இயக்குனர் சத்யஜித் ரேவின் அர்பணிப்பு - சீமாபத்தா[கம்பெனி லிமிட்டட்][1971]



சத்யஜித்ரேவின் அற்பணிப்புக்கு மேலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இந்த பீட்டர்ஸ் மின்விசிறி விளம்பரம், தன் கொல்கத்தா ட்ரலஜியின் 2ஆம் படமான சீமாபத்தாவில் [கம்பெனி லிமிட்டட்]வரும் ஷ்யாமல் (Barun Chanda) என்னும் லட்சியம் கொண்ட சேல்ஸ் மேனேஜர் கதாபாத்திரத்துக்காக,அவர் பீட்டர்ஸ் ஃபேன் & லைட்ஸ் என்று ஒரு ப்ராண்டையே மெனக்கெட்டு  உருவாக்கி,அதன் தலைமை அலுவலகம், தொழிற்சாலை, மின்விசிறி உருவாக்கம்,இராக்கிற்கு ஏற்றுமதி, அதிகாரிகளின் உல்லாச வாழ்க்கை என தத்ரூபமாக காட்டியிருப்பார், இந்த விளம்பர வீடியோவை பாருங்கள்.




படத்தில் இன்னுமொரு முக்கியமான விஷயம்,பீட்டர்ஸ் ஃபேன் கம்பெனியில்  சம்பள டிபார்ட்மென்டில் 40வருடங்களாக சீனியர் அக்கவுண்டன்டாக வேலை செய்யும் ராமலிங்கம் என்னும் ஒரு தமிழ் பிராமணர் கதாபாத்திரம், அப்போது தமிழ்நாட்டில் இருந்து வேலைக்காக பம்பாய்,தில்லி,கொல்கத்தா என சென்று செட்டில் ஆனோர் ஒவ்வொரு பிராமண குடும்பத்திலும் இருப்பர், அவர்களை வைத்து அவரின் உறவினர் ,தூரத்து உறவினர் பிள்ளைகள் ஒவ்வொருவராக அங்கே சென்று காலூன்றுவர், அது எனக்கு நினைவுக்கு வந்தது,

ராமலிங்கம் பாத்திரம் ஆஃபீஸிலேயே சக அதிகாரிகளுக்கு இலவசமாக வேத உபநிஷத்துக்களில் இருந்து அறிவுரைகள், இலவசமாக ஆரூட பலன்கள், ராசிக்கல் மோதிரம் போன்றவற்றை தருகிறார், மேலும் ஷ்யாமலிடம் தன் தகப்பனார் 40 வருடங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு கடிதத்தை தமிழில் படித்துக் காட்டுகிறார் [அருமையான தமிழில்,கொலைத்தமிழில் அல்ல], சாராம்சம் இதுதான், ராமலிங்கம், மகனே, ஆங்கிலேயர் என்போர் குளிர்காய மூட்டப்பட்ட நெருப்பு போல, அவர்களை விட்டு விலகி இருந்தால் உனக்கு கதகதப்பு கிடைக்காது,மிகவும் நெருங்கினாலும் உடம்பை சுட்டுப் பொசுக்கிவிடும், எனவே அந்த நெருப்பின் கதகதப்பு உன் உடம்புக்கு பொருந்துகிறபடியான  அருகாமையில் அமர்ந்து அதில் குளிர் காய்வாயாக என முடிக்கிறார், இதை ஒவ்வொரு வரியையும் தமிழில் படித்து, பெங்காலியில் மொழி பெயர்ப்பு செய்கிறாரே பார்க்க வேண்டும்? அற்புதம், சத்யஜித் ரேயின் அந்த பாத்திரப்படைப்பு,வேற்று மொழி கதாபாத்திரத்தை தம் படைப்பில் காட்டவேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது,அதை படத்தில் கையாளுகையில் மொழியை ஒருமுறைக்கு இருமுறை அது நேட்டிவிட்டியுடன் பேசப்படுகிறதா?என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.அதில் ரே தமிழை பெருமை படுத்தியிருப்பார்.
 
சமீபத்தில்,சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள், எத்தனை அயோக்கியத்தனம்?அந்த தடித்த எருமை மாடு போன்ற மூளை கொண்ட ரோஹித் ஷெட்டிக்கு,படத்தில் தமிழ் பேசும் ஜாம்பவானர்கள் இருந்தும் சில முக்கிய பாத்திரங்கள்,தப்பும் தவறுமாக தமிழில் பேசி தமிழ் கொலை நடத்தியிருக்கின்றார்கள்,ஒருவர் பொறுமை இழந்து நாசமாகப்போக என திட்ட வைக்கும் இடங்கள் அவை, இதில் ரோஹித் ஷெட்டி மற்றும் ஷாருக்கான்  தமிழை சிறுமைப் படுத்தியிருப்பர்.

சீமாபத்தவை நாம் டாகுமென்டரி வகையில் வைப்பதா?ஒரு நியோ ரியாலிச சினிமா வகையில் வைப்பதா? என உலகசினிமா ரசிகர்களுக்குக் குழப்பமாக இருக்கும். 1970 களில் ஒப்புக்கென சினிமா செய்யாமல் இப்படி பரீட்சார்த்தமாக செய்திருக்கிறார்,ஒரு அசல் கார்பொரேட் கலாச்சாரத்தை யாரேனும் காண விழைந்தால் அவசியம் பார்க்க வேண்டிய படம் சீமாபத்தா,கலை இயக்கம் என்பது செட் போடுவது மட்டும் அல்ல, நிழலை நிஜமாக்குவது, இந்த ஒப்பற்ற படைப்பின் மூலம்  ரே கலை இயக்குனர்களுக்கு எல்லாம் ஆசானாக திகழ்கிறார்.நான் பீட்டர்ஸ் ஃபேன் என ஒன்று நிஜமாகவே இருக்கும் போல என்று நம்பி, பீட்டர்ஸ் ஃபேன் என்று கூகுளில் அடித்து தேடிப் பார்த்தால் ஆங்கிலப் பாடகர் ஒருவரைப் பற்றி தான் தகவல்களாகக் கொட்டுகிறது.செய்நேர்த்தி என்றால் ரே,ரே என்றால் செய்நேர்த்தி

http://en.wikipedia.org/wiki/Seemabaddha