Calm at sea [La mer à l'aube][2011][ஃப்ரென்ச்சு]



அருமை நண்பர்களே!!!
நான் பெரிதும் மதிக்கும் ஜெர்மானிய இயக்குனர் வால்கர் [Volker Schlöndorff],அவரின் டின் ட்ரம் படம் ஒருவர் பார்த்திருந்தால் அதன் வீர்யம் புரிந்திருக்கும், அதன் இயக்குனர் வால்கர்[Volker Schlöndorff] இயக்கிய படம் காம் அட் ஸீ [La mer à l'aube] இன்று பார்த்தேன், இப்படத்திலும் டீடெய்லிங்குகளுக்கு பஞ்சமில்லை, உலக சினிமா ஆர்வலர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்,

இப்படம் உண்மை வரலாற்று சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது, படத்தின் பலம் அதன் டீடெய்லிங் தான்,படம் முடிந்ததும் ஒருவருக்கு கிடைக்கும் அந்த பரமானந்தம் ஆத்ம திருப்தி உலக சினிமாவை மேலும் தேடிக் கொண்டாட வைக்கும்


Volker Schlöndorff
இப்படத்துக்கு முதலீடு அளித்தது ஜெர்மானிய மற்றும் ஃப்ரென்ச்சு டிவி சேனல்கள் ஆகும்,அந்த குறுகிய நிதியில் டிஜிட்டலில் படமாக்கப்பட்ட இந்த காவியம் பெரும் பொருள் ஈட்டுவதற்காக எடுக்கப்படவில்லை, வரலாற்றை ஒரு தலைமுறையிலிருந்து மறு தலைமுறைக்கு கடத்தும் ஒரு மாபெரும் முயற்சியே, அதில் தன் 80களில் இருக்கும் வால்கர் வெற்றியும் பெற்றுள்ளார். யாருக்குத் தெரியும் இதுவே வால்கரின் கடைசி படமாகக் கூட இருக்கக்கூடும், ஆனால் ஆட்டியர் என்று ஒருவர் மார்தட்டிக்கொள்ள , இறுமாப்பு கொள்ள எடுத்த படைப்பு, அப்படி ஒரு செய் நேர்த்தி கொண்ட படம், உலக சினிமாவில் இன்றியமையாதது காலகட்டம், மக்களின் வாழ்வியல் முறை, பேசும் மொழி, புவியியல் நம்பகத்தன்மை. பின்னர் வழங்கும் முறை, இவை அனைத்தும் தன்னுள் ஒருங்கே கொண்ட படம் இது.

நாஜிக்களின் ஆக்கிரமிப்பில் ஃப்ரான்ஸ் இருந்த போது ஃப்ரான்ஸ் நாட்டின்  போலீசார் நாஜிக்களுக்கு மலம் கூட அலம்பி விட்டுக்கொண்டிருந்தனர் என்றால் மிகையில்லை.அப்படி ஒரு தலைகுனிவு தன் ஃப்ரான்ஸுக்கு ஏற்படுமென்று நெப்போலியன் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.இரண்டாம் உலகப்போர் ஃப்ரான்ஸுக்கு அப்படி ஒரு சூழ்நிலையை உண்டு செய்தது.

ஜெர்மானிய நாஜிப்படைக்கு ஃப்ரென்ச்சுப் போலீஸ் படை தம் நாட்டு மக்களை கூட்டிகொடுத்ததை விளக்கும் படங்கள் ஏகம் உண்டு, அவற்றுள் இன்றியமையாத படம் மிஸ்டர் க்ளெய்ன் [Monsieur Klein][1976], அதற்கு அடுத்த படியாக இது. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய நாஜிப்படையின் ஆட்டுழியங்களை மெல்லிய சோகத்துடன் சொன்ன மறக்கமுடியாத படம் இது என இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

மிஸ்டர் க்ளெய்ன் திரைப்படம் ஒரு மாபெரும் ஃப்ரென்ச்சு க்ளாசிக், ஜோசெப் லூஸீ இயக்கியது, நாஜி ஆதிக்க ஃப்ரான்ஸில் பாரீஸ் நகரத்தில் யூத மக்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை விலங்கியல் மருத்துவர்கள் கொண்டு மருத்துவ சோதனைகளை தமக்குத் தாமெ  செய்யவைத்து, அந்த அப்பாவி மக்கள் சமர்ப்பித்த அறிக்கைகளின் படி 13,152 பேர்களை ஃபில்டர் செய்து ஒன்று திரட்டி Vélodrome d'Hiver என்னும் ஒரு சதுக்கத்தில் வைத்து ஆஷ்விட்ஸ் கேம்புக்கு சரக்கு வேன்களில் ஏற்றி கூட்டித்தரும்  roundup of Parisian Jews என்னும் கருப்பு வரலாற்றைச் சொன்ன படம் மிஸ்டர் க்ளெய்ன், அதன் இயக்குனர் ஜோசப் லூசியும் ஒரு ஆட்டியர், ஃப்ரென்ச்சு உலக சினிமாவின் தீர்க்க தரிசி. அப்படத்தில் நடித்த ஆலன் டெலான் ப்ரென்ச்சு சினிமாவின் அழகிய ஈடற்ற நடிகர். நண்பர்கள் அந்த படமும் அவசியம் பார்க்க வேண்டுகிறேன்.

அந்த படத்தில் ஒருவருக்கு கிடைக்கும் அனுபவமும், அறிவும் ஈடுசெய்ய முடியாதவை, அதை ஈடுகட்டும் மற்றொரு படம் தான் வால்கரின் காம் அட் ஸீ.

இனி கதை:-
1941ன் நாஜி ஆக்கிரமிப்பு ஃப்ரான்ஸ், ஜெர்மானியப் படைக்கு பாண்டிச்சேரி போலீஸ் போன்றே தொப்பி அணிந்த ஃப்ரென்சு போலீசார் கைப்பாவை, உள்ளூர சுதந்திர தாகம் பொங்கினாலும், நாஜிக்களின் இசைக்கு இவர்கள் தாளம் போட வேண்டியதாக உள்ளது, அங்கே அரசியல் கைதிகளால் உள்ளூர் சிறைகள் நிரம்பி வழிகின்றன, அப்படி ஒரு சிறையைத் தான் நாம் கண்ணுறுகிறோம், அதாவது வரலாற்று சம்பவத்தில் 100 கிளர்ச்சியாளர்கள் ஒரே நாளில் நாஜிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட அந்த 100 ல் 27 பேர் தேர்வாகப் போகும் ஒரு சிறையின் கதை தான் இது.

முதல் நாள் பாரிசின் தெருவீதியில் வைத்து நாஜிப்படை அதிகாரி ஒருவன் ஃப்ரென்ச்சு கம்யூனிஸ்ட் பார்டி சகாக்கள் மூவரால் முதுகில் சுட்டுக் கொல்லப்படுகிறான். இதற்கு வஞ்சம் தீர்க்கவும் பதிலடி கொடுக்கவும் ஹிட்லரிடமிருந்து சர்குலர் வருகிறது. அதில், சிறையில் உள்ள அரசியல் கைதிகளில் 150 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 50,50,50,50 பேராக ஒரிரு நாளில் சுட்டுக்கொல்லப்பட வேண்டும், அவர்கள் பெயர்கள் எல்லா சதுக்கங்களிலும் ஒட்டப்படவும் பட வேண்டும், கொலை சம்பவத்துக்கு காரணகர்த்தா போலீசாரிடம் சரணடையும் வரை இந்த 50,50,50,50 தண்டனை தொடரவேண்டும் என்கிறது சர்குலர்.

ஃப்ரென்ச்சு போலீசாருக்கு காருண்யம், மனித உரிமை என்று பேச நிறைய இருந்தாலும் மனசாட்சியை கழற்றிவைத்து விட்டு ஹிட்லரின் கட்டளைக்கே அடிபணிந்து வேலை பார்க்கும் நாஜிக்களுடனான் கூட்டு அவர்களின் கைகளுக்கு விலங்கிட்டிருக்கிறது,

சுட வேண்டியவர்களின் 200 பெயர்கள் அடங்கிய பட்டியல் ஓவ்வொரு சிறைக்கும் வருகிறது, அந்த 200 பேரில் யாருமே செல்வந்தர்கள் பெரிய குடும்ப வாரிசுகள் இல்லாத படிக்கு பார்த்துக்கொள்ளப்படுகிறது. அந்த பட்டியல் வழங்கப்படும் சிறையில் நாம் கண்ணுறும் Nantes சிறையும் அடக்கம். கடவுளே ஒருக்கால் வந்தாலும் கூட  மாற்றி எழுதமுடியாத ஒரு பட்டியல், அந்த 200 பேர்களில் இதே சிறையைச் சேர்ந்த நாளையே விடுதலையாகப் போகும் ஒருவன் பெயரும் அடக்கம், என்றோ விடுதலையாக வேண்டியிருந்தும் சிற்சில காரணங்களால் விடுதலை தள்ளிக்கொண்டே போகும் ஒருவனது பெயரும் அடக்கம், அதில் 17 வயது சிறுவனது பெயரும் கூட அடக்கம். யாருக்கும் வெட்கமில்லை என்னும் பாரதி வரிகளை நினைவுருத்தும் நிலை.

மணல் குவாரி லொக்கேஷனும் பார்த்தாகிவிட்டது, 9 சவுக்கு கம்பங்கள் 10அடி இடைவெளியில் நடப்படுகின்றன, ராணுவத்தில் க்ளார்க்காக பணியாற்றுபவனைக்கூட அவசர வேலை என தருவித்தாயிற்று, ஒரே நாள் தான் ட்ரெயினிங் என்று அவசர கதியில் சுடவும் கற்றுக்கொடுத்தாயிற்று. கிளர்ச்சியாளர்கள் சாக வேண்டியவர்கள் என்னும் மூளைச்சலவையும் துவங்கியாகிவிட்டது.

அங்கே அன்று காலையிலேயே சமையல் காரர்களால் சாகப்போகிறவர்களுக்கு வழங்க வேண்டி ஆப்பிள்கள் மிகவும் சரிசமமாக ராணுவ நேர்த்தியுடன் நறுக்கப்படுகின்றன, சிகரெட்டுகள் பற்றாக்குறையால் அவை சரிபாதியாக நறுக்கப்பட்டு அடுக்கி வைக்கபடுகின்றன, விருந்துக்கு பின்னர் தாம்பூலம் வழங்கப்படுவது போல இங்கே மரணிக்கும் முன்னர் கிளர்ச்சியாளர்களுக்கு மேலே சொன்ன ரேஷன்கள் வழங்கப்படுவதற்காக தயாராகின்றன.

இன்று விடுதலையாக வேண்டியவனின் பெயரும் படிக்கப்பட்டு வெளியே அழைக்கப்படுகின்றான், அவன் தன் காதலி வெளியே என்னை அழைத்துப்போக வந்திருக்கிறாள், இன்று என் விடுதலை தினம் என உருகி மன்றாட, கண்டிப்பான ப்ரென்ச்சு அதிகாரி,இந்த லிஸ்டில் உன் பெயர் உள்ளது,மாற்றுவதற்கில்லை என்கிறார். அவன் தன் காதலியிடன் கொடுக்கச் சொல்லி தன் உடமையை தன் நண்பனான 17 வயது சிறுவனிடம் தர, அடுத்த படியாக பட்டியலில் இருந்து அந்த 17 வயது சிறுவனின் பெயரும் படிக்கப்படுகிறது, அவன் குழந்தை என்கிறார் ஒரு சக கிழவர். அவரின் பெயரும் பட்டியலில் உள்ளது.என்ன கொடுமை பாருங்கள்?,

அனைவரும் அந்த மணல் குவாரி ஷீட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துப்போகும் முன்னர் ஒரு மரத் தொழுவத்துற்குள் அடைக்கப்படுகின்றனர், அங்கே ஒரு பாதிரியாரும் பாவமன்னிப்புக்கு வரவழைக்கப்படுகிறார், என்ன ஒரு முரண் பாருங்கள்?, உள்ளே கடவுள் மறுப்பு காம்ரேடுகள்,வெளியே பாதிரி, ஜெர்மானிய அதிகாரியை எதிர்நோக்கிய பாதிரி கேட்கிறார், நீ கிருஸ்துவனா? ஆமாம் அதிலென்ன ஐயம், அவன் பதில் சொல்கிறான், மனசாட்சிக்கு வேலை செய்யாமல் கட்டளைக்கு வேலை செய்யும் நீ எப்படி ஒரு கிருஸ்துவனாக இருக்க முடியும்? எனக் கேட்கிறார் பாதிரி. அந்த மர அறைக்குள் இருந்த காவலர்களை வெளியே அனுப்பிய பாதிரி,

இதுவரை உங்களில் யாருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்காது, இனியும் வேண்டாம், ஆனால் நீங்கள் உலகுக்கு, உங்கள் உறவுக்கு சொல்ல வேண்டியவற்றை என்னிடம் சொல்லுங்கள், என்னிடம் இருக்கும் மணித்தியாலத்தை அதற்கு செலவிடுகிறேன். உங்களில் காகிதம் பேனா இருப்போர் உறவுகளுக்கு கடிதம் எழுதுங்கள், நான் சேர்ப்பிக்கிறேன் என்கிறார், அங்கே குழுமியிருக்கும் 27 சகாக்களில் ஏனையோர் எழுத ஆரம்பிக்கின்றனர், பேனா காகிதம் இல்லாதோர் மர லூவர்களில் தாம் சாகப்போவதை எழுத துவங்குகின்றனர்.

 உலக சினிமாக்களில் மட்டுமே நடக்கின்ற வரலாற்றை நிகழ் காலத்துக்கு கடத்தி தரும் பரவசம் நிகழ்கிறது திரையிலே. அங்கே ஒருவனுக்கு படிப்பறிவில்லை, அவன் வெளியே இருக்கும் தன் காதலியை எண்ணி மருகுபவனை அணுகி காகிதத்தை நீட்டி கடிதம் எழுதக் கேட்க,அவன் எழுதுகிறான், மனித தன்மை எவனோ ஒரு போலீஸ் காரனுக்கு கசிந்திருக்க அங்கே அந்த காதலன் தன் காதலியைப்பார்க்க 10 நிமிடம் நேரம் கொடுக்கப்பட்டு அவளைப்பார்க்க அனுமதிக்கப்படுகிறான்.அக்கடிதத்தை பாதிரி  வாங்கி மீதியை எழுதுகிறார்.

இன்னும் என்னன்னவோ காட்சிகள், மௌன சாட்சியாக நாம், அங்கே அந்த 27 பேரும் ராணுவ வண்டியில் ஏற்றி அந்த மணல்குவாரிக்கு கூட்டிச் செல்லப்படுகின்றனர், அங்கே அந்த 17 வயது சிறுவன், வேலி தாண்டி கதறும் தன் காதலிக்கு சீட்டு அவசர கதியில் எழுதி அங்கே குழுமியிருக்கும் போலீசின் கையில் திணித்து அங்கே அந்த பெண்களிடம் கொடு, அவர்களுக்கு இது யாருக்கு எனத் தெரியும் என்று சொல்லி ஏறுகிறான். அங்கே ஒரு மூத்த சகா ஃப்ரென்ச்சுபோலீசை பார்த்து நான் ஒரு துப்புறவாளன், ஆனால் உங்களின் சீருடையை விட என் உள்ளாடை சுத்தமாக உள்ளது என்கிறான்.அப்படி ஒரு வசனங்கள் படம் முழுதும் விரவிக்கிடக்கின்றன.

அங்கே நடப்பட்டுள்ள ஒன்பது சவுக்கு கம்பங்களில் 9 ,9, 9 பேர்களாக மூன்று தவணையாக அடுத்தடுத்து கட்டப்பட்டு, அவர்களின் இதயப் பகுதியின் மேலே சட்டைக்கும் மேலே ஒரு பெருக்கல் குறி வெள்ளை டேப்பால் ஒட்டப்படுகிறது, அதன் மேலே 3 சிப்பாய்கள் குறி வைத்து ஒரே தவணையில் சுட 9 பேரும் அடுத்ததுத்து செத்து விழுகின்றனர், அங்கே அவர்களின் நெஞ்சையும் கம்பத்தையும் பிணைத்து கட்டப்பட்ட கயிற்றின் ஸ்கவுட் முடிச்சு கணநேரத்தில் அவிழ்க்கப்பட்டு, அடுத்த தவணை சகாக்கள் கம்பங்களில் கட்டப்படுகின்றனர்,

தம் கண்களை கருப்பு துணியால் கட்டுவதை எந்த சகாவும் விரும்பவில்லை, அதை அவமானமாக கருதி தோட்டாவை கண்ணுறுகின்றனர் சகாக்கள். அங்கே ஒரு அற்புதமான டார்க் ஹ்யூமர் காட்சியை இயக்குனர் பொதித்து வைத்தார், அங்கே ஒரு சகா கம்பத்தில் கட்ட இழுத்து போகையில் அவன் ஒரு நாஜி அதிகாரியைப் பார்த்து நாக்கை சுழித்து பழிக்கிறான், அதைப் பார்த்து அந்த அதிகாரி ரசித்து சிரிக்கிறான். உலக சினிமா மட்டுமே தரும் சுகானுபவம் அது, கிஞ்சித்தும் வேறு வகை சினிமாக்களில் கிடைக்காத உண்மையின் தரிசனம் அது.

அங்கே நம்மையும் ஏன் நாஜிக்களையும் கூட  ஒருகணம் நெக்குருக வைக்கும் காட்சி அரங்கேறியது, ஒரு மரக்கால் அணிந்த ஊனமுற்ற காம்ரேட் ,அந்த 17 வயது சிறுவனது கைகளுடன் விலங்கிடப்பட்டு இழுத்து வரப்பட, அவர் அந்த பொய்க்காலை கழற்றி மணலில் நாஜிக்கள் முன்னே அனாதையாக விடுகிறார், தன் ஊன்று கோலால் கம்பம் நோக்கி நடந்து கட்டப்பட்டு சுடப்பட்டு உயிர்விடுகிறார். அந்த காலணிக்கு இயக்குனர் க்ளோஸ்-அப் வைக்கிறார். அப்படி ஒரு உயிரோட்டமான காட்சி அது.



மணல் குவாரி காட்சி தான் இப்படத்தின் அடி நாதம், அது அத்தனை செய் நேர்த்தியுடம் எடுக்கப்பட்டுள்ளது, இசை ஞானி சிறைச்சாலை படத்துக்கு செய்த பிஜிஎம் எப்படி ஒருவரது வாழ்நாளில் மறக்க இயலாதோ? அப்படி ஒரு வரலாற்றை பார்வையாளருக்கு கடத்தும் ஜாலம் பொதிந்த இசை சேர்ப்பு. இசை மேதைகள் இருக்கும் திசைக்கு வந்தனம். அந்த இசையமைப்பாளர் Bruno Coulais திசை நோக்கி வந்தனம். காட்சியின் தன்மையை பார்வையாளனுக்கு கடத்தும் இசை இலக்கணம் எல்லோருக்கும் கைவராது, பிண்ணணி இசை என்பது ரெடிமேட் லூப்புகளில் இல்லை, அவற்றை வெட்டி தொகுப்பதே இசை அல்ல என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.

படத்தின் ஒளிப்பதிவாளர் Lubomir Bakchev,மாபெரும் வரலாற்றுப் பிண்ணணி திரைப்படத்துக்கு இவர் ஆற்றிய பங்கு அதி உன்னதம் ,ப்ரேவோ!!!.

மீண்டும் மீண்டும் அசைப்போட்டுப்பார்க்க வைக்கும் படைப்பு, விளம்பரங்கள் ஏதுமின்றி உலக சினிமா ஆர்வலர்கள் கண்களுக்கு  மட்டுமே விருந்தாகி வெகுஜன பார்வைக்கே சென்று சேராமல் பெட்டிக்குளே முடங்குவது தான் கலையின் சாபமும் கூட, இருந்தும் கலைஞர்களுக்குள் எரியும் அந்த நெருப்பு தான் அடுத்த படைப்புக்கான விதை, ஒப்பற்ற கலைஞனின் கர்வம் அது, வாலகரின் அடுத்த படைப்புக்காக ஏங்கும் ஒரு உலகசினிமா ரசிகன் நான்.
படத்தின் ஒரு காட்சி யூட்யூபில் இருந்து



படக்குழு பட்டியல்:
Production companies: Provobis (in co-production with Les Canards Sauvages, Arte France, Bayerischer Rundfunk, Norddeutscher Rundfunk, Südwest-rundfunk)
Cast: Léo Paul Salmain, Ulrich Matthes, Marc Barbé, Martin Loizillon, Sébastien Accart, Jean-Pierre Daroussin
Director / Screenwriter: Volker Schlöndorff
Producer: Bruno Petit
Co-producers: Thomas Teubner, Martin Choroba
Director of photography: Lubomir Bakchev
Production designer: Stéphane Makedonsky
Costumes: Agnès Noden
Editor: Susanne Hartmann
Music: Bruno Coulais
Sales Agent: Provobis, Berlin
No rating, 94 minutes