வேலையில்லா பட்டதாரி



வேலையில்லா பட்டதாரி எல்லோரும் பார்க்க வேண்டிய அட்டகாசமான பொழுதுபோக்கு சித்திரம்,இயக்குனர் வேல்ராஜ் தன் 44 வயதில் கொடுத்த முதல் படைப்பு அம்சமாக அமைந்துவிட்டது,வேல்ராஜின் அற்பணிப்பான ஒளிப்பதிவுக்கு  நான் ரசிகன்,அவரின் பொல்லாதவன் ஒளிப்பதிவாகட்டும், ஆடுகளம் ஒளிப்பதிவாகட்டும் இரண்டுமே தனித்துவம் பொருந்தியவை. எத்தனை நாள் ஆகியிருக்கிறது அவரின் சொந்தப்படம் இயக்கும் கனவு பலிப்பதற்கு, அதுவும் இத்தனை அருமையான ஒரு ஜனரஞ்சக சினிமா. படத்தை பார்க்கத் துவங்கிய அரைமணி நேரத்திலேயே  என் விமர்சகன் என்னும் முகமூடியை கழற்றி வைத்துப் பார்க்க வைத்து விட்டது,சற்றும் தொய்வில்லாத திரைக்கதையும்,படத்தின் காஸ்டிங்கும். 

இயக்குனர்/ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்
தனுஷ் மிகவும் மெச்சூரிட்டி கொண்டு களம் இறங்கியிருக்கும் படம்,தனுஷை இனி யாரும் சின்னப்பையன் சுள்ளான் என்று சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன். படத்தில் பெரிய ரவுடிக்கும்பலையே போட்டு அவர் அடித்தாலும் அதை நம்பும் படி சாத்தியமாக்கியுள்ளனர். படத்தில் ஏகம் லாஜிக் மீறல்கள்,மற்றும் தகவல் பிழைகள் இருந்தாலும் ,படத்தின் ஓட்டத்தில் அவை நீர்த்துப் போகின்றன, ரசிகனை கடைசி நிமிடம் வரை ஒன்றவைத்து பார்க்க வைத்து விடுகிறது இப்படம்.  படத்தில் இருக்கும் மிக முக்கியமான சர்ச்சைக்குரிய குறைகளான, ராமகிருஷ்ண மிஷன்  பள்ளியில் படித்தேன்,தம்பி மெட்ரிக்குலேஷனில் படித்தான்,பொட்டை  என ஐந்தாறு இடங்களில் மூன்றாம் பாலினத்தை அவதூறு செய்யும் வார்த்தைகள், போன்றவற்றை இனி நிகழாமல் பார்த்துக்கொள்வார் என நம்புகிறேன்.  படத்தின் ஓட்டத்தில் அடித்துக்கொண்டு போன முக்கிய தவறுகள்

1.பல் மருத்துவர்கள் மாதம் 2 லட்சம் சம்பளம் வாங்குவர்[ஐந்து வருடம் அனுபவம் உள்ள என் நண்பருக்கு வாசனில் 28000 ரூபாய் தான் சம்பளம்]
2.கால் செண்டரில் எடுத்த எடுப்பில் பிடித்தம் போக 50 ஆயிரம் சம்பளம்.[இன்றைய சூழலில் எடுத்த எடுப்பில் கால்செண்டரில் 15 ஆயிரம் சம்பளம் கிடைத்தாலே அது பெரிய விஷயம்]

3.சைட் இஞ்சினியர் ஆர்கிடெக்சர் டிசைனிங்கையும் [கட்டிட வடிவமைப்பு], ஸ்ட்ரக்சுரல் டிசைனிங் வேலையையும் சேர்த்து செய்வார். [ஃப்ரெஷர்கள் சைட் சூப்ரவைசிங் செய்யவே நாக்கு தள்ளிவிடும்,படத்தில் சொன்னது போல ஒன்மேன் ஷோ சாத்தியமாகாத துறை சிவில் இஞ்சினியரிங் மற்றும் கட்டிடக்கலை துறை]

4.நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை படத்தில் வருவது போல ஜஸ்ட் லைக் தட் ஈஸியானது. [தனுஷின் அம்மா இறந்ததும் உறுப்புகள் தானத்துக்கு  வலு சேர்ப்பது போல காட்சிகள் சேர்த்திருந்தால் நம்பகத்தன்மை இருந்திருக்கும்]

முதல் படத்தில் வானார சாதித்த வேல்ராஜை கோடம்பாக்கத்தில் எந்த சினிமா பிரமுகரும் மனமார பாராட்டவில்லை என செய்தி படித்தேன். வேல்ராஜின் வெற்றி ஓவர்நைட்டில் கிடைக்கவில்லை,அவர் ஆளவந்தான் படத்திலேயே உதவி இயக்குனராக பணியாற்றியவர் பின்னர் வயிற்றுப் பிழைப்புக்காக இயக்குனர் கனவை மூட்டை கட்டிவிட்டு ,பல வருடங்கள் திருவிடம் உதவி கேமரா மேனாக பணியாற்றிவிட்டு, சொந்தமாக ஒளிப்பதிவு செய்து சாதித்துவிட்டு, தனுஷ் மூலம் இப்படி ஒரு நல்ல ப்ரேக் த்ரூ கிடைத்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்குனராகியிருக்கிறார்.

அடுத்த படத்தில் இவரின் சகா வெற்றி மாறன் போல நன்றாக தீஸீஸ் செய்து இன்னும் சிறப்பாக படம் செய்து பிரமிக்க வைப்பார் என நம்புகிறேன். இந்தப் படத்தை தனுஷ் தான் இயக்கினார் என சிலர் அபாண்டமாக எழுதினர்,அவர் பின்னால் இருந்து இயக்கிய மரியானின் லட்சணம் எல்லோரும் அறிவோம் அல்லவா?.தனுஷ் இயக்குனரை நம்பி ஏமாந்த நையாண்டி என்னும் படம் என்ன ஆனது என அறிவோம் அல்லவா?தனுஷ் எப்போதுமே டைரக்டர்ஸ் டார்லிங்.இயக்குனர்கள் எப்படி மோல்ட் செய்கிறார்களோ? அவர் அப்படி மிளிர்வார்.

 தனுஷின் நடை உடை பாவனை எல்லாம் இப்படம் மூலம் மாறியிருக்கிறது ,நல்ல துவக்கம் இது.இண்டலெக்சுவல்கள் கூட தங்கள் விமர்சன முகமூடியை கழற்றி வைத்து விட்டு பார்க்க ஏற்ற படம்.