எழுத்தாளன், கட்டிடக்கலைஞர் பின்னணியில் சென்னையில் பத்து வருடங்கள் அமீரகத்தில் பதினைந்து வருடங்கள் பணியில் இருந்தேன், தற்போது மூன்று வருடங்களாக சென்னையில் கட்டிடக்கலை வாஸ்து ஃபெங் ஷூய் வடிவமைப்பாளராக DFD Dial for Design என்ற online design சேவையைத் துவக்கி கட்டிடக்கலை வாஸ்து ஃபெங்ஷூய் குறித்த சிறப்பு ஆலோசனைகள் வரைபடங்கள் வழங்கி வருகிறேன் .
ஓய்வில் அரிய உலக சினிமாக்களையும், கலை, சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியம், வாஸ்து,கட்டுமானத்துறை கட்டிடக்கலை பற்றி அதிகம் எழுதுகிறேன்.
இன்று இரவு துபாயிலிருந்து கிளம்பி 3 வார விடுப்பில் சென்னை வருகிறேன்,டிசம்பர் 12 திரும்ப அமீரகம் வருவேன். என் சென்னை கைபேசி எண்:-9445167617, சென்னை பதிவர்களை சந்திக்க ஆவலாய் இருக்கிறேன். சென்னை வலைப்பதிவு நண்பர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது பின்னூட்டுங்கள். கைபேசியில் உங்கல் குரலை கேட்க முடிந்தாலும் மகிழ்ச்சியே. மூன்று வாரங்களுக்கு பதிவுகள் எதுவும் இருக்காது, நேரம் கிடைக்கும் போது நண்பர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு ஓட்டு போட பார்க்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு ஓட்டு , பின்னூட்டம், கைபேசி அழைப்புகள் தந்து ஆதரவு தரும் நண்பர்களுக்கு நன்றி கூறுகிறேன்.
க்வில்ஸ்- எழுத்தாளர் டோஹ் ரைட் எழுதிய அருமையான நாடகத்தையும் அதைத்தொடர்ந்த நேர்த்தியான திரைக்கதையையும் கொண்டு பிலிப் காஃப்மேனின் பிரம்மாண்டமான இயக்கத்தில் , 2000 ஆம் ஆண்டு , வெளிவந்த பீரியட் ட்ராமா வகைப்படம், இலக்கிய சினிமா காதலர்களும் கலைரசிகர்களும் வாழ்வில் நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.
பிரெஞ்சுப்புரட்சியின் ரீன் ஆஃப் டெரர் காலகட்டத்தில் மாவீரன் நெப்போலியன் தோற்றுவித்த அடக்குமுறையால் ஜில்லேடின் எந்திரத்திற்கு பலியானோர் ஏராளம், அரசியல் எதிர்ப்பாளர்கள், ஹோமோசெக்சுவல்கள்,கடவுள் எதிர்பாளர்கள், விலைமாதர்கள், ஒபேரா பாடகிகள் என யாரும் விதிவிலக்கின்றி கொல்லப்பட்டனர். அத்தகைய கொடூர காட்சிகளுடன் துவங்கும் இப்படம் மேலும் பயணித்து விசித்திரமான, காமக்களியாட்டங்கள், தாராளமான பாலுறவுகள், லஜ்ஜையில்லாத காட்சியமைப்புகள், குறும்புத்தனமான, துடிப்பான அதிர்வலைகளையும் உங்களுள் ஏற்படுத்தும் என்றால் மிகையில்லை ,படம் முடிந்தவுடன் ஏற்படும் அந்த பரவசம் வார்த்தைகளால் விளக்கமுடியாதது. சோ , வொர்த்தி வாட்ச்.
படத்தின் கதை :-
மார்க்கஸ் டெ சேட் ( Marquis de Sade,) (ஜெஃப்ரீ ரஷ்) 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காமரசம், குரூரம்,வன்புணர்ச்சி சொட்டசொட்ட கதைகள், நாடக இலக்கியங்கள் படைக்கும் எழுத்தாளர் ஆவார். (இன்னாளில் நாம் உபயோகிக்கும் சேடிஸம் என்னும் சொல்லே இவரின் பெயரில் இருந்து வந்தது தானாம், இதைவிட இவருக்கு அறிமுகம் தேவையில்லை.)
அன்னாரின் கடைசி ஒருவருட ஆக்கங்கள் , அவை உருவான கெடுபிடியான சூழல், அது உருவாக உயிர்கொடுத்து கலை வளர்த்தவர்கள். என இது உண்டாக்கும் தாக்கம் உன்னதம்.
காதல் களியாட்டம் கோலோச்சும் ஃப்ரான்ஸில் இவரின் எழுத்துக்களை படித்த மக்கள் மேலும் மிருகத்தனமான வன்கலவியில் ஈடுபட, இவரின் எழுத்துக்கள் மாவீரன் நெப்போலியனால் தடை செய்யப்படுகின்றன, எழுத்தாளர் "செரண்டன்" என்னும் ஆஸிலத்தில் (மனநோய் மருத்துவமனை) சேர்க்கப்பட்டு இவரின் செல்வாக்கான மனைவியின் அளவுக்கதிகமான வரிப்பணத்தால் சிறப்பான தனி கவனிப்புகள், சுவையான உணவுகள். ஆடம்பரமான உடைகள், வைன்கள், படிக்க புத்தகங்கள், பாலுறவு சிற்பங்கள் கொண்ட காண்ட்ராபேண்டுகளை வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார். இவரால் எழுதாமல் மட்டும் இருக்கமுடியாது. அவரின் எழுத்துக்கள் அரசால் தடை செய்யப்பட்டிருந்தாலும் எதிர்கால இலக்கிய களஞ்சியத்துக்காக சகொதரர் அபே (ஜோக்வின் ஃபினிக்ஸ் ) மற்றும் மதர்த்த மார்புகளுடைய சலவைக்காரி மேடலினாலும்(கேட் வின்ஸ்லேட்) பாதுகாத்து வரப்படுகின்றன. மேடலின் இவரின் கதைகள் மூலமே எழுதவும் படிக்கவும் அபே வின் உதவியால் கற்கிறாள்.
எழுத்தாளர் தினமும் தான் எழுதும் விரச கதை எழுத்துப்பிரதிகளை யாரும் அறியாமல் அழகிய புத்திசாலி சலவைக்காரி மேடலின் உதவியால் வெளியே அனுப்பி சட்டவிரோதமாக புத்தகங்களாக அச்சிட்டு வெளியிடுகின்றார். மேடலினால் இவரின் எழுத்துக்களை படிக்காமல் இருக்க முடியாது, அதற்காக என்ன விலை? வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறாள். மன நல மருத்துவமனையின் அருட்தந்தையும் மருத்துவருமான அபே எழுத்தாளரிடமும் ஏனைய நோயாளிகளுடனும் முக்கியமாக மேடலினிடமும் மிக அன்பாக இருக்கிறார்.
மேடலின் எழுத்தாளருக்கு சட்டவிரோதமாக உதவுவது அபே அறிந்திருக்கவில்லை.வெளியான ஜஸ்டின் என்னும் ரசாபாசமான புத்தகம் மஞ்சள் பத்திரிக்கையையும் விட விரசமான காமரசம் சொட்டும் சொற்களை கொண்டிருக்க, இது மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்து மாவீரன் நெப்போலியனின் (ரோன் குக்) காதுகளுக்கு எட்டுகிறது, வெளிவந்த புத்தகப்பிரதிகள் கைப்பற்றப்பட்டு தீக்கிரையாக்கப்படுகின்றன. எழுத்தாளரின் மனைவி ரெனீ பெலகி (ஜேன் மெனாலசஸ்) கட்டும் வரிப்பணம் இந்த முறையும் இவரின் உயிரை காப்பாற்றுகின்றது.
நெப்போலியனின் அவை ஆலோசகரின் சிபாரிசால் இப்போது மிககண்டிப்பான முதிய தலைமை மருத்துவர் ரயான் (மைக்கேல் கேய்ன் ) இந்த செரண்டன் ஆஸிலத்தை மேற்பார்வையிடவும் தலைமை பொறுப்பை ஏற்கவும் வருகிறார், வந்த கையோடு நேராக பாரீஸ் சென்று தான் திருமணம் செய்துகொள்ளவே கான்வென்டில் கன்னியாஸ்திரிகளால் வளர்க்கப்பட்ட பதினம வயது அழகுப்பதுமை சிமோனை (அமீலியா வார்னர் ) மணமுடிக்கிறார், பின்னர் மன்னர் தந்த நான்கு குதிரைகள் பூட்டிய ரதத்தில் அவளை பாதுகாத்து அழைத்துவந்து ஒரு பழைய சிதிலமடைந்த மியூசியத்தை பரிசாகப்பெற்று, அரசவை இளம் கட்டிடக்கலை நிபுணன் ப்ரியோக்ஸ் ( ஸ்டீஃபன் மோயெர் ) மூலம் தன் இளம் மனைவியின் விருப்பத்திற்க்கேற்ப புதுப்பிக்க ஆரம்பிக்கிறார்.
அலங்கார மாளிகையில் மனைவியை கூண்டுக்கிளியாக நினைத்து பூட்டி வைக்கிறார் , மனைவியின் அறைக்கு வெளியே பூட்டும் போடுகிறார். சன்னல்களுக்கும் சிறை கம்பியிடுகிறார். இந்த விஷயம் காட்டுத்தீ போல பரவி செரண்டனுக்கும் எட்டுகிறது, எழுத்தாளர் நெப்போலியனையே தன் நையாண்டித்தனமான குரூர எழுத்துக்களால் கலாய்ப்பவர், இந்த கிழ மருத்துவரையும் அசவரின் இளம் மனைவியின் படுக்கை அறை நிகழ்வுகளையும் செரண்டன்வாசிகள் நடத்தும் நாடகத்தில் புனைவுக்கலவி காட்சி மூலம் அம்பலப்படுத்துகிறார்.
இதன் மூலம் கிழ டாக்டர் இன்னும் கோபமுறுகிறார்.வெளியேறவும் முடியவில்லை, நாடகத்தினை மேடலின் பின் நின்று நடத்தும்போது சக மன நோயாளி பொவ்ச்சன் ( ஸ்டீஃபன் மார்க்கஸ்) மேடலினை பின் புறமாக தழுவி வெறியுடன் முயங்க எத்தனிக்கிறான், நாடகம் உச்சகட்டத்தை எட்டும் போது இவளின் கூச்சல் யாருக்கும் கேட்கவில்லை, அருகே இருந்த சூடான இஸ்திரி பெட்டியை எடுத்து அவன் கன்னத்தில் சூடு வைக்கிறாள், அப்போது தான் அந்த அரக்கன் தன் நிலை தடுமாறி இவளை தழுவிய கைகளை விடுவிக்கிறான். விரச நாடகம் இவர்கள் போட்ட கூச்சலால் தடைபடுகிறது, மருத்துவர் ரயான் இனி செரண்டனில் நாடகமே இல்லை என கடும் உத்தரவிடுகிறார்.
சிமோன் சீனாவில் இருந்து பட்டும், இங்கிலாந்திலிருந்து மெத்தையும், பெருவில் இருந்து பளிங்கு கற்களும் இறக்குமதி செய்கிறாள், இதற்கு பெரும் பணம் தேவைப்பட மருத்துவர் ரயான் எழுத்தாளரின் மனைவியை அழைத்து கணவனின் நலனை காரணம் காட்டி மேலும் மிரட்டி பணம் கறக்கிறார்.
செரண்டனில் கிழ மருத்துவர் ரயானின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, சட்டவிரோதமாக வெளியான எழுத்தாளரின் "ஜஸ்டின்" என்னும் புத்தக பிரதி அபேவிடம் காட்டப்பட, அபே கொதித்து எழுந்து எழுத்தாளரின் எழுதுபொருட்களான பீலிகள், மசி, காகிதம் போன்றவற்றை கைப்பற்றுகிறார். இது எழுத்தாளருக்கு கோபத்தையும் பெருந்துயரத்தையும் கொடுக்கிறது, சிறிதும் மனம் தளராமல் படுக்கை விரிப்பை காகிதமாகவும்,உணவாக வந்த கோழித்தொடை குருத்தெலும்பை பீலியாகவும் ,குடிக்க வந்த ஒயின் பானத்தை மசியாகவும் உபயோகித்து மீண்டும் ஒரு வக்கிர கதையை ஒரே இரவில் எழுதியும் விடுகிறார்.
இதையும் மருத்துவர் ரயான் கண்டுபிடித்து போர்வை, தலையனை திரைச்சீலைகளை பிடுங்கிக்கொள்ள கண்ணாடியை மோதி உடைத்து, தன் பத்து விரலகளை கிழித்துக் கொண்டு தன் உடைகளையே காகிதமாக்கி குருதியையே மசியாக்கி அதில் கதை வடிக்கிறார். செருப்பிலும் கூட கதை எழுதி வைக்கிறார்.
காலையில் அழுக்கு துணி எடுக்க வந்த மேடலின் மிகுந்த கவனத்துடன் அவற்றை காகிதத்தில் பெயர்த்து எழுதி , வழமையாக வரும் குதிரைவீரனிடம் கொடுத்து அவனின் மிக நீண்ட நாளாக தனது பெயர் அறியும் ஆசையையும் தீர்த்துவைக்கிறாள். இதில் இன்னும் வினோதம் என்னவென்றால் இந்த காமக்கதைகளை சலவைசாலையிலிருக்கும் சக பணியாளர்களுக்கு படித்துகாட்டினாலும் இவள் இன்னும் யாரிடமும் சோரம் போகாமல் கன்னியாகவே இருக்கிறாள்,
சகோதரர் அபே மீது ஒருதலைபட்சமான காதலுடன் இருக்கிறாள். எழுத்தாளர் எவ்வளவோ? முயன்றும் மேட்லினை தன் படுக்கைக்கு விருந்தாக்க முடியவில்லை. மிஞ்சிப்போனால் இவரின் ஒரு பக்க காகித எழுத்துக்கு தலா ஒருமுத்தம் மட்டுமே அவளிடமிருந்து பரிசாக கிடைக்கிறது. ஒரு முறை அப்படி எழுத்தாளர் தன் ஆடையில் எழுதிய எழுத்துக்களை அவளை படிக்க அனுமதிக்க , எழுத்தாளர் அவளை துகிலுரிய துவங்கி உதட்டு முத்தத்தில் நின்று, அவளை தன் மடியில் கிடத்தி முயங்க எத்தனிக்க , சட்டென சுதாரித்த மேடலின் எழுத்தாளரின் கன்னத்தில் அறைந்துவிட்டு வெளியேறுகிறாள்.
கிழ மருத்துவரின் இள மனைவி சிமோனுக்கு இரவு வேளைகள் நரகமாகிறது, தாத்தா போன்ற ஸ்தானம் கொண்ட கிழட்டு மிருகத்தின் வன்புணர்ச்சி மூலம் சிமோன் கலவியை கற்றுக்கொள்கிறாள்.அது அவள் இளம்மனதில் வடுவாகி பழிவாங்கும் உணர்வு கொழுந்துவிட்டு எரிகிறது, தடை செய்யப்பட்ட மஞ்சள் புத்தகமான ஜஸ்டினை மாறுவேடத்தில் பாரீஸ் சென்று வாங்குகிறாள்,அதை கவிதை புத்தகத்தின் அட்டைக்குள் ஒட்டி தினமும் படித்து காம வேட்கை கொள்கிறாள்.அந்த புத்தகத்தில் உள்ள குரூரமான கலவி முறைகளை எவரிடமாவது? சோதித்து பார்க்க எண்ண ; அவளின் வேட்கைக்கு வடிகாலாக இளம் கட்டிடக்கலை நிபுணன் ப்ரியோக்ஸ் வசமாக கிடைக்கிறான்,
வெளியே உள் அலங்கார வேலைகள் நடக்கும் போதே இவர்கள் இருவரும் அந்த புத்தகத்தை கரைத்து குடித்து முயங்கி மதிமயங்கி கிடக்கின்றனர். அந்த புத்தகம் விவரிக்க முடியா கிளர்ச்சியையும் அசாத்திய தைரியத்தையும் கொடுக்க இருவரும் கடிதம் எழுதிவைத்துவிட்டு , அந்த புத்தகத்தையும் அங்கேயே விட்டுவிட்டு ஓடிப்போகின்றனர். இந்த ஒரு காரணமே கிழ மருத்துவரை சொல்லொனா பழிவாங்கும் வேட்கைக்கு தள்ள போதுமானதாயிருக்கிறது, இவரின் அதிரடியான உத்தரவால், எழுத்தாளருடைய அறையில் பொருட்கள் காலி செய்யப்படுகின்றன, வெறும் தரையில் நிர்வாணமாக சிறை வைக்கப்படுகின்றார். மேலும் அவரை ஒரு ஊசலாடும் தண்டனை நாற்காலியில் கட்டி நீரிலும் முக்கி முக்கி எடுக்கப்படுகிறார். மேடலின் இவருக்கு தொடர்ந்து உதவியதை இன்னொரு மருத்துவ தாதி எலிசபெத் மூலம் அறிந்து மேடலினுக்கு 50 கசையடிகள் மிகக்கொடூரமான முறையில் வழங்கப்படுகின்றன. அவளை காப்பாற்ற அபே முன்வந்து கசையடி ஏற்க முதுகை காட்ட , தண்டனை முற்று பெறுகிறது. அபே மேடலினை சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு அவளை வேறு அமைதியான இடத்திற்கு நாளை மாற்றப்போகிறேன் , தயாராக இரு என சொல்கிறார், மேடலின் அவரிடம் தன் காதலை சொல்கிறாள், சகோதரர் அபேவோ கடவுளுக்கு எதிரான காரியத்தை நாம் செய்யக்கூடாது, ஒரு சில ஆசைகள் எப்போதுமே நிராசைகள் தாம், அதுதான் யதார்த்தம் என அறிவுறை சொல்ல அவள் வெடித்து அழுகிறாள்.வாழ்வே இருண்டு விடுமோ? என்று மருள்கிறாள்.
* மார்க்கஸ் டெ சேட் விடுதலை ஆகி தன் மனைவியுடன் சேர்ந்தாரா?
* அபே மேடலினின் காதலை ஏற்றுக்கொண்டாரா? * கிழ மருத்துவர் ரயான் ஓடிப்போன இளம் மனைவி சிமோனை மீண்டும் கண்டுபிடித்தாரா? உடனே டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!! முழுக்கதையும் படிக்க நினைப்போர் இந்த கானொளியை தாண்டி வந்து படிக்கவும்.இப்போதே ஸ்பாய்லர் அலர்டு கொடுத்துக்கறேன்.
=================================================
=================================================
அபேவுக்கு மேடலின் மீது காதல் இருந்தாலும் தான் இருக்கும் ஸ்தானம் காரணமாக காதலை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.தனிமையில் புழுங்குகிறார். அன்றிறவு மேடலின் எழுத்தாளரின் அறைக்கதவின் துவாரம் அருகே நின்று , தான் கண்காணா தொலைவு செல்லப்போவதாகவும், அவளுக்கு நியாபகார்த்தமாக ஒரு கதை சொல்லுமாறும் கேட்க, எழுத்தாளர் இன்னும் நொறுங்குகிறார், துக்கத்தில் அவருக்கு கதை சொல்ல வரவில்லை, நா தழுதழுக்கிறது, ஆனால் மேடலினோ ஆத்திரப்படுகிறாள்.அவளை எழுத்தாளர் தேற்றி , இன்றிரவு சிறையின் சுவற்றில் உள்ள துவாரம் வழியே ஒவ்வோரு வரியாக சொல்லுவேன்.அதை பக்கத்து அறை மன நோயாளிகள் வாய் வழியே கடத்தி சலவை சாலை சுவற்றின் துவாரம் அருகே கொண்டு சேர்ப்பர், அதை நீ எழுதிக்கொள் என்று தேற்றிஅனுப்புகிறார்.
மிகவும் குரூரமான ஒரு காமக்கதையை இவர் சொல்ல சொல்ல ஒவ்வொருவராக அதை கடத்தி அடுத்த நபருக்கு உரைக்க கதை உருவாகிறது, கடைசியாக கதையின் ஒவ்வொரு வரியும் மன நோயாளி பொவ்ச்சன் காதுகளில் சொல்லப்பட , அவன் அந்த கதையின் வரிகளால் குரூரமான வெறியும் காம வேட்கயும் கொண்டு மேடலினிடம் அதை உரைக்கிறான். மேடலின் காகிதத்தில் அப்படியே குறிப்பெடுக்கிறாள். ஒரு கட்டத்தில் சக மன நோயாளி க்ளெண்டே மெழுகுவர்த்தியை கொண்டு தன் படுக்கைக்கு தீவைக்கிறான், செரெண்டன் முழுவதும் தீ பரவுகிறது, மிகப்பெரிய கலவரமும் வெடிக்கிறது, மன நோயாளிகள் தாக்குதலில் ஈடுபட, காவலர்கள் அவர்களை போராடி வழிக்கு கொண்டு வருகின்றனர்.
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பொவ்ச்சன் தன் முழு பலம் கொண்டு மேடலினின் சலவை சாலை கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைகிறான், அந்த மிருகத்திடமிருந்து தன்னை காத்துக்கொள்ள போராடுகிறாள், எதுவும் பலனளிக்காமல் பொவ்ச்சன் கத்தரிக்கோலால் மேடலினை கிழித்து சலவை நீர் தொட்டிக்குள் வீசி விட்டு ஓடி விடுகிறான், கூக்குரல் கேட்டு ஓடிவந்த அபே மேடலினை தண்ணீர் தொட்டியிலிருந்து மேலே தூக்கி முதலுதவி செய்ய, முயற்சி பலனளிக்காமல் மேடலின் இறந்துவிடுகிறாள்.மேடலினின் கண்பார்வையற்ற தாயின் வெடித்த அழுகை அபேவின் செவிகளில் ரீங்காரமிடுகிறது.
இப்போதுமருத்துவர் ரயான் அபேவுக்கு மேடலின் எழுதிய காமக்கதையை காட்டி மூளைச் சலவை செய்கிறார், மார்க்கஸ் டெ சேட் நாக்கால் கூட கதை சொல்லி தீங்கிழைப்பார் என நிரூபனமாயிற்று, இதன் மூலம் உன் விருப்பத்திற்குறிய மேடலினை இழந்தாய், அவள் தாய் இப்போது அனாதையாகிவிட்டாள், என அடுக்க. கோபத்தின் உச்சத்தில் சிறை அறைக்கு சென்று எழுத்தாளரை அபே சந்திக்கிறார். அநியாயமாக உன் கொடுர எழுத்தாலும் பேச்சாலும் ஒரு வாழவேண்டிய இளம் பெண்ணை கொன்றுவிட்டாயே? என ஆக்ரோஷப்பட,
இவர் கொஞ்சமும் கவலையே படாமல் அவளை நான் தினமும் என் அறைக்குள் வைத்து புணர்ந்திருக்கிறேன். அவள் ஒரு காமவேட்கை கொண்டவள் , அவளுக்கு இது போல நடந்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை ! என பிதற்ற , கோபம் கொண்ட அபே அவளை இப்போது தான் சோதித்து விட்டு வருகிறேன், அவள் கன்னியாகவே இறந்து போயிருக்கிறாள், உன் எழுத்துக்களை சிலாகித்ததை தவிற ஒன்றும் அவள் தவறு செய்யவில்லை ! என சொல்லி எழுத்தாளர் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு , இதற்கான தண்டனையை நீ அனுபவித்தே ஆக வேண்டும் ! என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறார், உடனே உள்ளே நுழைந்த காவலர்கள் இவரை அறுவை சிகிச்சை கூடத்துக்கு கூட்டிச் செல்ல, அங்கு இவரின் நாக்கு வெளியே இழுக்கப்பட்டு முழுவதும் துண்டிக்கப்படுகிறது.
அந்த நாக்கை ஒரு கண்ணாடி புட்டியில் திரவத்தில் போட்டு மருத்துவர் ரயானிடம் தர, ரயான் அபேவை ஆரத்தழுவி பாராட்டுகிறார். கொலைகாரன் பொவ்ச்சனை டம்மி என்னும் இரும்பு கவசத்திற்குள் அடைத்து சிலை போல அமர வைத்துவிடுகின்றனர், அவனால் அசையக்கூட முடியாது. எழுத்தாளர் மார்க்கஸ் டெ சேட்டை இப்போது பாதாள சிறையில் அடைத்துவிடுகின்றனர். எழுத்தாளரை பார்வையிட வந்த அபே பாதாள சிறைக்குள் படிகளில் இறங்க முற்பட , மல நாற்றம் குடலை பிடுங்குகிறது,
சுதாரித்து கீழே இறங்கி வந்து பார்த்தால் எழுத்தாளர் மார்க்கஸ் டெ சேட் சுவரெங்கும் தன் மலத்தால் காமக்கதைகளை எழுதி வைத்திருக்கிறார். படிக்க படிக்க இவருக்கு தலை சுற்றுகிறது, குற்றுயிராக கீழே விழுந்து கிடக்கும் எழுத்தாளரை அணுகி இனியாவது செய்த குற்றத்திற்கு பாவமன்னிப்பு பெற்றுக்கொண்டு திருந்துங்கள். மனிதனாகுங்கள். என்று சொல்லி இதோ இந்த சிலுவையை முத்தமிடுங்கள் என மன்றாட, எழுத்தாளர் சிலுவையை விருட்டென கடித்து விழுங்கி தொண்டை கிழிபட்டு உயிர்விடுகிறார்.
அபேவால் தன் காதலி மேடலினின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியவில்லை, பிணவறை சென்று அவளின் நிர்வாண உடலை நோட்டமிடுகிறார். ஆசையாக தடவுகிறார். அவள் உயிரோடு இருந்த போது தான் அவளை அவளின் விருப்பத்திற்கிணங்க கூடமுடியவில்லை, கன்னி கழியாமல் இறந்துபோனவளை நினைத்து கண்ணீர் விட்டு அழுகிறார். அவளை நெக்ரோபீலியா வால் பீடிக்கப்பட்டவன் போல முயங்குகிறார். அட ! கனவு கலைகிறது, நினைவு திரும்ப, தான் மன நிலை பிழறியிருப்பதை உணர்கிறார். வித்தியாசமாக தனக்கு தானே பேசிக்கொள்கின்றார். இவர் இப்படி பிதற்றுவதை பார்த்த காவலர்கள் இவரை எழுத்தாளர் மார்க்கஸ் டெ சேட் இருந்த அறையிலேயே நிர்வாணமாக அடைத்து வைக்கின்றனர்,
ஒரு வருடம் கழித்து;- செரண்டன் இப்போது அச்சுக்கூடமாக ஆகியிருக்கிறது, மறைந்த எழுத்தாளர் மார்க்கஸ் டெ சேட் டின் பாதுகாக்கப்பட்ட எழுத்துக்கள் இங்கிருக்கும் அச்சுக்கூடத்திலேயே மனநோயாளிகளின் அற்பணிக்கப்பட்ட ஈடுபாட்டுடன் அச்சடிக்கப்பட்டு அழகிய புத்தகங்களாக உருமாறுகின்றன. இப்போது எலிசபெத் தலைமை தாதியாகிவிடுகிறாள். கிழட்டு மருத்துவருக்கும் வைப்பாட்டியாகி விடுகிறாள், புத்தகங்களுக்கு தங்க முலாம் பூசப்பட்டு, பதனிடப்பட்டு வண்ண மெருகூட்டப்பட்ட கன்றுக்குட்டியின் தோல் கொண்டு அட்டை போடப்பட்டு , பணம் ஒன்றே பிரதானம் என்று அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இவற்றை மேற்பார்வையிட்டுக்கொண்டே புதிய மத குருமாரான மாப்பாஸை அழைத்துக்கொண்டு செரணடனை சுற்றிக்காட்டும் ரயான். அபேவின் அறை வாசலுக்கு சென்று அபேவை அருகேஅழைக்கின்றார். இவர்களை பார்த்த அபே தன் வேலைக்கான மாற்றை கண்டுபிடிக்கிறார். கதவின் துளை வழியே கைவிட்டு மருத்துவர் ரயானின் கழுத்தை நெறிக்கிறார். சுதாரித்த ரயான் பிடியிலிருந்து இறுதியாக விலகிவிட, இவருக்கு அன்ன ஆகாரம் கூட கொடுக்ககூடாது என ஆணையிட்டு அகல்கிறார். இப்போது அபேவும் போகும் வருவோரிடம் தூரிகையும் மசியும் காகிதமும் கேட்டு பிதற்றுகிறார்.
அங்கு வந்த மேடலினின் கண்பார்வையற்ற தாய் இவருக்கு நிறைய காகிதங்களும் தூரிகைகலும் மசியும் கொடுத்துவிட்டு நன்றாக எழுது என்கிறாள். இப்போது பிண்ணனியில் மார்க்கஸ் டெ சேட் சொல்லச் சொல்ல வீறு கொண்ட அபே எழுத ஆரம்பிக்கிறார். அதோ இன்னொரு சரசகாவிய எழுத்தாளர் உருவாகியே விட்டார்.
================================================
டிஸ்கி:- என்ன அருமையான படம் , என்ன அருமையான கதை, திரைக்கதை , நடிப்பு, இயக்கம், ஓப்பனை கலை இயக்கம், உடைகள் வடிவமைப்பு,இசை, ஒளிப்பதிவு என இந்த பிரம்மாண்டமான சரித்திரப்படம், ப்ரெஞ்சுப்புரட்சி காலகட்டத்திற்கே நம்மை இட்டுச் செல்லும் என்றால் மிகையில்லை, கேட் வின்ஸ்லேட் ,மற்றும் ஜெஃப்ரி ரஷ்ஷின் நடிப்பு அப்படியே நம்மை கட்டிப்போட்டுவிடும், சிமோனாக வந்த அமீலியா வார்னரின் அழகு சொல்ல வார்த்தைகளில்லை. பதிவின் நீளம் கருதி இங்கேயே முடிக்கிறேன். உங்களிடம் 2-04 மணி நேரம் இருக்கிறதா? ப்ளீஸ் கோ ஃபார் இட்!. எண்டர்டெயின்மெண்ட் நிச்சயம்.
=========================== இந்த படத்தின் காணொளியை யூட்யூபில் தரவேற்றிய அன்பருக்கும்,அதை வழங்கிய யூட்யூபுக்கும் நன்றி ,இந்த படத்தினைப் பற்றிய தொழில்நுட்ப தகவல்களை தந்து உதவிய ஐ எம் டி பி மற்றும் விக்கிபீடியாவுக்கும் நன்றிகள் பல. -------------------
அருமை நண்பர்களே,சான்றோர்களே.மரணதண்டனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு அரங்கேற்றப்படும் உயிர்க்கொலை சரியா? தவறா?
கொலைகுற்றத்துக்கு மரணதண்டனை தான் தீர்வா? என வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியது போல கேட்ட மற்றொரு படம். படம் பார்ப்பவர்களுக்கு தங்கள் முடிவு மரணதண்டனை சரியே ! என இருந்தால் அதில் நிச்சயம் தடுமாற்றம் ஏற்படச்செய்யும்.
பணம் படைத்த குற்றவாளிகள் யாரேனும் மரணதண்டனை அடைந்து தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிர் விட்டதை நீங்கள் பார்த்ததுண்டா? நிச்சயம் இராது, ஏன் என்றால் அவர்கள் சமூகத்திலேயே பெரிய ப்ரொஃபெஷனல் வக்கீல்களிடம் சென்று அவர்களின் திறமையான வாதத்தாலும் பெயர்தெரியாத மருத்துவ சம்பந்தப்பட்ட வியாதிகளையும் காரணம் காட்டி ப்ரெசெண்டேஷன் செய்து தாம் பெற்ற மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து விடுவர் உதாரணம் நொய்டா-நிதாரி சம்பவ புகழ் நரமாமிசம் தின்னும் மிருகம் மனீந்தர் சிங் பாந்தர்,
சரி விஷயத்துக்கு வருகிறேன். டெத் ரோ என்னும் வாழ்வுக்கும் சாவுக்குமான இடைப்பட்ட கால அளவில் ஒரு மரணதண்டனை கைதி தினம் தினம் செத்து பிழைக்கிறான். ஒருவனுக்கு தான் இந்த தேதியில், இந்த நேரத்தில், இந்த இடத்தில் இந்த விதத்தில் தான் மரணம் சம்பவிக்கும் என தெரிந்துவிடுகின்றபோது அவன் படும் வேதனை சொல்லி மாளாது.அவன் பாதி ஏற்கனவே இறந்துவிடுகிறான், மீதமுள்ள நடைபிண உடலையும் உயிரையும் தான் இவர்கள் மீண்டும் கொன்று புதைக்கின்றனர் என்கிறது படம்.
அப்படி வெயிட்டிங் லிஸ்டில் இருந்தவன் பலிகடாவாகி கொலை அறைக்குள் தண்டனை நிறைவேற்ற கூட்டிச்செல்லப்படும்போது சிறைக்காவலர்கள் " அரோகரா" " அரோகரா" என்பது போல "டெட் மேன் வாக்கிங்" "டெட் மேன் வாக்கிங்" என்கிறார்கள். அது தான் இந்த படத்துக்கான பெயர்க்காரணம். நல்லா கிளப்புறாய்ங்கய்யா பீதிய…
மேத்யூ போன்ஸ்லேட் (ஷான் பென்) ஹிட்லரையும், கொடிய ஆர்யன் ப்ரதர்ஹுட் இனத்தையும் சிலாகிப்பவன். இனவெறி கொண்டவன். ஹிட்லரின் கொடிய நாஜிப்படையில் தான் இருந்திருக்கவேண்டும் என விரும்புபவன். கடந்த ஆறு வருடங்களாக சிறையில் தனி அறையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு டெத்ரோவில் வெயிட்டிங் லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளான். அப்படி என்ன தான் இவன் குற்றம் செய்தான்?
இளம் காதல்ஜோடிகள் தனியார் காட்டுக்குள் , காரில் டேட்டிங்கில் கலவிக்கு தயாராகையில் மேத்யூ போன்ஸ்லேட்டும்,ஏர்ல் டெலக்ராய்ஸ்(ரேமண்ட் ஜே.பேரி) ம் அவர்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து,அந்த பெண்ணை இருவரும் மாறிமாறி கற்பழித்து,அதில் ஏர்ல் அந்த பெண்ணை குரூர இன்பத்துக்காக வயிற்றில் பலமுறை கத்தியால் குத்தி கிழிக்க, மேத்யூ போன்ஸ்லேட் ஷாட் கன்னால் அந்த காதலனை தலையில் சுட்டுவிட்டு அகல்கின்றனர், அதில் ஏர்ல் வக்கீலுக்கு பணம் தண்ணீராக செலவழித்து ஆயுள் தண்டனை வாங்கி விட, இவனுக்கு பணம் இல்லாததால் ஏப்பைசோப்பயான வக்கீல் மாட்டி வழக்கை கோட்டை விடுகிறான். சமூக நிறுவனங்கள் இவன் வழக்கை எடுத்து நடத்த விரும்பாத நிலை
இப்போது ஒரே நம்பிக்கை ஒளி பொதுத் தொண்டு சேவகி ஸிஸ்டர் ஹெலன் பிரிஜென் (சூசன் செரன்டன்)(won oscar).இவன் அவருக்கு முதலைக் கண்ணீர் வடித்து கடிதம் எழுத,அவர் அவனை மிகக்கருணையுடன் எவருடைய எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல்அணுகி குறைகளைக் கேட்டு பாவமன்னிப்பு வழங்க ஏத்தனிக்க, இவனோ அவள் அன்பை ,கருணையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவரிடமே மரியாதை குறைவாகவும்,பேச்சில் காமம் கலந்தும் சொற்களை உதிர்த்து அவரை காயப்படுத்துகிறான்.
தன் முயற்சியில் சற்றும் தளராத ஹெலன் அவன் குடும்பத்தார், அவன் கொன்றவர் குடும்பத்தார் எல்லோரையும் சென்று சந்திக்கிறார்,அவர்களின் ஏச்சு பேச்சுக்கும் ஆளாகிறார்.அவன் அம்மாவை மட்டும் இவரது விடாமுயற்ச்சியால் மனமிறங்கச் செய்கிறார்.இவன் வழக்கு மீதான கருணைமனு பரிசீலனை விசாரனைக்கு வர இவனது கொலை கற்பழிப்பு புகைப்படங்கள்,ஆறு பேர் அடங்கிய நீதிபதிகளால் பார்வையிடப்பட்டு மேலும் கடுப்பாகி ஒரே வாரத்தில் தண்டனை என உறுதி செய்யப்படுகிறது. ஹெலன் மற்றும் அவரின் ஆஸ்தான தொண்டு நிறுவன வக்கில் ஹில்டன் பார்பரும்( ராபர்ட் ப்ராஸ்கி) மனம் தளராமல் மேல் முறையீட்டுக்கு முயல்கின்றனர். அவன் அம்மாவுக்கு மகனின் மீதான வெறுப்பு மறைந்து பாசம் பிறக்கிறது.
சிறை வளாகத்தில் இருக்கும் சகோதரர் க்ளைட் பெர்சி (ஆர்.லீ.எர்மி) ஹெலனை நோக்கி நீ ஒரு நயவஞ்சக மிருகத்துக்கு உதவ எத்தனிக்கிறாய், அவன் திருந்தாத ஜென்மம்,என அறிவுறை சொல்கிறார்.அப்போதும் ஹெலன் தன் கொள்கையில் மனம் தளரவேயில்லை
ஹெலன் தினமும் இவனை சிறையில் சந்தித்து பைபிளில் இருந்து நீதிக்கதை சொல்கிறார். திருந்தாத ஜென்மமான இவனிடம் அன்று என்னதான் நடந்தது என கேட்க? இவன் அன்று தான் கோகெய்ன் உட்கொண்ட போதையில் இருந்ததால் என்ன நடந்தது என்றே தெரியாது!. தான் நிரபராதி என்றும், அந்த காதலர்கள் மேல் தான் தவறு, தன் முன்னாள் காதலி மீது தான் தவறு,அவள் இவனுக்கு பிறந்த பெண் குழந்தையை அனாதை விடுதியில் விட்டுச் சென்றதால் தான் நான் போதைக்கு அடிமையானேன் என அநியாயத்துக்கு பிதற்றுகிறான்.ஹெலன் இப்போதும் மனம் தளறவில்லை.அவனை திருத்தமுடியும் என நம்புகிறார்.
மரண தண்டனைக்கு மூன்றே நாள் இருக்கும் போது மைக்கேல் வெறுப்பின் உச்சத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு தந்த பேட்டி ஹெலனுக்கு இவன் திருந்துவானா?என்னும் சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது. தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் தனக்கு பிடித்த அரசியல் தலைவர் ஹிட்லர், பிடித்த இயக்கம் நாசிசம், கையில் ஆயுதம் கிடைக்கப்பெற்றால் முதலில் கொல்வது கருப்பர் இனம், செவ்விந்திய இனம் மற்றும் யூத இன மக்கள், என்றும் தான் ஒரு சுத்தமான ஆர்யன் ப்ரதர்ஹுட் இனவிரும்பி என்றும் தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்த
இவன் மேல் முறையீடு செய்திருந்த கருணை மணுக்கள் நிராகரிக்கப்படும் அபாயமும் ஏற்படுகிறது.ஹெலனின் தொண்டு நிறுவனத்தில் இருக்கும் கருப்பின மற்றும் பழங்குடி அநாதை குழந்தைகள் கூட பயத்தில் ஹெலனிடமிருந்து தள்ளியே இருக்கின்றனர்.
இவர் வேறுவழியின்றி அவனுக்கு பரியல் சூட் வாங்கி வருகிறார். அவன் ஹெலனிடம் தனக்கு உண்மை அறியும் பரிசோதனைக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யுமாறு கேட்க, இவர் கர்த்தரிடம் மனம் உருகி மன்னிப்பு கேள்,உன் கேவலமான அவப்பெயரை துடைத்துக்கொண்டு கண்ணியமான மரணத்தை தழுவு என அறிவுறை சொல்கிறார். மனதளவில் நொறுங்கிப்போன இவனுக்கு தைரியம் தருகிறார். இறுதிவரை இவன் கூடவே இருப்பேன் என தெம்பூட்டுகிறார்.
இந்த அறிவுரைகள் அவன் காதுகளில் விழுந்ததா?மூளைக்கு எட்டியதா?பாவ மன்னிப்பு வாங்கினானா? இறந்து போன காதலர்களின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டானா? போன்ற நெஞ்சை நெகிழவைக்கும் காட்சிகளை டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
==================================
படத்தின் முன்னோட்டக் காணொளி
==================================
மேலை நாடுகளில் மரண தண்டனை பற்றி குறிப்பிடப்படவேண்டிய விஷயங்கள்:-
*தண்டனை நாளுக்கு ஒரு வாரம் முன்பே சிறை அதிகாரிகள் கைதியை நிற்க வைத்து அளவெடுத்து சவப்பெட்டி செய்ய ஆர்டர் கொடுப்பார்கள்.கைதிக்கு பொசுபொசுவென்று இருக்குமே என்று கவலையே படமாட்டார்கள்.
*கைதியின் வீட்டிலிருந்தே பரியல் சூட் என்னும் கறுப்பு நிற சூட் கச்சிதமாக தைக்கப்பட்டு சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.அவர்கள் அதை கைதி கொல்லப்பட்ட பின் அவருக்கு அணிவிப்பர்.இதுக்கு பேர் தான் இறுதி மரியாதையோ?
*இறுதி தினத்தன்று தண்டனைக்கு 6 மணி நேரத்துக்கு முன்பே கைதியின் குடும்பத்தார் கடைசியாக பார்த்து திரும்பிவிடுகின்றனர், தொட்டு பேசவோ, முத்தம் கொடுக்கவோ, ஆரத்தழுவி விடை கொடுக்கவோ?முடியாது.வேண்டுமெனில் வெளியில் காத்து இருந்து கையோடு பூத உடலை வாங்கிச்செல்லலாம், ஆனால் அந்த துணிச்சல் ரொம்ப அபூர்வமே!
*கைதிக்கு ஆசைப்பட்ட உணவை சிறை சமையல் கூடத்திலேயே சமைத்து கொடுப்பர்,அல்லது பலத்த சோதனைக்கு பின்னர் KFC ல் இருந்து கூட தருவிப்பர் (கடைசி ஆசை தானே?) அதில் என்ன கொடுமை என்றால்? இவன் கம்பிகளுக்கு பின்னே சாப்பிடுகையில், வெளியே பஃபே நடக்கும் அதில் வழக்குக்கான சாட்சிகள், குற்றம் சாட்டியவர்கள், இவன் சாக சாமியை வேண்டியவர்கள், தேவாலய சகோதரிகள், சகோதரர்கள் , இவனை எதிர்த்து வாதாடியவர்கள், சார்பாக வாதாடியவர்கள் , டாக்டர்கள் என எல்லோரும் ஒன்றாக டின்னரை முடிப்பர். (இல்லாட்டி பசிக்கும்ல, சாவதை பார்த்தபின் சாப்பிட முடியாதில்லையா?)
*கைதிகள் முடிதிருத்தப்பட்டு , சவரம் செய்யப்பட்டு, கைகால்களில் உள்ள ரோமங்கள் ஊசிபோட நரம்பு எளிதாக புடைத்துதெரியும் வண்ணம் சவரம் செய்யப்பட்டு.பின்னர் நன்கு குளிக்கவைக்கப்படுவர்.
* பின்பு நல்ல துவைத்த சீருடையும் டயாப்பரும் அணிவிக்கப்படுவர். (அடல்ட் டயாப்பர் = தண்டனை நிறைவேறும் போது பலருக்கு பீதியில் மலம் வந்துவிடுமாம், பயத்தில் சிறு நீரும் வெளியேறிக்கொண்டே இருக்குமாம் ) உள்ளே கைதி கொண்டு செல்லப்பட்டவுடன் கண்ணாடியின் திரைச்சீலை திறக்கப்பட்டு, இவன் கைகால்கள் ஸ்ட்ரெட்சர் போன்ற படுக்கையில் இறுக்கி கட்டப்பட்டு, இரண்டு கைகளிலும் நரம்பு தேடிஎடுக்கப்பட்டு,
2x 3 =6 மூன்று வித விஷ மருந்துகள் அடைக்கப்பட்ட பிஸ்டன் எந்திரத்தில் இருந்து வெளியேறும் மருந்து குழாய்களை கைதியின் இரண்டு கைகளிலும் குளுக்கோஸ் போல ஏற்றுகின்றனர். அதை வெளியே உள்ள கண்ணாடி வழியே சாட்சிகளும்,டாக்டர்களும் வேடிக்கை பார்க்கின்றனர்,உயிர்காக்கும் டாக்டரே விஷ மருந்தை பரிந்துரைத்து ,தருவித்து வாங்குவதும் ,அதை கைதியின் உடலில் செலுத்துவதும் வேடிக்கையே!
* வெளியே பெல் அடித்ததும் எல்லோரும் வெளியேற வேண்டும், வெளியே நடக்கும் சிறிய சொற்பொழிவில் இறந்தவர் விபரம்,அவர் தின்ற ஆகாரம், குடித்த நீரின் அளவு, சாக எடுத்துக் கொண்ட நேரம், மருந்து வாங்க செலவழிக்கப்பட்ட வரிப்பணம் எவ்வளவு என விளக்குவர். பின்னர் பிரேத பரிசோதனை முடித்து சூட் அணிவித்து வளாகத்தின் வெளியே காத்திருக்கும் உறவினர் வசம் பூத உடல் ஒப்படைக்கப்படுகின்றதாம்.
* செத்தவன் கூட எளிதாக செத்திருப்பான்,அவனை நினைத்து அவன் உறவுகள் காலத்துக்கும் விடும் கண்ணீர் இருக்கே?.
*அமெரிக்கா , சீனா, கனடா,போன்ற நாடுகளில் அமலில் இருக்கும் இந்த கொடிய லெதல் இன்ஞெக்ஷன் முறை கடவுளே இப்படி ஒரு சாவு மட்டும் வரவே கூடாது என நினைக்க வைக்கும்.இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வரை " எலக்ட்ரிக் சேர்" என்னும் கொடிய முறை அமலில் இருந்ததாம். அதில் கைதியை அமர வைத்து கை கால்களை கட்டி, மூன்று விதமான வோல்டேஜ் மின்சாரத்தை பாய்ச்சி கொல்லும் போது ,சில சமயம், தலையில் தீப்பிடித்து தீ ஜுவாலை கொழுந்துவிட்டு எரியுமாம், கொடிய நாற்றம் ஏற்படுமாம், முதலில் மூளை , பின்பு இதயம், பின்பு அவயங்கள் என செயலிழக்க வைத்து ஒரு ஆளை முழுவதும் கொன்று முடிக்க 15 முதல் இருபது நிமிடம் பிடிக்குமாம், பல நேரங்களில் நாற்காலியில் கட்டப்பட்ட பட்டை அறுந்து விடுமாம், உடம்பும் எங்கோ எகிறிப்போய் விழுமாம், மர நாற்காலியே எரிந்த சம்பவங்களும் உண்டாம். கொல்லும் இடமோ ஆடறுக்கும் இடம் போல ஆகி, அதை அப்புறப்படுத்துவதற்குள் போதும் !போதும்! என ஆகிவிடுமாம்.இதற்கு பெயர் காட்டுமிராண்டித்தனமாம். (ஐயோ, ஐய்யோ!!!!)
ஆகவே ஒரு ஜீவன் வலிக்காமல் சாவதற்கு ஏற்ற வகையில் லீதல் இன்ஜெக்ஷன் போட்டு கொலை செய்யும் முறையே இன்றும் பரவலாக கடைபிடிக்கப்படுகிறதாம். அட நல்லவனுங்களா!!!!!!
ஆனால் உச்சரிப்பதற்கு மிக எளிமையாக உள்ள இந்த லீதல் இன்ஜெக்ஷன் உண்மயிலேயே மிகவும் கொடிய முறையாகும். நம் இந்தியா, இன்ன பிற ப்ரிடிஷார் ஆண்ட நாடுகளில் வழக்கிலிருக்கும் தூக்கு போடுதலே வலி குறைவான தண்டனை முறையாம். இதற்கு பெயர் ஜீவ காருண்ய முறையாம். (ஐயோ, ஐய்யோ!!!!)
நம் நாடுகளில் மரண தண்டனை பற்றி குறிப்பிடப்படவேண்டிய விஷயங்கள் பற்றி ட்ரான்ஸ்பரன்ஸியான தகவல்கள் இல்லை இருந்தால் அதுபற்றி தெரிந்தவர்கள் வலையேற்றவும்.
ஷஷாங்க் ரிடெம்ஷன், மிஸ்டிக் ரிவர் புகழ் டிம் ராபின்ஸ் அற்புதமான இயக்கத்திலும் தான் ஒரு சக்கரவர்த்தி தான் என நிரூபித்த படம்.மனிதர் ஒவ்வொரு ஃப்ரேமிலும் இருப்பை பிரதிபலிக்கிறார்.
ஷான் பென்னின் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம்.21க்ராம்ஸ்,மிஸ்டிக் ரிவர், மில்க் போதும், செம துணிச்சல்காரர், இவர் ஏற்கும் சவாலான பாத்திரங்களுக்கு நான் ரசிகன் இந்த முறையும் ஏமாற்றவில்லை. இந்த படம் பார்த்துவிட்டு இவரை சிலருக்கு பிடிக்காமலும் கூட போகக்கூடும். அந்த அளவுக்கு பெர்ஃபெக்ஷன் காட்டியிருந்தார்.இவருக்கு ஆஸ்கர் தந்திருக்கலாம்.
சிஸ்டர் ஹெலன் மிக அருமையான நடிப்பை வழங்கியிருந்தார்,இவருக்கு ஆஸ்கர் வழங்கி கவுரவித்தது மிகச்சரியே!கண்களே பேசுகின்றது கருணைமொழி, இந்த ஸிஸ்டர் ரோலுக்கு ஏற்ற நடிகை.
கருணை கொண்ட வக்கில், மைகேல் போன்ஸ்லேட்டின் அம்மா, இறந்த காதலர்கள், அவர்களின் பெற்றோர்கள் என மிக அருமையாக நடித்திருந்தனர்.
இதுவும் ஒரு உண்மைக்கதையே! சம்பவ இடம் மற்றும் பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டு இதே பெயரில் டெட் மேன் வாக்கிங் என்னும் புத்தகமாக வந்து பின்னர் படமாகவும் வந்துள்ளது.
டெட் மேன் வாக்கிங் புத்தகம் நிறைய வெறுப்பை மட்டுமே சம்பாதித்ததாம், ஆனால் இந்த படம் எல்லோரின் ஏகோபித்த பாராட்டுக்களையும் பெற்று மனதில் நீங்கா இடம் பிடித்ததாம். படத்தின் இசை பற்றி சொல்லியே ஆகவேண்டும் , மாபெரும் இசை வித்தகர்களின் ஆல்பங்கள் ஒரே படத்தில் பயன்படுத்தப்பட்டது இந்த படத்திற்காகத்தான் இருக்கும். அதிலும் குறிப்பிடப்படவேண்டியது நம் பாகிஸ்தானிய இசைமேதை நஸ்ரத் படே அலி கான் அவர்கள் பாடிய த லாங் ரோட் என்னும் ஆல்பம்,அதன் ஆலாபனைகள் உங்கள் உள்ளத்தை உருக்கும்.
படத்தில் வரும் மைக்கேல் போன்ஸ்லெட் பாத்திரம், அவன் நண்பன் பாத்திரம் நிஜ வாழ்வில் இருவருக்குமே எலெக்ட்ரிக் சேரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாம்.
================================== டிஸ்கி:-
திரைக்கதையில் ஒரு உத்தி இருக்கிறது.யாருடைய பார்வையில் இருந்து கதை சொல்லப் படுகிறதோ? அந்தக் கதாபாத்திரத்தின் மேல் நமக்கு நம்மை அறியாமலேயே அனுதாபம் வந்து விடும்.மிகக் கொடியவன் கூட அவனது மனதின் வழியே பார்த்தால் அவன் நல்லவன் போல் தெரிவான்.நாம் எல்லோருமே நமக்கு நமே நல்லவர்களாக இருக்கும் மனித மனத்தின் மாயம் இது. தமிழில் உதாரணம் உதிரிப் பூக்கள்.
------------------------------------------------------------------ எப்படி? ச்சும்மா அதிருதில்ல?
============================================
லீதல் இன் ஜெக்ஷன் என்னும் எமன் :
மன உறுதி கொண்டோர் மட்டும் பார்க்க வேண்டிய கானொளி:
=================== இந்த படத்தின் காணொளியை யூட்யூபில் தரவேற்றிய அன்பருக்கும்,அதை வழங்கிய யூட்யூபுக்கும் நன்றி ,இந்த படத்தினைப் பற்றிய தொழில்நுட்ப தகவல்களை தந்து உதவிய ஐ எம் டி பி மற்றும் விக்கிபீடியாவுக்கும் நன்றிகள் பல.
-------------------
கலியுக எமனான கொடுங்கோலன் போல்பாட்டின் மே 13, 1976 முதல் ஜனவரி 7, 1979 வரையான ஆட்சிக்கொடுமைகளை இரு நண்பர்களின் நட்பின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த உண்மைகதை இது . 1984 ஆம் ஆண்டு ப்ரூஸ் ராபின்சனின் திரைக்கதையில் , ரோலண்ட் ஜாஃபின் இயக்கத்தில், க்ரிஸ் மென்கெஸின் ஒளிப்பதிவில் (won oscar) ஜிம் க்ளார்க்கின் எடிட்டிங்கில்(won oscar) மைக் ஒல்ட்ஃபீல்டின் உன்னத இசையில் வெளிவந்து , 3 ஆஸ்கார் விருதுகளையும் எண்ணற்ற விருதுகளையும் வென்று போகிறபோக்கில் ஏனையோர் மனதையும் கொள்ளைகொண்ட படம்.
மேற்கு ஆணையிடும் கிழக்கு அடிபணியும்,மேற்கத்தியர் கிழக்கத்தியரை உபயோகித்துவிட்டு தூக்கி எறிவர். போன்றவையே மேற்கத்தியரைப் பற்றி எப்போதும் நம் மனதில் உள்ள பிம்பமும் நிஜமும் ஆகும்.விதிவிலக்குகளும் உண்டு என்று சொன்ன படம்.
உங்கள் மேலதிகாரிகள் என்றாவது, நீ எங்கே தங்கி இருக்கே?உன் குழந்தைகள் எங்கே படிக்கின்றனர்?உன் வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளதா? எனக் கேட்டுள்ளனரா?இந்த படம் எப்பேர்ப்ட்ட கல் நெஞ்சங்களையும் அசைத்து தன் கீழே பணிபுரிபவனைப்பற்றி ஒரு கணம் யோசிக்க வைக்கும். விசுவாசத்திற்கு எப்படி நன்றி செய்ய வேன்டும் என ஆணித்தரமாக விளக்கும். நட்புக்கு இனம்,மதம், நிறம் மதம் எதுவும் ஒரு தடையல்ல எனவும் புரியவைக்கும்.
கொடியவன் போல்பாட்டின் கேஹ்மர் ரூஜ் அரசால் பீடிக்கப்பட்ட கம்போடியாவின் நாம் பென் நகரில் இருந்து அமெரிக்க, ப்ரிட்டன், ஃப்ரெஞ்சு தூதரகங்கள் மூடப்பட்டு எல்லா மேற்கத்தியர்களும் வெளியேறும் போது நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தியாளர் சிட்னி ஷாம்பெர்க் (Sam Waterston,)ம் அவரது கம்போடிய செய்தி உதவியாளர் பித் ப்ரானும் (Haing S. Ngor,) (won oscar) செத்து செத்து பிழைத்த கனங்கள் ,பட்ட சொல்லோனாத்துயரங்கள் , அதில் இனம் காரணமாக ப்ரான் மட்டும் ஃப்ரெஞ்சு தூதரகத்தால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட , குற்ற உணர்வால் துடிக்கும் சிட்னி . கடைசியில் ப்ரான் என்ன ஆனார்? மீண்டும் தன் நண்பனை சந்தித்தாரா? தன் மனைவி குழந்தைகளுடன் இணைந்தாரா? என்னும் உணர்ச்சிகரமான போராட்டங்களின் தொகுப்பை , சூட்டோடு சூடாக காணத்தவறாதீர்கள்.
படத்தில் மனதை புரட்டிப்போட்ட காட்சிகளின் தொகுப்பு:
1.இன்றளவும் விடுபடாதபுதிராக அமெரிக்க படையினர் "கோஆர்டினேட் பிழை "என சொல்லி கேஸை முடித்த "குடியிருப்பு பகுதியில் போடப்பட்ட ஆகாயமார்க்க குண்டும்,சேதமான குடியிருப்பு பகுதிகளும், பலியான 200க்கும் மேற்ப்பட்ட கம்போடிய மனித உயிர்களும்,உயிருக்கு போராடும் பிஞ்சுகளும் படத்தில் காண்கையில் மனதை உருக்கும்.
2.சிகப்பு கெமர்களிடம் பிடிபட்ட நண்பர்கள் சிட்னியையும் , ஜோன் ஸ்வைனையும், அல் ராக்காஃபையும் காப்பாற்ற ப்ரான் படை வீரர்களை விடாமல் முகத்தில் உயிர்பயம் வரவழைத்து கண்ணீருடன் கைகூப்பி கெஞ்சுவதும், அவர்கள் சொன்ன வேலைகளை செய்து நண்பர்களை மயிரிழையில் உயிர்மீட்டு காத்து வரும் காட்சி மனித நேயத்தின் உச்சம்.
3. கிருஸ்து காலண்டர் இனி செல்லாது,என் சொல்லி year zero என்னும் கம்போடிய காலண்டரை புகுத்தி, "மீண்டும் கற்காலம் செல்வோம் "என்னும் மிஷனும். விவசாயிகளே உண்மையான உழைப்பாளி என்னும் மாவோயிச சிந்தனையை அறைகுறையாக புரிந்துகொண்டு உயிர்பலிவாங்க தயாரான மரண வயல்களும் , "கம்யூனிஸ்டு பார்ட்டி ஆஃப் கம்பூச்சியா" என்னும் பெயரும் மனதையும் வயிற்றையும் ஒரு கலக்கு கலக்கும்.
4.யாருக்கும் எங்கேயும் பாதுகாப்பு இல்லை என்பது போல தூதரகங்கள் காலிசெய்யப்பட்டு,தூதுவர்கள் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என ஓடுவதும், அடைக்கலம் புகுந்த அரசியல்வாதிகளை தூதரகங்கள் பயந்துபோய் துரத்திவிட்டு எதிரியிடமே பிடித்துக் கொடுப்பதும் ,மேற்கத்தியர்களுக்கு மட்டுமே அடைக்கலமும் நாட்டைவிட்டு வெளியேற்றமும் என பாரபட்சம் காட்டும் மனிதாபிமானமற்ற செயல் என அடுக்கலாம்.
5.கொடிய மிருகம் போல்பாட் ஆட்சியை கைப்பற்றியதும் ஊருக்குள் வரும் பீரங்கிகளும் , இவன் நல்லவன் தான் போல என மக்கள் கொடுக்கும் ஆரவரமான வரவேற்ப்பும். அது 1 நாள் கூட நிலைக்காமல் நகர மக்களை உடல் வருத்தி வயல் வேலை செய்ய அடிமைகள் போல துப்பாக்கி முனையில் கூட்டிப்போகும் காட்சி மனதை உருக்கும்.
6.பழகிவிட்டால் கடைசி வரை நின்று உதவும் நல்ல உள்ள உள்ளம் கொண்ட மேற்கத்தியர்களையும் இதன் மூலம் இனம் காண்பீர்கள்.பிரானுக்காக ஒரு காலாவதியான அமெரிக்க பாஸ்போர்டை கொணர்ந்து வயது விபரங்களை சுரணடிஅழித்து, படாத பாடு பட்டு கேமராவும் பிலிமும் கிடைக்க நண்பனை பாஸ்போர்டுக்கு படம் எடுத்து ,டார்க்ரூமில் வைத்து கழுவுகையில் டெவலப்பிங் சொல்யூஷன் திரவம் திடமாகவும்,போட்டோ பேப்பர் மட்டமாகவும் இருக்க, டெவெலப்பான நண்பனின் உருவம் மேஜிக் போல நொடியில் மறைய உயிர் நண்பர்கள் படும் வேதனை சொல்லில் எழுதமுடியாது.
ஒருவழியாகவேறு ஒரு போட்டொவை ஒப்பேற்றி பாஸ்போர்டில் ஒட்டி தூதரக அதிகாரியிடம் தர அவர் அதில் போட்டொவே இல்லை,அழிந்துவிட்டது என திருப்பி கொடுத்து நண்பனை வெளியேறியே ஆக வேண்டும் என் நிர்ப்பந்திக்க அவர்கட்கு ஏற்படும் சொல்லோனாத் துயரம் . கடவுளே ! யாருக்கும் ஏற்படக்கூடாது.
7. உயிர் தப்பிய நண்பன் சிட்னி அமெரிக்காவில் நண்பன் ப்ரானின் ஆங்கிலம் தெரியாத குடும்பத்துக்கு செய்யும் பேருதவி,பிரிந்து போன நண்பன் ப்ரான் 4 வருடமாக கொடிய மரணவயலில் வேலை செய்து ஒவ்வொரு முகாமாக தப்பித்து தாய்லாந்து எல்லை செல்ல படும் மரண வேதனை,அவனைக்காக்க அமெரிக்காவில் இருந்து சிட்னியால் எடுக்கப்படும் 500க்கும் மேற்ப்பட்ட முயற்சிகள்,மனுக்கள்.
8.1976 ஆம் ஆண்டுக்கான சிறந்த பத்திரிக்கையாளனாக தேர்ந்தெடுக்கப்பட்டு புலிட்ச்சர் விருது வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சியில் இந்த மகத்தான விருது பாதி என் நண்பன் ப்ரானுக்கு சேரவேன்டும் , அவன் உதவியில்லாமல் என்னால் இதை நிகழ்த்தியிருக்கவே முடியாது என அருகே இல்லாத நண்பனுக்கும் விருதை பங்கிட்டுக்கொடுக்கும் பாங்கு.அடுத்தவர் உழைப்பை தன் உழைப்பென சொல்லி தன் பெயரை போட்டு நல்ல பெயரை வாங்கிக்கொள்ளும் எவருக்கும் ஒரு செருப்படி. அந்த பாங்கு பார்ப்பவரின் கண்களை நிச்சயம் குளமாக்கும்.
9.மரணவயல்களில் நிகழ்த்தப்படும் மூளைச்சலவை சொற்பொழிவும் ,படித்தவர்களையும் , புத்த துறவிகளையும், இசுலாமியர்களையும், ஊனமுற்றோர்களையும். வயதானோர்களையும் சிறைபிடித்து கண்களைக்கட்டி பின்னந்தலையில் சிங்களகோழைகள் போல சுட்டும், உயிருடன் உள்ள போதே தோலை உரித்தும் , சுத்தியால் மண்டையை உடைத்தும் , தோள் எலும்புகளை அடித்து உருகுலைத்தும்,பிளாஸ்டிக் காகிதம் கொண்டு முகத்தை பொத்தி மூர்ச்சையாக்கி கொன்றும் , பின்னந்த்தலையில் ட்ரில் பிட்டால் திருகிட்டும் ,பின்னர் பிணங்களை நீரில் வீசிவிடுவதும், மாஸ் க்ரேவ் என்னும் ப்ரேதக்குவியல்களை ஒரெ குழியில் கொட்டி அடக்கம் செய்வதும்.கொல்வதில் தான் எத்தனை விதம்? கொடுமையின் உச்சமாக கைதியையே தனக்கான சவக்குழியை தோண்டச்செய்யும் "நமக்கு நாமே திட்டம்"அப்பப்பா!.
10.ப்ரான் விவசாயக் கைதிகளுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் 2 மிகச்சிறிய தட்டு அரிசிக்கஞ்சி குடித்தும் வயிற்றுப்பசி அடங்காமல் நிலத்தில் மேய்ந்த ஓணானை பிடித்து கஞ்சிக்கு தொட்டுக்கொள்ளுவதும், உச்சக்கட்ட பசியில் பசுமாட்டுத் தொழுவத்தில் திருட்டுத்தனமாக நுழைந்து பசுவின் கழுத்துமணியை பிடித்துக் கொண்டே , பசுவின் கழுத்து சதையை குழைத்து கீறி ரத்தம் குடிப்பதும் நமக்கு உண்மையான பஞ்சம் என்றால் என்ன? என காட்டிவிடும்.
11. படத்தில் இரு நண்பர்களையே பிரதானமாக காட்டியிருந்தாலும் நட்புக்கு பாலமாக,சிகரமாக வந்த மற்ற நண்பர்கள் ஜோன் ஸ்வைன் (Julian Sands) மற்றும் அல்ராக்காஃப் (John Malkovich ) பற்றி குறிப்பிடாவிட்டால் கட்டுரையே முழுமையடையாது.அவ்வளவு நேர்த்தியான நடிப்பும் அவதானிப்பும். இது போன்ற நண்பர்கள் கிடைத்தால் ”பிறந்த பயனை நான் அடைந்தேன்” என ஒருவன் சொல்லிக்கொள்ளலாம்.
12. "To keep you is no benefit, to destroy you is no loss". "உன்னை உயிருடன் வைத்திருப்பதால் எனக்கு லாபமேதுமில்லை, உன்னை கொன்று புதைப்பதால் நஷ்டமேதுமில்லை" என்ற சித்தாந்தப்படி களமிறங்கிய இந்த கயவர் கூட்டம் சுமார் 17 லட்சம் மக்களை (அந் நாளின் 29% மக்கள்தொகை) கொன்று குவித்துள்ளனர் என ஊடகங்களில் படித்து அறிகையில் வயிறெரிகிறது.
இந்த கயவன் போல்பாட் 1998 ஆம் ஆண்டு வியட்நாமிய படையினரின் வீட்டு சிறையில் மிக எளிதாக தூக்கத்திலேயே உயிர்விட்டதைத் தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. விந்தையான உலகமடா? என்று தான் நினைக்கத்தோன்றுகிறது.
டிஸ்கி:
உலக சினிமாக்கள் நமக்கு கடந்த கால வரலாற்று நிகழ்வுகளையும், உலகின் நடப்பு நிகழ்வுகளையும்,வெவ்வேறு இன , மத, மக்களின் கலாச்சார வழக்கங்களையும் நமக்கு படிப்பிக்கின்றன.ஆகவே உலக சினிமாக்களை ஆதரியுங்கள். ஒரு 500பக்க புத்தகம் சொல்லி புரியவைக்கும் விஷயங்களை அதிர்வலைகளை ஒரு 2டே மணி நேர உலகசினிமா ஏற்படுத்தக்கூடும். எனவே உலக சினிமாக்களை பாருங்கள் பிறருக்கும் அறிமுகம் செய்யுங்கள். நன்றி!
===========================================
படத்தின் முன்னோட்டக் காணொளி
================================ போல்பாட்டும் நாஜிகள் போலவே செய்த கொலைகளுக்கு டாகுமெண்டேஷன் செய்திருக்கிறான்.ஏற்கனவே முன்னோர் இழைத்த தவறுகளில் இருந்து பாடம் கற்காமல் இவனும் ஒரு ப்ளூப்ரிண்டை விட்டு போயிருக்கிறான்.அதற்கான புகைப்படத்தொகுப்பு :-
இந்த படத்தின் காணொளியை யூட்யூபில் தரவேற்றிய அன்பருக்கும்,அதை வழங்கிய யூட்யூபுக்கும் நன்றி ,இந்த படத்தினைப் பற்றிய தொழில்நுட்ப தகவல்களை தந்து உதவிய ஐ எம் டி பி மற்றும் விக்கிபீடியாவுக்கும் நன்றிகள் பல.
-------------------
நான் தனிமனிதனாக யாருக்கும் அடங்காதவனாக ஜன நெரிசலான தெருவின் திண்ணை அரட்டையில் இருக்கும் போது இது போன்றதொரு பட்டியலை கொடுத்து திட்டுடா கார்த்தி என்றால் பக்கம் பக்கமாக திட்டியிருப்பேன்,சில சமயம் புகழ்ந்தும் இருப்பேன்.ஆனால் ஊடகம் என வரும் போது ஒருவரை பிடிக்கும் என்றோ? பிடிக்காது என்றோ? சொல்லுவதில் மிகவும் தயக்கமாக உள்ளது.
என்னதான் ஆயிரம் நியாய தர்மம் இருந்தாலும் ஒருவரை வெறுப்பது அழகல்ல.அதுவும் குரு ரமண கீதம், ராஜாவின் ரமண மாலை போன்றவற்றை அனுதினமும் கேட்டுவிட்டு அவ்வாறு செய்வது நன்றாக இருக்காது,ஆகவே சிறிது நாசூக்காக சொல்ல முயன்றிருக்கிறேன்.அல்லது இந்த பதிவுக்கு மட்டும் கொஞ்சம் விடுமுறை விட்டிருக்கிறேன்.யார் மனதையாவது காயப்படுத்த நேர்ந்தால் மன்னிக்கவும்.
1. இசையமைப்பாளர்:-
பிடித்தது:-
ராகதேவன் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை தான் ,என் அம்மாவை இழந்து, ரிசெஷனில் வேலை இழந்து , பல துயரங்கள் என்னை ஆட்கொண்ட போதும் ஆற்றுதலை தேற்றுதலை ,ஆழமான தெய்வ பக்தியை, அம்மாவின் மீதான பாசத்தை, மனைவியின் மீதான காதலை, வாழ்வின் மிக அற்புதமான கணங்களை அழகாக மீட்டுக்கொடுத்தது ராசையாவின் இசையே, நன்றி ராஜா சார்.
பிடிக்காதது:-
யுவன் ஷங்கர் ராஜா தான், அப்பாவின் சட்டைப்பையில் கைவிடாமல் பெரும்பாலான மக்கள் கேட்டு லயித்த மேற்கத்திய ஆல்பங்களை சுட்டு , பாடுபட்டு இசையமைத்து எடுத்த பெயரையும் கெடுத்து சட்டியை கீழேபோட்டு உடைத்துக்கொள்வது.இவரின் சொந்த சரக்கு மிக நன்றாகவே இருக்கும்:-உதாரணம் :- பருத்திவீரன்
2. பாடகர் :-
பிடித்தது:-
எஸ்.பி.பி தாங்க, என்ன அருமையான குரல் வளம்?!, ஆயிரம் நிலவே வா ! வில் எம்ஜியாருக்கு பிண்ணணி பாடி துவங்கிய பயணம் இன்னும் தடங்கல் இல்லாமல் எட்டுத்திக்கும் முழங்குகிறது,இவர் யாருக்கு பாடினாலும் அவரே பாடினது போல இருக்கே?எப்புடி?இவரின் தங்கத்தாமரை மகளே! எனக்கு மிகவும் பிடிக்கும்.
பிடிக்காதது:-
வேற யாரு?உதித் நாரா(வா)யன் தான், பெரியம்மா (பிரியமான)பொண்ணை ரசிக்கலாம் தப்பில்லை என பாடி நம் ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாத்தித்தவர்.இதுக்கு மேல வேணாம், இவருக்கெல்லாம் மேலும் மேலும் தமிழில் வாய்ப்பு தேடி வருதே? அதைச் சொல்லனும்!இவருக்கு தமிழ் உச்சரிக்க சொல்லிக்கொடுத்து வைரமுத்துவே வெறுத்துவிட்டாராம்.
3. எழுத்தாளர்;-
பிடித்தது:-
எழுத்து சித்தர் பாலகுமாரன் தாங்க,எனக்கு மிகவும் தன்னம்பிக்கை கொடுத்தவர்.ஆதர்ச மனிதர்.
இவர் எழுதும் கதையில் வரும் கதாபாத்திரங்களின் தொழில்கள் எல்லாம் அந்த துறைவல்லுனராலேயே குற்றம் கண்டுபிடிக்கமுடியாதுங்க,அவ்வளவு நேர்த்தி,ஆங்கிலமே தெரியாமல் இருந்த எனக்கு டீடோடலர், வர்ஜின், ஸ்காலர், டிப்லோமாட் , ஸ்டிலடோ போன்ற கலைச்சொற்களை எளிய எழுத்தில் படிப்பித்தவர்.கெட்டதை சொல்லி நல்லதை சொல்பவர்.இவரின் கூடல் குறித்த வர்ணனைகளுக்காகவே இவரை படிக்க ஆரம்பித்தேன், நான் மேலும் படிக்க படிக்க அது என் வாழ்வை புடம் போட உதவியது என்றால் மிகைஇல்லை, நன்றி ஐயா.
பிடிக்காதவர்:-
வேறு யாரு? அதுதான் நம்ம சாரு!.
எவ்ளோ பெரிய எழுத்தாளராக வேணுமனா இருக்கட்டும்க, அடுத்தவரின் புகழில் வயிறு எரிந்தால் அது அழகா?என்னை படி, என்னை படி, என்னை மட்டுமே படி , நானே உயர்ந்தவன், எல்லோருமே மட்டம் ,அடுத்தவரின் படைப்புகள் தலையணைகள், அல்லது மலம் துடைக்கும் காகிதங்கள், இதுவே இவரின் வேத வசனம்,என்ன தான் கூவினாலும் ஒருவருக்கு விதிப்பலன் இருந்தால் மட்டுமே புகழும் விருதும் தேடிவரும். கடவுளே! முதல் பத்தி நினைவுக்கு வந்ததால் நான் எஸ்கேப்பு.
4.இயக்குனர்:-
பிடித்தது:-
வேறு யாரு? நம்ம மண்ணின் மைந்தர் நெறியாள்கையாளர் தங்கர் பச்சான் தாங்க,இவர் எல்லாம் நான் படிக்கையிலேயே படம் எடுத்திருந்தால் நான் கூட கலெக்டராவோ டாக்டராவோ ஆயிருப்பேனோ?என்னவோ?(அவ்வ்வ்வ்) இவரின் அழகி, தென்றல்,பள்ளிக்கூடம்,ஒன்பது ரூபாய் நோட்டு என எதுவும் சோடை போனதில்லை, நடிகர்களுக்கு பதிலாக மண்ணின் மைந்தர்களை அறிமுகப்படுத்தும் இவரின் அணுகுமுறையும் நெறியாள்கையும் எப்போதும் என் ஃபேவரிட் தான்.
பிடிக்காதது:-
செல்வராகவன், இவரின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிக்கப்போன என் சினிமாப்பைத்தியமான நண்பன் அரைப்பைத்தியமாக திரும்ப வந்தான், எப்படி தெரியுமா? இரண்டாம் உலகப்போரின் யூத கைதி போல, பசியில் துடித்து,எதோ ஒரு ரசாயன மேக்கப்பால் உடம்பெல்லாம் சிரங்கு வந்து 3 மாதம் நடித்ததற்கு பணமும் தராமல் சென்னைக்கு வித்தவுட் ரயிலில் வந்தானாம். இவரெல்லாம் படம் எடுத்து என்ன ஆகப்போகுது? இதுபோல 500க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர் அல்லாத எக்ஸ்ட்ராக்களை பிடித்து இப்படி கொடுமைப்படுத்தினாராம், என் நண்பன் இப்போ ஒருவழியாக மனதளவில் தேறி சைட் சூபர்வைசராக இருக்கிறான்.
5. நடிகர்:-
பிடித்தது:-
கொள்கை,கருத்து வேறுபாடுகள் மலையளவு இருந்தாலும் அட்டகாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த கலைஞானி கமலஹாசன் தானுங்க.இவரின் பிகமி, ஆண்டி மேரேஜ், ஏத்திசம் போன்ற எவ்வளவோ பிடிக்காதவை இருந்தாலும் இவரின் படம் என்றால் எனக்கு உயிர். இவர் திட்டி கேடிருக்கீங்களா? நான் கேட்டிருக்கேன். ஹய்ட் ஆஃப் அப்யூசிவ் என்ற சொல் சரியாக இருக்கும் அப்படி ஏசுவார். என் கலை இயக்குனர் நண்பன் கமல விநாயகம் அவனை விருமாண்டி ஷூட்டிங்கின் போது ஏசினார் பாருங்கள், எதற்கு? யாரொ அவனை கமல் என்று கூப்பிட்டது இவர் காதில் விழுந்ததற்கு, நாங்கள் கூசிப்போனோம். இவரிடம் மிகவும் பிடித்ததே , அடுத்த அரை மணியில் அதே நபரிடம் மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்காமல் மேலும் வேலை வாங்கியது தான். இருந்தாலும் இவரின் நடிப்பு எனக்கு எதையும்விட மிகவும் பிடிக்கும்.
பிடிக்காதது:- விஷால் தாங்க, என்ன கொடுமையான பாடி லாங்குவேஜும், மிடுக்கு என்று நினைத்து இவர் செய்யும் துடுக்கும், வாயை வேறு கோணிக்கொண்டு பேசுவது சகிக்காது, இவர் பார்க்க பாய் நெக்ஸ்ட் டோர் ஆஃப் தமிழ் நாடு போல இருந்தாலும் கொஞ்சம் ஹோம் ஒர்க் செய்து இன்னும் வரலாம், இவர் நிறைய படங்களில் நடிகர் அர்ஜுனை போய் இமிடேட் செய்வது போலிருக்கிறது.
6. நடிகை:-
பிடித்தது:-
நடிகை அர்ச்சனாங்க இவர் நடித்த எந்த படமும் அச்ட்டையாகவோ ஏனோதானோன்னோ இருக்காதுங்க,கடைசியாக பார்த்து வியந்தது ஒன்பது ரூபா நோட்டு.
இடைச்செருகலாக விதி முறையை தளர்த்தி என் ஜென்ம சாபல்யத்திற்காக:-
குத்து ரம்யா என்னும் திவ்யஸ்பந்தனா பற்றியும் சொல்லிக்கிறேன் . என்னமோ இவங்க படம் அதிகமா செய்யாட்டியும் கூட எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.ஆள் கும்முனு இருப்பதாலோ?(இருக்கும் , இருக்கும் )
பிடிக்காதது:-
நமீதா:- மாமிச மலை போல உருண்டும், நிலம் அதிர நடந்தும் , முழுத்திரையையும் மறைக்கும் வாழும் சூர்பனகை, நமீதா ரசிகர்கள் என்னை மன்னிப்பாராக. இவர் கொஞ்சம் ஸ்லிம்மாகி தெறமை காட்டுனாதான் என்னா?
7. அரசியல்வா(ந்)திகள்:-
பிடித்தது:- புரட்சித்தலைவி தான், ஏனோ தெரியலை இந்த அம்மாவை எவ்வளவோ முயன்றாலும் வெறுக்க முடியவில்லை, துணிச்சலுக்கு பெயர் போனவர் என்றாலும் எடுப்பார் கைப்பிள்ளை இமேஜால் தடம் புரண்டவர், இன்னும் ட்யூன் செய்து கொண்டு குறைகளை திருத்திக்கொண்டால் எல்லோர் மனதிலும் இடம்பிடித்து இனியாவது வெறுப்பாவது சம்பாதித்துக்கொள்ளாமல் இருக்கலாம்.
பிடிக்காதது:-
வேறு யார் ? சாட்சாத் சிக் ஃபேஸ் ஆற்காடு வீராசாமிதான். நிலவும் ரிசெஷனில் எல்லா தொழிற்சாலைகளுக்கும் திட்டமிட்ட பகுதி நேர மின்வெட்டு அறிவித்து பலபேரின் வேலையை பறித்து அவர்களை பகலாட்டம் சினிமா தியேட்டரில் பார்க்க வைத்தவர், கடந்த ஆட்சியையே குறைசொல்லி திட்டியே வரும் அவசர பழியை திசைதிருப்புவார்.
நான் ஊருக்கு வந்து தங்கிய ஒருமாதத்தில் நான் யாரையாவது திட்டினேன் என்றால் இவராகத்தான் இருக்கும். எங்கள் ஏரியாவில் இன்னும் நான்கு முதல் ஆறு மணி நேர அறிவிக்காத மின்வெட்டு அமலில் உள்ளது, சொல்லிவைத்தால் போல நடு நிசி 12-00 மணிக்கு மின்வெட்டாகி 2-00 மணிக்கு வரும் போகும் அவலமும் உண்டு, இவரை திட்டி ஓய்ந்தபின் யூபிஎஸ் இன்வெர்டர் வாங்கிவிட்டேன், இப்போது இவரை நினைப்பதே இல்லை.
திமுக ஆட்சியை மக்கள் வெறுக்க முக்கிய காரணிகளில் இவருக்கே முதலிடம்
நாமாக நமக்கு பிடித்த பிடிக்காதவற்றை எழுதுவது சுய புராணம் பாடுவதாக இருக்கும் என்பதனாலோ என்னவோ? தொடர்பதிவிட நண்பர்கள் மிக அன்புடன் அழைக்கிறார்கள். தமிழ் வலையுலக சுவாரஸ்யங்களில் இது போன்ற தொடர் பதிவுகளும் இன்றியமையாத ஒன்று. என்னை பாசத்துடன், கொஞ்சி, கெஞ்சி அழைத்த நண்பர் செந்தில்வேலன் மற்றும் பின்னோக்கிக்கும் மனமார்ந்த நன்றி!!
இத் தொடர் இடுகையின் விதிகள்:
1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருத்தல் வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும் (எங்கே? தொடர் பதிவுன்னாலே கருங்கல்லை கொண்டு அடிக்கிறாங்கஜி)
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இந்தத் தொடரைத் தொடர நான் விரும்பி அழைக்க இருப்பது:-
அது ஒரு கனாக்காலம் திரு. சுந்தரராமன் அவர்கள் ( அமீரகத்தில் இருக்கும் இவர் ,எங்கள் எல்லொருக்கும் சொந்தக்காரர். மிக யதார்த்தமான எழுத்துக்களுக்கும் சொந்தக்காரர்)
ஜோதிஜி தேவியர் இல்லம். (திருப்பூரில் இருந்து புறப்பட்ட இந்த தேசிய கீதம், இவரின் நுட்பமான வார்த்தை பிரயோகங்கள் நமக்கு புதிய வாசிப்பனுபவத்தை தரும்)
மிஸ்டர் .ரோமியோ(பாய்)என்னும் ராஜராஜன் (இளமை துள்ளலுடன் எழுத என்னமோ எழுதுகிறேன் என்னும் பெயரில் சென்னையிலிருந்து வண்டியை கிளப்பியுள்ளார்)கூடிய விரைவில் பட்டையையும் கிளப்புவார்.
செ. சரவணகுமார் ( சவுதியில் இருக்கும் இவர். லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்டு என்பது போன்ற புனைவுகளுக்கு சொந்தக்காரர்.)
================================================
டிஸ்கி:-
மேலே இப்புடி சொல்லியிருக்கானே,அப்படி சொல்லி இருக்கானேன்னு தப்பா நினைக்க வேண்டாம்,அது எல்லாம் ஒரு லுல்ல்ல்லுல்லாயிக்கு தான் அப்படின்னு மட்டும் சொல்ல மாட்டேன். வழக்கம் போல நட்புக்கரம் கொடுக்கும் வாங்கும்
குட்ஃபெல்லாஸ்:-நியூயார்க்கின் க்ரைம் ரிப்போர்டரான நிகோலஸ் பிலக்கியின் உண்மை சம்பவங்களை அடிப்படியாக கொண்டு எழுதப்பட்ட "நைஸ்கை" என்னும் செமிஃபிக்ஷன் நாவலை தழுவி , மார்ட்டின் ஸ்கார்சஸியின் மிக அற்புதமான இயக்கத்தில் ,1990 ஆம் ஆண்டு வெளிவந்த க்ரைம் ட்ராமா த்ரில்லர் வகைப்படம் இது.
கேங்ஸ்டர் வாழ்க்கையே மிக ஆடம்பரமும்,உச்சகட்ட கொண்டாட்டமும் கொண்டது தான் , அதை 2 மணி 20 நிமிடத்தில் ஒவ்வொரு காட்சியையும் டீடெய்லாக விளக்கி பிரித்து பேன் பார்த்திருக்கிறார் இயக்குனர் . ஹாலிவூட்டில் இதுவரை வெளிவந்த எல்லா கேங்ஸ்டர் படங்களிலிருந்தும் முற்றிலும் மாறுபடும் தனித்துவம் இந்த படத்துக்கு உண்டு,
படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் தன்னை ஒரு மாப்ஸ்டராகவே பாவிக்க செயத ப்ரொஃபெஷனலிசம் , இயக்குனர் மார்டின் ஸ்கார்ஸஸி யாருக்கும் எதையும் விளக்க முற்பட்டு எதிலும் எந்தவிதமான காம்ப்ரமைஸும் செய்து கொள்ளவில்லை. அதிரடியான திருப்பங்கள் , சரவெடி போன்ற நீண்ட வசனம்,கூடவே நிறைய ப்ளாக் ஹ்யூமர் காக்டெயில்,
படத்தின் ரியாலிடிக்காக அமெரிக்காவின் நிஜ கேங்ஸ்டர்களிடம் நிறைய ஆலோசனைகள் கேட்ட பின்னரே படக்குழுவினர் அனைவரும் ஒன்றி நடித்தனராம் . படம் முழுக்க அவ்வளவு கதாபாத்திரங்கள் , அத்தனையும் அப்போது அமெரிக்காவில் நிஜமாக வாழ்ந்த கேங்ஸ்டர்களை வைத்து பின்னப்பட்டவையே , படையப்பா அருணாச்சலம் போன்ற படங்களையே மிஞ்சும் அளவுக்கு வதவதவென கூட்டம்.
இந்த படம் மூன்று தலைமுறையாக கேங்ஸ்டர் தொழிலில் இருக்கும் மூன்று கேங்ஸ்டர்களின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றிய கதை,படம் 1958ஆம் ஆண்டு களத்தில் துவங்கி 1987 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தை தொட்டு நம் மனதில் நீங்காத அனுபவமாக பதிக்கிறது. நீங்கள் ஒரு கேங்ஸ்டர் பட பிரியர் இன்றால் இந்த படம் பார்க்காமல் உங்கள் கேங்ஸ்டர் திரைப்பட தேடுதல் பயணம் முழு நிறைவடையாது.
கதை:-
தாவு தீர்ந்து போன ,உயிர்பயம் கொண்ட கேங்ஸ்டரான ஹென்றி ஹில் (ரே லியாட்டா) எஃப்பிஐ யின் விட்னெஸ் ப்ரொடெக்ஷன் ப்ரொக்ராமில் அப்ரூவராகி தன் முன்னாள் கேங்க்ஸ்டர் சகாக்கள் இருவரான ஜிம்மி (ராபர்ட் டெனீரோ) மற்றும் பாலீ யை (பால் சொர்வினோ) எஃப்பிஐ வசம் மாட்ட வைத்து 20 வருடத்துக்கும் மேல் கடுங்காவல் தண்டனை வாங்கித்தந்துவிட்டு , இன்று வரை தான் ஒரு சராசரி மனிதனாக வாழும் உண்மைக்கதை.படம் பார்க்காதவர்கள் ஸ்பாய்லர் வேண்டாம் என்பவர்கள் ட்ரெய்லரை பார்த்துவிட்டு தல ஹாலிவுட் பாலாவின் செம கலக்கலான விமர்சனத்தையும் படித்துவிட்டு செல்லவும்.
இதற்கு மேல் முழு கதை சுருக்கம்,இப்போவே ஸ்பாய்லர் அலர்டு குடுத்துக்கறேன்.
ஐரிஷ் மற்றும் இத்தாலிய கேங்ஸ்டர்களுக்கு பெயர்போன கிழக்கு அமெரிக்காவின் ப்ரூக்ளினில், பள்ளியில் படிக்கும் ஐரிஷ்-அமெரிக்க சிறுவன் ஹென்றி, தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் இத்தாலிய கேங்ஸ்டரான் பாலீ யிடம் பகுதி நேரமாக வேலைக்கு சேர்கிறான்,இதுவே துரிதமாக வாழ்வில் முன்னேறும் வழி என்பதை புரிந்துகொண்டு இளம் வயதிலேயே கடத்தலை கற்க துடிக்கிறான்.
அதில் இவனை மிகவும் கவர்ந்த ஐரிஷ் இனத்தவனான ஜிம்மியிடம் (ராபர்ட் டெனீரோ) கடத்தல் தொழிலை துரிதமாக கற்கிறான். இதனால் எங்கு போனாலும் ராஜமரியாதை தேடி வருகிறது.முதல் முறையாக கார்கோவில் திருடிய சிகரெட்டுகளை விற்கும்போது போலீசிடம் பிடிபட்டு வாய் திறக்காமல் இருக்க,அன்றே கேங்ஸ்டரின் அகராதியில் வயதுக்கு வருகிறான். பாராட்டப்பட்டு அந்தஸ்து பெருகிறான்,அருகாமையிலுள்ள கேங்ஸ்டர்களின் நன் மதிப்பையும் பெற்று விடுகிறான்.
இவனுக்கு தேவைக்கு அதிகமாக டாலர்களும் ஆடம்பர காடிலாக் காரும் பெண்களும் மதுவிருந்தும் திகட்ட திகட்ட கிடைக்கிறது, தனது 21 வயதிலேயே புத்திசாலி யூத பெண்ணான கேரென் ஐ , தான் ஒரு ஹால்ஃப் ஜூவிஷ் (அரை யூதன் ) என் பொய் சொல்லி டேட்டிங் செய்து நல்ல அபிமானத்தை பெற்று , திருமணமும் செய்கிறான். ஆடம்பர மாளிகையும், காரும் தினசரி கேளிக்கை விருந்தும் , உலக நாடுகள் சுற்றுலாக்கள் என நாள் வேகமாக ஓடுகிறது.இரு பெண் குழந்தைகளும் அடுத்தடுத்து பிறக்கின்றன.
ஜிம்மிக்கும் (ராபர்ட் டெனீரோ) வயதாகிறது,டாமி (ஜோ பெஸ்ஸி ) என்னும் இத்தாலிய கேங்ஸ்டர் சைக்கோபாத் சகாவைப் பற்றி இப்போது சொல்லியே ஆகவேண்டும், மிக காமெடியாக எல்லோரும் வயிறு குலுங்க சிரிக்குமாறு பேசிவிட்டு சடனாக சீரியஸாகி துப்பாக்கியை எடுத்து சுட்டுவிடும் ஆசாமி, மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் என்னும் கூற்றுக்கேற்ப அவனின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இவன் மாறுகிறான்.(இந்த அற்புதமான சைக்கோ பாத்திரத்திற்கு 1991 ஆம் வருடத்திற்கான சிறந்த சப்போர்டிங் ரோலுக்கான ஆஸ்கார் கிடைத்ததாம்.)
இப்போது அமெரிக்க மாபியா வரலாறே இவர்கள் மூவரால் திரும்ப எழுதப்பட்டது என்றால் மிகையில்லை. அந்த அளவுக்கு கள்ளக்கடத்தல்,கட்டை பஞ்சாயத்து என அதகளம் செய்கின்றனர்.
அதில் "made man”(made = இத்தாலிய ஐதீகப்படி ஒரு கேங்ஸ்டராக அவதாரம் எடுக்க ஒருவன் வாங்கிக் கொள்ளும் பாப்டிசம்) "பில்லி பாட்” என்பவன் ஒரு விருந்தில் சைக்கோபாத் சகாவான டாமியை பார்த்து "ஷைனிங் பாய்" (சிறுவயதில் ஷூ பாலீஷ் போட்டவன்) என கிண்டலாக அழைக்க, மிகக்கடுப்பான டாமி பில்லி பாட் ஒரு மேட்மேன் என்றும் யோசிக்காமல் அவனை விருந்து முடிந்து எல்லோரும் போனதும் கடுமையாக தாக்க,ஜிம்மியும் கூட சேர்ந்து தாக்க, ஹென்றியும் சேர்ந்து தாக்குகிறான்,
டாமி ஆத்திரம் அடங்காமல் துப்பாகியாலும் சுடுகிறான்.மூர்ச்சையான பில்லி பாட் ஐ டாமியின் கார் டிக்கியில் போட்டுக்கொண்டு புதைக்க எடுத்துப்போகும் வழியில் தான் படம் துவங்குகிறது. போகும் வழியில் பில்லி பாட் டிக்கிக்குள் முனகி சத்தம் செய்ய, காரை நிறுத்தி டிக்கியை திறந்து மீண்டும் அவனை கத்தியால் குத்தியும்,துப்பாக்கியால் சுட்டும் முழுக்க கொன்று புதைக்கின்றனர்.
எப்போது டாமி ஒரு இத்தாலிய மேட்மேனை கொன்றான் என தெரிந்ததோ? அப்போதே பாலீ டாமியிடமிருந்து ஹென்றியை விலகியிருக்க சொல்கிறான்,மேட்மேனை கொன்றவனை இத்தாலிய மாப்ஸ்டர்கள் குடும்பத்தின் கடைசிஆள் வரை கொன்று பழி தீர்க்காமல் விடமாட்டார்கள் என அறிவுரை சொல்கிறான்.
ஹென்றி இப்போது வெள்ளிக்கிழமையை மனைவியுடனும் சனிக்கிழமையை காதலிகளுடனும் விருந்தில் உல்லாசமாக கழிக்க பழகுகிறான்,புதிய காதலியாக ஜானீஸ் என்னும் அழகிய இளம்பெண் கிடைக்கிறாள்,தொழிலிலும் பேருதவியாக இருக்கிறாள். ஹென்றி பணமும் தண்ணீராக செலவு செய்கின்றான். இதனால் இன்னும் அதிகமாக பணம் தேவைப்படுகிறது, கொஞ்சம் கொஞ்சமாக போதை மாத்திரைக்கு அடிமையாகிறான். இதற்கிடையே இவர்கள் மூவரும் பில்லி பாட்டை புதைத்த இடத்தில் குடியிருப்பு வரப்போவதை அறிந்து அந்த இடம் சென்று மீண்டும் அந்த சவக்குழியை தோண்டி சடலத்தை வெளியில் எடுத்து கொளுத்துகின்றனர்.
ஹென்றி தன் காதலி ஜானீஸ் ஐ தன் வீட்டின் அருகிலேயே ஒரு அடுக்கு மாடியில் உயர்தர வீடெடுத்து குடிவைக்கிறான். மனைவி கேரனுக்கு இது பெரிய தலைவலியாக மாறி இருவரையும் சுட்டுக்கொன்றுவிடுவேன் என் மிரட்டுகிறாள்.இவனுக்கும் கேரன் மேல் வெறுப்பு கிளம்புகிறது.மனைவியின் எல்லா எதிர்ப்பையும் மீறி இவர்கள் காதல் இனிதே தொடர்கிறது.
வருடம்1974 :- இவனின் குடும்ப பிரச்சனை ஜிம்மியிடமும், பாலீயிடமும் செல்ல ,அவர்கள் அவனை மனைவியை வெறுக்காதே,காதலியுடன் அதிகம் சுற்றாதே! என அறிவுறுத்தி, டாம்பா எனும் ஊரில் ஒரு சூதாடியிடமிருந்து பணம் கறக்கும் கட்டைப்பஞ்சாயத்துக்கு அவனை அழைத்து செல்கின்றனர், மிருககாட்சி சாலையில் வைத்து அந்த சூதாடியை அடித்து நையப்புடைத்து சுடப்போக, அவன் அப்போதும் தன்னிடம் பணம் இல்லை என்றே சொல்ல. அவனை டாமி தலைகீழாக கட்டிப்போட்டு சிங்கத்துக்கு இறையாக வேலியை தாண்டி வீசப்போக அவன் பணம் தந்துவிடுகிறேன் என தன் சகோதரிக்கு போன் செய்து பணம் கொண்டு வர சொல்கிறான்,அவன் சகோதரியோ எஃப்பிஐ இல் டைபிஸ்டாக இருக்க போலிஸ் வசம் வலுவான கேஸாக மாற ஜிம்மிக்கும் ஹென்றிக்கும் 10 வருட சிறை வாசம் கிடைக்கிறது,
சிறையில் ராஜா போல நினைத்ததை சமைத்து சாப்பிட்டு,மது மாது கொண்டாட்டம் என மிகவும் ரசித்து அனுபவிக்கின்றனர். இப்போது புழக்கத்தில் உள்ள கோகெய்ன் என்னும் விலையுயர்ந்த போதை மருந்தை தன் மனைவி கேரன் மூலம் சிறைக்குள் தருவித்து அதை உள்ளே சில்லரையாக விற்க அமோகமான வருமானம் கிடைக்கிறது.சைக்கோபாத் டாமி இப்போது கேங்ஸ்டராக வெளியே கொடி கட்டை பறக்க, இவர்கள் அதீதமான லஞ்சம் மற்றும் அன்பளிப்புகளால் நான்கே வருடங்களில் பெயிலில் விடுதலை ஆகின்றனர்.
சிறையிலிருந்து வெளிவந்த ஜிம்மி,ஹென்றி,டாமி,பாலி மற்றும் இன்ன பிற கும்பல் சேர்ந்து அமெரிக்காவின் புகழ்பெற்ற லூஃப்தான்ஸா ஹெய்ஸ்ட் என்னும் கார்கோ பணக்கொள்ளையை வெற்றிகரமாக செய்து முடிக்கின்றனர்.இதன் மூலம் எட்டேமுக்கால் லட்சம் அமெரிக்க டாலர்கள் கிடைக்கிறது,
இதனால் நாளுக்கு நாள் இவர்களின் கொட்டம் இன்னும் அதிகமாகிறது, பெரும்பங்கு கொள்ளை பணத்தை ஜிம்மியும் (ராபர்ட் டெனீரோ) டாமியுமே எடுத்து கொள்கின்றனர், ஹென்றிக்கும் அதில் கணிசமான பங்கு கிடைக்கிறது, ஹென்றிக்கு இப்போது கோகெய்ன் மூலம் கிடைக்கும் பணமே பெரிதாக இருக்க கொள்ளையில் கவனம் செல்லவில்லை.கொள்ளையில் பங்கு பெற்ற யாரும் புதிதாக எந்த ஆடம்பரப்பொருளோ சொத்தோ வாங்கக் கூடாது! என ஜிம்மி கட்டளையிடுகிறான்.அதை மதிக்காமல் ஆடம்பரப் பொருட்கள் வாங்கிக் குவித்தவர்களையும், பணம் கேட்டு மிகவும் நச்சரித்தவர்களையும் சகட்டுமேனிக்கு ஜிம்மியும் டாமியும் போட்டுத்தள்ளுகின்றனர் , அடுத்தடுத்து சடலங்கள் போலிசாரால் குப்பை தொட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டு மிகத்தீவிரமாக விசாரிக்க தொடங்குகின்றனர், வலுவான ஆதாரத்திற்காக வலைவீசிவிட்டு காத்திருக்கின்றனர்.
24x7 என ஹென்றியின் போதை மருந்து கடத்தல் பிழைப்பு ஓடுகிறது,பணம் கொட்டோ கொட்டென கொட்டுகிறது.போதைக்கும் மிகவும் அடிமையாகிறான். தன் குழந்தையை பார்த்துக் கொள்ளும் தாதியை விமானத்தில் வாடகைக்குழந்தையுடன் அனுப்பி குழந்தையின் ட்யாப்பரில் கோகெய்னை கடத்தி வந்து பணம் சம்பாதிக்கிறான்.காதலியுடன் சேர்ந்து போதை மருந்தை வீட்டிலேயெ சுத்தீகரித்து தயாரிக்கின்றான்.
இது மிகவும் ஆபத்தான தொழில் என்பதால் ஹென்றியை பாலீ எச்சரிக்க, இவன் அதை கேட்காமல் தன் போக்கிலேயே போகிறான்.இதற்கிடையில் ஒரு உணவகத்தில் வைத்து ஜிம்மி ஹென்றியிடம் சைக்கோபாத் டாமிக்கு இத்தாலிய மாப்ஸ்டர்கள் மேட் மேன் பாப்டிசம் கொடுக்கபோவதாக மகிழ்சியுடன் சொல்கிறான். இதன்மூலம் இன்னும் நமக்கு மாமூலும் மரியாதையும் கட்டை பஞ்சாயத்துகளும் பாதுகாப்பும் கிடைக்கும் என வாய்பந்தல் போடுகிறான்.
ஆனால் மேட் மேன் (பாப்டிசம்) வாங்க ஆவலாக குருமார்கள் இருவரால் அழைத்து செல்லப்பட்ட சைக்கோபாத் டாமி குருமாரில் ஒருவராலே முகத்தில் சுடப்பட்டு இறக்கிறான், முகத்தில் சுடப்பட்டதால் ஓபன் காஃப்ஃபின் என்னும் முகமுழிக்கு கூட சவப்பெட்டியை டாமியின் அம்மாவால் திறந்துவைக்க முடியாமல் போகிறது.
இப்போது ஜிம்மிக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது, நண்பனின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் போன் பூத்தை எட்டி உடைத்து கீழே தள்ளுகிறான். உயிரின் அருமை புரிகிறது. எங்கே தானும் ? போலிசிடம் இப்படி மாட்டுவோமோ? அல்லது எதிராளி கேங்ஸ்டரால் சுடப்பட்டு இறப்போமோ ? என புழுங்குகிறான். இப்போது ஒரே குறிக்கோள் அடக்கி வாசிப்பது, என முடிவு செய்து அமைதி காக்கிறான். போதைக்கு அடிமையான ஹென்றியை வெறுக்கிறான்.
ஹென்றியும் அவன் காதலி ஜானீஸும் இப்போது வசமாக போதை ஒழிப்பு போலிசாரால் கைதுசெய்யப்படுகிறனர்,பல லட்சம் டாலர்கள் மதிப்புள்ள போதை பொருட்களை போலீஸ் கைப்பற்றுகிறது.இவன் மனைவி போலிசின் ரெய்டில் இருந்து தப்பிக்க அரை கிலோ எடையுள்ள 60000 டாலர் மதிப்புள்ள கோகெய்னை டாய்லெட்டில் கொட்டி ஃப்ளஷ் செய்கிறாள்,
1980 ஆம் வருடம்:- ஹென்றியும் அவன் காதலி ஜானீஸும் பெயிலில் விடுதலையாகின்றனர்,வந்ததும் தான் டீவி பெட்டிக்குள் ஒளித்து வைத்த கோகெய்னை தேட அதை கேரன் டாய்லெட்டில் கொட்டி பாழாக்கியதை கேட்டு துடிக்கிறான்.இப்போது தன் மாஃபியா குருவான பாலியை சென்று சந்திக்க, அவன் இவனை பார்த்து வெறுக்கிறான், இவனிடம் பழகிய தோஷத்திற்காக 3200 டாலர்களை தந்து அவனது விசுவாசத்தை விலைக்கு வாங்குகிறான்.
அழுது கொண்டே வீடு திரும்பிய ஹென்றிக்கு உயிர்பயம் தொற்றிக்கொள்ள , மனைவி கேரனோ ஜிம்மியை சென்று சந்திக்கிறாள், அவன் சில ஆயிரம் டாலர்களை செலவுக்கு கொடுத்துவிட்டு அவளை ரகசிய இடத்திற்கு அழைத்து போய் கொல்ல பார்க்கிறான்.இவளுக்கு எங்கும் பாதுகாப்பில்லை என விளங்கி விடுகிறது.
மறு நாள் ஹென்றி ஜிம்மியின் அழைப்பின் பேரில் ஜன நடமாட்டமுள்ள உணவகம் ஒன்றில் ஜிம்மியை சந்திக்கிறான், கண்களில் பழைய நட்பு எள்ளளவும் காணகிடைக்கவில்லை.ஜிம்மி ஒரு கட்டபஞ்சாயத்துக்கு ஹென்றியை தன் ஆட்களுடன் செல்லுமாறு கட்டளையிட, இவனுக்கு அது தனக்கான் சவக்குழி என விளங்கிவிடுகிறது. இவன் தான் மூவரின் அங்க அசைவுகளிலிருந்தும் பாடம் கற்றவனாயிற்றே, எஃப்பிஐக்கு செல்கிறான்,
விட்னெஸ் ப்ரொடெக்ஷன் ப்ரொக்ராமில் இணைந்து புதிய பெயரும் அடையாளமும் பெற்று பாலீ மற்றும் ஜிம்மி மீதான எல்லா கொலை கொள்ளை கடத்தல் கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் மொத்தத்திற்கும் ஏக சாட்சியாக ஆகிறான்.
ஜிம்மி பாலி இருவருக்கும் வாழ் நாளுக்கும் பெயிலிலேயே வரமுடியாதபடிக்கு 20வருடத்திற்கும் மேற்பட்ட சிறை தண்டனை கிடைக்க அதை , அடுத்தடுத்து அனுபவிக்கின்றனர். அதில் பாலி 1988 ஆம் ஆண்டு தன் 73ம் வயதில் நோய்வாய்ப்பட்டு சிறையிலேயே இறக்க, ஜிம்மி மட்டும் இப்போதும் சிறையில் தண்டனையை அனுபவிக்கிறானாம்.
ஹென்றி இப்போது விவாகரத்தாகி , அடையாளம் தொலைந்து சராசரிக்கும் கீழான வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறானாம்.அப்பப்பா படம் முடிந்தவுடன் நமக்கு எழும் உணர்ச்சி அலைகள் இருக்கிறதே?ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா ! என்பது தான் எவ்வளவு உண்மை ? ! என நிச்சயம் உணர்வீர்கள்.
இந்த படத்தின் காணொளியை யூட்யூபில் தரவேற்றிய அன்பருக்கும்,அதை வழங்கிய யூட்யூபுக்கும் நன்றி ,இந்த படத்தினைப் பற்றிய தொழில்நுட்ப தகவல்களை தந்து உதவிய ஐ எம் டி பி மற்றும் விக்கிபீடியாவுக்கும் நன்றிகள் பல.
-------------------