மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே எனக்கு மிகவும் பிடித்த பாடல் , எக்காலத்துக்கும் பொருந்தும் அற்புதமான பாடல் வரிகள், கே.வி மகாதேவன் இசையில் மருதகாசி அவர்களின் பாடல் வரிகளை டி எம் எஸ் அவர்கள் பாடியிருப்பார். எம்ஜியார் எத்தனையோ படங்களில் மாட்டு வண்டியும் குதிரை வண்டியும் ஓட்டிக்கொண்டு அறிமுகப் பாடல் பாடி வந்தாலும் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
தாய்க்குப் பின் தாரம் 1956 ஆம் வருடம் திரைக்கு வந்தது, படத்தை தேவர் தயாரிக்க,அவரது இளைய சகோதரம் எம்.ஏ.திருமுகம் இயக்கினார்,படத்தின் எடிட்டரில் அவரும் ஒருவர். இப்படத்தின் ஒளிப்பதிவு. ஆர்.ஆர்.சந்திரன். எம்ஜியாரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். எம்ஜியாருக்கு மிகவும் பிடித்தமானவரும் கூட எனப் படித்தேன்.
1956 ஆம் ஆண்டில் குறைந்த பட்ஜெட்டில் கிடைத்த உபகரணங்கள் மட்டும் வைத்துக்கொண்டு இப்படி ஒரு அழகான பாடலுக்கு ஒளிப்பதிவு செய்ததைப் பாருங்கள்.இது ஒரே ஷாட்டில் படம் பிடித்த பாடல் இல்லாவிட்டாலும்,அப்படி ஒரு தோற்றத்தை உண்டு செய்திருப்பர் ஒளிப்பதிவாளர் ஆர்.ஆர்.சந்திரனும் படத்தின் எடித்தர் எம்.ஏ.திருமுகமும் , எம்ஜியாரின் துவக்க காலப் படம்,
இப்பாடலைப் படமாக்க கவனமாக தேர்ந்தெடுத்த கிராமப்புற மண் சாலையைப் பாருங்கள்.வேகமாக ஓடும் மாட்டு வண்டி, நடிகருக்கு மாட்டை கையாளத் தெரிந்தால் தான் இத்தனை நேர்த்தியாக பாடல் வந்திருக்க முடியும்,
எம்ஜியார் வண்டி ஓட்டிக்கொண்டே அட்சர சுத்தமாக பாடலுக்கு வாயும் அசைக்க வேண்டும். அவருக்கு கேமராவில் எத்தனை டைட் க்ளோஸப் பாருங்கள், அதில் எம்ஜியாரின் எத்தனை ஈடுபாடு எத்தனை சுத்தமான வரிகள் உச்சரிப்பு , முக மலர்ச்சியைப் பாருங்கள்.இந்த எண்ட்ரி காட்சியில் எப்படி விசில் பறந்திருக்க வேண்டும்.
இப்படம் வந்த காலகட்டத்தில் கேமராவில் மைக்ரோ ஸூம்களும், ட்ராலி ஷாட்டுகளும் இந்திய சினிமாவில் அறிமுகமாகவில்லை எனப் படித்தேன்.