அபுர் பாஞ்சாலி [Apur Panchali ][2014] [பெங்காலி]


உலகின் தலைசிறந்த நூறு படங்களில் பதேர் பாஞ்சாலியும் அடக்கம்,உலகின் தலைசிறந்த மிகவும் கொண்டாடப்பட்ட சிறுவர் பாத்திரத்தின் முதன்மையானது அபு கதாபாத்திரம்.பெங்காலி சினிமாவின் சிறந்த இயக்குனரான கௌஷிக் கங்குலி, தன் மானசீக குருவான சத்யஜித்ரேவிற்கு இந்த அபுர் பாஞ்சாலி மூலம் பாதபூஜை செய்திருக்கிறார். படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் குருவிற்கு காணிக்கையாக்கியிருக்கிறார்,

அபு ட்ரலஜியின் முதல் பாகமான பதேர் பாஞ்சாலி [1955],சினிமாவைக் கொண்டாடும் யாருக்குமே உயிரானது,அத்தனை நெருக்கமானது,அபு கதாபாத்திரத்தை உலகே கொண்டாடினாலும்,அதில் நடித்த சுதிர் பேனர்ஜியை 50 வருடங்களுக்கும் மேலாக யாருமே கண்டு கொள்ளவில்லை,அதில் இன்னுமொரு துயரம் என்னவென்றால்,அபு ட்ரலஜியில் இரண்டாம் பாகமான அபராஜிதாவில் வருவது போன்றே, இதிலும் சுதிர் பேனர்ஜியின் அப்பா பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக இருந்து மடிகிறார்,ஆசை ஆசையாக கைப்பிடித்த மனைவியும் அபுர் சன்சார் படத்தில் வருவது போல  குறைமாதத்தில் மனவளர்ச்சி குன்றிய ஆண் சிசுவை ஈன்றெடுத்தவர் நோய் வாய்ப்படுகிறார்.[படத்தில் அபுவின் மனைவி பிரசவத்தில் ஆண் சிசுவை பெற்றுத் தந்து விட்டு இறந்து விடுவார்],

பின்னர் வேலைக்காக ஊர் ஊராக அலைந்து திரிந்தும் அவரால் குமாஸ்தாவுக்கும்  மேலான எந்த ஒரு வேலையிலும் பிரகாசிக்கமுடியவில்லை,தான் மிகவும் நேசித்த கால்பந்தாட்டத்தையும் தொடரமுடிவதில்லை, தொடர் வறுமை சினிமாவை விட்டு நீண்ட தூரம் இவரைத் தள்ளி வைத்து விட்டது,இவருக்கு வயதானதைக் காரணம் காட்டி இவர் வேலையில் இருந்தும் கட்டாய ஓய்வு கொடுக்கப்படுகிறார். இது போல அபு ட்ரலஜி படங்களின் அபு கதாபாத்திரத்துக்கும் நிஜ பாத்திரத்துக்கும் ஆன நிறைய ஒற்றுமைகளால் மிகவும் மனம் நொந்தவர், சினிமா உலகின் தொடர் புறக்கணிப்பாலும், காலம் சென்ற மனைவியின் பிரிவுத்துயராலும் யாருடனும் பேசாமல் தனியே வாழுகிறார்.

இச்சூழ்நிலையில் தான் அபு கதாபாத்திரத்தையும் பதேர் பாஞ்சாலி திரைப்படத்தையும் மிகவும் கொண்டாடும் சத்யஜித்ரே திரைப்படக்கல்லூரி மாணவன் , இவரைத் தேடி வருகிறான், இவர் அவனிடம் முகம் கொடுத்து பேசாவிட்டாலும்,மனம் தளராதவன்,தினமும் தொடர்ந்து வந்து அவரின் அன்பை போராடி வெல்கிறான்,

அவன் கொண்டுவந்த கடிதம் ஜெர்மனி உலகசினிமா கவுன்சிலில் இருந்து வந்திருக்கிறது, உலகின் தலைசிறந்த குழந்தை நட்சத்திரங்களையும், குழந்தைகளை மிகச் சிறப்பாக சித்தரித்த சிறந்த திரைப்படங்களையும் கௌரவிக்க எண்ணிய அக்கவுன்சில் பைசைக்கிள் தீவ்ஸ் உள்ளிட்ட அனைத்துப் படங்களையும் பட்டியலிட்டு, அதில் முதன்மையாக பதேர் பாஞ்சாலியை வைக்கிறது, அதில் நடித்த சுதிர் பேனர்ஜிக்கு கடிதம் சத்யஜித் ரே திரைப்படக் கல்லூரி மூலம் கொடுத்து அனுப்புகிறது.

இனி மாணவனும் சுபீர் பேனர்ஜியும் எப்படி ? ஜெர்மனி சென்று விருது வாங்கி வந்தனர் என்பதை மிகுந்த நெகிழ்ச்சியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். பதேர் பாஞ்சாலி,அபராஜிதோ, அபுர் சன்சார் படங்களின் பளிங்கு போன்ற காட்சிப் பிரதிகள் படத்தின் ஊடே வரும் சுதிர் பேனர்ஜியின் கடந்த கால வாழ்க்கைப் பிண்ணனியுடன் ஓப்பீட்டுக்காக காட்டப்படுகிறது, அவை அத்தனை அழகு,ரம்மியம்.

திர் பேனர்ஜியின் கடந்த கால வாழ்வைக் காட்ட கருப்பு வெள்ளையை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர், அதுவும் அத்தனை அழகு,பாந்தம் ,  தரம், படத்தில் இவர் சத்யஜித் ரேவைப் பற்றி குறிப்பிடுகையில் காக்காபாபு என்றே குறிப்பிடுகிறார், இவரை சினிமா உலகம் புறக்கணித்ததற்கு சமாதானப் படுத்த அந்த மாணவன் சொல்லும் உண்மைகள் உறைய வைக்கும்.சினிமாவில் மிகச்சிறப்பாக பங்காற்றிய நடிகர்களை சினிமா உலகம் மறந்து போவது ஒன்றும் புதிதல்ல.

சார்லி சாப்ளினின் த கிட் படத்தில் நடித்த சிறுவன்Jackie Coogan  அதன் பின்னர் எந்தப் படத்திலும் சோபிக்க முடியவில்லை,தன் ஐம்பதாம் வயதில் சில டிவி தொடர்களில் மட்டுமே அவரால் நடிக்க முடிந்தது.

E.T. the Extra-Terrestrial   படத்தில் நடித்த ஹென்ரி தாமஸ் தொடர்ந்து சில படங்கள் நடித்தும் தாக்குப் பிடிக்க அதிர்ஷ்டம் இல்லாததால் ஒரு கிடாரிஸ்ட் ஆக மாறிப்போனார்.

பைசைக்கிள் தீவ்ஸ் படத்தில் நடித்த சிறுவன் Enzo Staiola கூட இரு படங்களுக்கு மேலாக சோபிக்க முடியவில்லை,அவர் வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு கணக்கு ஆசிரியராக மாறிப்போனார்.

படம் பற்றி மேலும் விரிவாக எழுத வேண்டும், சத்யஜித் ரேவின் ரசிகர்கள், உலகசினிமா ரசிகர்கள் அவசியம் கொண்டாட வேண்டிய அழகியல் படைப்பு, இது 2014 ஆம் ஆண்டு சிறந்த இயக்குனருக்கான வெள்ளி மயில் விருதை வென்றது.

படத்தின் ட்ரெய்லரே மயிர் கூச்சரிய வைக்கும்,முயன்று பாருங்கள்