இயக்குனர் பத்மராஜன் எழுதி இயக்கிய தூவானத்தும்பிகள் [மழைக்கால தும்பிகள்] மரபுகளை கட்டுடைத்த மலையாள கல்ட் சினிமாவில் மிக முக்கியமானது, படம் 1987 ஆம் ஆண்டு வெளியாகி இலக்கிய, கலை சினிமா,மற்றும் வெகுஜன ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது,இத்தனைக்கும் படம் A சான்றிதழ் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் கிராமத்துக்கும் நகரத்துக்குமான மாறுபட்ட இரட்டை வாழ்க்கை வாழும் ஜெய்கிருஷ்ணன் என்னும் இளைஞன் பாத்திரத்தில் தோன்றிய மோகன்லால் அப்படியே ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொண்டு விடுவார், பாசாங்கோ சமரசங்களோ இன்றி எடுக்கப்பட்ட ஒரு உன்னத படைப்பு என அனைவராலும் பாராட்டப்பட்ட படம் இது, மலையாளத்தில் மோகன்லாலின் ஃபில்மோக்ராஃபியில் மிக முக்கியமான படம்,கத்தி மேல் நடக்கும் பாத்திரத்தை அநாயசமாக தாண்டியிருப்பார் மனிதர்,
இதில் இவரின் காரக்டர் ஸ்கெட்சை நம் மனதுக்குள் எண்ணி எண்ணி வியக்க வைக்கும், கிராமத்தில் வடிகட்டிய கஞ்சன்,நகரத்துக்கு சென்றால் சரியான ஊதாரி என்னும்படியான பாத்திரம், கிராமத்தில் நண்பர்களே அற்றவன், நகரத்தில் பெண் தரகன் முதல் ரவுடி,ஆட்டோ டாக்ஸி டிரைவர்,பார் சிப்பந்தி ,என ஒரு பெரிய நெட்வொர்கையே நண்பர்களாக கொண்டவன் ,டிகிரி படித்திருந்தும் விவசாயத்தையும் பரம்பரை வீட்டையும் கட்டிக்காக்கும் ஒரு விதவை சகோதரிக்கும் [சுலக்ஷனா] விதவை தாய்க்கும்[சுகுமாரி] அடங்கி ஒடுங்கிய ஆனால் கண்டிப்பானவனான ஒரு வேடம்,
தன் நண்பன் ரிஷி, [அஷோகன்] திருமணத்துக்காக ஏங்குகிறான்,பாலியல் இச்சைக்காக மருகுகிறான் என அறிந்தவன் அவன் சுகிக்க அவன் வீட்டின் அருகாமையிலிருக்கும் புகழ்பெற்ற த்ரெஸ்யா ஜோஸ் என்னும் விலைமங்கையை தன் பெண் தரகு நண்பன் தங்கல்[பாபு நம்பூதிரி] மூலம் ஏற்பாடு செய்கிறான் ஜெய்கிருஷ்ணன் , ரிஷி மறுக்காமல், சந்தேகப்படாமல் இருக்க ஒரு காய்கறிப்பையுடன் திருச்சூர் நகரில் இருக்கும் அவனின் எலக்ட்ரிகல்ஸ் கடைக்குப் போனவன் ,அவனை வெளியெ கூட்டிச் சென்று தன் அம்மாவின் மூட்டு வலிக்கு சூப் வைக்க ஆட்டுத் தலை ஒன்றை இலையில் மடித்து வாங்கிவிட்டு அதிரடியாக பேரம் பேசும் இடம் எல்லாம் இயல்பான நகைச்சுவையின் உச்சம்.
பின்னர் பச்சை காய்கறிகளும் வாங்கிக் கொண்டு,வெயிலின் சூட்டுக்கு ஒரு கடையில் உப்பிட்ட எலுமிச்சை பழச்சாறு வாங்கி அருந்தும் இடமும்,ஐஸ் போடவில்லை என்று கடைக்காரனிடம் மோகன்லால் சண்டை பிடிக்கும் இடமும் மிகவும் அதகளமாக இருக்கும்,தன் நண்பனிடம் வா நான் உனக்கு ஐஸ் போட்டு எலுமிச்சை சாறு வாங்கித்தருகிறேன் என ஒரு ஏசி பாருக்குள் அழைத்துப் போகும் அந்த இடத்தில் எல்லாம் பத்மராஜனின் தேர்ந்த நகைச்சுவையும் , திரைக்கதை நேர்த்தியும் நமக்கு ஒருங்கே புலப்படும்,
அங்கே பாரில் ஜெய்கிருஷ்ணன் எலுமிச்சை சாறு கொண்டுவரச் சொல்லிவிட்டு, அவரிடமே சில்டு பியர் இருக்கிறதா? எனக்கேட்கும் காட்சியும், அதற்கு டேவிட் என்னும் பார் சிப்பந்தியின் அசுரச்சிரிப்பும்,பின்னர் 2 பியர் வர,அதை லாவகமாக பருகும் நண்பனிடம் அசடு வழிய உனக்கு இதெல்லாம் ஏற்கனவே பழக்கமா? என அப்பாவியாகக் கேட்கும் ரிஷியும் என மிகப்பிரமாதமாக காட்சிப்படுத்தப்பட்டவை,
அங்கே பாரில் 10க்கும் மேற்பட்ட ஜெய்கிருஷ்ணனின் நண்பர்கள் சேர்ந்து விடுவர், ஜமாவும் ஆரம்பமாகிவிடும், ஆனால் தமிழ் சினிமாவின் க்ளிஷேத்தனமான கேபரே நடனப் பாடல் ஒன்று அங்கே இடைச்செருக்கப்பட்டிருக்காது, ஆனால் அத்தனை நிஜமாக நம்பும்படியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும், தன் பள்ளித் தோழனுக்கும் நமக்கும் மோகன் லாலின் உண்மையான முகம் அன்று அங்கே தான் வெளிப்படும், இந்த ஜெய்கிருஷ்ணனின் அன்றைய நாடகத்தை வழக்கமான வாடிக்கையாளர்கள் பாரில் ரசித்து களிப்பர்,நாமும்
மிக அற்புதமான காட்சி அது, இத்தோடு நின்று விடவில்லை, மிடில் கிளாஸ் தாழ்வு மனப்பான்மை மிகுந்த நண்பனை பாரில் நன்கு களிப்பூட்டி, பின்னர் காரில் ஏற்றி,அவன் எடுத்த வாந்தியையும் துடைத்து நகரின் ஒதுக்குப்புறமான லாட்ஜுக்கு அழைத்து செல்வான் ஜெய்கிருஷ்ணன்,நினைத்துப்பாருங்கள் வடிகட்டிய கஞ்சன் என தன்னை நினைக்கும் நண்பனுக்காக அவன் உள்ளம் கவர்ந்த பெண்ணான த்ரெஸ்யா ஜோஸ் என்னும் விலைமாதுவை அறைக்குள் முன்பே வரவழைத்து இருத்தி நண்பன் ரிஷியுடன் கதவைத் தட்டுவான், தான் வாங்கிய ஆட்டுத்தலையும் காய்கறிகளும் பின்னர் ஒரு பியர் பாட்டிலும் அடங்கிய பையையும் கூட அங்கேயே விட்டுவிட்டு அகல்வான் ஜெய்கிருஷ்ணன்,
பின்னர் பக்கத்து அறையில் காத்து இருக்கும் ப்ரொஃபெஷனல் பெண் தரகரான தங்கலிடம் ரிஷிக்கு எந்த இடைஞ்சலும் இன்றி பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு தன் ஊரான மன்னார்துடிக்கு செல்வான்.மறு நாள் தான் ஜெய்கிருஷ்ணனின் நண்பன் ரிஷிக்கும் ஏன் நமக்கும் கூட ஒரு உண்மை புரியும், எத்தனையோ பெண்களை நண்பர்களுக்கு தரகர் தங்கல் மூலம் சுகிக்க ஏற்பாடு செய்து தந்திருக்கும் ஜெய்கிருஷ்ணன் இதுவரை ஒரு பெண்ணையுமே சுகித்ததில்லை என்பது தான் அது!!!,பத்மராஜனின் இயக்கம் அப்படி ஒரு மேஜிக்காக அதை அங்கே சாதித்திருக்கும்,
இந்தப்படம் ஒரு இந்திய சினிமா அதுவரையில் பாலியல் ரீதியாகக் கொண்டிருந்த மரபுகளை சம்பிரதாயங்களை இலக்கணங்கள் அனைத்தையும் தகர்த்து உடைத்தது என்று சொன்னால் மிகவும் சரியாக இருக்கும்,படத்தின் நாயகன் திருமணத்துக்கு முன்பே பாலுறவு கொள்வான், மேலும் படத்தில் வரும் க்ளாரா என்னும் விலை மங்கை விரும்பியே இந்த பாலியல் தொழிலுக்கு வருகிறாள், அவளின் முதல் வாடிக்கையாளனான ஜெய்கிருஷ்ணன், இதுவரை யாரையுமே புணராதவனாயிருக்கிறான், ஏன் இவள் இத்தொழிலுக்கு வந்தாள்?என்னும் கேள்வியை ஜெய்கிருஷ்ணனிடமிருந்து எதிர்கொள்ளும் அவள் சிறிதும் தயங்காமல் எப்படியும் கெட்டுத்தானே போவேன்?,அதற்கு கௌரவமாகவேணும் கெடுகிறேனே!!! என்கிறாள். தான் க்ளாரா என்னும் கன்னியை சுகித்த பின்னரே அவள் கன்னி என உணர்ந்து குற்ற உணர்வை அடைந்தவன், அவளிடம் காதலும் கொள்கிறான், அவளை திருமணமும் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கிறான்,
|
ஜெய்கிருஷ்ணனும் களாராவும் |
ஆனால் க்ளாராவுக்கு அடிமை வாழ்க்கை பிடிக்கவில்லை, சில காலம் வறுமையை விரட்ட இந்த தொழிலிலேயே இருப்பது என முடிவு செய்தவள், தன்னை சித்தியும் தரகர் தங்கலும் ஆளுமை செய்ய விழைவதை வெறுக்கிறாள், ஜெய்கிருஷ்ணன் அவளுக்கு அளித்த பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவானவள், போன ஊர்களிலும் விலைமாதுவாகவே பணி புரிகிறாள் , வழமையான சினிமாவுக்கு வேண்டி சேர்க்கப்பட்ட புனிதத்துக்காக நாயகனுக்காக அவள் தன் கற்போடும், கர்ப்ப பாத்திரத்தினோடும் காத்திருக்கவில்லை,
இங்கே ஜெய்கிருஷ்ணனின் காதலை நிர்தாட்சண்யமாக நிராகரித்த ராதா என்னும் கதாபாத்திரமும் குறிப்பிட வேண்டிய ஒன்று. அவள் ஏன்ஜெய்கிருஷ்ணனை முதலில் நிராகரித்தாள்?என குழம்பும் நாம், இப்படி குணாதிசயங்கள் கொண்ட ஒருவன் தன்னைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள சம்மதமா?என ஆர்வத்துடன் கேட்பது என்பதையே அவள் அருவருப்பக கருதுகிறாள். தான் ஒரு போகப்பொருள் என்ற எண்ணமும். அது போன்ற நாகரீகமில்லாத கிராமத்தான் ஒருவனால் காமத்துடன் அணுகப்பட்டதையும் எண்ணி வெறுக்கிறாள். ஆனால் இறுதியில். ஜெய்கிருஷ்ணனை
அவளால் மனதில் இருந்து துடைக்க முடியவில்லை. ஜெய்கிருஷ்ணனையே நினைத்துக் கொண்டிருக்கிறாள் ராதா. அவனைப்
பற்றியே அக்காள்,மற்றும் அண்ணனிடம் ,நண்பர்களிடமும் சுற்றத்தாரிடமும் விசாரிக்கிறாள். அது இறுதியில் உடும்புப்பிடியான காதலாக மாறுவதை நாமும் கண்கூடாக பார்ப்போம். ஒருகட்டத்தில் அது ஒரு மிதமிஞ்சிய காதலாக மாறி க்ளாராவின் மீது பொறாமையும் கொள்கிறாள், ஜெய்க்கிருஷ்ணனை அவளுடன் பங்கு போடுவதை வெறுக்கிறாள்.
இங்கே க்ளாரா பாத்திரமோ, ஜெய்கிருஷ்ணன் அவளிடம் எத்தனை விரும்பிக் கேட்டும் அவனை மணக்க சம்மதம் சொல்லவில்லை, அவள் விரும்பிய போது மட்டுமே அவனுக்கு தந்தி கொடுத்து வரவழைத்து தனிமையில் ஓரிடம் போய் ரசித்து சுகிக்கிறாள். க்ளாராவை இத் தொழிலுக்கு அறிமுகம் செய்த தரகர் தங்கலிடம் தன் கணவன்,மற்றும் க்ளாராவின் சகோதரன் அறியாத வண்ணம் கொண்டு வந்து விடும் சித்தி ப்யாட்ரைஸ் கதாபாத்திரமும் சிறிதும் பாசாங்கே இல்லாதது,முதல் முறையாக தன் மூத்தார் மகளை ஜெயகிருஷ்ணன் என்னும் தொழிலதிபருக்கு ஒரு பட்டப்பகலில் கூட்டித்தரும் அக்காட்சி,எப்படி விரசமேயில்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் ? என ஆச்சர்யமூட்டும்.
பணம் கொழித்திருக்கக் கூடிய மீனவர் குடும்பம் என்றாலும் உழைக்காமல் சாப்பிடும் குடிகாரக் கணவன்,மூத்தாரின் மகள் க்ளாராவுக்கு திருமணமும் செய்ய பொருளில்லாத கையறு நிலை, உதவாக்கரை பிள்ளை,தரகர் தங்கலை தேடி வந்து தொழிலில் இணைத்து நல்ல வாழ்க்கையும் பாதுகாப்பையும் கேட்கிறாள் பியாட்ரைஸ் , தரகர் தங்கலும் அதிகம் ஆசையற்றவர், இவரது பாத்திரத்தை நடிகர் பாபு பிள்ளை மிக அற்புதமாக லஜ்ஜையே இன்றி செய்திருந்தார்,
நாம் ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே என்னும் நாவலில் வரும் கந்தனை மறந்திருக்க மாட்டோம், தங்கல் கந்தனுக்கு நேரெதிரானவர், கிட்டத்தட்ட 80களின் மேல்தட்டு வர்க்கத்துக்கு தரமான விலைமங்கையரை தருவித்துத் தரும் ஒரு சவாலான பாத்திரம் இவருடையது, மனிதர் அநாயசமாக அதை கையாண்டுள்ளார், நாவலில் கந்தன் விலைமங்கை மீனாவின் மீது மையல் கொண்டு அவளின் உடமைதாரரான சோலைப்பிள்ளையிடம் போய் பெண் கேட்பான், அங்கே சோலைப்பிள்ளை நயவஞ்சகமாக பேசி கந்தனின் காமதேனு போல மாத வாடகை பெற்றுத் தரும் வீட்டை விற்க வைத்து ஒரு பெருந்தொகையை அவனிடமிருந்து கறந்து விடுவார்,பின்னர் மீனாளை கந்தனுக்கு கல்யாணம் செய்து வைப்பார்,
ஆனால் இங்கே எதிர்மாறாக தான் முதன் முதலாக சுகித்த க்ளாராவை ஜெய்கிருஷ்ணன் திருமணம் செய்ய ஆசைப்பட்டவன்,அவனை முதல் வாடிக்கையாளராக்கிய தங்கலிடமே வந்து க்ளாராவை பெண் கேட்கிறான், அவளை இனி யாருக்குமே தொழில் ரீதியாக அனுப்ப வேண்டாம்,அதற்கு உண்டான இழப்பீட்டை தானே தருகிறேன் என்கிறான், அதற்கு தங்கல் உடன் பட்டாலும் க்ளாராவின் முடிவு வேறாக இருக்கிறது, அவள் அங்கிருந்து தப்பிக்கிறாள்,
மேலும் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விஷயம்,பத்மராஜனின் விரசமற்ற காட்சியாக்கம், படத்தில் இரு நாயகியர் க்ளாராவாக சுமலதா, ராதாவாக பார்வதி இருக்க , விலைமாதுவாக வந்த க்ளாராவாகட்டும், ஆச்சாரமான தரவாட்டு குடும்பத்து பிண்ணணியில் வந்த ராதாவாகட்டும் இருவருமே கண்ணியமாக நடித்துள்ளனர், ஜெய்கிருஷ்ணனுக்கும் க்ளாராவுக்கும் நடக்கும் சரசங்கள் கவிதை போல படமாக்கப்பட்டுள்ளன என்றால் அது மிகையில்லை, வக்கிரம் கொண்ட கேமராக்களை நாம் எளிதாக அடையாளம் காண முடியும்.
பத்மராஜனின் நெறியாள்கையும் , வின்செண்டின் கேமராவும் காதல் காட்சிகளில் அப்படி ஒரு கவித்துவமான மினிமலிசத்தை கை யாண்டிருக்கின்றன, அதனால் தான் இப்படம் 20 வருடங்கள் கடந்த பின்னரும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது,கல்ட் ஸ்ட்டேஸை பெற்றிருக்கிறது. படத்தில் சொல்லவேண்டிய இன்னொரு கதாபாத்திரம் மழை, ஆமாம் மழையேதான், ஜெய்கிருஷ்ணனும், க்ளாராவும் சந்திக்கும் அநேக காட்சிகளில் மூன்றாவது கதாபாத்திரமாகவே வருகிறது மழை .
படத்தில் மதம் துச்சமாக பகடி செய்யப்பட்டிருக்கிறது,க்ளாரா கிருத்துவ மதத்தை சேர்ந்தவள், அவளின் தந்தைக்கும் சகோதரனுக்கும் தெரியாமல் ,சந்தேகம் வராமல் சித்தி பியாட்ரைஸூடன் அவள் திருச்சூருக்கு விலைமங்கையாக வரவழைக்க , அதிகம் படிக்காத தரகர் தங்கலும் ,டிகிரி படித்த இரட்டை வாழ்க்கை வாழும் ஜெய்கிருஷ்ணனும் திட்டமிடுகின்றனர், தங்கல் இதை ஜெய்கிருஷ்ணனிடம் தான் போலியாக தயாரித்த கிருத்துவ மிஷனரி லெட்டர் பேடில் டைப் அடிக்க ஒரு கடிதம் எழுதித்தர கேட்டு அணுகும் இடம் மிக முக்கியமானது,
அதற்கு மிகவும் ஆச்சாரமான தரவாட்டு குடும்பத்தை சேர்ந்த காலம் சென்ற ஜட்ஜின் மகனான ஜெய்கிருஷ்ணன் உடன் படுவதும், அன்று இரவே தங்கலுக்கு உதவ,தலைமை கன்னியாஸ்திரி எழுதுவது போல் கடிதம் எழுத அமர்ந்தவுடன் வார்த்தைகள் குறும்புடன் கொப்பளிக்க கடிதம் உருவாகும் இடமும் அங்கே பெய்யும் மழையும் மிக முக்கியமான ரசமான இடங்கள், இதுவரை இந்திய சினிமா பார்க்காத ஒரு கருப்பொருள் அவை எனச் சொல்லுவேன்,
மேலும் இயக்குனர் பத்மராஜன் எந்த இடத்திலுமே பாலியல் தொழிலையோ, பாலியல் தொழிலாளியையோ, அவளின் வாடிக்கையாளரையோ ,பெண் தரகரையோ கேவலமாகச் சித்தரிப்பதில்லை, பாலியல் தொழிலும் ஒரு கண்ணியமான தொழிலாகவே சித்தரித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குனர்.பெண் தரகர் தங்கல் வாழும் வீட்டைக் கூட ஒரு நளினமான ஒன்றடுக்கு வீடாகவே , மிகவும் சுத்தமாகவே காட்டியுள்ளார்.80களின் மலையாள சினிமாவின் இந்த கட்டுடைத்தல் நம் பார்வைக்கு மிகவும் புதியது.
பின்னரும் ஓரிரு இடங்களில் மதத்தின் மீதான பகடி தொடர்கிறது,இரண்டாம் முறையாக ஜெய்கிருஷ்ணனை ரயில் நிலையத்தில் நடுநிசியில் சந்திக்கும் க்ளாரா,தான் தன் வீட்டாரை சமாதானப்படுத்த அனுப்ப எடுத்துக்கொண்ட கன்னியாஸ்திரி புகைப்படத்தை அவனிடம் காட்ட,அவளுக்கு கன்னியாஸ்திரி கோலம் மிகவும் பொருத்தமாயுள்ளது என சொல்லி சிரிக்கிறான் ஜெய்கிருஷ்ணன், இப்போது க்ளாரா தனக்கு வழமையான ஹோட்டல் அறைகளின் நான்கு சுவர்களும் ஒரு கூரையும் அலுத்து விட்டன என்கிறாள்,
தனக்கு திறந்த வெளியில் ஜெய்கிருஷ்ணனுடன் தனிமையில் தான் விரும்பிய படி இரு தினங்களைக் கழிக்கவேண்டும் என்கிறாள், அதற்கும் ஜெய்கிருஷ்ணன் தரகர் தங்கலிடமே சென்று இவரிடமிருந்து ஓடிப்போன க்ளாரா வந்துள்ளாள், ஆனால் அவள் உங்களை பார்க்க விரும்பவில்லை, உள்ளூர குறுகுறுக்கிறாள் என்கிறார், அவரின் புரிதலான ஏற்பாட்டின் பேரில் அவரின் ஊருக்கு ஒதுக்குப்புறமான கவனிப்பார் அற்று கிடக்கும் ஒரு குடிசை வீட்டுக்கு க்ளாராவுடன் போகிறான் ஜெய்கிருஷணன்.அங்கே தூரத்தில் கேட்கும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒரு மனநிலை பிழறியவனின் ஓலம் க்ளாராவை குலைக்கிறது,
அவனின் சங்கிலி கால்களை அறுத்து சிரங்காகியிருக்க,தன்னை எதனாலோ அந்த சிரங்காக நினைக்கிறாள் க்ளாரா,அவள் அங்கே ஒரு திண்ணமான முடிவை எடுக்கிறாள்,ஆனால் வெளிக்காட்டிக் கொள்வதில்லை,அது அங்கே கதையின் முடிவில் ஒட்டப்பாலம் ரயிலடியில் நமக்கு தெரிய வருகிறது, அது கதைக்கும் ,ஜெய்கிருஷ்ணனுக்கும்,அவனை விரும்பியும், நம்பியுமிருக்கும் முறைப்பெண்ணான ராதாவுக்கும் மிக ஆறுதலான முடிவாகவும் இருக்கிறது, இயக்குனர் க்ளாராவின் தொழிலில் அவளுக்கு ஒரு இடைவேளை தேவை என்று ஒரு விடுமுறையில் அவள் புறப்பட்டு வந்து ஜெய்கிருஷ்ணனுடன் சுகித்து விட்டுப் போகும் சுதந்திரத்தை அளித்த பாங்கும் வியக்க வைக்கிறது.
|
ராதாவும் ஜெய்கிருஷ்ணனும் |
க்ளாரா பேச்சுவாக்கில் ஜெய்கிருஷ்ணனைப் போன்றே மாதவன் என்னும் ஒரு விதவை எஞ்சினியரும் இவளை மணக்க கேட்டு காத்திருப்பதாகச் சொல்கிறாள், ஜெய்கிருஷ்ணன் உடனே அவன் என்ன கிழவனா?என்று மடக்க, க்ளாரா,ஜெய்கிருஷ்ணனுக்கு பொறாமையைப் பார்?!!! என அவன் தலையை மடியில் கிடத்தி முகத்தை வருடியபடி பதிலுறைக்கிறாள். அதெல்லாம் மிக அழகாக படமாக்கப்பட்டவை, ரசனைக்காரர்களுக்காக ரசனைக்காரர்களால் உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு என்றால் மிகையில்லை. எனக்கு ராதாவை விட க்ளாராவின் கதாபாத்திரம் தான் மிகவும் பிடித்தமையால்,அதைத்தான் இங்கே அதிகம் சிலாகித்திருக்கிறேன்.இருந்தும் க்ளாராவை விட மிகவும் துடுக்கான குறும்பான, கோபக்கார பெண்ணாக வந்த ராதா தான் மிக அழகு, ஆனால் பாத்திரப் படைப்பிலும் நடிப்பின் நேர்த்தியிலும் களாராவே விஞ்சுகிறார்.
மேலும் இயக்குனர் தன் மதத்தின் மீதான பகடியை கடைசி காட்சியிலும் தொடர்ந்துள்ளார்,ஜெய்கிருஷ்ணனின் தரவாட்டு வீட்டினை ஒட்டிய நிலத்திலேயே குடிசை போட்டு அனுபவித்து வந்த குடிகாரனான ராமணுண்ணியை [ஜகதிஸ்ரீகுமார்] நெடுங்காலமாய் காலி செய்யச் சொல்லி கேட்டும் காலி செய்ய மறுத்தும் துடுக்காக பேசி வந்த அவனை வேறு வழியில்லாமல் தன் நகரத்து நண்பர்களுடன் நன்றாக குடித்து விட்டு, அலேக்காக அவன் கைகால்களை கட்டித் தூக்கிச்சென்று பீச்சி அணைக்கட்டின் மேலே இருந்து தூக்கிப்போடப் போகும் அந்த காட்சிகள், அங்கே அவன் உயிருக்கு பயந்து தொடர்ச்சியாக ராம ராம ராம என முனகும் காட்சியில்,நம் முதுகை சில்லிட வைக்கிறது,அத்தனை யதார்த்தம் பொதிந்த காட்சிகள் அவை. உயிர் பயத்தை விழியில் கொண்டுவந்திருப்பார் அருமையான நடிகர் ஜகதி ஸ்ரீ குமார்.
அங்கே ஜெய்கிருஷ்ணணின் பணக்கார பஸ்சர்வீஸ் நண்பன் பாபு , ஜெய்கிருஷ்ணனுக்கு மனப்பூர்வமாக உதவ வேண்டி ,ஸ்ப்ரிங் கத்தியை வைத்து வருடி ராமணுண்ணியை மிரட்டும் இடம் எல்லாம் படத்தை ஒரு பக்கா த்ரில்லராக மாற்றிய நிமிடங்கள் என்பேன்,அதை நேரில் பாருங்கள், அனுமானிக்க முடியாத ஒரு புதிரான ட்விஸ்டைக்கூட என்ன அழகாக இந்த சிறிய கிளைக்கதையில் பொதித்து வைத்திருக்கிறார் பத்மராஜன் எனப் புரியும். ஜான்சன் மாஸ்டரின் இசையும் பிண்ணணி இசையும் மிக அருமை,தேனான 3 பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருக்க வைக்கும்.ஜெய் கிருஷ்ணனின் மீதான அந்த கதாபாத்திரத்தின் கட்டமைப்பும் ஈர்ப்பும் அப்படி சிலாகிக்க வைக்கும்,எத்தனை முறை பார்த்தாலும் புதுப்புது சங்கதிகளை சொல்லும் படம் இது,நான் முன்பு சப் டைட்டில் இல்லாமல் தரவிறக்கிப் பார்த்ததில் முக்கியமான சிலேடைகளை விட்டுவிட்டேன்,பின்னர் நேற்று யூட்யூபில் இருக்கும் 14 பாகப் படத்தை சப் டைட்டிலுடன் பார்க்க மீண்டும் உள்ளம் கொள்ளை போனேன்.80களுக்கு டைம்மெஷினில் ஏற ஆசை கொள்ள வைக்கும் ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.
முழுப் படத்தின் காணொளி யூட்யூபில் சப்டைட்டில் உடன் கிடைக்கிறது:-முதல் பாகத்தின் காணொளி இங்கே :-