மதுவிலக்கும் தமிழ் சினிமாவும் ஒரு பார்வை



திரைப்படப் பாடல்கள் கூட நமக்கு வரலாற்றைச் சொல்லும்,1983 ஆம் ஆண்டில் வெளி வந்த தனிக்காட்டுராஜா படத்தில் வரும் ”நான் தாண்டா இப்போ தேவதாஸ்” என்ற கவிஞர் வாலி அவர்கள் இயற்றி எஸ்.பி,பி பாடிய பாடலில் "தொறந்தான் கடைய எடுத்தான் தடைய" என்று ஒரு வரி வருகிறது. உடனே நான்  வரலாற்றை புரட்டிப் பார்த்தேன்.

1974 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட தீவிர மதுவிலக்கை சுமார் 9 வருடம் கழித்தே 1983ல் தமிழக அரசு திரும்பப் பெற்றிருக்கிறது.அதையே இப்பாடல் புகழ்ந்து பேசுகின்றது.

======000======
தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்த காலப் பட்டியல் இங்கே

1937-1973= 36  வருடங்கள் தீவிர மது விலக்கு அமலில் இருந்த காலம் [பெர்மிட் ஹோல்டர் மட்டுமே மது அருந்த முடிந்த காலம்] ஏனையோருக்கு கள்ள சாராயம் தான் கதி

1971–74=3 வருடங்கள் தமிழக அரசு மது விற்பனைக்கு அனுமதித்த காலம்
இக்காலத்தில் கள்ளுக்கடைகளும், சாராயக் கடைகளும்,பிராந்திக் கடைகளும் பார்களும் இயங்கின.

1975-1982= 3 வருடங்கள் தமிழக அரசு மது விற்பனையை  தடை செய்திருந்த காலம்  [வெளிநாட்டு மது விற்ற பிராந்திக் கடைகள் மட்டும் உண்டு  குடிக்க பார்கள் கிடையாது பொது இடங்களில் எங்கு வைத்தும் மது அருந்தக் கூடாது]

1983–87=4 வருடங்கள் தமிழக அரசு மது விற்பனைக்கு அனுமதித்த காலம்
இக்காலத்தில்  சாராயக் கடைகளும்,பிராந்திக் கடைகளும் பார்களும் இயங்கின.

1988–90=2 வருடங்கள் தமிழக அரசு மது விற்பனைக்கு அனுமதித்த காலம்
இக்காலத்தில் ஒயின்ஸ் ஷாப்கள் மட்டும் இயங்கின,பார்கள் கிடையாது. கள்ளுக்கடை, சாராயக்கடைகளுக்கு அனுமதி இல்லை.பொது இடங்களில் எங்கு வைத்தும் மது அருந்தக் கூடாது

1990–91 =1 வருடம் தமிழக அரசு மது விற்பனைக்கு அனுமதித்த காலம்
 [இந்த காலகட்டத்தில் தான் உறை என்று அன்புடன் அழைக்கப்பட்ட மலிவு விலை அரசு பாக்கெட் சாராயக் கடைகள் ஊரெங்கிலும் திறக்கப்பட்டன, பல்லாவரத்திலேயே 4 கடைகள் இருந்தன,இது தவிர ஒயின்ஸ் ஷாப் கடைகளும் பார்களும் நிரம்ப உண்டு,குடிகாரர்களுக்கு கொண்டாட்டமான காலகட்டம் இது]

1992-2000 எட்டு வருடங்கள் தமிழக அரசு மலிவு விலை மதுக்கடைகளை மூடிவிட்டு  தனியார் ஒயின் ஷாப்களையும் பார்களையும் மட்டும் நடத்த அனுமதித்த காலம்,

2001-2002 வரை=2 வருடங்கள் தமிழக அரசு தனியார் ஒயின் ஷாப்களையும் பார்களையும் மட்டும் நடத்த அனுமதித்த காலம்,

2003-இன்று வரை=சுமார் 12 வருடங்களாக தமிழக அரசே டாஸ்மாக் என்ற பெயரால் ஒயின் ஷாப்களை நடத்தி வரும் காலம்
======000======
அந்த  1971–74 மதுவிலக்கு காலத்தில் எழுத்தாளர் ஜி.நாகராஜனும் தன் குடிநோயால் பல  துன்பங்கள் அனுபவித்திருப்பார் போலும் , தமிழக அரசே குடிமகன்களிடையே பணக்காரன் குடிக்கலாம், ஏழை குடிக்கக் கூடாது என்று பாரபட்சம் காட்டுவது போல மதுவிலக்கை அமல்படுத்தியதை டார்க் ஹ்யூமராக   தன் நாளை மற்றுமொரு நாளேவில் கந்தன் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தியிருப்பார்.

அப்போது கள்ள சாராயத்துக்கு மாற்றாக மதுரை நகரின் விறகு கடைகளில் போலீசாருக்கு மாமூல் தந்துவிட்டு ஜிஞ்சர் என்னும் உற்சாக பானத்தை மறைத்து விற்றதைப் பற்றி விளாவாரியாக எழுதியிருப்பார்.[அது போல டீடெய்ல்களால்  தான் கடந்த காலத்தை வாசகனின் கண் முன்னே நிறுத்த முடியும்]

1974 ஆம் ஆண்டு அரசு மதுவிலக்கை திரும்பப் பெற்ற பிறகு வெளிவந்த கே,பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தில் 10 ஆம் நம்பர் சாராயக்கடையை நிஜமாகக் காட்டியிருந்தார்,  சமுதாயத்தில் வேலைவெட்டிக்குப் போகாதவர்கள் கூட  குடிக்கு அடிமையாகி ,எதிர்படுபவரிடம்  மீட்டர் போட்டு காசு கறந்து நடைபிணமாய்  வாழ்வதை ஜெய்கணேஷ் கதாபாத்திரம் மூலம் மிக அருமையாக சித்தரித்திருந்தார்.

அதன் பின்னர் மீண்டும் மதுவிலக்கு[தடை]1975-1982

1983ல் மதுவிலக்கு திரும்பப் பெற்ற பிறகு வெளி வந்த அனேகம் படங்களில் சாராயக் கடையும்,ஒயின் ஷாப்பும் ஒரு அங்கமாகவே வந்தன,அப்படி மதுவைக் கொண்டாடிய ஒரு ரசனையான பாடல் நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு பாடல்,கவிஞர் வாலியின் வரிகளை எஸ்.பி.பி பாடினார், நிரம்ப இரட்டை அர்த்த வசனங்கள் விரவியிருக்கும் பாடல், நாட்டுக் கட்டையான ஒய்.விஜயாவும் கமலும் குத்தாட்டத்தில் கலக்கிய பாடல்.ஏவிஎம் ஸ்டுடியோவுக்குள்ளே படமாக்கியிருப்பார்கள்.

https://www.youtube.com/watch?v=eszK86c7p44


1986 ஆம் ஆண்டு எழுத்தாளர் சிவசங்கரியின் ஒரு மனிதனின் கதை என்னும் தனியார் தயாரித்த தொலைக்காட்சி நாடகம் நடிகர் ரகுவரன் நடித்து வெளிவந்து குடும்பத்தாரிடம் குறிப்பாக பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கே.பாலசந்தரின் சிந்து பைரவியில் [1985] பூமாலை வாங்கி வந்தான்,பாடலில் உற்று கவனித்தால்  அப்போது தமிழகத்தில் விற்கப்பட்ட வெளிநாட்டு மது வகைகளான அரிஸ்டோக்ராட், நெப்பொலியன், பேண்ட் மாஸ்டர், ராயல் ரிசர்வ்,ஹனி பீ, ஃபைன் க்ரேப், நம்பர்.1 மெக்டவல், ஜான் எக்‌ஷாவ்,ஓல்ட் டாவர்ன், எம்ஜிஎம் ,பேக்பைப்பர், வின்டேஜ், சிக்னேச்சர், என நடிகர் சிவகுமார் விதவிதமான பிராண்டு  மதுவகைகளையும் முயன்று பார்த்து போதை ஏறாமல் குடிநோய் முற்றி அவதியுறுவதை மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார், பின்னணியில் வைரமுத்துவின் வலுவுள்ள வரிகளை இங்கே கவனியுங்கள்.
https://www.youtube.com/watch?v=DZZ6cfm0AS0



”கையில் கிண்ணம் பிடித்து விட்டான்
இனிக்கின்ற விஷத்துக்குள் விழுந்துவிட்டான்
ராகம் தாளம் மறந்துவிட்டான்
ரசிகரின் கடிதத்தை கிழித்துவிட்டான்
கடற் கரை எங்கும் மணல்வெளியில்
காதலி காலடி தேடினான்
மோகனம் பாடும் வேளையிலும்
சிந்துபில் ராகம் பாடினான்
விதி எனும் ஊஞ்சலில் ஆடினான்
போதையினால் புகழ் இழந்தான்
மேடையில் அணிந்தது வீதியில் விழிந்திட
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே”

நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான்
சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்
இசைக்கொரு குயிலென்று.. அஹ.. அஹ..
இசைக்கொரு குயிலென்று பேரெடுத்தான்
இருமலை தான் இன்று சுரம் பிரித்தான்
மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான்
மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்
போதையின் பாதையில் போகின்றான்
தன்முகமே தான் மறந்தான்
சூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அன்று”

அதே போலவே தண்ணி தொட்டி பாடலின் காட்சியாக்கத்திலும் நுணுக்கமான பல டீடெய்ல்கள் இருக்கும்,இப்பாடலில் வைரமுத்துவின் குடிக்கெதிரான வரிகளைக் கவனியுங்கள்.
https://www.youtube.com/watch?v=5zSLQh1Rp-g



”புட்டி தொட்டதால புத்திகெட்டுப் போனேன்
ஊறுகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கிறன்

அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா

மகாராஜா பிச்ச கேட்டு இங்கு பாடுறான்
என்னை பார்த்து கோப்பை தள்ளாடும்
காசு தீர்ந்தாலே கண்ணீரும் கல்லாகும்

இன்னும் கொஞ்சம் ஊத்து... சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து

எனக்கு ராகம் எல்லாம் தண்ணிப்பட்ட பாடு
இன்னைக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு

ஒரு ராகம் திசை மாறி இசை மாறுது...
மானம் போச்சு ஞானம் போகாது
ரோசம் பார்த்தாலே போதை தான் ஏறாது”

சிந்து பைரவி படம் பெரும்பாலும் விசாகப்பட்டினத்தில் எடுத்திருந்தாலும், சென்னையின் ஒய்ன் ஷாப்புகளை பேக்ரவுன்டில் காட்டி லோக்கேஷன் மேட்ச் செய்திருப்பார்.தவிர இதில் மிருதங்க வித்வானான டெல்லி கணேஷை ஒரு குடிநோயாளியாகவே சித்தரித்திருப்பார்.

கே,பாலசந்தர் தன் 1983 ஆம் ஆண்டு வந்த அச்சமில்லை அச்சமில்லை படத்தில் டெல்லி கணேஷ்  நடிகர் ராஜேஷின் தந்தை,அதிலும்  ஒரு குடிநோயாளி கதாபாத்திரம் தான் செய்திருப்பார்.

கே,பாலசந்தர் தன் 1986 ஆம் ஆண்டு வெளி வந்த புன்னகை மன்னன் படத்தில் டெல்லி கணேஷ்  கமல்ஹாசனின் தந்தை, ஒரு குடிநோயாளி கதாபாத்திரம் தான் செய்திருப்பார்.

கே,பாலசந்தர் தன் 1985 ஆம் ஆண்டு வெளியான கல்யாண அகதிகள் படத்தில் குடிப்பழக்கத்தால் மனைவியை [ஒய்.விஜயா] தன் நண்பனுக்கே கூட்டிகொடுக்கும் ஒரு இழிபிறவி கதாபாத்திரத்தில் நடிகர் நாசரை அறிமுகம் செய்தார்.அதீத குடி வெறியால்  சமூகத்தில் பலப்பல அவமானங்களை சந்தித்து மனைவிக்கும் பிறருக்கும் பல அநீதிகள் இழைத்து கடைசியாக ஒரு பெண் டாக்டரால் கார் ஏற்றி கொலை செய்யப்படுவார் நாசர்.

கே,பாலசந்தரின் 1992 ஆம் ஆண்டு வெளியான ஒரு வீடு இருவாசல் படத்தில் சார்லி தன் அதீத  குடிப்பழக்கத்தால் தமிழ் சினிமாவில்  இயக்குனராக வெற்றி பெற முடியாமல் துணை நடிகராகவே இருப்பார்.புதிதாக யாரைப் பார்த்தாலுமே நான் புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் பயின்றவன்,நஸ்ருதீன் ஷா எனக்கு சீனியர்,ஷப்னா ஆஸ்மி என் பேட்ச் என்று புருடா விட்டு இரக்கமும் பணமும் சம்பாதித்து குடிப்பார்.

கே,பாலசந்தரின் 1987ல் வந்த உன்னால் முடியும் தம்பி படத்தின் பிற்பாதி முழுக்க குடிக்கு எதிரான கருத்துக்களை படத்தின் நாயகன் உதயமூர்த்தி [கமல்]எடுத்துரைத்து அவ்வூரின் குடிநோயாளிகளைத் திருத்துவது போல பல காட்சிகள் உண்டு, நாயகன் உதயமூர்த்தி பாடும் உன்னால் முடியும் தம்பி என்னும் பாடலின் குடிப்பழக்கத்துக்கு எதிரான வலுவான வரிகளைப் பாருங்கள்.இப்பாடலை கவிஞர் முத்துலிங்கம் இயற்றி எஸ்,பி.பி அவர்கள் பாடினார்.

https://www.youtube.com/watch?v=tf6L-rg76C8


”ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்
சாராய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்
காசுள்ள பக்கம் பாயாதடா
குடிச்சவன் போதையில் நிற்பான்
குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா
கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா
கட்சிக் கொடி ஏறுது போடா
கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா
கட்சிக் கொடி ஏறுது போடா
மண்ணோடு போகாமல்
நம் நாடு திருந்தச் செய்யோணும்”

கொசுறுச் செய்தி [உன்னல் முடியும் திரைப்படத்தில் அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா இசைஞானி எழுதிய தத்துவப் பாடல், அவருக்கு பாடல்களும் வெண்பாவும், எழுத வரும் என்றாலும் ,அவர் சினிமாவுக்கு எழுத மாட்டார், ஆனால் குரு ரமண கீதம், ராஜாவின் ரமணமாலை, உள்ளிட்ட பல பக்திப் பாடல்களின் தொகுப்பு முழுக்க அவரே இயற்றியிருக்கிறார் , இப்பாடல் உருவாக்கத்தில் கே.பாலசந்தர் அவர்களுடன் அமர்ந்திருக்கையில்   மெட்டுடன் பாடலின் வரிகளும் உற்சாகமாகப் பிறக்க முழுப்பாடலையும் அவரே எழுதிவிட்டார்.]