குத்துக்கல்வலசை கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றால அருவிகள் இக்கிராமத்தின் அருகாமையில் உள்ளதால் தென்காசியில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் ஊராக விளங்குகிறது. இவ்வூர் பருவ மழைத் தூறலுக்கும் பெயர் போனது. மக்கள் இதைச் சாரல் மழை என்றும் அழைப்பர்.
இதைத் தான் ஒரு வீடு இரு வாசல் படத்தின் முதல் வாசல் கதை நடக்கும் இடமாக வைத்தார் இயக்குனர் கே.பாலச்சந்தர், படத்தில் நிறைய ஆச்சர்யங்கள் உண்டு.
அதில் முதன்மையாக வயலின் சகோதரர்களான கணேஷ்-குமரேஷை இதில் இரு வாசல்களுக்கும் சுயநலமி_ஆணாதிக்க நாயகர்களாகவே மாற்றியிருந்தார் இயக்குனர்.
இப்படம் வந்து 24 வருடங்களாகிறது, இந்த வயலின் சகோதரர்கள் சினிமாவில் சாதிக்க முடியாவிட்டாலும் இந்திய சாஸ்திரிய வயலினிசையில் சாதித்தது மிக அதிகம்.
படத்தில் அண்ணன் கணேஷ் தொழிற்சாலை ஒன்றின் பொறியாளர், நல்ல சம்பளத்துடன் கார் வீடு என அருவிக்கு அருகே சொகுசாக வசிக்கிறார்,
தனிமை சூன்யத்தை விரட்ட இப்பாறைக்கு அருகே உள்ள குன்றிற்கு தினமும் வந்து பாரதியார் பாடல்களையும் தியாகையர் கீர்த்தனைகளையும் வயலினில் வாசிப்பார்.
தம்பியான குமரேஷ் இதில் ஒரு பெண்ணிய சிந்தனை எழுத்தாளர்,அவரின் உதவியாளர் விவேக்,அவர் சொல்லச் சொல்ல விவேக் எழுதுவார்,இடையில் யோசனைகள் சொல்லி மெருகேற்றுவார் .
ஆண்களின் மறுபக்கம் என்னும் நாவல் எழுத இருவரும் குற்றாலம் வந்தவர்கள்,இப்பாறைக்கு வர,அங்கே வயலினில் மானச சஞ்சரரேவை நெக்குருக வாசிக்கும் கணேஷின் இசையால் வசமாகின்றனர். மிக ரம்மியமான காட்சி அது.
விவேக் படத்தில் நிறைய உடனடி ஹைக்கூக்களாக சொல்லுவார்.அத்தனையும் அவரே எழுதியவை, அவர் இப்பாறையைப் பார்த்து சொல்லும் ஒரு ஹைக்கூ
புத்தனைப் போல் ஒரு சித்தனைப் போல்
நிற்கும் குத்துக்கல்,இது ஒத்தைக்கல்.
விவேக் படத்தின் முதல்வாசலில் மட்டும் வருவார்,இரண்டாம் வாசலில் குமரேஷ் தன் ஆண்களின் மறுபக்கம் நாவலுக்கு விருது வாங்கியவர் ஒரு இலக்கிய இதழிலும் சப் எடிட்டராக வேலையில் இருப்பார், அப்போது அவர் பழைய உதவியாளர் விவேக்கை உதறி விட்டிருப்பதை இயக்குனர் காட்டாமல் காட்டியிருப்பார்.
சென்ற வருடம் இயக்குனர் பாலச்சந்தர் விவேக் பற்றி ஒரு படவிழாவில் பேசுகையில், “நான் விவேக்கை ‘முட்டாள்’ என்றுதான் செல்லமாகக் கூப்பிடுவேன். ஆனால், அவன் ரொம்ப புத்திசாலி. முதன்முதலில் என்னிடம் சான்ஸ் கேட்டு வரும்போதே, அவன் எழுதிய புதுக்கவிதைகளையெல்லாம் கொண்டு வந்து காட்டிதான் சான்ஸ் வாங்கினான்.
ஒரு வீடு இருவாசல் படத்துக்கு குற்றாலத்தில் படப்பிடிப்பு நடந்த போது வானத்தில் வானவில் பார்த்தேன். அது மறைவதற்குள் படம் பிடிக்க நினைத்தேன். ஆனால், அதை படத்தில் வெறுமனே காட்ட எனக்கு விருப்பம் இல்லை. அங்கு விவேக் நின்று தன் நண்பனிடம் அந்த வானவில் பற்றி புதுக்கவிதை பேசுகிற மாதிரி படம் பிடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
உடனே அங்கு நின்று கொண்டிருந்த விவேக்கை அழைத்து,‘வானவில்லைப் பற்றி உடனே ஒரு புதுக்கவிதை எழுதுடா’ என்று சொன்னேன். அந்த வானவில் மறைவதற்குள் எழுதி முடிக்க வேண்டுமே என்ற பதற்றம் இருந்தாலும், அழகாக எழுதிவிட்டான். உடனே அவனை பேச வைத்து படமாக்கினேன்” என்றார்.
அந்த ஹைக்கூ இங்கே
வண்ணங்கள் கோர்த்த வளைந்த மலரா?
வானம் அடித்த வாட்டர் கலரா?
அர்ச்சுனன் வில் என்னும் கனவுப் போஸ்டர்!
ஆண்டவன் தான் இதற்கு ட்ராயிங் மாஸ்டர்!!!
இப்படத்திற்கும் ரகுநாதரெட்டி தான் ஒளிப்பதிவாளர், குறைந்த முதலீட்டில் உருவான திரைப்படம் என்பதால் சூப்பர் 16 எம் எம் ஃப்லிம் ஸ்டாக் கொண்டு எடுத்து விட்டு 35mm ப்ளோன் அப் செய்திருப்பார்கள், அந்த சூரிய அஸ்தமனக் காட்சியின் போது கே.பாலச்சந்தர் & ரகுநாதரெட்டியின் சில்ஹவுட் ஒளிப்பதிவின் மீதான தீராக்காதலும் மேதமையும் மிக அருமையாய் வெளிப்பட்டிருக்கும். படம் இங்கே.
இப்படம் இன்றும் தமிழ்சினிமாவில் ஒரு ஆச்சர்யம்,படம் பற்றி விரிவாக எழுதுவேன்.
முழுப்படம் யூட்யூபில் நல்ல ப்ரிண்ட் , கட்கள் எதுவும் இல்லாமல் கிடைக்கிறது, அவசியம் பாருங்கள். லிங்க்.
http://www.youtube.com/watch?v=hUJ6WBGHAiY