இயக்குனர் பாலு மகேந்திராவின் வீடு திரைப்படம் மற்றும் இளையராஜாவின் ஹவ் டு நேம் இட் இசை கோர்ப்பு




வீடு படத்தில் சொக்கலிங்க பாகவதர்  பல்லவன் பஸ் பிடித்து , வளசரவாக்கத்துக்கு தானும் தன் பேத்தியும் கஷ்டப்பட்டு கட்டி வரும் வீட்டைப் பார்க்கப் போகும் அருமையான காட்சி இது.

கூட்டமில்லா பேருந்தில் கண்டக்டர் இவரை பெருசு என கூப்பிடாமல் தாத்தா கம்பிய பிடிச்சுக்குங்க!!!  எனச் சொன்னதும் மகிழ்ச்சியில் துவங்குகிறது இக்காட்சி.

மகளிர் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுமி இவருக்கு அமர இருக்கையை விட்டுத் தந்தவுடன் இவருக்கு பரம ஆனந்தமாக இருக்கிறது.சற்றே இளைபாறுகிறார்.

வளசரவாக்கம் வந்தவுடன் நடத்துனர் இவருக்கு அவசரமாக நினைவூட்டி முன்வழியில் சென்று இறங்குங்க எனச் சொல்ல,இவர் அவசரமாக இறங்குகிறார், குடை பேருந்திலேயே போய்விடுகிறது.கத்திரி வெயில்,தேய்ந்த செருப்பு, இனி புதுக்குடை வாங்க வேறு தண்டச் செலவு , மயக்கமாக வருகிறதே விழுந்துவிடுவோமோ என்ற பயம் என சொக்கலிங்கம் பாகவதர் அவர்கள்  கலக்கியிருப்பார்.

அங்கே இயக்குனர் பாலுமகேந்திரா தன் பிரியத்துக்குரிய இளையராஜாவின் ஹவ்டு நேமிட் இசை தொகுப்பில் இருந்து ஹவ்டு நேமிட் இசைக்கோர்ப்பை பின்னணி இசையாக பயன் படுத்தி சொக்கலிங்க பாகவதரின் அந்த தற்காலிக சோகத்துக்கு வலுவூட்டியிருப்பார்.நீண்ட காட்சி அது, அங்கே காலியாக இருக்கும் 90களின் வளரும் வளசரவாக்கத்தை நாம் பார்ப்போம், லாங்ஷாட், க்ளோஸ் அப், டைட் க்ளோஸப். என மிக அருமையான ஷாட் கம்போசிஷன்களைக் கொண்டிருக்கும்.

இப்போது அலைந்து திரிந்து தங்கள் கட்டப்பட்டு வரும்  வீட்டுக்குள் அதன் குளுமையை அனுபவிக்க, செருப்பை கழற்றி விட்டு மெல்ல நுழைகிறார் தாத்தா.  மாடிக்கு போக படியேறுகிறார்.இப்போது சோகம் மறைந்து மகிழ்ச்சி மீண்டும் குடி கொள்ளும் மிக அருமையான காட்சி. அங்கே மீண்டும் தன் பிரியத்துக்குரிய இளையராஜாவின் ஹவ்டு நேமிட் இசை தொகுப்பில் இருந்து Do Nothing இசைக்கோர்ப்பை பின்னணி இசையாக பயன் படுத்தி அந்த மகிழ்ச்சிக்கே  மகிழ்ச்சியை கூட்டியிருப்பார் இயக்குனர் பாலு மகேந்திரா.

இந்த இசைக்கோர்வைக்கு அவர் படத்தின் துவக்கத்தில் டைட்டில் கார்டில் இளையராஜாவுக்கு முறையாக க்ரெடிட் தந்திருந்தாலும்,அதற்கு பணம் தர அவரிடம் பட்ஜெட் இல்லாததால் இளையராஜாவிடம் அனுமதி பெறாமலேயே அந்த இசைக்கோர்வையை உரிமையுடன் பயன்படுத்திவிட்டார்,அதனால் இளையராஜா செல்லமாக கோபித்துக்கொண்டதையும் பின்னர் சமாதானமானதையும்  அவரே பொதுவெளியில் பகிர்ந்தும் இருக்கிறார்.இது போல இளையராஜா தன் நண்பர்களுக்கு பணம் வாங்காமல் செய்தவை எண்ணிலடங்காதவை.

https://www.youtube.com/watch?v=lOCk1P52PLc