"சிலிர்ப்பு " மனதை புடம் போடும் , அவசர உலகில் மானுடத்தை மீட்டெடுக்கும் சிறுகதை | எழுத்தாளர் தி.ஜானகிராமன்



திருச்சிராப்பள்ளியிலிருந்தே புறப்படுகிற வண்டி அது. மாயவரத்தோடு நின்றுவிடும். பத்தரை மணிக்குத் தொடங்கி மூன்று மணியோடு அதன் வாழ்வு முடிந்துவிடும். மதுரை, மானாமதுரை, ஈரோடு என்று எல்லா வண்டிகளையும் அனுப்பிவிட்டுத் திருச்சிராப் பள்ளி ஜங்ஷன் புயல் புகுந்து விளையாடின தோப்பைப்போல, ஒரே வெளிச்சமாக ஹோவென்று வெறிச்சிட்டுக் கிடந்தது. வாழைத்தோலி, ஆரஞ்சுத்தோலி, எச்சில் பொட்டணம், தூங்குமூஞ்சிகள்- இவற்றைத் தவிர ஒன்றையும் காணவில்லை. வண்டி புறப்பட இன்னும் அரைமணி தான் இருக்கிறது. எஞ்சின், கார்டு, ஒன்றும் வரவில்லை. வண்டிக்கு வண்டி ஒரு பரட்டை, அழுக்கு இப்படி ஏதாவது தூங்கிக் கொண்டிருந்தது. பங்களூர் எக்ஸ்பிரஸில் இறங்கி வந்த குடும்பம் ஒன்று இரண்டாம் வகுப்பில் சாமான்களைப் போட்டுக்காவல் வைத்து எங்கேயோ போய் விட்டது. எக்ஸ்பிரஸ் வண்டி சென்றால் என்ன கூட்டம். வரும்போது என்ன வரவேற்பு, என்ன உபசாரம்! போகும் போது எவ்வளவு கோலாகலம்! இது நாதியில்லாமல் அழுது வழிந்தது. ஷட்டிலும் கேடுகெட்ட ஷட்டில், ரயில் ஜாதியில் கூட ஏழை, பணக்காரன் உண்டு போல் இருக்கிறது.

நான் தனியாகக் கடைசிப் பெட்டிக்கு முன் பெட்டியில் உட்கார்ந்திருந்தேன். பக்கத்தில் என் பையன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். தலைமாட்டில் கையிலிருந்து நழுவிய ஆரஞ்சு உருண்டு கிடந்தது. அதைப் பார்க்கும்போது சிரிப்பு வந்தது எனக்கு. பையனைப் பெங்களூரிலிருந்து அழைத்து வருகிறேன். மாமா சம்சாரம் ஊருக்கு வந்திருந்தபோது அவனை அழைத்துப்போயிருந் தாள். நான் காரியமாக பெங்களூர் போனவன் அவனை அழைத்துக் கொண்டு வந்தேன். பெங்களூர் ஸிட்டி ஸ்டேஷனில் மாமா ரெயிலேற்றி விட வந்திருந்தான். ரெயில் புறப்பட ஐந்து நிமிஷம் இருக்கும்போது ஆரஞ்சுப் பழக்காரனைப் பார்த்து, “ஆரஞ்சுப்பா, ஆரஞ்சுப்பா" என்று பையன் முனகினான். மாமா காதில் விழாதது போல அந்தண்டை முகத்தைத் திருப்பிக்கொண்டு பையனைச் சுடுகிறாப்போல ஒரு பார்வை பார்த்தேன். அவன் வாய் மூடிக் கொண்டது.ஆனால், வண்டி புறப்பட்டதுதான் தாமதம்; ஆரம்பித்து விட்டான். ஆறு வயசுக் குழந்தை; எத்தனை நேரந்தான் அடக்கிக் கொண்டிருப்பான்.

“யப்பா,யப்பா!"

“எண்டா கண்ணு!”

"பிச்சி மாமாவுக்கு வந்து, வந்து, தொளாயிர ரூபா சம்பளம். பணக்காரர். இவ்வளவு பணக்காரர்ப்பா!” என்று கையை ஒரு கட வாத்திய அளவுக்கு அகற்றி, மோவாயை நீட்டினான் - குறை சொல்லுகிறாற்போல.

“அதுக்கு என்ன இப்ப?"

“வந்து, செத்தே முன்னாடி ஆரஞ்சு கேட்டேனோல்லியோ, வாங்கிக் குடுக்காம எங்கேயோ பாத்துண்டு நின்னார்ப்பா."

"அவர் காதிலே விழுந்திருக்காது. விழுந்திருந்தா வாங்கி யிருப்பார்."

“நான் இரைஞ்சுதான்பா சொன்னேன்.”

"பின்னே ஏன் வாங்கிக் கொடுக்கலை?” கேள்வியை நானே திருப்பிக் கேட்டுவிட்டேன். பையன் திணறினான்.

"வந்துப்பா, வந்து, பிச்சி மாமாவை வந்து ஒரு மூணு கால் சைக்கிள் வாங்கித் தான்னேன். வந்து, தரேன் தரேன்னு ஏமாத்திப் பிட்டார்ப்பா..."

“அவர் என்னத்துக்குடா வாங்கணும்? நான் வாங்கித் தரேன்.” "நீ எப்படி வாங்கித் தருவியாம்?”

“ஏன்?”

"உனக்கு நூறு ரூபாதானே சம்பளம்?'

"உனக்கு யார் சொன்னா?”

"வந்து, பிச்சி மாமாதான் சொன்னா.”

"உங்கிட்ட வந்து சொன்னாரா, உங்கப்பாவுக்கு நூறு ரூபாதான் சம்பளம்னு?”

“வந்து எங்கிட்ட இல்லேப்பா. மாமி கிட்டச் சொன்னா.நீ வந்து மெட்ராஸ்லேந்து லெட்டர் எழுதியிருந்தே பாரு, புள்ளையார் பூஜையன்னிக்கி; அப்பச் சொன்னா மாமிகிட்ட வெறுமெவெறுமே நீ மெட்ராஸ் போறியாம்.உனக்கு அரணாக்கொடி வாங்க முடியாதாம்.”

இது ஏதுடா ஆபத்து!

“சரி நாழியாச்சு.நீ படுத்துக்கோ"

"எனக்கு மோட்டார் வாங்கித் தரயா?'

“தரேன்.”

"நெஜ மோட்டார் இல்லே. கீ கொடுக்கிற மோட்டார், இவ்வு ளூண்டு இருக்குமே, அது.”

“அதான் அதான்.வாங்கித் தரேன்.'

"யப்பா,ஆரஞ்சுப்பா.''

"நீ தூங்கு. திருச்சினாப்பள்ளி வந்தவுடனே வாங்கித் தந்துடறேன்.”

“போப்பா!”

“இப்ப எங்கடா வாங்கறது, ரெயில் போயிண்டிருக்கிற போது?”

“அப்பன்னா ஒரு கதை சொல்லு."

“அப்படிக் கேளு. நல்ல கதையாச் சொல்றேன். ஒரே ஒரு ஊரிலே.." பாதிக் கதையில் பையன் தூங்கிவிட்டான்.

"குழந்தை நல்ல சமத்து ஸார். ரூடா இருக்கான்: ஆளை எப்படி 'ஸ்டடி' பண்றான்!” என்று திடீரென்று எதிரே இருந்தவர் மதிப்புரை வழங்கினார்.

'அதுதான் தலை பெரிசா இருக்கு!' என்று பையனைப் பார்த்தேன். தலை சற்றுப் பெரிதுதான் அவனுக்கு. எடுப்பான முகம். மூக்கும் முழியுமான முகம். மொழு மொழு வென்று சரீரம். தளதள வென்று தளிரைப் போன்ற தோல். கன்னத்தில் தெரிந்தும் தெரியாமலு மிருந்த பூனை மயிர் ரெயில் வெளிச்சத்தில் மின்னிற்று. தலைமயிர் வளையம் வளையமாக மண்டி, அடர்ந்து பாதி நெற்றி வரை விழுந்திருந்தது. அழகில் சேர்க்க வேண்டிய குழந்தைதான். நாளை மத்தியான்னம் அம்மாவைப் பார்க்கத்தான் போகிறான். அது வரையில்? யாரோ அநாதையைப் பார்ப்பது போல் இருந்தது எனக்கு. தாய் பக்கத்தில் இல்லாவிட்டால் குழந்தைக்குச் சோபை ஏது? குழந்தையை இரண்டு மூன்று முறை தடவிக் கொடுத்தேன். கபடமில்லாத இந்தக் குழந்தையை எப்படி ஏமாற்றத் துணிந்தது பிச்சி மாமாவுக்கு. கிருபணன், கிருபணன் என்று வேலைக்குப்போன நாள் முதல் வாங்கின பிரக்யாதி போதாதா? குழந்தையிடங் கூடவா வாங்க வேண்டும்? சரிதான், போனால் போகிறது என்று விட்டுவிடக்கூடிய வலுவும் எனக்கு இல்லை. குழந்தையின் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் துன்பம் கிளர்ந்தது.சிறிய அற்பமான நிகழ்ச்சி. ஆனால் எனக்குத் தாங்கவில்லை. பிச்சி மாமா எத்தி எத்திப் பிழைக்கிற வித்தைகள், பிறந்தது முதல் உள்ளும் புறமும் ஒன்றாமல் அவன் நடத்தி வருகிற வாழ்க்கை, பெண்டாட்டியிடங்கூட உண்மையில்லாமல் அவன் குடும்பம் நடத்துகிற 'வெற்றி'- எல்லாம் நினைவில் வந்து, திரண்டு சுழல் வண்டுகளைப் போலச் சுற்றிச் சுற்றி வந்தன. ராத்திரி முழுவதும் அதே தியானம். தூக்கமே இல்லை.

திருச்சி வந்ததும் ஆரஞ்சு வாங்கினேன். “யப்பா, இதை ஊருக்குப் போய்த் திங்கறேம்ப்பா. அம்மா உரிச்சுக் கொடுப்பா கையிலே, வாங்கித் திங்கறேம்பா" என்று கெஞ்சினான்.

“ஆல் ரைட், அப்படியே செய்.”

வண்டி புறப்பட இன்னும் அரை மணி இருந்தது. தாகம் வரட்டிற்று. இறங்கிப்போய்த் தண்ணீர் குடித்துவிட்டு, வெற்றிலை போட்டுக்கொண்டு வந்தேன்.

திரும்பி வரும்போது யாரோ ஓர் அம்மாள் என் பெட்டியில் ஏறிக்கொண்டிருந்தாள். கூட ஒரு பெண். எதிர்த்த பலகையிலேயே

உட்கார்ந்து கொண்டார்கள்.

"இதுதானே மாயவரம் போகிற வண்டி?"

"இதேதான்.”

"எப்பப் புறப்படும்?'

"இன்னும் இருபத்தைந்து நிமிஷம் இருக்கு.

"நீங்கள் எதுவரையில் போறேள்."

"நான் கும்பகோணம் போறேன்.

"உங்க குழந்தையா?"

"ஆமாம்"

“அசந்து தூங்கறானே."

"பங்களூரிலிருந்து வரோம். அலுப்பு; தூங்கறான்.

"நீயும் படுத்துக்கறயா?"

"இல்லெ மாமி, தூக்கம் வரலே" என்றது அந்தப் பெண்.

"கொஞ்சம் தூங்குடி குழந்தை.ராத்திரி முழுக்கப் போயாகணும். நாளைக்கு வேறே, நாளன்னிக்கி வேறே போகணுமே.''

"இல்லெ மாமி, அப்பறம் தூங்கறேன்."

அம்மாளுக்கு நாற்பது வயது இருக்கும். இரட்டை நாடிருமானி மாம்பழம் மாதிரி பளபளவென்று இருந்தாள். காதில் பழைய 'கட்டிங்' கில் ஒரு பெரிய ப்ளூ ஜாக்கர் தோடு. மூக்கில் வைர பேஸரி. கழுத்து நிறைய ஏழெட்டு வடம் சங்கிலி. கையிலும் அப்படியே. மாம்பழ நிறப் பட்டுப்புடைவை. நெற்றியில் பளீரென்று ஒரு மஞ்சள் குங்கும வட்டம் பார்க்கப் பார்க்கக் கண்ணுக்கு நிறைவான தோற்றம், பக்கத்தில் ஒரு தோல் பெட்டி ஒரு புதுக் குமுட்டி அடுப்பு.

அந்தப் பெண்ணுக்கு எட்டு வயசு இருக்கும்; மாநிறம்; ஒட்டி உலர்ந்த தேகம்; குச்சி குச்சியாகக் கையும் காலும்; கண்ணை வெளிச்சம் போட்டுப் பார்க்க வேண்டியிருந்தது; எண்ணெய் வழிகிற முகம்: தூங்குகிறாற்போல ஒரு பார்வை. கையில் ஒரு கறுப்பு ரப்பர் வளை; புதிதாக மொடமொடவென்று ஒரு சீட்டிப் பாவாடை; சிவப்புப் பூப்போட்ட வாயில் சட்டை; அதுவும் புதிதுதான்; கழுத்தில் ஒரு பட்டையடித்த கறுப்புக் கண்ணாடி மணிமாலை. பக்கத்தில் ஒரு சீட்டிப்பாவாடை, கொசுவி முறுக்கிச் சுருட்டிக் கிடந்தது. அதிலேயே ஒரு சட்டையும் திணித்திருந்தது.

அந்த அம்மாளுக்கும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்? எப்படிக் கேட்பது?

வண்டி புறப்படுகிற சமயத்திற்கு ஒரு மலைப்பழக்காரன் வந்தான். ஒரு சீப்பு வாங்கி ஒரு பழத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்தேன். பதில் பேசாமல் வாங்கிக்கொண்டது.

"சாப்பிடு."

"சாப்பிடு" 'என்று அந்த அம்மாள் சொன்னதும் உரித்து வாயில் போட்டுக்கொண்டது.

“இந்தப் பொண்ணு கல்கத்தாவுக்குப் போறது.”

“கல்கத்தாவுக்கா!”

"ஆமாம், நம்ம பக்கத்து மனுஷா ஒத்தர் அங்கே பெரிய வேலையிலே இருக்காராம். அங்கே போறது. ராத்திரி மாயவரத்திலே
இருந்து அவாளுக்குத் தெரிஞ்சவா யாரோ போறா. அவாளோட சேர்த்துவிடணும். நல்ல பொண்ணு, சாதுவா, சமர்த்தாயிருக்கு"

பிறகு நானே கேட்க ஆரம்பித்துவிட்டேன்.

"உம் பேரு என்னம்மா?”

"காமாக்ஷின்னு பேரு குஞ்சுன்னு கூப்பிடுவா."

“பே, Gu!"

“என்ன பெரிய பேஷாப் போடறேள்?" என்று அந்த அம்மாள் சிரித்தாள்; "இவ எப்படி இரண்டு பேரைச் சுமக்கிறாள்னா!"

எனக்கும் சிரிப்பு வந்தது.

“அதுவும் சரிதான். ஆனால் நான் நெனைச்சது வேறே. எனக்குக் காமாக்ஷின்னு ஒரு தங்கை இருக்கா. இந்தச் சாயலாத்தான் இருப்பா. நல்ல தெம்பான இடத்துலேதான் குடுத்துது. ஆனா மாப்பிள்ளை ரொம்ப உபகாரி. யாருக்கோ மேலொப்பம் போட்டார். இரு பதினாயிரத்துக்கு. அவன் திடீர்னு வாயைப் பொளந்துட்டான். அவர் குடும்பம் நொடிச்சுப்போயிடுத்து. ரொம்பக் கஷ்டப்பட்டார். இன்னதுதான்னு சொல்லி மாளாத கஷ்டம். இப்பத்தான் நாலஞ்சு வருஷமா அவர் ஒரு வேலைன்னு கிடைச்சுப் பிடுங்கலில்லாமெ இருக்கார். அவ கஷ்டம் விடிஞ்சுடுத்து.அவளுக்கு அடுத்தவ இன்னொரு தங்கை. குஞ்சுன்னு பேரு. அவளுக்குக் கல்யாணம் பண்ண அலையா அலைஞ்சோம். கடைசியிலெ எனக்கு அத்தை பொண் ஒருத்தி; அவளுக்குக் குழந்தை இல்லெ. சீக்குக்காரி. தன் புருஷனுக்கே அவளைக் கொடுத்துடணும்னு தலைகீழா நின்னா. அப்படியே பண்ணிட்டார், எங்கப்பா, ஆனா, கல்யாணம் ஆன நாளிலிருந்து அவ பட்ட பாடு நாய் படாது. பத்து வருஷம் கழிச்சு ஒரு புள்ளைக் குழந்தை பிறந்திருக்கு, மூணாம் வருஷம். அதுக்குப் பிற்பாடுதான் அந்த வீட்டிலெ அவளும் ஒரு மனுஷின்னு தலை தூக்கி நடமாடிண்டிருக்கா"

"ஆயிரம் இருக்கட்டும். பெண்ணிருக்கப் பெண் கொடுக்கலாமோ?" "என்ன பண்றது? பிராப்தம். இவ பேரைக் கேட்டவுடனே ஞாபகம் வந்தது. ரெண்டு பேரும் ஒரே இடத்திலே அமைஞ்சிருக் கேன்னுதான் பேஷ் போட்டேன்.'

அந்தப் பெண் எப்படி இந்தப் பேச்சை வாங்கிக்கொண்டது என்று புரிந்துகொள்ள முடியவில்லை. அதே தூங்கும் பார்வையுடன் முகத்தில் ஓர் அசைவு, மாறுதல் இல்லாமல் எல்லாவற்றையும் கேட்டுப் பார்த்துக்கொண்டிருந்தது.

"குழந்தை, உனக்கு அப்பா அம்மா இருக்காளா?"

"இருக்கா."

"அப்பா என்ன பண்றார்?"

"ஒண்ணாவது வாத்தியார்."

“அக்கா, தங்கை, அண்ணா, தம்பியெல்லாம் இருக்காளா?"

"இருக்கா..நாலு அக்கா....ரெண்டு அண்ணா, ஒரு தம்பி இருக்கான். அதுக்கப்பறம் ஒரு தங்கை."

“அக்காவுக்கெல்லாம் கல்யாணம் ஆயிடுத்தா?"

"மூணு பேருக்கு ஆயிடுத்து. ரெண்டாவது அக்கா, நாலு வருஷம் முன்னாடி குறைப்பட்டுப் போயிட்டா.எங்களோடே தான் இருக்கா.”

“அண்ணா என்ன பண்றான்!" "

"பெரிய அண்ணா கிளப்பிலே வேலை செய்யறான். சின்ன அண்ணா சகிண்ட் பாரம் வாசிக்கிறான்."

"நீ வாசிக்கிலையா?"

"இல்லை, அண்ணா ஒருத்தன்தான் வாசிக்கிறான். எங்களுக் கெல்லாம் சம்பளம் கொடுக்க முடியலை, அப்பாவுக்கு.”

"அதுக்காக நீ வேலைக்குப் போறயாக்கும்?"

"ஆமாம். மத்தியான்னச் சாப்பாட்டுக்கே எல்லாருக்கும் காணமாட்டேங்கறது"

"உனக்கு என்ன வேலை செய்யத் தெரியும்?”

"பத்துப்பாத்திரம் தேய்ப்பேன். காபி, டீ போடுவேன். இட்லி தோசைக்கு அரைப்பேன். குழம்பு, ரசம் வைக்கத் தெரியும். குழந்தை களைப் பாத்துப்பேன். கோலம் போடுவேன். அடுப்பு மெழுகுவேன். வேஷ்டி புடவை தோய்ப்பேன்."

"புடவை தோப்பியா! உனக்குப் புடவையைத் தூக்க முடியுமோ?"

'நன்னாத் தோய்க்கத் தெரியும்.” "இதெல்லாம் எங்கே கத்துண்டே?”

"ராமநாதையர்னு ஒரு ஜட்ஜி இருக்கார். அவாத்துலெதான் கத்துண்டேன்.”

"ம்ஹ்ம், ஸர்வீஸ் ஆனவளா? அவாத்துலெ எத்தனை வருஷம்

இருந்தே?'

"மூணு வருஷமா இருக்கேன்.”

"மூணு வருஷமா? உனக்கு என்ன வயசாறது?"

“இந்த ஆவணிக்கு ஒன்பது முடிஞ்சு பத்தாவது நடக்கிறது."

"ஏழு வயசிலேயே உனக்கு வேலை கிடைச்சுட்டுது; தேவலை. என்ன சம்பளம் கொடுப்பா?"

"சம்பளம்னு கிடையாது. ரெண்டு வேளை சாப்பாடு போடுவா. தீபாவளிக்குப் பாவாடை சட்டை ஒரு ஜோடி எடுத்துக் கொடுப்பா."

"இந்தச் சட்டையார் வாங்கிக் கொடுத்தா?"

“அவாதான்.”

"கோலம் போட்டு, அடுப்பு மெழுகி, புடவை தோய்ச்சு, குழந்தை யைப் பாத்துண்டு, தோசைக்கு அரைச்சு எல்லாம் பண்ணினத்துக்கு இந்த ஆறணாச் சீட்டிதான் கிடைச்சுதா அவாளுக்கு? கிழிசலாப் பார்த்துப் பொறுக்கி எடுத்துக் கொடுத்திருக்காளே.” 66

“நீ நல்லதா வாங்கிக் கொடுக்கச் சொல்லிக் கேட்கப் படாதோ?"

“ஜட்ஜ் வீட்டிலெ சாப்பிட்டிண்டு இருந்தேங்கறே. உன் உடம்பைப் பார்த்தா அப்படித் தெரியலியே! பஞ்சத்திலே அடி பட்டாப்பலே, கண்ணுகிண்ணெல்லாம் உள்ளே போயி, ஒட்டி உலர்ந்து, நாய் பிடுங்கினாப் போல இருக்கியே.”

"பெரிய மனுஷாள்ளாம் தனி ரகம்னு உங்களுக்குத் தெரியாதது போல் இருக்கு. அவர் வத்தல் குழம்பு, சுட்ட அப்பளாம், மிளகு ரசம் இதைத்தான் பாதிநாள் சாப்பிடுவா. ராத்திரி, பருப்புத் துவையலும் ரசமுந்தான் இருக்கும். ஆனா அவா உடம்பு என்னவோ நிகுநிகுன்னு தான் இருக்கும். அது தனி உடம்பு. நம்மைப்போல அன்னாடங் காய்ச்சிகளுக்குத்தான் இதெல்லாம் ஒத்துக்காது. ரெண்டு நாளைக்கு இப்படிச் சாப்பிட்டா, வாய் வெந்து, கண் குழிஞ்சு, சோர்ந்து சோர்ந்து வரும்" என்று அம்மாள் தன்னையும் என்னோடு சேர்த்துப் பேசினாள். மரியாதைக்குத்தான் அப்படிச் சொல்லியிருக்க வேண்டும். உடனே ஏதோ தவறாகப் பேசிவிட்டவள் போல, "நான் என்னென்னவோ பேசிண்டிருக்கேன்; நீங்க என்ன பண்ணிண்டிருக்கேள்?'' என்று கேட்டாள்.

"பயப்படாதீங்கோ. நானும் அன்னாடங் காய்ச்சிதான். தாலுகாவிலே குமாஸ்தா."

தஞ்சாவூர் ஸ்டேஷன் வந்துகொண்டிருந்தது.

"துண்டைப் போட்டுட்டுப் போறேன். கொஞ்சம் இடத்தைப் பார்த்துக்கோங்கோ; சாப்பிட்டுட்டு, குழந்தைக்கும் சாப்பாடு பண்ணி அழைச்சிண்டு வந்துடறேன்."

"இன்னும் சாப்பிடலியா நீங்க? ஏம்மா, நீ என்ன சாப்பிட்டே

காலமே?"

“பழையது.”

"எங்கே?'

“ஜட்ஜியாத்திலே!”

"பார்த்தேளா, பெரிய மனுஷாள்னா இப்படின்னா இருக்கணும்! ஊருக்குப் போற குழந்தைக்கு, மூணு வருஷம் வீட்டோட கிடந்து உழைச்சிண்டிருந்த பொண்ணுக்கு, கொஞ்சம் நல்ல சாப்பாடாப் போட்டு அனுப்பிச்சாதான் என்ன? ஒன்பதே கால் மணிக்கு, நான் புறப்படற போது கொண்டுவிட்டா. அதுக்குள்ளே சமையல் பண்ண முடியாதா என்ன? நல்ல குளிர்ந்த மனசு! பழையது சாப்பிடற ஆசாரம் அத்துப் போயிடப் போறதேன்னு கவலைப்பட்டுண்டு போட்டா போல் இருக்கு. ஏன் குழந்தை, அவாத்துலே யாராவது பழையது சாப்பிடுவாளோ?"

"நான்தான் சாப்பிடுவேன்.”

"ம்...ஹ்ம்: சரி. இப்பப் பசிக்கிறதோ உனக்கு?”

"“Dima."

"ஏதாவது சாப்பிடும்மா."

"சரி மாமி."

"நீங்க ஒரு பொட்டலம் சாம்பார் சாதமும் ஒரு தயிர் சாதமும் வாங்கிண்டு வாங்கோளேன்.”

'நானே அழைச்சிண்டு போயிட்டு வரேனே.''

"ரொம்ப நல்லதாப் போச்சு. இந்தாருங்கோ."

“என்னத்துக்குக் காசு? நான் கொடுக்கிறேன்."

"வாண்டாம்னு நீங்க எப்படிச் சொல்லமுடியும்? நான்னா அவளை அழைச்சிண்டு வரேன்!"

தர்மசங்கடமாக இருந்தது. வாங்கிக்கொண்டேன். பையனை எழுப்பினேன். அவசரமாகக் கூட்டத்தில் புகுந்து இரண்டையும் இழுத்துச் சென்றேன்.

"இது யாருப்பா?'

"இந்தப் பொண்ணு மாயவரம் போயிட்டுக் கல்கத்தாவுக்குப் போறா. உன்னோட இவளும் சாப்பிடறதுக்கு வரா."

இரண்டு அநாதைகளும் சாப்பிடும்போது எனக்கு இனம் தெரியாத இரக்கம் பிறந்தது. தாயை விட்டுப் பிரிந்த அநாதைகள்! ஆனால் எவ்வளவு வித்தியாசம்! ஓர் அநாதை இன்னும் இரண்டுமணி நேரத்தில் தாயின் மடியில் துள்ளப் போகிறது. ன்னொன்று தாயிடமிருந்து தூர தூரப் போய்க் கொண்டே இருக்கப் போகிறது.

"ஸ்ஸ்..அப்பா, அப்பா!" என்று பையன் வீரிட்டான். மிளகாய்!

"தண்ணியைக் குடி.ம்.ம்."

அந்தப் பெண் உடனே எழுந்துபோய்க் கவுண்டரிலிருந்து கை நிறையச் சர்க்கரையை அள்ளி அவனிடம் கொடுத்தது.

சற்றுக் கழித்து, "அம்பி, தயிர்சாதம் கட்டி கட்டியாக இருக்கு. இரு பிசைந்து தரேன். அப்புறம் சாப்பிடலாம்” என்று சாப்பிடுவதை விட்டுக் கையை அலம்பிவந்து ரெயில்வே சாதத்தை நசுக்கிப் பிசைந்து பக்குவப்படுத்திக் கொடுத்தது.

அவள் பிசைவதைப் பார்த்துப் பையன் என் பக்கம் திரும்பிப் புன்சிரிப்புச் சிரித்தான்.

"ஏண்டா சிரிக்கிறே?''

“அவ பிசைஞ்சு கொடுக்கிறாப்பா!" அதற்கு மேல் அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை.

அவனுக்குக் கையலம்பி, வாய் துடைத்துவிட்டதும் அவள்தான்.

“இந்தா, ஜலம் குடி” என்று அவனுக்குத் தண்ணீர் கொடுத்தாள்.

“வாண்டாம்."

"ஜலம் குடிக்காட்டா ஜீரணமாகாது. இதைக் குடிச்சுடு'

பாடாகப் படுத்துகிறவன், பதில் பேசாமல் வாங்கிக் குடித்து விட்டான். ஏதோ வருஷக்கணக்கில் பழகிவிட்டதுபோல, அவனைக் கையைப் பிடித்து ஜாக்கிரதையாக அழைத்துக்கொண்டு வந்தது அந்தப் பெண். அவனும் அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்து கொண்டி ருந்தான்.

“கல்கத்தாவுக்குப் போறேங்கிறியே, அவாளைத் தெரியுமோ?"

"தெரியாது மாமா. பெரிய வேலையிலே இருக்காராம் அவர். மூவாயிர ரூபாய் சம்பளமாம். குழந்தையை வச்சுக்கணுமாம். அதுக்குத்தான் என்னைக் கூப்பிட்டிருக்கா."

எந்தக் குழந்தையையோ பார்த்துக்கொள்ள எங்கிருந்தோ ஒரு குழந்தை போகிறது. கண் காணாத தேசத்திற்கு ஒரு தாய் அந்தக் குழந்தையை அனுப்புகிறாள். அதுவும் ஒரு பாவாடையைச் சுருட்டிக் கொண்டு கிளம்பிவிட்டது.

"ரொம்ப சமர்த்தும்மா இந்தக் குழந்தை" என்றேன் அம்மாளிடம்.

“நாதனில்லாட்டாச் சமர்த்துத் தானா வந்துடறது. ஒட்டி ஒட்டிண்டு பழகறது அது. கல்கத்தாவுக்குப் போகாட்டால் நானே இதை வச்சுண்டிருப்பேன். பாருங்களேன் பசிக்கிறது கிசிக்கிறதுன்னு நாமாக் கேட்கிற வரையில் வாயைத் திறந்ததோ? என்னமோ பகவான்தான் காப்பாத்தணும்.”

பையன் ஆரஞ்சை மறுபடியும் கையில் எடுத்து வைத்துக் கொண்டான்.

"ஏண்டா குழந்தை, உரிச்சுத் தரட்டுமாடா?" என்றாள் அம்மாள்.

"வாண்டாம். ஊரிலே போய் அம்மாவை உரிச்சுக் குடுக்கச் சொல்லப் போறேன்."

"நானும் அம்மாதாண்டா."

பையன் சிரித்து மழுப்பிவிட்டான். ஒரு நிமிஷமாயிற்று. "உனக்கென்ன வயசு?" என்று திடீரென்று பையன் குஞ்சுவைப் பார்த்து ஒரு கேள்வி போட்டான்.

“பத்து.”

"பத்து வயசா? அப்பன்னா நீ வந்து அஞ்சாவது படிக்கிறியா!" என்று விரலை எண்ணிக் கொண்டே கேட்டான்.

"இல்லை.”

“ஏண்டா, பத்து வயசுன்னா அஞ்சாவது படிக்கணுமா?''

"ஆமாம்பா.எனக்கு ஆறு வயசு. ஒண்ணாவது படிக்கிறேன். ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து. அவ அஞ்சாவது”

" 'அவ படிக்கலைடா."

"நீ படிக்கலை?"

"வீட்டிலேயே வாசிக்கிறியா?''

“ம்ஹ்ம்”

'அவ கல்கத்தாவுக்குப் போறாடா. அதான் படிக்கலை." அங்க எதுக்குப் போறாளாம்?'

"வேலை பாக்கப் போறா?"

"போப்பா..ஏண்டி, நீ வேலை பார்க்கப் போறியா?''

"ஆமாம்."

பையன் அவளையே சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு நம்பிக்கை வரவில்லை. மீண்டும் கேட்டான்;

"உனக்கு சைக்கிள் விடத் தெரியுமா?"

அந்தப் பெண் வாய்விட்டுச் சிரித்தது. முதல் முதலில் அது சிரித்ததே அப்போதுதான்.

"எனக்கு எப்படி சைக்கிள் விடத் தெரியும்? தெரியாது."

“அப்படீன்னா எப்படி வேலைக்குப் போவியாம்?"

"நடந்து போவேன்."

மறுபடியும் அவளைப் பார்த்து யோசித்துக்கொண்டிருந்தான் பையன். அவன் அப்பா சைக்கிளில் வேலைக்குப் போகும் போது அவள் மட்டும் எப்படி நடந்து போக முடியும் என்று அவனுக்குப் புரியவில்லை. இரண்டு குழந்தைகளும் வயல் வெளிகளைப் பார்த்துக் கொண்டு வண்டியின் வேகத்தை ரஸித்துக்கொண்டிருந்தன.

"இந்தப் பொண்ணு யாரை நம்பி இப்படிப் போறது?. போகிற இடம் எப்படி இருக்கோ!” என்று கேட்டேன்.

“இந்த ஜட்ஜுக்கு ஒன்றுவிட்ட மச்சினராம் அவர். மூவாயிர ரூபாய் சம்பளம் வாங்கறாராம், ஏதோ கம்பெனியிலெ. நம்ம பக்கத்துக் குழந்தைன்னு விசுவாசமாத்தான் இருப்பா.என்ன தான் இருக்கட்டுமே, நல்ல சாப்பாடு, துணிமணியெல்லாம் கொடுக்கட்டும்; எத்தனை பண்ணினாலும் அது பிறத்தியார் வீட்டுக் குழந்தை, வேலைக்கு வந்திருக்கிற குழந்தைங்கிற நினைவு போயிடுமா அவாளுக்கு? இதுதான் அவாளைத் தாயார் தோப்பனார்னு நெனச்சுக்க முடியுமோ? ஆனா இது ஒட்டி ஒட்டிண்டு வித்தியாசமில்லாம பழகுறதைப் பாத்தா எங்கேயும் சாமாளிச்சுண்டுடும் போல்தான் இருக்கு. இருந்தாலும் பெத்தவா கிட்ட இருக்கிற மாதிரி இருக்க முடியுமா, ஸ்வாமி? நீங்களே சொல்லுங்கோ"

எனக்கு வயிற்றைக் கலக்கிற்று. நானே முகம் தெரியாத உற்றார் உறவினர் இல்லாத புது ஊருக்குப் போவதுபோல ஒரு சூன்யமும் பயமும் என்னைப் பற்றிக்கொண்டன.

“கடவுள் இதையுந்தான் காப்பாத்தப் போறான். இல்லாவிட்டால் மனிதர்களை நம்பியா பெத்தவர்கள் இதை விட்டு விட்டிருக்கிறார்கள்?” என்றேன்.

"கடவுள்தான் காப்பாத்ணும். வேறே என்ன சொல்லத்தெரியறது நமக்கு? சுத்திச் சுத்தி அதுக்குத்தான் வந்துடறோம். ஆனா, இப்படி அனுப்பும்படியான நிலைக்கு ஒரு குடும்பம் வந்துடுத்தே. அது எப்படி ஏற்பட்டதுன்னு யார் யோசிக்கிறா? அதுக்கு என்ன பரிகாரம் தேடறது? அந்த வாத்தியாரோடகுழந்தைகளுக்கெல்லாம் தலைக்கு இத்தனைன்னு, பள்ளிக்கூடம் வச்சிருக்கிறவன் படி போட்டிருந்தான்னா இப்படிக் கண்காணாத தேசத்துக்கு இது போகுமா?'

"அப்புறம் ஜட்ஜு வீட்டுக் குழந்தைகளை யாரு பாத்துப்பா?" “அதுவும் சரிதான்.”

"வீட்டுக்கு வீடு வாசல்படி கொடுக்கிறவனும் வாத்தியார் மாதிரி ஆண்டியோ என்னமோ?" என்றேன்.

ஒன்றும் புரியவில்லை.

குழந்தையைப் பார்த்து எல்லார் நெஞ்சமும் இளகிற்று.பக்கத்தில் தஞ்சாவூர், ஐயம்பேட்டை என்று நடுவில் ஏறி உட்கார்ந்து கொண்ட வர்களுக்கு அரைகுறையாகக் கேட்டாலும், நெஞ்சு இளகிற்று. அம்மாள் உட்கார்ந்திருந்த பலகையின் கோடியில் உட்கார்ந்திருந்தவர்- ராவ்ஜி மாதிரி இருந்தது-உதட்டைக் கடித்து ஜன்னலுக்கு வெளியே தலையைத் திருப்பிக்கொண்டார்.நெஞ்சைக் குமறி வந்த வேதனையை அடக்கிக்கொண்டு தைரியசாலியாக அவர் பட்ட பாடு நன்றாகத்

தெரிந்தது.

கும்பகோணம் வந்துவிட்டது.

"போயிட்டு வரேம்மா குழந்தே, போயிட்டு வரட்டுமா?" என்று ஒரு ரூபாயை அதன் கையில் வைத்தேன்.

“நீங்க எதுக்காகக் கொடுக்கறேள்?” என்று அம்மாள் தடுத்தாள்.

"எனக்கும் பாத்யமுண்டு. நீங்களும் அழச்சிண்டுதானே போறேள்? இதுவாத்தியார் குழந்தைதானே? உங்க குழந்தையில்லையே? நீங்க கொண்டாடற பாத்யம் எனக்கும் உண்டும்மா. நான் என்ன செய்யறது, எனக்குக் கொடுக்கணும் போல் இருக்கு. எனக்கும் இதுக்கு மேலே வக்கில்லை."

“ஹ்ம்” என்று இரட்டைநாடிச் சரீரத்தில் ஒரு பெருமூச்சு வந்தது. "வாங்கிக்கோடிம்மா. உங்களுக்கு ஒரு குறைவும் வராது, ஸ்வாமி" என்றாள் அம்மாள்.

“யப்பா..இதைக் கொடுத்துட்டு வரேம்பா” என்று என் பையன் ஆரஞ்சைக் காண்பித்தான்.

"கொடேன்டா, கேட்பானேன்?”

"வாண்டாண்டா, கண்ணு. குழந்தை, பாவம். அம்மா உரிச்சுக்

குடுக்கணும்னு சொல்லிண்டிருந்தது”

"யப்பா...வாங்கிக்கச் சொல்லுப்பா” என்று பையன் சிணுங் கினான்.

"வாங்கிக்கோம்மா."

பெண் வாங்கிக்கொண்டது.

"ஸ்வாமி! நல்ல உத்தமமான பிள்ளையைப் பெத்திருக்கேள். வாடா கண்ணு. எனக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டுப் போ” என்று அம்மாள் அழைத்தாள். பையன் கொடுத்துவிட்டு ஓடிவந்தான்.

என் மெய் சிலிர்த்தது. முகத்தைக் கூடியவரையில் யாரும் பார்க்காமல் அப்பால் திருப்பிக்கொண்டு கீழே இறங்கி அவனைத் தூக்கிக்கொண்டு நடந்தேன். அவனுக்கு நடக்கவா தெரியாது? எனக்கு என்னவோ வாரியணைத்துக் கொள்ளவேண்டும் என்று உடம்பு பறந்தது. தூக்கி எடுத்துத் தழுவிக்கொண்டே போனேன். உள்ளம் பொங்கி வழிந்தது. அன்பையே, சச்சிதானந்தத்தையே கட்டித் தழுவுகிற ஆனந்தம் அது.

Paanch | பாஞ்ச் | அனுராக் காஷ்யப்


"Evil is perhaps a child. It will play any game. Like the fictitious Characters in this film, the treacherous waters of felony and crime would need a solvent compassion. This film serves as a Psychological Revelation and a warning to the Society in which urban ambitions and estrangement are ever on the rise." |Anurag Kashyap|

கடந்த 6 வருடங்களுக்கு முன் "பாஞ்ச்" திரைப்படத்தை  பார்த்தும்  எழுதவில்லை,காரணம் அது கொண்டிருந்த கடினமான சரளமான மொழி, இப்போது தான் நல்ல பொருத்தமான சப்டைட்டில் உடன்  படத்தை  என்னால் ஊன்றி உள்வாங்கிப் பார்க்க முடிந்தது.

பொதுவாக, மிகைப்படுத்தப்பட்ட திரைப்படங்கள்,தடை செய்யப்பட்ட திரைப்படங்களை தேடிப் பார்க்கையில்  நாம்  ஏமாற்றமடைந்ததாக உணர்வோம். ஆனால் இது மாற்று குறையாத தங்கம், இந்தித் திரையுலகம் தயாரித்த மிகச் சிறந்த க்ரைம் Noir த்ரில்லர்களில் ஒன்று பாஞ்ச் திரைப்படம்.

சென்சார் இதை ஏன் தடை செய்தனர்? என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை,ஒருவேளை இந்த திரைப்படம் கல்ட் அந்தஸ்தை அடைந்து, இன்றைய இளைஞர்களை புகைபிடிக்கவும், குடித்து நேரத்தை வீணாக்குவதையும் தடுக்கும், என எண்ணி தடை செய்தார்கள் போலும், படத்தில் இளைஞர்களுக்கு செய்தி அத்தனை உறுதியாக சொல்லப்பட்டிருந்தது, 
நமக்கு அப்படி நிஜ பதைபதைப்பைத் தருகிறது என்றால் மிகையில்லை,

 புனேவில் 1976-77 ஆம் ஆண்டுகளில் ஜோஷி-அபியங்கர்  தொடர் கொலைகளை அடிப்படையாக கொண்டு உருவான  தரமான கலை திரைப்படம் பாஞ்ச், புனே எரவாடா சிறையில் 27 நவம்பர் 1983 ஆம் ஆண்டு ஒரே நாளில் நால்வர் தூக்கிலடப்பட்ட சம்பவம் அன்று நாட்டையை திரும்பிப் பார்க்க வைத்தது, 

நிஜக்கொலைகாரர்களான ராஜேந்திர ஜக்கல், திலீப் சுதர், சாந்தாராம் கன்ஹோஜி ஜக்தாப் மற்றும் முனாவர் ஹருன் ஷா என்ற நால்வருடன் சுவாரஸ்யம் கூட்ட வேண்டி ஷுய்லி என்ற ஒரு பெண் கதாபாத்திரத்தையும் சேர்த்து திரைக்கதை புனைந்துள்ளார் இயக்குனர்.

இப்படத்தில்  கேகே மேனன், தேஜஸ்வினி கோலாபுரி, ஆதித்ய ஸ்ரீவத்சவா,ஜாய் ஃபெர்ணான்டஸ், விஜய் மௌர்யா , சரத் சக்ஸேனா என அத்தனை பேரின் நடிப்பும் இயல்பாக அமைந்திருந்தது,   பாலிவுட் வரலாற்றில் இதுவரை உருவாக்கப்பட்ட சிறந்த இசை கோப்பு கொண்ட படம் இது , இசை விஷால் பரத்வாஜ், நம் சதுரங்கவேட்டை நடிகர் மற்றும் ஒளுப்பதிவாளர் நட்டியின்  மிகச்சிறந்த ஒளிப்பதிவில்  மிளிர்கிறது இப்படம், 

 பாஞ்ச் திரைப்படத்தின் கரு, Requiem for a Dream, Trainspotting ஆகியவற்றை நமக்கு  நினைவூட்டுகிறது,ஆனால் தனித்துவமான அடையாளத்துடன் மிளிர்கிறது .

பாஞ்ச் கதை மிகவும் எளிமையானது.  புனே கல்லூரி ஒன்றில் க்ரியேடிவ் ரைட்டிங் இளங்கலை படித்து முடித்து,  வேலை இல்லாத பட்டதாரிகள் ஐவர், இவர்களுக்கு ஒரு இசைக்குழு உண்டு அதன் பெயர் பேரசைட், அதாவது ஒட்டுண்ணி, இந்த பெயருக்கேற்ப ஐவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து ஒட்டுண்ணியாகவே சகித்து வாழ்கின்றனர். இவர்கள் சொற்ப  சம்பளத்துக்காக இரவு மதுபான விடுதிகளிலும் இசை நிகழ்ச்சிகளிலும் Rock கச்சேரி நடத்துகின்றனர், 

பெரும்பாலான நேரம்  கஞ்ஜா சுருட்டி புகைக்கின்றனர், கஞ்ஜா மற்றும் மதுவுக்காக இவர்களின் சொற்ப சம்பளப் பணம்  முழுதும் செலவிடப்படுகின்றன, சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.  கல்லூரியில் இருந்து  வெளியேறியவர்கள் வேலை தேடுவதில் ஆர்வம் காட்டாமல் கஞ்சா ,மது குடிப்பதில் மட்டும் நேரம் செலவிடுகின்றனர், 

இந்த ஐவர் குழுவில் ஒரு பெண்ணும் அடக்கம் ,அவள் பெயர் ஷிய்லி, அவள் நித்யகல்யாணி, பணமிருக்கும் யாருடனும் நொடியில் ஐக்கியமாகி படுக்கையில் விருந்தாகிறாள், இவர்கள் தங்கியுள்ள மாடி அழுக்கு கோடவுனுக்கு தினமும் ஒரு பணக்கார இளைஞனை அழைத்து வந்து சுகிக்கிறாள், ஐவர் குழுவில் ஒருவனான பாண்டி அவளை ஒருதலையாக விரும்புகிறான், ஆனால் ஷிய்லி அவனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை, அவள் கயமை, துரோகம், சரசலீலைகள் அத்தனையும் தெரிந்தும் பாண்டி அவளை நிபந்தனைகளின்றி விரும்புகிறான்.

இந்த ஐவருக்கும் தம்  பெற்றோர் உறவினர்களுடன்  எந்த தொடர்பும் இல்லை, இந்த மொட்டை மாடி கோடவுன் இவர்களின் பொதுவான நண்பனான நிர்மல் என்பவனுக்குச் சொந்தமானது, நிர்மலின் அப்பா உணவகம் நடத்துகிறார், மிகவும் கருமி ஆதலால் மகனுக்கு செலவுக்கு சல்லிப் பைசா தருவதில்லை, அவனும் இந்த இசைக்குழுவுக்கு தன்னார்வ தொண்டு செய்கிறான், வாடகை எதுவும் வாங்குவதில்லை. 

இவர்கள் ஐவரும் தம் ராக் இசைக்குழுவுக்கு ஒலி நாடா வெளியிடுவதற்கு ஆசைப்படுகின்றனர், லூக் (கேகே மேனன்) என்பவன் பரம மூர்க்கன்,அறைத்தலைவன்,அவன் அறைக்குள் யாருக்கும் அனுமதியில்லை , நிலையில்லாத எண்ண ஓட்டம் கொண்டவன்,கஞ்ஜா வாங்க பணம் இல்லை என்றால் கஞ்ஜா வியாபாரியையே தாக்கி கஞ்ஜா பொதியை திருடும் துணிவு கொண்டவன், பேருந்தில் பயணச்சீட்டு இன்றி பயணிக்கையில்
நடத்துனருடன் கைகலப்பு ஆகிவிட ,அவரின் கட்டணப்பையில் இருந்து திருடித் தப்புகிற துணிச்சல் காரன் லூக், நல்ல தரமான  இசை ஒலிநாடா வெளியிடுவதற்கு ஐந்து லட்சம் ரூபாய் செலவாகும் என அறிகையில் அதிர்கிறான்.

அவ்வளவு பணத்துக்கு என்ன செய்வது எங்கே திருடுவது என யோசிக்க,நண்பன் நிர்மலே வலிய வந்து தன்னை  கடத்தி அடைத்து  வைத்து  தன் பணக்கார அப்பாவிடம் கொழுத்த பணயத் தொகை  8 லட்சம் ரூபாயை கேட்கும் படி யோசனை தருகிறான், இத்தருணம்  வரை திரைப்படம் நிதானமான வேகத்தில் செல்கிறது.  

ஆனால் நிர்மலின் அப்பா தன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைத்துனர் தேஷ்பாண்டே உதவியை நாடுகையில்  சிக்கலாகிறது, இதனால் கோபமான லூக் நிர்மலின் அப்பாவை மிகவும் அசிங்கமாக திட்ட நிர்மலுக்கு  கோபம் மிகுந்து ஐவரை அறையை காலி செய்து வெளியே போக சொல்லுகிறான், அவன் மூர்க்கன் லூக்கை அசிங்கமாக திட்டி இரும்புக்கழியால் முதலில் தாக்கியது தான் தாமதம்,லூக் ஆத்திரம் முற்றி தன் நண்பன் நிர்மலை கண்மண் தெரியாமல் அந்த இரும்புக் கழியால் தாக்க, நிர்மல் முகம் சிதைந்து இறந்து விடுகிறான், அது முதல் நடக்கும் அனைத்தும் படபடப்பை கூட்டுகின்றன, இடியாப்ப சிக்கலாகின்றன, ஆப்பசைத்த குரங்கு போலாகின்றன.  

சடுதியில் நிகழ்ந்த கொலை மற்றொரு கொலையைக் கேட்கிறது, கொலையை மற்றொரு கொலையால் சமண் செய்ய முடியாது என ஐவர் கடைசி வரை உணருவதில்லை, ஒரு கொலையை மறைக்க அவர்கள் இன்னொரு கொலை செய்ய ,திமு திமுவென பத்து கொலைகள் அரங்கேறிவிடுகின்றன,  கொலையை மூடி மறைக்க இறங்கும்போது நிலைமை மேலும் மோசமாகின்றன.  

இறுதியில்,இவர்கள் ஐந்து பேரும் ஒருவரை ஒருவர் நம்பாமல் நிர்மலின் தந்தையைக் கொன்று கொள்ளையடித்த பெரும்பணம் 9 லட்சம் ரூபாயை தானே முழுதாக  அனுபவிக்க நினைத்து நம்பிக்கை துரோகம் செய்து கொலை செய்கின்றனர், 

கடைசியில் ஐவரில் எஞ்சியிருந்த முர்கி போலீஸால் சுட்டுக்கொல்லப்படுகிறான், ஷிய்லி பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடியவள் 8 மாதங்கள் தலைமறைவு வாழ்க்கைக்குப் பின் போலீஸில் பிடிபடுவதுடன் பாஞ்ச் நிறைகிறது. 

 பாஞ்ச் திரைப்படம் யூட்யூப் மற்றும் சில் OTTல் உள்ளது,கே கே மேனனின் அபாரமான ஆற்றல்மிக்க நடிப்பிற்காகவும் தேஜஸ்வினி கோலாபுரியின் அசாதாரணமான நடிப்பிற்காகவும் பாஞ்ச் என்றும் நினைவுகூறப்படும்.  
ஃபைட் கிளப் திரைப்படத்தில் புகழ்பெற்ற டைலர் டைர்டனாக பிராட் பிட்டை நினைவுபடுத்தும் வகையில் கேகே மேனனின் நடிப்பு அமைந்துள்ளது.  

விஷால் பரத்வாஜின் இசை இப்படத்தின் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும், 
பாஞ்ச்  பாலிவுட்டின் சீரிய முயற்சியாகும், நேர்த்தியான இயக்கத்தில் புலிப்பாய்ச்சல் பாய்ந்திருந்தார் அனுராக் காஷ்யப்,  பொருத்தமான ராக் இசையை திரைப்படத்திற்கு புனைந்து பயன்படுத்தி நம்பகத்தன்மை கூட்டியிருந்தார்.

திரைப்படத்தில் தரமான மூன்று பாடல்கள்  உள்ளன, ஒன்று "க்யா தின் க்யா ராத்" என்ற Bluesy பாணி இசைக்கோர்வை,1940களின் கிளாசிக் ஜாஸை நமக்கு நினைவூட்டும், 
 
Psychedelic கருப்பொருளான "து ஜா மாத்" நமக்கு Cobain மற்றும் ராக் பாணி இசைக்கோர்வையை நினைவுபடுத்தும் .

"குதா கே லியே" இது Rock on பாணி இசைக்கோர்வை.

 கே கே மேனன் "லூக்" ஆக அத்தனை குருரதையுடன் கூடிய மிடுக்கனாக  தோன்றியுள்ளார், ஆதித்யா ஸ்ரீவஸ்தவா  "முர்கி" கதாபாத்திரத்தில் மிகவும் ஈர்க்கிறார் , "ஜாய்" ஆக ஜாய் பெர்னாண்டஸ் ,  "பாண்டி"யாக விஜய் மவுரியா மற்றும் conniving நித்யகல்யாணி கதாபாத்திரத்தில்  தேஜஸ்வினி கோலாபுரி என அபாரமான casting கொண்டுள்ளது பாஞ்ச்.  சரத் சக்சேனா போலீஸ் இன்ஸ்பெக்டராக தனது சிறிய பாத்திரத்திலும் வசீகரிக்கிறார்.

இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு,  கன்னி முயற்சி பாஞ்ச்.முழுக்க  அவருடைய புது முயற்சி. அவரே தயாரிப்பாளராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் பரிமளித்திருக்கிறார், Black Friday (2004), Dev.D (2009),Gulaal (2009),That Girl in Yellow Boots (2011),Gangs of Wasseypur (2012),Ugly (2014),Raman Raghav 2.0 (2016)
போன்ற தரவரிசையில் முன்னோடியான சினிமா "பாஞ்ச் " என்றால் மிகையில்லை.

மகள் CBSE +2 மதிப்பெண்கள்

இன்று மகளின் CBSE  +2 ரிசல்ட் வந்து விட்டது  96% வாங்கியிருக்கிறார்,
கெமிஸட்ரியில் 100% வாங்கி உள்ளார்.

TVS iqube எலக்ட்ரிக் வாகனம் வீல் பெண்ட் நீக்கும் பணி நிறைவு


ஒரு வழியாக என் EV ஹப் மோட்டார் அலாய் வீல் நேற்று புதிது போல சரி செய்து விட்டேன்.

மெக்கானிக் சாதிக் பாட்ஷா என்பவர் இதற்கு உதவினார்,இவர் அலாய் வீல் பெண்ட் பழுது நீக்குவதில் நிபுணர், இந்த மூன்று சகோதரர்களுக்கு பூந்தமல்லி மற்றும் பம்மலில் கடைகள் உண்டு.

நேற்று காலை 10-00 மணிக்கு பம்மலில் என் வண்டியை கொண்டு தந்தேன், சாதிக் பாட்ஷா நீங்கள் எப்படி வீட்டுக்கு போவீர்கள்? எனக் கேட்டார்,நடந்து போய்விடுவேன் என்றதும் கேட்காமல், நீங்கள் என் வண்டியை கொண்டு போங்கள் என்று தந்தார்(எத்தனை உயரிய பண்பு பாருங்கள்), என் வண்டியை பூந்தமல்லி கிளை கடையில் கொண்டு சென்று பழுது நீக்கி கொண்டு வந்தார், சரியாக மதியம் 1-30 மணிக்கு என் வண்டி கையில் கிடைத்து விட்டது, அத்தனை வேலை சுத்தம்,படங்கள் இணைப்பில்.

எல்லா வித மோட்டார் பைக் , ஸ்கூட்டர் ரிம், ரேஸர் பைக், கார் அலாய் வீல் என எதுவானாலும் அத்தனை அழகாக பழுது நீக்கி புதிது போல தருகிறார்கள், தேவைப்படுபவர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அவரின் விலாச அட்டை இணைப்பில்

1984 ஆம் ஆண்டு வழக்கொழிந்த ரேடியோ லைசன்ஸ் பாஸ்புக்

இன்று தன் அறுபது எழுபதுகளில் இருப்பவர்களுக்கு போஸ்ட் ஆபீஸில் சென்று ரேடியோ லைசன்ஸ் வரி கட்டிய அனுபவம் இருக்கும்.

வானொலி (துவக்கம் 1928)அல்லது தொலைக்காட்சி (துவக்கம்1975 ) என வைத்திருப்பவர்கள் இந்த கேளிக்கை வரி ரூபாய் 15 ஒவ்வொரு ஆண்டும் கட்டினர்,வீட்டின் வெளியே இதற்கென ஆன்டனா கூட நிறுவினர்,இந்த சாதனங்கள் பழுதான போதும் நெடுங்காலம் உபயோகிக்காத போதும் போஸ்ட் ஆபீஸில் இருந்து நேரில் வந்து சோதனை செய்து சென்றுள்ளனர், ஒன்றுக்கு மேற்பட்ட ரேடியோ வைத்திருந்த பணக்காரர்கள் ஒவ்வொரு கூடுதல் இணைப்பிற்கும் 3 ரூபாய் கேளிக்கை வரி தந்து அஞ்சல் தலை வாங்கி இந்த பாஸ்புக்கில் ஒட்டி முத்திரையும் போஸ்ட் மாஸ்டர் கையொப்பமும்  வாங்கியுள்ளனர்.

இந்த ரேடியோ பாஸ்புக்கின் உள் அட்டையில் போபாலில் பேரிடர் விளைவித்த யூனியன் கார்பைட் நிறுவனம் தங்கள் நிறுவனம் தயாரிக்கும் UCIL (Eveready)பேட்டரிக்கு பெருமையுடன் விளம்பரம் செய்ததைப் பாருங்கள், இந்த 1984 போபால் விஷவாயு பேரிடருக்குப் பின் UCIL  (Union Carbide India Ltd)நிறுவனத்தை EICL  (Eveready Industries India Ltd.) என்று பெயர் மாற்றம் செய்து இன்றும் Eveready என்ற பெயரில் சந்தைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

1984 ஆம் ஆண்டில் மத்திய அமைச்சர் வசந்த் சாத்தே என்பவரால் இந்த வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைக்கான கேளிக்கை வரி சட்டம் முற்றிலும் ஒழிக்கப்பட்டது.

இன்று வானொலி தொலைக்காட்சி என எதுவும் சீப்படுகிறது.

பைசா கோபுரத்தின் கரைந்த படிகள்

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள், சுற்றுலா பயணிகள் தான் இங்கே கரைப்பார், இத்தாலியின் உலக அதிசயம் பீஸா நகரின் சாய்ந்த கோபுரத்தின் மணிக்கூண்டின் 294 பளிங்கு படிகளும் இப்படி கரைந்து போய் தான் உள்ளது,4° பாகை சாய்வு மட்டுமே அதன் குறையல்ல, இது போல பல குறைகள் கொண்டது தான் பீஸா கோபுரம்.

மகளின் JEE Mains மதிப்பெண்

மகளின் JEE mains score இன்று காலை வந்தது 100 க்கு 96.12 எடுத்துள்ளார்,பாதி கிணறு தாண்டி உள்ளார் இனி JEE advanced ஜூன் 4 ஆம் தேதி எழுத வேண்டி உள்ளது.

PS:  95+ சதம் பள்ளியில் மதிப்பெண் எடுப்பவர்கள் கூடுதலாக FiitJEE ல் துணைப்பயிற்சி எடுத்தால் IIT க்குள் நிச்சயம் செல்லலாம், 

JEE advanced தேர்வில் 95 %க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தால் IIT ஐ விட உலகத்தரம் நிரம்பிய வெளிநாட்டு பல்கலையான MIT,  NUS,  NTU ,TUM என சென்று இளங்கலை படிக்கலாம் , CBSE ,ICSE ,IB வழிக்கல்வியில் படித்தால் மட்டுமே வெளிநாட்டு பல்கலையில் சென்று இளங்கலை படிப்பது சாத்தியம், மெட்ரிகுலேஷன் , மாநிலக்கல்வியில் படித்தால் வெளிநாட்டில் சென்று இளங்கலை படிக்க முடியாது, காரணம் இணையவழியில் விண்ணப்பிக்கையில் அந்த கற்றல் வழியை விண்ணப்ப படிவம் காட்டாது.

JEE பயிற்சி காலமான நான்கு வருடங்களில் சினிமா கிரிக்கெட்  இத்யாதி பார்க்க முடியாது,உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ள முடியாது, காரணம் பயிற்சி ஏழுநாளும் இருக்கும்.JEE பயிற்சி இங்கே விரிவாக எழுதி உள்ளேன் , படிக்கவும்.

பம்மல் - திருத்தணி பைக் பயணம்

திருத்தணி சென்று 10 வருடங்களிருக்கும், வருடா வருடம் குலதெய்வம் சோளிங்கர் செல்கையில் திருத்தணி செல்ல வேண்டும் என நினைத்தும் முடியாமல் இருந்தது, இன்று காலை 6-30 மணிக்கு வீட்டை விட்டு தனியாக கிளம்பி விட்டேன், ஜூபிடரில் 250₹ க்கு பெட்ரோல் நிரப்பினேன்,பம்மல் முதல்  குன்றத்தூர் வழியே  Outer ring road பிடித்து , பூந்தமல்லி detour இறங்கி திருமழிசை ஊத்துக்காடு சாலை, திருவள்ளூர் திருத்தணி சாலையில் பயணித்து சரியாக 2-15 மணி நேரத்தில் 8-45 க்கு திருத்தணி மலைக்கோயிலுக்கு சென்று விட்டேன், திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாட்டிற்கு வருவாய் அளிப்பதில் முதல் இடத்தில் உள்ளது, எனவே இதன் மாநில நெடுஞ்சாலைகள் அத்தனையும்  குண்டு குழியின்றி , நிறைய வேகத்தடையின்றி நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது.  உள்வழி சாலைகள் அத்தனை அருமையாக உள்ளன, காரில் செல்பவர்களுக்கு ஒரே ஒரு சுங்க சாவடி தான் குறுக்கிடுகிறது,ஆனால் திருச்சி மார்க்கத்தில் பத்து கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி இருக்கும்.

ஜூபிடர் நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 50 -55 கிமீ சாதாரணமாகத் தரும், நான் சமீபத்தில் அதன் clutch belt ஐ பம்மல் கோத்தாரி TVS ல் விட்டு மாற்றியிருந்தேன், அதனால் pickup , mileage எல்லாம் அற்புதமாக இருந்தது, ஒரு ஆள் போனதால் மிகவும் focussed ஆக point to point பயணம் தான் , வண்டியை மலையில் பார்க்கிங்கில் சென்று தான் நிறுத்தினேன், ஜூபிடரின்  suspension இத்தனை வருடங்களாகியும் கூட நன்றாக இருக்கிறது, activa வில் suspension ,braking எல்லாம் இத்தனை நன்றாக இருக்காது .

கோயிலில் எல்லாமே நியாயமான விலை தான், முருகனுக்கு சம்பங்கி ரோஜா மாலை வாங்கிக் கொண்டேன் 100₹, தர்ம தரிசனத்தில் சென்றால் தான் முருகனை பாட முடியும் , கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் இரண்டையும் படித்தபடியே நெடும் வரிசையில் நகர்கிறேன், அடுத்து நின்றவர் முகம் கூட பார்க்கவில்லை, மூலஸ்தானத்தில் வள்ளி , முருகன், தெய்வானை, தனி சந்நிதிகளில், படிகள் இறங்க உற்சவர்கள் மூன்று பேர் தரிசனம் செய்து, பிரகாரத்தில் மூலவர்களை தரிசனம் செய்து வெளியே இறங்கினால் பிரசாத கடை, 10₹ இட்டால் மஞ்சள் பை தருகிறது நவீன எந்திரம்,

பிரசாத கடையில்  6 வகை பிரசாதங்கள் கிடைக்கின்றன ஒவ்வொன்றும் 15₹ , கோயிலில்  எதுவும் அதிக விலை கிடையாது, இருசக்கர வாகன பார்க்கிங் 10₹, கார் என்றால் 50₹, திருத்தணி நகரின் உள்ளே மட்டுமே வாகன நெரிசல் இருந்தது, இன்று சனிக்கிழமை உடன் கோடை விடுமுறையும் ஆதலால் அத்தனை பெற்றோரும் குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர், 

10-00 மணிக்கு திருத்தணியில் இருந்து நல்ல இருமுறை தரிசனம் கண்டு முடித்து திருப்தியாக மலை இறங்கி விட்டேன், போகும் போதே ஊதுபத்தியும் சாம்பராணியும் வைத்ய வீரராகவசுவாமிக்கும் என எடுத்து boot ல் வைத்ததால் 12-30 க்கு சந்நிதி மூடுவதற்குள் போய் விட வேண்டும் என்று வழியில் எங்கும் நிற்கவில்லை,

வைத்ய வீர ராகவர் கருணைக்கடல்,  எப்போது கடும் வெயிலில் சேவிக்கப்  போனாலும் மேகம் அனுப்பி போர்த்தி மூடுவார், கடும் மழையில் போனால் கடும் மழையை நிறுத்தி வெறும் சாரலாக ஆக்கித் தருவார், இன்று 40° மேல் தான் வெயில் இருக்கும் ஆனால் கருமேகம் குறுக்கிட்டு வெப்பம் உணரவேயில்லை,திருப்பாச்சூர் சிவன் கோயில் எல்லாம் சாலை மேல் இருந்தபடியே ஆத்ம தரிசனம் மட்டும் செய்து பயணித்தேன்.
இடையில் சாரல் வேறு , சரியாக 11-45க்கு திருவள்ளுர் வைத்ய வீரராகவ சுவாமி கோயில் அடைந்தேன், முக்கால் மணிநேரம் காத்திருப்பு, மூன்று முறை திருப்பாவை சொல்லி சுவாமி தரிசனம் செய்து வெளியே வந்தேன், வேகாத வெயிலில் வீட்டுக்குப் போக வேண்டுமே என்ற கடுப்பு இருந்தது, மழை பெய்வது போல வானம் இருண்டது, போன், வாட்ச் ,பர்ஸ் எல்லாம் சீட் அடியில் வைத்து மூடி பயணித்தேன், மழையே இல்லை, மப்பும் மந்தாரமும் மட்டுமே. பூந்தமல்லியில் கவனமாக ORR வலது புறம் திரும்பி கலந்து குன்றத்தூர் இறங்கி அனகாபுத்தூர் வழியே பம்மல் அடைகையில் மணி 2-00.

160 கிமீ சென்று வந்த களைப்பே இன்றி மாலை தி.நகர் காய்கறி மார்க்கெட் சென்று காய்கறிகள் வாங்கி வந்தோம்.

GST சாலையில் வாகன நெரிசல் எப்போதும் சகிக்க முடியாதபடி உள்ளது, 3 லேன்களிலும் இடைவெளியின்றி வாகனங்கள், வெப்பநிலையுடன் தகிக்கும் வாகன சூடும் சேருகையில் தான் கோடை வெயிலின் நிஜமான தாக்கம் என்றால் என்ன என்று உணர முடிகிறது.

ரீசார்சபிள் டயர் இன்ஃப்ளேட்டர் பற்றி

வீட்டில் பைக், கார் வைத்திருப்பவர்கள் இந்த டயர் இன்ஃப்ளேட்டர் வாங்கி வைத்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

வாகனங்களில் வெயிலுக்கு காற்று இறங்கும்,எல்லா  தெருக்களும் நிலவின் பள்ளங்கள் போல தான் உள்ளது, ஒரு நாளுக்கு சூட்டில் 5 psi இறங்கினாலும் கூட 4 நாட்களில் 20 psi இறங்கி விடுகிறது, நாம் காற்றடிக்க போகையில் பெட்ரோல் பங்கில் ஆள் இருக்கவே மாட்டார், காற்று குறைவாக வைத்து டபுள்ஸ் ஓட்டுகையில், கார் ஓட்டுகையில் அலாய் வீல் பெண்ட் ஆகும்,பல suspension பிரச்சனைகள் வரும்,  ட்யூப்லெஸ் டயரில் இருந்து காற்று வெளியேறும், இதை தடுக்க இந்த tyre inflater மிகவும் உபயோகமாக உள்ளது, டபுள்ஸ் போகும் முன் கண்டிப்பாக இதை பயன்படுத்தி சரியான அழுத்தமான front 25 psi , rear 35 psi (முரட்டு சாலைக்கு front 30 psi , rear 40 psi) காற்று அடித்தபின் ஒரு வாரமாக வாகனத்தை வெளியே எடுக்கிறேன், இதன் மூலம் எத்தனை பள்ளம் எத்தனை வேகத்தடை இருந்தாலும் அதில் வாகனம் அடியில் உரசுவதில்லை.

நான் 4000mah உள்ள portronics tyre inflator வாங்கினேன், Mi ப்ராண்ட் 2000 mah பேட்டரி என்பதால் அதை வாங்கவில்லை, உபயோகிக்க மிகவும் எளிதாக உள்ளது, நேரம் மிச்சமாகிறது, chasis, suspension அடிபடாமல் காக்கிறது,C type charging port என்பதால் எளிதாக 1 மணிநேரத்தில் சார்ஜ் ஆகிறது,இருளில் tyre  nozzle தேட டார்ச் உள்ளது.

 சார்ஜ் ஆகையில் சிகப்பு வண்ண விளக்கும், சார்ஜ் முடிந்ததும் நீல வண்ண விளக்கும் ஒளிர்கிறது , 

முழு சார்ஜில் மொத்தம் 4 கார் டயர்களுக்கு 0 முதல் 35 psi  காற்று நிரப்பலாம் என்கின்றனர், இரு சக்கர வாகனத்துக்கு அதிக முறை காற்றடிக்கலாம்,நான் பத்து முறை இரண்டு வாகனங்களுக்கு அடித்தும் பேட்டரி மீதம் உள்ளது, இருசக்கர வாகன டயருக்கு முழுதாக காற்று நிரப்ப 3 நிமிடம் ஆகிறது, 10 psi வரையான top up ற்கு 30 நொடிகள் ஆகிறது, 300 கிராம் எடை தான் இருக்கும்.

கார் , மோட்டார் சைக்கிள், சைக்கிள்,பந்து, பலூன் என எதுவும் எளிதாக காற்று நிரப்பலாம்.

ஆன்லைனில் வாங்குகையில் தேடும் போது vlebazaar என்ற மோசடி இணைய தளம் தான் google search விலை மிகவும் மலிவாக காட்டும், முதலில் காட்டும், அது ஒரு trap என அறிக, முதலை வாயில் போன எதுவும் திரும்ப வராதது போல ,இவர்களிடம் ஆர்டர் செய்த எதுவும் வீட்டுக்கு வராது, வந்தாலும் போலியாக ,வேறு சம்பந்தமில்லாத பொருள் வரும், அலைக்கழிப்பே மிச்சம், எனவே portronics இணைய தளம் அல்லது நம்பிக்கையான தளத்தில் சென்று மட்டும் வாங்கவும்.

4000 mah பேட்டரி உள்ளதா? என சரியாக பார்த்து ஆர்டர் செய்யவும்,அது தான் ஆண்டு வரும்.

பெண்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்ட பயிற்சி

பம்மல் , பொழிச்சலூர், பல்லாவரம் காமராஜபுரம் , அனகாபுத்தூர் குரோம்பேட்டை , தாம்பரம் பகுதிகளில் உள்ள இல்லத்தரசிகள் நீங்கள் இரு சக்கர வாகனம் ஓட்ட கற்க உங்கள் மகள் இரு சக்கர வாகனம் ஓட்ட கற்க வேண்டுமென்றால் இவரை அணுகவும்.

என் மகள் இவரிடம் தான் இரு சக்கர வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டாள்,நன்றாக பயமின்றி ஓட்டுகிறாள்,  பத்து நாள் வகுப்பு, தினம் ஒரு மணி நேரம், உங்கள் பகுதிக்கு வந்து சொல்லித் தருகிறார், வேண்டுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சைக்கிள் ஓட்டத் தெரியாதவர்களுக்கும் இரு சக்கர வாகனம் ஓட்ட சொல்லித் தருகிறார்,நாற்பது வயதில் இருப்பவர்களுக்கு கூட பயிற்றுவிக்கிறார் .

ஏன் பயிற்றுனர் வைத்து கற்றுத் தருகிறீர்கள்? அந்த காசை மிச்சம் செய்து நீங்களே கற்றுத் தரலாமே என என் மனைவியின் தோழி கேட்டார்.

நாம் கற்றுத் தந்தால் சிறு காயமாவது படும், தவிர மகள் என பதறுவோம், இதில் professional இடம் விட்டு விட்டோம் என நிம்மதியாக இருக்கலாம், சாலை பயம் சுத்தமாக இராது, பேருந்து அருகே,லாரி அருகே, எருமை அருகே நாய் அருகே ஓட்டுகையில் கூட நன்றாக ஓட்டலாம்,சாலையோரம் நடக்கும் முதியோரை அச்சுருத்தாமல் ஓட்டலாம்,  acceleration அதிகம் தராமல் ஓட்டுவது கைவரும், இண்டிகேட்டர் இடுவது பாதுகாப்பாக ப்ரேக் பிடிப்பது என அனைத்தும் பயிற்றுவித்து விடுவார் என்று சொன்னார் மனைவி.

பத்து வகுப்புகளுக்கு 4000₹ கட்டணம்,ஆனது,each penny worth.

https://youtube.com/shorts/6oyK2erZvks?feature=share

 https://g.co/kgs/V9Q6kA

பல் மருத்துவம்

இந்த கோடை விடுமுறையில் மகனை பூந்தமல்லி  சவீதா பல் மருத்துவமனையில் பல் சிகிச்சைக்கு அழைத்து வந்தேன்,போன வாரம் இரு மேல் மூலை கடைவாய் பற்களை சொத்தை காரணமாக அகற்றினார் மருத்துவர், அதற்கு கட்டணமில்லை,scan 120, அப்போது இரண்டு filling 200 ஆனது , இன்று இரண்டு மேல் பற்களுக்கு ஃபில்லிங் செய்தார்,வெறும் 200₹ கட்டணம் , ஆக மொத்தம் 520₹ ஆனது.

காலை 8-00 மணிக்கு வந்தால் 10 மணிக்குள் சிகிச்சை முடித்து வெளியேறிவிடலாம்,அதன் பிறகு வந்தால் 3-00 மணி ஆகும், காத்திருப்பு நேரம் மிகவும் அதிகம்.

வேண்டுபவர்கள் பூந்தமல்லி சவீதாவில் இந்த தரமான சிகிச்சை பெற்று பலன்பெறுங்கள் .

மொபைல் ஹோல்டர் எத்தனை அவசியம்?

Stick on magnetic mobile holder வாங்க நினைப்பவர்கள் skyvik நிறுவனத்தின் இந்த தயாரிப்பை வாங்குங்கள்,வடிவமைப்பு  எளிமையின் அழகியலாக அமைந்து உள்ளது , நன்றாக மொபைலை பிடித்துக் கொள்கிறது, காருக்கு மிகவும் ஏற்றது.

நிறையபேர் google location map இட்டு பெட்ரோல் டாங்க் மீது மொபைலை வைத்து ஓட்டுவர், சிலர் ஸ்கூட்டர் leg space ல் வைத்து ஓட்டுவர், சிலர் பின்னால் அமர்ந்து உள்ளவர் வழி சொல்லக் கேட்டு ஓட்டுவர்.

நான் என் i Qube ல் இதை நிறுவி உபயோகிக்கிறேன், ather ல் கூட நிறுவலாம், எல்லாவகை ஸ்கூட்டர் dash board கீழும் ஒட்டி நிறுவ முடியும், 7.1cm x 2.1 cm x 0.5 cm அளவு கொண்டது.

 மொபைலில் பின்னால் ஒட்ட தரமான powder coated தகடுகள் தருகின்றனர், மொபைல் எளிதில் விழாது,  முரட்டு சாலைகளில் மொபைல் விழுந்தாலும் கூட காலடியில் leg space ல் தான் விழும்.

இந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் விலை 799₹ , croma வில் 574₹

ஸ்கூட்டருக்கு Rear view mirror ல் பொருத்தும் mobile holder போல அவலமான ஒரு வடிவமைப்பை பார்த்ததில்லை, மட்டமான GI , மட்டமான die cast plastic கொண்டு உருவாகி புற்றீசல் போல சந்தையில் கிடைக்கின்றன, இரண்டு முறை பொருத்தி, அதன் clamp விண்டு  பழுதாகி லொட லொடத்து அகற்ற வேண்டியதாயிற்று, waste wealth ஆக முடங்குபவை அவை,அவற்றை  ஒருபோதும் நம்பாதீர்கள்.

#productdesign

நடிகர் மனோபாலா | அஞ்சலி

இயக்குனர் தயாரிப்பாளர் ,  நடிகர் மனோபாலா இன்று மறைந்து விட்டார், அவருக்கு இதய அஞ்சலி ,வீட்டாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமகால தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த குணசித்திர நடிகர், கடைக்குட்டி சிங்கம் படத்தில் நீதிபதியாக வந்து கருவேல மரங்களை வெட்டி அகற்று என ஒரு சாதி தலைவனுக்கு  பெயில் தந்து தீர்ப்பு சொல்வார், அந்நியன் திரைப்படம் டிடிஆர் கதாபாத்திரத்தை எல்லாம் இவரை அன்றி யார் சுவாரஸ்யமாக செய்ய முடியும்? பிதாமகனில்  லங்கர் கட்டை உருட்டும் குழுவில் ஈர நெஞ்சம் கொண்ட கதாபாத்திரம், பொல்லாதவன் திரைப்படத்தில் பஜாஜ் ஷோரூம் மேனேஜராக தினம் தினம் என் நினைவில் வந்து போவார்,எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் காமெடி , சதுரங்கவேட்டை படத்தை தயாரித்தது என மக்கள் விரும்பியவற்றிற்கு அப்படி உழைத்தவர்,சுவாரஸ்யம் கூட்டியவர், குரலில் ஒரு தனித்துவம் கொண்டவர், இவர் நடிக்கும் கதாபாத்திரங்களின் வசனங்களுக்கு டப்பிங்கில் ஏற்ற இறக்கம் குழைவு அழுத்தம் தந்து மேலும் சிறப்பு சேர்த்திருப்பார்.

வேஸ்ட் பேப்பர் சேனலில் சினிமா ஆளுமைகளை அத்தனை அழகாக பேட்டி காண்பார், விளம்பர வருவாய் ஈட்ட வேண்டும் என்று துண்டு துண்டாக காணொளிகளை  வெளியிடாமல் அந்த சினிமா ஆளுமை பற்றி அரிய தகவல்களை மக்கள் அறிய வேண்டும் என தலைப்படுவார் ஒரு மணிநேரம் எல்லாம் கூட காணொளி வெளியிடுவார்.

போய் வாருங்கள் மனோபாலா சார்.

நடிகர் குள்ளமணி | பொண்ணு ஊருக்கு புதுசு | கரகாட்டக்காரன்

கரகாட்டக்காரன் (1989) திரைப்படத்தில் பழைய இரும்பு ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம்பழம் காமெடியில் தோன்றிய நடிகர் குள்ளமணி,  பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் (1979) ருக்குமணி வண்டி வருது பாடலில் சுதாகர் சைக்கிள் கற்றுக்கொள்கையில் உடன் சைக்கிள் தள்ளியபடி தான் வருகிறார்.

இயக்குனர் கங்கை அமரன் இவரை சரியாக கரகாட்டக்காரனில் நினைவு வைத்திருந்து மீண்டும் கையில் சைக்கிள் தந்து தள்ள வைத்துள்ளார், நடிகர்  குள்ளமணி அபாரமான கொண்டாட்டமான முகபாவங்களை அந்த ஓடாத செவ்வி இம்பாலா 1960 ஸ்போர்ட்ஸ் செடான் படகு காரை சிலுக்குப்பட்டி கிராமத்திற்குள் பார்க்கையில் தருவார், கவுண்டமணிக்கு கெட்ட கோபம் தலைக்கேற வைப்பார்,செந்திலுக்கு பேரிச்சம்பழம் சாப்பிட வாய் ஊற செய்வார்.

கல்ட் காமெடி அந்தஸ்து பெற்றது இந்த பேரீச்சம்பழம் காமெடி, வாழைப்பழக் காமெடியை விட பேரீச்சம்பழ காமெடியே அவலநகைச்சுவையை திறம்பட பேசுகிறது.

நடிகர் குள்ளமணி வாழ்நாள் சாதனையாக இந்த காயலாங்கடைக்காரர் கதாபாத்திரத்தை செய்து விட்டார்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)