எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள விக்டோரியா மெமோரியல் ஹால் எனக்கு சென்னையில் மிகவும் பிடித்தமான நூற்றாண்டு விழா கண்ட கட்டிடமாகும், 2021 ஆம் ஆண்டில் பழமை மாறாமல் புதுப்பித்து (conservation ) மீட்டெடுத்துள்ளனர், அத்தனை அழகாக இருக்கிறது, இந்த கட்டிடத்தை காண இருவிழிகள் போதாது என்றால் மிகையில்லை.
விக்டோரியா மெமோரியல் ஹால் பாந்தியன் சாலையில் மெட்ராஸ் மியூசியம் (செத்த காலேஜ் ) வளாகத்திற்குள் உள்ளது,1998 ஆம் ஆண்டு இதன் முகப்பில் பேந்தியன் சாலை மீது மேம்பாலம் கட்டப்பட்டது , அதனால் இதன் புறத்தோற்றம் முழுக்க அடைபட்டுப் போய் குடத்தினுள் இட்ட விளக்கு போல அமைந்துள்ளது, 1998 ஆம் ஆண்டு இங்கே எதிரே உள்ள ஃபவுண்டன் ப்ளாஸா அலுவலக வளாகத்தில் என் ஆர்கிடெக்ட் அலுவலகம் இருந்தது, அங்கு மதிய உணவு இடைவேளையில் இங்கே வந்து இதன் அழகைப்பருகியபடி நிழலில் அமர்ந்திருப்பது என் வாடிக்கை.
1980 -1990 களில் இக்கட்டிடம் அழுக்கேறி பொலிவிழந்திருந்தது, மோசமான பராமரிப்பு , கூரையில் அரசமரம் கூட வளர்ந்து கட்டிடத்தை சேதப்படுத்தியிருந்தது, சுமார் இருபது ஆண்டுகளாக இந்த பழமை மாறாமல் புதுப்பிக்கும் conservation பணிகள் நடந்து இன்று புத்தம் புதியதாக உள்ளது,இருந்தும் ஒரு இடத்தில் கூரையில் செடி வளர்ந்ததை பார்க்க முடிந்தது, இதற்கு மாதா மாதம் பராமரிப்பு தேவை, பொறியியல் கல்லூரி மாணவர்களைக் கொண்டு கூட தன்னார்வ பசுமை நடை ஒருங்கிணைத்து இங்கு உழவாரப்பணிகளை முன்னெடுக்கலாம், மாணவர்களுக்கும் புராதான கட்டிடங்களை பாதுகாப்பது பற்றிய சிந்தனை திறப்பிற்கு இது வழிவகுக்கும்.
அத்தனை அற்புதமான வரலாற்று சிறப்பைக் கொண்டுள்ள கட்டிடம் இது.
1887 ஆம் ஆண்டில் இங்கிலாந்து
மகாராணி விக்டோரியாவின் 50 வது ஆண்டு ஆட்சியின் நினைவாக, சென்னை அருங்காட்சிய வளாகத்தில் விக்டோரியா நினைவு மண்டபம் மற்றும் விக்டோரியா தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (VTI) அமைக்க திட்டமிடப்பட்டது.
விக்டோரியா தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (VTI) என்பது உள்ளூர் கலை மற்றும் கைவினைகளை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பாகும்.
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் விக்டோரியா பொது மன்றம் (Victoria Public Hall) அமைந்துள்ளது. இந்தக் கட்டுரை விக்டோரியா எழும்பூர் நினைவு மண்டபத்தைப் பற்றியது. இரண்டும் வேறுபட்டவை. பொதுவாக, இரண்டிற்கும் இடையே மக்கள் எளிதில் குழப்பிக் கொள்வர், Google Map இடுகையில் Victoria Memorial Hall , Pantheon road என சரியாக தேர்வு செய்யவும்.
விக்டோரியா தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்திற்கு (VTI) பல ஆண்டுகளாக நிரந்தர கண்காட்சி கூடம் கிடையாது. 1906 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி, வேல்ஸ் இளவரசர் ( மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் ) அவர்கள் இந்த எழும்பூர் அருங்காட்சியக வளாகத்திற்குள் நாம் இங்கே காணும் விக்டோரியா நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
1909 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி சென்னை கவர்னர் Sir Arthur Lawley இந்த நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார். இதனால், VTI க்கு இங்கே நிரந்தரமான பெருமைமிகு முகவரி கிடைத்தது.
இக்கட்டிடத்தை ஐரிஷ் கட்டிடக் கலைஞரான Henry Irvin அவர்கள் வடிவமைத்தார், புகழ்பெற்ற கட்டுமானராக திகழ்ந்த கட்டுமான ஒப்பந்ததாரர் நம்பெருமாள் செட்டி இதைக் கட்டினார், நம்பெருமாள் செட்டி அவர்களுக்கு சென்னையில் 99 வீடுகள் இருந்தன,புரவலரான இவர் கணிதமேதை ராமானுஜம் அவர்களின் இறுதிநாட்களில் தன் mc Nichol's road வீடான cryant மற்றும் Gometra வில் வைத்து தரமிகு சிகிச்சை தந்து கவனித்துக் கொண்டவர்,கட்டுமானர் நம்பெருமாள் செட்டி பற்றி பாடத்தில் இருக்க வேண்டும்,ஆனால் நமக்கு அது முக்கியமில்லை என்பதால் அவரை சடுதியில் மறந்துவிட்டோம், B.Arch கட்டிடக்கலை பாடத்தில் கூட Indo Sara scenic கட்டிடக்கலைக்கு உழைத்த அவரை நினைவுகூறுவதில்லை.
இந்த இருவரின் கூட்டு பங்களிப்பில் சென்னையில் எத்தனையோ கட்டிடங்கள் சிறப்புற அமைந்து இவர்களுக்கு புகழாரம் சூட்டுகின்றன, சட்டக் கல்லூரி, உயர் நீதிமன்றம், எஸ்பிஐ மற்றும் கன்னிமாரா நூலகம் போன்ற பல அற்புதமான கட்டமைப்புகளை நகரத்தில் உருவாக்கியவர்கள், இந்த தலைசிறந்த தனித்துவமான படைப்பும் அவற்றில் ஒன்று.
இந்த கட்டிடக்கலை பாணி முகலாய - ராஜஸ்தானி பாணிகளின் ஊடும் பாவுமான கலவையாகும், இது ஜெய்ப்பூர் முகல் பாணி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் வெளிப்புறச் சுவர்கள் தடாவிலிருந்து வெட்டிக் கொண்டு வந்த இளஞ்சிவப்பு மணற்கற்களால் (light red sand stone ) ஆனவை.இந்த எல்லை சுவரை இணைப்பு படங்களில் பாருங்கள் ,அதில் கூட Mashrabia என்ற intricated chiseled jally கடைசல் வேலைபாடுகள் இளஞ்சிவப்பு மணற்கல் பலகங்களில் வடித்து பொருத்தியதைப் பாருங்கள்.
இதன் பிரம்மாண்டமான வாசல் 1600 களின் முற்பகுதியில் ஃபதேபூர் சிக்ரியில் அக்பரால் கட்டப்பட்ட புலந்த் தர்வாசா அல்லது ""The Door to Victory"" பாணியை ஒத்திருக்கிறது.
இரண்டாம் உலகப் போரின் போது VTI தனது முகவரியை அண்ணா சாலையில் இன்றைய TVS க்கு நேரெதிரே மாற்றியது.
1951 ஆம் ஆண்டு அருங்காட்சியகம் தனது நூற்றாண்டு விழாவை கோலாகலமாகக் கொண்டாடியது.
பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த மண்டபத்தை தேசிய கண்காட்சியமாக பெருமையுடன் அர்ப்பணித்தார்.
ஏறக்குறைய கடந்த இருபதாண்டு காலமாக பழுதுபார்த்தல் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வந்தன,
பொதுமக்களுக்கு பார்வை மறுக்கப்பட்டது, நான் பல ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தாலும் கட்டிடத்திற்குள் நுழைந்து பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.
இந்த விக்டோரியா மெமோரியல் கட்டிடத்தின் மொட்டை மாடியில் நினைத்ததை முடிப்பவன் திரைப்படத்தில் coca cola வில் மயக்க மருந்து கலந்து தந்து வைர நெக்லஸ் மற்றும் வைரங்களை திருடும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது, திருடா திருடா சந்திரலேகா பாடல் இந்த கட்டிட முகப்பில் இரவுக் காட்சியாக படமாக்கப்பட்டுள்ளது.