அடூரின் எலிப்பத்தாயம் திரைப்படம் மற்றும் நடிகர் கரமன ஜனார்தனன் நாயர்
ரங் ரஸியா (rang rasiya ) (2008)
19 ஆம் நூற்றாண்டு ஓவியரான ராஜா ரவிவர்மாவின் வாழ்க்கை பல ஏற்றத் தாழ்வுகள், இன்ப துன்பங்கள் நிரம்பியது, அவர் மீதான புனித பிம்பம் கட்டமைக்கப்பட்டு அது நிலைத்துவிட்டதால் அவர் மீதான உண்மையான மதிப்பீடுகள் நம்மிடம் இல்லை, இத்தனைக்கும் அவர் வரைந்த இறைவியர் படம் இல்லாத வீடுகள் குறைவு
ராஜா ரவி வர்மாவின் வாழ்க்கை வரலாற்று நாவல், மராத்தி எழுத்தாளர் ரஞ்சித் தேசாய் எழுதி 1960களில் வெளியானது, அதை இயக்குனர் கேத்தான் மேத்தா ( மங்கள் பாண்டே படத்தின் இயக்குனர்) திரைக்கதை வடிவம் தந்து இயக்கி ரங் ரஸியா என்று இந்தியிலும், colours of passion என்று ஆங்கிலத்திலும் உருவானது, இது 2008 ஆம் ஆண்டு லண்டன் திரைப்பட விழாவில் வெளியானது, பொருளாதார நெருக்கடியால் அதன் பின் 6 வருடங்கள் கழித்தே 2014 ல் இந்தியாவில் வெளியானது
இப்படத்தில் ரவிவர்மாவின் பிறப்பு, வளர்ப்பு, ஐரோப்பிய தைல பாணி ஓவியத்தின் மீதான நாட்டம்,அப்பாணியில் புராதான கதை மாந்தரையும், இந்து கடவுளரையையும் முயன்று பார்த்து அவர் பெற்ற நிபுனத்துவம் , அதனால் அவர் பெற்ற அகில உலக கவனம், அவர் வரைந்த ஓவியங்கள் உருவான பின்னணி, அவர் சந்தித்த சங்பரிவார் அமைப்புகளின் அச்சுருத்தல்கள், தாக்குதல்கள், வழக்குகள் , இவரின் ஓவித்திற்கான மாடல்கள், அவர்கள் மீதான மையல், பெற்ற விருதுகள், இவரது இறைவியர் ஓவியங்களை வெற்றிகரமாக லித்தோக்ராஃப் பிரதிகளாக சந்தைப் படுத்திய விதம், ப்ளேக் நோய் இந்தியாவில் பரவிய போது, இவர் இறைவியரை ஆடையின்றி வரைந்தது தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டு இவர் அடித்து துவைக்கப்பட்டு இவரின் அச்சுக்கூடம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம், இவர் இந்திய திரை மேதை பால்கேவுக்கு முதல் திரைப்படம் உருவாக பொருளுதவி செய்தது என நிஜ சம்பவங்களை மிகுந்த அழகியலுடனும், காதல் காட்சிகளில் சரசம், விரசம் ததும்பவும் படமாக்கியிருக்கிறார் கேத்தான் மேத்தா
ஜிஸ்ம் புகழ் நடிகர் ரந்தீப் ஹூடா ராஜா ரவி வர்மாவாக தோன்றியுள்ளார்,
நடிகை நந்தனா சென் மிகவும் துணிந்து இவரின் காதலி சுகந்தா வேடத்தில் தோன்றியுள்ளார், அவரின் துணிச்சலுக்கும் அற்பணிப்புக்கும் இந்த காஹே சத்தாயே ரெப்பியா என்னும் பாடலே சான்று
ரவிவர்மாவின் வாழ்க்கையை இயக்குனர் லெனின் ராஜேந்திரன் இயக்கி 2011ல் மலையாளத்தில் வெளியான மகரமஞ்சு ஒரு முழுமையில்லா முயற்சியாக அமைந்தது, அதில் ரவி வர்மாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை விட அவரின் காதல் களியாட்டங்களுக்கே முக்கியத்துவம் இருந்தது, சந்தோஷ்சிவன் அதில் ரவிவர்மா, கார்த்திகா அவரின் காதலி சுகந்தா, காஸ்டிங்கில் சொதப்பிய படம், அதைவிட ரங்ரஸியா பல வகையிலும் முன்னோடியும், முழுமையான படைப்பும் ஆகும்.
இப்படத்தில் சந்தோஷ் சிவன், பல்கேரிய ஒளிப்பதிவாளர் Christi bakalov, rali raltchev ஆகிய மூவரின் ஒளிப்பதிவு இப்படத்தை நூற்றாண்டு காலம் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றால் மிகையில்லை,அதே போன்றே சந்தேஷ் ஷாண்டில்யாவின் இசையும்
காஹே சத்தாயே ரெப்பியா பாடல் இங்கே,வயது வந்த கலா ரசிகர்களுக்கு மட்டும்,
இவ்வருடம் மட்டும் ரந்தீப் ஹூடாவுக்கு சரப்ஜித், சுல்தான், லால்ரங், Do Lafzon Ki Kahani என நான்கு படங்கள் வெளியாகியுள்ளன, வித்தியாசமான சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் தன்னை அற்பணிக்கும் நடிகர் இவர், இவர் படங்களை தேடிப் பாருங்கள்.
https://youtu.be/shMisppv_yE
முழுப்படமும் யூட்யூபில் உண்டு,
டாரண்ட் இங்கே
https://torrentz.eu/fbec0ce7aba36def218f409b55fafc84eb2b1b48
இசையமைப்பாளர் ஔசப்பச்சன் தந்த நீ என் சர்க்க சௌந்தர்யமே
இசைஞானியின் கொக்கரக்கோ படத்தில் வரும் ,எஸ்பிபி பாடிய கீதம் சங்கீதம் பாடலை ஒருவர் மறக்க முடியாது,
அப்பாடலைப் படைப்பூக்கமாகக் கொண்டு பரதன் இயக்கி 1985ல் வெளியான காதோடு காதோரம் படத்தில் வரும் நீ என் சர்க்க சௌந்தர்யமே என்ற தாஸேட்டா மற்றும் லத்திகா பாடும் பாடல் இது.என்ன அற்புதமான பாடல் பாருங்கள்.
ஒரு படைப்புக்கு செய்யும் மரியாதை இப்படித்தான் ஆராதனையாக அமைய வேண்டும், அதை ஔசப்பச்சன் நன்கு உணர்ந்து இப்பாடலை படைத்திருப்பதைப் பாருங்கள்.இது அவரின் முதல் படம்.
படத்தில் நாயகன் மம்முட்டி ஒரு வயலினிஸ்ட், ஔசப்பச்சன் மாஷே அடிப்படையில் வயலினில் விற்பன்னர்,நாயகன் வாசிக்கும் வயலின் போர்ஷன்களை அப்படி பார்த்துப் பார்த்து இழைத்து அழகூட்டியிருப்பார், வயலினால் சிரிப்பார், வயலினால் அழுவார், வயலினால் உருக வைப்பார்,
இப்பாடலின் வரிகள் ஓஎன்வி குருப்
பாடல் இங்கே
https://youtu.be/w3bRoJzmiGc
காதோடு காதோரம் மலையாளப் பாடல்
காதோடு காதோரம் தேன்சோரும் மாமந்த்ரம் என்ற பாடல் மிக அற்புதமான படைப்பு,
https://youtu.be/zmZVL_seRRs
இதற்கு இயக்குனர் பரதன் அவர்கள் தான் இசை, ஓ என்வி குருப்பின் வரிகளில் பாடகி லத்திகா பாடும் இப்பாடல் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது, இதைக் கேட்கும் யாரும் இதை சித்ரா பாடியது என்றே நினைப்பார்கள்,
இதில் வரும் இசை பாணி நமக்கு ஜான்ஸன் மாஷேவையும், ரவீந்திரன் மாஷேவையும் நினைக்க வைக்கும், இவர்களின் இசையில் இசைஞானியின் தாக்கம் இருக்கும்,அவரை மிஞ்ச வேண்டும் என்ற வேகத்தை இருவரின் படைப்புகளில் நாம் காணமுடியும்.தவிர இயக்குனர் பரதன் இசைஞானியின் ரசிகரும் கூட.
கடினமான ஏற்ற இறக்கங்களில் லாவகமாக பயணித்துத் திரும்பும் ஒரு அமைப்பு கைகூடிய பாடல் , குழலும் யாழும் தந்தி, தோல் வாத்தியங்கள் ஒன்றை ஒன்று மிஞ்சும்.இருந்தும் உடன் பயணிக்கும் பேஸ் கிட்டாருக்கு நின்று வழிவிடும்.இப்பாடலைக் கண்ணை மூடிக் கேட்டு கரைந்து போவீராக
இப்பாடலை லயித்துப் பாடிய பாடகி லத்திகாவும் ஜென்ஸி போலவே மாத சம்பள வேலையே சாஸ்வதம் என ஒதுங்கிக் கொண்டார்,
இவர் இப்போது சுவாதித் திருநாள் கல்லூரியில் பேராசிரியர், இவர் பாடிய பல அருமையான பாடல்களின் க்ரெடிட்கள் பாடகி சித்ராவைச் சென்று சேர்வது ஒரு புரியாத புதிர், நன்கு உன்னிப்பாக கேட்கையில் வித்தியாசம் புலப்படும், இவர் பாடகி சித்ராவிற்கு சீனியர், இயக்குனர் பரதனின் பெரும்பாலான படங்களில் பாடியவர், என இவருக்கு பெரிய மறக்கடிக்கப்பட்ட பின்னணி உண்டு.இவரின் தி இந்து பேட்டி இங்கே
http://m.thehindu.com/features/cinema/unforgettable-lathika/article304237.ece
பருவராகம் படத்தின் இசையமைப்பாளர் ஹம்சலேகா பற்றி
இசையமைப்பாளர் ஹம்சலேகா தமிழில் சுமார் பத்து படங்கள் செய்திருப்பார், அதில் பருவராகம் சூப்பர்டூப்பர் ஹிட், இப்படத்தின் அத்தனை பாடல்களும் பட்டி தொட்டிகளிலெல்லாம் ஒலித்தது, அப்போது கேசட் பதிவு செய்பவர்களின் முக்கிய தேர்வு பருவராகம், இப்படத்தை பழைய தியேட்டர்கள் வருடா வருடம் செகன்ட் ரிலீஸ் செய்து கல்லா கட்டினர், எங்கு திரையிட்டாலும் கூட்டம் அலைமோதிய படம், ஹம்சலேகா இதில் 9 பாடல்கள் தந்திருந்தார்,பாடல் வரிகள் தமிழில் வைரமுத்து எழுதியிருந்தார்
இதில் எனக்கு மிகவும் பிடித்தவை
1. பூவே உன்னை நேசித்தேன்
2.கிளிகளே ராகம் கேளுங்களேன்
3.காதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
4.ஒரு மின்னல் போல இங்க
5.ஏ மாமா வண்டி ஓட்டக் கத்துக்குடு மாமா
6.மோசக்காரனா நான் வேஷக்காரனா?
7.ஒரு ஆணும் பெண்ணும் இட்டுக் கொள்ளும் முத்தம்
இது தவிர 2 சிறிய பாடல்களும் உண்டு,இதில் காதல் இல்லை என்று சொன்னால் பாடல் தாஸேட்டா பாடியது,ஒரு மின்னல் போல பாடல் ரமேஷ் பாடியது இவர் பின்னாளில் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் ஆனார்,
அவரின் அப்பா மாணிக்க விநாயகம், (இவரின் விழிகளில் அருகினில் வானம் மிக அற்புதமான பாடல். )
மற்ற எல்லா பாடல்களையும் எஸ்பிபி ,ஜானகி பாடி அசத்தினர்
பருவராகம் கன்னடத்தில் ப்ரேமலோகா என்ற பெயரில் வெளியானது, ஜூஹி சாவ்லாவின் அடுத்த வீட்டுப் பெண் போன்ற எளிமையான அழகும் படத்தில் திகட்டத் திகட்ட வந்த ரொமான்ஸ் காட்சிகளும் இப்படத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது, இப்படம் வெளியான ஆண்டு 1987, நான் முதலில் பார்த்தது 1989, அடுத்து ஒவ்வொரு வருடமும் எந்த தியேட்டர்களில் திரையிட்டாலும் போய் பார்த்திருக்கிறேன், தமிழில் இதே போல அடுத்ததாக நிகழ்ந்த ஒரு லவ் ரொமான்ஸ் மேஜிக் என்றால் அது செம்பருத்தி தான்.
நாட்டுக்கொரு நல்லவன் என்றொரு திராபை படம், சினிமா படங்கள் கூட போரடிக்கும் என அப்படம் பார்க்கையில் தான் முதலில் விளங்கியது, அதற்கும் இவர்தான் இசை, அதிலும் பாடல்கள் மிகஅருமையாக அமைந்தது.பார்க்கச் சகிக்காத ரஜினி படம், அதில் மற்றொரு காமெடி மிகுந்த பொருட்செலவில் உருவான இப்படத்தின் பெயரை உபயோகித்து விளம்பரத்துக்காக வீட்டுக்கொரு நல்லவன் (பப்பி லஹரி இசை) என்று ஒரு இந்தி டப்பிங் படத்தை தழுவி வெளியிட்டனர், அதை முந்தைய படம் தந்த உச்ச வெறுப்பில் ரஜினி ரசிகர்கள் கூட சீண்டவில்லை
ஹம்சலேகா பாரதிராஜாவின் கொடி பறக்குது(சேலை கட்டும் பெண்ணுக்கொரு) , மற்றும் கேப்டன் மகளுக்கு (ஏதோ உன்னிடம் இருக்கிறது) இசையமைத்தார்.ஆர்.வி.உதயகுமாரின் புதியவானம் படம் ( ராக்குயிலே கண்ணுல என்னடி கோவம்?), பி.வாசுவின் வேலை கிடைச்சிடுச்சு ( நஞ்ச புஞ்ச நம்ம மண்ணுக்கழகு ரெண்டு கண்ணுக்கழகு), போன்றவை, இவருக்கு கன்னட சினிமாவில் நாத ப்ரம்மா என்ற பட்டம் உண்டு.இவர் கரநாடகாவில் இசைப் பல்கலைக் கழகமும் துவங்கி நடத்தி வருகிறார்.
நம்ரதா கி ஸாகர் (namrata ke sagar) (2008)
இசைஞானி இசையில் மகாத்மா காந்தியின் நம்ரதா கி சாகர் என்ற பஜன் , இந்த ஹிந்தி பஜன் பாடலின் துவக்க வரிகளை
He Namrata ke sagar, teri apni namrata de
He bhagvan tu kabhi Madad ke liye aata hai?
இசைஞானி இதை எத்தனை கவனமாக உருக்கமாக ஆரம்பித்து வைப்பதைக் கேளுங்கள், உடன் இணைந்து தொடர்பவர் பண்டிட் பீம் சென் ஜோஷி,இந்த பஜனை அழகாக முடித்து வைப்பவரும் இசைஞானி தான்.
பின்னர் இதே துவக்க வரிகளை கவிதை போல வாசித்த அமிதாப் மிகவும் மிகவும் சிலாகிக்கிறார்.
இது ஆதித்ய பிர்லா குழுமத்தின் பெருமைமிகு தயாரிப்பு, ஆனால் எங்கும் அவர்கள் விளம்பரமில்லை, இந்த பஜனை காந்தி அவர்கள் பிர்லா குடும்பத்தினருடன் தங்கியிருக்கையில் இயற்றியது எனப் படித்தேன்,
இப்பாடலில் இசைஞானியின் பங்களிப்பு முக்கியமானது, 2008 ல் இது திருப்பதியில், நடிகர் மோகன்பாபு தலைமையில் வெளியாகியுள்ளது, இதை ஏன் அதிகம் பரப்புரை செய்யவில்லை எனத் தெரியவில்லை.இந்த தொகுப்பில் அஜய் சக்ரபொர்த்தியும் பாடியுள்ளார், அந்த 2 பாடல்கள் தேடிப் பகிர்கிறேன்
https://youtu.be/aqubTvPoyJw
புரவ்ருதம் ( puravrutham ) மலையாளம் (1988)
இயக்குனர் லெனின் ராஜேந்திரனின் புரவ்ருதம் puravrutham (1988) இடதுசாரி சிந்தனைகள் பேசிய அருமையான படம்,
நக்ஸலைட் புரட்சி உருவாவதற்கு முந்தைய கேரளத்தின் குக்கிராமத்தில் , தம் கூலியாட்களைச் சுரண்டிப் பிழைக்கும் முதலாளியை, கடைசி வரை எதிர்த்து நின்று போராடும் ஓர் உண்மை வீரனின் கதை,
ராமன் என்ற மைய கதாபாத்திரத்தில் ஓம்புரி, அவரின் மனைவியாக ரேவதி, இவர் தன் மனைவியை முதலாளிக்கு புரிந்துணர்வுடன் கூட்டித் தராத காரணத்தால் இவர் ப்ரஷ்டு செய்யப்பட்டு ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப் படுகிறார்.இவருக்கு தங்க இடம் தரக்கூடாது, அருந்த கள் தரக்கூடாது, மளிகை தரக்கூடாது, சவரம் செய்யக்கூடாது, வைத்தியம் பார்க்கக் கூடாது என ஆயிரம் கெடுபிடிகள்.
இவர் அதையும் மீறி மனைவியுடன் விவசாயம் செய்கிறார்.யார். வந்தாலும் வீழ்த்துகிறார்.
இவரை அடக்கி ஒடுக்க வெளியூரில் இருந்து கூட்டி வரப்படும் களரிவீரனாக முரளி,ஊருக்குள் வந்தவர் ராமனின் அசல் வீரம் பார்த்து பிரமித்து அவனின் நண்பனாகிறார்,
அங்கே முதலாளியால் வன்புணர்ந்து விதவையாக்கப்பட்ட மாப்ளமார் சமுதாயப் பெண்ணிடம் காதல் வயப்படுகிறார்,அப்பெண்ணை மணமுடிக்க விழைகிறார்.
இவர்கள் முன்னெடுத்தப் புரட்சி என்னவாகிறது? என்பது தான் மீதக் கதை, இது முதலாளி வர்க்கத்தின் வேடகைக்கு பலியான ஆயிரமாயிரம் ஏழைக் கூலிகளின் உண்மைக்கதை
ஓம்புரி, முரளி, ரேவதி, பாபு நம்பூதிரி,கூலிகள் யார் திருமணம் செய்தாலும் நைச்சியமாகப் பேசி முதல் ராத்திரியில் முதலாளிக்கே கூட்டித் தரும் கணக்காளனாக இன்னசன்ட்,
முதலாளியாக பாலன் கே நாயர் , மற்றும் கேபிஏஸி லலிதா என அருமையான காஸ்டிங்கைக் கொண்ட படம்,
ராமசந்திரபாபு ஒளிப்பதிவு மிகுந்த ரசனையுடன் இருக்கும், வனக்காட்சிகள், வயல் பரப்புகள், மின்சாரமில்லாத ஓர் கிராமம், அதன் மனிதர்கள் என அச்சு அசலாக காட்டியிருப்பார், கவளம் நாராயண பணிக்கர் நாட்டார் பாணியில் இசையமைத்துள்ளார்.
முதலாளிமார்கள் தங்களிடம் வேலை செய்த கூலிகளின் மனைவிமாரைப் பெண்டாள்வதை விதேயன், தலப்பாவு, பரதேசி போன்ற திரைப்படங்கள் பேசியது, இது அதற்கெல்லாம் முன்னோடி
முழுப்படமும் இங்கே, சப்டைட்டில் இல்லை, ஆனாலும் புரியும், அவசியம் பாருங்கள்
https://youtu.be/vknslLCjjWs
செங்கோல் திரைப்படத்தில் வரும் பாதிராப் பால்கடவில் பாடல்
கிரீடம் படத்தின் இரண்டாம் பாகமான செங்கோலில் வரும் இந்த பாதிராப் பால்கடவில் அம்பிலிப் பூந்தோணி என்னும் பாடல் மிகவும் முக்கியமானது.
உலகத்தின் துயரையெல்லாம் ஒட்டுமொத்தமாக அனுபவித்த சேது மாதவன் (மோகன்லால்) மற்றும் அவர் தாய் தங்கை ஒரு டெம்போ வண்டியில், தாய் மாமன் (சங்கராடி) தரவாடிருக்கும் சொந்த ஊருக்குச் செல்கையில் வரும் இந்த பாடல்.
அது வரை இவர் அனுபவித்த காயத்தின் வலிகளுக்கெல்லாம் மருந்திடுவது போல அமைந்திருக்கும், சுயபச்சாதாபத்தால் விசும்பும் குழந்தையை அன்னையும் தந்தையும் மாற்றி மாற்றி தேற்றுவது போல இப்பாடலில் தாஸேட்டா மற்றும் சுஜாதாவின் குரல் ஆறுதல் தரும். தாய்மடியில் தலை வைத்து ஆறுதல் அடைவது போன்ற ஒரு உணர்வு , இதன் காரணம் உணர்வு ரீதியாக நம்மை படத்துக்குள் ஐக்கியமாக்கும் ஒளிப்பதிவாளர் வேணு அவர்களின் விஸுவல்கள், ஏ.கே.லோஹிததாஸ் மற்றும் சிபிமலயில் duo நமக்களித்த அற்புதமான படைப்பு செங்கோல்.அதிலும் இப்பாடலை உருவாக்கி அதை சரியான தருணத்தில் படத்தில் நுழைத்த விதம்,சினிமாவில் பாடல்கள் ஏன் தேவை ? என்று நமக்கு உணர்த்தும்.
இதில் வரும் மான்டேஜ் ஷாட்கள் அபாரபான அழகியலைக் கொண்டிருக்கும்.மோகன்லால் தன் உயிர் நண்பன் நஜீபிடம் பேசிக் கொண்டிருக்கையில் தூரே தேங்காய்க் குலை விழும்,இவருக்கு புனர் ஜென்மம் அளித்த கீரிக்காடன் மகள்,எழுதிய கடிதத்தை லயித்து வாசித்து உறைந்திருப்பார், அக்கடிதம் பறந்து போகும், அதைப் பிடிக்க விழைவார்.
தன் காதலியும் தாய் மாமன் மகளுமான பார்வதி புகுந்த வீட்டில் சித்ரவதை செய்யப்பட்டு இறந்து போயிருக்க, அவரின் மகளை இவர் சைக்கிளின் முன்னே வைத்து கதை பேசியபடி ஓட்டிச் செல்வார், பம்ப் செட்டில் குழந்தையை நனைய வைப்பார், சிறு பாலத்தின் மீது நின்று கீழே கடக்கும் வாத்துக் கூட்டத்தை இவர்கள் வேடிக்கைப் பார்ப்பர்,அவளுக்கு அல்லித்தளிரை பறித்துத் தருவார்,
இன்னொரு காட்சியில் சொக்கிப் போவோம், ஒரு காயல் கரை, அங்கே கட்டப்பட்ட வல்லம் ஒன்று முந்தைய நாள் மழையில் முழுக்க நிரம்பியிருக்கும், அங்கே இவரின் காதலி இந்து(சுர்பி)வின் நிழல் நீரில் விழும், பின்னர் இவரின் நிழல், ரம்மியமான காட்சி, வேணு அவர்கள் நம் மனதில் உயர்வார்.
தன்னால் கொல்லப்பட்ட கீரிக்காடனின் குடும்பத்துடன் மெல்ல புரிதலை வளர்த்து ஐக்கியமாவார் லாலேட்டன், தங்கள் நிலத்தில் விளைந்தவற்றை சுமந்து சென்று, அவர்கள் வீட்டு வாசலில் இறக்கி வைப்பார்.அவரின் வருங்கால மாமியார் சாந்தி கிருஷ்ணாவுக்கு இவர் மீது மரியாதை மெல்ல பிறக்கும்.இறுக்கமான முகம் பூ போல் மலரும்.
தன் அன்னையின் வைத்தியத்துக்காக தன் உடலை விற்று சம்பாதித்த தங்கை (உஷா) கசவணிந்து நிலவிளக்கு ஏந்தி தீபம் தீபம் என்றபடி வாசலுக்கு வருவாள்.
மற்றொரு காட்சியில் அவளைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவர்.இதில் தூக்கிட்டு இறந்து போன திலகன் மட்டும் சிறு போட்டோவில் கூட எங்கும் தென்படமாட்டார், அவர் அரூபமாக இவர்களுடன் எல்லா ஃப்ரேம்களிலும் இருப்பார்.
இப்படி ஒரு நசிந்த குடும்பம் மெல்ல தேறி அடுத்த அடியை எடுத்து வைப்பதைச் சொல்லும் பாடல், இது கைதப்பரம் தாமோதரன் நம்பூதிரியின் பாடல் வரிகள், ஜான்ஸன் மாஷே அவர்களின் இசை.
இப்பாடல் பாருங்கள், கேளுங்கள், படத்தை தன்னால் பார்ப்பீர்கள்
https://youtu.be/a9irJV1s9vk