அழகே உன்னை ஆராதிக்கிறேன் [1979] வாணி ஜெயராமின் முத்தான நான்கு பாடல்கள்


அழகே உன்னை ஆராதிக்கிறேன் [1979] படம் பார்த்துவிட்டு , இயக்குனர் ஸ்ரீதர் வாணி ஜெயராமின் ரசிகராகத்தான் இருக்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன், அந்த ரசிகரின் நேயர் விருப்பத்துக்கேற்ப   இசைஞானி  காலத்தால் அழியாத பாடல்களைத் தந்து பிரமிப்பூட்டியிருப்பார். அதில் வாணியம்மாவுக்கு நான்கு முக்கியமான பாடல்கள் உண்டு, அது தவிர படத்தில் நடிகை லதாவின் கதாபாத்திரத்தின் பெயரும் வாணி தான்.அப்போதைய லதாவுக்கும் வாணி ஜெயராமின் தோற்றத்துக்கும் நிறைய உருவ ஒற்றுமை உண்டு,முக்கியமாக பெரிய கண்கள்.


படத்தின் எல்லா பாடல்களையும் கவிஞர் வாலியே எழுதியிருக்கிறார்.

என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்,[தனிப்பாடல்]
http://www.youtube.com/watch?v=DRkseznZXOo
நானே நானா, [தனிப்பாடல்]
http://www.youtube.com/watch?v=SD5fhs1JwbQ
தனிமையில் யாரிவள்? [தனிப்பாடல்]
http://www.youtube.com/watch?v=RIxJfCsDqcA
குறிஞ்சி மலரில் ,[எஸ்பிபி.வாணி ஜெயராம்]
http://www.youtube.com/watch?v=HNM-6p_Za00
என்று அமர்க்களம் செய்திருப்பார்,

இன்று  நவம்பர் 30 வாணி ஜெயராமின் 71 ஆம்  பிறந்த நாள்.பல்லாண்டுகாலம் வாழட்டும்,அவரின் இயற்பெயர் கலைவாணியாம்,எத்தனை கலைவாணி கடாட்சம் அவருக்கு வாய்த்திருக்கிறது பாருங்கள்.

நடிகை லதா ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் பேத்தியாவார்,இவரின் தம்பி ராஜ்குமார் சேதுபதியை மணந்ததால் நடிகை ஸ்ரீப்ரியாவுக்கு லதா நாத்தனார் ஆகிறார்.இந்த ராஜ்குமார் சேதுபதி 80களில் சொந்த காசில்  வதவதவென படங்கள் நடித்து சினிமா எடுத்து காணாமல் போய்விட்டார்.இப்போது தெலுங்கில் த்ருஷ்யம் படத்தை ஸ்ரீப்ரியா ரீமேக் செய்ய ,இவர் தயாரித்து இருக்கிறார்.வெங்கடேஷ் மீனா ஜோடி,படம் நல்ல வெற்றி பெற்றது,படத்தின் ரீமேக்கை 3மாதத்தில் முடித்து அதே வேகத்தில் வெளியிட்டு லாபம் பார்த்திருக்கிறார் முன்னாள் நடிகை ஸ்ரீப்ரியா.

இது ஒரு ஸ்டார் வேல்யூவும் இல்லாத தோல்விப்படம், ஸ்ரீதரிடமிருந்து மற்றுமொரு அழுகாச்சிக் காவியம்,இப்படத்தை அவர் பெங்களூரில் படம் பிடித்திருந்தார்,பிற்பாதி கோவாவில் படமாக்கியிருந்தார்.படத்தில் நாகேஷ்,வி,எஸ் ராகவன் போன்றோரும் உண்டு,இளம் ஜோடிகளாக பிரகாஷ் மற்றும் சுபாஷினி,அதன் பின்னர் என்ன ஆனார்கள் என தெரியவில்லை,

ஸ்ரீதர் படங்களில் நாயகியோ,நாயகனோ,உப பாத்திரங்களோ தலையில் கட்டுப் போட்டு வசனம் பேசி மகனையோ,மகளையோ,மனைவியயோ நிராதரவாக விட்டு செத்துப் போவார்கள் என்பது எழுதப்படாத விதி,

இதில் நாயகி லதாவின் அண்ணனான வி.கோபாலகிருஷ்ணனும் அவர் மனைவியும் விபத்தில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் உயிர் விடுகின்றனர்,அதே போலவே கடைசி ரீலில் அண்ணன் மகளுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்து சிறை செல்லும் முன்பே லதா விஷம் குடித்து இறக்கிறார்.ஜெய்கணேஷ் இதில் பெண் பித்தர்,விஜயகுமார் லதாவின் மாடி வீட்டில் குடியிருப்பவர்,

லதாவை ரோஜாப்பூக்கள் நிரம்பிய பெரிய மலர் கொத்துகளில் அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்று பெயர் போடாமல் எழுதி அனுப்பி காதலிக்கிறார்,கடைசி ரீலில் லதாவின் சமாதிக்கு அனுதினம் பூங்கொத்துக்களுடன் சென்று ஆராதிக்கிறார்,படத்தின் பெயரிலேயே ஒரு பாடல் சோக வடிவத்தில் இசைஞானி மெட்டமைத்திருக்கிறார்,வெறும் பல்லவி மட்டுமே வரும்.

படத்தில் நிறைய ஆங்கில வசனங்கள் உண்டு,அதில் லதா வேலை செய்யும் அலுவலகத்தில் சக ஊழியரால் லதாவிடம் ஒரு ஜோக் அடிக்கப்படுகிறது.போனில் யார் உங்கள் பாய் ஃப்ரெண்டா?இல்லை எனக்கு பாய்ஃப்ரெண்டே கிடையாது,உடனே அந்த அசடு  Oh ... I didn't know you are a lesbian என்கிறார்.அந்த காலத்திலேயே லெஸ்பியன் என்னும் சொல்லை ஸ்ரீதர் துணிந்து பயன் படுத்தியிருக்கிறார்.என எண்ணி வியந்தேன்.

பி.வாசு இதில் உதவி இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார்.