தழுவாத கைகள் [1986]


விஜய்காந்தின் தழுவாத கைகள் [1986] பற்றி ஒரு குறிப்பு, அதில் 8 குழந்தைகளுக்கு அப்பாவாக வருவார், [படம் வருகையில் அவருக்கு திருமணமே ஆகவில்லை] படத்தில் விஜயகாந்தின் மனைவி அம்பிகா, இதில் முதல் காட்சியிலேயே அபோலோ மருத்துவமனையின் பிரசவ அறை வாசலில் விஜய்காந்தை ஒரு கம்பவுண்டர் கன்னத்தில் அறைவார், [காமெடிக்குத்தான்]

அதன் பின்னர் கம்பவுண்டர் சார்லியும் அங்கே வர ,எட்டு குழந்தைகள் பெற்றும் இவர் தலை நரைக்காததை வியந்து ஆத்திரத்தில் கவுண்டமணியைப் போல முரட்டுக்காமெடியாக விஜயகாந்தின்  தலையை கொத்தாக ஆட்டி பிடித்து கலைத்தும் விடுவார்.அப்போது விஜய்காந்தின் தலைச்சாயம் முழுக்க சார்லியின் கைகளில் ஒட்டியிருக்கும்.

இவை காமெடிக்காகத் தான் என்றாலும் விஜய்காந்த் ஆர்.சுந்தர்ராஜன் என்னும் இயக்குனர் சொல்கேட்டு எந்த வம்பும்,செய்யாமல் நடித்தது புரியும்.படம் வந்த 1986 ல் ஒரே சமயத்தில் 20 படங்கள் செய்த பிஸி நடிகர் அவர்,அவர் நினைத்திருந்தால் இது என் கௌரவத்துக்கு இழுக்கு,என்று அடம் பிடித்திருக்கலாம். இதோ இந்த வீடியோவைப் பாருங்கள்,இதை இப்போது உள்ள நண்டு சிண்டு நடிகர்கள் புரிந்து ,நடிப்பில் கௌரவம் பாராமல் நடிக்கத் தான்   இங்கே எழுதினேன்.இப்ப்பொது இங்கே உள்ள நடிகர்கள் திருமணமாகி ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடிக்கத் தயங்கும் நிலையில்,விஜயகாந்த் அப்போது தேர்வு செய்து நடித்த இவ்வேடம் அதிசயம் தான்.

விஜயகாந்த் இப்போது அரசியலில் நுழைந்து ஆளே மாறிவிட்டிருக்கலாம், எடுத்ததற்கெல்லாம் கோபம் வந்து சக தொண்டரை,அடிக்கலாம்,அசிங்கமாக திட்டலாம்,அவரால் நிறுத்தி நிதானமாக கோர்வையாக பேசமுடியாமல் இருக்கலாம்,ஆனால் அவர் ஒரு நல்ல நடிகராகத் தான் இருந்திருக்கிறார்,எனத் தோன்றுகிறது

http://www.youtube.com/watch?v=iwlTTaFrXIg

இப் படத்தில் எஸ்பிபி பாடியிருக்கமாட்டார்,ஜெயச்சந்திரனை வைதேகி காத்திருந்தாள்,அம்மன் கோவில் கிழக்காலேவை தொடர்ந்து இதிலும் முயன்றிருப்பார் இசைஞானி, அவரின்இசையில் ஒண்ணா ரெண்டா தாமரைப்பூ,விழியே விளக்கொன்று ஏற்று,பூங்குயில் பொன்மாலையில் பாடுதே பாடல்,

மற்றும் ஆசையக் காத்தில தூது விட்டு என்னும் மெட்டிலேயே வரும் தொட்டுப்பாரு ,குத்தமில்ல,ஜாதி முல்ல,சின்னப்புள்ள,என்னும் பாடல் நன்றாயிருந்தும் பேசப்படாமல் போனவை.

எல்லோருக்கும் இன்றும் நினைவில் நிற்பது குடும்பத்தை உருவாக்கச் சொன்னா பாடலே,நண்பர்கள் இப்படத்தில் வரும் ரேர் ஜெம் பாடல்களை இங்கே கேட்கலாம். 
http://shakthi.fm/ta/album/show/9566044c

இப்படத்துக்கு மூலக்கதை நம் பதிவர் ஷன்முகப்ரியன் எழுதியிருப்பார், இயக்கம் ஆர்.சுந்தர்ராஜன்,
இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இதுவரை அவரின் எந்தப்படத்துக்கும் திரைக்கதை வடிவத்தை எழுதி  இயக்கியதில்லையாம்.ஸ்பாட்டில் தான் வைத்து அன்று தோன்றுவதை அப்படியே படம் எடுப்பாராம்.யாராலேனும் நம்ப முடிகிறதா?இது அவரின் பள்ளித் தோழரான பாக்யராஜ் அவரைப்பற்றி சித்திரையில் நிலாச்சோறு என்னும் பட அறிமுக மேடையில் சொன்னது. http://www.youtube.com/watch?v=AmabMELmGBc