காலம் சென்ற இயக்குனர் ரிதுபர்ன கோஷின் ரெயின் கோட் திரைப்படம் ,இந்திய கலை சினிமாவின் முக்கியமான படைப்பு, இது எழுத்தாளர் ஓ.ஹென்ரியின் 1906ல் வெளிவந்த The Gift of the Magi என்னும் சிறுகதையைத் தழுவி வெளியான திரைப்படம், ரிதுபர்ன கோஷ் தன் மானசீக ஆசான் சத்யஜித் ரே வின் ஒப்பற்ற படைப்பான , 1976 ஆம் ஆண்டு வெளிவந்த ஜன ஆரன்யா[ஆங்கிலத்தில் The Middleman] வில் இருந்து ஒரு காதல் தோல்வி திரியில் வரும் ஒரு முக்கியமான காட்சியை தன் ரெயின் கோட்டில் எடுத்தாண்டிருக்கிறார்,
ஆனால் இது காப்பி அல்ல ட்ரிப்யூட்.மூலத்தை விடவும் தழுவல் மேம்பட்டு நிற்கையில் அது ட்ரிப்யூட் ஆகிறது, மூலத்தை விடவும் தழுவல் கோணிக்கொண்டு பல் இளிக்கையில் அது காப்பி ஆகிறது,இது தான் வித்தியாசம்.இப்படித்தான் நான் காப்பியையும் ட்ரிப்யூட்டையும் வரையறுக்கப் பழகியுள்ளேன்.
ஜன ஆரண்யா திரைப்படத்தில் ,கொல்கத்தாவின் நகர சூழலில் வேலை தேடி அலுத்துப்போய் காதலியை வேறொருவன் தட்டிக்கொண்டு போவதை தடுக்கமுடியாமல் மனதுக்குள் குமையும் சோம்நாத் [ப்ரதிப் முகர்ஜி] கதாபாத்திரம் தான் ரெயின் கோட் திரைப்படத்தில் ஊரக வங்காளத்தில் படிப்பை முடித்து,வேலை தேடிக்கொண்டிருக்கும் மனு [அஜய் தேவ்கன்]
ஜன ஆரண்யாவில் சோம்நாத் தன் அண்ணி கமலாவை உற்ற தோழி போலவே பாவிக்கிறான், தாயிழந்தவன் மனம் விட்டு அவரிடம் அப்படிப் பேசுகிறான், கமலாவும் தன் கணவன், மாமனாருக்கு தெரியாமல் சோம்நாத்&அபர்னா சென் காதலுக்கு உதவுகிறாள், அபர்னா சென் பெற்றோரின் கட்டாயம் மற்றும் செட்டில் ஆக வேண்டிய சந்தர்ப்பவாதத்தால் ஒரு டாக்டரை மணந்து கொண்டு வெகு தொலைவுக்கு செல்ல நினைக்க, அண்ணி கமலா அவனுக்காக அப்படி வருந்துகிறாள்,
இதே போலவே ரெயின் கோட்டில் காதல் தோல்வியுற்று , சணல் கம்பெனியில் வேலையும் இழந்து,தன் முன்னாள் நண்பர்களிடம் பண உதவி பெற்று புதுவாழ்வை தேட கொல்கத்தா வரும் மனுவுக்கு, நண்பனின் மனைவியான ஷீலா [மவ்லி கங்குலி]அப்படி கரிசனம் காட்டுவார், அஜய் தேவ்கன் மிகுந்த தாழ்வு மனப்பான்மையால் நண்பனின் ஒயிலான அபார்ட்மெண்டில் புழங்க சிரமப்படுவார், இவர் தான் அப்படி ஓடி ஓடி உதவுவார்,மனு டாய்லெட்டில் ஷேவ் செய்கையில் அழுவதை வெளியில் இருந்து உற்றுக் கேட்டவர் , இனி அழும் போது ஷவரை திருகி ஓடவிட்டு அழுமாறு ஆலோசனை சொல்வார், மனு புது தைரியம் பெற்றவர், ஷீலாவிடம் தன் நண்பனுடனான திருமணத்தன்று அவள் ஏன் அப்படி அழுதாள் எனப் புரிகிறது என்று ஷீலாவை மடக்குவார். மிக அருமையான காட்சியாக்கம் அது,மனுவும் நண்பனின் மனைவி ஷீலாவை பாபி என்று தான் அழைப்பார்.
இக்காட்சியை சத்யஜித் ரே தன் ஜன ஆரண்யாவில் இப்படி வைத்திருந்தார்,தன் மைத்துனன் சோமநாத் காதல் தோல்விக்காக அண்ணி கமலா மிகவும் வருத்தம் கொண்டு, நாளை அவள் திருமணத்துக்கு போகமாட்டாய் தானே?!!!ஆனால் அவள் தேம்பித் தேம்பிஅழுவதை நீவிரும்புவாய் தானே?!!! கவலைப்படாதே ,அவள் நாளை திருமணத்தின் போது நிறைய அழுவாள்,என்கிறாள்,
சோம்நாத் அண்ணியை நிதானமாகப் பார்த்தவன்.அண்ணி, நீங்கள் ஏன் உங்கள் திருமணத்தின் போது அப்படி அழுதீர்கள் எனப் புரிகிறது!!! என்பான். இரு ஒப்பற்ற படைப்பாளிகள் அவர்கள் இயக்கிய இந்த காட்சியில், கலை அதன் உச்சத்திற்கு உயர்ந்து நிற்கிறது.இந்த இரு படங்களின் கனெக்ஷனையும் என்னால் ஆயுளுக்கும் மறக்க முடியாது.
ரெய்ன்கோட் திரைப்படம், தன்னலமற்ற அன்பின் ஆழத்தையும், வறுமையின் பிடியில் சிக்கியவர்களின் மௌனமான போராட்டத்தையும் மையப்படுத்துகிறது.
வேலை இழந்து, சொந்த தொழில் செய்ய நண்பர்களிடம் பண உதவி கேட்கலாம் என கல்கத்தா வரும் மனு, தன் முன்னாள் காதலி நீருவைச் சந்திக்கும்போது, ஒருவரின் உண்மையான எதார்த்தத்தை மற்றவர் முன் மறைப்பதற்காக இருவரும் புனைந்துரைக்கும் பொய்களைச் சுற்றியே இக்கதை நகர்கிறது.
நீரு, தன் பெரிய வீட்டின் ஆடம்பரத்தைக் காட்டி, தான் சந்தோஷமான செல்வந்த வாழ்க்கை வாழ்வதாகச் பல பல பொய்யுரைக்கிறாள்.
அதேபோல், மனுவும் தான் ஒரு வெற்றிகரமான தொலைக்காட்சி விளம்பர தயாரிப்பாளர் என்று சொல்லி, தன் கையறு நிலையிலிருந்து தன்னை மறைத்துக் கொள்கிறான்.
இந்த உரையாடல், தோற்றத்திற்கும் எதார்த்தத்திற்கும் இடையேயான கூர்மையான வேறுபாட்டை வெளிப்படுத்துகிறது.
மனு நண்பனிடமிருந்து இரவல் பெற்று வந்த மழைக் கோட்டு , இருவரின் உண்மையான வேதனையையும் ஏழ்மையையும் மறைக்க உதவும் ஒரு புற அடையாளமாக மாறுகிறது.
கதையின் முடிவில், அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டிய பரிதாபத்தினால் அல்லாமல், ஆழமான, தன்னலமற்ற அன்பினால் உந்தப்பட்டு, தங்கள் வசமிருந்த கடைசி மதிப்புமிக்க ஒன்றை துச்சமாக எண்ணி மற்றவருக்காக தியாகம் செய்கிறார்கள்.
தான் கஷ்டப்பட்டுச் சேகரித்த பனிரெண்டாயிரம் ரூபாய் பணத்தை மனு நீருவின் வீட்டு வாடகை நிலுவைக்காகக் கொடுக்கிறான், நீருவோ, பதிலுக்குத் தன் நகைகளை மழைக்கோட்டின் பையில் வைத்து மனுவுக்கு உதவுகிறாள். இந்த இரட்டைத் தியாகமானது, இருவரின் உறவு முறிந்தாலும், தியாகத்தின் மூலம் வெளிப்படும் அவர்களின் உண்மையான ஆத்மார்த்தமான காதல், எந்தவொரு உலகியல் செல்வத்தையும் விட மேலானது என்பதை உணர்த்துகிறது.
இது, தனிமனிதர்களின் ஆழ்ந்த உணர்வுகளையும், அவர்களின் தோல்வியுற்ற வாழ்வின் துயரங்களையும் பேசும் ஒரு கலைப் படைப்பாக அமைகிறது.
ஓ. ஹென்றி எழுதிய "தி கிஃப்ட் ஆஃப் தி மேகி" என்ற சிறுகதையை மிக அழகாக இந்திய கொல்கத்தா சூழலுக்கு மாற்றி திரைக்கதை எழுதியிருந்தார் இயக்குனர் ரிதுபர்ன கோஷ்,
மிகவும் ஏழ்மையில் உள்ள ஜிம் மற்றும் டெல்லா ஆகிய இளம் தம்பதியினரின் தன்னலமற்ற அன்பைச் சொல்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு நாள் முன்பு, டெல்லா தன் கணவன் ஜிம்முக்கு நல்ல பரிசு வாங்க வெறும் $1.87 மட்டுமே கையில் வைத்திருப்பதைக் கண்டு கவலைப்படுகிறாள்.
அந்தக் குடும்பத்தில் இருவரிடமும் இரண்டு பொக்கிஷங்கள் இருந்தன: ஜிம்மிடம் அவரது மூதாதையரிடமிருந்து வந்த அழகிய தங்கக் கடிகாரம் இருந்தது ,அதற்குச் சங்கிலி இல்லை, மேலும் டெல்லாவிடம் தரையில் விழும் அழகான நீண்ட பிரவுன் கூந்தல் இருந்தது அதற்கு ஏற்ற அழகிய சீப்புகள் இல்லை.
வேறு வழியின்றி, டெல்லா உடனடியாக வெளியே சென்று, தன் கூந்தலை $20-க்கு விற்று, அந்தப் பணத்தைக் கொண்டு ஜிம்முக்காக விலை உயர்ந்த பிளாட்டினம் கடிகாரச் சங்கிலியை வாங்குகிறாள்.
ஜிம் வீட்டிற்கு வந்தபோது, டெல்லாவின் குட்டையான முடியைக் கண்டு அதிர்ச்சியடைகிறான்; ஏனென்றால் அவன் தனது தங்கக் கடிகாரத்தை விற்று, டெல்லா ஆசைப்பட்ட அழகிய ஆமை ஓட்டுச் சீப்புகளை வாங்கியிருந்தான். இவ்வாறு, டெல்லாவின் சங்கிலி இப்போது ஜிம்மிடம் இல்லாத கடிகாரத்திற்காக வாங்கப்பட்டது,
ஜிம்மின் சீப்புகள் இப்போது டெல்லாவிடம் இல்லாத கூந்தலுக்காக வாங்கப்பட்டது. இந்தக் அவலமான முரண்பாடு இருந்தாலும், ஆசிரியர் ஓ. ஹென்றி, இந்தத் தம்பதியினரை "மேகி" (ஞானிகள்) என்று அழைக்கிறார்; ஏனெனில், தங்கள் அன்பிற்காகத் தங்களிடமிருந்த மிகவும் விலை உயர்ந்தவற்றைத் தியாகம் செய்த இவர்களின் தன்னலமற்ற செயலே, உலகின் மிகச் சிறந்த மற்றும் ஞானம் நிறைந்த பரிசு என்று இக்கதை முடிகிறது.