கண்ணில் தெரியும் கதைகள் [1980] நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே



கண்ணில் தெரியும் கதைகள் என்னும் திரைப்படம் 1980 ஆம் ஆண்டு தேவராஜ் மோகனின் இயக்கத்தில் வெளியானது, இதில் சரத்பாபு,ஸ்ரீப்ரியா,வடிவுக்கரசி நடித்திருப்பார்கள். படத்தின் கதை கிருஷ்ணா ஆலனஹல்லி என்னும் கன்னட நாவலாசிரியர். தேவராஜ் மோகனின் ரோசாப்பூ ரவிக்கைக்காரி,பூந்தளிர் உள்ளிட்ட நிறைய படங்களுக்கு இசைஞானி மகத்தான பங்களித்திருப்பார்.

இப்படத்திலும் அவர் அன்புக்கு கட்டுப்பட்டு ஐந்து இசையமைப்பாளர்களுள் ஒருவராக தன்னடக்கத்துடன் பங்களித்திருப்பார். இப்படம் இன்று யார் நினைவிலும் நில்லாமல் பெட்டிக்குள் சுருண்டாலும், இப்படத்தின் நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே என்னும் பாடல் ஒரு அற்புதமான ரேர் ஜெம். இன்றும் இசைஞானி ரசிகர்கள் அவரின் பரீட்சார்த்த முயற்சிகளுக்கு உதாரணமாக தவறாமல் இப்பாடலைக் குறிப்பிடுவர்,

இப்படத்தின்  ஐந்து இசை அமைப்பாளர்களில்.முறையே இசைஞானி இளையராஜா [நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரில் மற்றும் பின்னணி இசை,இப்பாடலை எழுதியவர் புலமைப் பித்தன். இப்பாடலைப் பாடியவர்கள் விஷயத்திலும் முக்கியத்துவம் பொருந்தியதாக உள்ளது, இளையராஜா இசையில் ஜானகி அம்மாவும் பி.சுசீலாம்மாவும் முதலும் கடைசியுமாய் இணைந்த பாடல் இது.,எஸ்.பி,பியும்  மிக அருமையாக ஈடுகொடுத்துப் பாடியிருப்பார், இசைஞானிக்கு பிடித்த மோஹன ராகத்தில் அமைந்த இப்பாடலை இங்கே பாருங்கள்
http://www.youtube.com/watch?v=BAZ7MJpv3nc


இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் [நான் உன்னை நினைச்சேன் நீ என்ன நினைச்சே!!!] பாடல் இயற்றியது கவிஞர் கண்ணதாசன். இப்பாடலை எஸ்.பி.பி.வாணி ஜெயராம்,மற்றும் ஜிக்கி பாடியிருப்பார்கள். இப்பாடலை இங்கே பாருங்கள்
http://www.youtube.com/watch?v=SAxFIp4gkJ8


இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் [நான் பார்த்த ரதி தேவி எங்கே?என்னும் பாடலுக்கு இசையமைத்திருந்தார்.தயாரிப்பாளரான ஏ.எல் ராகவன் பாடியிருந்தார்] ,[இசைஞானியின் முன்னாள் முதலாளியான ஜி.கே.வெங்கடேஷ் 1993 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை இசைஞானியுடனே நிறைய திரைப்படங்களில் இணைந்து இசைப்பங்காற்றினார்.அவர் மெல்லத் திறந்தது கதவு படத்தில் மோகனின் இசைப்பள்ளி ஆசிரியர்/அப்பாவாகவும் தோன்றியிருப்பார்.]
http://www.youtube.com/watch?v=ihXQ-hLKAW8



இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவன் [ என்ன பாடல் கண்டுபிடிக்க முடியவில்லை]  ,

இசையமைப்பாளர் அகத்தியர் aka டி.ஆர்.பாப்பா, [ என்ன பாடல் கண்டுபிடிக்க முடியவில்லை] அவர் ஏன் படத்தின் டைட்டில் கார்டில் அகத்தியர் என்ற பெயரில் இசை அமைத்தார் என்றும் விளங்கவில்லை.

படம் முழுக்க சகிப்புத்தன்மையுடன் பார்த்துவிட்டு மீதம் இருவர் இசையமைத்த பாடல் விபரங்களை எழுதலாம் என நினைத்தேன் ஆனால் முடியவில்லை,படம் அத்தனை திராபை.

படத்தில் இசைஞானிக்கு மிகவும் பிடித்த பாடகரான டி.எம்.சௌந்தரராஜனும் பாடியிருக்கிறார், [இதை 1995 சென்னை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவரின் உற்ற தோழர் /பாடகர் எஸ்.பி.பி கேள்வி கேட்க சிறிதும் யோசிக்காமல் தயங்காமல் அவர் பெயரைச் சொல்லியிருப்பார். இத்தனைக்கும் மலேசியா வாசுதேவன் அவர்களின் வரவுக்குப் பின்னர் டி.எம்.எஸ் அவர்களை இசைஞானி அதிகம் பாடல்களில் பயன்படுத்தியதில்லை. டி.எம்.எஸ் இசைஞானியின் அன்னக்கிளியில் முக்கிய பாடலான அன்னக்கிளி உன்னைத் தேடுதேவை பாடியிருப்பார்.1979,1980,1981 வரை இளையராஜாவின் கேள்விப்படாத படங்களில் டி.எம்.எஸ் அவர்கள் நிறைய பாடியுள்ளார்,அவற்றை தொகுக்கவேண்டும்.

இதே போல ஐந்துக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் மீண்டும் இணைந்து தமிழ் சினிமாவில் பணியாற்றியது வசந்தின் ஹேய் நீ ரொம்ப அழகா இருக்கே[2002] படத்தில் தான்.ஸ்ரீனிவாஸ், ராகவ்-ராஜா, முருகவேல், ரமேஷ் விநாயகம், அரவிந்த்-ஷங்கர்,சபேஷ் முரளி போன்றோர் ஒவ்வொரு பாடலுக்கும் இசையமைத்தனர்.