எங்க ஊர் ராசாத்தி (1980)

எங்க ஊர் ராசாத்தி (1980) திரைப்படத்தில் மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.பி.சைலஜா பாடிய "பொன் மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன் " பாடல் மிகவும் பிரபலமானது, இசை கங்கை அமரன், பாடல் கவிஞர் முத்துலிங்கம், இயக்கம் n.s.ராஜேந்திரன், ஒளிப்பதிவு G.தியாகு.

இப்படத்தில் அந்த ஊரின் தாரித்ரியம் மிக்க இளைஞராக சுதாகர், அவர் விரும்பும் பெண் ராசாத்தியாக ராதிகா, 

ராதிகாவுக்கு அம்மா இல்லை மாற்றாந்தாயும் அப்பனும் சேர்ந்து பண்ணையாரிடம் வாங்கிய கடனுக்கு வட்டியையும் அசலையும் கட்ட முடியாமல் மகள் ராசாத்தியை பண்ணையாரின் மனநிலை பிழற்ந்த மகனுக்கு மணமுடித்து வைக்கின்றனர், 

காதலன் சுதாகர் வேலைதேடி பட்டணம் சென்றிருக்கையில் இந்த திடீர் திருமணம் நடந்து விடுகிறது, பண்ணையாரின் மகன் யாரை பார்த்தாலும் கன்னத்தில் ஓங்கி அறைந்து விடுபவன், அவன் தனக்கு கொள்ளி வைப்பான் என்று சகிக்க முடியாமல் சகித்துக் கொள்கிறார் பண்ணையார்,

 மகன் அறைந்தவரின் கால் பிடிக்காத குறையாக வீட்டுக்கு கூட்டிப் போய் தலைவாழை விருந்து வைத்து அனுப்பும் விசித்திர குணம் கொண்டவர், அடிபட்டவர் வயிறெரிய கூடாதாம் பாருங்கள், முற்போக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் போலவே தோற்றம் கொண்ட மாமனார். (படைப்பாளி குசும்பு ), 

மகன் முதலிரவில் மனைவியையும் கன்னத்தில் அறைய பெல்டை கழற்றி விளாசுகிறார், ராதிகா பற்றி தடுத்து,கணவனை உள்ளபடியே ஏற்கிறார், 

ராதிகாவின் மாமியார் காந்திமதி, கவுண்டமணி அவரின் தம்பி,அவரின் மனைவி சி.கே.சரஸ்வதி, காந்திமதி துணையுடன் பல தருணங்களில் கவுண்டமணி ராதிகாவை வல்லுறவு கொள்ளப் பார்க்கிறார், அப்போது ராதிகா கன்னத்தில் அறைந்து தப்புகிறார், பாஞ்சாலி கௌரவர்களிடம் வந்து சிக்கிய இக்கட்டான சூழலில் ராதிகா, ஒத்திசைய சொல்லும் மாமியார்,

இந்நிலையில் தான் ஊருக்குள் நன்கு சம்பாதித்து விடுப்பில் வருகிறார் சுதாகர், பெட்டியில் ராதிகாவுக்கு பட்டுப்புடவை, தங்கநகைகள்,பூ என அனைத்தும் கொண்டு வந்து தருகிறார், ஆனால் ராதிகா வாங்குவதில்லை, மனநிலை சரியில்லாத கணவனுக்கு துரோகம் செய்யவும் தன்னை கௌரவர்கள் போன்ற குடும்பத்தில் பணயம் வைத்த பெற்றோரை பழிவாங்கவோ விரும்புவதில்லை,stalk home syndrome  உதாரணம்.

நாளுக்கு நாள் கவுண்டமணி பல்லி இரைக்கு நாக்கு நீட்டுவது போல ஆங்காங்கே துரத்துகிறார், ராதிகா குளிப்பதை ஒளிந்திருந்து பார்க்க நினைத்து மனநிலை சரியில்லாத மருமகனை கூட்டு சேர்த்து எட்டிப்பார்க்க தன் மனைவி சி.கே.சரஸ்வதி குளிப்பது தான் பார்க்க கிடைக்கிறது,

 மருமகனை விட்டு அவன் மனைவி ராதிகாவை கோயிலுக்கு அழைத்து வர சொல்லி துகிலுரிய ராதிகா மீண்டும் கன்னத்தில் அறைந்து விட்டு தப்புகிறார்,துச்சாதனன் போன்ற  கவுண்டமணிக்கு  குந்தி பரிந்து வந்தது போல மாமியார் காந்திமதி தம்பிக்கு மீண்டும் பரிந்து பேசுகிறாள்,பண்ணையார் இதற்கு எல்லாம் வாய் திறப்பதில்லை.

 மனநிலை சரியில்லாத கணவனை விட்டு காதலனுடன் ஓடிப்போ என யோசனை சொல்லி கல்லானாலும் கணவன் கவுண்டமணியை தன்னிடம் தக்க வைக்க நினைக்கிறார் சி.கே.சரஸ்வதி.

அன்று நள்ளிரவில் பாஞ்சாலி சபதம் கூத்து நடக்கிறது,கூத்தில்  துச்சாதனன்  துகிலுரிகையில் கவுண்டமணி வெறி கொண்டு நன்கு குடித்து விட்டு வீட்டில் தனியே இருந்த ராதிகாவை வல்லுறவு செய்து விடுகிறார், 

கூத்தில் வைத்து கவுண்டமணி மனைவி கிருஷ்ண பரமாத்மா போல சென்று உன் மனைவியை என் கணவனிடமிருந்து காப்பாற்று என கிசுகிசுத்து அனுப்புகிறாள், 

இங்கே வல்லுறவுக்கு பின் ராதிகா அழுவதைப் பார்க்கிறான் கணவன், ரோஷம் தலைக்கேறுகிறது, அருகே கிடந்த சாராய குப்பியை உடைத்து கவுண்டமணியை துரத்திப் போய் குத்த விழைகிறான், 

 கவுண்டமணி கண்ணாடி குப்பியை பறித்து மருமகனை குத்த முனைகிறார்,அங்கே முன்னாள் காதலியின்  கணவன் உயிரை காக்க வேண்டி முன்னாள் காதலன் சுதாகர் முன்னால் பாய்ந்து விடுகிறார்.

ஊர் திடலில்  குத்துப்பட்டு குத்துயிரும் குலையுயிருமாய் கிடக்கிறார்,சுற்றி ஊர்ஜனம் வேடிக்கை பார்க்கிறது.

ராதிகாவின் மாமனார் தம்பி உன் கடைசி ஆசை என்னப்பா என்று கேட்கிறார், தன் பெட்டியை தந்து ராதிகாவுக்கு அவற்றை அணிவித்து அழைத்து வந்து காட்டினால் என் ஆவி நிம்மதியாக பிரியும் என்கிறார் சுதாகர்,

அதே போலவே அந்த அன்னதான பிரபு மாமனார் பண்ணையார் வீட்டுக்கு போனவர்,  வல்லுறவுக்குப் பின் ஆசுவாசமாக குளித்து பொட்டு வைக்க போன மருமகளிடம் இந்த பெட்டியை தந்து இவற்றை அணிந்து வாம்மா என கையோடு அழைத்துப்போய் சுதாகர் முன் நிறுத்துகிறார்,

சுதாகரின் ஆவி பிறந்த பலனை அடைந்து பிரிகிறது, (இனி ராதிகா கவுண்டமணியிடம் படப்போகும் இன்னல்களை சொல்லாமலே படம் நிறைகிறது)

இந்த படத்தின் கதை கலைமணி,டெண்ட் கொட்டகையில் முறுக்கு விற்று சினிமா கற்ற திரைக்கதை மேதை, தமிழ் சினிமா கடந்து வந்த பாதைக்காக இந்த பிற்போக்கு திரைப்படங்களை பார்க்க வேண்டி உள்ளது.