கே.பாலச்சந்தரின் அறிமுகங்கள் ஒரு பார்வை மற்றும் மனதில் உறுதி வேண்டும் [1987]


இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு இயக்குனர் தன்னுடைய ஒவ்வொரு படத்துக்கும் குறைந்தது நான்கு புதுமுகங்களையேனும் தொடர்ந்து அறிமுகம் செய்து வந்தார், என்றால் அது கே.பாலச்சந்தர் மட்டுமே,

அதில் மேலும் ஒரு சாதனையையும் அவரே வைத்துள்ளார்.ஒரே நடிகரையோ ,அல்லது நடிகையையோ அடுத்தடுத்து வெவ்வேறு மொழிகளில் தான் இயக்கும் திரைப்படத்திலும் அவர்களை அறிமுகம் செய்த சாதனையையும் அவரே தான் வைத்திருக்கிறார். இது குறித்து ஆராய்ந்து ஒரு தனிக்கட்டுரை எழுதினால் தான் சரியாக இருக்கும்.

இப்போது அவர் அறிமுகம் செய்தவர்களில் மிகவும் சாதித்த அறிமுகம் பற்றி பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் 4 வயதில் களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஜனாதிபதியிடம் தங்கப்பதக்கம் வாங்கி, பின்னர் ஐந்து படங்கள் செய்து விட்டு சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்தில் அங்கங்கே தமிழ் திரைப்படங்களில் கிடைக்கிற சிறிய வசனமில்லா துணைநடிகர் போன்ற கதாபாத்திரங்களைச் செய்து விட்டு ப்ரேக் த்ரூவுக்கு காத்திருந்த இளைஞன் கமல்ஹாசனை தமிழில் தன் அரங்கேற்றம் 1973 படத்தில் மிகுந்த சுயநலமி தம்பி கதாபாத்திரத்தில் இயக்குனர் அறிமுகப்படுத்தினார்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின் நடிப்பில் நன்கு மெருகேறி இன்னும் சாதிக்க வேண்டும் என்னும் ஆர்வம் ததும்பிய கமல்ஹாசனை தெலுங்கில் தன் மரோசரித்ரா 1978 படத்தில் இயக்குனர் அறிமுகப்படுத்தினார்

தமிழில் அறிமுகமாகி எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் தெலுங்கு சினிமாவில் தன்னை நன்கு நிரூபனம் செய்த கமல்ஹாசனை இந்தியில் தன் ஏக் துஜே கேலியே 1981 படத்தில் இயக்குனர் அறிமுகப்படுத்தினார்.ஆக மூன்று முறை கமல்ஹாசனை இயக்குனர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
=====
சிவாஜிராவ் என்ற சென்னை நடிப்புக் கல்லூரி மாணவரை ரஜினிகாந்த் என பெயர்மாற்றம் செய்த  பாலச்சந்தர்  தமிழில் 1975 ஆம் ஆண்டு தன் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகம்  செய்தார்.

காந்தம் போல கண்கள் கொண்டிருப்பதால் இவருக்கு தன் மேஜர் சந்திரகாந்த் படத்தின் மகன் கதாபாத்திரத்தின் பெயரான ரஜினிகாந்தை சூட்டி அழகுபார்த்தார் இயக்குனர்.1976 ஆம் ஆண்டு தெலுங்கில் அந்துலேனிகதா என்னும் அவள் ஒரு தொடர்கதை படத்தின் ரீமேக்கில் அறிமுகம் செய்தார்.தமிழில் ஜெய்கணேஷ் செய்த பொருப்பற்ற குடிகார சகோதரன் கதாபாத்திரம் அது, அப்போது எதிர் நாயகனாக நிறைய படங்களில் நடிக்கத் துவங்கி விட்டாலும் ரஜினி தன் குரு சொன்ன இந்தக் கதாபாத்திரத்தில் தயங்காமல் நடித்தார்.ஆக இயக்குனர் பாலச்சந்தர் ரஜினியை இருமுறை இரு மொழிகளில் அறிமுகம் செய்துள்ளார்.

ரஜினியை அவர் ஆளாகி வளர்ந்த கன்னடத்தில் இவரால் அறிமுகம் செய்யமுடியவில்லை, ஆனால் கன்னட  மாற்றுசினிமாவின் முக்கியமான இயக்குனரான காலஞ்சென்ற புட்டன்னா கனகல் மூலம் ரஜினி  1976ஆம் ஆண்டு கதா சங்கமா படத்தில்   அறிமுகப்படுத்தப்பட்டார். இயக்குனர் புட்டன்னா கனகல் கே.பாலச்சந்தரின் ஆதர்ச இயக்குனராவார்,அவரின் சர்ச்சை மிகுந்த சமூக கருத்துக்களைத் தாங்கி வந்த படங்களும் தான் தமிழ் சினிமாவில் மாற்றுப்பாதையில் பயணிக்க தூண்டுகோலாக இருந்தது என்பதை பகிர்ந்திருக்கிறார் இயக்குனர்.

 புட்டண்ணா கனகலில் மாணவரான பாரதிராஜா ,தன் குருவின் கதாசங்கமா  படம் பார்த்துவிட்டு தன் 16 வயதினிலே[1977] படத்தில் கண்டிப்பாக ரஜினியை  நடிக்க வைக்க வேண்டும் என எண்ணினாராம். அப்படத்துக்கு ரஜினி பெருந்தன்மையுடன்  பாதி  சம்பளம்  வாங்கி [3000 ரூபாய் அதிலும் 500 இன்னும் பாக்கி] நடித்ததை பாரதிராஜா 16வயதினிலே  மறு வெளியீட்டு விழா மேடையில் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
=====


ஆந்திராவைச் சேர்ந்த அபிலாஷா என்ற  சரிதாவை இயக்குனர் 1978 ஆம் ஆண்டு தெலுங்கில் மரோசரித்ரா படத்தில் ஸ்வப்னா கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்தார். அபிலாஷா என்னும் சரிதா தன் பதின்ம வயதினிலேயே கடப்பா வெங்கடசுப்பையா என்பவருடன் திருமணமாகி மணமுறிவு ஏற்பட்ட பின்னர் பாலச்சந்தரின் ஆடிஷனில் தேர்வாகி நடித்த படம் இது,கருமையான, பூசலான, பெரிய கண்கள் கொண்ட சரிதாவை தெலுங்கு பேசும் இளம் பெண்ணின் பாத்திரத்துக்கு மிகப் பொருத்தமானவராக இருப்பார் என்று   துணிந்தே தேர்வு செய்தாராம் பாலச்சந்தர்,சரிதா தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என சுமார் 140 படங்கள் நடித்து சாதித்து விட்டார்.

 நடிகை சரிதாவை இயக்குனர் அதே 1978 ஆம் ஆண்டில் தான் தமிழில் தப்புத் தாளங்கள் படத்தில் சரசு என்னும் யதார்த்தமான ஏழ்மையிலும் நேர்மையான விலைமங்கை கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்தார்.

நடிகை சரிதாவை இயக்குனர் அதே 1978 ஆம் ஆண்டு கன்னடத்தில் தப்பிடத் தாளா   படத்திலும் [தப்புத் தாளங்கள்] அதே சரசு என்ற விலைமங்கை கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்தார்.ஆக நடிகை சரிதாவை மூன்று முறை மூன்று மொழிகளில் அறிமுகம் செய்திருக்கிறார் பாலச்சந்தர்.

நடிகர்களில் கும்பகோணத்துக்காரரான ரமேஷ் அரவிந்த்தை 1986 ஆம் ஆண்டு கன்னடத்தில் தன்னுடைய சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தின் ரீமேக்கான சுந்தர ஸ்வபனகலு படத்தில் சிவகுமார் செய்த மூன்று பெண்கள் இருக்கும் வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

அதன் பின்பு ரமேஷ் அரவிந்த் கன்னடத்தில் பிரபல கதாநாயகனாகிவிட்டாலும். குருவுக்காக தமிழில் இந்த தம்பி கதாபாத்திரத்தில் நடித்தார்.ரமேஷ் அரவிந்த் கன்னடம், தமிழ், தெலுங்கு, துளு,இந்தி என்று சுமார் 150 படங்கள் நடித்து விட்டார்,அடுத்து வெளிவர இருக்கும் உத்தமவில்லன் இவரது இயக்கத்தில் வரும் ஆறாவது படமாகும், இதற்கு முன்  இவர் ஐந்து கன்னடப்படங்கள் இயக்கியுள்ளார்.

1987ல் தமிழில் மனதில் உறுதி வேண்டும் படத்தில் சுஹாசினியின் 4 தம்பிகளில் இரண்டாம் தம்பியாக இவரை நடிக்க வைத்தார் பாலச்சந்தர். இவருக்கு அடுத்த தம்பியான விவேக்கும் இப்படத்தில் தான் அறிமுகம்.

ரமேஷ் அரவிந்தின் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் மிகவும் தாக்கம் நிறைந்தது. அந்த தம்பி கதாபாத்திரத்தின் மூலம் கட்சியில் அரசியல்வாதிகளுக்கு கடைசிவரை உணர்ச்சி கொந்தளிப்புடன் அடிமட்டத் தொண்டர்களாக இருந்து மடியும் இளைஞர்களுக்கு புத்தி சொல்லியிருப்பார் இயக்குனர்.

ஒரு அரசியல்கட்சியின் வெறித்தனமான கடைநிலைத் தொண்டன் ரமேஷ் அரவிந்த். அப்பாவோ வருமானமே ஏதுமற்றிருக்கும் சிவன் கோவில் ஓதுவார். திருமணமாகாத அக்கா சுஹாசினி  சென்னை மருத்துவமனை ஒன்றில் நர்சாக வேலை செய்து மனி ஆர்டர் அனுப்பும் பணத்தில் தான் 8 பேர் அடங்கிய குடும்பமே உய்க்கும்.[இக்குடும்பமும் அரங்கேற்றம் படத்தில் வரும் ஏழை பிராமணக் குடும்பத்தின் நீட்சியே] குடும்பம் இப்படி ஏழ்மையில் இருக்கையிலும் தன் தலைவன் மீதான பற்று ரமேஷ் அரவிந்தின் மனதில் ஆழமாக வேரூன்றிவிடும்.

அது வெறியாகவே மாறுவதை படிப்படியாக அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர். தம்பி விவேக் கட்சித்தலைவர் பற்றி மாற்று கருத்து  சொல்லப்போக அவரைக் கொல்ல கத்தியுடன் பாய்வார் ரமேஷ் அரவிந்த். அப்படி ஒருநாள் செய்தித்தாளில் இவரது தலைவன் கைது செய்யப்பட்டார் என்று செய்திவர, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட ரமேஷ் அரவிந்த் வீட்டில் அம்மா வாங்கி வைத்திருந்த மண் எண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து இறந்து விடுவார்.

இதே படத்தில் செவிலியர்களை  மிக உயர்வாக சித்தரித்திருப்பார் இயக்குனர். அந்நாட்களில் வாரப்பத்திரிக்கைகளில் தவறாமல் டாக்டர் நர்ஸ் கள்ளத் தொடர்பு ஜோக்குகள் இடம் பெறுவது சர்வசாதாரணம். அப்படியொரு காலகட்டத்தில் சமூகத்தில் மனமாற்றம் கொண்டுவர செவிலியர்களின் சேவையைப் போற்றி மனதில் உறுதி வேண்டும் படத்தில் ஒவ்வொரு காட்சியையும் வைத்தார் .

இதில் ஒரு இக்கட்டான ஆபரேஷன் துவங்கும் முன்  நர்ஸ் சுஹாசினிக்கு தம்பி தீக்குளித்து இறந்து விட்டான் என்று ஊரிலிருந்து அவசர போன் வரும். அந்த துயரச் சூழலிலும் யாரிடமும் சொல்லாமல், முழு ஆபரேஷனுக்கும் உடனிருந்து அது முடிந்து நோயாளிக்கு ஆபத்தில்லை என்னும் கட்டத்திலேயே தலைமை மருத்துவரான எஸ்பிபியிடம் சொல்லிவிட்டு, அவர் கார் கொடுத்து உதவ, சுஹாசினி சொந்தஊர் வந்து தம்பியின் சவ அடக்கத்தில் கலந்து கொள்வார்.

இது அப்போது சமூகத்தில் ஏழைக் குடும்பங்களில் பரவலாக நடந்த துயரமே, அதைத்தான் துணிந்து தன் படத்தின் கதாபாத்திரமாக காட்சியாக வைத்தார், அழகும் அறிவும் நிரம்பிய ரமேஷ் அரவிந்த் போன்ற இளைஞர்கள் அரசியல் பேசி பாழாகாமல் படித்து முன்னேறி வீட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த கதாபாத்திரத்தை வைத்தார்.

இந்த ரமேஷ் அரவிந்த் செய்த தம்பி கதாபாத்திரத்தின் ஒற்றைத் திரியில் இருந்து தான் பாரதிராஜாவின் என் உயிர் தோழன் 1990 படத்தில்  பாபு செய்த  தர்மன் கதாபாத்திரம் பிறந்தது.பாரதிராஜா தமிழ் சினிமாவின் இந்த முக்கியமான  அரசியல் விமர்சனப் படத்தை இயக்கும் துணிவை கே. பாலச்சந்தர் அவர்களிடமிருந்தே பெற்றார் என்றால் மிகையாகாது.அதிலும் முதல் காட்சியே உழைப்பாளர் சிலையின் முன்பாக தர்மன் தீக்குளிக்கத் தயாராவதில் தான் துவங்கும்,அங்கே மண்ணெண்ணையை உடல் முழுக்க ஊற்றிக் கொண்டு பற்ற வைக்க முடியாத படிக்கு தர்மனின் தீப்பெட்டி நனைந்திருக்கும், அன்று சாக முடியாத தர்மனை படத்தின் க்ளைமேக்ஸில் தர்மனின் உற்ற நண்பனும் அரசியல் தரகனுமான சார்லி பிச்சுவாக் கத்தியால் குத்திக் கொன்று விடுவார்.

மனதில் உறுதி வேண்டும் படத்தில் சிறப்புகள் நிறைய உண்டு.இதில் மொத்தம் 12 நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்திருந்தார் இயக்குனர் ,

சுஹாசினியின் முதல் கொடுமைக்காரக் கணவன் சந்திரகாந்த் அறிமுகமே

சந்திரகாந்தின் அப்பாவாக வந்த மீசை கிருஷ்ணசாமி அறிமுகமே

சுஹாசினியின் இரண்டாம் காதலனாக வரும் ஸ்ரீதர் அறிமுகமே.

சுஹாசினியின் அப்பாவாக  ஓதுவார் கதாபாத்திரத்தில் வந்த பேராசிரியர் ராம்தாஸ் அறிமுகமே, அவருக்கு டெல்லி கணேஷ் குரல் தந்திருப்பார். இயக்குனரிடம் ஒரு குணாம்சம் ,தனக்குப் பிடித்த நடிர்களுக்கு ஒரு படத்தில் கதாபாத்திரம் தர முடியாவிட்டால் அவரை விட்டு டப்பிங்காவது  பேச வைத்து விடுவார்.

சுஹாசினியின் மூத்த தம்பி கதாபாத்திரம் செய்த விஸ்வநாத்தும் அறிமுகமே, இதில் அவர் ஒரு முஸ்லீம் பெண்ணை விரும்புவார், அப்பெண்ணைக் கைப்பிடிக்க முஸ்லீமாக மதம்மாறி திருமணம் செய்வார். அதற்கு குடும்பத்தின் எல்லா முடிவுகளையும் எடுக்கும் மணமாகாத அக்கா சுஹாசினி உளமாற சம்மதம் தருவது போல புரட்சிகரமான காட்சியை வைத்திருப்பார் இயக்குனர்.

படத்தில் காதலனால் ஏமாற்றப்பட்டு தற்கொலைக்கு முயன்று சுஹாசினியுடனே அறையில் அடைக்கலமாகும் லலிதகுமாரியும் அறிமுகமே

படத்தில் ஒரு திருடன் கதாபாத்திரம் உண்டு, சுஹாசினியின் வீட்டின் ஜன்னல் வழியாக புடவை திருடுவான் ஒரு திருடன்,அவனை அக்கம்பக்கத்தவர் எல்லோரும் அடிக்க,சுஹாசினி புத்திமதி சொல்லி பத்து ரூபாய் கொடுப்பார், அந்த திருடன் படிப்படியாக குப்பை பொறுக்கி, ரிக்‌ஷா இழுத்து,பெட்டிக்கடை வைத்து, சூப்பர் மார்க்கெட் திறக்கும் அளவுக்கு வாழ்வில் உயர்வார். எல்லாவற்றுக்குமே நன்றி மறவாமல் நந்தினி என்றே பெயர் வைப்பார்.
அவருக்கு தன் தங்கையை திருமணம் செய்து தர நினைத்திருப்பார் சுஹாசினி, தனக்கு தானே மாப்பிள்ளை பார்த்தால் தான் உண்டு என்று தங்கை வீட்டில் குடிவந்த ஒரு இளைஞனுடன் [பிட்டுப் படப் புகழ் கங்கா-அவருக்கு குரல் எம்.எஸ்,பாஸ்கர்] ஓடிப் போய்விட, தன்னுடன் தஞ்சமாகிவிட்ட லலிதகுமாரியை  அந்த முன்னாள் திருடனுக்கு திருமணம் செய்து வைப்பார் சுஹாசினி, அந்த திருடன் கதாபாத்திரம் செய்த ரவிகாந்தும் அறிமுகமே. சுஹாசினியின் தங்கையாக நடித்த யமுனாவும் அறிமுகமே.

சுஹாசினிக்கு மலையாளப் பெண் ஒருத்தி ஆட்டோ பிடிக்க நிற்கையில் இருவரும் ஒரே ஆட்டோவை ஒரே சமயத்தில் அழைக்க அதில் பழக்கமாவார், அவர் வீட்டிலேயே சுஹாசினி குடி போவார்,வாடகை செலவுகளை அவர்கள் 50-50 என்று பகிர்ந்து கொள்வர்,அந்தப் பெண் வேலை கிடைக்காமல் ஒரு பெரிய நிறுவனத்தின் உயரதிகாரிக்கு ஆசைநாயகியாக இருப்பார்,அவர் மாதாமாதம் தரும் பெரிய தொகையில் ஊருக்கு மனி ஆர்டர் செய்வார்,ஒரு நாள் அந்த அதிகாரி மாரடைப்பால் இறந்த செய்தி வர,அங்கே அஞ்சலி செலுத்தக் கூட செல்ல  முடியாமல், இங்கே வீட்டிலேயே நிலை கொள்ளாமல் தவிப்பார், ஆனால் அதே போன்றே சில நாட்களில் மும்பையில் ஒரு பெரிய நிறுவனத்தின் உயரதிகாரி ஆசைநாயகியாக கூப்பிட்டதும் வீட்டின் சூழ்நிலையை மனதில் கொண்டு அங்கே செல்லப் புறப்படுவார்.அந்த கனமான தோழி கதாபாத்திரம் செய்த வைதேகியும் அறிமுகமே.

படத்தில் ஒரு சிறப்பு அறிமுகம் என்றால் அது பாடகர் எஸ்.பி,பி தான்,இதில் தலைமை மருத்துவராக,திருமணமே செய்து கொள்ளாமல் அதை மறைத்து தான் ஒரு குடும்பஸ்தன் என சொல்லி கர்நாடக சங்கீதம் பாடிக்கொண்டு ஹாஸ்யமாக வாழும் ஒரு கதாபாத்திரம். மிக அருமையாக செய்திருப்பார் எஸ்.பி,பி.

படத்தின் மருத்துவமனை தொடர்பான காட்சிகளை ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கன் சாலையில் இருக்கும் அஸ்வினி நர்சிங் ஹோமில் படமாக்கியிருப்பார் இயக்குனர்.

படத்தின் ஒளிப்பதிவு ரகுநாத ரெட்டி, இவர் பி.எஸ்.லோகநாத்தின் மாணவராவார், அவர் முதுமையினால் ஓய்வு பெற்றதும் இயக்குனர் கே.பாலச்சந்தரின் படங்களுக்கு தொடர்ந்து ஒளிப்பதிவு செய்தார், இப்படத்திலும் இவரது ஒளிப்பதிவு மிக அருமையாக இருக்கும். 1980களின் நகர சூழல் மிக இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.கண்ணா வருவாயா பாடலும் மிக அருமையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்,அப்பாடலிலும் பாலச்சந்தரின் மனம் கவர்ந்த சில்ஹவுட் ஒளிப்பதிவு டீடெய்ல்களை ஒருவர் கண்ணுறலாம்.

இதில் வஸந்த் துணை இயக்குனராக பணியாற்றியிருப்பார்.1970களில் கே.பாலச்சந்தருடன் இணைந்த அனந்து இதிலும் தொடர்ந்து வந்து கதை திரைக்கதை, வசனத்தில் உதவியாளராக பணியாற்றியிருப்பார்.

இதில் வங்காளக் கடலே பாடலை லலிதகுமாரி சுஹாசினிக்கு மணமகன் இவராக இருப்பாரோ?அவராக இருப்பாரோ?என்று கேள்வி கேட்டு நினைத்துப் பார்க்கும் ஒரு கனவுப் பாடல்,பாடலை வாலி எழுத தாஸேட்டா பாடியிருப்பார், இப்பாடலில் முதலில் சத்யராஜ் வந்து ஆடிப்பாடுவார். அதன் பின்னர் விஜயகாந்த், அதன் பின்னர் ரஜினிகாந்த் தோன்றுவார், இதில் கமல்ஹாசன் தோன்றவில்லை, அப்போது அது குறித்து கேட்கையில் கமல்ஹாசன் சுஹாசினி மகள் முறையாதலால் அவருடன் ஜோடியாக ஆடிப்பாட மறுத்துவிட்டதாக சொல்லியிருப்பார்.

இது கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சத்யராஜும், விஜயகாந்தும் நடித்த முதலும் கடைசியுமான படமாகும்.படத்தின் துவக்கத்திலேயே மூன்று நடிகர்களுக்கும் நன்றி சொல்லியிருப்பார்கள். தமிழ் சினிமாவில் ஒரு பாடலில் மூன்று பெரிய நடிகர்கள் தோன்றி ஆடியது இப்பாடலுக்காகத்தான் இருக்கும்.
படத்தில் நல்லெண்ணை சித்ரா சுஹாசினியின் முதல் கணவனுக்கு இரண்டாம் மனைவியாக வருவார், படத்தில் கிட்னி தானம் தொடர்பான காட்சிகள் அது தொடர்பான விளக்கங்கள் மிகவும் யதார்த்தமாக நம்பும் படி காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்,சென்னையின் முதல் கிட்னி மாற்று அறுவை சிகிச்சையை கே.ஜே.மருத்துவமனை தான் செய்தனர்,அப்போது அவர்கள் தான் நம்பர்1.எனவே அங்கிருந்தே தலைமை மருத்துவர் சுஹாசினியை அழைத்து இவரின் டிஸ்ஸு கல்சர் அவருடையை கணவருடன் ஒத்துப்போவதைச் சொல்லி கிட்னியை தானமாகத் தரச்சொல்லி கேட்பார்.அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் நடக்கும்.

 மனதில் உறுதி வேண்டும் முழுப்படமும் யூட்யூபில் கிடைக்கிறது.இப்படத்தின் பெயரை இன்னும் யாரும் சூறையாடவில்லை என்பது நிம்மதியளிக்கிறது. இசைஞானியின் இசை படத்துக்கு பெரும்பலம், இதில் சிந்துபைரவி திரைப்படத்தைத் தொடர்ந்து பாரதியாரின் மனதில் உறுதி வேண்டும் பாடல் டைட்டில் பாடலாக பயன்படுத்தப்பட்டிருக்கும், டைட்டில் போடுகையில் இயக்குனர் செய்த புதுமைகளை இங்கே பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=Qw40A1XijVE