மலேசியா வாசுதேவன் பாடிய இதயமே நாளும் நாளும் காதல் பேசவா பாடல் அடுத்தாத்து ஆல்பர்ட் படத்தில் இருந்து



இளையராஜாவின் இசையில் பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் முக்கியமான ரேர்ஜெம் இதயமே நாளும் நாளும் காதல் பேசவா என்னும் பாடல் அடுத்தாத்து ஆல்பட் [1985] படத்தில் இருந்து.

இது வேகமான கடினமான உச்சஸ்தாயி மெட்டுக்களால் கட்டமைக்கப்பட்ட பாடல் மிக அருமையாக ஜானகி அம்மா மலேசியா வாசுதேவனுடன் இணைந்து போட்டி போட்டுப் பாடியிருப்பார்,இப்பாடல் இன்றும் திரும்ப திரும்ப கேட்க பிடிக்க முக்கிய காரணம் மலேசியா வாசுதேவன் அவர்களின் மணிக்குரல் என்றால் அது மிகையில்லை

ஊட்டி தேயிலைத்தோட்டத்தின் பின்னணியில் படமாக்கப்பட்டிருக்கும்,அதில் காதலை எதிர்க்கும் பெற்றோரை மிரட்ட பூமிக்குள் காதலர்கள் தங்களை பூமிக்குள் புதைத்துக்கொள்வது போலபும்,தங்களைச் சுற்றி அக்னி வளையம் போட்டுக்கொள்வது போலவும் வித்தியாசமான சிந்தனையில் கேமரா ட்ரிக் ஷாட்கள் நிறைய கொண்டிருக்கும் வண்ணம் இயக்கியிருந்தார் ஜி.என்.ரங்கராஜன் .நடிகர்கள் மேஜர் சுந்தர்ராஜன்,செந்தாமரை,சுகுமாரி என காதலுக்கு எதிரி பெற்றோராக தோன்றியிருப்பார்கள்.

ஒளிப்பதிவாளர் டி.டி.பிரஷாந்த் நடிகை ஊர்வசியை மிக அழகாக காட்டியிருப்பார்.
இப்பாடலை இயற்றியவர் கவிஞர் பொன்னருவி
https://www.youtube.com/watch?v=gi63VBk345s




இதயமே நாளும் நாளும் காதல் பேசவா
உதயமே நீயும் கூட வாழ்த்து பாடவா
காதல் மனமே வாழ்க தினமே
அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா
வானம்பாடி போல நாங்கள் கானம் பாடி ஓடினோம்
வாசம் வீசும் பூவைப்போல வாசம் வீசி பாடினோம்
ஜாதி பேயை ஓட்டுவோம் நீதி நாட்டுவோம்
சாமி வந்து தோன்றினும் காதல் பேசுவோம்
மனதிலே உறுதியாய் உறுதியே கொள்கையாய்
வாழ்ந்து காட்டுவோம்..
அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா
வானில் தாவி நீந்துவோம் தீயை கையில் ஏந்துவோம்
காற்று வீசும் நாள் வரை ஜோடியாக வாழுவோம்
நீரும் கூட பாடியே மாலை போடுதே
பூமி தீயை வாழ்த்தியே கீதம் பாடுதே
தடுக்கவே முடியுமா பிரிக்கவே முடியுமா
சேர்ந்து வாழுவோம்….
அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா
உதயமே நீயும் கூட வாழ்த்து பாடவா
காதல் மனமே வாழ்க தினமே
அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவாஆஆ

இயக்குனர் பாலு மகேந்திராவின் வீடு திரைப்படம் மற்றும் இளையராஜாவின் ஹவ் டு நேம் இட் இசை கோர்ப்பு




வீடு படத்தில் சொக்கலிங்க பாகவதர்  பல்லவன் பஸ் பிடித்து , வளசரவாக்கத்துக்கு தானும் தன் பேத்தியும் கஷ்டப்பட்டு கட்டி வரும் வீட்டைப் பார்க்கப் போகும் அருமையான காட்சி இது.

கூட்டமில்லா பேருந்தில் கண்டக்டர் இவரை பெருசு என கூப்பிடாமல் தாத்தா கம்பிய பிடிச்சுக்குங்க!!!  எனச் சொன்னதும் மகிழ்ச்சியில் துவங்குகிறது இக்காட்சி.

மகளிர் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுமி இவருக்கு அமர இருக்கையை விட்டுத் தந்தவுடன் இவருக்கு பரம ஆனந்தமாக இருக்கிறது.சற்றே இளைபாறுகிறார்.

வளசரவாக்கம் வந்தவுடன் நடத்துனர் இவருக்கு அவசரமாக நினைவூட்டி முன்வழியில் சென்று இறங்குங்க எனச் சொல்ல,இவர் அவசரமாக இறங்குகிறார், குடை பேருந்திலேயே போய்விடுகிறது.கத்திரி வெயில்,தேய்ந்த செருப்பு, இனி புதுக்குடை வாங்க வேறு தண்டச் செலவு , மயக்கமாக வருகிறதே விழுந்துவிடுவோமோ என்ற பயம் என சொக்கலிங்கம் பாகவதர் அவர்கள்  கலக்கியிருப்பார்.

அங்கே இயக்குனர் பாலுமகேந்திரா தன் பிரியத்துக்குரிய இளையராஜாவின் ஹவ்டு நேமிட் இசை தொகுப்பில் இருந்து ஹவ்டு நேமிட் இசைக்கோர்ப்பை பின்னணி இசையாக பயன் படுத்தி சொக்கலிங்க பாகவதரின் அந்த தற்காலிக சோகத்துக்கு வலுவூட்டியிருப்பார்.நீண்ட காட்சி அது, அங்கே காலியாக இருக்கும் 90களின் வளரும் வளசரவாக்கத்தை நாம் பார்ப்போம், லாங்ஷாட், க்ளோஸ் அப், டைட் க்ளோஸப். என மிக அருமையான ஷாட் கம்போசிஷன்களைக் கொண்டிருக்கும்.

இப்போது அலைந்து திரிந்து தங்கள் கட்டப்பட்டு வரும்  வீட்டுக்குள் அதன் குளுமையை அனுபவிக்க, செருப்பை கழற்றி விட்டு மெல்ல நுழைகிறார் தாத்தா.  மாடிக்கு போக படியேறுகிறார்.இப்போது சோகம் மறைந்து மகிழ்ச்சி மீண்டும் குடி கொள்ளும் மிக அருமையான காட்சி. அங்கே மீண்டும் தன் பிரியத்துக்குரிய இளையராஜாவின் ஹவ்டு நேமிட் இசை தொகுப்பில் இருந்து Do Nothing இசைக்கோர்ப்பை பின்னணி இசையாக பயன் படுத்தி அந்த மகிழ்ச்சிக்கே  மகிழ்ச்சியை கூட்டியிருப்பார் இயக்குனர் பாலு மகேந்திரா.

இந்த இசைக்கோர்வைக்கு அவர் படத்தின் துவக்கத்தில் டைட்டில் கார்டில் இளையராஜாவுக்கு முறையாக க்ரெடிட் தந்திருந்தாலும்,அதற்கு பணம் தர அவரிடம் பட்ஜெட் இல்லாததால் இளையராஜாவிடம் அனுமதி பெறாமலேயே அந்த இசைக்கோர்வையை உரிமையுடன் பயன்படுத்திவிட்டார்,அதனால் இளையராஜா செல்லமாக கோபித்துக்கொண்டதையும் பின்னர் சமாதானமானதையும்  அவரே பொதுவெளியில் பகிர்ந்தும் இருக்கிறார்.இது போல இளையராஜா தன் நண்பர்களுக்கு பணம் வாங்காமல் செய்தவை எண்ணிலடங்காதவை.

https://www.youtube.com/watch?v=lOCk1P52PLc

காலம் சென்ற இயக்குனர் ஏ.பி.நாகராஜன் பற்றிய நினைவுகூறல்



காலம் சென்ற ஏ.பி.நாகராஜன் அவர்கள் என் மனம் கவர்ந்த இயக்குனர்,இவர் முன்னே இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்டம் அழகியல் எல்லாம் தூசு தான். இதில் கொஞ்சம் கூட மிகையில்லை, இவரின் புராண படங்களில் நாம் பார்ப்பது நேர்த்தி, பிரம்மாண்டம் அழகியல் , அருமையான வசனம், நடிப்பு. இசை.இவை அனைத்தும் நம்மை அப்படியே ஆட்கொண்டுவிடும் , ஏபிஎன் தன் 49ஆம்  வயதிலேயே மரணமடைந்துவிட்டார்[1928–1977]. கடுமையான உழைப்பாளி. ஏ. பி. நாகராஜன் மன்னார்குடியில் ஓர் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்.இவரின் முழுப்பெயர்  அக்கம்மாப்பேட்டை பரமசிவம் நாகராஜன்

தனது ஏழாவது வயதிலேயே டிகேஎஸ் சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்து தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ் ஒலிப்பு என்பனவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்றார். அக்குழுவில் பல சிறப்பான வேடங்களிலும் நடித்து வந்தார். நாடகத்துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு வந்தவர் இவர். ம.பொ.சியின் தமிழரசுக் கழகத்தில் ஈடுபாடு உடையவராக இருந்தார். இவர் மட்டும் நேர்த்தியாக புராணப் படங்களை இயக்கா விட்டால் நமக்கு இந்தி சினிமா, தெலுங்கு சினிமா புராணப் படங்கள் தான் சாஸ்வதமாக இருந்திருக்கும்.

அவரின் ஒப்பற்ற சில திரைப்படைப்புகள் இங்கே


  1.     ஸ்ரீ கிருஷ்ண லீலா (1977)
  2.     ஜெய் பாலாஜி (1976)
  3.     காரைக்கால் அம்மையார் (1973)
  4.     ராஜராஜ சோழன் (1973)
  5.     திருமலை தெய்வம் (1973)
  6.     அகத்தியர் (1972)
  7.     திருப்பதி கன்னியாகுமாரி யாத்ரா (1972)
  8.     பாலராஜு கதா (1970)
  9.     திருமலை தென்குமரி (1970)
  10.     விளையாட்டுப் பிள்ளை (1970)
  11.     குருதட்சணை (1969)
  12.     தில்லானா மோகனாம்பாள் (1968)
  13.     திருமால் பெருமை (1968)
  14.     கந்தன் கருணை (1967)
  15.     சீதா (1967)
  16.     திருவருட்செல்வர் (1967)
  17.     சரஸ்வதி சபதம் (1966)
  18.     திருவிளையாடல் (திரைப்படம்) (1965)
  19.     நவராத்திரி (1964)
  20.     குலமகள் ராதை (1963)
லூயி மாலி இயக்கிய பேந்தம் இந்தியா வண்ண ஆவணப்படத்தில் சென்னையைப் பற்றி காட்டுகையில் அன்றைய ஜெமினி ஸ்டுடியோவும் இடம்பெறும், அங்கே தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் படப்பிடிப்பும் வரும்,1960களுக்கு போனது போல் இருக்கும்,அந்த காணொளியை இங்கே பாருங்கள்.  சரியாக 1நிமிடம் கழித்து துவங்கும். ஆனால் லூயி மாலி தமிழ் சினிமாவை,கண்ட உடன் காதல் வருவதை, அதன் நாடகத் தன்மையான உருவாக்கத்தை,கற்பனையான பாடல்களை,கற்பனை வறட்சியான காட்சிகளை அங்கே கிண்டல் அடித்திருப்பார்.ஆனாலும் இந்த ஃபுட்டேஜ் மிகவும் முக்கியமானது. அங்கே வேஷ்டியும் சட்டையும் மேல்துண்டும் அணிந்திருக்கும் மிக எளிமையான மனிதரான  இயக்குனர் ஏ.பி.நாகராஜனின் உழைப்பைப் பாருங்கள், அவர் செட்டில் கைதேர்ந்த நடிகர்களான  சிவாஜி, ஏவிஎம் ராஜன், பாலையா ,பத்மினி, டி.ஆர்.ராமசந்திரன் போன்றோரை லாவகமாக இயக்கும் அழகைப் பாருங்கள். 
ஏ.பி.நாகராஜன் தயாரித்த மகத்தான படமான "தில்லானா மோகனாம்பாள்" திரைப்படமாகியதில் ஒரு சுவையான கதையே இருக்கிறது. கொத்தமங்கலம் சுப்பு எழுதிய "தில்லானா மோகனாம்பாள்" ஆனந்த விகடனில் தொடர் கதையாக வெளிவந்து கொண்டிருந்தபோதே அதை ஆவலுடன் ஏ.பி.நாகராஜன் படித்து வந்தார். அதை படமாக்க விரும்பினார்.
கதை உரிமை, ஆனந்த விகடன் ஆசிரியரும், ஜெமினி அதிபருமான எஸ்.எஸ்.வாசனிடம் இருந்தது. அவரை ஏ.பி.நாகராஜன் சந்தித்தார். தில்லானா மோகனாம்பாளை படமாக்க விரும்புவதாகத் தெரிவித்தார். "இக்கதையை நாம் கூட்டாக சேர்ந்து எடுப்போம். உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. படம் எடுக்கும்போது நான் தலையிடமாட்டேன்" என்றார், வாசன். ஆனால் ஏ.பி.நாகராஜன் இதற்கு சம்மதிக்கவில்லை.
"லாபமோ, நஷ்டமோ எதுவானாலும் அது என்னையே சேரட்டும். இதுதான் நான் கடைப்பிடித்து வரும் கொள்கை" என்றார், நாகராஜன். வாசன் சிரித்துக்கொண்டே, "நாகராஜன்! தில்லானாவை நீங்களே படமாக எடுங்கள். ஆனந்த விகடனில் வந்த இந்தக் கதையை நீங்கள் அதன் தரம் குறையாமல் எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உங்களுடைய திருவிளையாடல் படத்தைப் பார்த்த பிறகு எனக்கு ஏற்பட்டிருக்கிறது" என்றார்.
கதைக்கு கொடுக்க வேண்டிய தொகை எவ்வளவு என்று கேட்டார், நாகராஜன். "ரூ.25 ஆயிரம் கொடுங்கள் போதும்" என்றார், வாசன். உடனே "செக்" எழுதி கொடுத்துவிட்டார், ஏ.பி.என்.   கதை உரிமைக்காக வாசன் ரூ.50 ஆயிரமாவது கேட்பார் என்று நாகராஜன் நினைத்துக்கொண்டிருந்தார். வெறும் 25 ஆயிரத்தை சொன்னதும் அவருக்கு ஒரே ஆச்சரியம். கதைக்கு ரூ.50 ஆயிரமாவது தரவேண்டும் என்பது அவர் விருப்பம். எனவே, மீதி ரூ.25 ஆயிரத்தை கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்புவிடம் கொடுத்து விட தீர்மானித்தார்.
இந்த சம்பவம் நடந்தபோது, கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு, கண் சிகிச்சைக்காக எழும்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஏ.பி.நாகராஜன் ஆஸ்பத்திரிக்குச் சென்று, அவரை சந்தித்தார். வாசனிடம் கதை உரிமையைப் பெற்ற செய்தியை சொல்லிவிட்டு, "கதை எழுதிய உங்களுக்கு என் சொந்த முறையில் 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க விரும்புகிறேன்" என்றார்.
"சற்று நேரத்துக்கு முன் வாசன் இங்கு வந்திருந்தார். நீங்கள் அவரிடம் கொடுத்த ரூ.25 ஆயிரத்தை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்" என்றார், கொத்தமங்கலம் சுப்பு! இதைக்கேட்டு திகைத்துப்போன நாகராஜன், தான் கொண்டு போயிருந்த ரூ.25 ஆயிரத்தையும் சுப்புவிடம் கொடுத்தார்.
இந்த மாலைமலரின் முக்கியமான இயக்குனர் ஏ.பி.என் பற்றிய கட்டுரையை மேலும் படிக்க இங்கே செல்லவும்

தந்தை பெரியாரின் அபூர்வமான மாப்பிளை அழைப்பு புகைப்படம்

எவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன்-தந்தை பெரியார்

சொன்னதை செய்பவர் பெரியார், சூலை 1948 தந்தை பெரியார் அவர்களின் மணியம்மையுடனான மறுமணத்தில் மணமகன் அழைப்பின் போது எடுக்கப்பட்ட அபூர்வமான புகைப்படம் இது, அப்போது அவருக்கு 72 வயதாம், மாப்பிள்ளை தோழரின் கையில் மூத்திரவாளியை கவனியுங்கள். எந்த முடிவு என்றாலும் தீர்க்கமாக எடுப்பவர் பெரியார் அவர்கள். 

கமல்ஹாசனின் ஆளவந்தான் படத்தில் வரும் கார்ட்டூன் கொலைக் காட்சியின் சிறப்புகள்



ஆளவந்தான் 20 வருடங்கள் அட்வான்ஸாக வந்த படம், [அதாவது மக்கள் சோதனை முயற்சிகளுக்குத் தயாராகாத போது வந்த படம்] அதில் மனீஷாவை வதம் செய்து சோஃபாவில் கிடத்திவிட்டு பின் சுயநினைவு வந்ததும் அவரை கொஞ்சி அழுதபடி அமரும் நந்துவிடம் அவரது டாக்டர்  அசரிரீயாக தோன்றி கேட்பார்,நந்து ஆர்யு பிகமிங் நெக்ரோபீலியாக்? [Necrophiliac] அன்று எத்தனை பேருக்கு அதன் அர்த்தம் தெரிந்திருக்கும்?அவ்வளவு ஏன் இன்று  எத்தனை பேருக்கு அதன் அர்த்தம் தெரிந்திருக்கும்? 

இந்த கொலை துவங்கும் முன்பாக, நந்து மனிஷாவிடம் தான் கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் எனப் பாடுவார். மனிஷா அதிசயித்தவர் தனக்கு கடவுள்பாதி மிருகம் பாதியாக கலந்த கலவி வேண்டும் என்று நந்துவிடம் சொல்ல,அவர் அது கிடைக்காது ,ஏதாவது ஒன்று தான் கிடைக்கும் என்பார்.

அப்போது அதற்கு தீர்வு காண அவர் அந்த coin டாஸ் போட்டு ,அங்கே மிருகம் என்று முடிவாகி அதில் வென்றிருப்பார்,பின்னணியில் அந்த லெ மெரிடியன் ஹோட்டல் அறையின் டிவியில் கார்ட்டூன் ஓடிக்கொண்டிருக்கும், முதலில் அந்த கார்டூன் கதாபாத்திரம் நந்துவின் சித்தி கிட்டு கிட்வானியாக தோற்றமளிக்கும், கையில் சாட்டை வைத்திருக்கும், பின்னால் திரும்பினால் மனீஷா பெல்டை வைத்து அடித்து BDSM வகைக் கலவியில் Dominance and submission கூடலுக்கு நந்துவை தயார் செய்வார்,

ஆனால் எல்லாமே அங்கே தவறாகிவிடும்,கமல் மனீஷாவை தன் சித்தியாக எண்ணி அங்கே ருத்ரதாண்டவமே ஆடியிருப்பார்,அந்த வதம் முடிந்தவுடன் பார்க்கையில் மனிஷாவின் இடையில் ஆழமான அறுப்பு ஒரு கைதேர்ந்த டாக்டர் அடாப்ஸி செய்ததைப் போல போடப்பட்டு ரத்தம் வடியும்,ஆனால் குடல் வெளியேறியிருக்காது,அது தான் வன்முறையின் அழகியலின் உச்சம்.

அங்கே என்ன அழகாக மேக்கப் ஆர்டிஸ்டின் பணி இருக்கும்.காட்சியின் முடிவில் மனீஷாவுக்கு சோஃபாவிலேயே வைத்து கமல் கொள்ளியும் வைப்பார்,அப்போது இந்த பட்டினத்தார் பாடலின் வரிகளை அழகாக பாடுவார்.

”முன்னை இட்ட தீ முப்புரத்திலே;
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்;
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே;
யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே!”
 
அதெல்லாம் எந்த ஹாலிவுட் படத்துக்கும் குறையாத தரத்தில் அமைந்த காட்சிகள். இந்த வதக்காட்சியை கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் அனிமேஷன் செய்யாமல் இருந்தால் அக்காட்சி மிகக்கொடூரமாக அமைந்திருக்கும்,

அதை டைல்யூட் செய்ய இந்த காமிக் அனிமேஷன் மிகவும் உதவியது,அதை கமல் செய்ததால் எந்த சினிமா விமர்சகருக்கும் பாராட்ட மனமில்லை, ஆனால் படம் வெளியாகி இத்தனை வருடம் கழித்து அக்காட்சியை நினைவு கூறுகிறோமே இதுவே அக்காட்சியின் வெற்றிக்கு சாட்சி,
https://www.youtube.com/watch?v=GM9CvCVoYbs


இப்படத்தின் பாதிப்பில் க்வெண்டின் டாரண்டினோ உருவாக்கிய கில்பில் பாகம் ஒன்றில் வரும் ஒ-ரென் என்னும் அழகிய ஜப்பானிய தொழில்முறைப் பெண் கொலைகாரி பற்றிய அறிமுகப் படலம் சுமார் எட்டு நிமிடம் நீளுகிறது, கமல்ஹாசன் 2001 ஆம் ஆண்டு ஆளவந்தான் திரைப்படத்தில் செய்ததை அவர் 2003 ஆம் ஆண்டில் மிகச்சிறப்பாக மேம்படுத்தி தன் பாணியில் கில்பில்லில் மிதமிஞ்சிய வன்முறை தெறிக்க வழங்கியதை இங்கே பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=ImyntxVxZyE



இந்தப் படம் கொண்டிருக்கும் ஆச்சர்யங்கள் பற்றி விளக்க தொடர்கள் எழுதினால் தான் சரிவரும்,அதை உலக சினிமா ரசிகன் எழுதினால் தான் சரிவரும்

கே.பாலச்சந்தின் அவர்கள்[1977]படத்தில் நீக்கப்பட்ட பாடல் பற்றிய கமல்ஹாசனின் நினைவுகூறல்

சுவையாகப் பேசுவது ஒரு கலை,

நினைத்தாலே இனிக்கும் படத்தின் மறு வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் , தன் அவர்கள்[1977] திரைப்படத்தில் இருந்து ஒரு சுவையான மலரும் நினைவுகளைப் பகிர்ந்தார்.

அவர்கள் படத்தில் அவர் பாலக்காடு ஜனார்தனன் என்னும் விதவை வேடம் ஏற்றிருந்தார்,அலுவலகத்தில் உடன் பணிபுரியும் விவாகரத்து ஆன அனுபமா [சுஜாதா] எளியவனான தன் காதலைப் புரிந்துகொண்டு, அக்காதல் கைகூடுவது  போல ஒரு கற்பனைக் காட்சி படத்தில் உண்டு.அந்த ஒருதலைக்காதலுக்கு ஒரு பின்னணிப் பாடலும் உண்டு.ஆனால் அது படத்தில் இல்லை.

அந்த கட்டாகிப் போன  பின்னணிப் பாடலுக்காக கவிஞர் கண்ணதாசன், எம்.எஸ்,வி . இயக்குனர் கே. பாலச்சந்தர் இணைந்து இப்பாடல் வரிகளை உருவாக்கிய போது கமல்ஹாசன்  தனக்கு நடனமும் , சாஸ்திரிய இசையும் தெரியும் என்பதை அவர்களுக்கு உணர்த்த ,இது இப்படி வராதுங்க ஐயா என அதிகப்பிரசங்கித்தனமாக தலையிட்டு ஆலோசனை சொன்னதையும், அதை அங்கே கவிஞரோ, எம் எஸ்வி அவர்களோ கொஞ்சமும் பெரிது படுத்தாமல் இதோ இப்போ சரியாக வரும் பாருங்க , என்று கையமர்த்தி விட்டு அது இசைக்கோர்ப்பில் தாளக்கட்டுடன் சரியாக வந்த உடன் தான் முகம் சிவந்து மூக்குடைபட்ட சம்பவத்தையும் இதை விட யாராலும் பொதுவெளியில் சுவையாக பகிர முடியாது.

படத்தில் அந்த காட்சி மட்டும் இருந்தது ஆனால் இந்த அருமையான பின்னணிப் பாடல் இல்லை, அக்காட்சியில் கமல்ஹாசனும் சுஜாதாவும் பேசும் வசனம் வந்துவிட்டது.  கமல்ஹாசன் மேடையில் பாடிக்காட்டிய அந்த அழகான பாடல் வரிகள் இங்கே, இதை மிக அழகாக கட்டாகிப் போன காட்சி என குறிப்பிட்டு அவர் மேடையில் விஸ்தரித்த அழகை காணத் தவறாதீர்கள்


கமல்ஹாசன் குரலில் படிக்கவும்

”நாதிர்ந்தின்னா,நாதிர்ந்தின்னா,நாதிர்ந்தின்னா
  நல்ல மழை பெய்து காடு இன்று கனிந்தது
  நான் நினைத்த எண்ணம் கல்வெட்டாக மலர்ந்தது
  கொம்புத்தேனைப் பார்த்து நின்றேன் கையில் வந்து விழுந்தது
  கூட்டத்தோடு நின்ற என்னை கொஞ்சும் அன்னம் அழைத்தது
  நாதிர்ந்தின்னா,நாதிர்ந்தின்னா,நாதிர்ந்தின்னா ”

கமல்ஹாசன் பேசிய மேடைப்பேச்சு சரியாக 9ஆம் நிமிடத்தில் துவங்குகிறது.
https://www.youtube.com/watch?v=CP0v_-TZ-MA

The Writer Who Extended The Boundaries - எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்


https://www.youtube.com/watch?v=iy0xpl5NztA
இசைஞானியின் மகத்தான தயாரிப்பு மற்றும் இசைப் பங்களிப்பில் ஒளிப்பதிவாளர் செழியன் ஒளிப்பதிவில் உருவான எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் பற்றிய மிக முக்கியமான ஆவணப்படம், தமிழின்.மிகத் தரமான ஆவணப் படைப்பு.ஒருவகையில் இதுவும் ஒரு உலகசினிமா தான்.அவசியம் பாருங்கள்.

ஒரு மகத்தான படைப்பாளி தான் வாழும் காலத்திலேயே இத்தகைய மிகத்தரமான ஆவணப்படம் ஒன்றால் கௌரவிக்கப்படுவது தமிழ் இலக்கியம் மற்றும் சினிமா சூழலில் மிகமிக அபூர்வமானது, இப்படைப்பைக் கொண்டாடுவோம்.வாருங்கள்.

பத்து பாகங்களாக இருந்ததை ஒன்றரை மணிநேர முழு பாகமாக தரவேற்றிய எழுத்தாளர் ரவி சுப்ரமணியன் அவர்களுக்கு மிக்க நன்றி

எழுத்தாளர் ஜெயகாந்தனின் 1964 ஆம் வருடம் ஆனந்த விகடனில் வெளியான பொக்கிஷப் பேட்டி





1.எழுத்துத் துறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்?
நான் வரவில்லை, எங்கோ போய்க் கொண்டிருந்த வழியில், எழுத்தாளனாய் வரவேற்கப்பட்டேன். நான் கதைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பியதில்லை. என்னைப் பத்திரிகைகள் ஆதரிக்கவில்லை என்று புலம்பியதுமில்லை. நான் கல்லூரியிலோ, உயர்நிலைப் பள்ளியிலோ படித்தவனல்ல, அங்கே எழுத்தையோ இலக்கியத்தையோ கற்பதற்கு! நான் நடைபாதையில், குழாயடியில், சில நாட்கள் வேலைக்குப் போன சிறிய தொழிற்சாலைகளில் பொதுவான நடைமுறை வாழ்க்கையில்தான் இலக்கியத்தைக் கற்றேன். பிறகு, அங்கேதான் எழுத்தும் இலக்கியங்களுமே பிறக்கின்றன என்று அறிந்தேன். அறிந்ததை - வாழ்க்கை எனக்கு அறிவித்ததை - திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். வந்தவன்தான் போவான். நான் வந்தவனும் இல்லை; போகிறவனும் இல்லை!

2.ஓர் எழுத்தாளன் எழுத்தை மட்டுமே நம்பிப் பிழைக்க முடியும் என்று நம்புகிறீர்களா?
பிழைப்பு என்றாலே ரொம்பச் சிரமமான காரியம்தான். 'என்ன பிழைப்பு?’ என்பது அலுப்புக் குரல். இலக்கணப்படிப் பார்த்தால், பிழைப்பு என்பது குற்றம் என்றும் பொருள்படும். எழுத்தை வெறும் பிழைப்பாகக்கொள்வது ஒரு குற்றமே. பிழைக்க முடியுமா என்பதல்ல; கூடாது என்பது என் கொள்கை. என்னைப் பொறுத்தவரை எழுதுவதற்கு எனக்குக் காசு தருகிறார்கள். ஆனால், நான் எழுதுவதே காசுக்காக அல்ல. கல்லடி கிடைத்தாலும் நான் எழுதுவேன். எழுத்து, காசு தராவிட்டால்தான் என்ன? பிழைப்புக்கு வேறு ஏதேனும் தொழில் செய்வேன். எழுத்து எனக்கு சீவனமல்ல; அது என் ஜீவன்!
3.தனித் தமிழில் எழுதுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அதில் யாரும் எழுதுவதில்லையே! எழுத வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஆசைக்கு ஒரு கடிதம், ஒரு கட்டுரை எழுத சிலர் முயலலாம். கதை எழுத முடியாது. கதை என்பது, இன்றைய வாழ்வின் பிரச்னை. இந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழனுக்குப் பிரச்னை, தமிழின் தனிமையல்ல!

4. தங்கள் மனத்தைக் கவர்ந்த எழுத்தாளர் யார்? விமர்சகர் யார்?
கவர்ச்சி என்பதே ஒன்றின் வளர்ச்சி பற்றிய பிரச்னை. சின்னப் பிள்ளைக்கு, மண் பிடிக்கும், வாலிபனுக்கு, பெண் பிடிக்கும். வயது முதிர்ந்தால் அவரவர் வளர்ச்சிக்கு ஏற்ப கவர்ச்சிகள் பேதப்படும். அதே போல் எனது ரசனை வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு காலத்தில், ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொருவரைப் பிடித்திருந்தது; பிடிக்கிறது. ஏதோ நீங்கள் கேட்டதற்காகச் சொல்வது என்றால்,     டால்ஸ்டாய் என்பேன். இந்தக் கவர்ச்சிக்குக் காரணம் கேட்பீர்களோ? என் வளர்ச்சிதான். விமர்சகரா? நானறிந்தமட்டில் அப்படி ஒருவர் இங்கே இல்லை ஐயா.
5.நீங்கள் ஏன் தொடர் கதைகள் எழுதுவதில்லை?
நான்தான் தொடர்ந்து கதை எழுதி வருகிறேனே! தொடர் கதை என்று இலக்கியத்தில் ஒரு பிரிவு கிடையாது. மேல் நாட்டில் மிகப் பெரிய எழுத்தாளர்களின் நாவல்களைக்கூட சில பத்திரிகைகள் வசதிக்காக அவ்விதம் பிரசுரித்தது உண்டாம். எனினும், அவை தொடர் கதைகள் என்பதற்காகப் பாராட்டப்படவில்லை. இங்கேயோ அது பெரும்பான்மை வாசகரை மயக்கும் ஒரு தந்திரமாகவே கையாளப்பட்டு வருகிறது. பத்திரிகைகளோ, வாசகரோ என்னிடம் அதை எதிர்பார்க்கவில்லை. எனக்கும் அதில் பழக்கமோ, விருப்பமோ இல்லை!
6.ஜனரஞ்சகமாக எழுதக் கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஆம். ஜனங்கள் வளர்ந்துகொண்டே இருப்பவர்கள். வளர்ந்துகொண்டிருக்கும் ஒன்றின் அருகே குறிப்பிட்ட ஒரு வளர்ச்சிக்குச் சமமாகப் போய் நின்றுவிட்டால், நாளைக்கு நாம் குறைந்துவிடப் போகிறோம் என்று அர்த்தம். ஜனங்களை விட்டு ஒதுங்கிவிடவும் கூடாது; கலந்துவிடவும் கூடாது. எப்போதும் ஓர் அடி முன்னே சென்றால்தான் ஜனங்களை இழுத்துச் செல்லவும் முடியும். அவர்கள் எதை வேகமாக விரும்பி ஏற்கிறார்களோ, அதை அவர்கள் அதே வேகத்தோடு வீசியும் எறிகிறார்கள். ஜனரஞ்சகம் என்ற பெயரால் என் எழுத்துக்கள் எறியப்பட வேண்டாம் என்றும் நான் நினைக்கிறேன்!
7.தாங்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் பங்கு கொண்டிருக்கிறீர்களா? அதனால் உங்கள் எழுத்து பாதிக்கப்படுகிறதா?
நான் ஒரு கம்யூனிஸ்ட். வாழ்க்கையின் எத்தனையோ பாதிப்புகளினால்தான் எழுத்தே உருவாகிறது. பாதிக்கட்டுமே!
8.ஓர் எழுத்தாளன் என்ற முறையில் தமிழ்ப் பட உலகைப் பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன?
நான் தமிழ்ப் படம் பார்த்து மூன்று வருஷம் ஆகிறது. ஓர் எழுத்தாளன் என்ற முறையில் அபிப்பிராயம் சொன்னால்... வேண்டாம் சார், விடுங்கள்!
9.திரைப்படங்கள் எதற்கேனும் எழுத உத்தேசித்திருக்கிறீர்களா?
எழுத உத்தேசமில்லை; எடுக்க உத்தேசம் உண்டு. அப்போது ஒருவேளை எழுதலாம்!
10.உங்கள் மாத வருமானம் என்ன? அது போதுமானதாக இருக்கிறதா? இல்லையென்றால் பற்றாக்குறைக்கு என்ன செய்து சமாளிக்கிறீர்கள்?
வாழ்க்கை ஐம்பது ரூபாயிலும் இருக்கிறது, நூறு ரூபாயிலும், ஆயிரம் ரூபாயிலும் இருக்கத்தான் செய்கிறது. நான் வாழ்க்கை வண்டியில் எல்லா 'கிளாஸ்’களிலும் பிரயாணம் செய்திருக்கிறேன். இன்றைக்கு எனக்கு ரூ.350-ல் தாங்குகிறது. நாளைக்கு முடியாவிட்டால், வேறு 'கிளாஸு’க்கு இறங்கி விடுகிறேன். முடிந்தால் உயரே போவது. ஆனால், கடன் வாங்க மாட்டேன். பொருளாதார வாழ்க்கை என்பது, வாழத் தெரிந்தவர்களுக்கு ரொம்பச் சாதாரணமானது. பொருளாதார வீழ்ச்சியும் சரி, உயர்வும் சரி ஓர் எழுத்தாளனின் வீழ்ச்சியோ உயர்வோ ஆகாது. அவை யாவும் அனுபவங்கள் அல்லவா? எனக்குப் பிரச்னை, என்னுடைய ஆன்மிக வாழ்க்கையும், பிறருடைய சமூக வாழ்க்கையும்தான். பிரச்னைகளுக்குப் பற்றாக்குறை ஏது?

தமிழின் மகத்தான எழுத்தாளர் ஜெயகாந்தன் ஐயா அவர்களுக்கு அஞ்சலி


”எனக்கு நானே கடவுள்
எனக்கு நானே பக்தன்
என் வாழ்நாள் எல்லாம் திருநாள்
மரணம் எனக்கு கரிநாள் ”

தமிழின் மகத்தான எழுத்தாளர் ஜெயகாந்தன் ஐயா மறைந்துவிட்டார், எத்தனை கொண்டாட்டமான மனிதர்,எத்தனை மகத்தான படைப்பாளி, தன் பலம் பலவீனங்களை எக்காலத்திலும் மறைக்காத ஒரு அபூர்வமான மனிதர், மாறும் காலத்துக்கேற்ப தான் தன் கொள்கைகளில் மாற்றம் கொண்டதைக் கூட தயக்கமின்றி ஒப்புக்கொண்ட முன்னுதாரண மனிதர்.

மானுடத்தையும்,பெண்ணியத்தையும், தன் படைப்பிலும் வாழ்விலும் போற்றிப் பேணிய கலைஞன், வையத் தலைமை கொள் வட்டாரத் தலைமையுடன் நின்று விடாதே!!! என்று அறிவுறை சொன்னவர். எளியாரின் தாழ்வு மனப்பான்மையை அறவே விரட்டிய நிபுணர்.பூர்ஷுவாக்களின் மேட்டிமைத் திமிரைக் கூட அவர் நாணச்செய்து கரைத்து திருத்தலாம் என்று தன் படைப்பில் உரைத்தவர்,உணர்த்தியவர்.

ஒவ்வொரு கனமும் வாழ்வை ரசித்து வாழ்ந்தவர்,வாழ்வை ரசித்து வாழ முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். அவரின் மறைவு மிகவும் பெரிய இழப்பு, அவர் தம் தனித்துவம் நிறைந்த படைப்புகளில் என்றும் வாழ்வார்.அவர் படைப்புகளுக்கு என்றும் அழிவே கிடையாது.அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்தனைகள்.

அவரின் படைப்புகளை நினைவு கூருகையில் அதிகம் பேர் பாராமல் போன ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்னும் திரைப்படம் பற்றிய என் பழைய பதிவை இங்கே பகிர்கிறேன்.
http://geethappriyan.blogspot.ae/2014/12/1978.html

எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுத்துலகப் படைப்புகளை நம் வீட்டில் தாத்தா,பாட்டி,அம்மா,அப்பா,என பேதமின்றி வாசித்திருப்போம், அவரின் திரைப்படைப்புகளும் அவரின் இலக்கியம் போன்றே மிகவும் தரமானவை, ஒரு நூலை எப்படி படமாக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணங்கள் அவை, ஜெயகாந்தனின் உன்னதமான திரைப்படைப்புகள் இங்கே,

1 உன்னைப்போல் ஒருவன், 1965 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் டிவிடி பிரதி எங்குமே கிடைப்பதில்லை.

2 யாருக்காக அழுதான் திரைப்படத்தின் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.

3 சில நேரங்களில் சில மனிதர்கள் யூட்யூபில் பார்க்கக் கிடைக்கின்றது டிவிடி பிரதியும் கிடைக்கின்றது

4 எத்தனை கோணம் எத்தனை பார்வை திரைப்படத்தின் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.

5 புதுசெருப்பு கடிக்கும் திரைப்படத்தின் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.

6 ஊருக்கு நூறு பேர் கதையைஇயக்குனர் லெனின் படமாக்கி அது தேசிய திரைப்படவிழாவில் கலந்து கொண்டது அதன் டிவிடி பிரதி எங்குமே கிடைப்பதில்லை.

7சினிமாவுக்கு போன சித்தாளு கௌதமன் இயக்கத்தில் வெளியானது,அதன் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.

8 ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் யூட்யூபில் பார்கக் கிடைக்கிறது
ஜெயகாந்தன் ஞானபீடம் பரிசு பெற்ற நாம் வாழும் காலத்தின் மாபெரும் படைப்பாளி. பொதுவுடமை புரட்சி சிந்தனையாளர். இலக்கியம் மற்றும் சினிமாவில் தன் முத்திரையைப் பதித்தவர். இப்படி பலச் சிறப்புகள் இருந்தும் அவர் இயக்கிய திரைப்படங்களை நாம் தேடிப்பார்க்க வழியின்றி இருப்பது எத்தனை அவமானம் பாருங்கள்.இனியேனும் அவரது திரைப்படைப்புகளை ஆவணப்படுத்தி ரசிகர்கள் காண வழி செய்ய வேண்டும்.

நமக்கு வந்தால் ரத்தம்!!!


செம்மரம் வெட்டுகையில் பிடிபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் அநியாயமாக பாய்ண்ட் ப்ளாங்கில் வைத்து கொலை செய்யப்பட்டது நிச்சயம் கண்டிக்கத்தக்கதே,அதே சமயத்தில் இங்கே தமிழன் என்றாலே எல்லா மாநிலத்தவனுக்கும் தொக்கு தான்,தெலுங்கர்களை அடிக்க வேண்டும்,தெலுங்கர்களை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்,திருப்பதிக்கு தமிழன் சாமி கும்பிடப் போகக்கூடாது என கோஷம் கேட்கத்துவங்கிவிட்டது.


An eye for an eye only ends up making the whole world blind.
கண்ணுக்கு கண் எடுப்பேன் என்று பழிவாங்கக் கிளம்பினால் உலகே குருடாகிவிடும் என்பது அண்ணல் காந்தியின் முக்கியமான சித்தாந்தம்.இதை இன்றைய எல்லா முக்கிய பிரச்சனைகளுடனும் பொருத்திப் பார்த்து தீர்வு காணலாம்.

முகலிவாக்கம் கட்டிட விபத்து நிகழ்ந்து  வரும் ஜூன் 28 வந்தால் ஒரு வருடமாகிறது, அந்த இடிபாடுகளில் சிக்கி 61 பேர் [அரசு தரும் புள்ளி விபரம்] இறந்தனர்.

பலியானோரில் சுமார் 35 பேர் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த நேர்மையான கடும் உழைப்பாளிகள். யாருமே திருடர்களல்ல, ஆனால் அவர்களின்  அகால மரணத்துக்குப் பின்னான,இறுதி மரியாதையும் அதற்கு கிடைத்த நீதியும் கண்ணியமாக இருந்ததா? அவர்களுக்கு கிடைத்த நிவாரணம் தான் என்ன? அது முழுதாக அவர்களுக்குப் போய்ச் சேர்ந்ததா?அதை யாரேனும் கேள்வி கேட்டோமா?

அன்று சம்பவ இடத்துக்கு மாநிலம் விட்டு மாநிலம் வந்து பார்வையிட்டார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.தன் ஸ்ரீகாகுள மாவட்ட கட்டிடத் தொழிலாளர்களுக்கு 5 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.நியாயமான விசாரணைக்கு உத்தரவிடுமாறு தமிழக அரசைக் கேட்டுவிட்டுச் சென்றார்.

தமிழக அரசு அந்த இறந்த அப்பாவி கடும் உழைப்பாளிகளுக்கு என்ன தந்தது? அந்த தனி மனிதனின் பேராசையினால் நிகழ்ந்த பேரிடர் சம்பவத்துக்கு காரணமான ஊழல்அதிகாரிகள் ,கவுன்சிலர்,அமைச்சர் , கட்டிடம் கட்டிய நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அதன் பொறியாளர்கள் தண்டிக்கப்பட்டனரா?!!! 

அன்று ஒப்புக்கு கைது செய்யப்பட்ட ப்ரைம் ஸ்ருஷ்டி நிறுவனர் மற்றும் பொறியாளர்கள் 6 பேரும்   இன்று வெளியில் சுதந்திரமாக நடமாடுகின்றனர். அவர்கள் பெயில் வாங்க நீதிபதிகள் இறந்தவர்களின் தலைக்கு நிர்ணயித்த இழப்பீட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா?தலைக்கு ஒரு லட்சம். இடிந்து விழுந்த ட்ரஸ்ட் ஹய்ட்ஸின் ஒரு டபுள் பெட்ரூம் ஃப்ளாட்டின் விலை அது. அந்த 61 லட்சத்தை கட்டிய அக்கயவர்கள் எளிதாக பெயில் வாங்கி விட்டனர். எத்தனை அராஜகம் பாருங்கள்.
Add caption

இந்த சம்பவத்துக்கு கண் துடைப்புக்கு மட்டுமே அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் தனி நீதிபதி என்ன கண்டுபிடித்து கிழித்தார்?!!! யாருக்கேனும் தெரியுமா?!!!

ஆந்திர போலீஸிலும் அயோக்கியர்கள் உண்டு,தமிழக போலீஸிலும் அயோக்கியர்கள் உண்டு,அதற்கு முக்கிய உதாரணமாக வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் நடந்த 5 பீகார் மாநிலத்தவரின் என்கவுண்டர்களைச் சொல்லலாம்.வங்க தேச எல்லையில்  நம் எல்லைக் காவல் படையினர் ஆண்டாண்டு காலமாய்ச்  செய்யும் படுகொலைகள் பற்றி தேடிப் படியுங்கள்.

ஒருக்கட்டத்தில் குற்றங்கள் அதிகரித்து தீர்க்கமுடியாமல் போகையில் தங்கள் பாதுகாப்பு எல்லையை நிர்ணயம்   செய்ய   மனிதத் தன்மையின்றி இது போல படுகொலைகளை நிகழ்த்துகின்றனர்.  மாநில எல்லை,நாடுகளின் நில எல்லை என எல்லாவற்றுக்கும் இதுபொருந்தும்.இந்திய வங்கதேச 4000 கிமீ நீள எல்லைக்குள் அத்துமீறி நுழையும் வங்கதேசத்தவரை இப்படித்தான் நம் எல்லைக்காவல் படைகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்று வருகின்றனர். இலங்கை சிங்கள கடற்படையினர் இராமேஸ்வரம் மீனவர்களை இப்படித்தான் மனிதாபிமானமின்றி சுட்டுக்கொன்று வருகின்றனர்.  யார் இங்கே ஒழுங்கு?!!!

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு எழுதப்படாத விதி ஒன்று உண்டு. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல,அப்பாவி ஏழைகள் தான் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிறேன் என திடீர் திடீரெனக் கிளம்புபவர்களின் மிக எளிதான இலக்கு. இதற்கு தார்மீகப் பொருப்பேற்கவேண்டிய ஊழல் அரசியல்வாதிகள் இத்தனை ஆண்டுகாலமாகியும் இதற்கு தீர்வு காணாதது தான் தண்டிக்கப்பட வேண்டிய பெருங்குற்றம்.

தமிழக அரசு இனியேனும் மரம் வெட்டச் சென்று பலிகடாக்கள் ஆகும்  திருவண்ணாமலை,விழுப்புரம்,வேலூர் மாவட்ட மக்களுக்கு சிறப்பு பொருளாதார மணடலங்கள் அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும். என்ன தான் மாற்றுத்தொழிலுக்கு அரசு ஏற்பாடு செய்தாலும் , இந்த ஈஸி மனி ஆசைக்கு மக்களை பலிகடா ஆகாமல் தடுக்க பல ஆண்டு காலம் அரசு திட்டங்கள் தீட்டி உழைக்க வேண்டும்,தன்னார்வமுள்ள தொண்டு நிறுவனங்களும் அரசுடன் கூட்டு சேர்ந்து உழைக்கலாம்.இது நீண்ட காலம் கழித்தே பலன் தரும், 80களில் சாராய சாம்ராஜ்ஜியமாக இருந்த திருநீர்மலை போன்ற ஊர்கள் இப்போது சிப்காட்கள் ,பெரிய சாலைகள், அமைந்து நல்ல குடியேற்றப் பகுதியாக வருவாயுள்ள ஊராட்சியாக திகழ்வது ஒரு நல்ல உதாரணம்.

செம்மரம் கடத்தல் பின்னணியும், தடுக்க வழிமுறைகளும் பற்றிய் இந்த ஆந்திர மனித உரிமை ஆர்வலர்களின் முக்கியம் வாய்ந்த ஆராய்ச்சி கட்டுரை, ஏற்கனவே சென்ற ஆண்டு ஷேஷாச்சலம் வனசரகத்தில் நடந்த 8 என்கவுண்டர்களைப் பற்றி விரிவாக பேசுகிறது.

நம்மை விட ஆந்திர மனித உரிமை ஆர்வலர்கள் நடுநிலையுடன் இந்த அநியாய என்கவுண்டர்களில் கொல்லப்பட்டோருக்காக நியாயம் கேட்டு போராடி வருகின்றனர், அதை  தயவு செய்து படியுங்கள் ,  அதன் பின்னர் இங்கே இருக்கும் தெலுங்கர்களை ஏசுங்கள். இங்கே இருக்கும் தெலுங்கர்களை அடித்தால் ஹைதராபாதில் இருக்கும் தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடியுமா?!!!
http://www.academia.edu/7…/who_are_the_Red_Sander_Smugglers_

செம்மரம் : குருதியில் கரைந்த பேராசை.
https://www.facebook.com/photo.php?fbid=785756078174487&set=a.139788059437962.35655.100002203075390&type=1&fref=nf

செம்மரக் கடத்தல் மாஃபியா பற்றி தினமலரில் சென்ற ஆண்டு வெளியான முக்கிய கட்டுரை
http://www.dinamalar.com/news_detail.asp?id=993420

கே.பாலசந்தரின் டூயட் திரைப்படமும் ஷங்கரின் பாய்ஸ் மற்றும் அந்நியன் திரைப்படங்களும்


இயக்குனர் பாலசந்தரின் டூயட்[1994] படத்தில் வரும் குளிச்சா குத்தாலம் பாடலுக்கு முன்பாக பிரபு மீனாக்‌ஷியிடன் கற்பனையாக தன் காதலை வெளிப்படுத்தும் காட்சி வரும்.

அதில் பிரபு மீனாக்‌ஷியிடம்
நீ என்னைக் காதலிக்க நான் என்ன தான் செய்யனும்?!!
மவுண்ட் ரோட்டில் துணி இல்லாமல் ஓடட்டுமா?
அவர் தொடர்ந்து மறுக்க

ஏன் என்னை உனக்கு பிடிக்கலை?ஒரு சாலிட்டான ரீசன் சொல்லு அஞ்சலி, என்கிறார்.

இதை இயக்குனர் ஷங்கர் தன் பாய்ஸ் [2003] படத்தில் , சித்தார்த்தின் காதலை ஹரிணி ஏற்க வைக்க மவுண்ட் ரோடில்அவரை ஆடையின்றி ஓட வைத்து நீண்ட காட்சியாக எடுத்து விட்டார்.


அந்நியன் [2005] படத்தில் டூயட்டில் பிரபு சொன்ன அதே வசனத்தை நீ என்னை ஏன் காதலிக்கவில்லை என்பதற்கு ஒரு காங்க்ரீட் ரீசன் சொல்லு நந்தினி!!! என்று சதாவிடம் அம்பி கெஞ்சுவதாக ஒரு காட்சியும் வைத்து விட்டார்.

சினிமாவில் புதிய படைப்புகளுக்கு இன்ஸ்பிரேஷன்கள் எப்படியெல்லாம் கிடைக்கிறது பாருங்கள்.இனியேனும் டைரகடர் சீன் சொல்லு என்றால் கஷ்டப்பட்டு உலக சினிமா எல்லாம் பார்த்து சீன் சொல்ல வேண்டாம்,ஏற்கனவே வெளியான நம் சினிமா ஜாம்பவான்களின் எல்லா முத்திரைப் படங்களுமே ரெஃபரன்ஸ் மெட்டிரியல் தான்.அதிலிருந்து கௌரவம் பார்க்காமல் உருவி சீன் சொன்னால் போதும்.

இந்திய சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு

இது ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு அவர்களின் வலைத்தளம்.


ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு அவர்கள் தமிழ்நாட்டில் மதுராந்தகத்தில் பிறந்து,லயோலா கல்லூரியில் வேதியியல் முடித்து,புனே திரைப்படக்கல்லூரியில் 1971 ஆம் ஆண்டில் ஒளிப்பதிவில் பட்டயம் பெற்றவர். அதிக மலையாள  சினிமாக்களுக்கு ஒளிப்பதிவு செய்ததால் அங்கேயே திருவனந்தபுரத்தில் தங்கிவிட்டார்.

இவர் 4 முறை கேரள மாநில விருதுபெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளர். இவர் அதிகமாக மலையாளத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தாலும் தமிழ், இந்தி, அரபி, ஆங்கிலம் என 125 படங்களுக்கு  திரைப்படங்கள் பங்காற்றியுள்ளார்.

இவர் கலை சினிமாக்களுக்கு அதிகம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜான் ஆபிரஹாம்,ராமு காரியத், பரதன், கே.ஜி.ஜார்ஜ், எம்.டி.வாசுதேவன் நாயர், பி.என்.மேனன்,ஐ.வி.சசி,சேது மாதவன், சசி குமார், மோகன்,ஹரிஹரன்,மணிரத்னம் போன்ற இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார்.

இவரின் புனே திரைப்படக்கல்லூரி சீனியர் மாணவர்களில் பாலு மகேந்திரா,ஜான் ஆப்ரஹம்,ராமு காரியட்,மணி கவுல் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்,இவரது படிப்புக்காலத்தில் உடன் பயின்ற சக நடிப்பு மாணவி ஜெயாபச்சன்.

ஒளிப்பதிவில் விசாலமான அறிவு கொண்டவர்.மலையாளத்தில் முதல் சினிமாஸ்கோப்,முதல் 70 எம் எம் முதல் 3டி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், இவரின் படங்களில் அநேகம் தேசிய விருதை வென்றிருக்கிறது. இவரின் ஒளிப்பதிவில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் ஒரு வடக்கன் வீரகதா,படயோட்டம்,ரதிநிர்வேதம் போன்றவை.

மேலும் ஒரு முக்கியத் தகவல் இவர் அகில இந்திய அளவில் முத்திரை பதித்த ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் மூத்த சகோதரரும்,அவருக்கு ஒளிப்பதிவு சொல்லித் தந்த குருவும் ஆவார்.

 படிப்பறிவும் பட்டறிவும் கொண்ட இவரது ப்ளாக் இன்றைய சினிமா மாணவர்களுக்கும் ,சினிமாவில் இணையத் துடிப்பவர்கலுக்கும் சினிமா ஆர்வலர்களுக்கும் ஒரு சிறந்த ரெஃபரன்ஸ் மெட்டீரியல்.அதை அவசியம் படியுங்கள்.ஒரு நீண்ட கால அனுபவம் கொண்ட ஆசான் சமூக வலைத்தளத்தில் இயங்குவது நமக்கு கொடுப்பனை.அதை கவனமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
அவர் ஃபேஸ்புக்கில் இருக்கிறார் 

அவரின் முக்கியமான ஆங்கில பேட்டி இங்கே

தமிழ் சினிமாவில் ஆடியோ பைரஸி ஒரு பார்வை மற்றும் ஜீன்ஸ் ஆடியோ கேஸட்டில் ஷங்கர் செய்த புதுமை

80 90களில் ஆடியோ பைரஸி உச்சத்தில் இருந்தது, ஒரிஜினல் ஆடியோ கேஸட் போன்றே தயார் செய்யப்பட்ட போலி ஆடியோ கேஸட்டுகள் ஒரிஜினல் போன்றே விற்பனைக்கு வந்து சக்கை போடு போட்டன.அதை தவிர்க்க ஆடியோ கேஸட்டுகள் தக தகக்கும் ஹாலோக்ராம்களுடன் வந்தன.போலிகள் அதையும் ஊதித்தள்ளி ஒரிஜினலை விட பிரமாதமாக ஹாலோகிராம் தயார் செய்தனர்.

எல்லா கேஸட்டிலும் "Home Taping Is Killing Music", Piracy Is Theft,போன்று எலும்புக்கூடு படத்துடன் என்னன்னவோ வாசகங்கள் அச்சிட்டுப் பார்த்தனர்.எதுவும் வேலைக்கு ஆகவில்லை,

பணம் படைத்த ரசிகர்களும், ம்யூசிக்கல்ஸ் கடை வைத்திருந்தவர்களும் 150 ரூபாய் தந்து எல்.பி.ரெகார்ட் வாங்கி வைத்துக் கொண்டனர்,அதில் போலிகள் கொண்டுவர முடியவில்லை.தவிர turn table music system மிகவும் செலவு பிடிக்கக் கூடியதும்,இடவசதி கோரக்கூடியது என்பதால் சமூகத்தில் நடுத்தர மக்களிடம் பிரபலமாகவில்லை.

[போலி டாஸ்மாக் சரக்கை எப்படி குடித்தவுடன் சொல்லிவிடுகின்றனரோ அதே போல போலி ஆடியோ கேஸட்டை அது பர்மா பஜார் கேஸட் என்று ஒரு பாடல் கேட்டவுடனே சொல்லிவிடலாம்,ஒலித் தரம் படு கேவலமாக இருக்கும்,chillness சுத்தமாக இருக்காது, http://www.quora.com/What-is-chillness-in-music-or-sound-while-we-are-hearing-it-in-a-headset ,ட்ராக்கள் மோனோ தரத்தில் இருக்கும்,ஆடியோ டேப் ஹெட்டில் சிக்கும்,அப்புறம் அழத்துவங்கும்]
படம் நன்றி இளையராஜா ஃபோரம்

இதைக் களைய பிரமீட் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை வெளியீடுகள் கனமான soft, flexible polypropylene ப்ளாஸ்டிக் பெட்டிகளில் வந்தன.இது முந்தைய Clear Plastic Audio Cassette ஐ விட கனமாக இருந்தது,ஷோகேஸில் அடுக்குவது சிரமமாக இருந்தது, அதையும் சில காலங்களில் வெற்றிகரமாக கற்று அதே போன்றே போலி ஆடியோ கேசட்டுகள் வரத் துவங்கின.
படம் நன்றி இளையராஜா ஃபோரம்

அது தவிர அப்போது தெருவுக்கு தெரு இருந்த ம்யூசிக்கல்ஸ் கடைகளில் 60,90 எம்ப்டி கேஸட்டுகள் தந்து விரும்பிய பட்டியல் தந்து பாடல் பதிவு செய்து  அநேகம் பேர் இசை கேட்டனர்.அது சிக்கனமாகவும் இருந்தது.

இருந்தும் மனம் தளராத ஆடியோ கேஸட் நிறுவனங்கள். ரசிகர்களை ஒரிஜினல் ஆடியோ கேசட் வாங்க வைக்க கார்,வீடு இசைஞானியின் கையால் பரிசு என  பரிசுக் குலுக்கல் கூப்பன்களை ஒரிஜினல் ஆடியோ கேஸடில் இணைத்து வாங்கத் தூண்டினார்கள்.[அதை நிறைவேற்றினரா?தெரியாது]
ஜீன்ஸ் ஆடியோ கேஸட் விலை ரூ50

98 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜீன்ஸ் ஆடியோ கேஸட்டுகள் வெளியாகின,அப்போது இயக்குனர் ஷங்கர் ,இந்த ஆடியோ பைரஸியை தடுக்கும் விதமாகவும்,அப்போது சந்தைக்கு வந்த நியூபோர்ட்  ஜீன்ஸுடன் விளம்பர ஒப்பந்தம் செய்து ஜீன்ஸ் ஆடியோ கேஸட் கவருக்கு ஜீன்ஸ் பேண்டில் வரும் பாக்கெட் வடிவத்தில் உறை அமைத்து  50 ரூபாய்க்கு விற்பனை செய்தார். அது சினிமா ஆர்வலர்களுக்கு இன்றும் நினைவிருக்கும். [அப்போது 50 ரூபாய் தான் கேஸட்டுக்கு அதிகமாக ரசிகர்கள் தந்த விலை]

சமீபத்தில் உத்தமவில்லன் ஆடியோ வெளியீட்டு விழாவில் அந்த மாதிரி வடிவ தட்டை உள்ளே கொண்டு போகச் சொன்ன கமல்,இதெல்லாம் விற்பனை ஆவதே இல்லை,எல்லாம் டவுன் லோடு தான் என்று,படத்தின் பாடல்களை வெளிப்படையாக அப்லோட் செய்து புதுமை செய்தார்.
ஆடியோ ரிலீஸ் அழைப்பிதழ் நன்றி ஒளிப்பதிவாளர் ராமசந்திர பாபு

இப்படியெல்லாம் இசை கேட்டோம்.இன்று பாடல் கேட்க எத்தனையோ வழி வகை இருக்கிறது,புதுப்பாடல்கள் இலவசமாக கேட்க வழியிருக்கிறது.தினம் ஒரு படத்தின் பாடல் வெளியாகி சீப்படுகிறது.அப்படியும் படத்தில் பாடலை குறைக்கவோ அல்லது இல்லாமல் செய்யவோ யாருக்கும் மனம் வரவில்லை!!!

கேஸட் கவர் படம் நன்றி
ஒளிப்பதிவாளர்Ramachandra Babu​ [அவர் தளத்தில் ஜீன்ஸ் படத்தின் அழைப்பிதழைப் பார்த்தவுடன் தான் இது நினைவுக்கு வந்தது]
@Rajnikanth Mohan
http://packedinindia.com/2012/09/27/retro-maal-jeans-movies-cassette-cover/
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)