வேர்ல்ட் வார் ஸோம்பி ஒருவழியாக இன்று பார்த்துவிட்டேன்,ஸோம்பி என்றாலே எனக்கு ஒவ்வாமை தான்,இருந்தும் நண்பர்களுக்காக சென்றேன்,அங்கே நண்பர் இது போர் பற்றிய படம் என நினைத்திருக்க,நான் பெயர் போடும் போது சஸ்பென்ஸை உடைத்து இது ஸோம்பிகளின் படம்,அதனால் தான் அந்த இஸட் என்றேன்.அட சிக்கிட்டோமா?என்று ஆதங்கப்பட்டவரை,இல்லை,திரைக்கதை நன்றாக இருக்கும் என்று என் நண்பர் கருந்தேள் எழுதியுள்ளார் என்று தேற்றினேன். படம் ப்ராட் பிட்டிற்காக ஒருமுறை பார்க்கலாம்,ப்ராட் பிட் மனைவியாக ஒரு சோபை இழந்த அபலையை நடிக்கவைத்துள்ளனர்,அவர் வரும் காட்சிகள் செம எரிச்சலை கிளப்பியது,படத்தின் சிஜியும் மேக்கிங்கும் நன்றாக இருக்கிறது,இதுவரை நாம் பார்த்த சொங்கி போல மெதுவாய் நடக்கும் ஸோம்பிகள் இதில் வீறு கொண்டு அதி வேகத்துடன் மம்மியின் ராட்சத வண்டுக் கூட்டம் போல மொய்த்து வருகின்றனர்.கார்களை உடைக்கின்றனர்.நியூயார்க் நகரமே பற்றி எரிகிறது,
மக்கள் ஒரே நாளில் இனம் தெரியாத வைரஸினால் பீடிக்கப்பட்டு கொத்துக் கொத்தாக ஸோம்பிகளாகின்றனர்,அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவே ஸோம்பிகளால் கொல்லப்படுகிறார்,[என்ன படைப்பு சுதந்திரம் பாருங்கள்?] ஸோம்பிளிடமிருந்து நோவாவின் ஆர்க் கப்பல் போல ஒன்றில், நாட்டுக்கு மிகவும் தேவையான ராணுவத்தினரையும், விஞ்ஞானிகளையும் அவர் குடும்ப சகிதம் ஒன்று திரட்டி போர் கப்பலில் தங்க வைக்கின்றனர், குடும்பத்துக்கு பாதுகாப்பு பெற்றவர்கள் நாட்டுப்பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அவர்கள் ஸோம்பியின் ஊற்றுக்கண்ணை தேடிப்போகின்றனர்,அவர்கள் என்ன ஆனார்கள்?என்பது தான் கதை,படத்தில் கொடிய இஸ்ரேலியர்களை புனித பசுக்களாக சித்தரித்துள்ளனர், அவர்கள் நாட்டுக்குள் கூட்டம் கூட்டமாக ஸோம்பிக்களால் துரத்தப்பட்ட அண்டை நாட்டு அகதிகள் லட்சோபலட்சம் பேர் மொய்த்து வர, அதை யூதர்கள் இன்முகத்துடன் வரவேற்பது போலவும்,அங்கே இஸ்லாமியர்களும் யூதர்களும் சகோதரத்துவம் பேணுவதாகவும், ஒருங்கே அங்கே ஒரே சதுக்கத்தில் ஒற்றுமையாக இரு மத வழிபாடு செய்வதாகவும் காட்டி சிரிப்பு மூட்டியுள்ளனர்,
ஏதோ யூத பிரச்சார படமோ என எண்ணும் படியான 10 நிமிடம் அது,யூதர்கள் கட்டிய பெருஞ்சுவருக்கு நியாயம் செய்வது போல அது ஸோம்பிகள் உள்ளே வராமல் காக்கும் அரணாக விளங்குவது போல ஒரு காட்சி வேறு அமைத்திருந்தனர்,ஐநாவுக்காக ஸோம்பிகளை நேருக்கு நேரே சந்திக்க கிளம்பிப்போகும் ப்ராட் பிட்டின் குடும்பத்தை,ப்ராட்பிட் இறந்து விட்டார் என்னும் செய்தி கேட்டவுடனே ஹெலிகாப்டரில் கொண்டு சென்று அகதிகள் முகாமில் ஐநா அதிகாரிகள் விட்டுவிடும் காட்சி,ஐநாவின் நிஜ முகத்தை காட்டுகிறது,
படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு நமக்கு சிரிப்பு வருகிறது,வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் லேபுக்குள் ப்ராட்பிட் தடுப்பு ஊசி ஒன்றை தனக்கு தானே போட்டுக்கொண்டிருக்க வெளியே இருக்கும் ஒரு ஸோம்பி பல்லை சத்தத்துடன் கிட்டிக்கொள்ளும்,அந்த ஒன்று தான் சிரிப்பை வரவழைத்தது, நல்ல வேகமான திரைக்கதையாதலால் கொட்டாவி வராமல் படத்தை ஒன்றிப்பார்க்க முடியும், இயக்குனர் மார்க் ஃபாஸ்டர் நைட் ஷ்யாமலன் போல பார்வையாளர்களை சோதிக்காததற்கே இந்த படத்தை பார்க்கலாம்,நைட் ஷ்யாமலனுக்கு எல்லாம் இனிமேல் எவனாவது ஏஜண்ட் பட வாய்ப்பு வாங்கிக்கொடுத்தால் அவன் நாசமாகத்தான் போவான்.