அங்கீகரித்தமைக்கு நன்றி யூத்ஃபுல் விகடன்
Downfall(Der Untergang)
(நாஜிக்களின் அந்திமக்காலம்.)
(நாஜிக்களின் அந்திமக்காலம்.)
-------------------------------------------------------
2004 ஆம் ஆண்டு ஜெர்மானிய திரைப்பட குழுவால் உருவாக்கப்பட்டு ஜெர்மானிய மொழியிலும் ரஷ்ய மொழியிலும் வெளியாகி ,வெகுவாக பேசப்பட்ட இந்த படம் ,அடால்ப் ஹிட்லரின் கடைசி பனிரெண்டு நாட்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.
சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் (Bruno Ganz,)பிறந்த நாளன்று ,பிறந்த நாள் பரிசாக செம்படையினரின் அதிரடி பீரங்கி தாக்குதல்களுடன் படம் துவங்குகிறது.
முழு பெர்லினையும் ஆக்கிரமித்த செம்படையினர் ,ஹிட்லரின் பதுங்கு நிலவறையை நெருங்குவதில் தொடங்கி,ஹிட்லர் அடுத்தடுத்து சந்தித்த பலமுனை தாக்குதல்கள்,துரோகங்கள்,உண்மை விசுவாசிகளை கண்டறிதல்,
போரில் கடைசி வரை போரிட்டு வெற்றி கண்டவர்களுக்கு வழங்கிய உறுதிமொழிகள்,பதக்கங்கள்,பதவிகள்,அடுத்தகட்ட பொறுப்புகள்,கண்டு வைத்திருந்த பலிக்காமல் போன பகல்கனவுகள் என படம் படு வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்கிறது.
போர்படைத் தளபதிகள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் பெர்லினை விட்டு வெளியேறாமல் பாதாள அறையிலேயே பதுங்கி இருந்த அவல நிலை.தன் நீண்ட நாள் தோழி /காதலி இன்னொருவன் மனைவி இவாவை ,தற்கொலை செய்து இறக்க திட்டமிட்ட அன்று ஆரிய சம்பிரதாயப்படி மணம் முடிப்பது.ராஜ கம்பீரம் சுத்தமாக தொலைந்து போய் கிழ சிங்கமாக கைகள் நடுங்கிக் கொண்டும்,உடம்பு கூன் விழுந்தும் கூட தன் படை தளபதிகளிடம் எரிந்து விழுவது ,
துரோகிகளை இனம் கண்டுபிடித்து உடனடியாக சுட்டோ அல்லது தூக்கில் ஏற்றியோ கொல்வது.ஜெர்மானிய நாட்டு மக்கள் அநியாயமாக
செம்படையினரிடம் மாட்டி பீரங்கி குண்டுக்கு இரையாவதை பற்றி துளியும் இரக்கப்படாமல் "அது அவர்கள் விதி" என்பது .
பதின்ம வயது சிறார்களையும் தன் நாஜிப் படையில் சேர்த்து செம்படையினர் தன் பதுங்கு அறையை நெருங்காமல் பார்த்துக் கொள்வது சரியான குள்ளநரித்தனம் .
சர்வாதிகாரி ஸ்டாலினைப் போல தான் படிக்கவில்லை அதனால் தான் தன்னை
நாஜிப்படை தளபதிகள் ஏமாற்றி வந்திருக்கின்றனர்.ஊழல் செய்து
வந்திருக்கின்றனர், என குமைவது,எதிர்ப்படுபவரை கண்டபடி வசை பாடி தீர்ப்பது.உண்மையான நண்பர்களை உச்சி முகர்வது என அடுக்கலாம் .
தன் நெருங்கிய நண்பர்களை தனி விமானம் மூலம் தப்பி செல்ல அறிவுறுத்தியும்
அவர்கள் மறுத்து ஹிட்லருக்கு பாதுகாப்பு வளையமாக இருக்க , தன் காரிய தரிசிக்கு துப்பாக்கி குண்டை பரிசளிக்கிறார்.தப்பி செல்ல விருப்பமில்லாத அனைவரையும் தற்கொலை செய்து கொள்ளும் படி குறிப்பால் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்.திட்டமிட்டு உயில் எழுதி வைக்கிறார்.நாஜிக்களின் ஆட்சியில்லாத ஜெர்மனியை தன்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று குமுறுகிறார்.
யூதர்களை வைத்து விபரீத மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவரை ஹிட்லர் தப்பி செல்ல அறிவுறுத்தியும் கூட அவர் கேளாமல் தன்
குடும்பத்தினருடன் உணவருந்தும் போது கை வெடி குண்டை இழுத்து
வெடிக்கவைத்து சாகின்றார். மிகவும் கோரமான காட்சி.
படம் முழுக்க அடுத்தடுத்து ஒருவர் சயனைடு குப்பியை தின்றும்.துப்பாகியால் வாய்க்குள் சுட்டுக் கொண்டும் மூளை சிதறியும் இறக்கும் காட்சி கோரம்.
தன் செல்ல ஜெர்மன் ஷெபர்டு நாயும் கூட செம்படயினரிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று சயனைடு குப்பியை அதற்கும் புகட்டி கொல்லுவது கொடூரம்.
தான் இறந்ததும் தன் உயிரற்ற உடலும் கூட செம்படையினருக்கு கிடைக்க கூடாது உடனே எரித்து விடவேண்டும் என தளபதிகளுக்கு அன்புக்கட்டளை இடுவது சமயோஜிதம் .
ஹிட்லரின் தகவல் தொடர்புத்துறை பெண் தளபதி கடைசி காலத்திலும் தப்பிப் போகாமல் தன் தளபதி கணவனும் ஆறு பெண் குழந்தைகளுடன் பதுங்கு நிலவறைக்கே வருவது நெகிழ்வு .
ஹிட்லர் கடைசி காரியமாக தன் நெருங்கிய சிப்பந்திகள் மற்றும் நண்பர்களிடம்
பிரியாவிடை பெறுவது உருக்கம் .அப்போது மனம் நெகிழ்ந்த ஹிட்லர் தன் நீண்ட நாள் தோழிக்கு ஸ்வஸ்திக் தங்க பதக்கத்தை அணிவிக்கிறார்.நீ ரெய்ச்சின் வீரத்தாய் என்கிறார்.
தன் காரிய தரிசி ,சமையல்காரப் பெண் , மற்றும் இதர பணிப் பெண்களுடன் ஒன்றாக உணவு உண்கிறார்.பின்னர் தன் அறைக்குள் காதல் மனைவி இவாவுடன் நுழைகிறார்.
ஹிட்லரின் தோழி அவர் தற்கொலை செய்ய கதவை சாற்றி தயாராகும் முன்னர்.
வாயிற்காப்போனிடம் கெஞ்சி கதவை திறக்க செய்து, ஹிட்லரின் காலை பிடித்து
கெஞ்சுவது பாந்தம் .அதற்கு ஹிட்லர் நான் செம்படையிடம் மாட்டி அவர்கள் கையால் சாவதை காட்டிலும் இது எனக்கு பெருமை என்று அறைக்குள் சென்று விடுவது.என பல உணர்ச்சிகரமான பாத்திர பங்களிப்பு.
படம் முழுவதும் கேட்டுக் கொண்டிருக்கும் பீரங்கி குண்டு மழை வயிற்றை பிசையும்.துப்பாக்கி குண்டு மழை நம்மை துளைப்பது போல ஒரு பிரமை ஏற்படுகிறது.
ஹிட்லர் நடுங்கும் கைகளால் துப்பாக்கியை வாய்க்குள் செலுத்தி சுட்டுக் கொண்டு மூளை சிதறி இறப்பது.காதல் மனைவி இவா சயனைடு குப்பியை கடித்து உயிர் விடுவது.துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதும் வெளியே தயாராக இருந்த வீரர்கள் விரைந்து வந்து இருவரின் உடலையும் கம்பளியால் சுருட்டி வெளியே எடுத்து வந்து பெட்ரோல் ஊற்றி எரிப்பது.
பின்னர் சிதைக்கு நாஜி சல்யூட் அடிக்கையில் பீரங்கி குண்டு பறந்து வர ,வீரர்கள் ஆளுக்கு ஒரு மூலையாய் பறப்பது என சொல்லிக் கொண்டே போகலாம்.
ஹிட்லரின் தகவல் தொடர்புத்துறை பெண் தளபதி தன் கணவனுடன் குழந்தைகளின் அறை சென்று தூக்க மருந்து புகட்டி ஆறு குழந்தைகளையும் உறங்கச் செய்து ,பின்னர் அவர்கள் வாயில் சயனைடு குப்பி போட்டு கொல்லுவது கொடூரத்தின் உச்சம் .
பின்னர் தன் கணவன் துப்பாகியால் சுட உயிர் விடுகிறாள் ,கணவனும் சுட்டுக் கொண்டு சரிகிறான் . கொல்லி போட காத்திருந்த எஜமான விசுவாசம் கொண்ட நாஜிப் படை வீரர்கள் அவர்களையும் பெட்ரோல் ஊற்றி எரிக்கின்றனர்.
படத்தில் 200 சிகரெட் பிடிக்கும் காட்சிகளாவது உண்டு.பஞ்சில்லாத சிகரெட்டை மாறி மாறி யாராவது பற்ற வைத்துகொண்டே இருக்கின்றனர்.
யானை படுத்தால் குதிரை மட்டம் என்னும் கூற்றுக் கேற்ப ஹிட்லருக்கு வீரர்கள் ஒரு கையால் சிகரெட் பிடித்துக் கொண்டே மறு கையால் நாஜி சல்யூட் அடிக்கின்றனர். (எங்கே?நம் கண்ணை குத்தி விடுவார்களோ என்னும் பயம் வருகிறது )
வோட்கா ஒயின் பாட்டில்களை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கின்றனர்.
ஒரு பக்கம் அசைவ உணவுடன் கூடிய அறுசுவை உணவு நாஜிப் பெயர் பொறித்த பீங்கான் தட்டுகளில் பரிமாறப்பட்டு விருந்து மும்முரமாக நடக்கிறது.
கடைசி பனிரெண்டு நாட்களிலும் கூட அவர்கள் பாவமன்னிப்புக்கு யோசிக்கவில்லை.
கடைசியில் நாஜிப்படையினர் செம்படையினரிடம் நிபந்தனையற்ற சரணாகதி அடைகின்றனர்.ஹிட்லரின் காரியதரிசி மற்றும் செம்படையுடன் கடைசி வரை போராடிய பதின்ம வயது சிறுவன் இருவரும் ஒரு மிதிவண்டியில் புதிய வாழ்கை தேடி தப்பித்து செல்கின்றனர்.
மிக அற்புதமான இசை (Stephan Zacharias) மிக மிக அற்புதமான ஒளிப்பதிவு (Rainer Klausmann),மிக அழகான கலை இயக்கம்.இயக்குனர் (Oliver Hirschbiegel) திறமையான இயக்குனர்.இவர் இயக்கத்தில் வந்த invasion (2007) பார்த்திருக்கிறேன். இப்போது வெளிவந்துள்ள Five Minutes of Heaven என்னும் படமும் நன்றாக இருக்கிறதாம் (பார்க்கணும்)
நடிகர்களின் மிக யதார்த்தமான நடிப்பு.மிகையில்லாத ஒப்பனை என படம் நெஞ்சில் நிற்கிறது.அடுத்தடுத்து அரங்கேறும் தற்கொலைகள்,ஆத்திரத்தில் அரங்கேறும் கொலைகள்.
குண்டு வெடிப்பில் அங்கங்களை இழந்தவர்களின் உடல் உறுப்புகளை மார்பின் இல்லாததால் கொடுக்க முடியாமல் ,ரம்பம் கொண்டு சர சரவென்று அறுக்கும் ஒரு மருத்துவர்.மருந்துகளில்லாத ஆஸ்பத்திரிகள்.கடைசி நேர கேளிக்கைகள்,நடனங்கள்,கலவிகள்,என அப்படியே நாஜிப்படையின் அழிவை பறைசாற்றும் காலக் கண்ணாடி இந்த படம் .
பியானிஸ்ட் ,ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்,ஹிட்லர் த ரைஸ் ஆப் ஈவில் ,
வால்கைரீ ,யூரோபா யூரோபா,லைப் இஸ் பியூடிபுல் என நாஜிக்களின் அட்டூழியம் சொல்லும் படங்கள் பார்த்து நொந்து போனவர்கள் இந்த படத்தை பார்த்து சந்தோஷப் பட்டுக்கொள்வது நன்று.ஹிட்லர் அணு அணுவாய் துடித்து சாவதை எந்த படமும் இந்த அளவிற்கு பதியவில்லை.
இந்தப்படத்தில் ஹிட்லராக தோன்றிய ஜெர்மன் நடிகர் (Bruno Ganz,)
ஹிட்லர் பேசிய பேச்சின் ஏற்ற இறக்கத்தை,குரலை , நடையை பின்பற்றி அப்படியே நடித்திருந்தாராம்.இவரின் அங்க மொழிகள் அத்தனையும் ஹிட்லரின் அச்சான நடையாம்.
ஹிட்லர் பேசும் ஜெர்மன்மொழி ஆஸ்திரிய சாயல் கொண்டிருக்குமாம்.
அதையும் அரும் பாடுபட்டு கொண்டு வந்திருப்பார்.
இந்த படத்திற்கு சிறந்த வேற்று மொழிப் படத்திற்கான ஆஸ்கர் கொடுத்திருக்கலாம்.மிஸ்ஸாகிவிட்டது
______________________________________________________________
டிஸ்கி:-
இந்த நேரத்தில் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
ஹிட்லர் ஒரு சைவ உணவாளராம் .
புகை மது புலால் தவிர்த்தவராம்.
அடக் கொடுமையே?
மனிதம் மட்டும் மறந்த கபோதியோ?
கொடுங்கோலன் ஹிட்லர் போலந்தில் விதைத்ததை பெர்லினில் அறுத்தார் என்று சொன்னால் மிகையில்லை.
_______________________________________________________________
படத்தின் கானொளி
_______________________________________________________________
Directed by | Oliver Hirschbiegel |
---|---|
Produced by | Bernd Eichinger |
Written by | Joachim Fest Bernd Eichinger Traudl Junge Melissa Müller |
Starring | Bruno Ganz Alexandra Maria Lara Corinna Harfouch Ulrich Matthes Juliane Köhler |
Music by | Stephan Zacharias |
Cinematography | Rainer Klausmann |
Editing by | Hans Funck |
Distributed by | Constantin Film Newmarket Films (English subtitles) |
Release date(s) | September 16, 2004 (Germany) February 18, 2005 (USA) |
Running time | 156 minutes (original cut) 178 minutes (extended cut) |
Country | Germany Italy Austria |
Language | German Russian |