"விட்டான் பாணத்த காமதேவன்"
ஹேராம் படத்தில் இந்த பொல்லாத மதன பானம் பாடல் ஏன் வைத்தார்? இயக்குனர் என யோசித்திருக்கிறேன் , அது பாரம்பர்ய நடனம் அதன் பெயர் லாவணி என்ற அளவிற்குத் தான் தெரியும், ஆனால் லாவணி கொண்டிருக்கும் உட்பொருள் "காம தகனம்" என்பதாம்.
மராட்டிய மாநிலத்திலிருந்து தஞ்சாவூருக்கு மாராட்டியர்களால் கொண்டுவரப்பட்ட கலை "லாவணி". இக்கலை நானூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்ததாகும்.
தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் "லாவணி' பிரபலம். "லாவணி' என்பது நாற்று நடுதல் என்று பொருள்படும். வயலில் நடவு நடும் பெண்கள் தங்களின் உழைப்பின் களைப்பைப் போக்க பாடும் பாடல் எனவும் கூறலாம்.
ஆரம்பத்தில் "லாவணி'யைப் பாடுவதற்கும், அதை காண்பதற்கும் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.
அதற்குக் காரணம், இந்த "லாவணி' என்பது காமச்சுவை நிறைந்த பாடல்களால் அதிகம் நிரம்பியிருந்தது என்பதால் தான், பிறகு இந்த "லாவணி'யை வரையறை செய்த பிறகு, பெண்களும் அதிகம் பங்கேற்க ஆரம்பித்தார்கள்.
"லாவணி' நாட்டுப்புற இசைக்கலையில் முக்கியமானதாகும், மாசி மகத்தன்றும் நடக்கும் "காம தகன விழா'வில் "லாவணி" நிகழ்த்தப்படும், மகாராஷ்டிரத்தில் மகாராஜாக்கள் தங்கள் அரண்மனைக்கு வரும் விருந்தினர்களுக்கு முன்பாக லாவணி நடன நிகழ்ச்சிகளை நடத்துவராம்,
அரண்மனையில் தலைமை அந்தப்புரக் காவலாளியாக திருநங்கையோ நம்பியோ இருப்பாராம், அவர் பாடல் வரிகளைப்பாடி ஆடும் அணிகளுக்கு இடையிடையே பொருத்தமான வரிகளை எடுத்துத் தருவாராம்,இந்த பாடலிலும் திருநம்பி ஒருவர் "சக்குபாயி" என்பார்
முதலில் இரு ஆண்கள் எதிர் எதிராக அமர்ந்து, "எரிந்த கட்சி', "எரியாத கட்சி' என்று பிரிந்து "லாவணி'யைப் பாடுவார்களாம். இந்தப் பாடலின் முடிவில் காமன் எரிக்கப்படும் நிகழ்ச்சி "காம தகன விழா" வாக கொண்டாடப்படுகிறதாம்.
இப்பாடலில் லாவணி ஆடியவர் Prachee Shah Paandya, மராத்தி நாடகம் மற்றும் சினிமா நடிகை, இவர் கதக் நாட்டியக் கலைஞரும் கூட, 2015 ஆம் ஆண்டு கதக் நடன நிகழ்ச்சி ஒன்றில் ஆடுகையில் ஒரு நிமிடத்தில் 93 முறை சுற்றி ஆடியதற்கு கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார்,இவர் குஜராத் மார்வாடி குடும்பத்தில் மகாராஷ்டிரத்தில் பிறந்து வளர்ந்தவர், இப்பாடலில் லாவணி ஆடுகையில் இவருக்கு 20 வயது,
இவர் இந்திய அரசின் அதிகாரபூர்வமான கதக் ambassador ம் கூட, படத்தில் இந்தப் பாடலுக்கு நடன இயக்கம் இயக்குனர் கமல்ஹாசன் தான், 1970 களில் அவர் கோலாபூரில் இரு வருடங்கள் தங்கி கதக் மற்றும் பிராந்திய நடனங்கள் பயின்றது அவருக்கு சிறப்பாக கைகொடுத்தது.
இப்பாடலின் துவக்கத்தில் சாகேத்ராம் காமத்தை எரிக்காத கட்சியில் இருக்கிறார், இப்பாடலில் லாவணி ஆடும் நடன மங்கையின் அசைவில் அவர் இறந்து போன மனைவி அபர்ணாவையே காண்கிறார்,
அபர்ணாவும் வங்காளத்தின் ஆட்பூரே பாணி புடவைக்கட்டில் சுழன்று சுழன்று லாவணி ஆடுகிறார், அங்கே அபர்ணா மறைந்து விட , தன் அழகிய கன்னி மனைவி மைதிலியின் அழகில் சொக்கிய சாகேத்ராம் அவளை கவர்ந்து கொண்டு படிகளில் ஏறுவார்,
அரண்மனையின் விஸ்தாரமான விருந்தினர் அறைக்கு கொண்டு சென்று அந்த ஹம்ஸதூளிகா மஞ்சம் போன்ற படுக்கையில் கிடத்தி காம தகனம் செய்கிறார்,அங்கே கன்னி மனைவியை முயங்குகையில் சற்று முன் இவர் மகாராஜாவின் ஆயுதக் கிடங்கில் தேர்வு செய்திருந்த Mauser broom handle துப்பாக்கியாக ( upscale model) மனைவி தோற்ற மயக்கம் தருவார்,( மனைவியைத் துகிலுரிவதைப் போலவே படத்தின் பட்டறைக் காட்சியில் தன் Mauser ஐ அக்கு வேறு ஆணி வேறாக பிரித்திருப்பார் சாகேத்ராம்)
அதன் பிறகு அவர் காமம் கொள்வதேயில்லை, அந்த காம தகனக் காட்சியை உன்னிப்பாக கவனித்தீர்கள் என்றால் அது தெய்வங்களின் சங்கமம் போலத்தான் தோன்றும், தாந்த்ரிக் கலவி போல ஆலிங்கனம் செய்த தம்பதிகள் அங்கே ஆகாயத்தில் பயணித்து சக்கரம் போல சுழன்ற படி முயங்கி கீழே பூமிக்கு வருவர்,
நழுவி விழுகையில் பறவைக் கோணப் பார்வையில் கோலாப்பூரின் நிலப்பரப்பும் மலைகளும் panhala கோட்டையும் தெரியும்,ஏரோப்ளேன் லேண்டிங் காட்சியிலும் இந்தக் கோட்டை பற்றி பார்த்தோம்.
(இது மந்த்ரா அனிமேஷன் நிறுவனம் செய்தது ) அங்கிருந்து தொம்மென்று அந்த king size bed ல் தடாலென விழுவர் , காம தகனம் அங்கே அந்தக் கனத்தில் நிறைவுரும்,சாகேத்ராம் நெடுநாள் மன பாரத்தை அங்கே தகனம் செய்தவர் பியானோவில் தனியாவர்தனம் வாசிப்பார், தன் விரித்த தலையைக் கட்டுவார்.
இப்பாடலின் தமிழ் வரிகளை எழுதியது கவிஞர் வாலி அவர்கள், பாடியது அனுபமா, மற்றும் மகாலஷ்மி ஐயர்.
இப்பாடலின் இந்தி வரிகளை எழுதியது சமீர் மற்றும் ஜகதீஷ் ,பாடியது அனுபமா,மற்றும் ப்ரீதி உத்தம் .
இந்தப்படத்தின் இசைக்கு மட்டும் இயக்குனர் தனக்கு எப்படி வேண்டும் என்று சொல்லாமல் தானாகவே பழம் நழுவி பாலில் விழுமே, அது போல இசைஞானியிடமிருந்து கிடைத்ததாம்,
மகாராஷ்ட்டிரம் என்று சொன்னால் அந்த பிராந்திய வாத்தியம், கொல்கத்தா என்று சொன்னால் அந்த பிராந்திய வாத்தியம், தில்லி என்கையில் அந்த பிராந்திய வாத்தியம், தென்னகம் என்கையில் அந்த பிராந்திய வாத்தியம், என அவராகவே பார்த்துப் பார்த்துப் பார்த்து homework செய்து ஆத்மார்த்தமாகச் செய்தாராம், இவர் மனதில் இருந்த ஒலியை அவர் நோட்ஸில் ,இசைக் கலைஞர்களை வைத்து வாசித்துக் காட்ட , மலைத்து, பிரமித்தேன் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் இயக்குனர்.
#prachee_shah_paandya,#லாவணி,
#கமல்ஹாசன், #kamalhaasan,#இசைஞானி #ஹேராம்,#ப்ராச்சீ_ஷா_பாண்ட்யா