1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிழக்கு ஐரோப்பிய நாடான கம்யூனிஸ ரோமானியாவில் மக்கள் புரட்சி வெடித்தது.
ரோமானியாவின் முன்னாள் கொடுங்கோல் அதிபரான நிகொலாய சவொசேஸ்கு (Nicolae Ceaușescu) கால் நூற்றாண்டாக (1965 to 1989) நடத்திய கம்யூனிஸ ஆட்சி (Romanian Communist Party) ஓரிரவில் கவிழ்க்கப்பட்டது,
இதைத் தொடர்ந்து அதிபர் நிகொலாய சவொசேஸ்கு, மனைவி எலினா சவொசேஸ்கு இருவரும் 21 டிசம்பர் 1989 அன்று வெளிநாட்டுக்கு ஹெலிகாப்டரில் தப்பினர்,
ஆனால் பயணத்தின் இடையில் Târgoviște நகரில் கட்டுப்பாட்டு அறையால் எச்சரிக்கப்பட்டு தரையிறக்கப்பட்டவர்கள் புதிய மக்களாட்சி அதிபர் Ion Iliescu கட்டுப்பாட்டில் வந்த ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டனர்.
ஆங்கிலத்தில் kangaroo court, drum head trial என்ற சொலவடை உண்டு, இது கண்டதும் சுட உத்தரவு போன்று துரித தீர்ப்பு வழங்குவதற்கு பெயர் போன விசாரணை அமைப்பிற்கான பெயர்கள்,
கங்காரு வயிற்றில் குட்டி போல ஏற்கனவே தீர்மானித்த தீர்ப்பை பையில் வைத்துக் கொண்டு விசாரிப்பதால் இந்த பெயர் வழங்கப்பட்டது என்றும் , கங்காரு முகத்தில் பாய்ந்து தாக்குவது போல தீர்ப்பு இருப்பதால் இந்த பெயர் வந்தது என்றும் விவாதிக்கின்றனர், drum head trial என்பது court martial குற்றம் வாசித்து தண்டனை அறிவித்து தண்டோரா மேளம் அடிப்பவனே அந்த மேளத்தின் மீது தண்டனை தீர்ப்புத்தாளை வைத்து துரிதமாக மரண தண்டனை எழுதுவதால் இந்தப் பெயர் வந்தது .
அப்படி 25 டிசம்பர் 1989 ஆம் ஆண்டு கிருத்துமஸ் கொண்டாட்டத்தின் போது புதிய அதிபர் தலைமையில் இந்த அதிபர் மற்றும் மனைவி இருபதாண்டு காலம் செய்த இன அழிப்பு கொலைகள், பட்டினி சாவுகள், மக்கள் தொகையை பெருக்கி ஓட்டு வங்கியை அதிகரிக்க வேண்டி செய்த மக்கள் விரோத சட்டத் திருத்தங்கள், பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திட்ட கயமை என அடுக்கடுக்காக குற்றபத்திரிக்கை வாசித்தவர்கள் உடனே இந்த இருவரையும் சாகும் வரை எந்திரத் துப்பாக்கியால் சுடும்படி மரண தண்டனை விதிக்கின்றனர்.
தனித்தனியே சுட உத்தரவிட்டதை நிறைவேற்ற விழைகையில் எலினா சவொசேஸ்கு எங்கள் இருவரையும் ஒன்றாக சுடுங்கள் என்று கேட்க, உடனே வீரர்கள் கைகளை பின்னால் கட்டுகின்றனர், எலினா சவொசேஸ்கு son of the bitches என திட்டுகிறார், நான் உன்னை தாய் போல தூக்கி வளர்த்தேனே, என் கையை முறுக்கி துன்புருத்துகிறாயே விடுங்கள் என சீறுகிறார்.
கிருத்துமஸ் மாலை 4-00 மணிக்கு இருவரையும் தரதரவென வெளிமுற்றத்துக்கு இழுத்துப்போன ராணுவத்தினர், கழிவறை கட்டிட வெளிப்புற சுவர் ஒட்டிய நடைபாதை மீது நிற்க வைத்து கண்களை கருப்பு துணியால் மூடி, கைகளை பின்னால் இறுக்க நைலான் கயிறால் கட்டிய பின் இரண்டு பேர் முகம் மார்பு முழங்காலில் AK47 துப்பாக்கியால் மூவர் இரு முறை மேகஸின் மாற்றி தொடர்ந்து சுட்டு வீழ்த்தினர்,
ஆவணப்பட காணொளியில் சுடுவது துவங்கும் முன்னர் ஒரு புகைப்பட கலைஞர் ஒருவர் கத்துகிறார், முகத்தில் சுடாதே, நான் முதலில் அவர்களை முகத்தை துல்லியமாக படம் எடுத்துக் கொள்கிறேன் என்று.
கொடுங்கோல் ஆதர்ச தம்பதிகள் இருவர் உடலிலும் மொத்தம் சுமார் 130 குண்டுகள் பாய்ந்திருந்துள்ளன, இதில் முன்னாள் அதிபரின் தொப்பி பறக்கும் கோப்புப் படம் உண்டு, மூட்டுகள் தெறிப்பதை குருதி வழிந்தோடுவதை சலனப் படமாக்கி அமெரிக்க, பிரிட்டன் ஐரோப்பிய நாடுகளின் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பினர்,எங்கு கம்யூனிஸம் விழுந்தாலும் அங்கு முதலாளித்துவ நாடுகளுக்கு பெரும்பங்கு இருக்கும் , இந்த கொடுங்கோல் அதிபர் மற்றும் மனைவியின் மரணதண்டனைக்குப் பின் அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன், பிரிட்டன் முன்னாள் பிரதமர் மார்கரட் தாட்சர் போப் இரண்டாம் ஜான் பாலின் பங்கு முக்கியமானது.
அந்த கிருத்துமஸிற்கு தொலைக்காட்சியில் அமெரிக்க நடிகர் Bella Lugosi நடித்த Dracula ஹாலிவுட் திரைப்படத்தை சிறப்பு காட்சி திரையிட்ட ரோமானிய தொலைக்காட்சி நிலையத்தார், திரைப்படத்தை இடைநிறுத்தி மக்களுக்கு புதிய அதிபரின் கிருத்துமஸ் பரிசு என்று இந்த துப்பாக்கிச் சூடு காணொளியை காட்டி உள்ளனர்,உடனே ஆர்வம் தடைபடக்கூடாது என்று இடைநிறுத்திய Dracula படத்தை துவக்கியும் உள்ளனர்.
கொடுங்கோல் அதிபர் நிகொலாய சவொசேஸ்கு அதிபர் பதவியில் இருந்து தூக்கியெறியப்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு, மேற்கு ருமேனிய நகரமான டிமிசோராவில் ஒரு கிளர்ச்சியை அடக்க இராணுவத்தை ஏவிவிட்டார்.
இன வெறுப்பைத் தூண்டுவதாக László Tőkés என்ற ஹங்கேரிய மத போதகரை வெளியேற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சி இப்படி ஆட்சி கவிழ்ப்பு மற்றும் அதிபர் படுகொலைக்கு வித்திட்டது.
டிமிசோரா நகரின் மக்கள் எழுச்சி விரைவில் பரந்துபட்டு நாடெங்கிலும் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக மாறியது.
கால் நூற்றாண்டு அரசின் அடக்குமுறைக்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராடினர், இது பற்றிய செய்திகள் பெரிதும் தணிக்கை செய்யப்பட்டு பத்திரிகைகளில் பகிரப்படவில்லை,அதிபர் இம்முறையும் எந்திரத் துப்பாக்கியால் சுட்டு மக்களை காணோப்பிணமாக ஆக்கலாம் என நினைத்தார், ஆனால் அந்த எண்ணம் தவிடுபொடி ஆனது.
மக்கள் கிளர்ச்சி பற்றிய செய்திகள் மேற்கத்திய நாடுகளின் வானொலி நிலையங்கள் தொலைக்காட்சி நிலையங்கள் தினசரி மூலம் விரைவாகப் பரவியது.
நாட்டில் அமைதியின்மை அதிகரித்ததால், மக்கள் முன் தோன்றிய அதிபர் நிகொலாய சவொசேஸ்கு டிசம்பர் 21 அன்று புக்கரெஸ்டில் ரோமானிய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவினருடன் அரண்மனை உப்பரிகை மாடத்தில் இருந்து திரண்ட மக்கள் முன் உரையாற்றினார்.
அங்கு செக்யூரிட்டேட் எனப்படும் ரகசிய போலீஸார் ஊடுருவி இருந்த போதிலும், மக்கள் கூட்டம் அதிபரை நோக்கி 'திமிசோரா போராட்டம் வெல்லும் என கூக்குரலிட்டனர்.
மக்கள் கூட்டத்தை பாதுகாவலர்களால் அமைதிப்படுத்தவே முடியவில்லை, அதிபர் நிகொலாய சவொசேஸ்கு அவர் மனைவி ரகசிய பதுங்கிடத்திற்கு தப்பினர்.
இந்த கடைசிப் பேச்சு ருமேனியாவைச் சுற்றியுள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது,மக்கள் கோபம் கொப்பளித்தது , இந்த மக்கள் கூட்டத்தின் கடும் எதிர்ப்பு தொடங்கிய தருணம் தொடர்ந்து ஒளிபரப்பாக அது மக்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றி துப்பாக்கி பயம் மறக்கடித்து வீதிக்கு அழைத்து வந்தது.
தலைநகரில் பெரும் புரட்சி விரிவடைந்து கொண்டிருப்பது பார்க்கும் எவருக்கும் தெளிவாகத் தெரிந்தது.அடுத்த சில மணி நேரங்களில் புக்கரெஸ்ட் தெருக்கள் போராட்டக்காரர்களால் நிரம்பி வழிந்தது,எங்கும் மக்கள் கூட்டம், அந்த நடுக்கும் குளிரில் குடும்பம் குடும்பமாக பெண்கள் குழந்தைகள் என வீட்டில் இருந்து தெருவுக்கு இறங்கி போராடி கால் நூற்றாண்டு கொடுங்கோல் ஆட்சியை தூக்கி எறிந்துள்ளனர்,இதைத் தொடர்ந்து ராணுவ கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முடியாமல், மறுநாள் காலை நிகொலாய சவொசேஸ்கு அவரது மனைவியும் ஹெலிகாப்டர் மூலம் மத்திய குழு கட்டிடத்தின் பதுங்கிடத்தை விட்டு தப்பி வெளியேறினர்,அதன் பின் நடந்தவை வரலாறு.
ருமேனியாவில் மரண தண்டனை ஒழிக்கப்படுவதற்கு முன்பு கடைசியாக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் இந்த அதிபர் நிகொலாய சவொசேஸ்கு மற்றும் அவர் மனைவி எலினா சவொசேஸ்கு என்பது குறிப்பிடத்தக்கது, ருமேனிய வரலாற்றில் ஒரு பெண் ஆட்சியாளருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதும் எலினா சவொசேஸ்குவிற்கு தான்.
இந்த கொடுங்கோல் அதிபரின் படுகொலையை நான் தேடிப்படிக்க வித்திட்ட படைப்பு 4 months 3 weeks 2 days என்ற ருமானிய திரைப்படம், அது கொடுங்கோல் அதிபர் நிகொலாய சவொசேஸ்கு இயற்றிய மக்கள் விரோத கருத்தடை விலக்கு சட்டம் decree 770 அமலில் இருந்த இருண்ட நாட்களை பட்டவர்த்தனமாக பேசும் வீர்யமிகு படைப்பு,
ஆனால் ஒரு இடத்திலும் கூட நிகொலாய சவொசேஸ்கு பெயரோ புகைப்படமோ decree 770 என்ற வார்த்தையோ எங்கும் பயன்படுத்தப்படவில்லை,
பார்வையாளர்களை கோடிட்ட இடங்களை சரித்திர வாசிப்பின் மூலம் நிரப்பச் செய்யும் படைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதன் உதாரணம் 4 months 3 weeks 2 days திரைப்படம்.
அந்த திரைப்படத்தை பார்த்தால் இந்த கொடுங்கோல் அதிபர்கள் வீழ வேண்டியதன் அவசியத்தை ஒருவர் விளங்கிக் கொள்ள முடியும்..