ரெட் டாக்[Red Dog] [ஆஸ்திரேலியா][2011][ஆங்கிலம்]

ருமை நண்பர்களே!!!
உலகில் எந்த நாட்டிலேனும் தெரு நாய்க்கு சிலை உள்ளதா?மேற்கு ஆஸ்திரேலியாவில் பில்பரா என்னும் மாகானத்தில் டாம்பியர் என்னும் பாலைவனச் சிற்றூரில் , மேலே சொன்ன ரெட் டாக் என்னும் தெரு நாய்க்கு வெங்கலச்சிலையும், கல்வெட்டும், இணையத்தில் அதன் வரலாற்றை சொல்லும் வலைத்தளமும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அவ்வலைத்தளம் காண இங்கே செல்லவும்.

அப்படி இந்த ரெட் டாக்கிடம் என்ன தான் சிறப்பு?1970களில்  வாழ்ந்த இந்த ரெட் டாக் தன்நம்பிக்கை மிகுதியாய் கொண்ட ஒரு தெருநாய்.அதற்கு எஜமானர்கள் என யாரும் கிடையாது,நிறைய நண்பர்கள் உண்டு, முழு உலகமே அதன் எல்லை. நம்மிடையே வாழும் தெருநாய்களில் காணமுடியாத வினோத குணமாக , அடிக்கடி ஊர்விட்டு ஊர் செல்லவும் ,எல்லா வகை வாகனங்களிலும் ஏறி பயணம் செய்யவும் மிகுந்த ஆசைகொண்ட நாய் இது.சாலையில் நடுவே பயமின்றி அமர்ந்துகொண்டு வேகமாக எதிர்ப்படும் கார், பேருந்து, லாரி,ட்ரக், போன்றவற்றின் ஓட்டுனர்களின் கண்களை நேருக்கு நேர் பார்த்து ஹிட்ச் ஹைக் செய்து லிஃப்ட் வாங்கி விரும்பிய இடம் வரை பயணித்து இறங்கும் லாவகம் இதற்கு கை வந்த கலை.

இந்த ஒரு தகுதியே போதுமே இதற்கு எண்ணிலடங்கா நண்பர்களை தேடித்தர.இது பயணித்த தூரத்தை யாரும் ட்ரான்ஸ்மிட்டர் கொண்டு கணிக்காவிட்டாலும்,அந்த மாகாணத்தைச் சேர்ந்த மாந்தர்கள் இந்த ரெட்டாக்கை நான் இதை மாலில் வைத்துப்பார்த்தேன்,நான் இதை பாரில் வைத்துப்பார்த்தேன். நான் என் ஊரில் இதை ஹோட்டலில் வைத்துப்பார்த்தேன்.என்று வியந்து பாராட்டி அதை ஆவணப்படுத்தியுள்ளனர்.

படம் ஒரு இரவில் துவங்குகிறது,  வயலில் கங்காருவுக்கு வைக்கப்பட்ட விஷம் கலந்த உணவை தெரியாமல் தின்றுவிட்டு உயிருக்கு போராடும் ரெட்-டாக்கை கருணைக்கொலை செய்ய முயன்றும் அதன் கண்களை நேருக்கு நேர் பார்த்துவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் , அதன் நண்பர்கள் கண்ணோட்டத்தில் ஃப்ளாஷ் பேக் விரிய ரெட்-டாக்கைப் பற்றி நாம் அறியத் துவங்குகின்றோம்.

சிறிய குட்டியாக டாம்பியர் என்னும் பாலைவனப்பகுதியில் அமைந்துள்ள கனிமச் சுரங்கங்களின் தொழிலாளர் குடியிருப்புக்கு ரெட்டாக் வந்து சேர்ந்து, அங்கே பணிபுரியும் 80க்கும் மேற்ப்பட்ட நாட்டினர்களிடம் நேசம் கொண்டு பழகுவதையும்,அதற்கு ஆறு வயதாகையில் அங்கே பஸ் ஓட்டுனராக பணிபுரிய வந்த ஜான் என்பவனை தன் எஜமானனாக தெரிவு செய்வதையும் நாம் காண்கிறோம் ,விதவிதமான ஃப்ளாஷ் பேக் சம்பவங்களின் முடிவில் ரெட்-டாக் நம் மனதில் நின்றுவிடுகிறது.அந்த சுவையான சம்பவங்களின் கலவைகளை நீங்களும் காணத் தவறாதீர்கள்.ஒரு நாள்  ஜான் இரவுப்பயணத்தில் கங்காரு மேல் பைக் மோதி விபத்துக்குள்ளாகி இறந்துவிட,அவன் வெளியே செல்லும்முன்னர் ரெட்டாக்கை பார்த்து நான் திரும்ப வரும் வரை இங்கேயே இரு என்று சொன்னதால் அது சுமார் ஒரு மாத காலம் எங்கேயும் செல்லாமல் அவன் கண்டெய்னரின் வாசலிலேயெ அமர்ந்து காத்திருக்கிறது.

 பின்னர் ஒரு  கட்டத்தில் தானே ஜானை தேடிக்கண்டுபிடிப்பதென்ற உறுதியுடன் ஆஸ்திரேலியாவின் மாகாணம் மாகாணமாக பயணித்து சுமார் 8000 மைலகள் நீள அகலமாக சுற்றுகிறது, பின்னர் ஒரு போர்க்கப்பலிலும் ஏறி லிஃப்ட் கேட்டு ஜப்பான் வரை சென்று விட்டு அங்கேயும் எஜமானனைக் காணாததால் திரும்ப டாம்பியருக்கே திரும்புகிறது ரெட்டாக்.வரும் வழியில் தான் கங்காருவுக்கு வைக்கப்பட்ட விஷ உணவை பசிமிகுதியில்  தின்றுவிடுகிறது.இப்படி உயிருக்கு போராடியபடி இருக்கும் ரெட்டாக்கைப்பற்றி நண்பர்கள் அவ்வூருக்கு வந்த ஒரு ட்ரக் ட்ரைவரிடம் நெகிழ்ச்சியுடன் விவரிப்பதைத் தான்  நாம் இதுவரை வியப்புடன் பார்த்திருக்கிறோம்.

எல்லோரும் மிருக மருத்துவர் வரும் வரை ரெட்டாக் பற்றி பேசியபடியே இருக்க அங்கே மருத்துவர் வந்துவிட,ரெட்டாக்கை பார்க்க அவர்கள் உள் அறைக்கு செல்ல அங்கே ரெட் டாக்கை காணவில்லை,எல்லோரும் ஒவ்வொரு இடம் திசை வைத்து தேட ஆரம்பிக்கின்றனர்.அது இரவு வரை கிடைக்கவேயில்லை,தன் இறுதி நேரம் நெருங்கியபோது அது எஜமானனைத் தேடிக்கொண்டிருந்தது. அதை மறுநாள்  டாம்பியர் வாசிகள் கண்டுபிடித்தபோது அது இறந்து போயிருந்தது,அதன் எஜமானன் ஜானின் கல்லறை முன்பாக.தன் நெடுநீண்ட பயணத்தின் முடிவில் தன் எஜமானின் கல்லறையை கண்டுபிடித்ததை கண்ட டாம்பியர் வாசிகள் கதறுகின்றனர்,எப்போதாவது தான் இது போல சில படங்கள் நம்மை நெகிழச்செய்கின்றன.உண்மை விசித்திரத்தை விட விந்தையானது என்பது தான் எத்தனை உண்மை?
டாம்பியரில் ரெட்-டாக் சிலையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ஒரு பயணி

====0000====