கே.பாலசந்தரின் புல்லுருவி குடும்ப உறுப்பினர் கதாபாத்திரம் ஒரு பார்வை


அண்ணன் மூர்த்தியாக ஜெய்கணேஷ்
அவள் ஒரு தொடர்கதையின் மூர்த்தி என்னும் நடிகர் ஜெய்கணேஷ் செய்த பொருப்பற்ற புல்லுருவி அண்ணன் கதாபாத்திரம் தான் பின்னாளில் வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் ஒரு விரல் கிருஷ்ணாராவ் செய்த பொருப்பற்ற புல்லுருவி அப்பா கதாபாத்திரமாக நீண்டது.ஜெய்கணேஷ் எதிர்படும் நபரை எளிதில் ஏமாற்றி சாராயம் குடிக்கவும் ரேஸுக்கும் பணம் தேற்றி விடுவார்,

70,80,90களில் இதே போன்ற குடிமகன்கள் கிண்டி ரேஸில் பணம் தொலைத்தது போதாமல் பெங்களூர் எல்லாம் போய் தோற்று வருவர்,அவர்களிடம் குதிரை படம் போட்ட ரேஸ் டிப்ஸ் கையேடு இருக்கும்,தவிர டீக்கடை தினத்தந்தியில் ரேஸ் டிப்ஸை விடாமல் மேய்வார்கள்.வீட்டு உறுப்பினர் பெயரை விட குதிரையின் பெயர்களை சொல்லி எச்சில் தெறிக்க பேசுவார்கள்.

அவள் ஒரு தொடர்கதை படத்திலும் ஜெய்கணேஷ் அவ்வாறு பெங்களூர் சென்றும் ரேஸில் தோற்றவர் தங்கையின் அலுவலக மேனேஜரான [ஹைக்ளாஸ் தருதலை] எம்.ஜி.சோமனிடம் மீட்டர் போட்டு கடன் வாங்கி வீடு வருவார் ,

அதே போல ஒரு விரல் கிருஷ்ணாராவ் தன் மகள் இறந்து விட்டாள்,அடக்கம் செய்ய காசு வேண்டும் என்று புளுகி கமல் போஸ்டல் ஆர்டர் வாங்க வைத்திருந்த 15 ரூபாயை கபளீகரம் செய்து போய் ரேஸில் தொலைப்பார்.பின்னொரு சமயத்தில் கமல் அவர் பஸ்டேண்டில் சிகரட் கடன் வாங்கி,நெருப்பு கடன் வாங்கும் சாக்கில் பல பிராண்ட் சிகரட்டை ஓஸி வாங்கி இழுப்பதைப் பார்த்தவர்,துரத்தி ஓடிப்போய் ஸ்ரீதேவி வீட்டில் வைத்து இவரைப் பிடிப்பார்.வருங்கால மாமனாரை சட்டையை கொத்தாகப் பிடித்து தூக்கி பிரட்டி எடுத்து விடுவார்.

இன்று அவர்கள் தாராளமயமாக்கல் சமூகத்தில் வழக்கொழிந்து போயிருக்கலாம், அவர்களை மிகவும் கவனமாக இந்த இரு கதாபாத்திரங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பதிவு செய்திருந்தார் இயக்குனர்.இன்று டாஸ்மாக் வாசலில் போய் நின்று வேடிக்கை பாருங்கள்,அங்கே இதே போன்ற ரெகுலர்கள் கடந்து போகிற வருகிறவர்களை நிறுத்தி இரக்கம் தொனிக்க பேசி ஐந்து ஐந்து ரூபாயாக தேற்றி கட்டிங்க் மேல் கட்டிங்காக அடித்தபடி இருப்பார்கள்.

தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் தனித்திறமையை பல ஆண்டுகள் நீடித்திருந்தவர் ஜெய்கணேஷ்.இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர், பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதையில்  அறிமுகமான இவர்  ஆட்டுக்கார அலமேலு, வருவான் வடிவேலன், இமயம், பைலட் பிரேம்நாத், சின்னவீடு, உள்ளத்தை அள்ளித்தா, தாயில்லாமல் நானில்லை, முருகன் அடிமை, வணக்கத்துக்குரிய காதலியே, அதிசயப்பிறவி, சத்திய சுந்தரம், பார்த்தேன் ரசித்தேன்  என சுமார் 400 படங்களில் நடித்துள்ளார். தன் ஐம்பதுகளிலேயே பான்பராக பழக்கத்தால் வாய் புற்றுநோய் ஏற்பட்டு இறந்தார்.
ஒரு விரல் கிருஷ்ணாராவ்
ஒரு விரல் கிருஷ்ணாராவ் பற்றி ஒரு தகவல் இங்கே ,நிழல் நிஜமாகிறது படத்தில் ஷோபாவுக்கு இருக்கும் ஒரே உறவினர் மிகுந்த கோபக்காரர்,அதில் அவர் சலவைத் தொழிலாளியாதலால்,

அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் அக்காட்சிக்கான  சூழலையும்,துணியின் தரத்தை,வண்ணத்தை,அது சாயம் போகும் தன்மையையும் ஒப்பிட்டு இணைத்து பேசுவது போல இயல்பான நகைச்சுவையில் மௌலி அவர்களை வைத்து எழுதப்பட்டிருக்கும். அப்படம் பார்க்கையில் கவனித்துப் பாருங்கள்.பல சுவையான அம்சங்கள் பிடிபடும்.

ஒரு விரல் படத்தின் மூலம் அறிமுகமானவர். கிருஷ்ணாராவ்  கருந்தேள் கண்ணாயிரம், காவியத்தலைவி, நான்கு கில்லாடிகள், பிராயச்சித்தம், சிம்லா ஸ்பெஷல், அம்மன் அருள், வனஜா கிரிஜா, எல்லோரும் நல்லவரே, புகுந்த வீடு, சின்னத்தம்பி, ஆணிவேர் வெள்ளை ரோஜா, வறுமையின் நிறம் சிவப்பு, வணக்கத்திற்குரிய காதலியே, சிவப்புச் சூரியன், பொய்க்கால் குதிரை, தங்கக்கோபுரம், எங்க மாமா, மஞ்சள் குங்குமம்,என சுமார் 600 படங்களில் நடித்துள்ளார்.2002 ஆண்டு தன் 73-ஆவது வயதில் இறந்தார்.