தப்புத் தாளங்கள் [1978] இயக்குனர் கே.பாலச்சந்தரின் அறிமுகங்கள்-பாகம்-1



தப்புத்தாளங்கள் 1978 திரைப்படத்தில் ரஜினியின் தம்பி சோமா கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று  பெரும் பொருளீட்டும் கதாபாத்திரம். நம் சமகாலத்தின் பிரபல கொலைகாரனும், அரசியல் மற்றும் பெண் தரகனும்,சாராய வியாபாரியுமான  ஆட்டோசங்கரின்  கேரக்டர் ஸ்கெட்சை தப்புத்தாளங்கள் படத்தில் ரஜினியின் தம்பி சோமா என்னும் நடிகர் சுந்தர்ராஜ் செய்த கதாபாத்திரத்திற்கு அப்படியே கொடுத்திருந்தார் பாலச்சந்தர்.

ஆட்டோ சங்கர்   70களின் பிறபாதிகளிலேயே குற்றங்களை செய்யத் துவங்கிவிட்டான், அதனால் தான் இந்த கேரக்டர் ஸ்கெட்ச்களின் பொருத்தத்தை எண்ணி வியந்தேன், ஆட்டோ சங்கர்  1980ன் பிற்பாதியில் அவன் மாட்டியது அவனது கெட்ட நேரத்தில், அப்போது அவன் நிறைய கொலைகளை செய்து விட்டிருந்தான், அவன் அன்று மாட்டியிருந்திருக்காவிட்டால் அவனும் இன்று ஒரு கல்வித்தந்தை.

சுந்தர் ராஜை தமிழ் கன்னடம் என ஒரேநேரத்தில்  இப்படம் மூலம் அறிமுகம் செய்தார் இயக்குனர்.நடிகர் சுந்தர் ராஜ் தமிழர் என்றாலும் ரமேஷ் அரவிந்த் போலவே பாலச்சந்தரால் கன்னடத்திலும் அறிமுகம் செய்யப்பட்டு அங்கே பிரபலமாகிவிட்டார்,

 படத்தில் சோமா   திருவான்மியூர் போன்ற ஓர் புறநகரின் பலே சாராய வியாபாரி, பலே பெண் தரகன், பலே கொலைகாரன்,பலே ரேபிஸ்ட், பல பெண்களை ஒப்பந்தம் போட்டு குடும்பம் நடத்தி தூக்கி எறிபவன். பைக்கையும் அடிக்கடி மாற்றும் பழக்கம் கொண்டவன். படத்தில் இவரது ஜாவா பைக்கும் ஒரு கதாபாத்திரமாகவே காட்டியிருப்பார் இயக்குனர்,

இவருக்கு ஒரு வித்தியாசமான மேனரிசத்தை வைத்திருந்தார் இயக்குனர்,சோமா தன் புட்டத்தாலேயே எதிராளியை ஆணோ பெண்ணோ அவர்களை அவர்களின் இடுப்பில் இடிக்கும் ஒரு வினோதமான பழக்கம் கொண்டவன், தன் ஜாவா பைக்கில் வீட்டுக்குள்ளேயே சுற்றி சுற்றி வலம் வருபவன்.
இந்த அயோக்கியனைக்கூட மரியா என்னும் அனாதைப் பெண் கதாபாத்திரம் காதலிக்கிறாள்,அவளுக்கு அவன் எத்தனை அயோக்கியத்தனம் செய்தாலும் கள்ளமில்லா சிறுவயது தோழமையையே அவள்  சோமாவிடம் எதிர்பார்க்கிறாள்,ஆனால் சோமாவோ அவளை வைப்பாட்டியாக வைத்துக்கொள்கிறேன் என்கிறான்.

இந்த மரியா என்னும் கதாபாத்திரத்தில் பிரமிளா ஜோஷி என்னும் நடிகையை  தமிழ் கன்னடம் என ஒரேநேரத்தில்  இப்படம் மூலம் அறிமுகம் செய்தார் இயக்குனர். இன்றைய கன்னட சினிமாவில் சுந்தர்ராஜும், பிரமீளா ஜோஷியும் நிரூபனமான குணச்சித்திர  நடிகர்கள், ஆதர்ச தம்பதிகளும் கூட, இவர்களின் மகள் மேக்னாராஜையும் 2010ல் பாலச்சந்தர் தயாரித்த  கிருஷ்ணலீலை என்னும் படத்தில் நடிகர் ஜீவனுக்கு ஜோடியாக அறிமுகம் செய்தார்.