிரயத்தனப்பட்டு ஓடி அதைப் பிடிக்கிறான்.

பூனைக்கு பால் வார்க்கிறான்.அன்றே ஜீனை மருத்துவரிடம் கூட்டிச் சென்று காட்டியவன், தனிமையில் அவருக்கு தான் ஊருக்குச் செல்வதால் முன்பே முழுப்பணம் தர எத்தனிக்க,அவர் வாங்க மறுக்கிறார்,இவன் குழம்பியவன் இதற்கும் ப்ரோபோனோ [இலவச சேவை] செய்ய ஆரம்பித்துவிட்டீர்களா? எனக் கேட்க,

தலையாட்டி மறுத்தவர், நீ போனமுறை ஒரு பெண்ணைக் கூட்டி வந்தாயே? அவளுக்கு பணம் தந்தாய் அல்லவா?அவள் கருக்கலைப்பு செய்யும் முடிவை கைவிட்டு,ஆர்தர் என்னும் அவளது ஊருக்கேச் சென்று குழந்தையை பெற்றுக்கொண்டாள்,

அந்தப் பணத்தை திரும்பத் தர தேடினால் உன் விலாசம் என்னிடம் இல்லை, இரண்டு வருடம் ஓடிவிட்டது,நீ எப்படியும் இங்கே வருவாய் அப்போது கழித்துக்கொள்ளலாம் என எண்ணினேன்,அதனால் இம்முறை அந்த தொகையை இதற்கு கழித்துக்கொள்கிறேன் ,வரும் சனிக்கிழமை ஜீனுக்கு கருக்கலைப்பு என்கிறார்.

லூவினுக்கு 2வருடம்முன்னர் தான் தந்தையாகியதற்கு கொண்டாடுவதா? எத்தனையோ செலவு இருக்க இப்படி என்றோ புணர்ந்ததற்கு 200 டாலர் தண்டம் அழ நேர்ந்து, அது ரத்தானதை நினைத்து மகிழ்வதா?அல்லது,தன் முன்னாள் காதலி தன்னிடம் குழந்தை பெறப்போவதையும் பெற்றதையும் சொல்லிக்கொள்ளாமலே தன் ஊரில் சென்று புள்ளியாய் மறைந்ததை எண்ணி துக்கிப்பதா?என விளங்காத கையறுநிலை.

அன்று மாலையே பூனையைத் தூக்கிக் கொண்டு ப்ரொஃபசர் வீட்டு மணியை அடிக்க,அவர் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். பூனையை அவனிடமிருந்து பெற்றுக்கொண்டவர்,அங்கே குழுமியிருக்கும் நண்பர்களை லூவினுக்கு அறிமுகப்படுத்துகிறார்,

தன் மனைவி அருமையான சமையல் ரெசிபி ஒன்றை தயாரிப்பதாகவும்,இவனும் இங்கே சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும் என்றும் அன்புக் கட்டளையிட்டவர்.இவனைப் பாடச்சொல்லி கேட்கிறார், இவன் தயங்க, இவனை அங்கே இருப்பவர்களும் பாடச்சொல்லிக் கேட்க ,இவன் கிடார் இல்லை எனச் சொல்லுவான் எனத் தெரிந்த ப்ரொஃபசர் தன்னுடைய சில்வர் டோன் ப்ராண்ட் கிட்டாரை,நீ வாசிப்பாய்தானே?என்று கேட்டுவிட்டு,கொண்டுவந்து வாசிக்கத் தருகிறார்,

இவன் சுரத்தே இன்றி "Fare Thee Well" என்னும் ஒரு பாடலை கிடார் வாசித்துத் துவங்க,அது பார்ட்னருடன் ,அதாவது இருவர் பாடவேண்டிய பாடல், 2 வரிப்பாடுகையிலேயே அவனுடன் அப்பாடலை இணைந்து பாடிய நண்பன் மைக்கின் நினைவு வந்து விடுகிறது,

ப்ரொஃபஸரின் மனைவி,ஒரு ஆர்வக்கோளாறு பிடித்தவர்,மைக் பாட வேண்டிய பகுதியை நான் பாடுகிறேன் என தாளமிட்டுப் பாட ஆரம்பிக்க, இவனுக்கு சட்டென்று கோபம் தலைக்கேறுகிறது, குய்யோ முறையோ என கத்துகிறான்,

தன் கோட்டை விருட்டென அணிந்தவன் கிளம்ப எத்தனிக்கிறான்,நான் க்ளப்பில் பாடுபவன் தான்,அது எனக்கு பிழைப்பு,அதை வைத்துத் தான் என் தேவையை பூர்த்தி செய்கிறேன்,என தத்துபித்து அங்கே உளறுகிறான்,ப்ரொஃபசரின் மனைவி இதை எதிர்பாராதவர் ஓ என அழத்துவங்குகிறார்,

கோபமிகுதியாலும் அவமானத்தாலும் உள்ளே சென்றவர், மேலும் வீறிடுகிறார், அந்த வரவேற்பறையே நடு நடுங்குகிறது,வேகமாக வெளியே வந்தவர் ,இது என்ன? என்று பூனையைக் காட்டி லூவினை நோக்கிக் கேட்க,அவன் உங்கள் பூனை என்கிறான்,அவர் இல்லவே இல்லை,

இது என் பூனை கிடையாது,அவ்வளவு ஏன் இது ஆண் பூனை கூட கிடையாது,ஆண்பூனை தான் என்றால் இதன் விதைப்பை எங்கே? என்று கேட்டு திகைக்கிறாள்,எல்லோரையும் திகைக்க வைக்கிறாள்,பூனையை லூவினிடமே பலவந்தமாகத் திணிக்கிறாள்,

இப்போது கொட்டும் மழையில் தன் வாய்க்கொழுப்பினால் வாங்கிக்கட்டிக்கொண்டதை எண்ணி நொந்தபடி, தன் கேஸ்லைட் பப்பின் வாசலில் காரில் சிகாகோவுக்கு பயணிக்கும் இரண்டு இசைக்குழு சகாக்களைப் பார்க்கிறான்,பூனையை தெருவில் அநாதையாக விடவும் மனமில்லை, சிகாகோவில் இருக்கும் ஒரு ஆர்கெஸ்ட்ரா தியேட்டரின் பப்பில் சென்று சோலோ பெர்ஃபார்மர் வாய்ப்பு கேட்க நாளை கிளம்ப இருந்தவன்,அந்த சகாக்கள் எங்கே செல்கின்றனர் எனக்கேட்க, அவர்களும் சிகாகோ போவதை அறிந்தவன் அவர்களுடன் இன்றே பயணிக்கிறான்.

இனி என்ன ஆகும்?
திரைப்படத்தில் பாருங்கள் நண்பர்களே,படம் ஆரம்பம் முதல் முடிவு வரை அதகளம் தான்,இரு சிங்கங்கள் சுமார் இரு வருடம் கழித்து களமிறங்கி அடித்து விளையாடிய படம், இப்படத்துக்கு கொடுக்காத விருது விருதே அல்ல, இப்படத்தினால் தான் விருதுக்கு பெருமையே தவிர, ஆஸ்கர் என்னும் விருதின் அளவுகோல் கொண்டு இப்படத்தை அளக்கலாகாது,எனக்கு படத்தை முழுதும் எழுத ஆசை தான்,ஆனால் நீங்களும் படத்தை அனுபவிக்க வேண்டும் என்னும் நல்லெண்ணத்தினால் இங்கேயே நிறுத்தி விடுகிறேன்.படம் இப்புள்ளியில் ஒரு சிறப்பான ரோட் மூவியாக பரிமாணம் பெறுவதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.

படம் தரவிறக்க சுட்டி:-
http://torrentz.eu/4ced61e54e0eebce3f7a37c0ddf6a912095a02c7

படத்தில் வரும் அருமையான பாடல்களை ஆன்லைனில் கேட்க
http://www.nonesuch.com/albums/inside-llewyn-davis